இரவு 4

தனிமையை

இரவால் போர்த்திக்கொள்ள முடியும்.

தனிமையின் ஒவ்வொரு சொல்லுடனும்

தாயின் கனிவுடன் உரையாட

இருளால் முடியும்.

மேனன் பெருமூச்சுடன் ”சங்கீதம் ராத்திரிக்கு மட்டுமே சொந்தமான ஒரு கலை…பகலிலே பாட்டு கேக்கிற முட்டாள் பாட்டே கேட்டதில்லை” என்றார். ”கமலம்…எனக்கு ஒரு இன்ச் பிராந்தி..” என்றபின் என்னிடம் ”நீ?” என்று கேட்டார். நான் ”நோ” என்றேன். ”டோண்ட் பி ஷை..” ”நோ…நான் குடிக்கிறதில்லை” ”தட் இஸ் கூட்” என்றார் அவர்

வெண்ணிற ஒளியாலானது போன்ற மிக மெல்லிய கண்ணாடிக்கோப்பையில் தவிட்டுநிறப் படிகம்போல பிராந்தி வந்தது. அவர் அதை கையில் வைத்து திருப்பித்திருப்பிப் பார்த்தார் ”கண்ணாடிக்கு திரவங்கள்கிட்ட ஒரு உறவிருக்கு பார்த்தியா? ஒரு வகையான ரொமான்ஸ், ஐ மீன்  காதல். கண்ணாடி திரவங்களை தழுவிக்கொள்கிற மாதிரி எதுவுமே செய்றதில்லை. கண்ணாடியோட அணைப்புக்குள்ள்ளே திரவங்கள் கொள்கிற வசதியையும் அழகையும் வேற எப்பவுமே அதுகளிலே நாம பாக்க முடியாது… அதோட கண்ணாடி அதன் பூரண அழகோட இருக்கிறது ராத்திரியிலேதான்…பகல் வெளிச்சம் கண்ணாடியை கூசி சுருங்கி இல்லாம ஆக்கிடறது”

கோப்பையை திருப்பித்திருப்பி பார்த்தார் ”நான் இந்தகோப்பையை பெல்ஜியத்திலே இருந்து இம்போர்ட் பண்ணினேன்…இதைக் கழுவறதுக்கு தனி பஞ்சும் லிக்விடும் அவனே குடுப்பான்…நைஸ்!” ஆனால் குடிக்கவில்லை. நான் கோப்பையையே பார்த்தேன். அது என்னை மனவசியம் செய்வதுபோல் இருந்தது. திரவங்களும் படிகங்களும் ஒளிகொள்ளும்போது நம் கண்களை ஈர்த்து நினைவுகளின் நிறம்படரச்செய்துவிடுகின்றன.

”ஒரு இண்டியூஷன்..பிகே வருவார்னு நினைக்கிறேன்…” நான் புன்னகையுடன் ”அவர்தான் கம்பெனியா?” என்றேன். ”ஆமா…ஆனா மொத்தம்  நாப்பத்திரண்டுபேர் குடிக்கிறவங்க இருக்காங்க… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். பாதிபேர் பீரோட சரி…பிராந்திகுடிக்கிறவங்க நானும் பிகெயும் மட்டும்தான்…”

”நீங்க நல்லா தமிழ் பேசறீங்க” என்றேன். ”மை காட்…நான் சொல்லலியா? தமிழிலே பேசறதுக்கு ஒரு ஸ்டார்ட்டிங் வேணும். ஆரம்பிச்சா உன்னைவிட துல்லியமா பேசுவேன். கன்னடமும் பேசுவேன். அப்றம் ஹிந்தி…பெங்காலி… ” என்றார் ” அதோட நான் நல்லாவே தமிழ் வாசிப்பேன். ஆக்சுவலி ஐ மெட் டி.ஜானகிராமன் ட்வைஸ்….ஒரு தடவை அவர்கூட நான் ரயிலிலே சேந்து டிராவல் பண்ணியிருக்கேன்…” உரக்கச்சிரித்தபடி ”ஹி வாஸ் லைக் எ ஷை பிராமின் லேடி…” என்றார்

நான் புன்னகை செய்தேன். அவர் அந்தக்கோப்பையை இருமுறை முகர்ந்தபின் மஜீதிடம் ”பாடுடா மஜீதே” என்றார். ”மதி..” என்ற மஜீத் எழுந்து சென்று ஒரு அலங்காரப்பெட்டியை திறந்தார். புராதனமான ரிக்கார்ட் பிளேயர் அது. ஆனால் அதை நவீன ஸ்பீக்கர்களுடன் இணைத்திருந்தார்கள். இருட்டு அங்கே கொஞ்சம் பளபளப்பாக ஆனதுபோல கிரா·பைட்டாலும் அரக்காலுமான அந்தக்கருவி தெரிந்தது.

