‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 61

பகுதி பதின்மூன்று : இனியன் – 3

இடும்பவனத்தின் உயர்ந்தமரத்தின் உச்சிக்கிளை ஒன்றில் மடியில் கடோத்கஜனை வைத்துக்கொண்டு பீமன் அமர்ந்திருந்தான். காலையின் இளவெயிலில் அவர்களின் நிழல் பச்சைத்தழைப்பரப்பின் மேல் நீண்டு விழுந்திருந்தது. காற்றில் இலைக்கடல் அலையடித்தது. அதன்மேலிருந்து பறவைகள் எழுந்து காற்றில் சிறகடித்து மிதந்து சுழன்று இறங்கி அமைந்தன. பச்சைவெளிக்கு அடியில் இருந்து பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் ஒலி எழுந்துகொண்டிருந்தது.

தழைத்ததும்பலைப் பிளந்து வெளிவந்த கருங்குரங்கு ஒன்று அவர்களை நோக்கி ஐயத்துடன் தலைசரித்து உடலைச் சொறிந்தபின்னர் கிளைகளில் தாவி மேலேறி வந்து சற்று அப்பால் அமர்ந்துகொண்டு “ஏன் இங்கே இருக்கிறீர்கள்?” என்றது. “சூரியனைப் பார்க்கிறோம்” என்றான் பீமன். அது திரும்பிப்பார்த்தபின் “ஆம், நன்கு கனிந்திருக்கிறது” என்று ஆர்வமின்றி சொல்லி “இங்கே உணவு கிடைக்கிறதா?” என்றது. “இல்லை, இளவெயில்தான் இருக்கிறது” என்றான் பீமன். அது உதடுகளை நீட்டி ஏளனமாகப் பார்த்தபின் புட்டத்தைச் சொறிந்து கொண்டு தொங்கி இறங்கிச் சென்றது.

“கு கு க்குரங்கு” என்றான் கடோத்கஜன். பீமனின் வலக்கையை அவன் தன் இருகைகளாலும் இறுக்கிப்பிடித்திருந்தான். குரங்கு எளிதாகத் தாவி இறங்குவதைப் பார்த்தபின் “தாவி த்த்தாவி… போ” என்று தலையை ஆட்டியபின் நிமிர்ந்து “த தத் தந்தையே” என்றான். “சொல் மைந்தா” என்றான் பீமன். “அ… அக் அந்தக் குரங்கைச் சாப்பிடலாமா?” பீமன் அவன் மண்டையை அறைந்து “குரங்கை சாப்பிடுவதா? மண்டையா, மூடா. அது நம் மூதாதையர் அல்லவா?” என்றான். கடோத்கஜன் புருவம் தூக்கி மண்டையை உருட்டி சூரியனைப் பார்த்தான். “அ அப்பம்!” என்றான்.

கீழிருந்து ஒரு பெரிய நாரை சிறகுகளை விரித்து காற்றில் நீச்சலிட்டு மேலேறி “ர்ர்ராக்!” என்று குரல் கொடுத்து வளைந்து சென்றது. கடோத்கஜன் சிந்தனையுடன் தலைதூக்கி பீமனை நோக்கினான். “நாரையை சாப்பிடலாமா என்று கேட்கிறாயா?” என்றான் பீமன். அவன் ஆம் என்று தலையை அசைத்தான். “சாப்பிடலாம்… உன்னால் பிடிக்க முடியுமா?” கடோத்கஜன் எம்பி “நான் ந்ந்நான் வளர்ந்தபின்!” என்று சொன்னபோது பிடியை விட்டுவிட்டான். ”ஆ” பதறிப்போய் பீமனைப்பற்றிக்கொள்ள பீமன் நகைத்தான்.

“நான் உ உங்களை கடிப்பேன்” என்றான் கடோத்கஜன் சினத்துடன். பீமன் அவன் மண்டையைத் தட்டி “நீ கடிக்க மாட்டாய்” என்றான். “ஏன்?” என்றான் கடோத்கஜன். “ஏனென்றால் நீ என் மைந்தன்.” அவன் பெருமிதத்துடன் சிரித்து “க… கடோத்கஜன் அரக்கன்!” என தன் நெஞ்சில் தொட்டு “நீ நீங்கள் தந்தை” என்றான். பீமன் சிரித்தான். கடோத்கஜன் அவனை தன் பெரிய கருங்கைகளால் சுற்றி வளைத்து அணைத்துக்கொண்டு “நீ… நீங்கள் நல்ல தந்தை…” என்றபின் ஒருகையை மட்டும் எச்சரிக்கையுடன் விரித்துக்காட்டி “ப்ப்ப் பெரியவர்!” என்றான்.

