பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு – 1
பீஷ்மர் நடந்தபோது அவரது தலை அரண்மனையின் உத்தரங்களை தொட்டுத்தொட்டுச்செல்வதுபோல விதுரருக்குத் தோன்றியது. நீளமான கால்களை இயல்பாக எடுத்துவைத்து பீஷ்மர் நடந்தாலும் உடன்செல்ல விதுரர் மூச்சிரைக்க ஓடவேண்டியிருந்தது. நெடுநாளைய காட்டுவாழ்க்கையால் நன்றாக மெலிந்திருந்த பீஷ்மரின் உரம்பெற்ற உடல் புல்மேல் செல்லும் வெட்டுக்கிளிபோல் தோன்றியது. அவரது வெண்ணிறத் தோல் தென்னாட்டின் வெயிலில் செம்புநிறம் கொண்டிருந்தது.
அவர்களைக் கண்டதும் விப்ரர் எழுந்து வணங்கி பேசாமல் நின்றார். விதுரர் மெல்லிய குரலில் “ஓய்வெடுக்கிறாரா?” என்றார். “ஆம்…” என்ற விப்ரர் மெல்ல “ஆனால் அதை ஓய்வு என்று சொல்லமுடியுமா என்ன?” என்றார். விதுரர் பேசாமல் நின்றார். “ஆற்றொணாத் துயரம் என்று கேட்டிருக்கிறேன் அமைச்சரே, இன்றுதான் பார்க்கிறேன். எச்சொல்லும் அவரை தேற்றமுடியவில்லை” என்றார் விப்ரர்.
விதுரர் திரும்பி பீஷ்மரை நோக்க அவர் அதனுடன் தொடர்பற்றவர் போல சற்று திரும்பிய தலையுடன் ஒளிநிறைந்த சாளரத்தை நோக்கி நின்றார். தாடியின் நரைமயிர்கள் ஒளிவிட்டன. வாயை இறுக்கி வெறும் பற்களை மெல்லும் வழக்கம் அவரிடம் குடியேறியிருந்தது. அவர் ஒலியாக மாறாத எதையோ சொல்லிக்கொண்டிருப்பதைப் போல. அது அவரை மிகவும் முதியவராகக் காட்டியது.
விதுரர் பெருமூச்சுடன் “பிதாமகர் சந்திக்க விழைகிறார். இப்போது சந்திப்பது பொருத்தமாக இருக்குமா?” என்றார். விப்ரர் “நான் சென்று பார்க்கிறேன்” என்றார். ”துயில்கிறார் என்றால் விட்டுவிடுங்கள். விழித்திருக்கிறார் என்றால் பிதாமகரின் வருகையை சொல்லுங்கள். பிதாமகரைப் பார்ப்பது அவரை சற்று ஆறுதல்கொள்ளச்செய்யலாம்” என்றார் விதுரர்.
விப்ரர் “அமைச்சரே, தாங்களறியாதது அல்ல, துயின்று எட்டு மாதங்களுக்கு மேலாகிறது. இரவும் பகலும் நான் உடனிருக்கிறேன். ஒரு கணம்கூட அவர் துயின்று நான் காணவில்லை. மூன்றுமாதங்கள் துயிலிழந்திருக்கும் ஒருவர் சித்தம் கலங்கிவிடுவார் என்றுதான் மருத்துவர் சொல்கிறார்கள். அரசருக்கோ அவர்கள் சித்தம் கலங்கச்செய்யும் மருந்துகளைத்தான் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். யவனமதுவோ அகிபீனாவோ சிவமூலிகையோ அவர் அகத்தை மங்கச்செய்யவில்லை” என்றார். “எவர் வருகையும் அவரை தேற்ற முடியாது. பாண்டவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்ற சொல்லைத்தவிர எதையும் அவர் கேட்டுக்கொள்ளவும் மாட்டார்” என்றபின் உள்ளே சென்றார்.
மீண்டும் விதுரர் பீஷ்மரைப் பார்த்தார். எந்த உணர்ச்சியும் இன்றி நின்றிருந்த முதியவர் அக்கணம் விதுரரில் கடும் கசப்பை எழுப்பினார். இவர் வழக்கமான சொற்களைச் சொல்லி திருதராஷ்டிரரின் துயரை கூட்டிவிட்டுச் செல்லப்போகிறார் என்று தோன்றியதுமே ஏன் முதியவர்கள் அனைவருமே வழக்கமான சொற்களில் அமைந்துவிடுகிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அவர்களின் மூத்தவர்கள் முதியவயதில் சொன்னவை அவை. வழிவழியாக சொல்லப்படுபவை. உண்மையில் வாழ்க்கை என்பது புதியதாக ஏதும் சொல்வதற்கில்லாத மாறா சுழற்சிதானா? அல்லது வாழ்க்கைபற்றி ஏதும் சொல்வதற்கில்லை என்பதனால் அத்தருணத்திற்குரிய ஒலிகள் என அச்சொற்களை சொல்கிறார்களா?
