«

»


Print this Post

ஆன்மீகம் போலி ஆன்மீகம் 3


அன்புள்ள ஜெயமோகன்,

நித்யானந்தர் கற்றுத்தந்தது பதஞ்சலி முறையிலான யோகம். அவரது வழிமுறைகளின்படி நான் எட்டுமாதங்கள் யோகப்பயிற்சி செய்தபோது என்னுடைய உடலில் இருந்த எல்லா நோய்களும் நீங்கின. எனக்குத்தெரிந்த சிலருக்கு ரத்தப்புற்றுநோய்கூட குணமாகியிருக்கிறது. நான் நித்யானந்தரின் சைதன்யத்துடன் தினமும் உரையாடி வருகிறேன். நான் என் அறைக்குள் இரவுகளில் அவரைக் கண்டிருக்கிறேன்.

இப்போது நித்யானந்தர் பிரம்மசாரி அல்ல என்று சன் டிவி செய்தி வருகிறது. இதனால் அவர் கற்றுத்தந்த யோகமுறை பொய்யாக ஆகிவிடாது. அது உண்மைதான். நாம் நம்பியதுபோல நித்யானந்தர் ஒரு பிரம்மசாரி அல்ல என்றுதான் தெரிகிறது. ஏதோ சில காரணங்களுக்காக அவர் அந்த விஷயத்தை பிறரிடம் சொல்லவில்லை. அவரை ஒரு கிரகஸ்தர் என்று எடுத்துக்கொண்டால்கூட அவர் அளித்த யோகமார்க்கம் குறைந்துவிடுவதில்லை. நாளைக்கே அவர் ஆமாம், நான் தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து யோகப்பயிற்சி அளிக்க ஆரம்பித்தால் என்ன ஆகிவிடும்? அவர் ஒரு பிரம்மசாரி அல்ல என்பதனால் யோகா ஆசிரியராக அல்லாமலாகிவிடுவாரா என்ன?

மேலும் நீங்கள் யோகம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவில்லை. ஸ்தூல சரீரத்தை சூட்சும சரீரமாக ஆக்கிக் கொள்வதுதான் யோகம். அது சுவாமி வழியாக நடந்துகொண்டிருக்கிறது.

எம்.கோதண்டராமன்

*

என் முதலிரு கட்டுரைகளுக்குப் பின் இத்தகைய கடிதங்கள் வந்து மின்னஞ்சல்பெட்டி நிறைந்துவிட்டது. பிரதிநிதித்துவம் உள்ள ஒரு கடிதத்தை மட்டும் வெளியிட்டு என் விளக்கத்தை அளிக்கிறேன். நம்பிக்கைகளுடன் விவாதிக்கலாகாது என்ற எண்ணம் கொண்டவன் நான். நம்பிக்கைகள் தர்க்கபூர்வமானவை அல்ல. ஆனால் இவ்வாறு கடிதம் எழுதாத ஆனால் இந்த நிலையில் இருக்கும் சிலர், நம்பிக்கைகள் விரிசலிட்டு வேறு ஒரு எண்ணம் உள்ளே செல்லும் வழி திறந்திருக்கும் சிலர், இக்கடிதத்தால் பயன்பெறக்கூடும் என்பதனால் இதை எழுதுகிறேன்.

இங்கும் ஒன்றை திரும்பச் சொல்கிறேன். இவை வெறும் நூலறிவால் சொல்லபப்டுவனவல்ல. குருமுகத்திலிருந்து பெற்ற அறிதலும் முற்றிலும் அகவயமான சுய அறிதலும் கலந்து உருவானவை. இவற்றை நான் அறிந்த மெய்களாக முன்வைக்கிறேன். இவற்றைச் சொல்லும் தகுதி எனக்கு உண்டு. ஆகவே இவை விவாதத்துக்கானவை அல்ல. உள்வாங்க, ஏற்க முடியாதவர்கள் நிராகரிக்கலாம்.

பதஞ்சலி யோகத்தை நான் விரிவாகவே கற்றிருக்கிறேன். ஓர் நவீன உரை எழுதும் எண்ணமும் உண்டு. சில அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற நூலில் யோகமரபைப்பற்றி ஓரளவு விரிவாக அதன் பின்னணியுடன் எழுதியிருக்கிறேன்.

‘பதஞ்சலி யோக சூத்திரம்’ என்பது எந்த மந்திர வித்தையையும் முன்வைப்பது அல்ல. அது கடவுள்நம்பிக்கை சார்ந்ததுகூட அல்ல. அதன் தூய நிலையில் யோகம் என்பது சாங்கியத்தின் துணைத்தரிசனம்.