பீமன் சிரித்து அவனை அணைத்து அவன் வழுக்கை மண்டையில் முகத்தை உரசி “ஆம், நான் நல்ல தந்தை…” என்றான். “நீ… நீங்கள் பெரியவர்” என்றான் கடோத்கஜன். “யானை போல!”  பீமன் “என்னை விடப் பெரியவர் ஒருவர் இருக்கிறார்” என்றான். கடோத்கஜன் “எங்கே?” என்றான். “அஸ்தினபுரியில்… உன் தாத்தா அவர். திருதராஷ்டிரர் என்று பெயர்” கடோத்கஜனை அந்தப் பெயர் ஆழ்ந்த அமைதியுறச்செய்தது. “சொல், அவர் பெயரென்ன?” அவன் பேசாமல் வாயைக் குவித்து உருண்ட கண்களால் நோக்கினான்.

“சொல்” என்றான் பீமன். “சொன்னால் உனக்கு நான் முயல் பிடித்து தருவேன். சுவையான முயல்!” கடோத்கஜன் கைகளை விரித்து பத்து விரல்களையும் காட்டி “நான்கு முயல்!” என்றான். “ஆமாம், நான்கு முயல். சொல், திருதராஷ்டிரர்.” கடோத்கஜன் பார்வையை திருப்பிக்கொண்டான். “என் செல்லம் அல்லவா? என் கரும்பாறைக்குட்டி அல்லவா? சொல் பார்ப்போம். திருதராஷ்டிரர்.” அவன் கைசுட்டி “நா ந்ந்நா நாரை!” என்றான். “மண்டையா, பேச்சை மாற்றாதே. சொல். திருதராஷ்டிரர்.” அவன் “ந்ந்நாரை எனக்கு வேண்டும்“ என்றான். “சொல்வாயா மாட்டாயா?” அவன் தன்னை தொட்டுக்காட்டி “நாரை?” என்றான்.

“சொல்லாவிட்டால் உனக்கு முயல் தரமாட்டேன்.” கடோத்கஜன் தன் பெரிய தலையை அகன்ற கைப்பத்திகளால் பட் பட் என அடித்துக்கொண்டான். பீமன் உவகையுடன் “இதேதான்… இதே அசைவைத்தான் அவரும் செய்வார். உன் பெரிய தாத்தா. திருதராஷ்டிரர்” என்றான். கடோத்கஜன் ஏறிட்டு நோக்கி உதடுகளை மட்டும் மெல்ல அசைத்தான். “சரிதான்… சொல்… சொல் என் சக்ரவர்த்தியே!” கடோத்கஜன் “தி திட்டராத்” என்றான். “மண்டையைப்பார்… மூடா. நான் சொல்கிறேன் பார். திருதராஷ்டிரர்… திருதராஷ்டிரர்” என்றான் பீமன். “சொல் பார்ப்போம்!”

மீண்டும் தன் மண்டையை தட்டியபின் கடோத்கஜன் “எனக்கு ம்மு முயல்?” என்றான். “சொன்னால்தான்” என்றான் பீமன். அவன் உதடுகளைக் குவித்தபின் “அன்னையிடம் போகிறேன்” என்றான். பீமன் “அன்னை இதோ வந்து விடுவாள்” என்றான். அவன் “அன்னையிடம் போகிறேன்” என்று சிணுங்கியபின் பீமனின் கையை மெல்லக் கடித்து “நீ… நீங்கள் க்க்க் கெட்டவர்” என்றான். “சரி” என்றான் பீமன்.

கடோத்கஜன் தலையை தந்தையின் மார்பில் சரித்து சூரியனை நோக்கி “த… தந்தையே” என்றான். “என்ன?” என்றான் பீமன். “அது என்ன?” என்றான் சூரியனை சுட்டிக்காட்டி. “மண்டையா, நூறுமுறை சொன்னேனே. அது சூரியன். அதன் கீழே தெரிவது அருணன்.” கடோத்கஜன் இரு கைகளையும் நீட்டி அசைத்து “அதை தின்னலாமா?” என்றான். “சரிதான். நீ அரக்க மைந்தன்” என்றான் பீமன். “அது, அது இனியது!” என்றான் கடோத்கஜன். அவன் வாயிலிருந்து எச்சில் மார்பில் வழிந்தது.

