சுவை- கடிதம்

அன்பு ஜெயமோகன்,

சுவையறிதல் கட்டுரையை நான் முதன்முறையாகப் படிக்கிறேன். அது நிறைவில் ஒரு காடாகவே எனக்குள் காட்சி கொண்டது; நான் யானையாக மாறிய அழகியலும் இறுதியாய் நிகழ்ந்தது. திரும்பவும் கட்டுரையை முதலில் இருந்து படித்தேன். யானையின் பிண்ட வாசனையும், தொட்டால் வாடி செடிகளும், தேக்கு மரங்களும், மூங்கில் தளிர்களும் நிறைந்திருக்கும் காட்டின் பெரிதினும் பெரிதான பரப்பில் கொட்டிக்கிடக்கும் நுண்மைகளின் வீச்சில் பேச்சற்றுப்போனேன்.

நாம் நமக்கான சுவைகளைப் பொதுப்படையாகவே கொண்டிருக்கிறோம். நம் சுவைகள் அனைத்துமே யாராலோ நமக்குத் தயாரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு யானையை எப்படி பார்ப்பது என ஒருவர் சொல்ல அதன்படி பார்க்கும் மனோபாவத்திற்கு நாம் வந்திருக்கிறோம். ஒரு யானையை நாம் பார்க்கும் யானையாக நமக்குப் பார்க்கத் தெரிவதில்லை; மேலும், நாம் பார்க்கும் யானையும் கணத்திற்கு கணம் உருமாறிக்கொண்டிருக்கிறது எனும் தெளிவும் இல்லை. அதனால்தான், வாழ்வின் எதிர்பாராமைகளில் நொறுங்கிப்போகிறோம். ஒரு காடு எதிர்பாராமைகளின் தொகுப்பாகவே எனக்குப் படுகிறது. காட்டிற்குள் செல்லும் ஒருவனை காடு தன் எதிர்பாராமைகளால் வரவேற்கிறது. அவனுக்கு பலவிதமான காட்சிகளைச் சலிப்பின்றி அறிமுகமும் செய்து வைக்கிறது. ’இன்றைய காட்டை’ப் பார்த்துவிட்டுத் திரும்பும் ஒருவருக்கு ’நாளைய காட்’டை முன்கூட்டிச் சொல்லிவிடவே முடியாது.

காடு தன்னை ஒரு குறிப்பிட்ட வடிவில் காட்டிக்கொள்வதில்லை. வேண்டுமானால் நம் வசதி கருதி காட்டுக்கு ஒரு வடிவத்தைக் கற்பனை செய்து கொள்ளலாம். உண்மையில் காடு எவ்வித வடிவத்திற்குள்ளும் தன்னை நிறுத்திக்கொள்வதில்லை. நாம் கற்பனை செய்து கொள்ளும் காடும் சில் நேரங்களில் தன் பிம்பத்தைக் கலைத்து புதுப்பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ளும். செல்லும் ஒவ்வொரு முறையும் நம்மோடு காடு பேசிக்கொண்டே இருக்கிறது. நாம்தான் காட்டின் பரப்பளவு தரும் வியப்பில் அதன் பேச்சைக் கேட்க மறக்கிறோம். அல்லது காட்டை வெறும் காடெனச் சொல்லிப் புறந்தள்ளி விடுகிறோம். காட்டைக் கடந்துவிட ஒரு மனிதனால் முடியாது என்பதே காட்டிற்குள் திரும்பவும் பயணிக்க வைக்கிறது. காட்டின் மரங்களும், விலங்குகளும், குன்றுகளும், நீர்வீழ்ச்சிகளும், புல்வெளிகளும், பூக்களும், பறவைகளும் காட்டின் பகுதிகளன்று; அவை காட்டின் உறுப்புகள். காட்டை விட்டு வெளியேறும் ஒருவனுக்கு அது நிச்சயம் ஏதாவது தந்தனுப்பும். சிலர் அதைப் புரிந்து கொள்வர்; பலர் அதைக் கண்டு கொள்ளாதிருந்துவிடுவர். காட்டிற்குள் நுழைபவன் அவனையறியாமல் குழந்தையாகி விடுகிறான். காட்டின் மடியில் தன்னை ஒப்படைத்துப் படுத்திருக்கும் ஒருவனின் காலருகே உலகம் பயந்து உட்கார்ந்திருக்கிறது. காட்டின் வண்ணங்கள் தரும் வெளிச்சத்தில் உலகின் செயற்கை வண்ணங்கள் பொலிவிழக்கும் மாயமும் சிலருக்கு நிகழ்கிறது.

ஏனோ, இலக்கியம் என்பது எனக்கு ஒரு மகத்தான காடாகவே காட்சி தருகிறது. நீங்கள் விதைநிலம் என்றிருக்கிறீர்கள். அட, காடு என்பதும் விதைநிலம்தானே!

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48
அடுத்த கட்டுரைசூஃபியிசம்