சாங்கியம், யோகம் இரண்டுமே பொருள்முதல்வாத அடிப்படை கொண்ட தரிசனங்களாகவே நெடுங்காலம் இருந்தன. அவை இந்த பருவுலகுக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியையும் முன்வைப்பவை அல்ல. பிரபஞ்சத்திற்குள் வைத்தே பிரபஞ்சத்தை விளக்க முயலும் தரிசனங்கள் அவை.

அவற்றை பிற்காலத்தில் இறைநம்பிக்கையை உள்ளே இணைத்து சற்றே மாற்றியமைத்தார்கள். இறைநம்பிக்கை உள்ளே செலுத்தப்பட்ட சாங்கியம் ஸேஸ்வர சாங்கியம் [ ஸ + ஈஸ்வர] எனப்பட்டது. யோகமும் அதற்கேற்ப மாற்றப்பட்டது. அப்போதுகூட யோகத்தைப் புரிவதற்கான  அக ஒழுங்குகளில் ஒன்றாக இறைநம்பிக்கை இருக்கவேண்டும் என்று கூறப்பட்டதே ஒழிய யோகம் மூலம் அடையப்படும் இறுதிநிலை இறைவனைக் காண்பது அல்லது அடைவது அல்லது இறைநிலையை அடைவது என்று சொல்லப்படவில்லை.

பதஞ்சலி யோகம் இன்றைய புறவயமான நிரூபண அறிவியலுக்குக்கூட உகந்த திட்டவட்டமான ஒரு செயல்முறை அறிவியல். அது ஒன்றும் மர்மமான விளைவுகளை உருவாக்கும் ஒரு ரகசிய மாந்திரீகச் சடங்கு அல்ல. நமது மரபுகளைப்பற்றி நமக்கிருக்கும் பரிபூரணமான அறியாமையில் இருந்தே இத்தகைய பிரமைகள் உருவாகின்றன. அவற்றை ஆன்மீக வணிகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.

மிகவிரிவான இந்த விஷயத்தை எப்படி சுருக்கமாக விளக்க முடியும் என்று பார்க்கிறேன். சாங்கிய தரிசனம் இந்தப்பிரபஞ்சம் உருவாகி இயங்குவதை இவ்வாறு விளக்குகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பருப்பொருட்களை அது பிரகிருதி அதாவது இயற்கை என்கிறது. இந்த இயற்கையானது இன்று மாறுபட்ட குணங்களும் செயல்களும் கொண்ட கோடானுகோடி பொருட்களாக பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இது ஏதோ ஒரு தொடக்கப்புள்ளியில் ஒன்றாக, ஒரே பருப்பொருளாக, இருந்தது என்று சாங்கியம் நினைக்கிறது. அதை சாங்கியம் மூலப்பிருகிருதி [ஆதி இயற்கை] என்கிறது.

அந்த ஆதிஇயற்கையில் மூன்று குணங்கள் இருந்தன. அவை  தமோ குணம்,  ரஜோகுணம், சத்வகுணம். [செயலற்ற நிலை, செயலூக்க நிலை, சமநிலை] . ஆதி இயற்கையில் அந்தமூன்று குணங்களும் முழுமையான சமநிலையில் இருந்தன. ஆகவே அது முற்றிலும் செயலற்று இருந்தது. அதில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஆகவே அப்போது காலமும் இல்லை

அந்தச் சமநிலை ஏதோ ஒரு புள்ளியில் கலைந்தது. அந்த சமநிலையை மீட்டு எடுக்க ஆதிஇயற்கை முயன்றது. அதன் விளைவாக ஆதி இயற்கை பலகோடி பொருட்களாக மாறி ஒன்றுடன் ஒன்று முயங்கியும் பிரிந்தும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக காலம் உருவானது. இக்கணம் வரை அந்தச் செயல்பாடு நீள்கிறது

அதுவே இந்த பிரபஞ்ச நிகழ்வாகும். பால்வழிகளும் நட்சத்திரங்களும் கோளங்களும் பிறந்தது முதல் புழுவை எறும்பு இழுத்துச் செல்வதுவரை அந்த பிரபஞ்ச நிகழ்வின் பகுதிகளே. இதுவே சாங்கியம் பிரபஞ்சத்தை விளக்கும் விதம்.

