ஆன்மீகம், போலி ஆன்மீகம் 4

அன்புள்ள ஜெ,

இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை மனித தெய்வங்கள் மற்றும் புனிதர்கள் போன்ற அதிமானுடர்கள் இருக்கிறார்கள், வேறு மதங்களில் இல்லையே. அப்படியென்றால் அந்த மதங்கள் மேலானவையா? இந்தமாதிரியாந சந்தர்ப்பங்களில் என் அலுவலகத்தில் உள்ள இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பார்க்கும் ஏளனப்பார்வையில் நான் மிகவும் கூசிப்போகிறேன்

சித்ரா ராஜேஸ்வரி

அன்புள்ள சித்ரா,

என் விடை இதுவே. எந்த மதமும் மேலானதுமல்ல, கீழானதுமல்ல. அந்த மதம் அதைச் சார்ந்து செயல்படுபவர்களுக்கு அவர்கள் நாடும் நலன்களை அளிக்குமென்றால் ஒப்புமைகளுக்கே இடமில்லை. ஒவ்வொரு மதத்திற்கும் அதற்கான வழிமுறை உண்டு. சாந்தோக்ய உபநிடதம் சொல்வது போல எல்லா நதிகளும் கடலுக்கே.

ஆனால் பிற மதங்களில் அதிமனிதர்கள் இல்லை என்பது மெய்யல்ல. எல்லா மதங்களிலும் அவர்கள் உண்டு. ஏனென்றால் அவர்களை உருவாக்கும் அடிப்படைக்கூறு என்பது  அடிப்படையான சில மானுட இயல்புகளில் இருந்து உருவானதாகும். பழங்குடிச் சமூகங்களில் பூசாரி அல்லது மந்திரவாதி அத்தகைய அதிமானுடத்தன்மையுடன் இருப்பதைக் காணலாம். இன்றுள்ள எல்லா அதிமானுடர்களும் அந்தப் பழங்குடிப் பூசாரியின் பரிணாம நிலைகளே.

நாவன்மையும், உளவன்மையும் உடைய மனிதர்கள் அல்லது பிரம்மாண்டமான  அமைப்புகளால் முன்வைக்கப்படும் மனிதர்கள் பிற மனிதர்கள் மீது தீவிரமான செல்வாக்கைச் செலுத்த முடியும். அந்தச்செல்வாக்கைக் கொண்டு அவர்கள் தங்களை அதிமானுடர்களாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பது இதன் ஒரு காரணம்.

மறுபக்கம் சாதாரண மனிதர்கள் தங்களை தங்களைவிட மேலான வல்லமை கோண்ட ஒருவருக்காக ஏங்குகிறார்கள், அத்தகைய ஒருவரின் கைகளில் ஒப்படைக்க விழைகிறார்கள் என்பது இன்னொரு காரணம். இரண்டும் கொண்டு- கொடுக்கும்போது அதிமானுட உருவகம் உருவாகிறது.

இது ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையில் வெளிப்படுகிறது. ஒரு மதம் எந்த நிலப்பகுதியில் உருவானது என்பது இதற்கு முக்கியமானது. மத்திய ஆசியாவில் எப்போதுமே இறைவன் தூதரை தன் மக்களை ரட்சிப்பதற்காக அனுப்புவார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆகவே அங்கே வந்த அத்தனை மனிதர்களும் தங்களை இறைத்தூதர் , தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டார்கள். கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்களாக இறைத்தூதர்கள் என்று சொல்லிக்கொண்ட அதிமானுடர்கள் அந்த நிலத்தில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

கிறிஸ்துவும், முகமது நபியும் நாம் அறிந்தவர்கள். ஆனால் அவர்களைவிட பெரிய மதங்களை நிறுவிய வேறு இறைத்தூதர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக மாணிக்கேய மதம் [ Manichaeism ] கிபி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணி என்ற இறைதூதரால் நிறுவப்பட்டது இது. இவர் பாரசீக மன்னரின் உறவினர். பலகோடிபேர் இந்தமதத்தை நம்பினர். சீனா முதல் இத்தாலி வரை இதன் செலவாக்கு இருந்தது. பின்னர் அழிந்தது.

