இரவு 6

எத்தனைகோடி
பகல்களை அணைத்தால்
உருவாக்கமுடியும் ஓர் இரவை!

கார் கொச்சியில் வேளி தாண்டிச் சென்றது. நான் ஏழெட்டுமுறை எர்ணாகுளம் கொச்சிக்கு வந்திருந்தபோதும்கூட எனக்கு அந்த நிலப்பகுதி பிடிபடவில்லை. எங்கே கொச்சி முடிந்து எர்ணாகுளம் ஆரம்பிக்கிறது என்று மலையாளிகளால்கூட சொல்லிவிடமுடியாது. கடல் உள்ளே புகுந்து பள்ளம்தோறும் பரவியதுபோல , அல்லது மாபெரும் டம்ளர் ஒன்று சரிந்துநீர் சிதறியது போல சிதறிப்பரவிக்கிடக்கும் காயலால் சூழப்பட்ட ஏராளமான தனித்தீவுகளால் ஆனது எர்ணாகுளம் நிலப்பரப்பு. அதை இங்கே துருத்துகள், வைப்புகள் என்று சொல்கிறார்கள். சில இடங்களில் மாங்குரோவ்காடுகள் தவிர்த்தால் பெரும்பாலான காயலோரங்கள் தென்னைமரக்கூட்டங்களால் ஆனவை.

தூரத்திலிருந்து பார்க்கும்போது கொஞ்சம் உயரமான புல்மேடுகளாக தோன்றும் தென்னைமரக்கரைகள் நடுவே காயலை நோக்கி நிற்கும் பூதாகரமான குடியிருப்புக் கட்டிடங்கள். இருண்ட காயலில் விழுந்து கிடக்கும் கட்டிடப்பிரபலிப்புகளின் சிவந்த விளக்குகள் அலைகளில் தள்ளாடின. எனக்கு கு§ளோட் மோனேயின் வாட்டர் லில்லீஸ் ஓவியங்கள் நினைவுக்கு வந்தன. பெரியதோர் திரையில் சிதறும்  குழம்பும்  வண்ணங்கள்.

பிரான்ஸ் சென்றிருந்தபோது லூவர் அருங்காட்சியகத்தில் அவற்றை பார்த்து நின்றிருக்கிறேன். அவற்றின் பிரம்மாண்டம் தான் என்னை முதலில் கவர்ந்திருக்கிறது. ஏன் அவை தூரிகை ஓட்டமே தெரியுமளவுக்கு இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஓவியங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஆனால் நீரில்கரையும் விளக்குக்ளைக் கண்டபோது உருவங்கள் மழுங்கும் தெளிவின்மையில் அபூர்வமான ஓர் அழகு இருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.

கார் பீச் ரோட்டில் நுழைந்து தெற்காக திரும்பி  தாண்டி பக்கவாட்டில் ஒரு சிறியசாலையில் ஏறி கடற்கரை நோக்கிச் சென்றது. நான் ”எங்க போறோம், கடற்கரைக்கா?” என்றேன். மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ”இல்லை, இங்க ஒரு முக்கியமான மனுஷ்யர் இருக்கார். உங்களுக்கு சந்திக்க பிடிக்கும்” என்றார் மேனன். நான் கமலாவைப் பார்த்தேன் ”சுவாமி பிரசண்டானந்தா, கேட்டிட்டில்லயா?” என்றார். ”இல்லையே” ”நாட் வெரி பாப்புலர். பட் என் இம்பார்ட்டண்ட் மேன்” என்றார்.

கார் கடற்கரையை நெருங்கியது. நான் கண்ணாடியை கீழிறக்கி அலைகளின் ஒலியை கேட்டேன். உப்புவீச்சமுள்ள காற்று குளிருடன் வந்து மோதியது. கடற்கரையில் அந்நேரத்தில் வெட்டவெளிக்குரிய மெல்லிய கண்வெளிச்சம் மட்டுமே இருந்தது. கடல் இருட்டுக்குள் கட்டிபோட்ட பெரியதோர் மிருகம் போலிருப்பதாக எண்ணிக்கொண்டேன்.

