இரவு 5

சொல்லப்படாதவை இருண்டுவிடுகின்றன

ஒன்றுடன் ஒன்று தழுவி

அடித்தளத்தில் படிகின்றன

இருண்டு

இரவாகின்றன

அன்று பகல் முழுக்க நான் அயர்ந்து தூங்கினேன். விடிகாலையில் மேனன் வீட்டில் நன்றாகவே சாப்பிட்டிருந்தேன். சப்பாத்தி இட்லியைவிட மென்மையானதாக இருந்தது. தேங்காய்ப்பாலைச் சுண்டவைத்து உருளைக்கிழங்கு போட்டு செய்யப்பட்ட குருமா. கீரைபோட்டு செய்யப்பட்ட நெய்வாசமடித்த பருப்புக்கறி. அன்னாசிப்பழத்தைக் கொண்டு செய்யப்பட்ட புளிக்கறி, அதை கமலா புளிசேரி என்றார்.

நான் சிரித்தபடி ”கேரளத்திலே என்ன ஊர் பேரும் சாப்பாட்டுப்பேரும் ஒண்ணு மாதிரிரிருக்கு…நேத்து தாமரச்சேரீன்னு ஒரு ஊரைப்பத்திச் சொன்னாங்க” என்றேன். அவர் சிரித்தபடி வெண்ணிறமான ஒரு கறியை பரிமாறி ”இதுக்குப்பேரு காளன்…உங்க ஊரிலே இது மனுஷங்க பேரில்ல?” என்றார். நான் சிரித்தேன். கடைசியாக பிரதமன் வந்தபோது அதன் பேரைக்கேட்டதுமே நான் சிரிக்க ஆரம்பித்தேன்.

அற்புதமான உணவு. பால்விட்டு வெல்லம் போட்டு செய்யப்பட்ட பிரதமன் என் நாவில் ஒவ்வொரு புள்ளியிலும் தங்கி ருசித்தது. நாயர் ஒரு நம்பூதிரி ஜோக் சொன்னார். விருந்தில் மூக்குமுட்ட சாப்பிட்ட நம்பூதிரி சோறு மேற்கொண்டு தேவையில்லை, வயிற்றில் ஒருபருக்கைக்குக்கூட இடமில்லை என்றார். பரிமாறியவர் ‘அடாடா, பிரதமன் வருகிறதே’ என்றார். ‘வரட்டுமே சாப்பிடுகிறேன்’ என்றார் நம்பூதிரி. ‘அதெப்படி?’ என்று பரிமாறுபவர் வியந்தார். ‘திருவிழாக்கூட்டத்தில் யானைவந்தால் தானாகவே வழி உருவாகிவிடுகிறதல்லவா’ என்றார் நம்பூதிரி. நான் வெடித்துச் சிரித்தேன். ஏன் அப்படி சிரித்தேன் என சிரிக்கும்போதே நினைத்துக்கொண்டேன்.நீலிமாவை கவர நினைக்கிறேனா? இல்லை. என் மனம் முழுக்க உவகை இருந்தது.  அதற்கிணையான மகிழ்ச்சியுடன் நான் என் வாழ்நாளில் எப்போதுமே இருந்ததில்லை.

நீலிமாவும் நாயரும்தான் நில்லிவிடைபெற்று கிளம்பினார்கள். நாயர் என் கைகளை தன் கனத்த கைகளால் பற்றி ”அப்ப பாப்பம்” என்றார்.  ஏப்பம் விட்டு ”இங்கே எப்ப வந்தாலும் நான் ஏகப்பட்டது சாப்பிட்டுடறேன்…” என்றபின்  உடனே உரக்கச்சிரித்து ”அதனாலேதான் தினமும் வந்திடறேன்” என்றார். நீலிமாவின் கண்களை என் கண்கள் சந்தித்தன. அவள் மிகச்சிறிதாக தலையை அசைத்து புன்னகை செய்தாள். அந்த விடைபெறலில் இருந்த அந்தரங்கத்தன்மை என்னை ஒருகணம் உலுக்கியது. அவள் சென்ற பலநிமிடங்களுக்கு நான் அதிலேயே இருந்தேன். மலையாளிகள் பொதுவாகவே மெல்லிய பாவனைகள்  மற்றும் அசைவுகள் வழியாக  பலவற்றைச் சொல்லக்கூடியவர்கள் என எனக்கு தெரியும் என்றாலும் அக்கணத்தில் அது எனக்காகவே அவள் அளித்த அந்தரங்கமான ஒரு செய்தி என்றே பட்டது. ரகசியமான ஒரு தீண்டல்போல. ஏன், ரகசியமான ஒரு முத்தம்போல.

