கேள்வி பதில் – 17

தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுள் ஒன்று “ஜெயமோகன் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள எல்லா வழிகளிலும் முயலுகிறார்” என்பது. அதாவது self promoting என்கிறார்கள். இந்த விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த விமர்சனத்துக்கு உங்களின் எதிர்வினை என்ன?

— ஹரன்பிரசன்னா.

இப்படிச் சொல்பவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு. தமிழ்நாட்டில் என்னைத்தவிர வேறு எழுத்தாளர்கள் எவருமே தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவில்லையா? அத்தனைப் பேருமே புனிதர்களா? ஆம் என்று சொல்பவர்களிடம் மேற்கொண்டு உரையாட ஏதுமில்லை, தங்கள் மதிப்பீட்டை நான் ஏற்கவில்லை என்பதைத் தவிர .

இல்லை, பிறரும் உள்ளனர் என்றால் அவர்கள் எவரும் ஏன் என் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை? இதுதான் வெற்றிகரமானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டதே? இளம் எழுத்தாளர்கள் பின்பற்றவேண்டிய பாதையல்லவா இது? இதற்கு அதிகம்பேர் துணிவது இல்லை. காரணம் இதில் இழப்புகள் அதிகம். அதைவிட சுய உயர்த்தலுக்குச் சுருக்கமான எளிய வழிகள் பல உள்ளன.

தன்னைத்தானே உயர்த்தல் என்றால் என்ன? தனக்குத் தன் படைப்புகளால் கிடைப்பதைவிட, கிடைக்கவேண்டியதை விட அதிகமான புகழையும் பணத்தையும் அதிகாரத்தையும் தொடர்புகள் மூலமும் விளம்பரம் மூலமும் பெற முயல்தல் தானே? ஓர் எழுத்தாளனாக நான் என் தகுதிக்கு மீறிய புகழையும் பணத்தையும் பெற்றிருக்கிறேன் என இப்படிச்சொல்பவர்கள் நினைக்கிறார்கள் என்பதுதான் இக்கூற்றின் பொருள். அதாவது என் மீதான மதிப்பின்மையையே அவர்கள் இவ்வாறு வேறு சொற்களில் வெளிப்படுத்துகிறார்கள். மதிப்பு இருக்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால் மதிப்பின்மையைத் தக்க காரணங்களுடன் சொல்ல முடியவேண்டும். நான் என் கருத்தை அப்படித்தான் சொல்லிவருகிறேன். அப்படிச் சொல்ல இயலாத மூங்கைமன ஆசாமிகளின் வம்புச்சந்து கிசுகிசுப்புமட்டும்தான் இது.

ஓரு தமிழ் எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கும் பணம் என் தபால்செலவுகளுக்குக்கூடப் போதாது. இதேநேரத்தை அலுவலகத்தில் அதிகவேலை செய்தால் இதைவிட இருபதுமடங்கு அதிகம் சம்பாதிக்க முடியும். தமிழ் இதழ்களில் இந்தியாடுடே மட்டுமே ஆயிரம் ரூபாயாவது பணம் தரும் இதழ். அதில் நான் எழுதுவது இல்லை. என் எழுத்துச்செலவுக்கு நான் மலையாளத்தையும் ஆங்கிலத்தையுமே நம்பியிருக்கிறேன்.

புகழ் என்றால் இது என்ன புகழ்? அதிகம்போனால் என்னைப் படிப்பவர்கள் பத்தாயிரம் பேர். நான் பிரபல இதழ்களில் எழுதியது விகடனில் சங்கச் சித்திரங்கள் மட்டுமே. அதன் பிறகு அவர்கள் கோரியும் எழுதவில்லை. நான் எழுதுவதைப் போட அவர்களும் தயாராக இல்லை. பெருவாரியான வாசகர்களுக்குப் பிடித்தமானதாக எழுதவேண்டும் என்றால் சர்வசாதாரணமாக என்னால் எழுதமுடியும், நான் அதில் போட்டியாக எண்ணத்தக்க ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டுமே. அது வேறு யாருக்குத் தெரியாவிட்டாலும் சுஜாதாவால் ஊகிக்க முடியும்.

