பயணம்,திராவிட இயக்கம்: கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

உங்கள் எழுத்தை கடந்த சில மாதங்களாக வாசித்து வருகிறேன், விகடனுடனான உங்கள் பிரச்சினையில் இருந்து. உங்களை அறிமுகப்படுத்திய விகடனுக்கு நன்றி :)

உங்களின் பயணக்கட்டுரைகள் அருமை. எனக்கு இயல்பாகவே இருக்கும் பயண நாட்டம் இந்த பயணக்கட்டுரைகளை விடாமல் படிக்க வைக்கிறது. நன்றிகள்.

எனக்கு உங்களிடம் இரண்டு கேள்விகள்:
1. பயணக்கட்டுரைகள் நன்றாக இருந்தாலும், உங்களின் மற்ற வகை எழுத்துக்களை படித்து நெடுநாள் ஆனது போல் தோன்றுகிறது. முக்கியமாக உங்கள் நகைச்சுவை பதிவுகள். பயணத்திற்கு நடுவிலும் அப்படி ஒன்றை எழுத இயலுமா?
2. இந்த பயணக்கட்டுரையை திரும்பி வந்த பின் ஏதேனும் இதழில் தொடராகவோ அல்லது புத்தகமாகவோ எழுதியிருந்தால் பொருளாதார ரீதியாக பயனடைந்திருப்பீர்கள். அப்படி செய்யாமல் உடனடியாக வலையில் வெளியிடுவது ஏன்?

நன்றி,

அன்புடன்,
வெங்கட் (அ) வெண்பூ

http://venpu.blogspot.com/

அன்புள்ள வெங்கடாசலபதி

என்னுடைய பயண அனுபவங்களை எழுதுவது திட்டமிடப்பட்டது அல்ல. கிளம்பும் நாட்களில்தான் சில வாசகநண்பர்கள் எழுதலாமே என்றார்கள். மடிக்கணினி எடுத்துச்செல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. [பாலா வாங்கிக் கொடுத்தது. நான்கடவுள் முடியும் மட்டும் உயிருடன் இருக்கவேண்டும் என்ற பிரார்த்தனை உண்டு] ஆகவே போகும்போதே எழுதலாமென தீர்மானித்தேன். என் மடிக்கணினியில் பல பிரச்சினைகள், நம்ப முடியாது. ஆகவே நண்பர் செந்திலையும் மடிக்கணினி எடுத்துவரச் சொன்னேன். இவ்வாறுதான் எழுதுவது முடிவாயிற்று, எழுதுவதை அவ்வப்போது பேனாபதிவியில் எடுத்துச்சென்று இணையநிலையம் எங்கே கண்ணில் படுகிறதோ அங்கே இறங்கி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டேன்.

இத்தகைய எழுத்துக்கள் இப்போது அதிகமாக வார இதழ்களில் வருவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். வார இதழ்கள் படிப்படியாக தங்களை சித்திர இதழ்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வாசகர்களுக்கு பொதுவாக வரலாற்றுத்தகவல்கள் அனுபவக்குறிப்புகள் தேவை இல்லை. மேலும் நான் இன்று பிரபல வணிக இதழ்களில் எழுதுவதாக இருந்தால் பணம் தான் இலக்காக இருக்கவேண்டும்– சினிமா இருக்கும்போது அது தேவை இல்லை.

இந்தப் பயணக்கட்டுரை பொதுவான வாசகர்களுக்கு அவர்கள் பார்க்காத ஒரு பயணவழியை அறிமுகம் செய்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஜெ

****

– அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் பயணத்தை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறேன். ஒரு பிழை. அகோபிலம் தென்கலை வைணவ மடம் அல்ல. வடகலை வைணவ மடம்.

கட்டுரைகள் மிகச்சுருக்கமாக இருந்தாலும் வரலாற்றுச்சுருக்கம், காட்சி வருணனை, தனிப்பட்ட அனுபவம் ஆகிய மூன்றும் சரியான கலவையாக அமைந்து சிறப்பாக இருந்தன.

