«

»


Print this Post

ஆன்மீகம், போலி ஆன்மீகம் 5


அன்புள்ள ஜெ,

இந்தக் கேள்வியை நான் எதற்காக கேட்கிறேன் என்று என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. பிரம்மசரியம் என்பது ஆன்மீகமான வலிமையை அளிக்கக் கூடியதா இல்லையா? நம்முடைய புலன்களை நாம் அடக்கினால்தானே நமக்கு ஞானம் கிடைக்கிறது. காமத்தை அடக்காமல் ஞானம் கிடைக்குமா என்ன? அதாவது ஒரு சன்யாசி மட்டும் தானே யோகியாக இருக்க முடியும்? பிரம்மசரிய விரதம் எடுப்பவருக்கு உடலில் தாதுபலம் அதிகரிக்கும் இல்லையா? அவரது மெய்யில் தேஜஸ் கூடும் என்று சொல்வது உண்மைதானே? இதனால்தானே பிரம்மசரியம் எடுக்கும் சாமியார்களால் மக்களைக் கவர முடிகிறது? நான் சொல்லவந்ததை சரியாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. அதாவது விந்துவை அடக்கினால் யோகபலம் உண்டாகும் என்றுதானே சித்தர்கள் சொல்கிறார்கள்?

பிரகாஷ், சிதம்பரம்

அன்புள்ள பிரகாஷ்,

இந்திய மதச்சூழலில் இந்த வகையான நம்பிக்கைகள் பலவகையிலும் ஆழமான செல்வாக்கைச் செலுத்துகின்றன. அவற்றுடன் விவாதிப்பதே எளிதானதல்ல. இந்த விஷயத்தை மிக விரிவாக இந்த விவாதக்களத்திற்குள் ஏற்கனவே வந்துவிட்ட ஒருவரிடம் மட்டுமே பேச முடியும். பிறருக்கு எல்லா விளக்கங்களும் மேலும் குழப்பத்தை மட்டுமே அளிக்கும்.

முதலில் வரலாற்றுரீதியாக இதை அணுகுவோம். பிரம்மசரியம் என்ற சொல் இந்து மதநூல்களில் வேறு பொருளில்தான் பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. கல்விகற்கும் மாணவப்பருவம் என்றுதான் அச்சொல்லுக்குப் பொருள்.  பிரம்மசாரி பிரம்மத்தை அறியும் நெறி கொண்டவன் [சரியை   என்றால் நெறி] என்று அதற்குப் பொருள்.

கல்விகற்கும் பருவத்தில் மாணவன் மனதை கல்வியில் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. ஆகவே அவன் உலகியல் விஷயங்களில் இருந்து முற்றாக தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும். ஐந்துபுலன்களையும் அவற்றின் இயல்பான இன்பநாட்டங்களுக்குச் செல்லாமல் தடுத்து மனதை கல்வியில் செலுத்த வேண்டும். ஆகவேதான் மாணவனுக்கு காம ஈடுபாடும் விலக்கப்பட்டது.

இதன்பின்னர் இல்லறத்தில் ஈடுபட்டு மக்கட்செல்வத்தை அடைந்து, இல்லறத்தின் கடமைகளை முடித்துவிட்டு, மீண்டும் ஒரு துறவுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதை வானப்பிரஸ்தம் என்றார்கள். வனம்புகுதல். அதுவும் துறவே. உலகியலை முழுமையாக நிராகரித்து மனதை ஆன்மீக மீட்பு குறித்த இலக்கில் நிறுத்துதல் அது.

இது அனைவருக்கும் சொல்லப்பட்டது.  மாறாக சிறப்பான ஞானத்தேடல் கொண்ட ஒருவர் அதன்பொருட்டு முழுமையாகவே உலகியலைத் துறக்கலாம். துறப்பதன் நோக்கம் உலகியலுக்கு அப்பாற்பட்டவற்றை மட்டுமே நாடிச் செல்லவேண்டும், அந்தப்பயணத்தில் உலகியல் குறுக்காக வரக்கூடாது என்பதே.