விப்ரர் வெளியே வந்து உள்ளே செல்லலாம் என்று கையசைத்து தலைவணங்கினார். கதவைத்திறந்து உள்ளே சென்ற விதுரர் பீஷ்மரை உள்ளே அழைத்தார். இருக்கையில் தளர்ந்தவராக அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் எழுந்து கைகூப்பியபடி கண்ணீர் வழிய நின்றார். பீஷ்மர் அருகே வந்து திருதராஷ்டிரரை சிலகணங்கள் நோக்கிவிட்டு உடலில் கூடிய விரைவுடன் முன்னகர்ந்து திருதராஷ்டிரரை அள்ளி தன் மார்புடன் அணைத்து இறுக்கிக்கொண்டார். திருதராஷ்டிரர் யானை பிளிறுவதுபோல ஒலியெழுப்பி அவரது நெஞ்சில் தன் தலையை அழுத்திக்கொண்டு தோள்கள் குலுங்க அழத்தொடங்கினார். ஒரு சொல்கூட இல்லாமல் பீஷ்மர் திருதராஷ்டிரரின் தோள்களை தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.
திருதராஷ்டிரரின் அழுகை ஏறி ஏறி வந்தது. ஒருகட்டத்தில் ஒலியில்லாமல் அவரது உடல் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்னர் அவர் நினைவிழந்து பின்னால் சாய பீஷ்மர் தன் நீண்ட கைகளால் அவரது பேருடலை தாங்கிக்கொண்டார். அவர் அருகே ஓடிவந்த சேவகனை விழியாலேயே விலக்கிவிட்டு எளிதாகச் சுழற்றி அவரைத் தூக்கி இரு கைகளில் ஏந்திக்கொண்டு மறுவாயில் வழியாக உள்ளே சென்று அவரது மஞ்சத்தில் படுக்கவைத்தார். சேவகனிடம் “குளிர்ந்த நீர்” என்றார். சேவகன் கொண்டுவந்த நீரை வாங்கி திருதராஷ்டிரரின் முகத்தில் தெளித்தபடி “மல்லா, மல்லா… இங்கே பார்” என்று அழைத்தார்.
திருதராஷ்டிரரை பீஷ்மர் அப்படி அழைத்து விதுரர் கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை. மற்போர் கற்றுத்தந்த நாட்களில் எவரும் அருகில் இல்லாதபோது அழைத்திருக்கலாம். திருதராஷ்டிரரின் இமைகள் துடித்தன. வாய் கோணலாகி தலை திரும்பி காது முன்னால் வந்தது. கரகரத்த குரலில் “பிதாமகரே” என்றார். ”மல்லா, நான்தான்…” என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரர் கைகளை நீட்டி பீஷ்மரின் இருகைகளையும் பற்றி தன் நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார். “நான் இறக்கவிழைகிறேன் பிதாமகரே… இனி நான் உயிருடன் இருந்தால் துயரை மட்டுமே அறிவேன்.” அவர் உதடுகள் வெடித்து மீண்டும் அழுகை கிளம்பியது. கரிய பெருமார்பும் தோள்களும் அதிர்ந்தன.
பீஷ்மர் சொற்களில்லாமல் அவர் கைகளுக்குள் தன் கைகளை விட்டுவிட்டு அமர்ந்திருந்தார். மெல்லிய விசும்பலுடன் ஓய்ந்து தலையை இருபக்கமும் திருப்பி அசைத்துக்கொண்டே இருந்தார் திருதராஷ்டிரர். அவர் அடங்கிவருவதாக விதுரர் எண்ணிய கணம் மீண்டும் பேரோலத்துடன் அலறியபடி தன் தலையில் கையால் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு அழத்தொடங்கினார். கால்கள் படுக்கையில் மூச்சுத்திணறுபவருடையது போல அசைந்து நெளிந்தன. நெடுநேரம் அருவியோசை போல அவ்வொலி கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் மீண்டும் கேவல்கள். மழை சொட்டி ஓய்வதுபோல விம்மல்கள்.
