முத்தம்

kochi-kiss-of-love-650

முத்தப்போராட்டம் பற்றி பல கேள்விகள் வந்தன. பொதுவான என் எண்ணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவ்விஷயம் போதிய அளவு ஆறிவிட்டது என்பதனால் வம்பாக ஆகாமல் கொஞ்சம் சமநிலையுடன் பேச இப்போது முடியலாம்

பொதுவாக பாலியல் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் எல்லாம் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக்கொண்டிருக்கும். அவை மாறாதவை, அழியாதவை என எண்ணுவதைப்போல பேதமை ஏதும் இல்லை. ஐயமிருந்தால் சற்று பின்னால் சென்று நோக்கினால் போதும்.

இதே தமிழ்நாட்டில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது விபச்சாரத்துக்கு நிகர் என்று பேசப்பட்டிருக்கிறது. ஆணும்பெண்ணும் ஒரே பள்ளியில் படித்தால் ஒழுக்கம் அழிந்துவிடும் என்று பேசப்பட்டிருக்கிறது. வேலைக்குச்செல்லும் பெண் வேசி என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதெல்லாம் கண்ணெதிரே மாறிவந்ததை அறிவோம். ஆகவே ஒழுக்கம் சார்ர்த விஷயங்களை நடைமுறை நோக்கில் தேவையா இல்லையா என்றே பார்க்கவேண்டும். தர்க்க நோக்கிலான அணுகுமுறையே தேவை. ‘புனித’ அடையாளங்களுடன் அணுகக்கூடாது.

ஒழுக்கம் வேறு, அறம் வேறு.ஒழுக்கம் என்பது சமூகம் சுமுகமாக நடப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடத்தை விதிகள். போக்குவரத்து விதிகளைப்போல. அவற்றை போக்குவரத்து ஒழுக்கம் என்றே சொல்லலாம். அத்தனை அமைப்புகளுக்கும் அவ்வாறு விதிகள் இருக்கும். அலுவலக ஒழுக்கம், கல்விக்கூட ஒழுக்கம் என நாம் நவீன வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்கள் பல.

அறம் என்பது நீண்டகால நோக்கில் அடிப்படை மானுட இயல்புகளாக அடையாளம் காணப்படும் சில பண்புநலன்களின் தொகை. அவற்றை மானுட இனம் உருவாக்கிக் கொண்டதனால்தான் கூடிவாழும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது. அன்பு, நீதி, சமத்துவம், கருணை என பல்வேறு சொற்களில் நாம் அதை அன்றாடம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அடிப்படை மானுட அறம் என்பது மானுடப்பண்பாட்டை உருவாக்கிய அத்தகைய சில மதிப்பீடுகளே. அவற்றை இலக்கியங்கள், தத்துவம், மதம் அனைத்தும் முன்வைக்கின்றன. விவாதிக்கின்றன. மேம்படுத்திக்கொண்டே இருக்கின்றன

ஒழுக்கம் காலம்தோறும் மாறக்கூடியது. நடைமுறைத்தேவைக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியது. அறம் அப்படி அல்ல. அது மானுடம் தழுவியது. அது வளரக்கூடியதே ஒழிய மாறக்கூடியது அல்ல. நீதி என ஒன்றை மானுடம் உணர்ந்த நாள் முதல் அதை மேம்படுத்தித்தான் வருகிறது. விரிவாக்கிவருகிறது. ரத்துசெய்தது இல்லை, மாற்றியமைத்தது இல்லை.

இந்த வேறுபாட்டை உணர்ந்த ஒருவர் ஒருபோதும் அறத்தையும் ஒழுக்கத்தையும் குழப்பிக்கொள்ளமாட்டார். அறமே பண்பாட்டின் அடிப்படை. ஒழுக்கம் அல்ல. அறம் வீழ்ச்சியடைவது சமூகத்தின் அடிப்படையையே அசைக்கக் கூடியது.

ஆனால் ஒழுக்கமாறுபாட்டால் சமூகம் அழியும் என்பது எப்போதுமே முந்தைய தலைமுறை தனக்குப்பின் வரும் தலைமுறையின் ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அடையும் பதற்றம் மட்டுமே. அது எப்போதுமே இருந்துகொண்டிருப்பதும்கூட.