இந்தக்காலகட்டத்தில் யோகம், தியானம், ஞானத்தேடல் எதற்குமே காமஉறவை நிராகரித்தல் ஒரு விதியாகச் சொல்லப்பட்டதில்லை. காம உறவுக்கு நன்மக்கட்பேறுக்கான வழி என்பதற்கு அப்பால் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதில்லை. அது இயற்கையான ஒன்றாக மட்டுமே பார்க்கப்பட்டது.

காமம் என்ற சொல்லுக்கு தமிழில் இப்போது உடலிச்சை என்ற பொருள் உள்ளது. அச்சொல்லுக்கு சங்க காலத்தில் விருப்பம் என்ற பொருளே இருந்தது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றால் கற்றவரைக் கற்றவரே விரும்புவர் என்றே பொருள். ஆகவே பழங்கால நூல்களில் காமத்தை விலக்குதல் என்று சொல்லும்போது உடலுறவைத் தவிர்த்தல் என்ற பொருளில் அல்ல விருப்பத்தை தவிர்த்தல் என்ற பொருளிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

இந்திய வரலாற்றில் துறவை ஓர் உயர்விழுமியமாக நிலைநாட்டியது சமணம். அதை ஓர் அமைப்பாக ஆக்கி விதிகளை உருவாக்கியது பௌத்தம். இவ்விரு பெருமதங்களும்தான் ஆண்பெண்ணுறவை முழுமையாக நிராகரித்து அது மெய்ஞானத்துக்கான பயணத்தில் பெரும்தடை என்று வகுத்தன. அந்த உறவின்மூலம் மனிதன் உறவுச்சிக்கல்களிலும் உலகியல் கடமைகளிலும் மாட்டிக்கொள்கிறான். அவ்வாறு தன்னை தளையிட்டுக்கொண்டவனால் ஞானத்தேடலை சுதந்திரமாக நடத்த முடியாது என்று சொல்லின.

ஆனால் அவை உடலுறவை மறுப்பதை மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. பௌத்தம் ‘உபேட்சை’ என்று சொல்லும் துறவு என்பது அனைத்து விருப்புகளையும் துறப்பதே. சமண பௌத்த துறவிகளின் நெறிகள் மிகக் கடுமையானவை. உதாரணமாக ஒரு சமணத்துறவி எந்தக்கூரையின் கீழும் தங்கக்கூடாது. கட்டாந்தரையில் மட்டுமே படுக்க வேண்டும். கையிலேயே உணவை வாங்கி சாப்பிட வேண்டும். ஒருநாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவருந்தவேண்டும். இப்படி பல விதிகள்.

ஒரு பௌத்த துறவி ஒருவேளை உணவுண்ண வேண்டும். அந்த உணவை பிச்சை எடுத்து உண்ணவேண்டும். எந்த தொழிலையும் செய்யக்கூடாது.  எந்த கிராமத்திற்குள்ளும் தங்கக் கூடாது. சுடுகாடு போன்ற கைவிடப்பட்ட இடங்களிலேயே தங்கவேண்டும். ஒரு ஊரில் மூன்றுநாட்களுக்குமேல் தங்கக்கூடாது.

இவ்வாறு முழுமையாக உலகியலைத் துறப்பதன் ஒரு பகுதியாகவே உடலுறவை துறப்பதைப்பற்றியும் அந்த மதங்கள் பேசின. இத்தனை விஷயங்களையும் துறக்க ஒருவனால் முடியும் என்றால்  உடலுறவை துறப்பதொன்றும் பெரிய விஷயம் அல்ல. இதை அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். இரண்டு வருடங்கள் நானும் அவ்வபோது பிச்சை எடுத்து அலைந்திருக்கிறேன். அந்தக்காலத்தில் எந்த கணத்திலும் காமத்தை ஒரு  எளிய பிரச்சினையாக உணர்ந்ததில்லை.