கடற்கரை வழியாக கொஞ்சதூரம் சென்று தென்னைத் தோப்புக்குள் சென்றிருந்த சாலையில் ஏறி உள்ளே நுழைந்தோம். இருட்டுக்குள் தென்னைமரங்கள் ஓலைகள் வழியாக கடற்காற்று பீரிடும் இரைச்சலுடன் நின்றிருந்தன. சாலை திரும்பி திரும்பிச்செல்ல நேர்முன்னால் தென்னைமரங்கள் பாய்ந்து வந்து வழிமறித்து பின் விலகுவதுபோலிருந்தது.

தென்னைமரங்கள் நடுவே பெரியதோர் முற்றமும் அதன் நடுவே தனித்தனியாக ஏழெட்டு குடில்களும் தெரிந்தன. அவற்றில் அரிக்கேன் விளக்குகள் சில எரிந்துகொண்டிருக்க மிக மெல்லிய செவ்வொளி இருளில் சிந்திக்கிடந்தது. ”வெல் சுவாமி இஸ் தேர்” என்றார் மேனன். என்னிடம் திரும்பி ”எனக்கு இவரது ஆன்மீகம் தியானம் எதிலும் நம்பிக்கை இல்லை. ஹி இஸ் டிரையிங் சம்திங்….ஆனா ரொம்ப புத்திசாலியான மனுஷ்யம். எதைப்பற்றியும் நல்லா பேசலாம். நல்ல மெட்ட·பர்ஸ் சொல்லுவார்…”என்று ஸ்டீரிங்கை ஒடித்தார்.

கார் உறுமி நின்றது . நான் கதவைத்திறந்து இறங்கி நின்று குடில்களைப் பார்த்தேன். மேனன் இறங்கி காரைப்பூட்டினார். ”இங்கே நெறையபேர் இருக்காங்களா?” என்றேன். ”நெறையன்னா? ஒரு எட்டு பேர் நிரந்தரமா இருக்காங்க. அப்பப்ப நெறையபேர் வந்து தங்கிட்டு போவாங்க. உங்களுக்கு இஷ்டமிருந்தா நீங்க கூட தங்கலாம்…எனிவே திஸ் இஸ் எ நைஸ் பிளேஸ்” நான் தயங்கி ”இவரும்…” என்றேன் ”ஆமா இவரும் இரவுலாவிதான்… இல்லாட்டி எனக்கு இவர் கிட்டே என்ன பேச்சு? கமான்” என்றார் மேனன்.

நாங்கள் குடில்களின் வாசலை அடைந்தபோதுதான் ஒடிசலான ஒரு சாமியார் வெளியே வந்து ”அய்யோ , இதாரு மேன்னனா…வரணம்…மற்றயாள் ஆரு?” என்றார்.  மேனன் என்னிடம் ”சுவாமி உதயபானு” என்று அறிமுகம் செய்துவிட்டு ”இது சரவணன். எ நியூ ·ப்ரண்ட்” என்றார். உதயபானு ”புதிய ரெக்ருட்மெண்ட் அல்லே?” என்று கேட்டு சிரித்தார். நீளமான கழுத்தில் குரல்வளை ஏறி இறங்கியது. சிரிக்கும்போதும் பேசும்போதுமெல்லாம் உடல் விதவிதமாக நெளிந்தது அவருக்கு. பக்கவாட்டில் இரு கைகளையும் வைத்து அழுத்தி சப்பி நீட்டி எடுத்தது போன்ற முகம். கூர்மையான மூக்கு. எங்கோ பார்த்த முகம் என்று தோன்றியது.

”சுவாமி உதயபானு ஒரு சக்ஸஸ்புல் லாயரா இருந்தார்…” என்றார் மேனன். ”ரொம இண்டிரஸ்டிங்கான கதை… ஒருநாள் ஒரு தப்பான கேஸிலே ஜெயிச்சிட்டார். சின்னப்பொண்ணை கற்பழிச்ச ஒருத்தனுக்கு விடுதலை வாங்கிக் குடுத்திட்டார். அதுமுதல் ஒருவாரம் தூக்கமில்லை. அப்டியே எல்லாத்தையும் விட்டுட்டு அலைய ஆரம்பிச்சார். இங்கே வந்து சேந்திட்டார்” உதயபானு ”அந்நைக்கு முதல் இந்நுவரை ராத்ரி உறங்ஙிட்டில்லா” என்று புன்னகை செய்தார். நான் அந்தப்புன்னகையில் அவர் முகச்சாயலை அடையாளம் கண்டுகொண்டேன். அவர் அச்சு அசல் வி.கெ.கிருஷ்ணமேனன் போலிருந்தார்.