அவள் சென்றபின் சற்றுநேரம் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தோம். அதன்பின் நான் கிளம்பி என் வீட்டுக்கு வந்தேன். கதவைத்திறந்து உள்ளே சென்றபோது என் வீடு குளிர்ந்து தனித்து ஒரு காட்டுபொய்கை போல கிடப்பதாகப் பட்டது. நான் அதில் இறங்கிக் குளிக்கப்போவதாகவும். என்ன, மனம் முழுக்க ஒரு விசித்திரமான கிளர்ச்சி என்று எண்ணிக்கொண்டு சமையலறைக்குச் சென்று நானே ஒரு கறுப்பு டீ போட்டுக்கொண்டேன்.கோப்பையுடன் மேலே சென்று என் பால்கனியில் நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். முதலில் குளிர் இதமாக இருந்தது என்றாலும் மெல்ல மெல்ல  நடுக்க ஆரம்பித்தது. காயலில் இருந்து நேராக ஏறிவந்த காற்றில் நீர்ப்பாசியின் மணம் . உள்ளே போய் போர்வையை எடுத்துவந்து போர்த்திக்கொண்டேன்.

காயலின் அலையோசை காட்டின் இலையசைவு போல தோன்றியது. பின்னர்  வலிந்து ஒரு கற்பனையை உருவாக்கினேன், அது ஒரு மாபெரும்பட்டுப்புடவையின் சலசலப்பு. உடனே கற்பனை என்னை அறியாமலேயே விரிந்தது.  அது நீலநிறமான பட்டு. விளிம்பில் வெள்ளிச்சரிகை. அதை ஒரு வியாபாரி உதறி உதறி விரிக்கிறார். இல்லை அதை அணிந்து ஒரு பெண் இருளில் நடந்து செல்கிறாள். இல்லை அவள் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு காலாட்டுகிறாள்… என்னுள் அந்தக் கற்பனை தன்னை நிறுவிக்கொண்ட விதம் பிரமிப்பூட்டியது. ஒரு கட்டத்தில் உண்மையிலேயே அப்பால் ஒரு பட்டுப்புடவை அசைகிறதென்றே என் மனம் எண்ணியது.

வானில் நிறைய விண்மீன்கள் இருந்தன. நேற்று பகல் முழுக்க வானில் மேகங்கள் இருக்கவில்லை. அவை கடலோரம் குவிக்கப்பட்டிருக்கும் நைலான் மீன்வலைகள் போல கீழ்ச்சரிவில் கொஞ்சம் காணப்பட்டன. பின்பு கரைந்துவிட்டன. நட்சத்திரங்கள் குளிரில் நடுங்குவதுபோலிருந்தது. எனக்கு முன்னால் சரிவில் ஒரு நட்சத்திரம் தொலைதூர நியான்விளக்கு மாதிரி செம்மஞ்சள் ஒளியுடன் அதிர்ந்ததுளது ஏதோ கோள் என்று நினைத்துக்கொண்டேன். என் வாழ்நாளில் அத்தனை சாவகாசமாக  வானையும் நட்சத்திரங்களையும் பார்த்ததில்லை. அவை கீழே உற்றுநோக்கும் கண்கள் என்று பழங்குடிகள் நம்புகிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். எப்படி அவற்றை கண்களாக உருவகிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