மஜீத் ஒரு கனமான பழைய எல்பி ரிகார்டை எடுத்து அதை வாசித்தார்.  அவர் அந்த எல்பி ரெகார்டை எடுத்தபோது என் மனம் துணுக்குற்றது. அவர் ஒரு வட்டமான இருட்டுத்துண்டை கையில் எடுப்பது போலவே இருந்தது. இருளுக்குள் அதன் பளபளப்பு நெளிந்து மறைந்தது.கரும்பச்சை வெல்வெட் மீது மெல்ல வைத்தபோது என் மனத்தின் மெல்லிய பரப்பொன்றில் அதை வைத்தது போலிருந்தது. அதன் மீது ஊசி தொட்டபோது என் உடல் சிலிர்த்தது. மெல்லிய ரீங்காரம். பின்பு கோழிக்கோடு அப்துல்காதரின் கனத்த குரல் எழுந்தது. ‘ரம்ஸானிலே சந்திரியகல்லே? ரா¡க்கிளியுடே மந்த்ரணமல்லே? ஆமினா ஆமினா ஆமினா…”

இசையின் வருடலுக்குள் இசையின் ஒரு பகுதிபோல தூரத்தில் ஒரு பாத்திரம் நகருமளவுக்கு ஒலியாக ஒரு கார் வந்து திரும்புவது கேட்டது. வெளியே மென்மையான காலடிகள். கதவு ஓசையில்லாமல் காற்றால் திறக்கப்படுவதுபோல திறக்க வாசலில் பெரிய தொந்தியுடன் உற்சாகமான அறுபதுவயதுக்காரர் சிரித்தபடி நின்றார். மேனன் தலையை லேசாக அசைத்தார். அவர் உள்ளே வந்தபோது நான் எழப்போக கையை லேசாக அசைத்தபின் அவர் உள்ளே வந்து சோபாவில் திமிங்கலம் நீரில் மூழ்குவதுபோல மென்மையாக அமர்ந்தார்.

கதவருகே ஒரு நிற அசைவு. நான் திரும்பி பார்த்தக் கணத்தில் அங்கே நின்றிருந்த பெண் ஒரு காலை மெல்லத்தூக்கி அதிலிருந்த செருப்பின் வாரை அவிழ்த்துக்கொண்டிருந்தாள். லேசாக முன்னால் குனிந்து சரிந்து இடதுகையால் வலது கால் செருப்பை அவிழ்க்கும் கோணத்தில் நான் அவளுடைய முன் தலையையும் கன்னங்களையும், கழுத்தையும், தோள்களையும், ஜாக்கெட்டுக்கு மேல் திறந்த மேல்மார்பையும் இரு கைகளையும் மட்டும்தான் கண்டேன்.

அறையின்  தீப ஒளி காற்றில் மெல்ல அசைந்தது .அவளுடைய உடல் கருமையில் செவ்வண்ணத்தால் வரையப்பட்ட ரெம்ப்ராண்ட் ஓவியம் போலிருந்தது.  அபாரமான வெண்ணிறச் சருமம் கொண்டவளாக இருக்கவேண்டும். அதில் செந்நிற ஒளி பட்டு அவள் கன்னங்களும்  நீண்ட கழுத்தும் திறந்திருந்த தோள்குழிகளும் படிகம் போல மின்னின.  கைகளின் அசைவில் இரு மார்புகளும் சற்றே அழுந்தி உருவான சிறிய பிளவு ஒருகணம் ததும்பி மறைந்தது.

அவள் அன்னியனைக் கண்டதும் தன் புடவைவையை சரிசெய்தபடி உள்ளே வந்தாள். நான் என்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கே இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையை முழுமையாகவே இழந்துவிட்டிருந்தேன். அவள் தலைமயிரை லேசாக ஒதுக்கியபடி பார்க்கப்படும்போது பெண்களுக்கு உருவாகும் பெருமையும், சலிப்பும், மகிழ்ச்சியும் கலந்த அக்கறையின்மையைக் காட்டியபடி என்னை நோக்கி கண்களை திருப்பாமல் வந்து சோ·பாவில் அமர்ந்தாள். ஆனால்  அவள் கண் அனிச்சையாக என்னைவந்து அரைக்கணம் தொட்டுச்சென்றதும் கைகள் முந்தானையை மேலே இழுத்து விட்டன.