”யா…ஹி இஸ் எ குளோஸ் ரிலேட்டிவ் ஓ·ப் வி.கெ.கிருஷ்ணமேனன்…ஸேம் கிளான்” என்றார் மேனன் என்னிடம். மேனன் என் மனதுக்கு மிக நெருக்கமாக வந்துகொண்டிருப்பதை எப்போதுமே உணர்ந்தவன் என்பதனால் எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. உதயபானு பவ்யமாக மார்பிலே கையை வைத்து ” அவரெல்லாம் ரொம்ப பெரிய மனிதர். எம்.ஓ.மத்தாயே அவரைப்பற்றி கிசுகிசு எழுதுமளவுக்கு பெரியவர்” என்றார். நான் சிரித்தேன்.

உள்ளே சென்றோம். வட்டவடிவமான குடில். ஓரமாக ஒரு ஹரிக்கேன் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. புகையே இல்லாத விளக்கு.வாசனையும் வேறுமாதிரி இருந்தது. ஸ்பிரிட்டில் எரிவதாக இருக்கலாம். தரையில் அலங்காரமான கோரைப்பாய்கள் விரிக்கப்பட்டு சிவந்த உறையிடப்பட்ட உருளைத் தலையணைகள் போடப்பட்டிருந்தன. நாங்கள் அமர்ந்துகொண்டதும் உதயபானு ”ஞான் போய் அறியிக்காம்” என்றார். ”பிஸியாணோ?” என்றார் மேனன். ”நோ..ஹி வாஸ் ரீடிங் சம்திங்” என்று உதயபானு வெளியே சென்றார்.

பதினைந்து நிமிடத்தில் மறுவாசல் வழியாக நாற்பது வயது தோன்றக்கூடிய சுவாமி பிரசண்டானந்தாஉள்ளே வந்தார். தோளில் புரண்ட கரிய சுருண்ட குழல்கற்றைகள். கன்னங்கரிய தாடி மார்பின்மீது விழுந்து கிடந்தது. அகலமான நெற்றிக்குக் கீழே உற்சாகமான பையன்களுக்குரிய அழகிய கரிய கண்கள். கூர்மையான மூக்கு. மிக வசீகரமான மனிதர். ”வரணம் வரணம் மேனனே…கண்டு ஒருபாடு நாளாயல்லோ” என்று சிரித்துக்கொண்டே கும்பிட்டார்.

மேனன் எழாமலேயே ”யா…கிளாட் டு மீட் யூ…”என்றார். கமலா கையூன்றி எழுந்து சென்று சுவாமியின் பாதங்களை தொட்டு வணங்கினார். அவர் கமலாவின் தலையைத் தொடாமலேயே ஆசியளித்தார். நானெ ழப்போக ”சிட் டவுன் சிட் டவுன்” என்று சொல்லி அமர்ந்துகொண்டார். ”யூ ஸ்பீக் மலயாளம்?” என்று என்னிடம் கேட்டார். ”நோ.. ” என்றேன். ”ஓ” என்றார். ”நான் மலையாளி அல்ல என்று எப்படி தெரியும்?” என்றேன். ”ஐ நோ ·பேஸஸ்…இ வாஸ் எ டிராவலர் ·பார் ட்வெண்டி இயர்ஸ்” என்று சாதாரணமாக புன்னகைசெய்தபடிச் சொன்னார். ”நீங்க அனேகமா கடலூர் அந்தப்பக்கம். பெரும்பாலும் தொண்டைமண்டல வெள்ளாளர் சாதி. சரியா?” அவரது தமிழில் மெல்லிய மலையாளா நெடி இருந்தது.