இலக்கியம் அறத்தையே பேசுபொருளாகக் கொண்டிருக்கும். காலம்கடந்து செல்லும் அறத்தை சமகாலத்தில் பொருத்திப்பார்க்க முனையும். ஒழுக்கம் சார்ந்த அதிர்ச்சிகளை, சீண்டல்களை அளிக்கும் இலக்கியங்கள் தற்காலிகப் பரபரப்பை அளிப்பவை. மேலோட்டமானவை. அவை எப்போதும் வந்து மறைந்துகொண்டே இருக்கின்றன

சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார், அவரது இளமையில் அரு.ராமநாதனின் ‘காதல்’ என்ற இதழ் மிகமிக ‘ஆபாசமான’ இதழாகக் கருதப்பட்டது, மறைத்துவைத்து வாசிப்போம் என. “எப்படி இருக்கும்?” என்றேன். “ஆணும் பெண்ணும் காதலோட ஒத்தரையொத்தர் பாத்துக்கிடுவாங்க. அப்பல்லாம் அது பயங்கர ஆபாசம்!” என்றார்.

நேற்று நாம் ‘எல்லை மீறலாக’ எண்ணியவை இன்று சாதாரணமாக உள்ளன என்றும் காணும் ஒருவர் ஒருபோதும் ஒழுக்கத்தை மாறாத கற்பாறையாக வைத்திருக்கவேண்டும் என எண்ணமாட்டார். அதன் பேதமை அவருக்குப் புரியும்

ஆக ஒழுக்க முறைகள் மாறாமலிருக்க வேண்டும் என்பது பேசுபொருளே அல்ல. பிரச்சினை, பொது இடத்தில் நடந்துகொள்வதன் பொருத்தப்பாடு பற்றியது

பொது இடம் என்ற ஒன்று நம் மரபில் மாறிக்கொண்டே வருவதைக் காணலாம். முன்பெல்லாம் சந்தை, திருவிழாக்கள் போன்றவை அனைவரும் சந்திக்கும் இடங்கள்.அங்கெல்லாம் இன்னின்ன சாதிகள் செல்லலாம், இன்னின்ன படிநிலைகள் பேணப்படவேண்டும் என்று வகுக்கப்பட்டிருந்தது. ‘உயர்குடிப் பெண்கள்’ சந்தைகளுக்குச் செல்வதில்லை. கோயில்களில் ‘கீழ்குடி’கள் அனுமதிக்கப்படவில்லை

இன்றுள்ள பொது இடம் என்பது அனைவருக்கும் உரியது. அது நவீனமயமாதலின் விளைவாக நூறாண்டுகளுக்குள் நமக்கு கிடைத்தது. சாலை, கல்விக்கூடம், நாடகக்கொட்டகை, திரையரங்கு, ரயில்,கடைவீதி போன்றவை. அங்கே இன்றுள்ள நடத்தை நெறிகள் எல்லாம் பலவகையான கருத்து மோதல்கள், சமூகப் போராட்டங்கள் வழியாக மெல்ல உருவாகிவந்தவை.நமது பொது இடம் என்பதன் பரிணாமம் பற்றி நல்ல சமூகவியலாளன் தான் ஆய்வுசெய்து எழுதவேண்டும்.

இந்த நவீனப் பொது இடங்களை எதிர்கொள்ள நம் பழமைச்சமூகம் அடைந்த திகைப்பை வரலாற்றில் காணலாம். பொது இடங்களில் பழைய ஆசாரங்களையும் படிநிலைகளையும் பேண பழைமையாளர் முயன்றனர். அதற்கெதிராக போராட்டங்கள் நிகழ்ந்தன. பொதுச்சாலையை அனைவரும் பயன்படுத்துவதற்கான போராட்டமே இந்தியவரலாற்றில் மிகப்பெரிய சமூக மாறுதல்களை உருவாக்கியது.

இன்றைக்கும்கூட பழைமையாளர்களுக்கு நவீனப் பொதுஇடங்களை எதிர்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன. நம் முதியவர்கள் பொது இடங்களில் திகைக்கிறார்கள். வீட்டுக்குள் வாழும் பெண்கள் பொது இடங்களில் கூசிச் சிறுத்துப்போகிறார்கள்.