தமிழில் துக்காராம் மொழியாக்கத்தில் மார்வின் ஹாரீஸ் எழுதிய பசுக்கள் பன்றிகள் போர்கள் [எனி இண்டியன் பதிப்பகம்] என்ற நூல் வெளிவந்துள்ளது. இதில் இக்காலகட்டத்தில் எப்படி மைய ஆசிய நிலத்தில் தீர்க்கதரிசிகளும் இறைத்தூதர்களும் பல்கிப்பெருகினர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இக்காரணத்தால்தான் ஏசுவும் சரி, முகமது நபியும் சரி தாங்கள் மட்டுமே இறைத்தூதர்கள் என அத்தனை தீவிரமாக வலியுறுத்தினார்கள். ஆகவே இந்த மதங்கள் பெரும் அமைப்புகளாக வளர்ந்தபோது பிற இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் அதிமானுடர்களை கடுமையாக ஒடுக்க ஆரம்பித்தன. பதினாறாம் நூற்றாண்டுவரை கிறித்தவம் எல்லாவகையான பிற தீர்க்கதரிசனக்குழுக்களையும் வேட்டையாடி ஒழித்தது. பல லட்சம்பேர் கொன்றொழிக்கப்பட்டார்கள். அவர்களின் நூல்கள் அழிக்கப்பட்டன.

இந்த குழுக்கள் பொதுவாக ஞானவாதக் குழுக்கள் [Gnosticism] என்று அழைக்கப்படுகின்றன. நீங்கள் எந்த ஒரு கலைக்களஞ்சியத்திலும் சென்று எத்தனை ஞானவாத மரபுகள் இருந்தன, அவை எப்படி திருச்சபையின் அதிகாரத்தால் வேருடன் பிடுங்கி வீசப்பட்டன என்பதை வாசித்தறியலாம்.

இஸ்லாம் இன்றுவரை பிற தீர்க்கதரிசிகள் இறைதூதர்கள் ஆகியோருக்கு எதிராக வெளிப்படையான போரை தொடுத்து வருகிறது. சிறந்த உதாரணம் பஹாயி மதம் மற்றும் அகமதியா இஸ்லாமிய மதம். 19 ஆம் நூற்றாண்டு பாரசீகத்தில் பிறந்த பகாவுல்லா என்பவரால் உருவாக்கப்பட்ட மதம் பஹாயி மதம். [Bahai]. இந்தியாவுடன் இணைந்திருந்த பாகிஸ்தான் நிலப்பகுதியில் 19 ஆம்நூற்றாண்டில் உருவான இஸ்லாமிய கிளைமதம் அகமதியா. இது மிர்ஸா குலாம் அகமது என்பவரால் உருவாக்கப்பட்டது.

இந்த இரு மதங்களும் ஈரானிலும் பாகிஸ்தானிலும் நூறாண்டுக்காலமாக இஸ்லாமிய மைய மத அமைப்பால் தடைசெய்யப்பட்டு வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டபடியே உள்ளன. இந்த மதநம்பிக்கை கொண்டவர்கள் என பல லட்சம்பேர் கொல்லபப்ட்டிருக்கிறார்கள். இன்றும் கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜனநாயகமும் மத உரிமையும் உள்ள நாடுகளுக்குக் குடியேறிய இம்மதத்தவர் அங்கே தங்களை வளர்த்துக்கொண்டு நீடிக்கிறார்கள்.

இஸ்லாம், கிறித்தவம் முதலிய மதங்கள் உறுதியான  நிறுவனக் கட்டமைப்பு கொண்டவை. அந்நிறுவனங்களின் பிரதிநிதிகளான மதகுருக்களால் முழுமையாக கட்டுப்படுத்தப்படுபவை.  அந்த மத அமைப்புக்குள் உள்ள மதகுருக்களுக்கு பல வகையான புனிதவளையங்கள் அளிக்கப்படுவதை நாம் காணலாம். கிறித்தவம் தொடர்ச்சியாக புனிதர்களை அறிவித்துக்கொண்டே செல்கிறது.