“மண்டையனுக்கு நான் ஒரு கதை சொல்லவா?” என்றான் பீமன். “ஆம்” என்று சொல்லி கடோத்கஜன் திரும்பி அமர்ந்துகொண்டு “க்க்க்க் க கதை! பெரிய கதை!” என்று கைகளை தலைக்குமேல் விரித்து விழிகளை உறுத்து உதடுகளை துருத்திக்காட்டினான். ”ஆம், பெரிய கதை!” என்றான் பீமன். “இங்கிருந்து தெற்கே மலைகளுக்கெல்லாம் அப்பால் ஒரு காடு இருந்தது. அதை கபிவனம் என்று முன்னோர் சொல்வதுண்டு. அஞ்சனவனம் என்று இன்று அதை சொல்கிறார்கள். அங்கே மனிதர்களே இல்லை. அரக்கர்களும் அசுரர்களும் இல்லை. குரங்குகள் மட்டும்தான் வாழ்ந்துவந்தன.”

“க்கு… குரங்குகள்!” என்று கடோத்கஜன் கனவுடன் கண்களை மேலே செருகியபடி சொன்னான். “ந்நீ நிறைய குரங்குகள்” என்று கையை விரித்தான். “ஆம் நிறைய குரங்குகள். அவை மிக வலிமையானவை. வானத்தில் பறக்கவும் கண்ணுக்குத் தெரியாமல் மறையவும் அவற்றால் முடியும். அந்த அஞ்சன வனத்தில் அஞ்சனை என்று ஒரு பெரிய பெண் குரங்கு இருந்தது. கன்னங்கரிய நிறம் கொண்டிருந்ததனால் அவளுக்கு அந்தப்பெயர். அவள் மிகப்பெரிய கைகளும் மிகப்பெரிய கால்களும் கொண்டிருந்தாள். சிறிய காதுகளும் நாவல்பழம் போன்ற கண்களும் அவளுக்கு இருந்தன. அவளுடைய குரல் இடியோசை போல ஒலிக்கும். அவளுடைய வால் நூறுயானைகளின் துதிக்கை போல வலிமையானது.”

கடோத்கஜன் “த… தந்தையே, எனக்கு வால்?” என்றான். “நீ பெரியவனானதும் உனக்கும் வால் முளைக்கும்” என்றான் பீமன். “என்ன சொன்னேன்? அஞ்சனை இருந்தாள் இல்லையா?” கடோத்கஜன் “அ அஞ்சனை” என்றான். “க் க் கு குரங்கு!” என்று கைகளை விரித்து வெண்பற்களைக் காட்டி கண்கள் ஒளிர சிரித்தான். “ஆம், அஞ்சனை. அவள் அந்தக்காட்டில் அஞ்சனக்குகை என்ற குகையில்தான் வாழ்ந்தாள். அவள் கேசரி என்ற ஆண்குரங்கை கணவனாக ஏற்றாள். கேசரி சிங்கம்போல சிவந்த பெரியதாடியுடன் இருந்தான். ஆகவே அவனை மற்ற குரங்குகள் அப்படி அழைத்தன.”

கேசரிக்கும் அஞ்சனைக்கும் ஓர் ஆசை எழுந்தது. அந்தக்காட்டிலேயே அவர்களைப்போல வலிமையானவர்கள் இல்லை. உலகத்திலேயே வலிமையான குழந்தையைப் பெறவேண்டும் என்று அஞ்சனை நினைத்தாள். உலகிலேயே வலிமையானது எது என்று அவள் ஒவ்வொன்றாகப் பார்த்தாள். சூரியன் வெப்பமானவன், ஆனால் மழைவந்தால் அணைந்துவிடுவான். இந்திரன் ஆற்றல் மிக்கவன், ஆனால் வெயிலில் மறைந்துவிடுவான். அக்கினி நீரால் அணைபவன். எதனாலும் தடுத்து நிறுத்த முடியாதவன் காற்று. மலைகளைப் புரட்டிப்போட காற்றால் முடியும். ஊசியின் துளைவழியாக ஊடுருவிச்செல்லவும் முடியும். ஆகவே அவள் காற்றை தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினாள்.

அஞ்சனை ஆயிரம் வருடம் காற்றை தவம்செய்தாள். அதன்பின் காற்றுதேவன் அவள் முன் தோன்றினான். புயல்காற்றாக ஆயிரக்கணக்கான மரங்களை வேருடன் பிடுங்கி வீசியபடி வந்து பெரும் சுழல் காற்றாக மாறி வானையும் மண்ணையும் இணைக்கும் தூண் போல நின்று புயலோசையாக அஞ்சனையிடம் ‘நீ விழைவது என்ன?’ என்றான். அவனது பேருருவிற்குள் நூற்றுக்கணக்கான யானைகள் சுழன்று பறந்துகொண்டிருந்தன. பெரிய பாறாங்கற்களும் வேரற்று எழுந்த மரங்களும் சுழன்றன. கீழே புழுதியாலான பீடமும் வானில் மேகங்களாலான முடியும் சுழன்று கொண்டிருந்தன.

