வெண்முரசு வரிசையின் இரண்டாவது நூலாக எழுதப்பட்ட மழைப்பாடலில், விதுரர் திருதராஷ்டிரனிடம் சொல்வது போல், அறிவதால் கிடைக்கும் மகிழ்ச்சியாக மாறிய வாசிப்பனுபவமே வெண்முரசு வாசிக்கும் அனுபவம். ஆனால் அந்த அனுபவத்தைப் பெற என் மூளையைக் காட்டிலும் என் மனமே கலமாக மாறியிருக்கிறது.
கிருஷ்ணா சந்துரு விமர்சனம்.
*
கிருஷ்ணாசந்துருவின் இவ்விமர்சனத்தில் உள்ள ஒரு குறிப்பு காந்தாரத்துக்கும் தமிழ் மன்னர்களுக்குமான உறவைப்பற்றி மழைப்பாடலில் வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்மன்னர்கள் சந்திரகுலமா சூரியகுலமா என்ற விவாதமே பொருளற்றது. ஏனென்றால் நமக்குக் கிடைக்கும் குறிப்புகள் மாறிமாறித்தான் உள்ளன. மூவேந்தரும் சந்திரகுலம் என்ற குறிப்பும் கிடைக்கிறது. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மன்னர்கள் அவ்வாறு சொல்லிக்கொண்டார்கள், அதற்கான குருதியுறவுமுறைமைகள் இருந்திருக்கலாம். சமீபத்தில்கூட அதைப்பற்றி எழுதியிருந்தேன். சிபி மன்னரைப்பற்றிய குறிப்பில்
நேட்ளுக்கும் இருக்கும் உறவைப்பற்றிய செய்தி வியாசமகாபாரதத்தில் உள்ளது. அதிலும்கூட இடைச்செருகல் கதைகளில் அல்ல, மூலத்தில். பண்டார்க்கர் ஆய்வுநிறுவனப்பதிப்பிலேயே அது உள்ளது. காந்தாரத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே என்னதான் உறவு இருந்திருக்கமுடியும் என புரியவில்லை. கோலர் என்று சொல்லப்படுபவர் தென்னகத்தில் எந்த அரசர்கள் என்றும் தெரியவில்லை.
ஆனால் இப்படி ஒரு குறிப்பு மகாபாரதத்தில் உள்ளதனால் அதை காந்தாரத்தில் குலமுறைவரிசையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் என்பதை பதிவுசெய்திருக்கிறேன். [வேண்டுமென்றால் ஹரப்பா நாகரீகத்திற்கும் தமிழர்களுக்குமான உறவின் ஒரு மருவிய வடிவம் இச்செய்தி என்று கொள்ளலாம்]
இச்செய்தியை முன்னரே விரிவாகவே எழுதியிருக்கிறேன். வெண்முரசு வாசிக்கையில் இத்தகைய ஐயங்கள் நிறையவே எழும். அனேகமாக அனைத்து ஐயங்களுக்கும் விரிவான, ஆதாரபூர்வமான பதில்களும் விளக்கங்களும் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளத்தில் சொல்லப்பட்டுள்ளன
பெரும்பாலான செய்திகள் மூலத்தை ஒட்டியவை. புனைவுக்காக சில செய்திகள் ஊகித்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. சில செய்திகள் விவாதித்து விரிவாக்கம் செய்யவேண்டியவை. அதற்கான முயற்சியே வெண்முரசு.
ஜெ
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக