காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

மேற்கண்ட தலைப்பில் ‘கீற்று’ தளத்தில் எழுத்தாளர்: அருந்ததி ராய் அவர்கள் “பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் India’s shame(இந்தியாவின் இழிவு) என்ற தலைப்பில் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழ் வடிவை படித்தேன்.இந்தியாவின் வர்ணாசிரம அமைப்பையும்,சாதிகளையும் குழப்பி எழுதி இருக்கிறார்.இதோடு போதாது என்று காந்திஜி அவர்களை பற்றியும் இந்த விசயத்தில் குறை கூறியிருக்கிறார்.

சாதி அமைப்பைக் காட்டிலும் தரந்தாழ்ந்த ஒரு சமுதாய அமைப்பு இருக்க முடியாது என்றார் அம்பேத்கர். ‘உதவும் செயல்களில் ஈடுபட விடாது மக்களை மந்தப்படுத்தும், முடக்கிப் போடும், ஊனப்படுத்தும் அமைப்பிது.’ இதனை உலகின் மிகப் புகழ்வாய்ந்த இந்தியரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மறுதலித்தார். சாதி இந்தியச் சமுதாயத்தின் மாண்பைக் குறித்திடுவதாக அவர் நம்பினார். 1921இல் அவரது நவஜீவன் என்னும் குசராத்தி ஏட்டில் எழுதினார்:

‘இந்துச் சமுதாயத்தால் நிமிர்ந்து நிற்க முடிகிறது என்றால், அது சாதி அமைப்பின் மீது நிறுவப்பட்டிருப்பதே காரணம்… சாதி அமைப்பை அழித்து மேற்கத்திய ஐரோப்பியச் சமுதாய அமைப்பை ஏற்றுக் கொள்வதென்றால், சாதி அமைப்பின் ஆன்மாவாகத் திகழும் குலத் தொழில் கொள்கையைக் கைவிடுவதாகத்தான் பொருள். குலக் கொள்கை ஒரு நிலைபேற்றுக் கொள்கை ஆகும். இதை மாற்றுவது சீர்குலைவை உண்டாக்கும். நான் பிராமணரை வாழ்நாள் முழுதும் பிராமணர் என்றே அழைக்காது இருப்பேனேயானால் அவரால் எனக்கு ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும், சூத்திரர் பிராமணராகவும் மாறிக் கொண்டே இருந்தால் குழப்பமே மிஞ்சும்.’

அருந்ததி ராய்யின் ஆதங்கமே மாயாவதி போன்ற தலித் இனத்தை சேர்ந்தவர்களின் ஊழல்கள் தான் பிரதான படுத்தப்படுகிறது என்றும் இந்து மதம் மட்டுமே இந்தியாவின் இழிவுக்கு காரணம் என்றும்,தலித்துக்களின் அவல நிலைக்கு பார்ப்பன,பனியாவின் மேலாதிக்கமே இன்றும் காரணம் என்பதாக அக்கட்டுரை விரிகிறது.

இது தங்களை பொறுத்தவரை எவ்வளவு தூரம் உண்மை?.முடிந்தால் சற்று விளக்கவும்.

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி,

இந்தியாவை இணைத்திருக்கும் சக்தி என்பது காந்தி என்பதை பிற எவர் அறிகிறார்களோ இல்லையோ இந்தியாவை சிதைக்க எண்ணும் சக்திகளுக்குத் தெரியும். அவற்றின் கைக்கோல்களாகச் செயல்படும் பல்வேறு சர்வதேச ’சேவை’ அமைப்புக்கள் ‘தன்னார்வ’ அமைப்புக்களின் குரல் அருந்ததி ராய். இந்தியா உடைந்தழியவேண்டும் என்ற எண்ணத்துக்கு அப்பால் எந்த வித இலட்சியத்தாலும் அவர் இயக்கப்படவில்லை.