சடகோபன் சீனிவாசன் 

அன்புள்ள ஜெ

உங்கள் பயணக்கட்டுரைகள் பலகோணங்களில் சிந்தனைசெய்ய வைத்தன. குறிப்பாக வட இந்தியாவில் ஏன் வளர்ச்சி இல்லை, ஏன் நடுத்தரவர்க்கமே உருவாகவில்லை என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் முக்கியமானவை. ஆனால் மிக முக்கியமான ஒரு காரணம் உண்டு, பிகாரில் பல வருடம் பணியாற்றியவன் என்ற வகையில் இதை நான் சொல்ல முடியும். குற்றங்கள் இல்லாததும், சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதுமான ஒரு குடிமைச்சமூகம் [ சிவில்சொசைட்டி] அங்கே உருவாகவேயில்லை. அது உருவாகாதவரைக்கும் தனிமனிதனின் சொத்துரிமைக்குப் பாதுகாப்பே இல்லை. மக்கள் சமூகக் கட்டுபாட்டுக்கும் குழுமனப்பான்மைக்கும் அடிமைப்பட்டுதான் வாழவேண்டியிருக்கும்.

நெடுங்காலம் அரசாங்கமே இல்லாமல் கொலையும் கொள்ளையும் தாண்டவமாடிய பகுதிதான் வட இந்தியா. அதன்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தபோது எல்லா சமூகமுமே தங்கள் அளவில் வன்முறைக்கும்பலாகத்தான் இருந்தன. எல்லா சமூகமும் பிறரை கொள்ளை அடித்துக் கொண்டிருந்தன. கடுமையான நடவடிக்கைகள் மூலம் அதை பிரிட்டிஷ் அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது. ஆனால் பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களின் வரிவசூல் உரிமைக்குப் பங்கம் வராதவகையில் அந்த கொள்ளைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது மட்டும்தான். ஆகவே அவர்கள் ஒரு பிராந்தியத்தில் வலிமையாக இருக்கும் சமூகத்துத்தலைவருக்கே அப்பகுதி ஜமீன் அதிகாரத்தைக் கொடுத்து அவனிடமிருந்து வரி வசூலித்தார்கள். நீங்கள் பிகாரில் சாலையில் பார்த்த கட்டாய வரிவசூல் எல்லாம் இந்த அதிகாரத்தின் நீட்சியே.

சுதந்திரத்துக்குப் பிற்பாடு இந்தக் கொள்ளையும் நாட்டுப்புற வன்முறையும் முழுமையாக இல்லாமல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லை. அரசியல்வாதிகள் அந்த குழுக்களை அப்படியே பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அது எளிதான அதிகார மார்க்கமாக இருந்தது. அடுத்த கட்டத்தில் அந்த கிரிமினல் குழுக்களே நேரடியாக அரசியலுக்கு வந்தன. அரசியல் கிரிமினல்மயமானது. இப்போது பிகாரில் மாவோயிசம் முக்கியமான சக்தியாக உள்ளது. கம்யுனிசத்துக்கும் அதுக்கும் சம்பந்தமேதும் இல்லை. ஆளும் வன்முறைக்குழுக்களால் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குரிய பாரம்பரியமான வன்முறைக் கும்பல்களை மாவோயிஸ்டுகள் சீன ஆயுத உதவியுடன் ஒருங்கிணைக்கிறார்கள்.

பிகார், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசத்தில் எப்போதுமே சட்டத்தின் ஆட்சி நிலவியதில்லை. இதுவே அங்குள்ள வறுமையின் மையக்காரணம். எங்கு சட்டம் கோலோச்சுகிறதோ அங்குதான் சிவில்அமைதி நிலவும். அங்கேதான் தொழிலும் வணிகமும் பெருகும். வறுமை ஒழியும். அன்றாடவாழ்க்கையில் ஒரு விவசாயில் துப்பாக்கியுடன் அலைவதை கண்டீர்கள் அல்லவா. அதுதான் பிகார். அங்கே எப்படி வளர்ச்சி ஏற்படும்?