ஆதி இயற்கையின் குணங்களை யாராவது அறிந்தால்தானே அவை இருக்கும்? அப்படி அறியக்கூடிய அந்த ஆதி பிரக்ஞையை ஆதிஇயற்கை போலவே ஓர் ஆதிமனம் என்று உருவகித்தார்கள். அதை ‘புருஷன்’ என்று அழைத்தார்கள். ஆதி இயற்கை இன்றுள்ள பிரபஞ்சமாக ஆனபோது அதற்கிணையாக புருஷனும் பிரிந்து இன்றுள்ள தனிமனங்களாக ஆனான்.

இந்த தனிமனம் தனிப்பொருட்களாகச் செயல்படும் பிரபஞ்சதைப் பார்க்கும்போது உருவாவதே நாம் அறியும் இந்த சிக்கலான பிரபஞ்சம். அதாவது சிதறுண்ட ஆதிமனத்தின் ஒரு துளி சிதறுண்ட ஆதி இயற்கையின் சித்திரத்தை பார்க்கிறது. அவ்வாறுதான் உலகக்காட்சி உருவாகிறது.

புருஷன் தன்னுடைய சிதறுண்ட தன்மையை ரத்து செய்து தன்னை தன் முதல் வடிவுக்கு திரட்டிக்கொண்டால் அவனால் ஆதிஇயற்கையை அதன் தூய நிலையில் பார்க்க முடியும். அந்நிலையில் சிதறுண்ட நிலையில் பார்க்கும்போது அவன் அறியும் சிற்றுண்டபிரபஞ்சம் மறைகிறது. அதன் விளைவான அறியாமையில் இருந்தும் துயர்களில் இருந்தும்  அவன் விடுதலை அடைகிறான்.  பதஞ்சலி யோகம் சொல்லும் முக்தி என்பது இதுவேயாகும்.

புரிந்துகொள்ள சற்றே கடினம்தான். ஆனால் தயவுசெய்து இதை சற்று கவனித்துப் படியுங்கள். உங்கள் வாழ்க்கையையே நீங்கள் ஒப்புவிக்கும் ஒரு விஷயத்தைப்பற்றி புரிந்துகொள்ள சற்றேனும் சிரமம் எடுத்துக்கொள்ளுங்கள். பதஞ்சலி யோகம் சொல்லும் முக்தி என்பது  உலகியலை மீறிய ஆற்றலை அடைவது அல்ல. அதிமானுடர்களாக ஆவது அல்ல. அது முழுமையான பார்வையை அடைவது மட்டுமே.

இன்னமும் எளிமையாகச் சொல்கிறேன். நாம் உலகை எப்படி பார்க்கிறோம்? நான் என்ற உணர்வுடன் பார்க்கிறோம்.  ஆனால் நாம் இந்தப்பூமியில் உள்ள கோடானுகோடி மனிதர்களில் ஒரு சிறு துளி. கோடானுகோடி உயிர்களில் ஒரு சிறு துளி. நமக்கென ஒரு தனி மனதை நாமே உருவாக்கிக்கோண்டு நாம் பார்ப்பதனால்தான் நமக்கு இந்த உலகம் இவவறு தெரிகிறது

இதை நான் இந்த மானுடமேதான் என்ற உணர்வுடன் பார்க்கலாம். இந்த பூமியில் உள்ள அனைத்து உயிர்க்குலமும் நான் என்ற உணர்வுடன் பார்க்கலாம். இவ்வாறு விரியும் பார்வையே முழுமையானதாக இருக்க முடியும். 

யோகமரபின்படி புறத்தே நாம் காணும் உலகமானது அகத்தில் இருக்கும் பார்வையாளனும் சேர்ந்து உருவாக்குவதாகும். பார்வையின் அளவும் தன்மையுமே புறவுலகை உருவாக்கி அளிக்கின்றன. ஆகவே பார்வை மாறும்போது புறவுலகமும் மாறிவிடுகிறது. இதற்கு விக்ஷேபம் என்று பெயர்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். இரண்டாள் உயரமான எறும்புப் புற்றுகளை நாம் பொட்டல்களில் காணலாம். அவற்றில் பல பலநூறு வருடங்களாக உருவாகி வந்தவை. அவற்றை உருவாக்கிய எறும்புகளில் எந்த எறும்பும் அந்த புற்றை மூழுமையாகப் பார்த்துவிட முடியாது. அவற்றில் ஓர் எறும்பு அதன் தனித்த பிரக்ஞையை இழந்து ஒட்டுமொத்த எறும்புகளின் பார்வையையும் தானே பெற்றது என்றால் அந்த எறும்பு அந்தப்புற்றை முழுமையாகப் பார்த்துவிட முடியும் அல்லவா? அதேபோலத்தான்.