ஆனால் சில நிமிடங்களில் நட்சத்திரங்கள் என்னைப் பார்க்க ஆரம்பித்தன. இருட்டுக்குள் நிற்கும் மிருகங்களின் கண்கள். இதோ இது ஒரு ஓநாய். இது புலி. இது மான். இவை முயல்கள். விலங்குகளின் கூட்டங்கள். மான்விழிகளுடன் ஒரு பெண் இருட்டுக்குள் நின்றிருக்கலாகாதா என்ன? அங்கே அக்கணத்தில் நானும் நீலிமாவும் நின்றிருந்தோம் என்று உணர்ந்தேன். ஆம், எங்களை நான் கண்டுகொண்டிருந்தேன். இரு மனங்கள் ஒன்றாக ஆன பிறகு ஒன்றாக ஆகிவிடும்பொருட்டு உடல்கள் தவிக்குமே அந்த தவிப்புடன் அங்கே நின்றிருந்தோம். நட்சத்திரங்கள் எங்களைப் பார்த்தன. நட்சத்திரக் கண்கள். எத்தனை கோடி கண்கள். பிரமித்த கண்கள்!

ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அறைக்குள் சென்று ஐபாடை எடுத்துவந்தேன். அதில் அந்தப் பாட்டை போட்டேன். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று’ என்ன ஒரு துள்ளலான குரல்! எப்போதும் அழியாத இளமை. சுசீலா இறந்து மண்ணாகி, அவர் நினைவுக்கும் வயதாகிப்போனாலும் இந்த இளமை நிலைநிற்கும். விண்மீன்களைப்போல என்றும் புதியதாக. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று. அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று’ அந்த இருளில் வேறெங்கோ இருந்து அந்தப்பாடல் காற்றில் ஏறி என்னிடம் வந்து என்னைத்தொட்டுவிட்டு மீண்டும் இருட்டுக்குள் சென்றது. சுசீலா ஒரு குரல் அல்ல. இறந்தகாலத்தின் இனிய நினைவு.  .

என் ஆழத்தில் ஒரு ஊற்றுவாயை திறந்துவிட்டது அப்பாடல். விடியற்காலையில் நம்மைத்தீண்டும் பாடல் கிறுக்காக்கிவிடுகிறது. என் பித்து மடைதிறந்தது. திரும்பத்திரும்ப அப்பாட்டையே கேட்டுக்கொண்டிருந்தேன். அது தவிர எதுவுமே என் மனதில் இருக்காதது போல. அந்த இரவு, நட்சத்திரங்கள், பச்சைமணமுள்ள காற்றசைவுகள், அலையோசை, நீலவெளி, அதன்மீது படிந்த தொடுவான்கோடு எல்லாமே அந்தப்பாடலாக இருந்தன. ‘அங்கும் இங்கும் அலைபோலே தினம் ஆடிடும் மானுட வாழ்விலே, எங்கே நடக்கும் எதுநடக்கும், அது எங்கே முடியும் யாரறிவார்?’ சுசிலாவின் குரல் காற்றில் பறக்கும் சரிகை. இருட்டுக்குள் ஒரு கரிய பறவை இருண்ட காயல் மீது தாவித்தாவிப்பறந்தது.

கிழக்கில் ஒரு மெல்லிய சிவப்புத்தீற்றல் விழுந்தது. கரிய சருமத்தில் கீறல் விழுந்து குருதி கசிவதுபோல. சட் சட்டென்று சில மேகங்கள் பற்றிக்கொண்டன. நான் பார்த்திருக்கவே ஏராளமான மேகமலைகள் வானில் பிறந்து வந்தன. நூற்றுக்கணக்கான கண்ணாடிச் சிற்பங்களை  வனைந்தபடிச் சென்றது கண்ணுக்குத் தெரியாத ஒரு கரம். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று’. என் நேர்முன்னால் ஒரு செக்கசிவந்த மேகம் குருதி படிந்த பஞ்சுபோல இருந்தது. பின் அதன் விளிம்புகளில் ஒளி சிதற அது படிகமாகியது. ஒரு மாபெரும் அலங்காரவிளக்காகியது. கீழே கருஞ்சாம்பல் நிறமான  அலைத்தளதளப்பாக காயல்  உருவாகி வந்தது. அதன்மேல் பாய்விரித்த நான்கு படகுகளும்  அவற்றை தாண்டிச் சென்ற மூன்று பறவை வரிசைகளும் உருவாகி எழுந்தன.