துறவை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சமணமோ பௌத்தமோ உடலுறவை நிறுத்திக்கொள்வதன்மூலம் அடையப்பெறும் தேஜஸ் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஆரம்பகால தேரவாத பௌத்த நூல்களில் மாரனின் அளவிறந்த வல்லமை குறித்து பேசப்படுகிறது. மாரனுக்கு காமமே ஆயுதம். ஆனால் அது மண் ,பெண், பொன் ஆகிய மூன்றின் மீதான ஆசைதான். மாரனை வெல்வதைப்பற்றி அவை பேசுகின்றன. விந்துவை பேணி உடலில் பிரம்மதேஜஸ் வளர்ப்பதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை.

ஆச்சரியம் என்னவென்றால் இந்தவகையான நம்பிக்கைகளும் கொள்கைகளும் காமத்தை வழிபட ஆரம்பித்த அணுகிய தாந்திரீகமுறைகளில் இருந்து உருவானவை என்பதுதான். தாந்த்ரீகச் சடங்குகளுக்கு வேதங்களை விடப் பழைமை உண்டு. அதிபுராதனமான பழங்குடிச் சடங்குகளில் இருந்து அவை உருவாகி வந்துள்ளன. அதர்வ வேதம் தாந்த்ரீகச் சடங்குகளின் மூலவடிவங்களை முன்வைக்கும் நூல்.

தாந்த்ரீகச் சடங்குகளில் எப்போதும் காமம் முக்கியமாகப் பேசப்படுகிறது. ஏனென்றால் காமம் மனிதனின் முதலாற்றல். அந்த ஆற்றல் ஒருசெல் உயிரினம் உட்பட அனைத்திலும் குடிகொள்ளும் பிரபஞ்ச விதி. ஆகவே அதை பிரபஞ்ச சக்தியின் ஊற்றுமுகமாக எண்ணி அதை வழிபட்டார்கள். அதை கூர்ந்து அவதானிக்கவும் பல்வேறு சடங்குகள் மூலம் வளர்த்தெடுக்கவும் அதன் ஆற்றலை வேறு தளங்களுக்குக் கொண்டு சென்று யோக ஆற்றலாக மாற்றிக்கொள்ளவும் முயன்றார்கள்.

அதன் சாத்தியங்களைப் பற்றியும் அதன் தார்மீகத்தைப் பற்றியும் இங்கே பேச வேண்டியதில்லை. நெடுங்காலமாக அது நம் மரபில் ஒரு முக்கியமான வழியாக இருந்து வந்துள்ளது. இன்றும் புறவயமாக பேசப்படத்தக்க அளவுக்கு வெளிப்படையாக அது இல்லை.

இந்தக் கோணத்தில் பாலுறவு மேலே சொல்லப்பட்ட இருதளங்களில் இருந்தும் மாறுபடுகிறது. அது ஓர் இயற்கையான நிகழவல்ல. அது ஒரு உலகியல் கவற்சியும் ஞானத்திற்கான தடையும் மட்டும் அல்ல. அது  மிக முக்கியமான ஒரு குறியீட்டுச் செயல்பாடு. அது ஒரு சக்தி வெளிப்பாடு.

தாந்த்ரீகம் வாமமார்க்கம் தட்சிண மார்க்கம் என்று பிரிந்தபோது இந்த அணுகுமுறை மீண்டும் தலைகீழாகியது. காமம் மிக முக்கியமானது என்றால் அதைச் செய்வதுபோலவே செய்யாமலிருப்பதும் முக்கியமானதல்லவா?. செய்வதன் மூலம் வெளிப்படும் ஆற்றல் செய்யாமலிருக்கையில் என்ன ஆகிறது? அது அந்த நேர்முனையிலேயே தங்கி விடுகிறது. அந்த ஆற்றலை யோக ஆற்றலாக ஆக்கிக் கொள்ளமுடியும் என்றனர் வாம மார்க்கிகள்.