அப்துல்காதர் மெல்ல முனகி அமைதியானதும் கருவியில் முள் ர்ர்ர் என்று உரசிச்சென்றது. அவரது குறிப்பறிந்து மஜீத் பிளேயரை அணைத்தார். கனமான அமைதி நிலவியது. பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்த மேனோன் ”ஐ வாஸ் எக்ஸ்பெட்டிங் யூ” என்றார். குண்டுமனிதர் புன்னகைசெய்து என்னைப்பார்த்தார். ”திஸ் இஸ் சரவணன். ·ப்ரம் சென்னை…”

அவர் என்னை நோக்கி நட்பாக புன்னகைசெய்தார். ”நான் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். சரன் அக்கவுன்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்துகிறேன்…” என்றேன் ஆங்கிலத்தில். மேனோன் ”இது குமாரன் நாயர். லாயராக இருந்தார். இப்போதும் பிராக்டீஸ் செய்கிறார். இது அவர் மகள் நீலிமா நாயர்” என்றார். நீலிமா என்னை நோக்கி கச்சிதமாகப் புன்னகைசெய்தாள். சிவந்து கனிந்து மலர்ந்த உதடுகளுக்குள் இரு சிறு பற்கள் தோன்றி மறைந்தன.  இரு கன்னங்களிலும் குழிகள் உருவாகி கரைந்தன. நீர்ப்பரப்பில் காற்று  உருவாக்கும் சுழி போல. ஆனால் கண்கள் புன்னகை இல்லாமல் எச்சரிக்கையாக என் கண்களை ஊசிமுனையை ஊசிமுனை போல தீண்டிச்சென்றன.

மேனன் என்னிடம் ”நாயரும் நன்றாக தமிழ் பேசுவார்… அவரும் சென்னையில் இருந்திருக்கிறார்…” என்றார். நான் ஆச்சரியத்துடன் ”மெட் ராஸிலேயா?” என்றேன். ”ரொம்ப காலம் முன்னாடி..ஐ திங் ஆன் எயிட்டீஸ்…” நாயர் மகளைச் சுட்டிக்காட்டி ”இவள் அங்கே பத்மாசேஷாத்ரியிலேதான் படிச்சாள்” என்றார்

”அங்கே என்ன செஞ்சீங்க?” நாயர் ”நான் அங்கேதான் லாயரா இருந்தேன். என்னோட ஏரியா கம்பெனி லா. தென் ஐ கேம் பேக்” அவர் முகத்தில் சிறிய ஒரு உணர்வுமாற்றம் தெரிந்தது. மேனன் என்னிடம் ”அவருக்கு ஒரு சின்ன பிரச்சினை… அங்கே இருக்க முடியாம ஆச்சு. இங்கே வந்திட்டார். இப்ப லீகல் அட்வைஸ் மட்டும் பண்றார்…” என்றார்.

நான் நீலிமாவை பார்த்தேன். அவள் தன் கையின் நகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். என் கண்கள் அவள் மீதிருப்பது அவளுக்கு தெரியும் என்று அவள் சருமத்தில் இருந்தே தெரிந்தது. என் கண்கள் அவள் சருமத்தில் எந்த இடத்தைப் பார்த்தனவொ அந்த இடத்தில் காயல்பரப்பில் காற்று பரவுவது போல மெல்லிய புல்லரிப்பு எழுவதை கண்டேன். அவள் கழுத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். மென்மை மென்மை மென்மை என்ற சொற்களாக இருந்தது அது. அவள் கை ஒன்று அனிச்சையாகச் சென்று அந்தக்கழுதை வருடி இறங்கியது.

”எந்தா மஜீதே?” என்றார் நாயர். ”ஓ…” என்று மஜீத் சிரித்தார். கமலா உள்ளிருந்து வந்து ”டா மஜீதே…. நினக்கு உள்ளில் எடுத்து வச்சிட்டுண்டெடா” என்றார். மஜீத் உள்ளே சென்றார். ”அப்போள் நமுக்கு துடங்ஙாம்” என்றார் மேனன். நாயர் எழுந்துசென்று ·ப்ரிட்ஜை திறந்து உள்ளிருந்து வண்ணமயமான புட்டியையும் ஒரு கோப்பையையும் எடுத்து வந்தார். டீபாயை இழுத்துப்போட்டு அதை வைத்தார். ”என்னா கமலா  தமிழிலே பேசுவோமா?” என்றார்.

