இந்தியப்பயணம் 21, பூரி

செப்டெம்பர் 17 ஆம் தேதி நாளந்தாவிலிருந்து கிளம்பி பிகாரைத்தாண்டி ஜார்கண்ட் மாநிலத்துக்குள் நுழைந்தோம். ஜார்கண்ட் மாநிலம் பிகாரை விட மேலும் பின் தங்கியது என்று சொல்லலாம். போக்குவரத்து வசதி அனேகமாக கிடையாது, டிராக்டர் தவிர. கந்தலுடையுடன் புழுதிக்குள் நடமாடும் மெலிந்து வற்றிய மக்கள். ஒரு மாறுதல் இங்கே மீண்டும் சாலைகளில் அலையும் கொழுத்த மாடுகளைக் கண்டோம்.

டீ குடிக்க இறங்கியபோது கடையில் ஜார்கன்ட் வழியாக இரவில் பயணம்செய்வது சரியல்ல என்றார்கள். உதிரி கொள்ளைக் கூட்டத்தவர்கள் தாராளமாகச் செயல்படும் இடம் அது. இடது தீவிரவாதிகளும் ஒருவகை கொள்ளையர்கள்தான். ஆகவே ஜார்கண்டை கூடுமானவரை தவிர்த்து மேற்குவங்கத்துக்குள் சென்று இரவு தங்கிவிட்டு அப்படியே ஒரிஸாசெல்லலாம் என்று முடிவுசெய்தோம்.

கொல்கொத்தா சாலையில் விரைந்து தேவ்கர் வழியாக மேற்குவங்கத்தில் உள்ள பங்குரா என்ற ஊருக்கு இரவு ஒன்பது மணிக்கு வந்துசேர்ந்தோம். மேற்கு வங்கத்தை நெருங்கியபோதே ஜார்கண்டின் இயல்பு மாறுபட ஆரம்பித்தது. முதல்விஷயம் அழகாக கட்டபப்ட்ட பழைய வீடுகள் சாலையோரம் தென்பட்டன. தேர்ச்சியாக வளையோடு போட்டு இரு முகப்புகளும் சாளரங்களும் கொண்டவை. சாலையோரக் கடைகளும் பலவகையில் மேம்பட்டிருந்தன. சாலையோரங்களில் ஏராளமான மக்கள் கூடியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தரவற்கத்தைச் சேர்ந்தவர்கள்.

மேற்குவங்கத்துக்குள் நுழைந்தோம். அதன் கேரளச் சாயல் ஆச்சரியம்கொள்ள வைத்தது. மக்களுடைய உடல்மொழி பேச்சுமுறை பெண்களின் அலங்காரங்கள் என நிறைய விஷயங்கள் கேரளத்தை நினைவில் எழுப்பின. அப்படியெல்லாம் ஒன்றும் தெரியவில்லை, அது உங்கள் பிரமை என்றார் வசந்தகுமார். இருக்கலாம். நான் இருபது வருடங்களுக்கு முன்பு வங்காளம் சென்றிருக்கிறேன். அன்று கொல்கொத்தா தவிர பிற வங்கநிலம் பிகாரைவிட பின்தங்கியதாக இருக்கும். இப்போது சற்று மாறுதல் தெரிகிறது, பீகார் அளவுக்கு முன்னேற்றம்.

கடந்த பலவருடங்களாக மேற்குவங்கத்தில் உள்கட்டமைப்புக்கான எந்தப்பணியும் நிகழவில்லை என்பதை சாலைகள் மூலம் அறியலாம். உள்கட்டமைப்பு கைவிடப்பட்டமையால் உள்ளூர் வணிகம் என்பது அனேகமாக இல்லை. ஆகவே விவசாயிகளும் சிறுவிற்பனையாளர்களும் பஞ்சைப்பராரிகளாக தெரிகிறார்கள். காசியில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் கிலோமீட்டருக்கு ஒருரூபாய் கொடுத்தால் போதும். மேற்குவங்கத்தில் அரைப்பட்டினி தொழிலாளருக்கு எட்டணாகொடுத்தாலே திருப்தி. எந்நேரமும் வாயில் மாவாவுடன் பிரமை பிடித்த்தவர்கள் போல சோம்பி இருக்கிறார்கள். ஓட்டலில் சர்வர்கள் கூட மிகமிக சோம்பலாகவே பரிமாறுகிறார்கள்.