“தண்ணீர் கொடு” என சேவகனுக்கு பீஷ்மர் கைகாட்டினார். தண்ணீரை சேவகன் நீட்டியதும் வாங்கி குடம்நிறையும் ஒலியுடன் குடித்துவிட்டு மார்பில் நீர் வழிய அமர்ந்திருந்த திருதராஷ்டிரர் மீண்டும் தன் தலையை அறைந்து அழத்தொடங்கினார். அழுகை வலுத்துக்கொண்டே சென்றது. அங்கே நிற்கமுடியாதவராக விதுரர் சாளரத்தருகே ஒதுங்கி வெளியே நோக்கினார். ஆனால் முதுகில் அலையலையாக வந்து அடித்தது அவ்வழுகை. இரு கைகளையும் பற்றி இறுக்கி பற்களைக் கிட்டித்துக்கொண்டு அவ்வொலியைக் கேட்டு நின்றிருந்தார். வெடித்துத் திரும்பப்போகும் கணம் கதவு திறந்து விப்ரருடன் மருத்துவன் உள்ளே வந்தான்.
திருதராஷ்டிரரின் வாயைத் திறந்து அகிபீனா கலந்த நீரை குடிக்கச்செய்தான். அவர் முகத்தைச்சுளித்துக்கொண்டு அதைக்குடித்தார். இன்னொரு சேவகன் கொண்டு வந்த சிறிய அனல்கலத்தில் சிவமூலிகைப்பொடியைத் தூவி நீலப்புகை எழுப்பி அவரது படுக்கையருகே வைத்தான். பீஷ்மர் எழுந்து அருகே வந்து வெளியே செல்லலாம் என்று கைகாட்டி நடந்தார். வலியறியும் விலங்குபோல திருதராஷ்டிரர் முனகியபடி மீண்டும் அழத்தொடங்க அந்த ஒலியை பின்னால் தள்ளி கதவை மூடிக்கொண்ட கணம் அவர் ஒன்றை உணர்ந்தார். திருதராஷ்டிரரும் பீஷ்மரும் ஒருவரையொருவர் அழைத்ததைத் தவிர எதையுமே பேசிக்கொள்ளவில்லை.
பீஷ்மர் நிமிர்ந்த தலையுடன் கைகளை வீசி நடந்தார். எத்தனை உயரம் என்று விதுரர் எண்ணிக்கொண்டார். தன் வாழ்நாளெல்லாம் பிறரை குனிந்தே நோக்கும் ஒருவரின் அகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? மலைமுடிகள் போன்ற தனிமை. உச்சிப்பாறையில் கூடுகட்டும் கழுகு போலிருக்குமா அவரில் திகழும் எண்ணங்கள்? கவ்விச்செல்லும் சில கணங்களில் மட்டுமே மண்ணை அறியும் பறவைகளா அவை?
எதிரே வந்த சேவகன் வணங்கினான். விதுரர் விழியால் என்ன என்று கேட்டதும் “காந்தார இளவரசர் பிதாமகரை சந்திக்க விழைகிறார்” என்றான். விதுரர் “பிதாமகர் இன்றுதான் வந்திருக்கிறார். ஓய்வெடுத்தபின் நாளை காலை சந்திப்பார் என்று சொல்” என்றார். அவன் தலைவணங்கி “காந்தாரர் இங்குதான் இருக்கிறார்” என்றான். “இங்கா?” என்றார் விதுரர். “ஆம், அடுத்த அறையில்.” விதுரர் எரிச்சலுடன் பல்லைக்கடித்தார். சகுனியைக் காணாமல் பீஷ்மர் மறுபக்கம் போகவே முடியாது. “உடன் எவர்?” என்றார். “கணிகர்” என்றான். அவர் பீஷ்மரை நோக்கியதுமே பீஷ்மர் சந்திக்கலாம் என்று சைகை செய்தார்.
பீஷ்மர் உள்ளே நுழைந்ததுமே சகுனி எழுந்து வணங்கினார். எழமுடியாதென்று அறிந்ததனால் கணிகர் அங்கே முன்னரே நின்றிருந்தார். அவர் இடையை நன்கு வளைத்து வணங்கினார். ஒருகணம் கூட பீஷ்மரின் விழிகள் அவரில் பதியவில்லை. சகுனி “பிதாமகரிடம் முதன்மையான சிலவற்றை உரையாடலாமென எண்ணினேன்” என்றார். பீஷ்மர் “அரசியல் சார்ந்தா?” என்றார். “ஆம். அஸ்தினபுரி இன்றிருக்கும் நிலையில்…” என சகுனி தொடங்க “இவர் யார்?” என்று கணிகரை சுட்டிக்காட்டி பீஷ்மர் கேட்டார்.
“இவர் என் அமைச்சர். அத்துடன்…” என்று சகுனி சொல்லத் தொடங்க “அவர் வெளியேறட்டும். அஸ்தினபுரியின் அரசியலை காந்தார அமைச்சர் அறியவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர். சகுனி ஒருகணம் திகைத்தபின் கணிகரை நோக்கினார். கணிகர் “அடியேன், அரசியல் மதிசூழ்கையில்…” என சொல்லத் தொடங்க பீஷ்மர் திரும்பாமலேயே வெளியே செல்லும்படி கைகாட்டினார். கணிகர் தன் உடலை மெல்ல அசைத்து சுவரைப் பிடித்துக்கொண்டு மெல்லிய வலிமுனகலுடன் வெளியே சென்றார்.
கணிகர் வெளியே சென்றதும் பீஷ்மர் அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரியின் செய்திகள் உங்கள் அமைச்சருக்கு தெரியவேண்டியதில்லை. அது என் ஆணை” என்றார். “பணிகிறேன் பிதாமகரே” என்றபடி சகுனி மெல்ல அமர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “ஓநாய் கடித்த செய்தியை அறிந்தேன். புண் இன்னமுமா ஆறவில்லை?” என்றார் பீஷ்மர் கண்களிலும் முகத்திலும் குடியேறிய கனிவுடன். குனிந்து சகுனியின் கால்களை நோக்கி “வலி இருக்கிறதா?” என்றார்.
“புண் ஆறிவிட்டது பிதாமகரே. ஆனால் நரம்புகள் சில அறுந்துவிட்டன. அவை இணையவேயில்லை. எப்போதும் உள்ளே கடும் வலி இருந்துகொண்டிருக்கிறது” என்றார் சகுனி. “திராவிடநாட்டு மருத்துவர்கள் ஆற்றல் மிக்கவர்கள்..எனக்கு சிலரைத் தெரியும்.” என்றார் பீஷ்மர். சகுனி “இவ்வலி நான் உயிருடன் இருப்பது வரை நீடிக்கும் என அறிந்துவிட்டேன்” என்றார். பீஷ்மர் “நான் பார்க்கிறேன்” என்றார்.
சகுனி பேச்சை மாற்றும்பொருட்டு விதுரரை நோக்கிவிட்டு “பாண்டவர்களின் இறப்புச்செய்தியை அறிந்திருப்பீர்கள்” என்றார். அந்த விழியசைவால் பீஷ்மரும் எண்ணம் மடைமாற்றப்பட்டார். ”ஆம், திராவிடநாட்டில் இருந்தேன். அங்கிருந்து கிளம்பிவந்தேன்” என்றார். சகுனி குரலைத் தாழ்த்தி “அரசரை பார்த்திருப்பீர்கள். செய்திவந்து எட்டுமாதமும் பன்னிருநாட்களும் ஆகிறது. அச்செய்தியை அறிந்த நாளில் இருந்த அதே துயர் அப்படியே நீடிக்கிறது” என்றார். பீஷ்மர் “அவன் ஒரு வனவிலங்கு போல. அவற்றின் உணர்ச்சிகள் சொற்களால் ஆனவை அல்ல. ஆகவே அவை சொற்களையும் அறியாது” என்றார். “ஆனால் விலங்குகள் மறக்கக்கூடியவை. அவன் அகமோ அழிவற்ற அன்பு நிறைந்தது.”
“அவர் இத்துயரைக் கடந்து உயிர்வாழமாட்டார் என்று அத்தனை மருத்துவர்களும் சொல்லிவிட்டனர்” என்றார் சகுனி. “இல்லை, அவனுடைய உடலாற்றலும் உயிராற்றலும் எல்லையற்றவை. எத்தனை கரைந்தழிந்தாலும் அவன் பெருமளவு எஞ்சுவான்” என்றார் பீஷ்மர். “இன்னும் சிலமாதங்கள் அவன் துயருடன் இருப்பான். அதன் பின் தேறுவான். ஆனால் ஒருபோதும் இத்துயரில் இருந்து மீளமாட்டான். எண்ணி எண்ணி அழுதபடியே எஞ்சியிருப்பான்.” தாடியைத் தடவியபடி “இக்குடியின் மூத்தார் அனைவரும் திரண்டு உருவெடுத்தவன் அவன். ஆலயக்கருவறையில் அமர்ந்திருக்கும் பெருங்கற்சிலை” என்றார்.
சகுனி தத்தளிக்கும் விழிகளால் விதுரரை நோக்கிவிட்டு “பிதாமகரே, நான் சொல்லவருவது அதுவே. அரசர் இந்நிலையில் இருக்கிறார். சொல் என ஒன்று அவர் செவியில் நுழைவதில்லை. பட்டத்து இளவரசர் எரிகொள்ளப்பட்டார். அரசு இன்று கையறு நிலையில் இருக்கிறது. செய்திவந்த அன்று இனி அஸ்தினபுரி எஞ்சாது என்றே நானும் எண்ணினேன். ஆனால் சில நாட்களிலேயே நகர் எழுந்துவிட்டது. அரண்மனை மீண்டு விட்டது. அவர்கள் அரசை எதிர்நோக்குகிறார்கள். அரசோ அதோ படுக்கையில் தீராத்துயருடன் செயலற்றிருக்கிறது” என்றார்.
பின்னர் விதுரரை நோக்கி புன்னகைத்து “அமைச்சரின் மதிசூழ்கை இந்த நாட்டை மட்டுமல்ல பாரதவர்ஷத்தையே ஆள்வதற்குப் போதுமானது என்பதை எவரும் அறிவார். சென்ற பல ஆண்டுகளாக இந்நாடு அவரது ஆணைகளால்தான் ஆளப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஷத்ரியர் அந்த ஆணைகள் அரசரால் அளிக்கப்படுகிறது என நம்பியே அதை தலைக்கொண்டார்கள். மக்கள் அரசரின் சொல் இங்கே நின்றிருக்கிறது என ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அமைச்சரின் சொல் தன் சொல் என்று அரசர் எண்ணுவதை அனைவரும் அறிவர்” என்றார்.
கண்கள் மெல்ல இடுங்க சகுனி “ஆனால் இன்று சொற்களை அரசர் கேட்கும் நிலையில் இல்லை என அனைவரும் அறிவார்கள். ஆணைகள் அரசருடையவை அல்ல என்ற பேச்சு இப்போதே வலுவாக இருக்கிறது. அது நாள்செல்லச்செல்ல வளரும் என்றே எண்ணுகிறேன்” என்றார். “இன்று பிதாமகர் வந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்ததுமே நான் மகிழ்ந்தேன். அனைத்து இக்கட்டுகளும் அகன்றுவிட்டன. இத்தருணத்தில் முடிவெடுக்கும் ஆற்றலும் உரிமையும் கொண்டவர் நீங்கள்.”
பீஷ்மர் தாடியை நீவியபடி தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்தார். “பிதாமகரே, நான் விளக்கவேண்டியிருக்காது. எங்கிருந்தாலும் செய்திகளை நீங்கள் அறிந்துகொண்டுதான் இருப்பீர்கள். யாதவ அரசியும் இளையபாண்டவர்களும் சற்றே அத்து மீறிவிட்டனர். நாம் மகதத்தை சீண்டிவிட்டோம். மகதத்தின் எட்டு படைப்பிரிவுகள் நம் எல்லையை அழுத்திக்கொண்டிருக்கின்றன. கூர்ஜரத்தைத் தாக்கியது வழியாக மேற்கெல்லை நாடுகளனைத்தையும் பகைத்துக்கொண்டிருக்கிறோம். நாடு இன்றிருப்பதுபோல பகைசூழ்ந்த நிலையில் என்றும் இருந்ததில்லை” சகுனி சொன்னார். “இப்போது தேவை வலுவான ஓர் அரசு. அதை தலைமைதாங்கி நடத்தும் போர்க்குணம் கொண்ட இளம் அரசன்.”
பீஷ்மர் தலையசைத்தார். “இனிமேல் நாம் எதற்காக காத்திருக்கவேண்டும்? துரியோதனன் மணிமுடியுடன் பிறந்தவன்” என்றார் சகுனி. விதுரர் “காந்தாரரே, முன்னரே தருமனுக்கும் துரியனுக்கும் இடையே முடிப்பூசல் இருந்தது நாடறியும். அவர்களின் இறப்புக்குப்பின் உடனே முடிசூடும்போது குடிகள் நடுவே ஒரு பேச்சு எழும்” என்றார். “ஆம், சிலர் சொல்லக்கூடும். ஆனால் பீஷ்மபிதாமகரே அம்மணிமுடியை சூட்டுவாரென்றால் எச்சொல்லும் எழாது” என்றார் சகுனி.
விதுரர் மேலும் சொல்ல முனைவதற்குள் பீஷ்மர் கையமர்த்தி “சௌபாலர் சொல்வது உண்மை. அரசரில்லை என்ற எண்ணம் குடிகளிடையே உருவாகலாகாது. அரசு என்பது ஒரு தோற்றமே, சுழலும் சக்கரத்தில் மையம் தோன்றுவதுபோல. சுழற்சி நிற்கலாகாது. மையம் அழிந்து சக்கரம் சிதறிவிடும்” என்றார். சகுனியின் முகம் மலர்ந்தது. “இன்னும் நான்கு மாதங்களில் பாண்டவர்களின் ஓராண்டு நீர்க்கடன்கள் முடிகின்றன. அதன்பின்னர் துரியோதனனே முடிசூடட்டும். அவன் அஸ்தினபுரியை ஆளவேண்டுமென தெய்வங்கள் எண்ணியிருக்கின்றன என்றால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றபடி பீஷ்மர் எழுந்துகொண்டார்.
“கௌரவர்களுடன் வந்து தங்களை அரண்மனையில் சந்தித்து ஆசிபெறுகிறேன் பிதாமகரே” என்றார் சகுனி. “இளையோருக்கான நீர்க்கடன்களை நான் செய்தியறிந்த நாள் முதல் செய்து வருகிறேன். இங்கே எவர் செய்கிறார்கள்?” என்றார் பீஷ்மர். சகுனி “குண்டாசி செய்கிறான்” என்றார். பீஷ்மர் நின்று புருவங்கள் சுருங்க “குண்டாசியா? ஏன்?” என்றார். “அவன் செய்யலாமென்று ஏற்றான். மேலும் அவன் பீமன் மேல் ஆழ்ந்த அன்புள்ளவன்” என்று சகுனி தடுமாறினார்.
பீஷ்மர் “அப்படியென்றால் துரியோதனனுக்கு அன்பில்லையா?” என்றார். “அன்பில்லை என்று எவர் சொல்லமுடியும்? குண்டாசி பெருந்துயருற்றான். அவன் துயரைக் கண்டு…” பீஷ்மர் கைகாட்டி “துரியன் ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்தானா?” என்றார். சகுனி “அவர்…” என்று தொடங்க “ஒருமுறையேனும் நீர்க்கடன் செய்யப்பட்ட கங்கைக்கரைக்குச் சென்றானா?” என்று மீண்டும் கேட்டார் பீஷ்மர். “இல்லை” என்றார் சகுனி “அவரால் இளையோரின் இறப்பை எளிதாகக் கொள்ளமுடியவில்லை. மேலும்…”
போதும் என்று கைகாட்டிவிட்டு பீஷ்மர் திரும்பி நடந்தார். சகுனி பின்னால் வந்து “இதில் ஒளிக்க ஒன்றுமில்லை. துரியோதனர் பாண்டவர்கள் மேல் கொண்ட சினம் அப்படியேதான் இருக்கிறது. அவரை அவர்கள் அவமதித்துவிட்டார்கள் என எண்ணுகிறார். மதுராவின் மீதான படையெடுப்பு ஒத்திகையை அவரைச் செய்யவைத்து ஏமாற்றினார்கள்… அவர் தருமனிடம் கால்தொட்டு இறைஞ்சியும் அவரை புறக்கணித்தார்கள். அனைத்தையும் ஒற்றர்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். “அந்தச் சினம் இறப்புச்செய்திக்குப் பின்னரும் நீடிக்கிறதா என்ன?” என்றார் பீஷ்மர்.
பீஷ்மர் திரும்பாமல் நடக்க “ஆம். அது பிழை என நான் அறிவேன். ஆனால் துரியோதனர் ஷாத்ர குணம் மேலோங்கியவர். அவமதிப்புகளை அவர் மறப்பதேயில்லை. அந்தச் சினம் இப்போது பெருமளவு அடங்கி வருகிறது. ஆனால் முதல் நீர்க்கடன் நடந்தபோது அந்தக் கசப்பு நெஞ்சில் இருக்கையில் அதை மறைத்து நீர்க்கடன் செய்வது முறையல்ல. ஆகவே இளையோன் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். அதுவே உகந்தது என நான் எண்ணினேன்” என்றார் சகுனி. பீஷ்மர் தலையசைத்தபடி மறுபக்கம் இடைநாழியை நோக்கி நடக்க சகுனி வாசலிலேயே சுவர் பற்றி நின்றுகொண்டார்.