கமலா சிரித்தார். ”சோடா…கொண்டுவா தங்கமே” என்றார் நாயர். ”ஒரு லார்ஜ்…அதுக்கு மேலே போனா நான் வீட்டிலே இருந்து பிடிச்சு இறக்கி விட்டிருவேன்” என்றபடி கமலா உள்ளே சென்றார். அவர் அந்த குப்பியை கைக்குழந்தை போல எடுத்து மெல்ல வருடி கொஞ்சினார். அதை உள்ளங்கையில் அடித்தபின் மூடியை திருகி திறந்து கார்க்கை பல்லால் கடித்து திறந்து மேஜைமேல் வைத்தார். புளித்த பழரச மணம் எழுந்தது.

”சரவணன் குடிக்குமா?” என்றார் நாயர். ”நோ…ஹி இஸ் எ டீடோட்டலர்” என்று மேனன் பதில் சொன்னார். ”தட் இஸ் ஸ்டிரேஞ்ச். ஹி இஸ் எ பிஸினஸ்மேன் யூ நோ” என்றபடி நாயர் பொன்னிறமான திரவத்தை கொஞ்சமாக கோப்பையில் ஊற்றினார். அதன் ஒளி டீபாயின்மீது ஒரு பொன்னிறச் சிதறலாக விழுந்து கிடந்தது. நாயர் கைகளை உரசிக்கொண்டு பின்னால் சாய்ந்து ”மேன் திஸ் இஸ் லை·ப்” என்றார்.

நான் நீலிமாவைப் பார்த்து ”நீங்க குடிப்பீங்களா?” என்றேன். அவள் நான் அவளிடம் பேசுவதையே எதிர்பார்த்திருக்காதவள்போல பதறி ”ஓ..நோ…மை காட்!” என்றாள். சிரிப்புடன் முகம் சிவந்தது. நாயர் ”லுக் மிஸ்டர் சரவணன் அவள் நல்லா பாடுவாள். வயலின் வாசிப்பாள்… அதுபோதும் அவளுக்கு…”என்றார்.

நீலிமா என்னைப்பார்த்து மென்மையாகப் புன்னகைசெய்து ”சுமாரா” என்றாள். மேனன் ”நோ…ஷி இஸ் ரியலி நைஸ்” என்றார். கமலா சோடாவுடனும் நீருடனும் வந்து ”குமாரேட்டா… பறஞ்ஞது ஓர்மையுண்டல்லோ?” என்றாள். ”உண்டே” என்று நாயர் இருகைகளாலும் வாய்பொத்தி பவ்யம் காட்டியபின் கடகடவென சிரித்தார்.

கமலா என்னிடம் ”தென் வை யூ ஆர் சிட்டிங் தேர்? கமான்…” என்றார். நீலிமாவிடம் ”வாடீ” என்றபின் உள்ளே சென்றார். நான் மன்னிப்புத்தோரணையில் இருவரிடமும் புன்னகைசெய்தபின் கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தபடி உள்ளே சென்றேன். எனக்கு கொஞ்சமாக தூக்கம் வர ஆரம்பித்திருந்தது. மணி பன்னிரண்டு தாண்டிவிட்டது.

உள்ளே எல்லா அறைகளிலும் நெய்தீபங்களோ மெழுகுவத்திகளோ எரிந்தன. நெய்விளக்குகளின் சுடரிலிருந்து புகை வருவதில்லை என்பதைக் கவனித்தேன். வீட்டின் பின்பக்கம் ஒரு மரப்படி இருந்தது. அதில் ஏறி மேலே சென்றால் மரத்தால் தரைத்தளம் போடப்பட்ட ஒரு பெரிய பால்கனி. அதில் வெண்ணிற பெயிண்ட் அடிக்கப்பட்ட சூரல் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

கமலா அமர்ந்துகொண்டார். நான் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டதும் என் எதிரே அமராமல் பக்கவாட்டில் நீலிமா அமர்ந்துகொண்டாள். அப்படித்தான் அவள் அமர்வாள் என நான் எதிர்பார்த்திருந்தேன். இப்போது அவளைப்பார்க்கவேண்டுமென்றால் நான் நன்றாக திரும்பவேண்டும்.