ஒரு விடுதியில் அறைபோட்டோம். இரண்டு பெரிய இரட்டை அறைகளும் ஒரு சிறிய ஒற்றை அறையுமாக மொத்த வாடகை நாநூறு ரூபாய். அந்த தொகை அங்கே மிகபெரியது. எங்கும் எவரிடமும் பணமென்பதே இல்லை. நான் பெங்களூர் சாலையில் மஞ்சள்வாழைப்பழத்தைப் பார்த்தபின்னர் இந்த நகரத்தில்தான் மீண்டும் மஞ்சள் வாழைப்பழத்தைப் பார்க்கிறேன். பிற ஊர்கள் எங்கும் பச்சை நாடாப்பழம் மட்டுமே கிடைக்கும். பச்சைநாடா வாழை அதிகமான மகரந்தத் திறன் கொண்டது. பிற வாழைகளை அது சீக்கிரமே பச்சைவாழையாக ஆக்கிவிடும். ஆகவே கன்யாகுமரி மாவட்டத்தில் அதை பயிர்செய்ய தடை உண்டு. வடக்கே பிற வாழைகளை பச்சை வாழை அழித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கினேன், பழம் ஒன்றுக்கு இருபது பைசா. கன்யாகுமரிமாவட்டம் வாழைப்பழத்தின் மையம், இங்கே மலிந்து மலிந்துபோனாலும் ஐம்பதுபைசாவுக்கு குறையாது.

18 ஆம்தேதி காலை எழுந்து தெற்குநோக்கி செல்ல ஆரம்பித்தோம். மித்னாபூர் வந்து அங்கிருந்து ஒரிஸாவுக்குச் செல்வது திட்டம். சாலையெங்கும் வங்கத்தின் ‘தேசிய’ பெருமிதங்களான விவேகானந்தர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் சிலைகள் நின்றிருந்தன. மார்க்ஸ் சிலைகளோ செங்கொடியோ கண்ணில் படவில்லை. கொல்கொத்தா நெடுஞ்சாலை மூன்றுக்கு ஒன்று விகிதத்தில் போடப்பட்டிருந்தது. பெரும்பகுதியில் வேலை அப்படியே கைவிடப்பட்டிருந்தது. உள்ளூர் தாவாக்கள் முடிந்திருக்காது. மேற்குவங்கத்தில் பொதுப்போக்குவரத்து வசதிகள் பிகாரைவிட மோசமானவை. பேருந்துக்கு மேல் இருபத்தைந்து பேர் பயணம்செய்வதைக் கண்டோம்– கைக்குழந்தைகளுடன் பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவழியாக ஒரிஸாவுக்குள் நுழைந்தோம். ஒரிஸா ஒப்புநோக்க மேற்கு வங்கத்தைவிட மேலான நிலையில்தான் இருந்தது. வயல்கள் பச்சைசெழித்திருக்க நடுவே சிறிய ஓட்டுவீடுகள் கொண்ட கிராமங்கள். சாலை மற்றும் கடைகளில் நடுத்தரவற்கம் உருவாகியிருப்பதன் அடையாளங்கள். போக்குவரத்து கூட பரவாயில்லை என்பதை பேருந்துகள் மூலம் அறிந்துகொண்டோம். இதையெல்லாம் ஒப்புநோக்கில்தான் சொல்கிறேன். மதுரை நெல்லை நடுவே  ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஓடும் பளபளப்பான வசதியான பேருந்துகளை நவீன் பட்நாயக்கே பார்த்திருப்பாரா என்பது ஐயமே.

