மதிப்பிற்குரிய ஜெ,
இன்று உங்கள் வலைப்பதிவில் “தாயார் பாதமும் அறமும்” கடிதங்கள் வாசித்தவுடன் எனக்கு இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த ஈமெயில் எழுதுகிறேன்.
என் தம்பி மனைவி வழி பாட்டி, தினசரி ஹிந்து ஆங்கில நாளிதழ் வாசிக்கக்கூடியவர். இந்த பாட்டி திருமணம் ஆன புதிதில் (மிக சிறு வயதில்) இட்லிக்கு மாவு அரைக்க தெரியாததால் அவரது மாமியாரால் அவமானப்படுத்தப்பட்டதால் (அரைக்க தெரியாது ஆனால் சாப்பிட தெரியுமா?) இன்று வரை இட்லி, தோசை சாப்பிடுவது இல்லை. ஆனால் தினமும் மற்றவர்களுக்கு இட்லி, தோசை செய்து கொடுக்கிறார்கள். இதை பற்றியோ அல்லது இட்லி தோசை சாப்பிட சொன்னாலோ, அதை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவார்கள்.
இன்று அவரது கணவரோ அல்லது மாமியாரோ இல்லாவிட்டாலும் அதே வைராக்கியத்துடன் இருக்கிறார்கள். எதையோ யாருக்கோ புரியவைக்க நினைத்து பின் அதுவாகவே மாறிவிட்டார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது.
திரும்ப திரும்ப “முதற்கனல்” படித்துக்கொண்டு இருக்கிறேன். என்னால் சுலபமாக அதை கடந்து “மழைப்பாடல்” செல்ல முடியவில்லை. வெண்முரசை வாசிக்க வாசிக்க எனக்கு அது மிக நெருக்கமாக ஆகிக்கொண்டு இருக்கிறது. நன்றிகள் தவிர வேறென்ன சொல்லமுடியும் உங்களுக்கும், உங்கள் மூலமாக இதை எழுதிக்கொண்டிருக்கும் எவனோ அவனுக்கும்.
ஸ்ரீராம் காமேஸ்வரன்,
அன்புள்ள ஸ்ரீராம்,
உண்மையில் அத்தனை குடும்பங்களிலும் சென்ற தலைமுறைகளின் கதைகளில் இதெல்லாம் இருக்கும். ஆனால் இன்று பாட்டிதாத்தாக்களின் வாழ்க்கையைச் சொல்லிக்கொடுப்பது மிக அரிதாகிவிட்டது. வீடுகளில் எவரும் தன் தந்தையை, பாட்டாவை, அவரது மூதாதையரை, உறவுச்சங்கிலியை குழந்தைகளிடம் பேசுவதில்லை. அதன் இழப்பு மிகப்பெரியது. குழந்தை தன்னை தனியாளாக உணரத் தொடங்குகிறது
நான் என் ஊரைப்பற்றி சைதன்யாவிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் அழைத்துச்சென்றதே இல்லை. என் அம்மா அப்பா இருவரும் அவமரணம் அடைந்ததே காரணம். சென்ற வருடம் அரங்கசாமி இங்கே வந்திருந்தபோது என் ஊரைப் பார்த்தாகவேண்டும் என வற்புறுத்தி அழைத்துச்சென்றார். சைதன்யா அங்கே மதியம் வரை இருந்தாள்
பின்னர் அவள் சொன்னாள், அதுதான் அவள் ஊர் என்று. ‘நாகர்கோயில் இல்லையா உன் ஊர்? இங்கேதானே பிறந்து வளர்ந்தாய்?’ என்று கேட்டேன். ‘இங்கே நீயும் அம்மாவும் மட்டும்தானே? அதற்கு முன்னால் இருந்தவர்களெல்லாம் வாழ்ந்தது அங்கேதானே?’ என்று கேட்டாள். சிலமணிநேரம் மட்டுமே நின்றிருந்த அந்த ஊருடன் அவள் கொண்டுள்ள உணர்வு ஆழமானது.
இனி அவளுக்கு அந்த மண் ஒருபோதும் அன்னியமாகாது. அந்த வேர் எங்கு சென்றாலும் கூடவே இருக்கும். அந்த உணர்வுகள் இன்றில்லை. இருந்திருந்தால் நம் மரபிலிருந்து இத்தகைய பல கதைகளை எடுத்துக்கொள்ளமுடியும்
உங்கள் கடிதம் இதை நினைக்கவைத்தது
ஜெ