பகவத் கீதை தேசியப்புனித நூலா?

210px-Shivas_Kinder_-_0191

பகவத்கீதையை இந்தியாவின் தேசியப்புனித நூலாக அறிவிக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருப்பதை நாளிதழ்ச் செய்திகளில் வாசிக்க நேர்ந்தது.

இந்துத்துவ அரசியல் என்பது இந்துப் பண்பாட்டு மரபில் இருந்து உடனடி அரசியலுக்குண்டான சில கருவிகளை மட்டும் எடுத்துக்கொள்வது, அதன்பொருட்டு ஒட்டுமொத்தப் பண்பாட்டு வெளியையே குறுக்கிச் சிறுமைப்படுத்துவது என்ற நிலையிலேயே உள்ளது. இதைச்செய்பவர்கள் எவரும் இந்துமரபில் போதிய அறிவு கொண்டவர்களோ ஒட்டுமொத்த இந்துப்பண்பாடு பற்றிய புரிதல் கொண்டவர்களோ அல்ல. வெறும் தெருச்சண்டை அரசியல்வாதிகள். அல்லது மேடையில் உளறும் அசடுகள். இந்த அறிவிப்பும் அந்த வகையைச் சேர்ந்ததே.

பகவத்கீதை ஒட்டுமொத்த இந்துஞானமரபுக்கும் அது மூலநூல் அல்ல. சைவ மரபுக்கும் சாக்தமரபுக்கும் அந்நூல் ஏற்புடையது அல்ல. முதன்மையாக அது வேதாந்தநூல். பக்திநோக்கில் வைணவ நூல். ஆகவே அதை இந்துக்களின் புனிதநூல் என்று குறிப்பிடுவதே இந்துப்பண்பாட்டுக்கு எதிரான குறுக்கல்வாதம். இந்துஞான மரபின் விரிவையும் சுதந்திரத்தையும் அழிக்கும் செயல். இந்து ஞானமரபை அரசியல் நோக்கில் நிறுவனமதமாக ஆக்கி மதவெறியை நோக்கிக் கொண்டுசெல்லும் மூர்க்கம்.

பகவத்கீதை வழிபடப்படவேண்டிய நூல் அல்ல. பைபிள் அல்லது குரான் போல மதநூல் அல்ல. இந்துக்களின் புனிதநூலும் அல்ல. அப்படி எழுதப்பட்ட ஒற்றை வரி இருந்தமையால் நடராஜகுரு ராதாகிருஷ்ணனின் நூலை கிழித்து வெளியே வீசினார் என்று நித்ய சைதன்ய யதி ஓர் உரையில் சொல்கிறார். பகவத்கீதை வேதாந்த மரபின் பிரஸ்தானத்ரயம் எனப்படும் மூன்று தத்துவநூல் தொகைகளில் ஒன்று மட்டுமே [18 உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை]

தத்துவ நூல் என்பது நம்பி ஏற்கவேண்டியது அல்ல. புனிதமென வழிபடப்படவேண்டியதும் அல்ல. சமரசமில்லாத ஆராய்ச்சிக்கும் விவாதத்துக்கும் உரியதுதான் தத்துவமாக இருக்க முடியும். கீதை இன்றுவரை அப்படித்தான் இருந்து வந்துள்ளது. புனிதநூல் என்ற முத்திரை போல அதை அழிப்பது வேறில்லை. மதநூலாக கீதை ஆக்கப்படுமென்றால், அதை விமர்சிப்பதும் ஆராய்வதும் மதநிந்தனையாகக் கருதப்படுமென்றால் அதன்பின் அது எவருக்கும் பயன்படாது.

இந்துவாக தன்னை உணரும் எவரும் இந்த சிறுமையை எதிர்த்தாகவேண்டும். இந்துமரபு என்பது தனிமனிதனின் ஞானத்தேடலுக்கு அளிக்கும் எல்லையற்ற சுதந்திரத்தாலும், தொடர்ந்து கிளைகளாகப் பிரிந்து தன்னை புதுப்பித்துக்கொள்ளக் கூடிய அதன் தத்துவவினாக்களாலும், கடந்தகாலப் பிழைகளைக் களைந்து முன்னேற அது அளிக்கும் வாய்ப்பினாலும், சாராம்சத்தில் அதிலுள்ள மறைஞான நோக்காலும்தான் போற்றத்தக்கதாகிறது. நிறுவனமதமாக அது மாறுமென்றால் இவையனைத்தும் எந்த அறிவும் மெய்யுணர்வும் இல்லாத நிறுவனமனிதர்களால் கட்டுப்படுத்தப்படும். இந்துஞானி ஒருவர் கீதையை விமர்சிக்க அசோக் சிங்கலிடம் அனுமதி கோரவேண்டிய நிலை வருமென்றால் அதுவே இந்துமதத்தின் இருண்ட காலகட்டம்

மதகுருக்களாலோ மதஅரசியல்வதிகளாகோ அரசாங்கத்தாலோ அல்ல, நாமார்க்கும் குடியல்லோம் என்று வானத்தின் கீழ் வெறும்மண்ணின் மேல் வாழ்ந்த ஞானிகளால் வாழவைக்கப்படும் மரபு இது. அந்தக்கட்டின்மையில் இருந்தே இதன் ஆற்றல் கிளம்பி வருகிறது. இந்தச் சிறியமனங்களிடமிருந்து அதைக் காப்பதே இன்று இந்துமரபின் உண்மையான ஞானத்தொகையை சற்றேனும் அறிந்தவர்களின் கடமையாக இருக்கும் என தோன்றுகிறது.

அத்துடன், இந்தியா இதை உருவாக்கிய முன்னோடிகளால் மதச்சார்பற்ற குடியரசாகவே உருவகிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் வரைத்தான் இது வலுவான அரசாக நீடிக்கும். அரசின் அடையாளமாகவோ, அதிகாரபூர்வ நூலாகவோ ஒரு மதத்தினரின் நூல் அறிவிக்கப்படுமென்றால் அது இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது மட்டும் அல்ல ஒருமைப்பாட்டின் மீதும் செலுத்தப்படும் தாக்குதலே.

சுஷ்மா சுவராஜின் பேச்சு தொடர்ந்து பாரதீய ஜனதாவின் சில்லுண்டித் தலைவர்களால் பொறுப்பில்லாமல் முன்வைக்கப்படும் மேடை வெளிப்பாடு என்றே நினைக்கிறேன். இந்திய அரசியல் சட்டம் வலுவானது, அதை எளிதில் மீறவோ மாற்றவோ முடியாது. ஆனாலும் இந்தப்பேச்சு கண்டிக்கத்தக்கது. இதில் உள்ள சீண்டும் நோக்கு மிகமிக அபாயகரமானது.

மீண்டும் காந்தியை, நேருவை, அம்பேத்கரை, பட்டேலை, லோகியாவை எண்ணிக் கொள்ளவேண்டிய காலம் வந்துவிட்டிருக்கிறது.

***
கீதையை எப்படிப் படிப்பது, ஏன்?

கீதை எதற்காக?

கீதை நமது

கீதை அறிவுலகில்

கீதை வழிகள்

கீதைத்தருணம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

கீதை அகம்

கீதைவெளி

முந்தைய கட்டுரைஇந்திய வேளாண்மையும் உழைப்பும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52