«

»


Print this Post

நித்யானந்தர்


கேரளத்தில் காசர்கோடு- கண்ணனூர் சாலையில்  காஞ்ஞாங்காடு என்ற சிறிய ஊர் இருக்கிறது. இங்கே நித்யானந்தரின் ஆசிரமம் உள்ளது. இன்று நித்யானந்தரின் ஆசிரமம் ஒரு சமூகசேவை அமைப்பாக மட்டும் தான் உள்ளது என்றாலும் தினமும் சிலநூறு சுற்றுலாப்பயணிகள் இங்கே வருகிறார்கள். அவர்களின் ஆர்வத்துக்குக் காரணம் இங்கே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குடைவரை ஆசிரம அறைகள்தான்.

ஆர்வமூட்டும் குடைவரை அமைப்புகள் இவை. சிற்பங்கள் ஏதுமில்லை. மொத்தம் நாற்பது அறைகள் இங்குள்ளன. ஆறு வாசல்கள். அவற்றில் மூன்று கிழக்கு நோக்கியும் மூன்று மேற்கு நோக்கியும் திறந்திருக்கின்றன. குகையறைகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் செல்ல முடியும். சுவர்களும் தரையும் கொஞ்சம் கரடுமுரடானவை. உள்ளே செல்லும்போது அவற்றின் இன்று அவற்றின் பயனின்மை நம்மை ஒருவகை வெறுமைக்குக் கொண்டுசெல்கிறது.

இந்தக்குகைகள் உதயாஸ்தமனக் குகைகள் என்று சொல்லப்படுகின்றன. இவற்றின் அமைப்பு அத்தகையது. காலைவெளிச்சமும் மாலை வெளிச்சமும் குகைக்குள் உள்ள எல்லா அறைக்குள்ளும் வரமுடியும் என்பதனால் பகலில் எந்நேரத்திலும் வெளிச்சம் இருக்கும்படி இந்த அமைப்பு அமைந்துள்ளது. 1925ல் இவற்றுக்கான பணியை நித்யானந்தர் ஆரம்பித்தார். அன்று இந்தப்பகுதி அடர்காடாக இருந்தது. இன்று இங்கே நித்யானந்த ஆசிரமமும் ஆசிரமத்தின் சமூகப்பணி சார்ந்த அமைப்புகளும் உள்ளன.

நித்யானந்தரைப் பற்றி முழுமையான தகவல்கள் ஏதுமில்லை.  நித்யானந்தர் 1896 வாக்கில் பிறந்திருக்கலாம். கோழிக்கோடு அருகே உள்ள தூநேரி என்ற கிராமத்தில்  ஈஸ்வர அய்யர் என்ற வழக்கறிஞரின் பண்ணையில் வேலைபார்த்துவந்த உண்ணியம்மை என்ற பெண் விறகு வெட்ட காட்டுக்குச் சென்றபோது கைக்குழந்தையான நித்யானந்தரைக் கண்டெடுத்தார். உண்ணியம்மையின் கணவர் சந்து நாயர் ஒரு கூலித்தொழிலாளி. குழந்தைக்கு அவர்கள் போட்ட பெயர் ராமன்குட்டி.

சிறுவயதில் பலவகையான நரம்புச்சிக்கல்களுக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு மூன்றுவயதாகும்போது சந்துநாயர் மறைந்தார். ஆறு வயதாகும்போது உண்ணியம்மை காலமானார். ஈஸ்வர அய்யரின் கொல்லைப்பக்க கட்டிடம் ஒன்றில் ராமன் வளர்ந்தார். ஒருமுறை ஈஸ்வர அய்யர் ஏதோ வழக்கு விஷயமாக ஒரு ஆவணத்தை உரக்க வாசித்தபோது வெளியே அதைக்கேட்டு நின்றிருந்த ராமன் குட்டி அதை  நினைவில் வைத்திருந்ததாகவும் பின்னர் அந்த ஆவணத்தை அவர் நினைவிலிருந்து அப்படியே திருப்பிச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. அசாதாரணமான அறிவுத்திறன் கொண்டிருந்த குழந்தை மீது தனிக்கவனம் செலுத்திய அய்யர் அவனை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்