ஒருமனிதன் காலந்தோறும் வாழ்ந்துவந்த ஒட்டுமொத்த மானுடத்தின் பார்வையை தான் அடைவதென்பது நீங்கள் சொல்லும் எந்த மாந்த்ரீகத்தை விடவும் மகத்தானது என்பதை உணருங்கள். செல்பேசி இல்லாமல் தொலைபேசுவதோ தொலைக்காட்சி இல்லாமல் தூரத்துக் காட்சிகளைக் காண்பதோ அல்ல அது. அது வேறு.

அப்படி முழுமையான பார்வையை அடைந்த யோகியைப்பற்றி எத்தனையோ வர்ணனைகளை நம்முடைய மரபில் காணமுடிகிறது. கடலை உணர்ந்துகொண்ட மீன் போன்றவன் அவன். கடலை அறிந்த உப்புப்பொம்மை போன்றவன் அவன்.

அந்த நிலையை அடைவதற்கான பயிற்சிகளை பதஞ்சலி யோகசூத்திரம் வகுத்துரைக்கிறது. அதன் முதல் விதியாக மனச்செயல்தடுத்தலை முன்வைக்கிறது. நான் என்ற உணர்வே நம்முள் ஒவ்வொரு கணமும் ஒரு அறுபடாத சொற்பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவே சித்தவிருத்தி. அதை தடுத்தல் என்பது நான் என்ற பிரக்ஞையை வெல்வதன் முதல்படி.

அதிலிருந்து பற்பல பயிற்சிகளின்மூலம் முழுமையான புருஷ நிலையை நம் அகம் அடைவதே பதஞ்சலி யோகம் சொல்லும் யோகம்.பதஞ்சலி யோகம் பிற்காலத்தில் சில திருத்தங்களை அடைந்தாலும்கூட இதுவே அதன் சாரம். 

அது எளிய வழியல்ல. பல்வேறு படிநிலைகள் பல்வேறு நுட்பமான சிக்கல்கள் அதில் உள்ளன. ஆகவேதான் பதஞ்சலி யோகம் அத்தனை விரிவாக அதைப்பற்றி விவாதிக்கிறது. அறிதலில் நிகழும் நூற்றுக்கணக்கான பிழைகளை தடுமாற்றங்களை பதஞ்சலி யோகம் விளக்குவதை நீங்கள் காணலாம்.

இந்த யோகத்திற்கும் யோகாசனத்திற்கும் நேரடியான உறவு இல்லை. யோகாசனம் யோகத்தை நிகழ்த்துவதற்காக உடலை தயாரித்துக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டது. யோகம் என்ற பொதுச்சொல்லில் இன்று இது சுட்டப்படுகிறது என்றாலும் இவை வேறு வேறு பின்னணி கொண்டவை. யோகாசனங்கள் பெரும்பாலும் பிற்காலத்தைய தாந்த்ரீக மரபுகளில் இருந்து உருவம் கொண்டவை. 

பதஞ்சலி யோகம் நோய்களை குணப்படுத்துவது அல்ல. லௌகீகமான எந்த நலன்களையும் அளிப்பது அல்ல. அந்த யோகம் மூலம் உடல்சார்ந்த எந்த ஆற்றலையும் அடைய முடியாது. ஒருவரின் மனம் விரிந்து விடுதலை அடையும்தோறும் அவரது உடலில் மனம் சார்ந்து உருவாகும் சிக்கல்கள் இல்லாமலாகின்றன. ரத்தஅழுத்தம் குறையலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் வரலாம். அவர் ஆனந்தமே இயல்பாகக் கொண்ட மனிதராக ஆகும்போது அவர் உடலும் அவ்வண்ணம் ஆகலாம். அது வேறு விஷயம். மற்றபடி உடலின் நோய்களை யோகம் குணப்படுத்தாது.

யோகம் மூலம் நோய் குணமாகும், உடல் ஆற்றல் பெறும், பணம் கிடைக்கும், எதிரிகள் அழிவார்கள் என்றெல்லாம் சொல்வதன் மூலம் இந்த அற்புதமான அகவிஞ்ஞானத்தைச் சிறுமை செய்கிறீர்கள். அறிவின் ஒரு பெரும் வாசலை லௌகீக ஆசை என்ற பாறாங்கல்லை உருட்டி வைத்து மூடுகிறீர்கள்.