நான் சிரித்து ”சரி” என்றேன். பிரசண்டானந்தா”நான் பதினேழு பாஷை பேசுவேன். அதிலே பதினாறு பாஷை மலையாள வாசனையோட இருக்கும்…” என்றார். ”அது கேக்க நல்லாத்தான் இருக்கு…”என்றேன் ”மலையாள நெடி இருந்தா தமிழ் கொஞ்சம் சா·ப்டா ஆனதுமாதிரி இருக்கு…பொங்கலிலே கொஞ்சம் நெய் ஜாஸ்தியா விட்டது மாதிரி”

பிரசண்டானந்தாஉரக்கச் சிரித்தார் ”நைஸ் ஸிமிலி…” என்றார் ”யூ நோ, இப்ப நீங்க பேசற தமிழோட அந்த ஒலி தெலுங்கிலே இருந்து வந்தது. தெலுங்குக்கு அந்த ஒலி பிராகிருத பாஷையிலே இருந்து வந்திருக்கணும். தெலுங்குதான் படபடன்னு பேசற பாஷை.வடக்கு ஆந்திராவிலே மத்யபிரதேஷ் பார்டரிலே உள்ள ஆதிவாசிகள் இப்பகூட பிராகிருதஜன்யமான பாஷைகள் பேசுறாங்க. அவங்ககிட்ட இந்த டியூனை நான் கவனிச்சிருக்கேன்…” என்றார்.

”ஓ” என்றேன் வியப்புடன். ”…அதுக்கு சரித்திரபூர்வமான காரணங்கள் இருக்கு. தமிழ்நாடு முழுக்க முந்நூறு வருஷம் தெலுங்கர்களோட ஆட்சியிலே இருந்திருக்கு. மன்னர்கள் மட்டும் தெலுங்கு இல்லை. கிட்டத்தட்ட ஒருகோடி ஜனங்களும் அங்கேயிருந்து வந்து தமிழ்நாடு முழுக்க பரவியிருக்காங்க. அவங்க தமிழை தெலுங்கு உச்சரிப்புக்கு மாத்திட்டாங்க. அதுக்கு முன்னாடி தமிழ் கேக்கிறதுக்கு மலையாளம் மாதிரித்தான் இருந்திருக்கும்…ஸீ, தெலுங்கு ஆதிக்கம் இல்லாத இடங்களிலே இருக்கிற பழமையான தமிழ் அப்டியே மலையாள ஓசையோடத்தான் இருக்கு. ·பர் எக்ஸாம்பிள் தெற்குதிருவிதாங்கூர். ஐ மீன் , கன்யாகுமாரி ஜில்லா பாஷை. அப்றம் ஸ்ரீலங்காத் தமிழ். அப்றம் மேற்குமலைகளிலே இருக்கிற டிரைப்ஸ் பேசற தமிழ்…”

நான் அவரை அதற்குள் புரிந்துகொண்டிருந்தேன். அபாரமான தர்க்கம் கொண்ட மனிதர். ஒன்றிலிருந்து ஒன்றாக அறிதல்களை கோர்த்தபடியே சென்று ஒரு முழுமையை உருவாக்கக் கூடிய வலிமை கொண்டவர். அத்தகையவர்கள் பிறர் சிந்தனைகள் மீது அபாரமான செல்வாக்கைச் செலுத்துபவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் எதையுமே மறுத்து வாதிட முடியாது.

”ஐ வாஸ் வண்டரிங்” என்று மேனன் ஆரம்பித்தார் ”தமிழ்நாட்டிலே தமிழர்களுக்கு ரொம்ப பிடித்தமான பாடகர்கள் யாருன்னா அவங்க அனேகமா தெலுங்கர்கள் இல்லேன்னா டி.எம்.எஸ் மாதிரி சௌராஷ்டிரர்கள்… பி.சுசீலா பத்தி நீங்க கொஞ்சம் முன்னாடி பேசிட்டிருந்தீங்க.. அந்தம்மா தமிழை தெலுங்கு மாதிரி உச்சரிக்கிறவங்க. ற, க மாதிரி எழுத்துக்களை எல்லாம் ர·ப்பா உச்சரிப்பாங்க. அதே மாதிரி எஸ்.பி.பாலசுப்ரமணியம்… தமிழ்க்காதுகளுக்கு தமிழை தெலுங்கு மாதிரி உச்சரிச்சாத்தான் சரீன்னு தோணுதுன்னு நெனைக்கிறேன்…”

நான் அவர்களை எதிர்த்து வாதிட விரும்பினேன். ஆனால் என் மனத்தின் மூலையில் அது உண்மைதானா என்றும் தோன்றிவிட்டிருந்தது. ஆகவே என் எதிர்ப்பு வலுவாக அமையாதென்று எண்ணி அமைதியாக இருந்தேன். ”வெல், உங்க பேரே சொல்லலியே” ”சரவணன்” என்றேன். நான் சில கணங்கள் தயங்கியபின் ”நீங்க இங்கே பகலிலே யாருமே முழிச்சிட்டிருக்கிறதில்லையா?” என்றேன்.