பொது இடங்கள் சார்ந்த ஒழுக்கத்தை நாம் இன்றும் உருவாக்கிக்கொள்ளவில்லை. தன்னிச்சையாக உருவாகிவந்த ஒரு சில நடத்தைகளே நம்மிடம் உள்ளன. பொது இடங்களில் நாம் சத்தம்போட்டு பேசுகிறோம். பிறர் வசதிகளை கவனிப்பதில்லை. முண்டியடிக்கிறோம். வரிசைகளைப் பேணுவதில்லை. எங்குநோக்கினாலும் குப்பை போடுகிறோம்.

அத்துடன் நாம் பொது இடங்களில் பிறரது தனித்தன்மையை மதிப்பதில்லை. பிறரது குடும்பவிஷயங்களை அலசுகிறோம். வெறித்து வெறித்து பிறரைப் பார்க்கிறோம். பிறரது அந்தரங்கங்களில் தலையிடுகிறோம். நாம் இன்று உருவாக்கிக் கொள்ளவேண்டியது இந்தப் பொதுஇட ஒழுக்கத்தைத்தான்.

நம்முடைய சமூகம் சென்றகாலத்தில் நிலப்பிரபுத்துவச் சமூகமாக இருந்தது. தனிமனிதன் என்ற கருத்தே இருக்கவில்லை. தனித்த சிந்தனை என்பதே ‘மட்டுமீறலாக’ கருதப்பட்டது. தன் சொந்தவாழ்க்கையைப்பற்றி ஒருவன் முடிவெடுப்பதே பெரியவர்களை அவமதிப்பதாக எண்ணப்பட்டது.

சென்ற தலைமுறையில் வீட்டுக்குள்ளேகூட கணவன் மனைவியிடம் தனியாகப் பேசக்கூடாது என்று கருதப்பட்டிருக்கிறது. அவர்களுக்கென ஓர் அறைகூட இல்லாத நிலை இருந்திருக்கிறது.

ஒருநூற்றாண்டுக் காலம் நீடித்த போராட்டத்திற்குப் பின்னரே இங்கே தனிமனிதனின் இடம் உருவாகி வந்திருக்கிறது. வீட்டிலும் வெளியிலும். ஆனாலும் இன்னமும் அது வரையறுக்கப்படவில்லை. நமது பொது இடங்களில் ஒவ்வொரு தனிமனிதனின் மீதும் கூட்டத்தின் கண்காணிப்பு இன்றும் அதிகமாக உள்ளது.அந்தக் கண்காணிக்கும் குரலே இவ்விஷயத்தில் உரத்து ஒலிக்கிறது.

நமது பொதுஇட நடத்தை என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கணவன் முன்னால் செல்ல மனைவி பத்தடி பின்னால் செல்லும் நிலை என் இளமைக்காலத்தில் இருந்தது. கணவனும் மனைவியும் சாலையில் பேசிக்கொண்டே சென்றால் ஊரே கொந்தளித்து எழுவதை நானே கண்டிருக்கிறேன்

நான் அருண்மொழியை திருமணம் செய்துகொண்ட 90 களின் தொடக்கத்தில் நாங்கள் சாலையில் கைகோர்த்து பேசிக்கொண்டே செல்வது தருமபுரியில் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது. இப்போதுகூட ஆணும் பெண்ணும் பேருந்தில் ஒட்டி அமர்ந்திருந்தால் கிழடுகள் சத்தம்போடுவதை காண்கிறேன்.

ஆனால் மெல்லமெல்ல இந்த அளவுகோல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. வேறுவழியில்லாமல் பழைமையானவர்களும் அவற்றை ஒப்புக்கொண்டுதான் மேலே செல்கிறார்கள். இந்தமாற்றம் தவிர்க்கமுடியாதது.