பதஞ்சலி யோகம் துயரம் என்று சொல்வது சிதறுண்ட பார்வையின் விளைவான அறியாமையையே. அதை நீக்குவதே யோகத்தின் பயன். அதை பதஞ்சலி அவரது நூலில் திட்டவட்டமாகவே சொல்கிறார். அந்த துக்கத்தை வென்றவரே யோகி. அவர் உலகியலின் அல்லல்களுக்கு அப்பாற்பட்டவர். இன்பதுன்பங்களில் சமநிலை இழக்காதவர். ஏனென்றால் அவர் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறார். அவர் தன்னை பிரபஞ்சமாக  அறிபவர். அறிதல் அறிபடுபொருள் அறிபவன் என்ற மூன்று நிலையும் ஒன்றாக ஆன நிலையில் இருக்கக்கூடியவர்.

அவர் நோய்களை குணப்படுத்த வரமாட்டார். நோய் என்பதும், துயரமென்பதும் அழகு போல,  ஆனந்தம் போல, பிரபஞ்சத்தின் இயல்புகள் என அவர் அறிந்திருப்பார். இரண்டுக்கும் நடுவே அவருக்கு வேறுபாடு இருக்காது. இங்கே இருந்துகொண்டு எதை அவர் ஆற்றினாலும் அவற்றைக் கடந்த நிலை ஒன்று அவரது அகத்தில் இருக்கும்.

இதோ நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது வெளியே ·பாதர் பெர்க்மான்ஸின் பிரச்சார வேன் கத்திக்கொண்டிருக்கிறது. ‘உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். தீராத வியாதிகள் தீரும். பேய்க்கட்டுகள் அவிழும்…’ இதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன வேறுபாடு? இதற்கு எதற்கு பதஞ்சலியும் யோகமும்? அவர்களுக்கும்தான் நோய்கள் குணமாகின்றன, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்.  அதை நீங்களும் சொல்லுங்கள். யோகத்தை விட்டுவிடுங்கள், பிழைத்துப்போகட்டும்.

எல்லா மனிதக்கடவுள்களும் பூசகர்களும் நோய்களைக் குணப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. எல்லாருக்கும் சாட்சிகள் உள்ளனர். தானாக குணமான நோய்கள் மட்டுமே கணக்கில் வைக்கப்படுகின்றன. குணமாகாத நோய்கள் விடப்படுகின்றன. அவை உறுதியான நம்பிக்கைகளாக ஆகின்றன.

இன்னொரு பக்கமும் உண்டு, பலவகையான அகவயப்பட்ட நோய்களுக்கு உறுதியான நம்பிக்கையே மருந்தாகக் கூடும். அது பர்க்மான்ஸ் ஆக இருக்கலாம் நித்யானந்தராகவும் இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை ஏசுமேலும் சிவன் மேலும் வைத்தால் இன்னமும் பலனுண்டு என்றே நான் சொல்வேன்.

பதஞ்சலி யோக சூத்திரம் யோகத்தின் படிப்படியான பரிணாமத்தை  நுட்பமாக விவரிக்கிறது. அவையெல்லாம் பல்லாண்டுக்கால சோதனைகள் மூலம் யோகிகள் கண்டறிந்தவை. எதையுமே செய்யாமல் ஆறேமாதத்தில் நீங்கள் அத்தனை படிகளையும் கடந்து சித்திகளை அடைந்து விட்டிருக்கிறீர்கள் என்று எழுதுகிறீர்கள். இந்தக்கூற்றில் உள்ள மிதமிஞ்சிய அகங்காரத்தை அல்லது பரிபூரண அறியாமையை கொஞ்சமாவது உணர்கிறீர்களா?

யோகம் என்பது ஒருவர் செய்து பலன் அடைந்து அந்தப் பலனை கட்டணம் வைத்து பிறருக்கு அளிக்கும் ஒரு செயல்பாடு என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?  பதஞ்சலியின் யோகம் என்பது ஒவ்வொருவரும் தானே செய்யவேண்டிய ஒன்று. தன் தடைகளை தானே தாண்ட வேண்டும். அந்தப் பயணத்தில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே குரு இருக்கிறார்.

கடைசியாக, நித்யானந்தரின் பிரம்மசரியம் பற்றி. பிரம்மசரியமோ துறவோ யோகத்திற்கான நிபந்தனைகள் அல்ல. ஆனால் துறவு பூண்டவன் மேலும் சுதந்திரமானவன். எதற்காக சேவையை வாழ்க்கையாக தேர்வுசெய்துகொண்ட ஆரம்பகால இடதுசாரி தலைவர்கள், கிறித்தவ பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ளவில்லையோ அதே காரணம்தான்.