‘தேவனே, உன்னைப்போன்ற மைந்தன் எனக்குத் தேவை’ என்று அஞ்சனை சொன்னாள். ‘என் மைந்தன் மண்ணில் இருந்து விண்ணுக்குத் தாவவேண்டும். விண்ணை அள்ளி மண்ணில் நிரப்பவேண்டும். அவன் பஞ்சுத்துகள்களுடன் பறந்து விளையாடும் குழந்தையாக இருக்க வேண்டும். மரங்களை வெறிநடனமிடச்செய்யும் அரக்கனாகவும் இருக்கவேண்டும். காட்டுநெருப்பை அள்ளிச்செல்லவேண்டும். அகல் சுடருடன் விளையாடும் தென்றலாகவும் இருக்கவேண்டும். பெருங்கடல்களில் அலைகளை கொந்தளிக்க வைப்பவனாகவும் மென்மலரிதழ்களைத் தொட்டு மலரச்செய்பவனாகவும் அவன் விளங்க வேண்டும். மழையைக் கொண்டு வருபவனாகவும் வெயிலை அள்ளிச்செல்பவனாகவும் திகழவேண்டும்.’

‘அவன் செல்லமுடியாத இடங்களே இருக்கக் கூடாது. அவனில் அத்தனை பூந்தோட்டங்களின் நறுமணங்களும் இருக்கவேண்டும். அவன் குழந்தைகளின் சிரிப்பையும் கன்னியரின் இனிய குரலையும் ஏந்திச்செல்லவேண்டும். நான்கு வேதங்களும் அவனில் நிறைந்திருக்கவேண்டும். மானுடர் அறியும் ஞானத்தையெல்லாம் அவர்கள் நாவிலிருந்து வாங்கி தன்னுள் வைத்திருந்து அவர்கள் செவிகொள்ளும்போது அளிப்பவனாக அவன் அமையவேண்டும். மூச்சாக ஓடி நெஞ்சில் நிறைபவனாகவும் இறுதிச் சொல்லாக மாறி இறைவனுடன் கலப்பவனாகவும் அவன் இருக்கவேண்டும். எவர் கண்ணுக்கும் படாதவனாகவும் ஒவ்வொருவராலும் ஒவ்வொரு கணமும் அறியப்படுபவனாகவும் திகழவேண்டும். தேவா, நீயே என் மைந்தனாக வரவேண்டும்’ என்றாள்.

‘அவ்வாறே ஆகுக!’ என்று சொல்லி வாயுதேவன் மறைந்தான். மேலெழுந்து சுழன்ற யானைகளும் பாறைகளும் மரங்களும் பெரும் குவியலாகக் குவிந்து விழுந்தன. சருகுகளுக்குள் இருந்து துதிக்கை சுழற்றியபடி பிளிறிக்கொண்டு யானைகள் திகைத்து ஓடின. முயல்களும் மான்களும் புழுதியை உதறியபடி கூச்சலிட்டுக்கொண்டு தாவி ஓடின. பாம்புகள் மட்டும் அங்கேயே மயங்கிக்கிடந்தன. காற்று நின்ற இடத்தில் ஒரு மண்குன்று இருந்தது. அதை நோக்கி அஞ்சனை புன்னகைசெய்தாள். ஓடிச்சென்று தன் கணவனிடம் அனைத்தையும் சொன்னாள்.

“அஞ்சனை கருவுற்று நூறுமாதங்கள் அக்கருவை தன் வயிற்றில் சுமந்தாள். அதன்பின் அவளுக்கு ஓர் அழகான குரங்குக்குழந்தை பிறந்தது. அவன் மாந்தளிர் நிறத்தில் இருந்தான். தர்ப்பைப் புல்லால் ஆன படுக்கையில் தீப்பிடித்ததுபோல அவன் தோன்றினான்” என்றான் பீமன். அந்த உவமை புரியாமல் கடோத்கஜன் சற்று நெளிந்து அமர்ந்து “திருதராஷ்டிரர்!” என்றான். பீமன் திடுக்கிட்டு “அடேய்… சொல்… சொல்” என்று கூவி கடோத்கஜனை பிடித்து தூக்கினான். கடோத்கஜன் வெட்கி கண்களைத் தாழ்த்தி உதடுகளைக் குவித்தான். “சொல் என் கண்னே… என் செல்லமே சொல்!” அவன் உதடுகளை மெல்ல அசைத்து மெல்லிய குரலில் “திருதராஷ்டிரர்” என்றான். பீமன் அவனை அப்படியே அள்ளி அணைத்து முத்தமிட்டு “என் செல்லமே! என் அரசனே!” என்று கூவி சிரித்தான்.