ஏனென்றால் நம்முடைய பொதுஇடம் என்பது விரிவடைந்துகொண்டே வருகிறது. அதில் பெண்களின் இடம் அதிகரிக்கிறது. மாற்றுத்திறனாளிகள், மாறுபட்ட வாழ்க்கைமுறை கொண்டவர்கள் போன்றவர்களுக்கான இடத்தையெல்லாம் நாம் மெல்லமெல்ல அளிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதை ஒரு வளர்ச்சியாகவே நான் எண்ணுகிறேன்

சென்ற சில தலைமுறைகளாக நாம் தனிமனிதனுக்கான இடத்தை அளிக்க ஆரம்பித்திருக்கிறோம். நம் குடும்பங்களில், பொது இடங்களில் தனிமனிதனுக்கான இடம் கூடிக்கூடி வருவதையே நாம் காண்கிறோம். வீட்டுக்குள் கணவனும் மனைவியும் பகலில் தனியாகப் பேசிக்கொண்டால் இன்று கிழடுகள் அமைதியிழப்பதில்லை. சாலையில் பேசிக்கொண்டு சென்றால் எவரும் நிலைகுலைவதில்லை.

முத்தமிடலாமா கூடாதா என்ற வினா விரிவான கோணத்தில் இதுதான், நமது பொது இடத்தில் தனிமனிதனுக்கான இடம் எவ்வளவு? ஓர் ஆணும் பெண்ணும் கைகோர்த்துக்கொண்டால் அது அவர்களின் சொந்த விவகாரம், அவர்களின் தனியிடம் அது. அதில் அந்தப் பொதுஇடத்தில் உள்ள பிறருக்கு பங்கு ஏதும் இல்லை.

பொது இடம் என்பது கும்பலாக ஒன்றைச் செய்யும் வெளி அல்ல. பல தனிமனிதர்களின் தனி இடங்களின் தொகுப்பு என்று எடுத்துக்கொண்டால் இந்தக் கேள்விக்கே இடமில்லை

பொது இடங்களில் முத்தமிடலாமா? அது முத்தமிடுபவர்களின் தனிப்பட்ட உரிமை, அவர்களின் தனிப்பட்ட தேர்வு. தங்கள் ஒழுக்கத்தை அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். அது அவர்களின் அன்றாடவாழ்க்கையின் ஒழுங்கை சிதைக்காதென்றால், தனிப்பட்ட உறவுகளை அழிக்காதென்றால், பிறரைச் சுரண்டுவதாக அமையாதென்றால் அது அவர்கள் தேர்ந்துகொண்ட ஒழுக்கம், அவ்வளவுதான். அதில் பிறர் எட்டிப்பார்க்கவேண்டியதில்லை.

எதிர்காலத்தில் ‘இந்த தனிப்பட்ட வெளி’ என்பது மேலும் பெருகித்தான் செல்லும். அதில் சமூகம் தலையிடமுடியாது ஆகும். சமூகம் என்றால் குடும்பம், அலுவலகம், அரசு எல்லாம்தான்.சென்ற நூறாண்டுக்காலத்தில் மானுடச் சமூகம் மெல்லமெல்ல திரட்டி எடுத்துக் கொண்டிருப்பது இந்த தனிமனித இடத்தைத்தான்.

இன்னமும்கூட இந்த தனிமனித வெளியை விரிப்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டியிருக்கிறது. ஒருவர் தன்பாலுறவுப் பழக்கம் கொண்டவர் என்றால் ஓர் அலுவலகத்தில் அவருக்கான இடம் அளிக்கப்படுகிறதா? ஒருவர் மூன்றாம்பாலினம் என்றால் அவரது அந்தரங்கம் பேணப்படுகிறதா? இதெல்லாம்தான் நாம் எதிர்கொண்டாக வேண்டிய வினாக்கள்.

இன்று ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பிறரது வாழ்க்கையைப் பாதிக்காத அளவில் தன் வாழ்க்கையை விருப்பப்படி அமைக்கவும், தன் சொந்த மகிழ்ச்சியையும் ஆன்மீக நிறைவையும் நோக்கிச் செல்லவும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. அந்தச் சுதந்திரம் தலைமுறைதோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. என் தந்தையை விட எனக்கு அதிக சுதந்திரம் இருந்தது. என்னைவிட என் மகனுக்கு அதிக சுதந்திரம் உள்ளது. இது மானுடத்தின் வெற்றி என்றே நான் நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன் எனும் கவிஞர்
அடுத்த கட்டுரைஎரியும் தேர்