என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. என்னால் வானைப்பார்க்க முடியவில்லை.. கூசும் கண்களை இரு கட்டைவிரல்களால் அழுத்திக்கொண்டேன். மிண்டும் கண்ணைத் தூக்கியபோது இன்னமும் கூசியது. எழுந்து அறைக்குள் சென்றேன். அறைக்குள் இருந்த இளம் இருட்டு கண்ணுக்கு இதமாக இருந்தது. என்ன ஆயிற்று? இரவெல்லாம் இருட்டுக்குள் கூர்ந்து நோக்கி நோக்கி பாப்பாக்கள் பெரிதாகிவிட்டனவா என்ன? கண்களைக் கழுவிக்கொண்டபோது ஆறுதலாக இருந்தது. அறையின் சன்னல்களை நன்றாக மூடி ஏஸியை போட்டுவிட்டு படுக்கையில் படுத்தேன். என் உடல் படுக்கையை எவ்வளவுதூரம் நாடியிருந்தது என்று அப்போது புரிந்தது. என் கண்களுக்குள் இருட்டுக்குள் ஒரு கரிய காயல் பளபளத்துக்கொண்டே இருப்பதைக் கண்டபடியே தூங்கிப்போனேன்.

மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் பங்கஜம் வந்து கதவைத்தட்டினாள். கண்களை திறந்து “என்ன?” என்றேன். “”நாயர் சார் வந்திருக்கார்” “”ஆறுமணிக்கு வரச்சொல்லு” என்றேன். “”ஊணு எடுக்கட்டே?” நான் சாப்பாட்டைப் பற்றி யோசித்தபோது வயிறு மறுத்தது. “வேண்டாம்” என்றேன்.அவள் சென்றபின் மீண்டும் தூக்கம் என்னை இழுத்துக்கொண்டது. நான் பேசிக்கொண்டிருக்கும்போது தூக்கம் அருகே பொறுமையில்லாமல் காத்து நின்றிருந்தது போல.

நான் கண்விழிந்த்தபோது இருட்டியிருந்தது. எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு சன்னலைத் திறந்து வெளியே பார்த்தேன். காயல் கரும்பச்சைத்தைலம் போல நெளிந்தது. பாசிப்படலப்பாய்விரிப்புகள் எழுந்து அமர ஒரு பெரிய படகு விளக்குகளுடன் சென்றது. நீருக்குள் அந்தப்படகை ஒளிரும் மீன்களின் குழு ஒன்று தொடர்வதுபோல் இருந்தது. தாப்புவலை போடும் இரு பாய்மரப்படகுகள் செல்வதறியாது சென்றன. தூரத்தில் வான் சரிவில் சற்றே வெளிச்சம் சிந்தியிருந்தது. ஈரத்தரையில் ஒளி பிரதிபலிப்பது போல. அந்த ஈரத்தை யாரோ துடைப்பது போல ஒளி மறைந்தது.

பல்தேய்த்து சவரம் செய்து குளித்துவிட்டு கீழே வந்தேன். சமையலறையில் பங்கஜம் இருந்தாள். ”சோறு பூரி ரண்டுமே இருக்கு சார். ஹாட்பேக்கில் உண்டு…காபி பிளாஸ்கிலே இருக்கு…” என்றாள். நான் ”சரி” என்றபடி காபியை மட்டும் விட்டுக்கொண்டேன். கூடத்தில் வந்து அமர்ந்துகொண்டு செய்தித்தாள்களை வாசித்தேன். அதிகாலையின் செய்தித்தாள் வாசிப்பது போலத்தான் இருந்தது. ஏழுமணிக்கு உண்ணிகிருஷ்ணன் வந்தார். “என்ன சார் உறக்கமா?” என்றார்.