எனக்கு முன்னால் தூரத்தில் இருட்டில் ஒரு வெண்சுவர் சாம்பல்நிறமாகத் தெரிந்தது. அதன் மீது ஒரு சுடர் பரவிசென்றது. சில கணங்களுக்குப்பின்னால்தான் அது காயல் என்று உணர்ந்தேன். அதையே பார்த்துக்கொண்டிருந்தபோது கொஞ்ச நேரத்தில் அந்தபப்டகை என்னால் பார்க்க முடிந்தது. பின் அந்தப்படகை உந்துபவனின் வெட்டுத்தோற்றம் தெரிந்தது.

”கண்ணு பழகல்லை?” என்றார் கமலா. ”ஆமாம்” என்றேன். ”கண்ணு பழகிட்டா எல்லாம் சரியாயிடும்…” ”உங்களுக்கு இப்ப காயல் நல்லா தெரியுதா?” என்றேன். ”எஸ், வெரி கிளியர்லி…”என்று தலையை அசைத்தார். ”விளக்கு இல்லாம நாலு போட் போயிட்டிருக்கு…” நான் ஆச்சரியத்துடன் ”எங்கே?” என்றேன். ”அதோ…அங்க…லுக் கேர்·புல்லி” அவரது விரல் சுட்டிய இடங்களையே பார்த்தேன். இருட்டுக்குள் அசைவு தெரிவது போலிருந்தது. அது பிரமை என்றும் பட்டது.

நீலிமா ”வானத்திலே இருந்து கண்ணை கீழே இறக்கி பார்த்தா தெரியாது… இந்தக்கரையில் இருந்து கண்ணை மேலே தூக்கி பாக்கணும்…” என்றாள். நான் திரும்பி அவளைப் பார்த்தேன். அவள்தானா பேசியது என்ற ஆச்சரியம் கொண்டவனாக. அவள் குரல் அழுத்தமான இனிமையுடன் இருந்தது — மிகப்பெரிய குடம் கொண்ட வீணையின் நாதம்போல. சட்டென்று நான் புன்னகை செய்துகொண்டேன் ”தேங்க்ஸ்” என்றேன்.

அவள் சொன்னதுபோல பார்த்தபோது உண்மையிலேயே ஒரு படகைக் கண்டேன், அதைக் கண்டபின் மேலும் மூன்று படகுகளையும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகச் சென்று பார்க்க முடிந்தது. ”ஏன் லைட் இல்லாம போறாங்க?” என்றேன். ”கரிமீன் பிடிக்கிறாங்க…லைட் இருந்தா கரிமீன் மேலே வராது” என்றார் கமலா.

நான் நீலிமாவிடம் பேச விரும்பினேன். ஆனால் அதற்கு அவளை நோக்கித்திரும்ப வேண்டும். திரும்பிப்பார்த்துப் பேசுவது மிதமிஞ்சிய ஆர்வத்தைக் காட்டிவிடுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் என் எண்ணம் என்னுள் வளர்ந்து வளர்ந்து என்னைதிரும்பச் செய்தது. அப்போது அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பதறி பார்வையை விலக்கினேன்.

என்ன இது? நான் பார்க்காத பெண்களா? நிலையாக ஒரு மனைவி என்பது பெரிய போர் என்று எண்ணியிருந்தேன். நாலைந்து நாட்களுக்குள் எனக்கு பெண்கள் சலிப்பேற்படுத்திவிடுகிறார்கள். என் வட்டத்துக்குள் உள்ள பெண்கள் அனைவருமே ஒரே வார்ப்பு. நான் என்ன கார் வைத்திருக்கிறேன், அடுத்து எந்த வெளிநாட்டுக்குச் செல்லப்போகிறேன், என்னுடைய ஷேர்கள் என்ன ஆயின என்பதற்கு அப்பால் அவர்களுக்கு அக்கறைகளே இல்லை.

நான் சட்டென்று நாற்காலியை நன்றாக திருப்பி போட்டு அவளை நோக்கி அமர்ந்துகொண்டு ”நீங்க என்ன பண்றீங்க?” என்றேன். ”நானா…ஐயம் ஜஸ்ட்..” என்று கையை விரித்து சிரித்தாள். நான் அவளை நோக்கி திரும்பிய அதிர்வு அவள் கழுத்தில் துடித்தது. உதடுகளை உள்ளே இழுத்து மடித்துக்கொண்டு அடிக்கடி கமலாவைப் பார்த்தாள்.