அந்தப் பணிக்காகவே அவரை அந்த சர்வதேச நிறுவனங்கள் உலகமெங்கும் கொண்டுசெல்கின்றன, சர்வதேச விருதுகளை அளித்து கௌரவிக்கின்றன, மற்றபடி அவர் எழுதிய அசட்டுநாவலுக்காகவோ அதைவிட அசட்டுக் கட்டுரைகளுக்காகவோ அல்ல என்று அருந்ததி நன்றாகவே அறிவார். அருந்ததி ராய் உருவாக்க்கும் இந்த வெறுப்புக்குரலே அவரது இருப்பின் ஆதாரம். முன்பு இதை நான் வலுவாகச் சொன்னபோது எதிர்ப்புகள் பல வந்தன. இன்று சர்வதேச கவனம்பெற்ற சிந்தனையாளர்களே அருந்ததியை அப்படித்தான் மதிப்பிடுகிறார்கள்.

காந்திக்கு சாதியைப்பற்றி இருந்த சிந்தனைகள் தொடர்ச்சியாக பரிணாமம் அடைந்தவை. அவர் இந்தியாவின் ஆங்கிலக்கல்வி பெற்ற அன்றைய உயர்குடியினரைப்போல தன் பாரம்பரியத்தின் வேர்களை உடனடியாக முறித்துக்கொண்டவர் அல்ல. எளியமக்களிடமிருந்து துண்டித்துக்கொண்டவரும் அல்ல. ஆகவே சாதி முறை போன்றவற்றை இந்தியமரபு ஏன் உருவாக்கி நிலைநிறுத்தியது, ஏன் எளிய மக்கள் அதை விடாப்பிடியாக தக்கவைத்திருக்கிறார்கள் என்று சிந்தித்தார்.அதில் சாரமான ஒன்று இருக்கும் என்றே எண்ணினார்.

காந்தி நடைமுறைச் சிந்தனையாளர். ஒன்றின் நடைமுறை மதிப்பை சோதித்து அறிந்த பின்னர் மட்டுமே ஏற்கக்கூடியவர். வெள்ளையன் சொன்னான் என்பதனாலோ அல்லது முற்போக்காகத் தோற்றமளிக்கிறது என்பதனாலோ ஏற்றுக்கொள்ளக்கூடியவர் அல்ல. அவர் பாவனையாளரும் அல்ல. ஏற்றுக்கொண்ட ஒன்றை வாழ்நாள் முழுக்க முழுமையாகக் கடைப்பிடிக்கக்கூடியவர். ஆகவே இந்தியாவின் பிற சிந்தனையாளர்கள் பாய்ந்துசென்று சூடிக்கொண்ட முற்போக்குமுகங்களை அவர் அணியவில்லை. அவர் பலகோணங்களில் ஆராய்ந்தார். தொடர்ந்து விவாதித்தார்

ஒரு சமூக அமைப்பு முழுமையாகவே அநீதியால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படாது என காந்தி நினைத்தார். நம் முன்னோர்களின் எண்ணங்கள், இந்தியாவின் நீண்டகால வரலாறு முழுமையாகவே அநீதியால் ஆனதாக இருக்க முடியாது என கருதினார். சாதிமுறைக்கு ஒரு சமூக – பொருளியல் தேவை இருந்திருக்கும் அந்தத் தேவை நீடிப்பதனால்தான் சாதிமுறையால் பாதிக்கப்படுபவர்கள்கூட சாதியை விடமுடியவில்லை என நினைத்தார்

ஆகவே ஆரம்பத்தில் சாதிமுறையின் உழைப்புப் பாகுபாடு தேவை ஆனால் சாதிரீரீதியான ஏற்றத்தாழ்வும் தீண்டாமையும் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்தார். 1923 வரை இந்த எண்ணங்களே அவரிடம் இருந்தன.

தீண்டாமை, சாதிரீதியான ஏற்றத்தாழ்வு ஆகியவை தேவையில்லை என முடிவெடுத்ததுமே தன் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் அதை நடைமுறைப்படுத்தியவர் அவர். அதற்காக தன்னையும் தன் குடும்பத்தையும் பிறர் சாதிவிலக்கு செய்யும்நிலை வரை சென்றவர். தலித்துக்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தவர், தன் மனைவி உட்பட பிறரை செய்யவைத்தவர். அன்றைய எந்த முற்போக்கினரும் அந்த எல்லைவரைச் செல்லவில்லை. இன்றுகூட காந்தியைப்பற்றிப் பேசும் எவரும் அந்த எல்லைவரை சொந்தவாழ்வில் சென்றவர்கள் அல்ல. அவர்களின் தனிவாழ்க்கையை எடுத்துப்பாருங்கள், தெரியும்

