விடுதலையின் மெய்யியல்- கடிதம்

அன்பு ஜெயமோகன்,

நித்ய சைதன்ய யதியின் கட்டுரை ஒன்றை நிங்கள் “விடுதலையின் மெய்யியல்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருந்தீர்கள். தனிமனிதன் ஒருவனின் தவிப்பைக் கண்டு குமைந்துபோய் சைதன்ய யதி அக்கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். அதில் எவ்விடத்தும் பூடகங்களாய் நகரும் வாக்கியங்கள் இல்லை, ஒன்றைச் சுட்ட மற்றொன்றைச் சொல்லி மயக்கும் சொல்விளையாட்டுகளும் இல்லை, புனிதத்துவத்தைத் தக்கவைக்கும் வியாக்கியானங்களும் இல்லை. நேரடியான மொழியில் அமைந்திருந்த அக்கட்டுரையின் அடிப்படை எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியது. தத்துவத்துறையில் குறைந்தபட்ச அறிவில்லாத ஒருவரால் கூட அக்கட்டுரையை வாசித்துவிட முடியும். என்றாலும், சமூக அமைப்புக்குள் தன்னை ஒப்படைத்துப் பழகிவிட்ட ஒரு தனிமனிதனால் அவ்வளவு சீக்கிரம் விடுதலை நோக்கி நகர்ந்து விட முடியுமா? குடும்பம், மரபுகள், நாடுகள் போன்ற வரையறுக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து ஒரு தனிமனிதனால் விடுவித்துக் கொள்ள முடியமா? கேள்விகள் எதார்த்தமாய் எழுகின்றன.

’விடுதலை’யை விரும்பும் ஒவ்வொரு மனிதனும் அதைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டிருக்கிறான்; சரியான பார்வைதான். எனினும், அவ்விடுதலையை உணர வைத்த ‘சூழலை’ ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டு அவனால் அவ்விடுதலையைக் கொண்டாடி விட முடியுமா? ஒளியை இருளே அறிவிக்கிறது, மோனத்தை சத்தங்களே காட்டுகின்றன என்பது போல சிறைபட்டிருப்பதால்தானே விடுதலை குறித்த சிந்தனை வருகிறது. ஆக, நம் ‘விடுதலை’யை நாம் தனித்துப் பெற உதவும் ‘சமூகத்திலிருந்து’ நகர்ந்து விட்ட நிலையில் ‘விடுதலை’யும் சிறையாகி விடாதா?

பிறந்தவுடனேயே நம் முழு வாழ்வின் விடுதலையும் முடிந்து விடுவதாகச் சொல்கிறார் யதி. சமூக அமைப்பின் வரையறைக்குள் நாம் திணிக்கப்பட்டு விடுகிறோம் எனும்போது நம்மால் ‘விடுதலை’யைப் புரிந்த பின்னும் அவ்வமைப்பை விட்டு விலகி விட இயலுமா? வேண்டுமானால், சமூகம் முன்வைக்கும் சில வரையறைகளிலிருந்து நம்மால் விடுபட இயலும். ஒட்டுமொத்தமாக அது சாத்தியம்தானா? மதமரபுகள் நம்மைக் கட்டிப்போடுகின்றன எனும் கருத்து கூர்மையானது; மிகச் சரியானதும்தான். மதத்தையோ அல்லது அதைப்போன்ற பிற ’சிறை’மரபுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் ஒருவன் அவையற்ற ’புதுமரபை’த்தானே நாடியாக வேண்டும். என்னதான் அதில் சமூகத்தின் வறட்டுத்தன்ங்கள் இல்லாவிட்டாலும் மற்றொரு கோணத்தில் அதுவும் சிறைதானே?

தனிமனிதனாக நாம் வாழ்ந்துவிட முடிந்தால் ‘விடுதலை’ எனும் சொல்லே தேவைப்பட்டிராது. இயல்பாகவே நாம் விடுதலையானவர்களாகத்தான் இருப்போம். சமூக அமைப்பில்தான் ‘விடுதலை’ குறித்தே யோசிக்க வேண்டிய தேவை எழுகிறது. அங்கிருந்தே எது விடுதலை எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது அலைபாயும் நம்மை ‘தத்துவங்கள்’ தடுத்தாட்கொள்கின்றன. அவையும் கொஞ்ச நாட்களுக்குத்தான். பலர் உள்ளுக்குள் தோன்றிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பயந்து ’ஒரு தத்துவத்தை’ விடாப்பிடியாய்ப் பற்றிக் கொள்ள, சிலர் கேள்விகளுக்கு விடை காண்பதற்காக ‘பன்முகப்பட்ட தத்துவங்களு’க்கு மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு தரப்பிலும் ‘விடுதலை’ ஒரு சொல்லாகவே இருக்கிறது; அதன் அர்த்தமாக இல்லை.

நிற்க. சமூக அமைப்பின் இறுக்கத்திலிருந்து ‘விடுதலை’ பெறத் தவிக்கும் ஒருவனை கலைகளும், இலக்கியங்களுமே ஆசுவாசப்படுத்துகின்றன. நம் மதங்களும், சடங்குகளும் போன்ற திணிப்புகள் புறவயமான அணுகுமுறைகள். அதனாலேயே அவை ஒற்றைத்தன்மை கொண்டு மனிதர்களை மேலும் சிறைப்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட அமைப்புக்குள் திணிக்கப்படும் மனம் அதில் ஒட்டவே ஒட்டாது. திமிறி அவ்வமைப்பிலிருந்து வெளிவரப்பார்க்கும். அல்லது அவ்வமைப்பின் அடிமையாகி விடும். இங்கு மனம் ‘பழையதாக’ மாறி விடுகிறது. மாறாக, கலைகளும் இலக்கியங்களும் அகவயமான அணுகுமுறைகள். அவை பன்முகத்தன்மை கொண்டவை. மனதின் பன்முகப்பட்ட சாத்தியங்களையும் அவை மதிக்கின்றன. அதனால் மனம் அச்சமுறுவதில்லை. பதிலாக, ஒவ்வொரு கணமும் ’புதிதாக’ இருக்கிறது. எப்போதும் மனம் ‘புதிதாக’ இருப்பதை நான் ‘விடுதலை’ என்பதாகப் பார்க்கிறேன். பெரும்பாலான மனிதர்கள் முதல் வாய்ப்பையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஏனென்றால், அது ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பாதை. மிகச்சிலரே இரண்டாவது வாய்ப்பைத் தேர்ந்கின்றனர். தங்கள் பாதையைத் தாங்களே உருவாக்க விரும்புபவர்கள் அவர்கள். முன்னது ‘அடிமை’களுக்கும், பின்னது ‘விடுதலை’யாளர்களுக்குமானது. இரண்டுமே சமூக அமைப்புக்குள்தான் வருகிறது. எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது ஒரு தனிமனிதனின் கையில்தான் இருக்கிறது.

’விடுதலையின் மெய்யியல்’ கட்டுரை ஏனோ ஜெயகாந்தனின் துறவு சிறுகதையை நினைவுக்குக் கொண்டு வந்தது.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58
அடுத்த கட்டுரைசூளையின் தனிச்செங்கல் – வேணு தயாநிதி