இஸ்லாமிய மதகுருக்களில் எவரும் புனிதர் என்று அறிவிக்கப்படுவதில்லை. அது நபிகளுக்கு நிகர்வைப்பது என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் அதிமானுடத்தன்மை கொண்ட இறைநேசர்களும் மதகுருக்களும் அவர்களிடம் உண்டு. இவர்கள் இரு வகை. தங்கள் பக்தி மற்றும் அற்புதங்கள் மூலம் இறைநேசர்கள் ஆக ஆனவர்கள். இவர்களே தர்காக்களில் அடங்கியவர்கள்.

இவர்களை நிராகரிக்கும் தூய்மைவாத- அடிப்படைவாத இஸ்லாமாகிய வஹாபியம் இன்று சவூதி அரேபியாவிலிருந்து பெரும் பணச்செலவில் பரப்பப்படுகிறது. இவர்களில் இன்னொருவகை அதிமானுடர்கள் உண்டு. முகமது நபியின் குருதிவழி வந்தவர்கள் பிறரைவிட தங்கள் அளவிலேயே மேலானவர்கள். மத அதிகாரம் கொண்டவர்கள்.

உதாரணமாக கேரள முஸ்லீம் லீக் ஒரு ஜனநாயக அமைப்பு. ஆனால் அதன்  நிரந்தரக் கருத்தியல் தலைவர் பாணக்காட்டு தங்கள் என்ற குடும்பத்தின் மூத்தவர்தான் அவர்.  சிகாப் தங்கள் என்பவர் நெடுங்காலம் தலைவராக இருந்தார். அவர் இறந்தபின் அவரது மருமகன் தலைவராக ஆனார். தங்கள் என்றால் நபியின் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று பொருள்.

உறுதியான அமைப்பு இல்லாத கீழை மதங்களில் இப்படி ஒருவர் தன்னை அதிமானுடர் என்று அறிவித்துக்கொண்டால் அவரை தடுக்கவோ தண்டிக்கவோ எந்த சக்தியும் இல்லை. ஆகவே ஒப்புநோக்க இவர்களின் எண்ணிக்கை கீழை மதங்களில் அதிகமாக உள்ளது.  யார் வேண்டுமானாலும் தங்களை அதிமானுடர்களாக அறிவித்துக்கொள்ளலாம். இதுவே இன்று இந்தியாவில் நாம் காணும் யதார்த்தம்.

என் நோக்கில் மாற்றுவழிகளைச் சிந்திப்பவர்களை கொன்றொழிப்பதே அநீதி என்று படுகிறது. அவர்கள் தங்களை தாங்கள் விரும்பியபடி முன்வைக்க அனுமதிப்பதே ஆரோக்கியமான மதச்சூழலாகும். அவ்வாறு முன்வைப்பவர்களில்  ஆயிரத்தில் ஒருத்தர் தவிர பிறர் போலிகளாக மோசடிப்பேர்வழிகளாக இருக்கலாம். ஆனாலும்கூட அதுவே சிறந்தது. அது எப்போதும் ஒரு புதிய வழிக்கான வாய்ப்பை திறந்து வைக்கிறது. மாறாக வன்முறை மூலம் மாற்றங்களையும் புதுமைகளையும் அழிக்கும் அமைப்பு உருவாக்கும் வன்முறை தேங்கிய அதிகாரத்துக்கே வழிகோலும்.

ஓர் இஸ்லாமிய மதஅரசில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியோ ஓஷோவோ உருவாகியிருக்க முடியாது. உடனடியாக அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் கொன்றொழிக்கப்பட்டு விடுவார்கள். அப்படிக் கொன்றபின் இஸ்லாமுக்குள் போலிகளே இல்லை என்றும் அதிமானுடர்களோ மானுடதெய்வங்களோ இல்லை என்றும் சொல்வதில் அர்த்தமில்லை.