பொதுவான நோக்கில் எனக்குப் பட்டது இது. உள்கட்டமைப்பு போக்குவரத்து பொதுக்குடிநீர் வீட்டுவசதி மற்றும் நடுத்தரவற்கத்தின் விகிதாசாரம் ஆகியவற்றில் தமிழ்நாட்டுக்கு 60 மதிப்பெண் கொடுக்கலாமென்றால் ஆந்திரத்துக்கு நாற்பது, மத்தியப்பிரதேசத்துக்கு இருபது , உத்தரபிரதேசத்துக்கு இருபத்தைந்து , பிகாருக்கு பதினைந்து, ஒரிஸாவுக்கு நாற்பது கொடுக்கலாம். மேற்குவங்கத்துக்கு ஐந்து அல்லது பத்து மதிப்பெண் வழங்குவதைப்பற்றி யோசிக்கலாம். 

ஒரிஸாவுக்கு நாங்கள் சென்றபோது பெருமழை கொட்டி வெள்ளம் பாதி வடிந்திருந்தது. நாங்கள் எங்குமே மழையில் செல்ல நேரவில்லை, சில தூறல்கள் மட்டுமே. ஆனால் சாலையின் இருபக்கமும் வெள்ளம் கடல்போல சூழ்ந்து ஒளி அலையடித்துக் கிடந்தது. சின்னஞ்சிறு நதிகளில்கூட தண்ணீர் சிவப்பாக சுழித்துச் கொந்தளித்துச் செல்ல வயல்வெளிகள் கடல்களாக விரிந்தன. சலையை முறித்து பல ஆறுகள் ஓடின. அவை பூரிமாவட்டத்தின் மைய ஆறுகளின் துணைநதிகள் .எல்லாவற்றிலும் வெள்ளம்.

மித்னாபூரில் இருந்து பலேஸ்வர் வழியாக கட்டாக்கை அடைந்தோம். கட்டாக் நகரமே மழையால் சூறையாடப்பட்டிருந்தது. விளம்பரத்தட்டிகள் அனைத்தும் கிழிந்து சட்டங்கள் மட்டுமாக நின்றன. கட்டாக்கில் ஒரு டீ குடித்தோம். வட இந்திய நகரங்களின் வறுமை பாழ்பட்டதன்மை இல்லாமல் கட்டாக் புதிய கட்டிடங்களும் வளர்ச்சிப்போக்குமாக பரபரப்பாக இருந்தது.

கட்டாக்கை கடந்து சென்றோம். பிரம்மானி, பைட்ரானி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நதிகளில் ஒன்றான மகாநதி ஆகியவை வந்தன. பாலங்கள் பல கிலோமீட்டர் நீளத்துக்கு சென்று கொண்டே இருந்தன. இறங்கி கீழே பெருகிச்செல்லும் நீரைப் பார்த்தோம். ஆதி மூர்க்கம் கொண்ட நதி அச்சமூட்டும் கவற்சி கொண்டிருந்தது. அதைச்சுற்றிய பெரும் வயல்வெளி செந்நிறமாக நீர் நிறைந்து அந்தி வானத்தை பிரதிபலித்துக் கொண்டு வானம்போலவே நான்குபக்கமும் நிரப்பி கிடந்ந்து.

பூரிக்கு ஏழுமணிக்கு வந்துசேர்ந்தோம்.நேராக கடற்கரைக்கே சென்றுவிட்டோம். பூரி கடற்கரை இந்தியாவின் அழகான கடற்கரைகளில் ஒன்று. மிகச்சுத்தமாகப் பேணப்படுகிறது. கடற்கரையை ஒட்டி ஒரு நீளமான சாலை. சாலைக்கு இப்பால் நீளமாக ஏராளமான விடுதிகள். வசதியான நட்சத்திர விடுதிகள் முதல் எளிமையான விடுதிகள் வரை பலநூறு கட்டிடங்கள் உள்ளன. பல ஓட்டல்களில் 50 சதவீதம் கட்டணக்குறைப்பு போட்டிருந்தார்கள். கடுமையாக காற்று வீசி கடல்மணலை அள்ளி சாலையில் கொட்டிக் கொண்டிருந்தது. புயல் காரணமாக சுற்றுலாப்பயணிகளே இல்லை.