நான் அவரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தேன் ”வேறே ஏதாவது சகாயம் வேணுமானா சொல்லுங்கோ சார்” என்றார். ”எங்கயாவது போகணுமானா நான் வருவேன்” என்றார். நான் ”பரவாயில்லை” என்றேன். அவர் கிளம்பிச் செல்லவேண்டுமென்று பொறுமையிழந்திருந்தேன். மேனன் வீட்டில் நெய்விளக்கொளி சன்னமான வண்ணம் போல இருட்டில் ஊறிப்பரவியிருந்தது. அங்கே மெல்லிய வீணை ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. உண்ணிகிருஷ்ணனை நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அன்றைய அரசியல் செய்திகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

‘யார் இந்த மனிதன்!’ என என் மனம் வியந்தது. இவனுக்கும் எனக்கும் என்ன உறவு. இவன் வாழும் உலகம் எனக்கு மிக அப்பால் எங்கோ இருக்கிறது. உதவாத செய்திகள், அவை அளிக்கும் பதற்றங்கள், ஆவல்கள், இலட்சியங்கள், ஏமாற்றங்கள். .. மேனன் வெளியே இறங்கி முற்றத்தில் நின்று என்னைப் பார்த்தார். கைதூக்கி ‘ஹாய்’ என்றார். நான் ”குடீவினிங் அட்மிரல்” என்றேன். ”குடீவனிங். நாங்க ஒரு சின்ன டிரிப் போறோம். விரும்பினா கூட வரலாம்” நான் சிரித்து ‘நீங்கள் உங்கள் பேரழகியான மனைவியுடன் அல்லவா செல்கிறீர்கள்” என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.”ஆமாம், ஆனால் எனக்கு ஒரு நல்ல சாட்சி இருந்தால் பிடிக்கும்” என்றார் அவர் சிரித்தபடி. ‘ஒரே நிமிஷம்’ என்றபின் உண்ணிகிருஷ்ணனைப் பார்த்தேன்.

”அப்போ நான் கிளம்பறேன் சார்” என்று எழுந்தார் அவர்.நான் மேலே விரைந்து பாண்ட் சட்டை ஷ¥ அணிந்து செல்போனை எடுத்துக்கொண்டு கீழே வந்தேன். வீட்டைப்பூட்டிவிட்டு மேனனின் வீட்டு முற்றத்திற்குச் சென்றேன். கமலா ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தார். “ஹாய்” என்று அழகாகப் புன்னகை செய்தார். ”ஆர் யூ கமிங் வித் அஸ்?”  ”யா”  ”நைஸ்” என்றபின் ”வா” என்றார். அந்த ஒருமை எனக்கு பிடித்திருந்தது

மேனன் ஓட்டினார். நான் அவர் அருகே அமர்ந்திருந்தேன். பின்பக்கத்து இருக்கையில் கமலா இருந்தார்.  நான் மேனனிடம் ”நாம் இருக்கும் இடத்தின் பெயர்  என்ன?” என்றேன். ”சரியாகச் சொன்னால் சாத்தநாட்டுக்கரை. இதெல்லாம் ஆளில்லாத சதுப்புகள். இப்போதுதான் கட்டிடங்கள் தோட்டங்கள் எல்லாம் வருகின்றன..” என்றார் மேனன். கார் என்.எச்.17 வழியாக நகரத்திற்குள் நுழைந்தது. அவ்வேளையில் எல்லா விளக்குகளும் ஜொலிக்க நகரத்தெருக்கள் செம்பிழம்புகள் ஆட பற்றி எரியும் காடு போலிருந்தன.

”இவளுக்கு சில துணிகள் எடுக்க வேணுமாம். இவளைக் கொண்டுபோய் கடையில் விட்டுவிட்டு நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்” என்றார் மேனன். எம்.ஜி.ரோட்டில் ஆதிரா சில்க்ஸில்  கமலாவை இறக்கிவிட்டு எதிரே இருந்த பார்லருக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். அவ்வேளையில் எல்லா நாற்காலிகளிலும் குடும்பங்கள் அமர்ந்திருந்தன. புஷ்டியான சிறு குழந்தைகள் நிறைந்து ததும்பும் கோப்பைகள் போல அலைமோதிக்கொண்டிருந்தன.