”என்ன படிச்சீங்க?” என்றேன். ”இங்க்லீஷ் லிடரேச்சர்…லா படிக்க ஆசை இருந்தது.படிக்கலை” நான் புன்னகையுடன் ”நல்லதாபோச்சு…லாயர்களெல்லாம் பெரிய போர்” என்றே. அவள் சிரித்தாள். பதின்பருவத்துப்பெண்களுக்கு கூச்சம் ஏற்படும்போது சிரிக்கும் பாவனையில். அந்தச் சிரிப்பு வழியாக அவள் கொஞ்சம் நெருங்கி வருவது போல் இருந்தது

கீழே மஜீதின் பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. அப்போது எந்தப்பாட்டைக் கேட்டிருந்தாலும் அது என் மனநிலைக்கு உகந்ததாகப் பட்டிருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘சக்கரத்தேன் குடமல்லே? சந்திரிகயுடே வெண்மலரல்லே?’. ”மஜீத் நல்லா பாடுறார்” என்றேன். கமலா ”அவர் ஒருகாலத்திலே கல்யாணவீடுகளிலே கூட பாடிட்டிருந்தார். அதனாலே எல்லா பாட்டும் ஒப்பனப்பாட்டுதான்…” என்றார்.

பின் மெல்ல ஓர் அமைதி உருவாகியது. வழியும் தேன்விழுதைப்போல அழுத்தமான அமைதி. நான் பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தேன். அவள் என்னிடம் ”உறக்கம் வருதா?” என்றாள். ”கொஞ்சம் வந்தது…அப்றம் போயிடுச்சு” என்றேன். ”ஒருவாரம் போரும், அப்றம் நாம ராத்திரியிலே தூங்கினதே மறந்திருவோம்…” என்று சிரித்தாள். கன்னங்களின் குழிகளை அரைஇருட்டிலும் என்னால் பார்க்க முடிந்தது. அல்லது அரையிருட்டில்தான் அவை தெளிவாகத்தெரியுமா?

”நீங்க எப்பலேருந்து இப்டி ஆரம்பிச்சீங்க?” என்றேன் ”எது?” ”இல்ல, இப்டி நைட் கம்யூனிட்டிலே” அவள் முகம் அரைநொடி மாறியது. ”ஸாரி…” என்றேன். ”ஓ, நோ.. இட் இஸ் ஓகே” என்றாள் ”ஐ ஹேட் ஆன் ஆக்ஸிடெண்ட்” நான் ”அப்டியா?” என்று பொதுவாகச் சொன்னேன். அவள் ”ஆறுவருஷம் முன்னாடி, தேனாம்பேட்டை சிக்னல் பக்கத்திலே” அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை

 நான் அரைக்கணம் காத்திருந்துவிட்டு ”கண்ல அடிபட்டுதா?” என்றேன். அவள் பேசாமல் தலையைச்சரித்து இமையை கீழிறக்கியவளாக அமர்ந்திருந்தாள். கமலா ”ஷி லாஸ்ட் ஹெர் ·பியான்ஸே…” என்றார். ”ஓ ஐயம் ஸாரி” என்றேன். சில நொடிகள் மேலும் மௌனம் நீடித்தது. பின்பு அவள் ”ஓக்கே…தட் இஸ் ஓகே” என்றபடி சிரித்துக் கலைந்து ”என் பக்கத்திலேதான் உக்காந்திருந்தான். ஐ வாஸ் டிரைவிங்…ஒரு கார் மேலே இடிச்சுட்டேன்…அங்கியே நசுங்கி…”

”வேண்டாம்” என்றேன். அவள் புன்சிரித்தபோது அச்சிரிப்பின் வினோதம் என்னை மெல்ல துணுக்குறச்செய்தது. ”அந்த அதிர்ச்சியிலே எனக்கு கொஞ்சம் மெண்டல் பிராப்ளம் ஆயிட்டுது…”சட்டென்று உரக்கச்சிரித்து ”பயபடாதீங்க, நான் பைத்தியம்லாம் இல்லை. ஒரு நெர்வ்ஸ் பிரேக்டவுன். கோர்வையா சிந்திக்க முடியாம ஆயிட்டுது. அடிக்கடி தூக்கிவாரிப்போடும். பத்துபதினைஞ்சுநாள் அப்டியே ஞாபகத்திலே இருந்து மறைஞ்சுபோயிடும்… டிரக்ஸ் எடுத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா தூக்கமே இல்லாம ஆயிடுச்சு..எப்பவாவது மாத்திரை போட்டுகிட்டு அரைமணிநேரம் தூங்கினா உண்டு…”