திமிறி விலகி கைகளை விரித்து கடோத்கஜன் “தீ” என்று கூவினான். “ஆமாம், தீ போல இருந்தான். அவன் முகவாய் இரண்டாகப் பிளந்தது போல இருந்தது. குரங்குகளுக்கு அப்படித்தானே இருக்கும்?” கடோத்கஜன் சிரித்து தன் வாயை குரங்கு போல வைத்துக்காட்டினான். “ஆமாம்… இதேபோல. ஆகவே அவன் அன்னை அஞ்சனை அவனை ஹனுமான் என்று அழைத்தாள். இரட்டைமுகவாயன் அழகான குரங்காக இருந்தான். அவன் முகம் சிவப்பாக இருந்தது. அவன் கைகளும் கால்களும் மென்மையான மயிரடர்ந்து இளம்புல் முளைத்த மண் போல் தெரிந்தன. அவனுடைய வால் குட்டி நாகப்பாம்பு போல் இருந்தது.”

கடோத்கஜன் “த் த்த தந்தையே எனக்கு வால்?” என்றான். “உனக்கும் முளைக்கும்” என்றான் பீமன். “அஞ்சனையின் வால் அவள் விரும்பிய அளவுக்கு நீளக்கூடியது. அவள் குகைக்குள் மகனை விட்டுவிட்டு வால் நுனியால் அவனுக்கு விளையாட்டுக்காட்டிக்கொண்டே காடு முழுக்கச் சென்று நிறைய பழங்களும் காய்களும் கிழங்குகளும் கொண்டு வந்து அவனுக்குக் கொடுப்பாள்.” கடோத்கஜன் ஆவலுடன் “முயல்?” என்றான். “ஆம், முயலும். ஆனால் ஹனுமான் முயல்களை சாப்பிட மாட்டான். அவற்றுடன் விளையாடுவான்.” கடோத்கஜன் ஐயத்துடன் “ஏன்?” என்றான். ”ஏனென்றால் குரங்குகள் காய்களையும் கனிகளையும்தான் உண்ணும்.” கடோத்கஜன் குழப்பத்துடன் “ஹனுமான்!” என்றபின் “திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர்” என்றான். “இனி இதையே சொல்லிச் சொல்லி சலிப்பூட்டு… மண்டையா!” என்று பீமன் அவன் தலையைத் தட்டினான். கடோத்கஜன் தலையைத் தடவி “ஆ! திருதராஷ்டிரர்” என்றான்.

அஞ்சனையின் மைந்தன் பெரிய குறும்புக்காரனாக வளர்ந்தான். இளமையிலேயே அவன் வானத்தில் பறக்கத் தொடங்கினான். உயர்ந்த மரங்களில் ஏறி அமர்ந்து அவன் பழங்களை உண்பான். பறவைகளுடன் சேர்ந்து பறப்பான். மான்களுடன் சேர்ந்து துள்ளி ஓடுவான். சிங்கத்தின் பிடரியைப்பிடித்து உலுக்கிவிட்டு சிரித்துக்கொண்டே கிளைகளில் ஏறிக்கொள்வான். அவன் தந்தையான வாயுதேவனின் அருள் அவனிடமிருந்தது. அவன் மூங்கிலை வாயில் வைத்தால் இனிய இசை வந்தது. அவன் தொட்டதுமே மலர்கள் மலர்ந்தன. அவன் கடந்துசென்றபின் புல்வெளியில் காலடித்தடமே எஞ்சவில்லை.

அவனுடைய வால்தான் அனைவருக்கும் இடர் அளித்தது. அவனை பின்னால் இழுக்க அஞ்சனை அவன் வாலைப்பிடித்து இழுத்தால் அவன் வாலை நீட்டிக்கொண்டே சென்றுவிடுவான். அதன்பின் அவள் அந்த வாலைச்சுருட்டிக்கொண்டே காடு முழுக்க அலைவாள். வால் ஒரு பெரிய மலைபோல அவளுக்குப்பின்னால் உருண்டு வரும். இறுதியில் எங்கோ ஓரிடத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் ஹனுமானைப்பிடித்து இழுத்து வருவாள்.