ஆனால் 17 வயதில் ராமன்குட்டி ஈஸ்வர அய்யருடன் காசிக்குச் சென்றபோது திரும்பி வர மறுத்து விட்டார். துறவுபூண்டு செல்வதாக அய்யரிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தனியாக ரிஷிகேஷுக்கு சென்றார். ஐந்து வருடம் கழித்து முழு¨மையான யோகியாக திருப்பி கேரளத்திற்கு வந்தார்.  அப்போது அய்யர் மரணப்படுக்கையில் இருந்தார். அய்யரின் மரணம் முடிந்ததும் கிளம்பி காஞ்ஞாங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி தன்னிச்சையாக நடந்து சென்று அங்கே இருந்த காட்டுக்குள் ஒரு பாறைக்குகையில் அமர்ந்திருந்தார். பின்னர் தன் கையாலேயே பாறையைக் குடைந்து குகைகளை உருவாக்க ஆரம்பித்தார்

 

நித்யானந்தர் குகைகளை உருவாக்கியதைப்பற்றி பல கதைகள் உள்ளன. ஒருகட்டத்தில் அவர் கிராமவாசிகள் அனைவரையும் அந்தப்பணியில் ஈடுபடுத்தினார். அதிகமும் தாழ்த்தப்பட்ட புலையர் சாதியைச் சேர்ந்தவர்களை. அது மிகக்கடுமையான பஞ்சத்தில் எளிய உழைப்பாளி மக்கள் கூட்டம்கூட்டமாகச் செத்து கொண்டிருந்த காலகட்டம். அத்துடன் 1921ல் நடந்த மாப்பிளாக்கலவரத்தை பிரிட்டிஷ் அரசு ஒடுக்கியபின்னர் அடக்குமுறை நிலவிய காலம். பட்டினியால் பரிதவித்தவர்களுக்கு இந்த குகைவேலை ஒருபெரிய வாய்ப்பாக இருந்தது.

நித்யானந்தர் குகைவேலைக்கு வருபவர்களுக்கு எந்த தகுதியும் எதிர்பார்க்கவில்லை. கைக்குக் கிடைத்தை வைத்து அவர்கள் வேலைசெய்தார்கள். கூலியாக ஒருநாளைக்கு ஒரு அணா வழங்கினார். அதையும் சிறிய தங்க வில்லைகளாக வழங்கினார் என்கிறார்கள்.அவர் அதை ரசவாதம் மூலம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. புதையல் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 10 வருடம் இந்த வேலை நடைபெற்றிருக்கிறது. நித்யானந்தரின் ஆசிரம வளைவில் பதினைந்து வருடம் வரை தொடர்ச்சியாக அன்னதானம் நடைபெற்றிருக்கிறது, பஞ்சகாலம் முடிவதுவரை.

நித்யானந்தர் இந்தக்காலத்தில் பலமுறை கிளம்பிச்சென்றிருக்கிறார். ஊர்பேரற்ற துறவியாக பிச்சையெடுத்து அலைந்துகொண்டே இருப்பது அவரது இயல்பு. அவர் எங்கிருக்கிறார் என்பதை எவரும் ஊகித்துவிடமுடியாது.  தமிழகத்தில் பழனி திருவண்னாமலை பகுதிகளில் சுற்றியிருக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் பலபகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறார்.

அக்காலத்தில் இந்தியாவில் இருந்த பல ஞானிகளுடன் அவருக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பல முக்கியமான துறவியருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நித்யானந்தர் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. குறிப்பாக நிஸர்க தத்த மகராஜுடன் அவர் நெருக்கமான உறவுகொண்டிருந்தார். அவருக்கு ரயிலில் சென்றுகொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும். ரயில்நிலையங்களில் தூங்குவது அவரது வழக்கம்.

நித்யானந்தர் பல்வேறு அற்புதங்களைச் செய்ததாக சொல்லப்படுகிறது, ஆனால் எதையும் நித்யானந்தர் ஏற்றுக்கொண்டதில்லை. காஞ்சாங்காட்டில் அவர் புலையர்களுக்கும் ஆதிவாசிகளுக்குமாக ஆரம்பித்த பள்ளி அவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக ஆகியது. அந்தப்பணியில் நாயர்களை ஈடுபடுத்தியதைத்தான் பெரிய அற்புதச்செயலாக அவர் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்.