இந்த நம்பிக்கை பின்னர் நம் சித்தர் மரபுகளில் பரவியது. வைத்தியத்தில் குடியேறியது. பாமர மக்களிடையே பலவகையான கிளைவளர்ச்சிகள் அடைந்து அதற்குரிய தொன்ம வடிவத்தை அடைந்தது.  ஒரு துளி விந்து  ஆயிரம் துளி ரத்தத்துக்குச் சமம் என்றும், ஒரு சேமிக்கப்படும் விந்து வெண்ணிறமான ஒளியாக ஆகி உடலில் பரவுகிறது என்றும், அந்த ஒளி யோகத்தின் மூலம் குவிந்து நெற்றிப்பொட்டில் சேர்கிறது என்றும் சொல்லத்தலைப்பட்டார்கள்.

இந்த நம்பிக்கைகள் அனைத்துமே தாந்த்ரீக மரபில் இருந்து வெளியே பரவி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை மட்டுமே. இவற்றுக்கும் யோக மரபுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவற்றுக்கும் பௌத்த, சமண மதங்களின் துறவுநெறிகளுக்கும் தொடர்பில்லை.

நம் சூழலில் தாந்த்ரீக மரபில் எவையெல்லாம் குறியீடுகளாக சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் அப்படியே சொல்லர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் வழக்கம் மிகுந்திருக்கிறது. இக்காரணத்தால்தான் அக்காலத்தில் தாந்த்ரீக வழிமுறைகளை குருமுகத்தில் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவை பிறருக்குச் சொல்லப்படக்கூடாது என்றும் இறுக்கமான விதி இருந்திருக்கிறது.

தாந்த்ரீக நம்பிக்கைகளின்படி பார்த்தாலும்கூட ஆண்பெண் உறவென்பது ஒரு மாபெரும் குறியீட்டுச்செயல் மட்டும்தான். பிரபஞ்சத்தில் உள்ள செயலாற்றலும் விளைவாற்றலும் முயங்கும் தருணம் அது. சிவ சக்தி லயனம். அந்தச்செயலில் ஒன்றுமில்லை, அதை எப்படி உணர்கிறோம் என்பதில்தான் எல்லாம் உள்ளது.  அதாவது வெறுமே உடலுறவு கொள்பவன் ஏதும் அடைவதில்லை. அதை பிரபஞ்ச ஆற்றல் வெளிபப்டும் தருணமாக முழுமையாக உணர்ந்து ஈடுபடுபவன் அந்த ஆற்றலின் முடிவின்மையை தன் அகத்தில் உணர்கிறான்

அப்படியானால் காமத்தை நிராகரிப்பதிலும் ஒன்றும் அடையப்படுவதில்லை. அந்த நிராகரிப்பை நேர்நிலை ஆற்றலின் குவிப்பாக உணரக்கூடிய யோகிக்கே அதனால் ஏதேனும் பயன் உள்ளது. அதாவது அது முழுக்க முழுக்க ஓர் உள ஆற்றல். அறிதலின் ஆற்றல். அதை கோவணத்தை இறுக்கிக் கட்டுவதன் மூலம் வரும் ஆற்றல் என்று புரிந்துகொள்ள முடியும்?

ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. நித்ய சைதன்ய யதி ஒரு இல்லற மாணவருக்கு பிரபஞ்சத்தின் மாபெரும் முரணியக்கத்தை தியானிக்கும்பொருட்டு சிவசக்தி நடனத்தை பரிந்துரைத்து ஒரு சிறு விக்ரகத்தையும் அளித்தார். அந்த மாணவர் பின்னர் பேசியபோது அவரது மனம் அதை முழுக்க முழுக்க ஆண் பெண் உறவு சார்ந்த பல்வேறு கருத்துக்களாக உள்வாங்கிக் கொண்டிருப்பதை நித்ய சைதன்ய யதி கண்டார்.