பிகாரில் ஆரம்பகாலத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் தியாகபாரம்பரியம் கொண்ட காங்கிரஸ்காரர்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இரும்புக்கரம்கொண்டு அவர்கள் அங்கே கிரிமினல்குழுக்களை ஒடுக்கியிருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதை கோட்டைவிட்டார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் செல்வாக்கான கிரிமினல்குழுக்களை– சாதிக்குழுக்களை– அப்படியே காங்கிரஸ¤க்குள் கொண்டுவந்தால் காங்கிரஸ் ஆட்சி உறுதியாக நிலைக்குமே என்று எண்ணிவிட்டார்கள். ஜமீந்தார்களும் மகாராஜாக்களும் காங்கிரஸ¤க்குள் வந்தார்கள். அதன் விளைவையே பிகார் இன்று அனுபவிக்கிறது. நேற்று வரை பிராமண-டாக்கூர் குண்டர்களின் ஆட்சி. இப்போது யாதவ குண்டர்களின் ஆட்சி. ஒருவேளை நாளை தலித் குண்டர்களின் ஆட்சி.

தமிழ்நாட்டிலும் இதே தப்பை காமராஜ் செய்தார். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது. காங்கிரஸ¤க்குச் செல்வாக்கு இல்லாத இடங்களில் செல்வாக்காக இருந்த ஜமீந்தார்கள், நிலக்கிழார்கள், முதலாளிகள் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டுவந்தார். தமிழக அரசியலில் உள்ளூர் குண்டர்களை அரசியலுக்குக் கொண்டுவந்த முதல் தலைவர் காமராஜர்தான். பிகார் உத்தரபிரதேசத்தில் இருந்து அவர் கற்றுக்கொண்டது அது. நல்லவேளையாக அதை தி.மு.க தடுத்தது. அடித்தள மக்களை ஒருங்கிணைத்த தி.மு.க ‘பூண்டி வாண்டையார்களின் கட்சி, வலிவலம் பண்ணையார்களின் கட்சி, கபித்தலம் மூப்பனார்களின் கட்சி’ என்று மேடைமேடையாக பேசியே எளியமக்களின் கோபத்தை தூண்டி காங்கிரஸை வீழ்த்தியது. காமராஜ் செய்த இந்த வரலாற்றுத்தவறே தமிழ்நாட்டில் காங்கிரஸை இல்லாமலாக்கியது.

காமராஜ் பல வளர்ச்சித்திட்டங்களைச் செய்தவர். அவரே புதிய தமிழ்நாட்டின் அடிப்படைகளை அமைத்தவர். ஆனால் அவர் உருவாக்கிய ஒரு மாபெரும் ஆபத்தில் இருந்து தமிழகத்தைக் காப்பாற்றியது தி.மு.கவே. அதற்காக அறிஞர் அண்ணாவுக்கு தமிழகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. என்னதான் நீங்கள் சொன்னாலும் அண்னா ஒரு மாபெரும் ஜனநாயக சக்தி. அந்த ஜனநாயக சக்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் அன்றைய காங்கிரஸ் காரர்கள் எப்படியெல்லாம் வெறுப்பை உமிழ்ந்தார்கள் தெரியுமா? இதை நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். ஆனால் நீங்கள் வடக்கில் பார்த்த தேக்கநிலை தெற்கில் இல்லாமலானதற்கு காரணம் இதுதான். திராவிட இயக்கத்தை நீங்கள் எப்போதும் எதிர்மறையாகவே மதிப்பிடுகிறீர்கள். அதன் தீமைகள் வலிமைபெற்ற பிறகு வந்த தலைமுறை நீங்கள். ஆனால் வரலாற்றுப்பார்வையுடன் இதை நீங்கள் அணுக வேண்டும். 

சி.பூமிநாதன்
மதுரை[

தமிழாக்கம்]

அன்புள்ள பூமிநாதன் அவர்களுக்கு

நான் விவாதிக்கும் அவகாசத்தில் இல்லை. ஆனால் இந்தப் பயணம் ஈவேரா, அண்ணா திராவிட இயக்கம் ஆகியவை குறித்த என் எண்ணங்களை ஆழமான மறுபரிசீல¨னைக்கு கொண்டுசெல்கிறது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் கடிதமும் அதற்கு உதவுகிறது
ஜெ 

முந்தைய கட்டுரைஇந்தியப்பயணம் 20, ராஜகிருஹம், நாளந்தா
அடுத்த கட்டுரைஇந்தியப்பயணம் 21, பூரி