கண்ணாடிச்சன்னல்வழியாக நகரத்தைப் பார்த்துவிட்டு மேனன் திரும்பினார் ”ஒன்று கவனிச்சிருக்கியா, எந்த நகரத்திலேயேயும் ராத்திரியிலே ஜனங்கள் உற்சாகமாக பொங்கிட்டிருக்கிறதைத்தான் பாக்க முடியும். இதோ இந்த தெருவிலே போயிட்டிருக்கிற ஒருத்தராவது டல்லா போறது மாதிரி இருக்கா?” என்றார். உண்மைதான், நான் அதை ஒருபோதும் கவனித்ததில்லை. தெருவில் சென்றுகொண்டிருந்த அத்தனைபேருமே உல்லாசமாகத்தான் தெரிந்தார்கள். குழந்தைகள் உயிர்த்துடிப்புடன் பேசிக்கொண்டு அங்குமிங்கும் கண்கள் அலைய நடந்தன. சிரிப்பு நிறைந்த முகத்துடன் பெண்கள். கவனமான உற்சாகத்துடன் ஆண்கள்.

இதோ கையில் ஏழெட்டு பிளாஸ்டிக் பைகளுடன் மனைவியையும் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சாலையைக் கடக்க நிற்கும் இந்த மனிதர் இரவில் அல்லாமல் இந்த முகமலர்வுடன் இருப்பாரா? இதோ தூணைப்பற்றியபடி நின்று இளைப்பாறும் கனத்த பாட்டியின் முகத்தில் கூட சிரிப்புதான் கொஞ்சம் முன்னால்போய்விட்டிருந்த இரு இளம்பெண்கள் திரும்பிவந்து ஏதோ கேட்க அவர் பூரிப்பும் சிரிப்புமாக ஏதோ சொல்கிறார். நான்கு பையன்கள் உரக்க ஏதோ சொல்லிச் சிரித்துக்கொண்டு செல்கிறார்கள். ஆம், மொத்த நகரமே இரவைக் கொண்டாடிக்கொண்டிருந்த்து. அதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

எங்காவது, எந்த ஊரிலாவது இரவில் சாலையில்  துயரமான எவரையாவது சந்தித்திருக்கிறேனா? நினைவில் எங்குமே ஒரு முகம் கூட இல்லை. கடும் உழைப்பாளர்கள், கைவிடப்பட்டவர்கள்கூட இளைப்பாறல் தெரியும் முகங்களுடன்தான் இருக்கிறார்கள். இரவில் ஒளிபெற்று ததும்பும் நகரத்தெருக்களில்  மலர்ந்து அலையும் நூறுநுறாயிரம் முகங்கள்தான் நினைவில் நிறைந்தன. சென்னை, மும்பை, டெல்லி ,நியூயார்க், லாஸ் ஆஞ்சலிஸ், டோக்கியோ, குலாலம்பூர், சிங்கப்பூர், சிட்னி…ஆம். சொன்னால் ஒரு அபத்தமான நம்பிக்கை போலிருந்தாலும் அது உண்மை.  இரவில் மனிதர்கள் மலர்கிறார்கள்.

”ய…யூ ஆர் ரைட்” என்றார் மேனன் என் மனதை இயல்பாக படித்தபடி. “பார்த்தாயா, இந்த மனிதர்கள் எல்லாமே இரவில் ஒளிபெற்றவர்கள் போலிருக்கிறார்கள். அவர்களின் ஆடைகள் முகங்கள் எல்லாமே இரவிலே மின்னுகின்றன. ஆனால் பகலில் இவர்கள் சோர்ந்து சூம்பிப்போயிருப்பார்கள்…” நான் பெருமூச்சுடன் தலையசைத்தேன். ”மிக எளிமையான விஷயம். இவர்களுக்கு தெரியவில்லை அது” என்றார் மேனன்.  ”இரவுதான் இவர்களுக்காக இயற்கை வகுத்த நேரம். ஆனந்தத்தை அறியும் புலன்கள் இரவில்தான் கண்விழிக்கின்றன”

”பிரவுன் கேர்ல் இன் த ரிங்” என்று போனி-எம் அதிர ஆரம்பித்தது. மலையாளிகளுக்கு போனி-எம் என்றால் மேற்கே திறக்கும் சன்னல் போல. எத்தனையோ வருடங்களாக இதை கேரள கபேக்களில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் என் கால்கள் தாளமிட ஆரம்பித்தன. எனக்குள் வேறு ஒரு உடல் புரண்டு நடனமிட்டது.