பிரசண்டானந்தாபுன்னகையுடன் தாடியை வருடியபடி ”நோ…” என்றார் ”அது எங்களோட நியதி. இந்த ஆசிரமத்துக்கே நிஸாலயம்னுதான் பேர். ராத்திரி தங்கற எடம். இங்க வாட்ச்மேன் மட்டும் பகலிலே  கண்விழிச்சிருப்பார். ”அவர் புன்னகை பெரிதாகியது ”ஸீ, இங்கே எங்களுக்கு பத்து பசுக்கள் இருக்கு. அதெல்லாமிகூட ராத்திரியிலேதான் முழிச்சிருக்கும்…வழக்கமா பகலிலே முழிச்சிருக்கிற பசுக்களை விட நாப்பது சதவீதம் அதிகமா பால் குடுக்குது. ஷீர விகஸன போர்டிலே இருந்து சயண்டிஸ்ட்ஸ் வந்து பாத்திட்டு போயிருக்காங்க…” நான் ”அப்டியா?” என்றேன். ”அதிலே பெரிய மர்மம்லாம் ஒண்ணும் இல்லை. ஸீ, பகலிலே பசுக்களை மேயவிட்டா வெயிலிலே அலைஞ்சே அதோட எனர்ஜியிலே பாதி இல்லாம ஆயிடும்..” என்று சிரித்தார்.

நான் அவரிடம் எதைப்பற்றி பேசவேண்டும் என எண்ணிக்கொண்டேன். எதைப்பற்றிப் பேசினாலும் அவரிடம் ஏற்கனவே அதற்குப் பதில் இருக்கும் என்று தோன்றியது. ”யூ மே ஆஸ்க் எபவுட் தி நைட் எகஸ்பரிமென்ட்ஸ்” என்று அவரே அடியெடுத்துக்கொடுத்தார். ”எதுக்கு ராத்ரியிலே முழிச்சிருக்கணும்? ஆன்மீகமா ஏதாவது காரணம் இருக்கா?” என்றேன். அவர் தாடியை நீவியபடி ஒருகணம் என்னை நோக்கி புன்னகைசெய்து,”வள்ளலார் சொல்லியிருக்கார்ல, தனித்திரு விழித்திரு பசித்திரு அப்டீன்னு. தனித்திருன்னா சாதாரணமா மத்தவங்கள மாதிரி இருக்காதேன்னு அர்த்தம். பசித்திருன்னா உடலாலேயும் மனசாலேயும் பசியோட இருன்னு அர்த்தம்.  எதுக்கு விழித்திருன்னு சொன்னார்? விழிப்புன்னா என்ன? அகவிழிப்பைச் சொல்லலை. அது தியானம் மூலம் வரக்கூடியது. அகவிழிப்பு வர்ரதுக்கான வழியை… அவர் சொல்ற விழிப்புங்கிறது தூங்காம இருக்கிறதைத்தான்….அதைத்தான் கீதை சொல்லுது, பிறர் தூங்கும்போது யோகி விழித்திருக்கிறான்’

நான் அவர் மேலே பேசியதை கவனிக்கவில்லை. அவர் அப்போது சொன்ன அனைத்தையும் பலமுறை ஏற்கனவே சொல்லியிருந்திருக்கக் கூடும். தெளிவான தர்க்கங்களாக வந்துகொண்டிருந்தன. பகல் ஜாக்ரத் என்னும் விழிப்புநிலையால் ஆனது என்றால் இரவு கனவுநிலை என்னும் ஸ்வப்னத்தால் ஆனது. ஆழ்நிலை என்ற சுஷ¤ப்திக்கும் அதில் இருந்து முழுநிலை என்ற துரியத்திற்கும் செல்வதற்கு மிகச்சிறந்த வழி இரவுதான். பகலில் தியானம் செய்தால் நாம் நம் விழிப்புணர்வை அழியச்செய்து கனவுநிலையை கொண்டுவரவே நம் ஆற்றலில் பெரும்பகுதியைச் செலவிட வேண்டியிருக்கும். இரவில் நாம் நம் கனவுநிலையில் இருந்து அடுத்தபடிகளுக்குச் சென்றுவிடலாம்.