நித்யானந்தர் மிகமிகக் குறைவாகப் பேசும் வழக்கம் கொண்டிருந்தார். பெரும்பாலான நேரங்களில் மௌனமாக தியானத்தில் ஆழ்ந்திருக்க விரும்புபவர். அவருக்கு இந்தி ,தமிழ் ,மலையாளம்,  கன்னடம், மராட்டி, ஆங்கிலம் உட்பட பல மொழிகள் தெரிந்திருந்தன.  ஆனால் அவர் உபதேசங்கள் என எதையும் அளித்ததில்லை. அவரை அணுகி அவருடன் பலகாலம் வாழ்ந்த பல சீடர்கள் இருந்தார்கள். அவர்கள் அவரை தங்களுக்கு வழிகாட்டிய மெய்ஞானி என்று சொல்லியிருக்கிறார்கள். அவ்வப்போது எளிய கதைகள், நகைச்சுவையான சில வரிகள்,  அங்கதச்சுவை கொண்ட விமரிசனங்கள் ஆகியவற்றையே அவர் சொல்லியிருக்கிறார்.

மங்களூரைச் சேர்ந்த துளசியம்மா என்ற பெண்மணியும் அவரது உறவினர்களும் நித்யானந்தரின் ஆசிரமத்தில் சிலகாலம் தங்கியிருந்தார்கள். துளசியம்மா நித்யானந்தரின் உபதேசங்களை ‘சிதாகாச கீதா’ என்ற நூலாக எழுதியிருக்கிறார். ஆனால் வழக்கமான வேதாந்தம் மற்றும் பக்திக்கருத்துக்களின் தொகுப்பாகவே அந்நூல் உள்ளது. நித்யானந்தரை அறிந்த பிற ஞானியர் செய்திருக்கும் பதிவுகளின்படி அவர் நகைச்சுவை இல்லாமல் பேசுவது மிக அபூர்வம்.

 

நித்யானந்தரின் புகழ் பரவியபோது லௌகீக இலக்குகளுடன் அவரை தேடிவரும் கும்பல் அதிகரித்தது. அவர் அற்புதங்களை நிகழ்த்துவார் என்றும் நோய்களைக் குணப்படுத்துவார் என்றும் அவர்கள் எதிர்பார்த்தார்கள். நித்யானந்தர் அவர்களைச் சந்திக்க மறுத்து துரத்துவார். பல சந்தர்ப்பங்களில் கற்களை தூக்கி வீசி விரட்டியதாகச் சொல்லப்படுகிறது. காஞ்ஞாங்காட்டுக்கு வந்த கொச்சி அரச குடும்பத்தினரை அவ்வாறு கல்லை விட்டெறிந்து துரத்தியதாக ஒரு கூற்று உண்டு.

நித்யானந்தர் வாழ்நாள் முழுக்க எந்தவகையான போகங்கலையும் நாடியவரல்ல. பெரும்பாலும் கட்டாந்தரையில்தான் உறக்கம். அபூர்வமாக அவரே செய்துகொன்ட மரக்கட்டிலில். எளிய இந்திய விவசாயியின் உடையான கோவணம்தான் அணிந்திருந்தார். ஆசிரமத்தின் அன்னதானத்தில் அளிக்கப்படும் உணவுதான் அவரும் உண்டார்.

ஒருகட்டத்தில் அவர் காஞ்ஞாங்காட்டை விட்டு விலகினார் 1936ல் அவர் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை அருகே உள்ள கணேஷ்புரி என்ற ஊருக்குச் சென்று அங்கே இருந்த வஜ்ரேஸ்வரி ஆலயத்தின் அருகே தன் கையாலேயே ஒரு குடில் அமைத்து தங்கினார்.  அக்காலகட்டத்தில் அது அடர்ந்த புதர்ககடுகளும் பாம்புகளும் நிறைந்த இடமாக இருந்தது. நித்யானந்தர் கிட்டத்தட்ட கேரளப் பொதுவாழ்விலிருந்து மறைந்தே போனார்.