யோகத்திற்கு தடையாக அமையக்கூடியவை காமம், குரோதம், மோகம் என்ற அடிப்படை உணர்ச்சிகள். உலகியலில் ஈடுபடும்தோறும் அவை ஒன்றில் இருந்து ஒன்றாக தொற்றிக்கொண்டு பெருகுகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாக துறப்பவன் யோகத்தின் வழிகளில் அதிக தடையில்லாமல் செல்லமுடியும் அவ்வளவே. மகாயோகிகளான இல்லறத்தார் பலர் உண்டு.

நித்யானந்தரின் சிக்கல் அவர் காமத்தில் ஈடுபட்டார் என்பதல்ல. அவர் வேடதாரி என்பதே. அவர் பிறரை ஏமாற்றினார் என்பதே. தன்னை யோகி என்றும் ஞானி என்றும் முக்தர் என்றும் பொய் சொல்லி பெரும் பணத்தை ஈட்டினார் என்பதே. அதை மழுப்ப நீங்கள் பிரம்மசரியம் பற்றியெல்லாம் பேசவேண்டியதில்லை.

ஒருவர் தன்னை ஏமாற்றுக்காரராக வைத்துக்கொண்டு, போலிவேடம் அணிந்துகொண்டு, என்ன யோக சாதனையைச் செய்துவிட முடியும்? யோக சாதனை என்பது முழுக்கமுழுக்க  அகம் சார்ந்தது. பார்வையின் முழுமையை நோக்கிச் செல்வது. அதற்கு முதல்தேவையே பரிபூர்ணமான அர்ப்பணிப்பு. உக்கிரமான தேடல்.

நீங்கள் யோகம் என்றால் ஏதோ ஹடயோக வித்தை என்று நம்பிக்கொண்டிருப்பதனால்தான் நேர்மையற்ற ஒருவர்கூட அதைச் செய்து திறன்களை அடைந்துவிட முடியும், பிறருக்கு அதை அளிக்கமுடியும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் எண்ணங்கள் முழுமையும் பிழையானவை. சொல்லப்போனால் நோய்க்கூறான அறியாமையின் விளைவுகள்.

உங்கள் மன அமைப்பை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு யோகம் தேவையில்லை. உங்களுக்கு தேவை உங்கள் லௌகீக விருப்புகளை முன்வைக்க ஒரு இடம். நீங்கள் நாடுவது உங்களை ஒப்படைக்க ஒரு சன்னிதி, வணங்க ஒரு காலடி மட்டுமே. அதற்கு எந்த மனிதர்களும் தகுதியற்றவர்களே. நேரடியான இறைபக்தியில் உங்கள் மனம் செல்லுமென்றால் அதுவே உங்களுக்குப் போதுமானதாகும்.  

யோகத்தை நீங்கள் கற்கவேண்டுமென்றால் நீங்கள் அறிந்து வைத்திருப்பவற்றில் இருந்து உங்கள் மனம் விடுதலை அடைய வேண்டும். ஆயுர்வேதத்தில் அருகம்புல் சாறு வழியாக உடலில் உள்ள விஷத்தை இறக்கிய பின்னர் மருத்துவத்தை ஆரம்பிப்பது போல உங்களுக்குள் உள்ள எளிமையான மாந்திரீக நம்பிக்கைகளை முழுக்க களைந்தபின்னர்தான் ஆரம்பிக்க முடியும்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6678

8 comments

Skip to comment form

 1. pgomat

  அன்புள்ள ஜெமோ,
  உங்கள் கருத்தில் நான் பெரிதும் ஒன்றுபடுகிறேன் – இது ஒரு மேஜிக் பில் கிடையாது. வேடதாரி கருத்திலும் ஒன்றுபடுகிறேன். அனால் நமது இந்திய மரபில் டார்க் கல்ட் அதற்கும் இடம் உண்டு தானே ?

  அஹோரிகள் காமத்தையும் தன் வழிக்கு உபயோக படுத்துவர் – நான் சொல்வது சரியா. நான் நித்யா’வை சொல்ல வில்லை. நான் தேடி பார்த்த வரையில் நீங்கள் அஹோரிகள் பற்றி அதிகம் இந்த தலத்தில் சொல்லவில்லை. நம்ம இந்திய மரபில் இவர்களுக்கும் இடம் உண்டு தானே ?