”எதுக்காக நம்ம முன்னோர்கள் எல்லா கலைகளையும் ராத்தியிலே நடத்தினாங்க? கதகளி ராத்திரி விடிய விடிய நடக்கும். சாக்கியார்கூத்து ஓட்டன்துள்ளல் எல்லாமே ராத்திரிதான். ஏன் தெருக்கூத்து? அதுவும் ராத்திரியிலேதானே….சங்கீதக்கச்சேரிகளைக்கூட அந்தக்காலத்திலே ராத்திரியிலேதான் வச்சிட்டிருந்தாங்க. ஏன்னா ராத்திரியிலே மனசு கனவுத்தன்மையோட இருக்கு. மனசோட விழிப்புநிலையை ஊடுருவி கனவுநிலையோட பேசறதைத்தான் நாம கலைகள்னு சொல்றோம், இல்லையா? அதுக்கு சரியான நேரமே ராத்திரிதான். நான் பஸ்தர்காடுகளிலே ஆதிவாசிகளைக் கவனிச்சிருக்கேன். பகலிலே பெரும்பாலும் எங்கியாவது சுருண்டு கிடப்பாங்க. ராத்திரியிலேதான் வேட்டையாடுறது. நடனமாடுறது பூசை செய்றது எல்லாமே…” பிரசண்டானந்தாநாடகத்தனமாக நிறுத்தி ”ஏன், செக்ஸ¤க்கேகூட ராத்திரிதான் பொருத்தமா இருக்கு இல்லையா? அப்ப ஆணும் பெண்ணும் மனசு நெகிழ்ந்து ஒண்ணாகிற மாதிரி பகலிலே சாத்தியமில்லை. பகலிலே அவங்க உறவே வேற மாதிரி இருக்கும்…யூ நோ”

நான் வெறுமே தலையசைத்தேன். ”நம்ம யோகசாதனைகள் எல்லாத்துக்குமே ராத்ரிதான் உசிதமானது..” என்றார் பிரசண்டானந்தா. ”குறிப்பா தாந்த்ரீகயோக சாதனைகளை பகலிலே பண்ணவேகூடாது. உபாசனை விபாசனை இரண்டுக்குமே ராத்ரிதான் உசிதமானது. பகலிலே அர்ச்சனை பஜனை மட்டும்தான் செய்யலாம். இது சாஸ்திரம். அனுபவத்திலே இருந்து நம்ம முன்னோர்கள் தெரிஞ்சுகிட்ட விஷயம்…” நான் அதற்கும் தலையசைத்தேன். இந்த இருநாட்களிலும் நான் ஒரு மாபெரும் கனவுக்குள் நழுவி நழுவி சென்றுகொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றியது.

”வெல், நெறைய பேசிட்டேன்னு நினைக்கிறேன். நீங்களே எல்லாத்தையும் பாக்கத்தானே போறீங்க…கமான். ஏதாவது சாப்பிடுங்க. நான் சில வேலைகளை முடிக்கவேண்டியிருக்கு” என்றபடி பிரசண்டானந்தா எழுந்தார். நான் எழுந்தேன். பிரசண்டானந்தா வெளியே சென்றதும் உதயபானு உள்ளே வந்து ”அப்போ, லெட் அஸ் ஹேவ் எ மீல்” என்றார். ”எந்தா ஸ்வாமி இந்நு ஸ்பெஷல்?” ”எவ்ரிதிங் இஸ் ஸ்பெஷல் ஹியர்…கமான்” என்று சிரித்து ”வரூ” என்று என்னிடம் சொன்னார்.