இந்தப்புதர்க்காடுகளில் எளிமையான வேட்டைகள் வழியாக வாழ்ந்த மக்களிடம் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது. அவர்களுக்கு அவர் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். அதற்கான பொருட்களை அவர் தன் மீது பக்திகொண்டவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இந்த அன்னதானங்கள் வழியாக 1950 களில்தான் அவர் மீண்டும் பக்தர்களால் கண்டடையப்பட்டார்.

1961ல் நித்யானந்தர் கணேசபுரியில் மரணமடைந்தார். அவரது சமாதியிடம் அங்கே உள்ளது. இன்று அது ஒரு பெரும் ஆசிரமமாக உள்ளது. நித்யானந்தரைப் பற்றி பல கோணங்களில் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பலநூல்களில் அவர் நிகழ்த்திய எளிமையானஅற்புதச்செயல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன என்றாலும் அவரை எளியமையான பேரன்பு கொண்ட, அதே சமயம் அனைத்திலிருந்தும் விலகி நிற்கும் புன்னகையும் கொண்ட, அவதூதராகச் சித்தரிக்கும் சிறந்த விவரணைகளும் எழுதபட்டுள்ளன.

நித்யானந்தரை தூய அத்வைதத்தைச் சார்ந்தவர் என்றுதான் அடையாளப்படுத்தவேண்டியிருக்கிறது. அவர் மதச்சடங்குகள் பூஜைகள் எதையும் செய்ததில்லை. இறைவன் எங்கிருக்கிறான் என்று கேட்கப்பட்டபோது ‘இதோ இறைவன் இறைவனிடம் கேள்விகேட்டுக்கொண்டிருக்கிறான்’ என்று பதில் சொன்னதாக பதிவாகியிருக்கிறது.

காஞ்ஞாங்காட்டில் இப்போது நித்யானந்த ஆசிரமம் உள்ளது. அவர் நிறுவிய கல்வியமைப்புகள் பெரிதாக வளர்ந்துள்ளன.  ஆசிரம வளைவில் நித்யானந்தருக்கு ஒரு வெண்கலச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. உற்சாகமான சிரிப்புடன் நிற்கும் எளிய கிராமத்து விவசாயத்தாத்தா போலிருக்கிறார் நித்யானந்தர். நான் சென்றிருந்தபோது ஒரு இரண்டுவயது பெண்குழந்தை ”ஹைய்யா, அப்பூப்பன்!” என்று கிரீச்சிட்டது. அக்கணம் அவரை மிக அருகாமையில் உணர்ந்தேன்.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் மார்ச் 7 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6700

11 comments

Skip to comment form

 1. chandanaar

  வணக்கம் ..
  ஆன்மிகம் பற்றி நிறைய பேசியாயிற்று. நானும் கடவுளை நம்புபவன் தான் என்றாலும் , எனக்கும் அந்த சக்திக்கும் இடையே எவரையும் வரவிட்டதில்லை. கடவுள் எங்கும் இருக்கிறார் எனும்பொழுது சாமியார்களை அணுக வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் மேலே குறிப்பிட்ட துறவி போன்றவர்களை நல்ல மனிதர்கள் எனும் இடத்தில வைத்து விட்டு ,அவரவர் தன வேலையை பார்க்கலாமே?
  ஒரு எளிய மனிதன் தன மனதுக்குள்ளேயே கடவுளை ஆராதிக்கலாமே? துறவு எனும் பெயரில் குற்றங்கள் புரிபவர்களை தவிர்க்க யாரயுமே பிரதான படுத்தாமல் இருப்பது நல்லது அல்லவா?

 2. Ramachandra Sarma

  அரசியலில் ஒருவர் இதேபோன்று செய்தார் என்று கேள்விப்பட்டேன். அதே தொகுதியில் அதே பெயரில் சில வேட்பாளர்களை நிறுத்தி மக்களை குழப்பிவிட்டார்கள் என்று. எதுவாக இருந்தாலும் இந்தக்கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் தேவையான ஒரு கட்டுரை.