பூரியிலும் வழக்கம்போல அலைந்து திரிந்து மலிவான விடுதியை பிடித்துக் கொண்டோம்.  ஆறு படுக்கை கொண்ட அறை நாநூறு ரூபாய்க்கு. புயல் இல்லையேல் மும்மடங்கு ஆகுமாம். ஓட்டலில் நாங்கள் அல்லாமல் யாருமில்லை. இரவு சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பூரி கடற்கரையில் கரையோரமாக நடந்து சென்றோம்.

காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு பூரி கடற்கரைக்குத்தான் சென்றோம். நுரைவிளிம்புகளுடன் அலைகள் பக்கவாட்டில் விரைய இளநீலச்சாம்பல் நிறமாக கடல் விரிந்து கிடந்தது. கடுமையான காற்று. மேகம் மூடியிருந்ததனால் சூரிய உதயம் கண்ணுக்குபடவேயில்லை. வானின் ஊமையொளி மட்டும் மெல்லமெல்ல கடலுக்குள் பரவி நீரை ஒளிகொள்ளச் செய்தது.

பின்னர் புரி கோயிலுக்குச் சென்றோம். இடுங்கலான சாலைவழியாக நடந்தே சென்று கோயிலை அடைந்தோம். அதிக கூட்டம் இல்லை. உள்ளே சென்று கோயிலைப் பார்த்தோம். புரிகோயில் சிற்பங்கள் அதிகம் இல்லாதது. ஆனால் செங்குத்தாக 600 அடிக்கு மேல் உயரமாக மேலெழுந்த நாகர பாணி கோபுரம் மிகப்பழைமையான ஒன்று. வெகுநேரம் பார்த்துக் கொண்டிருகச்செய்வது அதன் கம்பீரம். கோயிலைச்சுற்றி சிறிய கோபுரங்களுடன் துணைக்கோயில்கள். பின்பக்கம் படியேறிச்சென்றால் கோபுரத்தில் இருந்த நரசிம்ம மூர்த்தியின் பெரிய சிலைக்கு ஒரு சன்னிதிகட்டியிருப்பதைக் காணலாம்.

பூரி ஆலயத்தை கலிங்க மன்னர் ராஜா அனஸ்க பீமதேவர் 1166 ஆம் ஆண்டு கட்டினார். இதை ஒட்டியுள்ள போக சபா என்ற கோயில் பிற்பாடு கட்டப்பட்டது பதினேழாம் நூற்றாண்டில் மராட்டியர் இக்கோயிலை மேலும் புதுப்பித்து இப்போதுள்ள பல சன்னிதிகளைக் கட்டியிருக்கிறார்கள். போககோயிலின்  சுவர்களில் காமலீலைகள் கொண்ட சிற்பங்கள் சில உள்ளன. பூரி வங்காளிகளுக்கும் ஒரியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் மிக முக்கியமான கோயில். ஆகவே எப்போதும் கலகலவென்றிருக்கிறது. புஷோத்தம§க்ஷத்ரம் என்ற பெயரின் சுருக்கமே புரி என்றானது.

கோயிலைச் சுற்று சுற்றி வந்து பார்த்துக் கொண்டிருந்தோம். பக்தர்கள் கூடியமர்ந்து பஜனைபாடிக்கொண்டிருந்தார்கள். சிற்பங்கள் இல்லாத பெரிய கூடம்போன்ற அர்த்த மண்டபம். உள்ளெ பெரிய கருவறை. அந்த கருவறைக்குள் மூன்று சிற்பங்களாக ஜெகன்னாதரும்  பல பத்ரரும் சுபத்ரா தேவியும் உள்ளனர். மூன்று சிற்பங்களையும் இரு பெரிய கண்கள் வரையப்பட்ட பெரிய சாமரம்போன்ற தலையணியால் மறைத்திருந்தார்கள். அந்த சாமரத்தோற்றமே பொதுவாக பூரி ஜெகன்னாதர் என்று  அறியப்படுகிறது. மூலவிக்ரகம் அதிகம் கண்ணுக்குப் படுவதில்லை.