எளிமையான விதிதான் இது. மாற்றுக்கருத்து, புதியபோக்கு எத்தனை தூரம் அனுமதிக்கப்படுகிறது என்பது. அப்படி அனுமதிக்கப்பட்டால் அந்தச் சுதந்திரத்தை சிலர் தவறாகவே பயன்படுத்துவார்கள். எந்தச் சுதந்திரமும் தவறாகப் பயன்படுத்தப்படும். சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதற்காக  சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல முடியுமா என்ன?

ஒரு நித்யானந்தர் போலி என்று தெரியவந்ததும் ஆக்ரோஷமாக அத்தனை சாமியார்களையும், மதம் சார்ந்த சுதந்திரப்போக்கு கொண்டவர்களையும் ஒழித்துக்கட்டவேண்டும் என்று பாய்வதென்பது மூர்க்கமான அறியாமையேயாகும். நம் மதச் சூழல் ஒரு தனிமனிதன் தன்னுடைய ஞானத்தேடலை தன் வழியே செய்துகொள்ள அனுமதிக்கிறது. நானே கடவுள் என்றோ நான் இறைத்தூதன் என்றோ நான் பரமஹம்சன் என்றோ ஒருவன் சொல்லிக்கொண்டால் அது பிழையல்ல. அவனது வழி அது.

இந்தச் சுதந்திரம் காரணமாகவே எதற்கும் கட்டுப்படாத யோகிகளும் ஞானிகளும் இங்கே உருவாகி வந்தார்கள். ஒரு இந்துப் பெரும்பான்மை நாட்டில் இருந்துகொண்டு இந்து ஞானத்தின் அத்தனை பக்கங்களையும் கிண்டல் செய்தார் ஓஷோ. பாலியல் நகைச்சுவை கலந்து கீதை உரைகள் ஆற்றினார். நாம் இத்தகைய மீறல் கொண்டவர்களை ஏதோ ஒருவகையில் மதிக்கிறோம். கவனிக்கிறோம். அவர்கள் நம்மை கவர்வார்கள் என்றால் வழிபடுகிறோம்.

இந்த மனநிலையே இங்கே சித்தர்களை உருவாக்குகிறது. சித்தர்களை அடையாளம் காண்கிறது. இங்கே ஞானத்தேடலுக்காக எதுவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுதந்திரத்தின் தீய விளைவுகள் எப்போதும் உண்டு. வேடதாரிகள் மோசடிக்காரர்கள் உண்டு. ஆனால் நித்யானந்தர்களை நாம் அனுமதிக்கவில்லை என்றால் ரமணர்களும் நமக்குக் கிடைக்க மாட்டார்கள்.

இவ்வாறு அனுமதிக்கும் ஜனநாயக நாடுகளில் எல்லாம் அதிமானுடர்கள் உருவாகியபடியே உள்ளனர்.  அவர்கள் காலப்போக்கில் தனி குறுமதங்களாக ஆகிறார்கள். உதாரணமாக அமெரிக்காவில் நேஷன் ஆ·ப் இஸ்லாம் என்ற அமைப்பை உருவாக்கிய எலிஜா முகம்மதுவையும் உலக கிறித்த சபை என்ற அமைப்பை உருவாக்கிய ஹெர்பர்ட் ஆம்ஸ்டிராங்கையும் சொல்லலாம்.

இவர்களில் பலர் உள்ளீடற்ற வெறும் பிம்பங்கள்தான். ஆனால் கிறித்தவத்துக்குள் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கிய மாமனிதர் மார்ட்டின் லூதர் கிங்கும் இவர்களைப்போன்ற ஒருவர் தானே?