வெளியே நின்றிருந்த கணிகர் பணிவுடன் உடல் வளைத்து வணங்க பீஷ்மர் அவரை நோக்காமலேயே வெளியே சென்று ரதத்தை கொண்டுவரும்படி கைகாட்டினார். ரதம் வந்து நின்றதும் வழக்கம்போல படிகளில் மிதிக்காமல் தரையில் இருந்தே ஏறிக்கொண்டு பீடத்தில் அமர்ந்தார். திரும்பி விதுரரிடம் தன்னுடன் ஏறிக்கொள்ளச் சொல்லி கைகாட்டினார். விதுரர் ஏறிக்கொண்டதும் அவர் “ம்” என சொல்ல ரதம் கிளம்பியது.
பீஷ்மர் சாலையை விழிகள் சுருக்கி நோக்கியபடி தாடியை நீவிக்கொண்டு “விதுரா, நீ சென்று அந்த மாளிகையின் எரிதடத்தை பார்த்தாயா?” என்றார். “இல்லை, செய்திகளைத்தான் கேட்டேன்” என்றார் விதுரர். “செய்திகளை நானும் கேட்டேன். நான் அங்கே செல்ல விரும்புகிறேன்” என்றார் பீஷ்மர். “அங்கே ஒன்றுமில்லை. பலமுறை மழைபெய்து சாம்பல் முழுமையாகவே கரைந்துவிட்டது. எலும்புகளை கொண்டுவந்துவிட்டோம். அந்த இடத்தில் கொற்றவைக்கு ஓர் ஆலயம் அமைக்க சூத்ராகிகளை ஆண்டுமுடிவன்று அனுப்பவிருக்கிறோம்.”
“எரிதடம் இல்லையென்றாலும் அந்த இடத்தை நான் பார்க்கவேண்டும். அந்தச் சூழலை. அங்குள்ள மக்களை.” பீஷ்மர் தாடியை விட்டதும் அது பறக்கத் தொடங்கியது. “துரியன் நீர்க்கடன்களைச் செய்ய மறுத்தான் என்றால் அது பகையால் அல்ல. பகை என்றால் அது அந்த இறப்புச்செய்தியைக் கேட்டதுமே கரைந்துவிடும். அந்நாள் வரை அப்பகையை அவன் தன்னுள் வைத்து வளர்த்திருப்பான். அந்த இடம் ஒழிந்து பெரும் வெறுமையே சூழும். எங்கும் பகைவரே அகம் உருகி நீத்தார் அஞ்சலி செய்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “துரியன் மறுத்தது குற்றவுணர்வால் இருக்கலாம்.”
“பிதாமகரே…” என்றார் விதுரர். “நான் அதை கண்டுவிட்டேன் என உணர்ந்ததுமே சகுனி பதறிவிட்டான். உடனே நான் நிறைவுகொள்ளும்படி ஒரு தர்க்கத்தை உருவாக்கி சொன்னான். அந்தத் தர்க்கம் பழுதற்றது என்பதனாலேயே ஐயத்திற்கிடமானது” என்றார் பீஷ்மர். “காந்தாரன் நான் முன்பு கண்டவன் அல்ல. அவன் கண்கள் மாறிவிட்டன. அவன் உடலெங்கும் உள்ள கோணல் முகத்திலும் பார்வையிலும் வந்துவிட்டிருக்கிறது. அவனுக்குள் நானறிந்த சகுனி இல்லை.” விதுரர் படபடப்புடன் தேரின் தூணை பிடித்துக்கொண்டார்.
பீஷ்மர் “அவனிடமிருக்கும் விரும்பத்தகாத ஒன்று எது என்று எண்ணிப்பார்த்தேன். வெளியே கணிகரை மீண்டும் பார்த்ததுமே உணந்தேன். அவரை முதலில் பார்த்ததுமே அறிந்துகொண்டேன், அவர் தூய தீமை உறைந்து உருவான ஆளுமை கொண்டவர். பொறாமை, சினம், பேராசை, காமம் என்றெல்லாம் வெளிப்பாடு கொள்ளும் எளிய மானுடத் தீமை அல்ல அது. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட தெய்வங்களுக்குரிய தீமை. தீமை மட்டுமேயான தீமை. நோய், இறப்பு போல இயற்கையின் கட்டமைப்பிலேயே உறைந்திருக்கும் ஆற்றல் அது. அவரது விழிகளில் வெளிப்படுவது அதுவே. அதை மானுடர் எதிர்கொள்ள முடியாது.”