நாங்கள் அவரை பின்தொடர்ந்து சென்றோம். வெளியே வட்டவடிவமான குடில்கள் நடுவே நிலாவெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது. தென்னைமரத்தின் ஓலைநிழல்கள் தரையெங்கும் அசைந்தன. குடிசைகளுக்குள் இருந்து வாசல்கள் வழியாக மென்மையான செவ்வெளிச்சம்  தரையில் விரிப்புபோல விழுந்துகிடந்தது. குடில்களுக்குப் பின்பக்கம் நீளமான குடில்தான் உணவுச்சாலை. அங்கே நான்கு அரிக்கேன் விளக்குகள் எரிந்தன. நாங்கள் உள்ளே நுழைந்ததும் உள்ளிருந்து ஒரு வெள்ளைக்கார மாது எட்டிப்பார்த்து ‘ஹாய் கம்லா” என்றார். ‘ஹாய்” என்றபின் கமலா என்னிடம் ”திஸ் இஸ் லிஸ்” என்றார். லிஸ் பழுப்புநிறப் பற்களைக் காட்டி சிரித்து ”ஹாய்” என்றார். அவருக்கு நடுவயதிருக்கும். நீளமான கழுத்தும் நீளமான முகமும்  சாம்பல்நிறமான குட்டைமயிரும் கொண்டவர். மிகமெல்லிய உதடுகள், சற்றே மேலேந்திய சிறு மூக்குக்கு இருபக்கமும் சருமம் சிவப்பாக தீய்ந்திருந்தது.

கமலாவும் உதயபானுவும் லிஸ்ஸ¤டன் உள்ளே சென்றார்கள். நானும் மேனனும் அங்கே கிடந்த மேஜைக்குப்பின் அமர்ந்துகொண்டோம். முரட்டு மரத்தாலான மேஜை . அமர்வதற்கு பெஞ்சு. மேனன் புன்னகையுடன் ”ஐ திங் யூ ஆர் கன்·ப்யூஸ்ட்” என்றார். நான் புன்னகைத்து ”கொஞ்சம்” என்றேன். ”எனக்கு இந்த தியானம், யோகம், உபாசனா எதிலேயும் நம்பிக்கை இல்லை. ஆனா இது ஒரு செண்டர். இங்கே நிறையபேர் வராங்க. எல்லாருமே எங்களைமாதிரி லை·ப்ஸ்டைல் உள்ளவங்க…”என்றார் ”அதோட கமலாவுக்கு இந்த யோகசாதனைகளிலே நம்பிக்கை இருக்கு. வீட்டிலே தினமும் என்னென்னமோ தியானம்லாம் பண்றா…” என்று சிரித்தார்.

கமலா உள்ளிருந்து இரு பீங்கான் தட்டுகளுடன் வந்தார். ”இந்நு லிஸ் குக் செய்திரிக்குந்நு… இத்தலியன் ஐட்டமா” என்றார். கொழகொழவென்று சிறிய வெண்குழாய்களை சரிவாகச் சீவியதுபோல மாவுத்துண்டுகளும் தக்காளியும் பச்சைமிளகாய் போட்டு ஒரு தட்டு நிறைய மகரோனி வந்தது. நான் சாப்பிட்டிருந்த மகரோனியின் சாயலேதும் இல்லை. ஒரு வகை கேரள மகரோனி. ஸ்பூனால் சிறிது எடுத்து வாயில்போட்டேன். ஒரு சிறிய கொழகொழப்பு இருந்தாலும் நன்றாகத்தான் இருந்தது. ”வெஜிட்டேரியன்” என்றார் லிஸ். நான் ”நைஸ்” என்றேன். லிஸ் ”தேங்க் யூ” என்றார்.

”லிஸ் ஒரு டீச்சர். இத்தலியிலே ஒரு நைட் ஸ்கூலிலே வேலைபாக்கிறாங்க. அங்கே நைட்லே முழிச்சிருந்து அப்டியே பழகிட்டாங்க. வெகேஷனுக்கு இங்கே வந்திடுவாங்க” என்றார் கமலா. ”இங்கே நெறைய வெள்ளைக்காரங்க இருக்கிறாங்களா?” ”ஸ்திரமா அதிகம் பேர் இல்லை. ஆனா நெறையபேர் வந்திட்டுபோவாங்க. ஸீ, இது ஒரு பெக்கூலியர் லை·ப்ஸ்டைல் உள்ள  ஆசிரமம். இதுமாதிரி வேறே ஏதும் இல்லை இல்லியா?” ”ஆமாம்” என்றேன்.