 3. bala.texas

  இல்லை chandanaar , எளிமையும் , ஆன்மீகமும் ஒன்றர கலந்தவை என்பது இக்காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படவேண்ட்டியது மிகவும் அத்யாவசியம் ஆகிறது

 4. Prakash

  சந்தனார், சுயம்பு’வா செய்றத விட அந்த வழியில் பயணித்தவரின் வழி நமக்கு உதவும். எதற்கு எல்லோரும் திருப்பி திருப்பி E = MC ^ 2 கண்டுபிடிக்கணும். why reinvent the wheel. அது புரிந்து விட்டால், அதை உபயோக படுத்தி மேலே மற்றும் சற்று வித்தியாசமாக அழகாக செல்வது சுலபம் தானே. இப்படி நிறைய ஆன்மீக குரு நம் மண்ணில் இருந்த ; இருக்கின்ற காரணத்தினால் தான் அதிகமான புத்தர்கள் தோன்றுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

  இது என் கருத்து, ஜே’வுடைய கருத்தும் அறிய ஆவல்.

 5. tdvel

  இரமணரை மறுவாசிப்பு செய்ததைப்போல் உள்ளது. இவரைப்பற்றி இதுவரை தெரியாமல் இருந்த எனக்கு இவரை அறிமுகப்படுத்தியதற்கு எப்போதும்போல் நன்றி.

  பின்னூட்டங்களை மட்டுறுத்துவதில்லைபோல் உள்ளது. உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அறிவுரை, ஆலோசனை, வழிகாட்டுதல்கள், நாங்கள் உங்களிடம் அடையும் பலன்களை பாத்தித்துவிடுமோ என பயமாய் உள்ளது.
  த.துரைவேல்

 6. chandanaar

  என்ன tdvel இது?
  சில எழுத்தாளர்கள் போல் தனக்கு தானே கடிதம் எழுதிக்கொண்டு , பின்னூட்டங்களையே அனுமதிக்காமல் ‘வெற்றிகரமாக இயங்கி வரும் ‘ எழுத்தாளர் அல்ல ஜெயமோகன் என்பதை அறியாதவரா நீங்கள்?
  எந்த ஒரு விஷயத்தை பற்றியும் பன்முகப்பார்வை தேவை..
  முதலில் எங்கு சென்றால் பலன் கிடைக்கும் என்று யோசிப்பதை நிறுத்துங்கள். வாழ்வின் உன்னதங்களையும் உள்ளார்ந்த ரகசியங்களையும் தனது படைப்புகளிலேயே (நேரடியாக அல்லாமல்) சொல்லும் ஜெ. யை முழுமையாக படிப்பதுவே ஒரு பெரிய அனுபவம் என்று நினைக்கிறேன் நான். அதற்காக அவர் கருத்தில் முரண்படவோ அல்லது விளக்கம் கேட்கவோ எனக்கு உரிமை இல்லையா என்ன?

 7. ramji_yahoo

  சந்டனார் கருத்தையே நான் அமோதிக்கிறேன்.

  இவரையும் நாம் ஒரு சமூக சேவகராகவும், எளிமை மீது நாட்டம் கொண்ட மனிதராகவும் ஏற்று கொள்வோம். சந்யாசியாக ஏற்று கொண்டால் தானே பிரச்சனை இங்கே.

 8. tdvel

  முரண்படுதல், விளக்கம் கேட்பது வேறு ஏன் எழுதுகிறீர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாமே என்பது வேறு. ஒரு எழுத்தாளர் எழுதியதைப்பற்றி நமக்கு ஒரு விமர்சனம் ஏற்படவில்லையென்றால் நாம் படித்தற்கே பயனில்லை. ஆனால் எழுதியதை விமர்சிப்பது ஒருவகையில் படிப்பவரின் கடமையே கூட. ஆனால் எழுதுவதையே விமர்சிப்பது எந்தவகையிலும் சரியாகாது. “ ஆன்மீகம் பற்றி நிறைய பேசியாயிற்று” என்று தொடங்கும் பின்னூட்டம் இனி அதைப்பற்றி பேசவேண்டாம் என எழுத்தாளருக்கு அறிவுறுத்துதலைப்போன்றே எனக்கு தோன்றியது. அவ்வாறு இல்லையெனில் என்னை மன்னிக்கவும்.
  மற்றொன்று ஜெயமோகனின் அனைத்துப்பதிவுகளிலும் ஒரு மைய இழையாக ஓடுவது ஆன்மீகமே. எனக்கு தெரிந்து ஆன்மமீகம் இல்லாத ஜெயமோகனின் பதிவுகள் என்றால் கூட்ட அறிவிப்புகள் மட்டுமே.
  ஜெயமோகன் ஆறு பதிவுகளில் எழுதியதின் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இவ்விரு நித்தியானந்தர்களின் வேறுபாடு அமைந்துள்ளது. இது அப்பதிவுத்தொடரை முழுமைப்படுத்துகிறது.
  த.துரைவேல்