விதுரர் தன் கைகால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்து தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டார். “அது தன் ஆடலை நிகழ்த்தி அடங்கும். அதை நிகர்க்கும் தெய்வங்களின் பிறிதொரு விசையால் நிறுத்தப்படும்… நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் பீஷ்மர். “அவரை அணுகுபவர் அனைவரின் விழிகளும் அவரை எதிரொளிக்கத் தொடங்கும். அவர் தன்னைச்சூழும் அத்தனை உள்ளங்களிலும் தன்னை ஊற்றி நிறைத்துச் செல்வார். சகுனியின் விழிகளில் தெரிந்தது கணிகரின் விழிகள். துரியனின் விழிகளிலும் அவரே தெரிவார் என நினைக்கிறேன்.”
பெருமூச்சுடன் பீஷ்மர் சொன்னார் “என் எண்ணங்கள் முதியவனின் வீண் அச்சங்களாக இருக்கலாம். என் விழிமயக்காக இருக்கலாம். இருந்தால் நன்று. ஆனால் நான் அங்கே செல்லவேண்டும். பாண்டவர்கள் வஞ்சத்தால் கொல்லப்படவில்லை என என் அகம் எனக்குச் சொல்லவேண்டும். அது வரை என் அகம் அடங்காது. மணிமுடியுரிமை குறித்த முடிவையும் எடுக்க மாட்டேன்.”
விதுரர் “பிதாமகரே” என்றார். ஓசை எழவில்லை. மீண்டும் கனைத்து நாவால் உதடுகளை துழாவியபின் “பிதாமகரே” என்றார். “சொல்… வஞ்சம் என நீ அறிவாய் அல்லவா? உன் பதற்றத்திற்கு வேறு மூலம் இருக்க இயலாது” என்றார் பீஷ்மர். “பிதாமகரே, வஞ்சம் நிகழ்ந்தது உண்மை. ஆனால் பாண்டவர்கள் இறக்கவில்லை” என்றார் விதுரர். “என்ன சொல்கிறாய்?” என்றார் பீஷ்மர். அதுவரை அவரிடமிருந்த நிமிர்வு முழுமையாக அகன்று வயோதிகத் தந்தையாக ஆகி கைகள் நடுங்க விதுரரின் தோளைத் தொட்டு “சொல்… அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என் மைந்தர் இறக்கவில்லையா?” என்றார்.
விதுரர் “அவர்கள் நலமாக இருக்கிறார்கள். எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வாரணவதத்து மாளிகையில் இருந்து தப்பிவிட்டார்கள்” என்றார். “தெய்வங்களே…” என நடுங்கும் குரலில் கூவியபடி கண்களில் நீருடன் பீஷ்மர் கைகூப்பினார். பின்னர் மெல்ல விம்மியபடி அந்தக் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டார். மேலும் இருமுறை விசும்பி மூச்சிழுத்தபின் அப்படியே அமர்ந்திருந்தார். அந்த மாற்றம் விதுரரை புன்னகை செய்யவைத்தது. அவர் சொல்லச்சொல்ல முகத்தை நிமிர்த்தாமலே கேட்டுக்கொண்டிருந்தார் பீஷ்மர்.
“இன்று அரசரின் கடுந்துயரைக் கண்டதும் சொல்லிவிடலாம் என்று என் அகம் எழுந்தது…” என்று விதுரர் சொன்னதுமே “சொல்லாதே. அவன் அறிந்தால் துரியோதனனை கொன்றுவிடுவான். ஐயமே இல்லை. நான் அவனை அறிவேன்” என்றார் பீஷ்மர். “ஆனால் இந்தத் துயர்… இதில் அரசர் இறப்பாரென்றால்…” என விதுரர் சொல்ல “இறக்க மாட்டான். இருப்பான்” என்றார் பீஷ்மர். பெருமூச்சுடன் தலையசைத்து “மாவீரர்கள் நெருப்பு போல, அவர்களை எங்கும் ஒளித்துவைக்க முடியாது. அவர்கள் இருக்கும் இடம் விரைவிலேயே தெரிந்துவிடும். அப்போது அவனும் அறிந்துகொள்ளட்டும்” என்றார்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்