கமலா செல்போனில் அழைத்தபோது நாங்கள் கிளம்பிச் சென்று அவரை அழைத்துக்கொண்டோம். கமலா வாங்கிய சேலைகளை என்னிடம் காட்டினார். பெரும்பாலும் சிவப்பின் வகைபேதங்கள். ”இந்தச் சேலைகளை பகலிலிலே கட்டமுடியாது. கண்ணைப்பறிக்கும் என்பார்கள்…” என்றார் கமலா. ”நீலத்தில் எடுத்திருக்கலாமே” ”உனக்குப் பிடித்த நிறம் நீலமா?” என்றார் கமலா. ”ஆமாம்” என்றேன். ”இரவில் நீலம் சரியாக தெரியாது. ஏனென்றால் இரவே நீலநிறமானதுதானே?” மேனன் சொன்னபடி காரை ஓட்டினார்.

கமலா என்னிடம் மெல்லிய புன்னகையுடன் ”ஸோ யூ லைக் நீலிமா” என்றார். என் உள்ளம் ஜிலீரென்றது. அவர் கண்களைப் பார்க்காமல் திருப்பிக் கொண்டேன். ”நான் அவசரப்படறேன்னு நீ நினைக்கலாம். ஆனா..”என்றார் கமலா. நான் அவரை நோக்கி திரும்பினேன். அவர் சட்டென்று முகம் மீது தனி விளக்கொன்று விழுந்ததைபோல சிவந்து ஒளிகொண்டு ”நான் திரும்பி வர்ரப்ப நீங்க ரெண்டுபேரும் அமைதியா இருந்தீங்க. ஆனா ரெண்டுபேருமே ஒருத்தரை ஒருத்தர் கவனிச்சுகிட்டும் இருந்தீங்க. தட் வாஸ் எ ஸம்மிட்” என்றார். அதை நானும் உணர்ந்தேன். நான் புன்னகைசெய்தேன்

”ஸோ ஸம் திங் கோயிங் டு ஸ்டார்ட்” என்றார் மேனன். ”இண்டிரஸ்டிங்” நான் பதறி ”அதெல்லாம் இல்லை அட்மிரல். நான் சும்மா…” என் மனம் திம் திம் என அறைந்தது. ”ஐ லைக் ஹெர்..தட் இஸ் ஆல்” மேனன் உரக்கச் சிரித்தபடி ”டார்லிங், இட் இஸ் ரியல்லி எ ·பன் டு ஸீ தி லவர் பாய்ஸ்.. ” என்று கமலாவை கண்ணாடியில் பார்த்து கண்ணடித்தார்.கமலா சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்தார். எதிர் காரின் ஒளியில் அவரது சிவந்த உதடுகளுக்குள் சிறிய தூயவெண்பற்களின் அழகிய வரிசை செவ்வியல் ஓவியங்களில் விரியும் மகத்தான புன்னகை போலிருந்தது.

பானர்ஜி சாலையில் வரிசையாக தலையில் ஒளியுடன் நின்ற விளக்குத்தூண்கள் கடந்துசென்றன. செங்கனி ஒன்று மட்டும் பழுத்து நிற்கும் மரங்கள். தூரத்தில் விளக்குகளினாலான கோடாக அவை வளைந்தன. சிவந்த விளக்கொளி ஒழுகும் ஓடைகளாக ஆயின. விளம்பரத்தட்டிகள் இருளின் சுவரில் மாட்டப்பட்டிருப்பவை போல ஒளிகொண்டு வானில் நின்றன. நகரத்தின் சந்திப்புகளில் எல்லாம் பெரிய ஹோலோஜன் விளக்குகள் நிலாக்களாக ஒளிவிட்டன. நூறு நூறு நிலாக்கள்.நான் சட்டென்று இயல்பாக அந்த வரியைச் சென்றடைந்தேன். ”இரவுக்கு ஆயிரம் கண்கள்… ”