நான் தவறாக எங்கோ திறந்துவிட்டேனா என்று எண்ணிக்கொண்டேன். மொத்த சூழலும் இப்போது மாறிவிட்டது. இருட்டு கனத்தமீரக்கம்பிளிபோல உடலை அழுத்தி மூடியது. ”…அப்றம் என்னால பகலிலே கண்முழிக்கவே முடியாம ஆச்சு..கண்கூசும், வாந்தி வரும்…சத்தம் வெளிச்சம் ஜனங்கள் எதுவுமே பிடிக்காம ஆச்சு… அப்பா என்னை குன்னூருலே எங்க எஸ்டேட்டிலே கொண்டுபோய் விட்டார். அங்கே நான் கொஞ்சம் கொஞ்சமா சரியாயிட்டேன். நைட்ல காட்டுக்குள்ள ஆதிவாசி வேலைக்காகாங்க நாலுபேரை கூட்டிக்கிட்டு சும்மா சுத்திட்டு வருவேன்.. ஐ பிகேம் எ நாக்ட்ரனல் அனிமல்…”

”அப்பா?” என்றேன். ”அப்பாவும் எனக்காக இப்டி மாறிட்டார். ஆக்சுவலி ஹி வாஸ் ஆல்ஸோ இன் எ கிரேட் அகனி.. ஷாம் அவரோட சொந்த மருமகன்தான்…” ”யாரு?” என்றதுமே புரிந்துகொண்டு ”ஓ” என்றேன். ”அவருக்கும் இந்த சேஞ்ச் ரொம்ப புடிச்சுபோயிருந்தது. அவருக்கும் ஹைப்பர் டென்ஷன் பிபி எல்லாம் இருந்தது. இப்ப டோட்டலி நார்மலா இருக்கார். டாக்டருக்கே பெரிய ஆச்சரியம்…எப்டீன்னே புரியலைன்னு சொல்லிட்டே இருப்பார்”

கமலா என்னிடம் ”ஸீ, யாருமே நேச்சுரலா இந்த மாதிரி ஆகிறதில்லை. எவ்ரிபடி ஹேஸ் தெயர் ஓன் ஸ்டோரி…” என்றார். ”உடனே எங்களுக்கு என்ன கதைன்னு யோசிக்காதே… வி ஆர் பியூர்லி ·பிலஸ·பிகல்…ஆனா மத்தவங்க அப்டி இல்லை.. எல்லாரிட்டயும் கேட்டுட்டிருக்கக்கூடாது…” நான் பதறி ”ஐயம் ஸாரி, ஐயம் ஸாரி” என்றேன். ”இல்லல்ல…அதனால சொல்லலை…ஞாபகப்படுத்தக்கூடாதேன்னு சொன்னேன்” என்றார் கமலா.

நீலிமா ”நோ ஆன்டி… இட் இஸ் ஓகே…அவர் கேட்டது பிடிச்சிருந்தது. இப்ப அதையெல்லாம் சாதாரணமா சொல்ல முடியுதே. எல்லாம் வேற எங்கேயோ வேற யாருக்கோ நடந்த விஷயம் மாதிரி இருக்கு… பகல் ஞாபகம் வர்ரப்ப பழைய கனவு மாதிரிந்தான் இருக்கு…” என்றாள். நான் ”ஸாரி” என்றேன். ”நோ ஐ லைக்ட் இட்” என்று அவள் புன்னகை செய்தாள்.

கமலா ”நான் பொதுவாச் சொன்னேன்” என்றார். ”பேசிட்டிருங்க…நான் போய் பாட்டிலை எடுத்து பூட்டி வச்சிட்டு வர்ரேன்…நாயர்சாப் குடிக்க ஆரம்பிச்சா நிறுத்த தெரியாம கஷ்டப்படுவார்…” என்னிடம் புன்னகைத்துவிட்டு எழுந்துசென்றார். அவர் போவதைப் பார்த்த கணம் எனக்குத்தெரிந்தது என்னிடம் அந்தரங்கமாக பேச தனக்கு தயக்கமில்லை என்று நீலிமா சொன்னதுதான் அவர் நாசூக்காக போவதற்குக் காரணம் என்று. என் முகபாவனையில் அத்தனை வெட்ட வெளிச்சமாகவா இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

நானும் அவளும் தனித்து விடப்பட்ட போது இருவருமே ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி பேசாமல் அமர்ந்திருந்தோம். பேசு பேசு என என்னை நானே பிடித்து முன்னால் தள்ளினேன். பேசுவதற்கு ஒரு சொல்லும் அகப்படவில்லை. தாகமாக இருப்பது போல் இருந்தது. அவளை நேருக்கு நேராகப் பார்ப்பதை தவிர்க்க காயலைப் பார்த்தேன். காயல் இப்போது தெளிவாகவே தெரிந்தது. நான்கு சரக்குப் படகுகள் சென்றன. ஒன்றில் மெல்லிய சங்கீதம் கேட்டது.