அவன் வாலை சிங்கம் பிடித்துவிட்டது என்றால் உடனே அவன் சிங்கத்தின் வயிற்றுக்கு அடியில் ஓடி சுழன்று வாலாலேயே அதைக் கட்டி வரிந்து சுருட்டி விடுவான். ஒருநாள் அவன் காட்டில் துயின்றுகொண்டிருக்க அருகே வாலுக்குள் ஒரு சிங்கம் அழுதுகொண்டிருப்பதை அஞ்சனை பார்த்தாள். அதை அவள் விடுதலை செய்தாள். அதன்பின் அந்தச்சிங்கம் தன் வாலையே அஞ்சியது.

இரவில் ஹனுமான் அன்னை அருகே துயில்கையில் அவன் வால் சுருங்கி சிறிய பாம்புக்குட்டி போல ஆகி அவன் காலுக்குள் சென்றுவிடும். அவன் தன் வாலை வாய்க்குள் போட்டு சப்பும் வழக்கம் கொண்டிருந்ததனால் அன்னை அந்த வாலை இழுத்து குகைக்கு அருகே ஒரு மரத்தில் கட்டிவைத்தாள். காலையில் எழுந்ததுமே துள்ளிக்கொண்டு காட்டுக்குள் செல்வது ஹனுமானின் வழக்கம். கூடவே அந்த மரத்தையும் பிடுங்கிக்கொண்டு சென்றான். அதில் இருந்த பறவைக்குஞ்சுகள் சிறகடிக்காமலே தாங்கள் பறப்பதை அறிந்து அஞ்சி கூச்சலிட்டன. அவற்றின் அன்னையர் வந்து அங்கிருந்த மரத்தைக் காணாமல் கூவினர்.

ஒருநாள் ஹனுமான் தன் தந்தை கேசரியின் மடியில் மர உச்சியில் அமர்ந்து வானத்தை நோக்கிக்கொண்டிருந்தான். காலையில் சிவப்பு நிறமாக சூரியன் எழுந்து வந்தது. ‘தந்தையே அது என்ன?’ என்று ஹனுமான் கேட்டான். ‘அது சூரியன்’ என்று கேசரி சொன்னார். ”அது நன்கு கனிந்திருக்கிறதா?’ என்றான் ஹனுமான். ‘ஆமாம்…’ என்றார் கேசரி. ‘தந்தையே அதை உண்ணலாமா?’ என்று ஹனுமான் கேட்டான். எரிச்சல் கொண்ட கேசரி ‘ஆமாம், சுவையானது. போய் தின்றுவிட்டு வா’ என்றார்.

அக்கணமே மர உச்சியில் இருந்து பாய்ந்து எழுந்த ஹனுமான் மேகங்களை அளைந்து வாலைச்சுழற்றிக்கொண்டு சூரியனை நோக்கி பறக்கத் தொடங்கினான். மேலே செல்லச்செல்ல அவன் சிவந்து ஒரு எரிமீன் போல ஒளிவிட்டான். விண்ணைக் கடந்து சென்று சூரியனை கடிக்கப்போனபோது அருகே ராகு நிற்பதைக் கண்டான். குரங்குப்புத்தியால் உடனே சித்தம் விலகி திரும்பி ராகுவை விளையாடுவதற்காக பிடிக்கப்போனான்.

அருகே சென்றதும் கேதுவைக் கண்டு மீண்டும் சிந்தை விலகி கேதுவை பிடிக்கப்போனான். அவர்கள் இருவரும் அஞ்சி அலறினர். அப்போது தன் வால் பிடரியில் படவே அது என்ன என்று பிடித்துப்பார்த்தான். அதற்குள் அங்கே இந்திரனின் ஐராவதம் வந்தது. அதை விளையாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி அதன் துதிக்கையைப்பிடித்து தன் வாய்க்குள் வைத்து ஊதலாக ஊதினான். ஐராவதத்தின் உடல் உப்பி காற்றுத்துருத்தி போல ஆகியது. வாய் திறந்து அது அலறியது. அதன் மேலிருந்த இந்திரன் சினம்கொண்டு தன் வஜ்ராயுதத்தால் ஹனுமானை அடித்தான். மயக்கம் அடைந்த ஹனுமான் அலறியபடி தலைகீழாக மண்ணில் விழுந்தான்.