 நான் முணுமுணுப்பதைக் கேட்டதும் கமலா ”என்ன பாட்டு?” என்றார். நான் அதைப் பாடத்துணியாமல் வரிகளாகச் சொன்னேன். ”குட் சாங்” என்றார் மேனன். ”சுசீலா இஸ் அ டிவைன் சிங்கர்” கமலா என்னிடம் ”யார் இதுக்கு மியூசிக்? எம்.எஸ்.வியா?” என்றார். நான் ”இல்லை கே.ஆர்.மகாதேவன்” என்றேன். ”ஓ” என்றார் அவர். மேனன் ”இரவுக்கு ஆயிரம் கண்கள். இரவு ஒரு இந்திரன். பகல்னா சிவன். ஒரே ஒரு நெற்றிக்கண் மட்டும்தான்” என்றார். நான் புன்னகைசெய்தேன். கமலா மெல்ல ”இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று…”என்று முனகலாக பாட ஆரம்பித்தார். துல்லியமான இனிய குரல்.

அந்தப் பாடல் வழியாக மிதந்துசெல்வதுபோல ஒளிததும்பிய சாலைவழியாக சென்றோம். சாம்பல்நீலப்பட்டுப்பரப்பாக கிடந்த காயல்மீது கோஸ்ஸ்ரீ பாலம். அதற்குப்பின் வல்லார்ப்பாடம் பாலம். தென்னைமரக்கூட்டங்கள் அடர்ந்த அரைச்சதுப்பு நிலங்களுக்கு மேல் நகரத்தின் செவ்வொளியை திருப்பியளித்த வானம் விடிகாலையின் செம்மங்கலுடன் விரிந்திருந்தது. காரின் பின்பக்கச் சன்னல் வழியாகப் பார்த்தபோது நகரில் பெரும் தீப்படலம் நிறைந்திருப்பதாக பிரமையெழுந்தது. வானத்தில் முக்கால் நிலவு தனித்து தன் மேகங்களுடன் அசையாமல் நின்றது. விண்மீன்கள் வானத்தின் செம்மங்கலில் பெரும்பாலும் ஒளிகுன்றி மறைந்திருந்தன. கீழ்ச்சரிவில் மட்டும் சிவந்த கோள் ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்…’ சுசீலா ஒரு தனித்த நட்சத்திரம்.

பக்கவாட்டில் துறைமுகப்பகுதி தெரிந்தது. ஹோலோஜன் விளக்குகள் எரிய அப்பகுதி மண்ணில் இருந்து சற்றே தூக்கப்பட்டு அந்தரத்தில் நிற்பது போலிருந்தது. ஓர் உயரமான கிரேனின் மீது விளக்கொளியில் ஒரு மனிதன் வானில் நடக்கும் தேவனைபோல இருள் மீது சென்றான். கரியவானின் பட்டுப்பரப்பில் சிவப்பு பச்சை விளக்குகள் ஒளிர ஒரு சிறு பூச்சி போல ஆகாயவிமானம் ஒன்று ஒட்டியிருந்து மெல்ல ஊர்ந்து சென்றது. சாலையில் மரக்கிளையில் அடர்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான மின்மினிகள் போல பின்புறம் ஒளிரும் கார்கள். அவை தயங்கி பின் முந்த முயன்று பின் விர்ரிட்டு சென்றுகொண்டிருந்தன. கட்டிடங்களின் அடுக்குகளில் விளக்குகள் எரிய அவை எடையில்லாதவையாக ஆகி இருளில் மிதந்து நின்றன. தூரத்தில் எர்ணாகுளம் நகரம் உருகும் பொன்னாலானதாக தகதகத்துக்கொண்டிருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் 4
அடுத்த கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் 5