பின்னர் காந்தி சாதிமுறையின் தேவை நவீன இந்தியச் சமூகத்தில் இல்லை என்ற எண்ணத்துக்கு வருகிறார். அவ்வமைப்பு எதன் பொருட்டு உருவானாலும் அது தீயதாக ஆகிவிட்டது, தீய விளைவுகளையே உருவாக்குகிறது என மதிப்பிட்டார். அந்த முடிவை அவர் சும்மா வந்தடையவில்லை. பலகோணங்களில் ஆராய்ந்து நடைமுறையில் அவதானித்து பலதரப்பினரிடம் விவாதித்து அதன்பின்னரே அடைந்தார். ஆனால் வர்ணாசிரம அமைப்பு தேவை, அதுவும் சாதிமுறையும் வேறுவேறு என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

அதன்பின் முழுமையாகவே சாதி ஒழியவேண்டும் என்ற எண்ணத்தை வந்தடைந்தார். கலப்புத்திருமணங்களை வற்புறுத்தினார். தன்னிடம் ஆசிவாங்கும் மணமக்களில் இருவரில் ஒருவர் தலித் ஆக இருந்தாகவேண்டும் என்று சொன்னார். இதுதான் காந்தியின் பரிணாமம்

காந்தியின் ஆரம்பகாலப் பேச்சுக்களில் இருந்து அங்குமிங்குமாக மேற்கோள்களைப் பிய்த்துப்போட்டு அவரை தீமையின் மானுடஉருவமாகக் காட்டுகிறார் அருந்ததி. இந்த இழிசெயல் 1950களில் இடதுசாரிகளும் அதன்பின்னர் மதவாதிகளும் செய்து அறிவுத்தளத்தில் பல்லிளித்துவிட்ட ஒன்று. நாளிதழ்க்கட்டுரைகளின் அரைகுறைப் பிரச்சாரத்துக்கு மட்டுமே இதெல்லாம் இன்று உதவும். எந்தப் பின்புலவாசிப்பும் இல்லாமல் இம்மாதிரி பிரச்ச்சாரக் கட்டுரைகளை மட்டுமே வாசிக்கும் புதியவாசகர்களிடமே செல்லுபடியாகும். அறிவுப்புலம் உடையவர்கள் இவற்றை கீழ்மை அல்லது அறியாமை என்றே மதிப்பிடுவார்கள்.

காந்தியின் இந்த மாற்றம் அவரிடம் தொடர்ந்து விவாதித்த அம்பேத்கரால் உருவாக்கப்பட்டது என்று டி.ஆர்.நாகராஜ் போன்ற தலித் சார்பு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நான் இந்தத் தெளிவை அடைய நாகராஜுடன் நான் 1995 வாக்கில் நிகழ்த்திய நீண்ட உரையாடல்கள் காரணமாக அமைந்தன. காந்தி -அம்பேத்கர் இடையேயான உறவைப்பற்றி நாகராஜ் அன்று எழுதிய ‘எரியும் பாதங்கள்’ என்ற நூல் இன்று தமிழிலும் வாசிக்கக் கிடைக்கிறது. சாதியைப்பற்றிய காந்தியின் கொள்கைமாற்றத்தில் நாராயணகுரு வகித்த பங்கு மிக வலுவானது.

அடுத்ததாக, அம்பேத்கர் இந்தியச் சமூகத்தில் சாதி உருவாக்கும் தீங்கை, அதன் மனிதாபிமானமற்றத் தன்மையை கடுமையாகச் சுட்டிய தலைவர். ஆனால் அருந்ததி அசட்டுத்தனமான ஒற்றைவரி மேற்கோள்களால் காட்டுவதுபோல மேலோட்டமாக கசப்பையும் வெறுப்பையும் கொட்டியவர் அல்ல. அம்பேத்கர் ஒரு சமூக ஆய்வாளர்.சாதியின் உருவாக்கம், பரிணாமம் ஆகியவற்றை அவர் விரிவான வரலாற்றுப்புலத்தில் வைத்தே ஆராய்கிறார். ஆகவே சாதியை பிராமணர்களோ பிறரோ உருவாக்கினார்கள் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை

சாதி இங்கிருந்த பழங்குடிச் சமூகத்தில் இருந்து உருவான ஓர் அமைப்பு. அதை ஓர் அடுக்குமுறையாக ஆக்கியது அன்றைய அரசுகளும் பொருளியல்தேவைகளும். அந்த அடுக்குமுறைக்கான சித்தாந்த விளக்கத்தை அளித்ததே மதத்தின் பங்களிப்பு. அதில் அன்றிருந்த அரசுகளுக்கும் ஆளும்சமூகத்திற்கும் முழுமையாகவே பொறுப்புண்டு.

அன்றைய சமூகத்தின் உச்சியில் இருந்தவர்கள் என்றவகையில் பிராமணர்களுக்கும் போர்ச்சாதிகளுக்கும் நிலவுடைமைச்சாதிகளுக்கும் சாதியை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதில் கூட்டுப்பொறுப்பு உண்டு. அதிலிருந்து எவரும் தப்ப முடியாது. பிராமணர்களை மட்டும் கைகாட்டி தப்பித்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை. அம்பேத்கர் முன்வைத்த கோணத்தில் இருந்து இன்றைய முதன்மை சமூகவியாளர்கள் முன்வைக்கும் சித்திரம் இது

அருந்ததி போன்ற ஒருவர் அம்பேத்கரையோ அல்லது அவரது வழி வந்த கோசாம்பி முதலியோரையோ புரட்டிக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவரது வாசிப்பும் அறிவும் நாளிதழ்க்கட்டுரைகளுக்கு அப்பால் செல்லாதவை. அவரைப்போன்ற ஒரு அரைவேக்காடு ஊடகத்தில் முன்னிறுத்தப்படுவதற்குப் பின்னாலேயே பெரிய ஒரு ஊடகச் சதிவலை உள்ளது.

இவர்கள் அளிக்கும் உதிரிமேற்கோள்கள் வழியாக எதை அறிந்தாலும் அது பிழையே. காந்தியையோ, அம்பேத்கரையோ அவர்களின் முழுமையான கருத்தியல்பரிணாமத்தைக் கொண்டே மதிப்பிடவேண்டும். சாதி போன்ற விஷயங்களை வரலாற்றுணர்வுடனேயே புரிந்துகொள்ளவேண்டும்.

அருந்ததி போன்றவர்களின் குரல் இங்கே எப்போதுமே முன்னெழுந்து நிற்பதுதான். அவர் தனிமனிதர் அல்ல. இந்தியாவை அழிக்க எண்ணும் ஒரு பெரும் கருத்தியல்த் தரப்பின் ஒரு வாய் மட்டும்தான் அவர். அதை மீறியே இன்று ஆக்கபூர்வமான சிந்தனைகள் இங்கே செயல்படுகின்றன.

ஆனால் மாபெரும் பொருளியல் வல்லமை கொண்ட அந்தக்குரல் கல்விப்புலம் ஊடகப்புலம் அனைத்தையும் தழுவி வலுவடைந்து வருகிறது. அது வெல்லலாம், இந்தியா உடைந்து பெரும் அகதிப்பெருக்கை உருவாக்கி அழிந்து பஞ்சங்களில் மூழ்கலாம்.பிணங்கள் குவியலாம். அருந்ததியின் எஜமானர்களின் எண்ணம் அவ்வகையில் வெற்றிபெறலாம். அது இங்கே நிகழும் கருத்தியல் விவாதம் எவ்வகையில் வளர்கிறது என்பதைப்பொறுத்தது