“ஆ” என்றபடி கடோத்கஜன் எழுந்து பீமனின் முகத்தைப் பிடித்தான். “ஆனால் அவன் வாயுவின் மைந்தன் அல்லவா? அவன் கீழே விழுந்தபோதே வாயு அவனை பிடித்துக்கொண்டார்” என்றான் பீமன். கடோத்கஜன் கைகளைத் தட்டி உரக்க நகைத்தான். ”சொல்லுங்கள்… க் கதை சொல்லுங்கள்” என்றான்.

வாயுவில் ஏறிய ஹனுமான் ‘தந்தையே, பாதாளத்துக்குச் செல்லுங்கள்’ என்று ஆணையிட்டான். மைந்தனைத் தூக்கிக் கொண்டு காற்று பாதாளத்திற்குள் சென்றுவிட்டது. பூமியில் எங்கும் காற்றே இல்லை. கடல்கள் அசையாமல் துணிப்பரப்பு போல ஆயின. கிளைகளும் இலைகளும் அசையவில்லை. நெருப்புகள் அசையவில்லை. தூசி அசையவில்லை. பூச்சிகளின் சிறகுகள் அசையவில்லை. உலகமே அசைவிழந்தது ஆகவே மக்களின் உள்ளங்களும் அசைவிழந்தன. விளைவாக சிந்தனைகள் அசைவிழந்தன. இறுதியில் பூமியே செயலற்றது.

மலர்கள் மலரவில்லை. அதைக்கண்ட வண்ணத்துப்பூச்சிகள் தங்கள் கைகளை கூப்பி சரஸ்வதியிடம் முறையிட்டன. சரஸ்வதிதேவி பிரம்மனின் தாடியைப்பிடித்து இழுத்து உடனே வாயுவைத் தேடிப்பிடித்துக்கொண்டுவர வேண்டும் என்று ஆணையிட்டாள். பிரம்மன் அவள் சினத்துக்கு பயந்து பாதாளத்திற்குள் சென்றார். அங்கே மைந்தனை மார்பில் போட்டு கொஞ்சியபடி வாயு படுத்திருந்தார். பிரம்மன் சென்று வாயுவிடம் மேலே வரும்படி சொன்னார். ‘என் மைந்தனை அவமதித்த இந்திரன் அவனிடம் பணிந்து பொறுத்தருளக்கோரவேண்டும்’ என்றார் வாயு. ‘சரி, நான் இந்திரனிடம் சொல்கிறேன்’ என்று சொல்லி பிரம்மன் விண்ணுலகு சென்றார்.

முதலில் இந்திரன் மறுத்தான். ‘ஓர் குரங்குக்குட்டியிடம் நான் மன்னிப்பு கோருவதா?’ என்று சீறினான். பிரம்மா வற்புறுத்தியபோது ‘சரி, நான் ஒரு சொல் மட்டும் சொல்கிறேன். என் உடன்பிறந்தவனாகிய வாயுவின் மைந்தன் அவன் என்பதனால்’ என்று சொல்லி இந்திரன் ஒத்துக்கொண்டான். வாயுவிடம் பிரம்மன் சென்று சொன்னதும் அவர் தன் மைந்தனை தோளிலேற்றி வானில் எழுந்து வந்தார்.

வாயு இந்திரனை அணுகியதும் ஹனுமான் பாய்ந்து இறங்கி அருகே சென்று அவனது குதிரையான உச்சைசிரவஸின் மூக்கினுள் தன் வால் நுனியைப் போட்டு ஆட்டினான். உச்சைசிரவஸ் பயங்கரமாகத் தும்மியது. ஒரு தலை தும்மியதும் ஏழு தலைகளும் வரிசையாகத் தும்மின. இந்திரன் அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டே ஹனுமானை அள்ளி எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொண்டு ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்றான்.

‘வஜ்ராயுதம் வேண்டும். விளையாடிவிட்டு தருகிறேன்’ என்று ஹனுமான் கேட்டான். ‘அய்யோ, அது வானத்தையே இரண்டாகப்பிளக்கும் வாள் அல்லவா’ என்று இந்திரன் பதறும்போதே ஹனுமான் அதை கையில் எடுத்துக்கொண்டு பாய்ந்து ஓடிவிட்டான். இந்திரனும் தேவர்களும் பதறி அவனைத் துரத்த அவன் பாய்ந்து மேகங்களில் மறைந்தான். அவர்கள் எங்கும் தேடி இறுதியில் ஒரு மரத்தின் உச்சியில் கண்டுபிடித்தனர். ஒரு மாம்பழத்துக்கு வஜ்ராயுதத்தைக்கொண்டு தோல்சீவிக்கொண்டிருந்தான் ஹனுமான்.