கபீர் இங்கேவந்து வழிபட்டிருக்கிறார். கபீர் சௌக் என்றபேருள்ள ஒரு மடம் இன்றும் இயங்குகிறது. சைதன்ய மகாப்பிரபு பலகாலம் இங்கே இருந்திருக்கிறார்.  ஆதி சங்கரர் இங்கேவந்தபின் இங்குள்ள சங்கரமடத்தை உருவாக்கினார். இந்தியாவில் சங்கரர் உருவாக்கியதாகச் சொல்லபப்டும் நான்குமடங்கள் துவாரகை, பத்ரிநாத், சிருங்கேரி, புரி ஆகியவை.

பூரி கோயிலிலும் நான் பொதுவாக வட இந்தியக் கோயில்களில் கண்டு சங்கடப்படும் ஓர் அம்சத்தைக் கவனித்தேன். பிராமணப்பூசாரிகள் கண்ட இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நம்மை நடமாட விடுவதேயில்லை. உள்ளே நுழையும் வழியில் ஒருவர் அமர்ந்திருபபர். கையில் ஒரு குச்சி. அதை நம் தலையில் அவர் வைத்து விட்டாரென்றால் அவருக்கு பணம் தரவேண்டும். அவர் கேட்கும் தொகை, இல்லாவிட்டால் சாபம் வசை. உள்ளே கருவறைக்குள் நிற்கும் பூசாரி முதற்கொண்டு அத்தனைபேருமே பணம்பணம் என்று கூவுகிறார்கள். மீன்சந்தை போல இங்கே வா இங்கே வா என்று கூச்சலிடுகிறார்கள். குறைவாக பணம் போட்டவர்களை சன்னிதியில் வைத்தே வைகிறார்கள். ஏழை எளிய மக்கள் பதறியடிப்பதைக் காண பரிதாபமாக இருந்தது.

இந்தநிலைதான் காசி ஆலயத்திலும். இதையே பண்டரிபுரத்திலும் உடுப்பியிலும் கண்டேன். சிதம்பரத்தில்கூட இந்த நிலைதான். இந்த ஆலயங்கள் இந்தபூசாரிகளின் சொத்து அல்ல. இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் உருவாக்கியவை. இந்நாட்டு மக்களின் சொத்து அவை. பூசாரிகள் அவற்றின் ஊழியர்கள். ஆனால் அவர்கள் இன்று ஒரு கும்பலாகத் திரண்டு கோயிகளை பிடிக்குள் வைத்துக்கொண்டு பணம்பறிக்கும் கருவிகளாக அவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்துமதம் இந்தக் கும்பல்களின் பிடியில் இருந்து மீண்டாக வேண்டியது இன்று மிகமிக அவசியமாக உள்ளது. இந்துமத மறுமலர்ச்சி, இந்துத்துவம் பற்றி பேசுபவர்கள் அவசியம் செய்தாக வேண்டிய முதல்பணியே இந்தக் கிரிமினல்களிடம் இருந்து பேராலயங்களை சட்டப்படி மீட்பதுதான்.

புரியிலிருந்து அரைமணி நேரத்தில் கிளம்பிவிட்டோம். எனக்கு மனம் கசந்து வழிந்தது. விடுதியை காலிசெய்துவிட்டு கொனாரக் கிளம்பினோம்.

முந்தைய கட்டுரைபயணம்,திராவிட இயக்கம்: கடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணம், இன்னும் கடிதங்கள்