  நன்றி,

 2. seetharam

  அன்புள்ள ஜெயமோகன் சார்,

  மன தெளுவை ஏற்படுத்தும் விதமாக நிதானமாக ஸ்ரத்தையோடு பதிலளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
  இந்த பிரச்சினைக்கெல்லாம் மூல காரணம் எதாவது ஒரு அனுபவத்தினை அடையவேண்டும் என்ற இச்சை தான் என்று தோன்றுகிறது. கீழே தந்துள்ள சுவாமி தயானந்தரின் (சின்மயானந்தரின் சிஷ்யன்) மறுபடி ஒரு மன தெளிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

  AC: Why is it that you feel the study of the scriptures, rather than spiritual experience, is the most direct means to Self-realization?

  SD: Self-realization, as I said, is the discovery that “the Self is the whole”—that you are the Lord; in fact, you are God, the cause of everything.

  Now nobody lacks the experience of advaita, of that which is nondual—there’s always advaita. But any experience is only as good as one’s ability to interpret it. A doctor examining you interprets your condition in one way, a layperson in another. Therefore, you need interpretation, and your knowledge is only as valid as the means of knowledge you are using for that purpose.

  As the small self, we have no means of knowledge for the direct understanding of Self-realization, and therefore Vedanta is the means of knowledge that has to be employed for that purpose. No other means of knowledge will work because, for this kind of knowledge, our powers of perception and inference alone are not sufficient.

  So I find that by itself there is nothing more dumb than experience in this world. In fact, it is experience that has destroyed us.

  AC: It has been my experience as a teacher that for most human beings, generally speaking, simply hearing the teaching is not enough. Usually they do need to have some kind of experience that makes the meaning of the words obvious in a very direct, experiential way. And then the person says, “Oh, my goodness, now I understand! I’ve heard this for so many years, but now I recognize the truth of it.”

  SD: Yes, but even that experience is useless without the correct interpretation. Suppose your sense of being a separate individual falls away for a moment or ten minutes or even an hour, and then suddenly that apparent duality seems to come back again. Does that mean the one true Self gets displaced? Of course not! Then why should enlightenment require an experience? Enlightenment doesn’t depend upon experiences; it depends upon my shedding my error and ignorance—that is what it depends upon, and nothing else.

  People say that advaita is eternal, that it is timeless, and at the same time they say that they are going through an experience of it at a particular time and under certain conditions. That’s not traditional! But that is what we hear everywhere. The tradition says: “What you see right now is advaita.”

  Suppose a fellow has an experience and then he comes out and says, “I was one hour eternal.” No time means timeless, and timeless means eternity. Whether it is one hour eternal or one moment eternal, it is always the same. So confidence in truth cannot depend upon a state of experience. Confidence in truth is in your clarity of what is. Otherwise what will happen is, “I was non dual Brahman for one hour and then I came back and now it’s gone.” Then every thought becomes a nightmare because when I am not in nirvikalpa samadhi [ecstatic absorption in nondual consciousness], then I cannot even relate to the world; I have to be stoned forever, you know? Whereas enlightenment is just knowing what is. That is called sahaja, which means “natural”; it means just seeing clearly. If people insist on having a particular experience, that simply means that they have not understood the teaching. Even right now, for example, we are interpreting our experiences. For example, you are experiencing me right now.

 3. pgomat

  நான் ஓஷோ படித்ததில் இருந்து என்னால் எதையும் தவறாக தீர்மானமாக பார்க்க முடியவில்லை. நீங்கள் என்னை திட்டினாலும், அதன் நியாயத்தை பார்க்கவே மனது விரும்புகிறது. இது நீர்த்து போதலா என்று தெரியவில்லை. எனக்கு தெரியாது என்பதே எனது முக்கால் வாசி பதிலாக இருகின்றது. இத்தனைக்கும் அவர் புத்தகத்தை படித்தே எனக்கு இந்த மாற்றம் ( தமிழ் ஓஷோ புத்தகங்கள் நான் படித்த வரை படு சுமார், ஆங்கிலத்தில் நல்ல தரம் ) அவர் சொன்ன யோகத்தை நான் செய்தது இல்லை. தர்க்கத்தில் ஒன்றும் இல்லை இதயம் அதை விட மேன்மையானது என்று தர்க்கத்தை வைத்தே வித்தை காட்டியவர்.

  இந்த ‘எதையும் நல்லதாக’ பார்க்கும் மனம் தான் நம் இந்திய மரபா ? இதனால் தனிமனிதன் நன்றாக இருக்கலாம் (மன அமைதி). ஆனால் சமூகத்தை சோம்பேறி ஆக்குகின்றது. எனது அனுமானம் சரியா .