கடோத்கஜன் கைதட்டிச் சிரித்து “குரங்கு” என்றான். “ஆமாம், அழகான குட்டிக்குரங்கு” என்றான் பீமன். “இந்திரன் அந்தக் குரங்கை அள்ளி அணைத்து முத்தமிட்டான். தேவர்களெல்லாம் அவனை கொஞ்சினார்கள். அதன்பின் மும்மூர்த்திகளும் கொஞ்சினர். அவன் அவர்களின் கால்களுக்குக் கீழே தவழ்ந்துபோய் தேவர்களின் பூந்தோட்டமான அமராவதியின் தோட்டத்தில் மரங்கள்தோறும் துள்ளி அலைந்தான். அமுதகலசம் இருந்த மண்டபத்திற்குள் சென்று கலத்தில் வாலைவிட்டு எடுத்து நக்கி நக்கி அமுதத்தையும் வயிறு நிறைய உண்டான். அதைக்கண்டு சிரித்த இந்திரன் உன்னை எந்த படைக்கலமும் கொல்லாது. நீ இறப்பற்றவனாக இருப்பாய் என்று வாழ்த்தினார்.”

கடோத்கஜன் “அ அதன்பின்?” என்றான். “அதன்பின் அவர் மகிழ்ச்சியாக காட்டில் நீண்ட வாலுடன் வாழ்ந்தார்” என்றான் பீமன். “அவர் எ எ எங்கே?” என்றான் கடோத்கஜன். “அவர் தெற்கே காட்டில் இருக்கிறார். எனக்கு அவர்தான் மூத்தவர். உனக்கு பெரியதந்தை” என்றான். கடோத்கஜன் ஐயத்துடன் தலை சரித்து நோக்கி “ப்ப் பெரியதந்தை?” என்றான். “ஆம்” என்றான் பீமன். சிலகணங்கள் அவன் சிந்தித்தபின் மண்டையை கையால் தட்டி “திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர் திருதராஷ்டிரர்” என்றான். “நிறுத்து மண்டையா… அதையே சொல்லாதே” என்றான் பீமன்.

“த தந்தையே எனக்கு வால்?” என்று தன் பின்பக்கத்தை தொட்டுக்காட்டி கடோத்கஜன் கேட்டான். அந்த இடத்தை தன் கையால் தட்டி “முளைக்கும்… நீ அரக்கன். நான் மனிதன். உன் பெரிய தந்தை வானரர்… நாமெல்லாம் உறவினர்” என்றான் பீமன். “தந்தையே, நான் அந்த சூரியனை உண்ணலாமா?” என்றான் கடோத்கஜன். “ஆம், போய் தின்றுவிட்டு வா” என்று சொல்லி கடோத்கஜனைத் தூக்கி வானத்தில் வீசினான் பீமன்.

“தந்தையே!” என அலறியபடி அவன் வானில் சுழன்று வளைந்து மரங்களுக்குமேல் இலைத்தழைப்பில் விழுந்து கிளைகளை ஒடித்தபடி கீழே சென்றபோதே பிடித்துக்கொண்டான். அவன் எடையில் வளைந்த கிளையில் இருந்து தாவி இன்னொரு கிளையைப்பிடித்தான். அக்கணமே அவனுக்கு கிளைகளின் நுட்பம் முழுமையாகத் தெரியவந்தது. உரக்க நகைத்தபடி அவன் கிளைகளில் இருந்து கிளைகளுக்குத் தாவினான். சிலமுறை தாவியபோது அவன் விரைவு கூடியது. ஒருகட்டத்தில் அவன் பறவைபோல காற்றில் பறந்து பறந்து அமைந்தான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

பீமன் எழுந்து நின்று கைவீசி நகைத்தான். இடும்பர்களிலேயே கூட எவரும் அப்படி மரங்கள் மேல் பறப்பதை அவன் கண்டதில்லை. இரு கைகளையும் விரித்து வந்து அவனருகே அமர்ந்த கடோத்கஜன் “த… தந்தையே! நான் ஹனுமான்!” என்றான். “நீ ஹனுமானின் மைந்தன்” என்றான் பீமன். “ஆம்!” என்றபின் கடோத்கஜன் பாய்ந்து சுழன்று காற்றில் ஏறி இலைப்பரப்பின் மேல் நிழல் விழுந்து வளைந்து தொடர பறந்து சென்று கிளைகளுக்குள் மூழ்கி மறைந்து அப்பால் கொப்பளித்து மேலெழுந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபேய்கள்
அடுத்த கட்டுரைஅங்காரகன்