ஆகவே அந்த சிலையை திரும்பப் பெற்றுக்கொண்டபின் ஒரு மொத்தையான ஓவியத்தை வரைந்து அவருக்கு அளித்தார். அதன் பொருள் இது. கடுமையான பசி கொண்ட இரு அமீபாக்கள் சந்தித்துக்கொண்டன. ஒன்று இன்னொன்றை விழுங்க ஆரம்பித்தது. இன்றுவரை விழுங்கிக்கொண்டே இருக்கின்றன அவை. அதை அவர் தியானித்தால் போதும் என்று சொன்னதாக நித்ய சைதன்ய யதி சிரித்துக்கொண்டே சொன்னார்.

இதுதான் நம் மனதின் சிக்கல். நாம் பல்வேறு வகையில் தவறாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். நம் மரபு பிரம்மாண்டமானது. அதன் சிதறல்கள் எப்படியோ நம்மிடம் தொன்மங்களாக கதைகளாக நம்பிக்கைகளாக வந்து சேர்ந்துள்ளன. நாம் அவற்றை வைத்துக்கொண்டே எல்லாவற்றையும் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். எனவே ஒரு பூரணமான கல்வியழித்தல் நிகழாமல் பலசமயம் நாம் ஆன்மீகமான விஷயங்களுக்குள் நுழைய இயலாது.

ஒரு மனிதர் உலகியலைத் துறந்து மெய்ஞானத்தின் பாதையில் செல்லும்தோறும் அவரிடம் உருவாகும் தெளிவு அவருக்கு ஓர் அழகை அளிக்கிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். பல யோகியரின் கண்கள் குழந்தையின் விழிகள் போலிருக்கும். சிறு குழந்தைபோல இயல்பான ஓர் களியாட்ட நிலையில் அவர்கள் இருப்பார்கள். அது மனம் அடங்குவதன் ஒளி, விந்து அடக்கப்படுவதன் ஒளி அல்ல.

காம இச்சை என்பது உலக இச்சையின் ஒரு பகுதி. உலக இச்சையை உலக போகங்களை முழுக்க தக்கவைத்துக்கொண்டு எவராலும் காம இச்சையை வெல்ல முடியாது. இது எல்லா ஞானமரபுகளிலும் உள்ள விதியாகும். முறையான யோக, தியான பயிற்சிகள் இல்லாமல் காம இச்சையையோ உலக இச்சையையோ எவராலும் கடந்துசெல்ல முடியாது. அடக்கவே முடியும். அடக்கப்பட்ட எதுவும் ரகசியமாக ஆகும். வேறு ஊடுவழிகளைக் கண்டடையும். சிக்கல்களை உருவாக்கும்.

ஆனால் முறையான யோக, தியான பயிற்சிகளின் மூலம் கண்டிப்பாக காமம் உட்பட உள்ள உலகியலிச்சைகளை வெல்ல முடியும். அதற்கான பயிற்சிமுறைகள் சோதனைகள் எல்லாம் நெடுங்காலமாக உருவாகி வளர்ந்து வந்தவை. யோக-தியானப் பயிற்சிகள் மட்டுமல்ல வெறு பல நடைமுறைகளும் உள்ளன. நூல்களை பொருளை பொருட்படுத்தாமல் எழுத்தெண்ணிப்பயில்தல் [மனனம்] உக்கிரமான கல்விப்பயிற்சி [ஸ்வாத்யாயம்] முழுத்தனிமையில் இருத்தல் [ எகாந்தம் ] அலைந்து திரிதல் [பவிராஜகம்] என பல வழிகள். இவை குருகுல அமைப்புக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

மூன்று விஷயங்களை மட்டும் இதில்  உறுதியாக நினைவில் கொண்டால் போதும்.