இன்று கிறித்தவ மதத்துக்குள் இன்று கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்ட போன்ற நட்சத்திர மதப்பிரச்சாரகர்கள் அதிமானுடர்களாக, இறைவனுடன் நேரடியாகப்பேசக்கூடியவர்களாக, கருதப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியை மேடைக்கே கொண்டுவந்து இறக்குகிறார்கள். ஏசுவுக்கு மேடையில் நாற்காலிபோட்டு அமரச் செய்கிறார்கள். சொந்தமாக ஜெட்விமானங்களும் நகரங்கள் தோறும் கட்டிடங்களும் இளைப்பாறுவதற்கு சொந்தமான தீவுகளும் கொண்ட அதிமானுட கிறித்தவ போதகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் அத்தகையபலர் இன்று பெரும் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களை நீங்கள் தடை செய்தீர்கள் என்றால் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் போன்ற நுண்ணுணர்வு கொண்ட, மேதைகளான மதபோதகர்கள் உருவாகாமல் ஆவார்கள். அப்படி தடைசெய்யும் சமூகம் காலப்போக்கில் இறுகி மதவெறிகொண்ட சமூகமாக ஆகும். மீன்கள் வாழாத சாவுகடலாக அது ஆகிவிடும். ஆகவே சுதந்திரத்தை அனுமதித்து போலிகளையும் உண்மைகளையும் பிரித்தறியும் தர்க்கத்தையும் நுண்ணுணர்வையும் வளர்த்துக்கொள்வதொன்றே வழியாகும்.

இந்த அதிமானுட உருவகம் கீழை மதங்களில் கொஞ்சம் வேறுபட்ட வடிவில் உள்ளது. இங்கே ஞானிகள், அவதூதர்கள், அவதாரபுருஷர்கள் என்ற கருதுகோள்கள் வலுவாக உள்ளன. இறைவன் மானுட உருவில் வருவான் என்பது கீழைமதங்களில் உள்ள நம்பிக்கை என்பதனால் நம் மனதில் கடவுளின் அவதாரம் என்ற முன்வடிவம் இளமையிலேயே வந்துவிடுகிறது. ஆகவே ஒரு மனிதரை அவ்வாறு முன்வைத்து பிரச்சாரம்செய்தால் நாம் அதை ஏற்க தயார்கிறோம்.

அதேபோல் முழுமையான ஞானம் கொண்ட மனிதர் காலத்திற்கும் பௌதிகபிரபஞ்சத்தின் விதிகளுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பார் என்ற நம்பிக்கை இருப்பதனால் நமக்கு அவதூதர்கள் என்ற கருத்து இருக்கிறது. நம் மரபில் அவதூதர்களைப்பற்றிய ஏராளமான தொன்மங்கள் உள்ளன. ஆகவே ஒரு  அசாதாரணமான மனிதரை நாம் அவதூதர் என்று ஏற்கத் தயாராகிறோம்..

இந்தவகையான கருதுகோள்கள் நெடுங்காலமாக புழங்கிப்புழங்கி காலப்போக்கில் தொன்மங்களாக, ஆழ்மனப்படிமங்களாக மாறிவிடுகின்றன.நாம் கேட்கும் ஒரு புதிய நிகழ்ச்சி நம் மனதில்  ஏற்கனவே உள்ள தொன்மத்துடன் சென்று இணைந்துவிடுகிறது. இங்கே பொதுவாக தர்க்கம் செயல்படுவதில்லை. ஆழ்மன நம்பிக்கைதான் செயல்படுகிறது. அதிலும் நாம் கஷ்டத்தில் இருக்கையில், ஓர் அற்புதம் நமக்கு தேவையாகிற நேரத்தில், மிக எளிமையாக இந்த நம்பிக்கைகள் நம்முள் புகுந்துவிடுகின்றன

நாம் நம்மை கூர்ந்து கவனிப்பதே இதற்கான தீர்வாகும். நம் ஆழ்மனமே ஆன்மீகத்திற்கான உண்மையான வழிகாட்டி

ஜெ

முந்தைய கட்டுரைஆன்மீகம் போலி ஆன்மீகம் 3
அடுத்த கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் 5