லிஸ் குடிப்பதற்கு பால்விட்ட டீ கொண்டுவந்தார். ஆனால் டீயின் மணம் இல்லை. ”இது டீ இல்லை” என்று கமலா சிரித்தார். ”செஞ்சந்தனம், கிராம்பு, சர்க்கரை எல்லாம் போட்டு செய்ற ஒரு ஆயுர்வேத பானம்…ரத்தத்தை சுத்தம்பண்ணும். லங்ஸ¤க்கு நல்லது” என்றார். மேனன் என்னைப்பார்த்து ரகசியமாகக் கண்ணடித்தார். ஆசிரமத்திற்குள் வந்தது முதலே கமலா  உற்சாகம் மிக்க  இளம்பெண் போல ஆகிவிட்டதைக் கவனித்தேன். அத்தனை உரக்கவும் உயிர்த்துடிப்புடனும் அவர் பேசி நான் கவனித்ததில்லை.

”கம்லா” என்றபடி வெண்ணிற குர்தா அணிந்த உயரமான மனிதர் உள்ளே வந்தார். ஆங்கிலத்தில் ”நீ வந்ததை கேள்விப்பட்டேன். லைப்ரரியிலே இருந்தேன், அந்த பெயிண்டிங் காப்பி கெடைச்சுதா?” என்றார். கமலா ”அடடா, மறந்தேபோனேன். அடுத்தமுறை கண்டிப்பாக கொண்டுவருகிறேன் . ஸாரி முகர்ஜி சார்.” என்றபின் திரும்பி ”இது அதீந்த்ரியநாத் முக்கர்ஜி.. முக்கர்ஜி சாப், இது சரவணன். எங்கள் புதிய நண்பர்” என்று அறிமுகம் செய்தார்.

முகஞி வலுவான பெரிய கையை நீட்டி என் கைகளைக் குலுக்கினார் . ”நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ”நான் ஆடிட்டராக இருக்கிறேன்” என்றேன். சரிதான் என்பது போல கையை அசைத்து ”எனக்கு ஆடிட்டர்களில் ஆர்வமில்லை. என்னிடம் பணமில்லை” என்றபின் ”என்ன மேனன், எப்படி இருக்கிறீர்கள்?” என்றார்.

மேனன் ”நீங்கள் இன்னமும் குண்டாகிவிட்டீர்கள்” என்றார். ”நிஜமா? நான் தினமும் கடற்கரையில் எட்டுகிலோமீட்டர் நடக்கிறேனே” என்றார் முக்கர்ஜி. ”நீங்கள் ஏன் வெண்ணைசேர்க்காத சப்பாத்தி சாப்பிடக்கூடாது?” என்றார் மேனன். ”ஓ, என்னால் சாப்பாட்டில் சமரசம்செய்துகொள்ள முடியாது” என்ற முக்கர்ஜி ”வாருங்கள், நான் என் புதிய பெயிண்டிங்கைக் காட்டுகிறேன்” என்றார். மேனன் எழுந்து தட்டை உள்ளே கொண்டு சென்று தொட்டியில் போட்டார். நானும் பின்னால்சென்று பாத்திரத்தை கழுவ ஆரம்பித்தேன்.

உதயபானு என்னருகே வந்து ”நோ..யூ ஆர் அவர் கெஸ்ட்” என்றார். நான் சிரித்துக்கொண்டு ”ஸாரமில்ல” என்றேன். மேனனின் தட்டையும் கழுவி வைத்தேன். நானும் உதயபானுவும் மட்டும் ஆனபோது அவர் சட்டென்று சிரிப்பு அணைந்து ”மிஸ்டர் சரவணன், நிங்ஙள் இந்த கேங்கிலே சேர்ந்நு எத்ர நாளாயி?” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”ரெண்டுநாள்தான்” என்றேன். ”விட்டுட்டு ஓடிக்கோ…இதிலே இரிக்காதே…திஸ் இஸ் எ வெரி டேஞ்சரஸ் கேம்” என்றார் உதயபானு. நான் அச்சத்துடன் அவரது மீசையில்லாத நீள முகத்தையே பார்த்தேன். தீவிரத்தால் வெறித்த கண்களுடன் ”நீ நசிச்சு போகும்…ஜீவிதம் நாசமாகிப்போகும்..ரெக்ஷப்பெட்டோ…ஓடிக்கோ” என்றார் உதயபானு

லிஸ் உள்ளே வந்ததும் சட்டென்று உதயபானு திரும்பி வெளியே சென்றுவிட்டார். நான் பிரமை பிடித்து சிலகணங்கள் அப்படியே நின்றேன். வெளீயே கமலா ”சரவண்..ஆர் யூ கமிங்?” என்றார். ”எஸ்” என்றேன்

[மேலும்]