 4. seetharam

  உண்மையான ஞானியை யாருமே கண்டுக்கறதில்லை. for example , நிசர்கதத மகாராஜ், பம்பாயில் பீடி சுருட்டிகொண்டிருதவர்.
  மறைந்த சுவாமி ரங்கநாதனந்தா (ராமகிருஷ்ண மடம்) , சுவாமி சிதானந்தா (ரிஷிகேஷ்) , சுவாமி சட்சிதானந்த (Anandashram , kanjankaad ) இவர்களை எல்லாம் அதிகம் பேருக்கு தெரியவே தெரியாது. கேரளாவில் உள்ள பழுத்த பழமான பேராசரியர் பாலகிருஷ்ணன் நாயரை கேரளாவில் எவ்வளவு பேருக்கு தெரியும் ? உலகத்தின் கதியே இப்படிதான் போலும்.

  குரு நித்ய சைதன்ய யதி ஓரிடத்தில் எழுதியிருக்கிறார், ஆஸ்ரமங்களில் அதிகம் காண்பது மனோரோகிகளைதான் என்று.

 5. muthu prakash

  அன்பிற்குரிய ஜெ!
  காலை வணக்கங்கள்…இணைய பக்கங்கள் எங்கெங்கும் தோழர் ரஞ்சிதா அவர்கள் குறித்து அனுதாப வரிகள் கொட்டிக் கிடக்கின்றன…காலத்தின் கல் ரஞ்சிதா அவர்களின் மீது விழுந்ததை, வீசப்பட்டதை குறித்து நீலி கண்ணீர் வடிப்பவர்கள், தன்மீது தானே கல் எறியும் துணிச்சலற்றவர்கள்,விரும்பாதவர்கள் என்பது என் தாழ்மையான அபிப்ராயம் …உங்களில் தவறு செய்யாதவர் முதலில் கல்லெறியுங்கள் என்று இயேசு நாதர் அவர்கள் கூறியது,யாரும் கல்லெறிய கூடாது என்பதற்காக மட்டுமல்ல,நாம் அனைவரும் யாரும் நம் மீது கல்லெறிந்து காயப் படுத்தி விட முடியாத படிக்கு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்குமே என்பதை நாம் வசதியாக மறந்துவிடுகிறோம் …போலி குரு பிடிபட்டது சரி,போலி சீடர் அம்பலமானது
  தவறு என்று யாராவது கூறுவார்கள் என்றால்,அக்குரல் தனக்குள் ஒளிந்துள்ள நித்தியானந்த சுவாமிகளின் ரகசிய குரல் என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்வது நம் ஆன்மீகப் பயணத்திற்கு
  உதவிகரமாக இருக்கக் கூடும் …..
  வெற்றிடதிலிருந்தே அனைத்தும் பிறக்கின்றது …எதுவும் பிறக்கவும் முடியும்.

 6. ramji_yahoo

  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு

  கொதண்டராமனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்களும் மழுப்ப பார்க்கிறீர்கள். கொடண்டராமன் கத்திரிக்காய் நல்லதா என்கிறார், நீங்கள் புடலங்காய், வெண்டைக்காய், தக்காளி எப்படி விளைந்தது என்று பதில் சொல்கிறீர்கள்.

  நித்தியை பாராட்டி எழுதினால் ஏதும் பின் விளைவு வந்து விடுமோ என்ற பயம் உங்களின் எழுத்துக்களில் புரிகிறது.

  கோதண்டராமன் சொல்வதை தான் நானும் சொல்கிறேன்.
  நித்தி கற்று கொடுத்த யோகா (உடற்பயிற்சி சம்பந்தமானது, இதில் மந்திரம், மாந்திரிகம், உபநிஷத்துகள், ஸ்லோகங்கள் இல்லை), மூச்சு விடும் பயிற்சி சில மனிதர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க அல்லது தற்காலிகமாக மறக்க செய்கிறது. இவ்வாறாக யோகா, மூச்சு விடல், தியான, எண்ணம் ஆராய்தல் பயிற்சி அளிக்கும் ஒருவர் பிரம்மசாரியாக் இருந்தால் என்ன, காம வெறியனாக இருந்தால் என்ன.

  மூச்சு பயிற்சி, எண்ணம் ஆராய்தல் போன்ற பயிற்சி அளிக்கும் ஒரு நபர், பெண்களுடன் காமிரா முன்பு உடல் உறவு கொள்ளுவது தவறா, சரியா.

 7. Irsamos

  Dear J,
  This கட்டுரை somehow reminds me of ‘The Grand Inquisitor’ from The Brothers Karamazov.
  Regards,
  Irsamov.

 8. kthillairaj

  ஐயோ சாமி ஜெயமோகன் சொன்ன கருத்தை விட்டுவிட்டீர்களே

Comments have been disabled.