*

சாதி என்னும் அமைப்பு முறை இந்தியச் சமூகத்தில் உருவாகி வளர்ந்து இன்றும் நீடிக்கும் பெரும் அமைப்பு. உலகமெங்கும் சென்றகால நிலப்பிரபுத்துவ சமூகம் பிறப்புசார்ந்த அடையாளங்களால் ஆனதாகவும் அடிமைத்தனத்தையோ அதற்கிணையான முறைகளையோ கொண்டு மனிதர்களின் உழைப்பைச் சுரண்டி அரசுகளை அமைப்பதாகவுமே இருந்துள்ளது. விதிவிலக்கான சமூகம் என ஏதும் உலகில் இல்லை. இயந்திரங்கள் இல்லாத அக்காலகட்டத்தில் மனித உழைப்பே உபரியை உருவாக்க முடியும். உபரியே சமூகக்கட்டுமானமாக அரசாக ஆகிறது. ஆகவே மனிதர்களை ஏதேனும் வகையில் அடக்கி அடிமையாக்கி வேலைவாங்குவது அன்றைய வழிமுறை.

வரலாற்றின் பரிணாமத்தில் நாம் இன்று தொழில்நுட்பத்தை அடைந்துள்ளோம். ஜனநாயகத்தை அடைந்துள்ளோம். மானுடசமத்துவம் பற்றிய சிந்தனைகளை அடைந்துள்ளோம். இவற்றை உருவாக்கி நமக்கு அளித்த நம் முன்னோடிச் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். இங்கு நின்றபடி நாம் நேற்றைத் திரும்பிப்பார்க்கிறோம்.இந்தக்கோணத்திலேயே சாதியைப் புரிந்துகொள்ளவேண்டும். நேற்றைய சாதியமைப்பையும் அது உருவாக்கிய மனநிலைகளையும் இன்று நியாயப்படுத்தலாகாது. அது காலத்தை உணராத அறியாமை. அந்த அடக்குமுறை அமைப்பின் லாபங்களை அடைய எண்ணும் சிறுமை.

ஒருவன் இன்றைய மனிதனா என்பது அவன் எந்த அளவுக்கு நேற்றைய மனநிலைகளில் இருந்து வெளிவருகிறான் என்பதைப்பொறுத்தது. நான் என்னளவில் சாதியமைப்பை இன்று நியாயப்படுத்தும், சாதியடையாளங்களையும் பெருமிதங்களையும் பேதஎண்ணங்களையும் சுமந்தலையும் ஒருவரை நவீனமனிதர் என்றோ அடிப்படை மனிதாபிமானம் கொண்டவர் என்றோ எண்ணுவதில்லை. இது வெறும் சொல் அல்ல, என்னளவில் தனிவாழ்க்கையும் இதுவே

இந்து என தன்னை உணரும் ஒருவர் இந்த மதத்தின் சிந்தனைகளைக்கொண்டு நிலைநிறுத்தப்பட்ட சாதியமைப்பு உருவாகிய கொடுமைகளுக்கு தார்மீகமாகப் பொறுப்பேற்கவேண்டும், அதற்காக குற்றவுணர்ச்சியும் இழிவுணர்ச்சியும் அடையத்தான் வேண்டும் என்பதே என் எண்ணம்.

ஓரு நவீன இஸ்லாமியன் உலகநாகரீகத்தின் உயர்ந்த பல சாதனைகளை சென்றகால இஸ்லாமின் ஒற்றைப்படையான மதவெறிநோக்கு அழித்ததற்கு பொறுப்பேற்கவேண்டும், குற்றவுணர்ச்சி அடைந்தாகவேண்டும். ஒரு நவீனக் கிறிஸ்தவன் உலகமெங்கும் பழங்குடிகள் மேல் கிறிஸ்தவம் ஆற்றிய பேரழிவுக்கான பொறுப்பை ஏற்று குற்றவுணர்ச்சி அடையவேண்டும்.

இந்தக்குற்றவுணர்ச்சிகளே ஒருவனை இன்றைய அறவுணர்ச்சியை நோக்கிச் செலுத்துகின்றன. ஏதேனும் ஒருவகையில் சுற்றிச்சுற்றி தர்க்கம்பேசி இவ்வநீதிகளை நியாயப்படுத்துவானென்றால் ஒருவன் மதவெறி கொண்ட பழமைவாதி என்றே பொருள்.

ஜெ

காந்தியும் சாதியும் 1

காந்தியும் சாதியும் 2


சாதி பற்றி


சாதியும் ஜனநாயகமும்

சாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்

முந்தைய கட்டுரைதாயார்பாதம் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50