என் தொடர்புகள் என்னைப்போன்ற ஒரு மத்தியவர்க்க குமாஸ்தாவை விடக் குறைவானவை. தமிழில் இன்று கலை இலக்கிய இதழியல் துறைகளில் உள்ள அத்தனைச் செல்வாக்கான நபர்களையும் கடுமையான விமரிசனம் மூலம் பகைத்துக் கொண்டிருக்கிறேன். ஓர் உதாரணம், வாசந்தி. என் கதைகள் இந்தியா டுடேயில் வெளிவந்துகொண்டிருந்த காலத்தில்தான் அவர் தமிழின் வணிக எழுத்தாளர்களில் ஒருவர் என நான் எழுதியமையால் அவர் என் மீது கோபம் கொண்டார். நான் இந்தியாடுடேயில் பலவருடம் எழுதவில்லை. அவரைப்பற்றி நான் பயன்படுத்திய சொற்கள் சற்றுக் கடுமையானவை என உணர்ந்தேன். ஆனாலும் அவர் இந்தியாடுடேயை விட்டு விலகிய பிறகே அவரிடம் அதற்காக வருத்தம் தெரிவித்தேன்.

ஆக சுய உயர்த்தல் என்றால் இங்கே என்ன பொருள்படுகிறது? ஒரு நபர் ஒரு சூழலில் உள்ள பெரும்பாலானவர்களின் கோபத்தை ஈட்டிக் கொள்வதுதான் சுய உயர்த்தலா? அந்த ‘உயர்தலுக்கு’ அச்சமூகத்தில் வேறு யாருக்குமே விருப்பமும் இல்லையா? என்ன அபத்தம் இது?

இப்படிச் சொல்பவர்கள் என் மூலம் உருவாகும் விவாதங்களைத்தான் உத்தேசிக்கிறார்கள் என்றால் அவர்கள் புதுமைப்பித்தன் உருவாக்கிய விவாதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? க.நா.சுப்ரமணியம் உருவாக்கிய விவாதங்களைப்பற்றி, சுந்தர ராமசாமி உருவாக்கிய விவாதங்களைப்பற்றி, ஜெயகாந்தன் உருவாக்கிய விவாதங்களைப்பற்றி…? சரி டி.எச்.லாரன்ஸ் உருவாக்கிய விவாதங்களைப் பற்றி அல்லது சார்த்ர் உருவாக்கிய விவாதங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? இவர்கள் இலக்கியமரபை அரிச்சுவடியேனும் அறிந்திருக்கிறார்களா?

இலக்கியவாதி சமூகத்துடன் உரையாட, சமூகத்தைப் பாதிக்க, ஏன் சமூகத்தை இடித்துரைக்க விரும்புகிறவன். உலகமெங்கும் இலக்கியவாதிகள் தங்கள் ஆக்கங்கள் மூலம், கருத்துகள் மூலம், நடவடிக்கைகள் மூலம் அப்படி, சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். நான் படைப்பாளி மட்டுமல்ல, திறனாய்வாளனும் கூட. என் ஆக்கங்கள்மூலம், என் திறனாய்வுக் கருத்துகள் மூலம் புதிய ஒரு ரசனைத்தளத்தை, சிந்தனைத்தளத்தை முன்வைக்கிறேன். அது கண்டிப்பாக விவாதங்களை உருவாக்கும். உருவாக்கவில்லை என்றால் நான் திறமானவனல்ல என்றே பொருள். அது என் மீது கவனத்தை உருவாக்கும், சாதகமாகவும் பாதகமாகவும். மூலையில் ஒடுங்கிப் புலம்பும் எழுத்தாளனல்ல நான். தன்னிரக்கத்தைப் பிழிந்துவைப்பவனுமல்ல. என் குரல் எப்போதுமே அறைகூவுவது, தன்னம்பிக்கை கொண்டது.

இந்தக் காலகட்டத்தில் எவன் ஒரு கருத்தில் சமரசமில்லாமல் இருக்கிறானோ அவன் விவாதத்துக்கு உரியவனாகவே இருக்கமுடியும். என் மீது இன்று சொல்லப்படும் இக்குற்றச்சாட்டை நேற்று இதே கும்பல் ஜெயகாந்தனைப் பற்றிச் சொன்னது. “அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன்’ என்று சொல்லி ஜெயகாந்தன் எனக்கு வழி காட்டினார், இதைப்பற்றி பேசுகையில்.

என் எழுத்தின் ஆரம்பநாள்களில் நான் சிற்றிதழ்களையே பிடிவாதமாகச் சார்ந்திருந்தேன். ஜெயகாந்தன் பெரிய இதழ்களில் எழுதியது குறித்த விமரிசனமும் இருந்தது. பின்பு நான் அறிந்தேன் எழுத்தாளனுக்கு வாசகனிடம் சென்றுசேரும் பொறுப்பு உள்ளது என. வாசகனுக்காக அவன் எழுதவேண்டியதில்லை. ஆனால் வாசகனிடம் சென்றுசேர அவன் முயன்றே ஆகவேண்டும். வாசகனே அவன் இலக்காக இருக்கமுடியும்.