கண்களை திருப்பியபோது அவள் என்னைப்பார்த்த கண்களைச் சந்தித்து நான் திடுக்கிட்டு பார்வையை விலக்கிக்கொண்டேன். ஒருகணம் கழித்து மீண்டும் அவளைப்பார்த்தபோது கண்களைச் சரித்து நாற்காலியின் சூரல் பிசிறை பிய்த்துக்கொண்டிருந்தாள். முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. நான் துணிச்சலுடன் அவளையே பார்த்தேன். அவளுடைய கன்னங்களை கழுத்துக்களை மார்பின் வெண்பரப்பை. நான் பார்க்கும் இடங்கள் மெல்ல புல்லரிப்பதைப்போல தோன்றியது. அவள் கழுத்திலேயே என் பார்வை தங்கியது. அவள் கரம் என் பார்வையின் தூலம் போல எழுந்து கழுத்தை மெல்ல வருடிச் சென்றது

நான் ”ஸோ யு ஆர் நாட் மேரீட்?” என்றேன். கேட்டதுமே என் மனம் முரசுப்பரப்பு போல அதிர்ந்தது. எத்தனை அபத்தமான  அப்பட்டமான கேள்வி. ஆனால் அவள் அந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தவள் போல மிக சகஜமாக சிரித்து ”பாத்தா எப்டி தெரியுது?” என்றாள். அந்தத் துணிச்சல் என்னை இன்னமும் அதிரச்செய்தது. என் நா அசைவை இழந்தது போல இருந்தது. ஒருகணம் கழித்து ”தெரியலை” என்றேன். அவள் சிரித்து ”ஐயம் எ ஸ்பின்ஸ்டர்” என்றாள். நான் என் மனஎழுச்சியின் உச்சத்தை அடைந்தபின் மெல்ல களைத்து பின்னால் வந்தேன்.

ஆனால் அதன் பின்னர் பேசவே முடியவில்லை. நான் காயலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அவளும் தன்னுள் ஆழ்ந்து அமர்ந்திருந்தாள். கமலா வரும் ஒலி கேட்டது. நான் சற்றே அசைந்து அமர்ந்தேன். ”என்ன சண்டை போட்டீங்களா? ”என்றார். ”சண்டையா எதுக்கு?” என்றேன் ”பின்ன உம்முன்னு இருக்கீங்க?” ”இல்லியே” என்றேன். நீலிமா புன்னகைசெய்தாள்.

”கமான் லெட் அஸ் ஹேவ் டின்னர்” என்றார் கமலா. ”இந்நேரத்திலேயா?” ”இதுதான் எங்க கணக்கிலே சப்பர்… இப்ப மணி நாலரை” என்றார் கமலா. ”கமான்..பசிக்குதுதானே? ”சரியா பசிக்கலை” என்றேன். ”இன்னைக்குச் சாப்பிட்டா நாளைக்கு கச்சிதமா பசிக்கும்..கமான் நீல்”

மூவரும் இறங்கி கீழே சென்றோம். முகமது ர·பியின் இந்திப்பாட்டு ஓடிக்கொண்டிருக்க நாயர் சோ·பாவில் பின்னால் சாய்ந்து வாய்திறந்து அரைத்தூக்கத்தில் இருந்தார். ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவர் போல இருந்தார் மேனன். மஜீத் தரையில் கால்நீட்டி கண்மூடி அமர்ந்திருந்தார்.

கமலா கைகளை தட்டி ”கமான், ஊணு கழிக்கண்டே?” என்றார். நாயர் கண்களை திறந்து ”ஓ,டிவைன்” என்றார். பெருமூச்சுடன் ஒன்றுமே பேசாமல் மேனன் எழுந்தார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஆன்மீகம் போலி ஆன்மீகம் 3
அடுத்த கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் 4