1. இவை எதுவுமே எளிமையானவை அல்ல. எவருக்கும் பிறவியிலேயே வரும் வரமும் அல்ல. கடுமையான அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சிமூலம் மெல்ல மெல்ல கைவரும் இயல்புகள் மட்டுமே

2. இவ்வாறு அடையப்பெறும் புலனடக்கம் மூலம் திசைதிரும்பல்கள் அலைச்சல்கள் இல்லாமல் ஞானத்தேடலில் மட்டுமே குவியும் பிரக்ஞை கிடைக்கிறது. அதுவே இந்த புலனடக்கத்தின் நோக்கம். அதுவல்லாமல் உடலில் தேஜஸ் ஏறுவதோ விரல்களில் சக்தி வருவதோ ஒன்றும் அல்ல

3 புலனடக்கம் என்பது ஞானத்தேடலுக்கான வழிமுறையே ஒழிய நிபந்தனை அல்ல.  இல்லறத்தில் இருந்தே அந்த ஞானத்தை அடைந்தவர்களும் பலர் நம் மரபில் உண்டு.

ஆகவே ஒருவர் பிரம்மசாரி என்பதோ துறவி என்பதோ அவருக்கு பெண்ணுறவு இல்லை என்பதோ அவருக்கு எந்தவகையான ஆற்றலையும் அளிப்பதில்லை. அவர் எதை அடைந்தார் என்பதே அவரை தீர்மானிக்கிறது

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6691

4 comments

Skip to comment form

 1. muthu prakash

  பேரன்பிற்குரிய ஜெ!
  எனது வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தங்களின் முந்தைய அத்தியாயங்களை விட இந்த பத்தியில் முழு சமநிலை இருப்பதாக அந்தரங்கமாக உணர்கிறேன்…இதே கேள்வி வரிகளை எனது பத்தொன்பது வயதுகளில் உங்களிடம் கேட்டதும், (இதே பதில் தான் அப்போதும்),பசப்புகிறான் என்று நண்பனிடம் விரக்தியாக சொன்னதும் நினைவில் வருகின்றது…பதினோரு ஆண்டுகள் போய் விட்டன…புரிதலின் முன் காத்திருத்தலின் வலிகள்
  புன்னகைகள் ஆகின்றன…புரிதலையும் கடக்க முயன்று கொண்டிருக்கிறேன்…அந்த முயற்சியும் ஒரு நாள் அகலும்…முதற் குருவே!…வழியும் இந்த துளிகள் என் அன்பின் நன்றியின் அடையாளங்கள் …’கடந்து செல்லல்’…ஆம் …’கடந்து செல்லல்’….

 2. muthu prakash

  எனது comment ல் …//*…புரிதலின் முன் ‘காத்திருத்தலின்’ வலிகள்
  புன்னகைகள் ஆகின்றன…*// …’காத்திருந்ததின்’ என்று இருந்திருக்க வேண்டும் …நன்றி ஜெ..

 3. ramji_yahoo

  ஜெமோ நல்ல பதிவு.

  நாத பிந்து உபநிசத்து அல்லது நிராலம்ப உபநிசத்தில் படித்த ஞாபகம் எனக்கு அதில் கூறப்பட்ட செய்தி காம ஆசை, பொன் ஆசை குறைந்தால் பிரம்மத்தை ஞானத்தை அடையாளம் என்பது.

  கார்போரடே உலகில் கூட சொல்கிறார்களே, ஒரே குறிக்கோள் இருக்குஅ வேணும் என்று. பல குறிகோள்கள் இருந்தால் பயணம் வேறு படும், தடை படும் என்பது போல.

  எனவே பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கி பயணிக்கும் பொழுது பொன் ஆசை, மண் ஆசை , பெண் ஆசை, உணவு, உடை குறிகோள்கள் இருக்க கூடாதா.

 4. vks

  “புலனடக்கம் என்பது ஞானத்தேடலுக்கான வழிமுறையே ஒழிய நிபந்தனை அல்ல. இல்லறத்தில் இருந்தே அந்த ஞானத்தை அடைந்தவர்களும் பலர் நம் மரபில் உண்டு.

  இந்த எளிய உண்மையை புத்தர் ஏன் உணரவில்லை?

Comments have been disabled.