சிற்றிதழ்ச் சூழலில் இருவகை மூச்சுத்திணறலை நான் உணர்ந்தேன். ஒன்று என் வேகத்துக்கு அங்கே இடமில்லை. வருடத்துக்கு ஒருகதை எழுதுபவர்களுக்கு உரியது அது. நான் இடைவிடாது வாசல்களை மண்டையால் முட்டித்திறந்து முன்னேறும் ஊக்கம் கொண்டவன். விஷ்ணுபுரத்தைப் பிரசுரிக்க நான் அடைந்த சிரமங்கள் எனக்குப் புதிய பார்வையை அளித்தன. எழுதுவதைவிட பிரசுரிப்பது போராட்டமாக அமையும் சூழல் எனக்கு அபத்தமாகப்பட்டது. அந்நூலை எழுதுவதைவிட அதிகமான நேரத்தைப் பிழை திருத்தம் பார்க்கச் செலவிட்டேன். அப்படிப்போனால் மேலும் ஒரு நாவல் எழுதவே வாய்ப்பில்லை என உணர்ந்தேன். தமிழில் சிற்றிதழ்சார்ந்து எழுதியவர்கள் அனைவருடைய கதையும் அதுவே.

விஷ்ணுபுரம் பிரபல இதழ்களில் வந்த செய்திகள் காரணமாக சட்டென்று பரவலான வாசகர்களிடம் சென்று சேர்ந்தது. அதன் விளைவாக பிரசுரம் குறித்த கவலை அகன்றது. இன்று நான் எழுதினால், கூடவே பிரசுரகர்த்தர் வருகிறார்கள். பிரதிமேம்படுத்த, பிழை திருத்த திறன்வாய்ந்தவர்கள் உள்ளனர். எழுதிய நூல் 1000 பிரதி விற்கும் என்ற உறுதியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள முடிவுசெய்தேன். அது எனக்குக் கவலையில்லாமல் எழுதுவதற்குரிய சுதந்திரத்தை அளிக்கிறது. ஆகவே என் நூல்கள் வந்துள்ள தகவலை வாசகர்களிடம் கொண்டுசேர்க்க நான் முயல்வதுண்டு.

சக எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் உருவத்தை வைத்துப் பிழைதிருத்திப் படித்துக் கொண்டிருந்தது எனக்குத் திணறலை உருவாக்கியது. விஷ்ணுபுரம் மேலும் ஒரு விழி-திறப்பை உருவாக்கியது. அது சிற்றிதழ்ச் சூழலுக்குள் நின்றிருந்திருந்தால் சக எழுத்தாளர்களின் புகைச்சல்களுடன் ஓய்ந்திருக்கும். அதை நுணுகி ஈடுபட்டு வாசித்தவர்கள் முன்னெடுத்துச் சென்றவர்கள் பொதுவாசகர்கள். ஆகவே நூல்களை அவர்கள் கவனிக்கும்படிச் செய்வேன். அப்படிக் கவனித்த பிறகு நான் என் கவனத்தை அடுத்த நாவலுக்குத் திருப்பிவிடுவேன். என் நூல்களுக்கு [சங்கச் சித்திரங்கள், காடு, கூந்தல், பனிமனிதன்…] எந்த இதழிலும் மதிப்புரையே வரவில்லை என்று அறிவீர்களா?

என் இலக்கியத்தகுதி வேறு எவரையும் விட எனக்குத் தெரியும். அதை நன்கறிந்த வாசகர் பலர் உள்ளனர். அவர்களை நம்பியே நான் எழுதுகிறேன். என் தலைமுறையில் என்னளவு ஊக்கத்துடனும் படைப்பெழுச்சியுடனும் எழுதி ஒட்டுமொத்தப் பாதிப்பை உருவாக்கிய இன்னொருவர் இல்லை என்பதை ஒருவர் தன் அந்தரங்கத்துக்கு மறுத்துவிடமுடியாது. என் எழுத்தை, என் பங்களிப்பை மட்டம் தட்ட விரும்பும் ஒருசிலர் இம்மாதிரி அசட்டுப் பிரசாரங்களில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு நல்ல வாசகனுக்கு நான் இதை எதையுமே சொல்லவேண்டியதில்லை. என் இடம் தன்னைத்தானே தூக்கிக்கொண்டதனால் வந்ததா என்றறியவேண்டுமானால் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு ஆகியவற்றைப் படித்துப்பார் என்று மட்டும் சொன்னால்போதும். மற்றவர்களைப்பற்றி எனக்கென்ன கவலை? அவர்கள் இப்படி எதையாவது பேசித்தானே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இயலும்?

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 14, 15, 16
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 18