 9. chandanaar

  நண்பர் துரைவேல்..
  கண்டிப்பாக நான் ஜெ. வை இது பற்றி எழுத வேண்டாம் என்றோ அல்லது எழுதியது போதும் என்றோ குறிக்கும்படி எழுதவில்லை. நீங்கள் புரிந்த கொண்டிருப்பீர்கள். எந்த காலத்திலும் அந்த தகுதி எனக்கு வரப்போவதும் இல்லை. என் கேள்வி ஏன் சக மனிதனை தன்னை விட உயர்வாய் அதாவது கடவுளின் பிரதிநிதியாக பார்க்க வேண்டும் என்பது தான். இன்னொரு விஷயம். இது கூட எனது ஆணித்தரமான கருத்து என்று சொல்லவரவில்லை. நீண்டகாலமாக எனக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை நான் மதிக்கும் ஒரு எழுத்தாளரிடம் கேட்கிறேன். அவ்வளவு தான். ஜெ குறிப்பிடும் மனிதர் உண்மையில் பிரமிக்க வைக்கிறார். ஆரோக்கியமான விவாதம் தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

 10. Prakash

  ஆமசாமி போடுகிறவர்கள் ஜெமோ சொல்வதை புரிந்து கொண்டார்களா என்பதே சந்தேகம். யார் என்ன சொன்னாலும் நம்ம தான் புரிந்துகொள்கிறோம். ஜெமோ’வின் இந்த கட்டுரைகளையே நான் ஒரு மாதிரி புரிந்து கொண்டேன். சிலர் அப்படியே எதிர் புறமாக புரிந்து கொண்டனர் ( பின்னுட்டங்களில் இருந்து). ‘தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி’ – இதை தென்னாட்டில் சிவனே என்று அழைக்க படும் இறைவா என்றும் எடுத்துகொள்ளலாம். தென்னாட்டினருக்கு மட்டும் உடைய சிவனே என்றும் புரிந்து கொள்ளலாம். எதிர் கேள்வி கேட்பதினால் சரியாக புரிந்து கொள்ளும் வாய்ப்பாவது அமைகிறது.

 11. V.Ganesh

  நித்யானந்தர் போட்டோவை மும்பையில் பெருபாலான உடுப்பி hotel- ல் பார்க்கலாம். வஜ்ரேச்வரி ஒரு அற்புதமான இடம். அங்கு ஐந்து ஊற்றுகளில் இருந்து வெந்நீர் வரும். பக்கத்தில் ஒரு பெரிய ஆறும் ஓடும். இயற்கையின் ஒரு சித்து வேலை. கணேஷ்புரி ஆஸ்ரமமும் மிகவும் பிரபலமானது. மும்பையில் இருந்து சுமார் இரண்டு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.
  ஆனால் இதைப போன்ற சித்தர்கள் வாழ்வின் / பிறப்பின் பயன் என்ன? இவர்கள் இறந்தபிறகு நாம் இவரை வழி பட்டு என்ன ஆக போகிறது. ஓரிருமுறை சின்மயானந்தரின் நேர் உரை கேட்டுளேன். மிக அற்புதமாக இருந்தது, அது போல் தயானந்த சரஸ்வதி அவர்கள். ஆனால் மனம் பண் பட வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் தவிர வேறு என்றும் இருப்பதாக தெரியவில்லை.

Comments have been disabled.