இனிப்பு

Church4

கோட்டாறு சவேரியார் கோயிலுக்கு எப்படியும் இருபத்தைந்துமுறை வந்திருப்பேன். என் அம்மாவின் வேண்டுதல் அது. சின்னவயசில் எனக்கு தொடர் வயிற்றுப்போக்கு வந்து உயிர்வாழ வாய்ப்பே இல்லை என்ற நிலையில் குழித்துறை மிஷனரி டாக்டர் ஃப்ளெட்சர் தன் தீரமான சோதனை முயற்சி மூலம் காப்பாற்றினார். அம்மாவுக்கு அவர் தெய்வம். அவர் வழியாக ஏசு நெருக்கம். ஏசுவின் தூதர் என்பதனால் சவேரியார்.

அம்மா அன்று பலவாரம் ஆஸ்பத்திரியிலேயே இருந்தபோது ஒரு கடற்கரைப் பகுதி பாட்டி அவளுக்கு எல்லா உதவிகளும் செய்திருக்கிறார்கள். என்னை அம்மாவால் தூக்கமுடியாது. அழுகை வந்து கை நடுங்கும். பாட்டிதான் அலட்சியமாக துணிப்பொம்மையைத் தூக்குவதுபோல தூக்கி மலம் கழுவிவிடுவார்கள். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை. ‘கண்ணக்கண்ண முளிக்கான். சாவமாட்டான்’ என்று அவள் ஒவ்வொருமுறையும் சொன்னதே அம்மாவுக்கு அன்று பிடித்துக்கொள்ள ஆதாரமான சொற்களாக இருந்தது.

நெடுங்காலம் தொடர்பில் இருந்த இந்தப்பாட்டியை நான் எட்டாவது படிக்கும் காலம் வரை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒருமுறை அப்பா அம்மாவை கண்மண் தெரியாமல் அடித்தபோது தன் சொந்த வீட்டுக்காரர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்த அம்மா இரவில் கிளம்பிச் சென்று இரயும்மன்துறை பக்கம் எங்கோ அந்தப்பாட்டி வீட்டில் நான்குநாட்கள் தங்கியிருந்தாள். அப்பாவும் பெரியப்பாவும் அலறிப்புடைத்து தேடி கண்டுபிடித்து சமாதானம் செய்து கூட்டிவந்தார்கள்.

பாட்டி பெயர் நினைவில் இல்லை. சவேரியாருக்கு வேண்டிக்கொள்ளும்படி அம்மாவுக்கு பரிந்துரை செய்தவர் அவர்தான். அம்மா வாழ்ந்த காலம் முழுக்க சவேரியார் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்து உப்பு காணிக்கை செலுத்துவாள். அதற்காக காசு தனியாக எடுத்துவைத்திருப்பாள்

எனக்கு கைகால் வளர்ந்தபின் நானே வரத் தொடங்கியபின்னர் அம்மாவின் நோக்கம் வேண்டுதல் மட்டும்தானா என்ற சிறிய ஐயம் எழுந்தது. அக்காலத்தில் சில பொருட்கள் சவேரியார் கோயில் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும்.இரும்புத்தாதுவால் ஆன தோசைக்கற்கள், சீனச்சட்டி எனப்படும் வாணலிகள், கற்சட்டிகள்.பலவகையான சவுரிகள். மரத்தில் கடைந்து வண்ணம் தீட்டப்பட்ட பொம்மைகள்.

அத்துடன் முக்கியமாக தின்பண்டங்கள். பேரீச்சம் பழம் வருடத்துக்கு ஒரே முறை அங்கே மட்டுமே கிடைக்கும். அம்மாவுக்கு வருடம் முழுக்க பேரீச்சம்பழ நினைப்புதான்.பாலைவன மக்களுக்கு கடவுள் மற்றவர்களுக்கு அளித்த தாவரங்களை அளிக்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து ஒரே தாவரத்தை அளித்தார், அது பேரீச்சை, கடவுளுக்கு உண்மையிலேயே பிரியமான பழம் அது என அத்தர் வியாபாரியான ஒரு ராவுத்தர் அம்மாவுக்குச் சொல்லியிருந்தார்.

ஒரு பேரீச்சை நூறு பலாப்பழத்துக்குச் சமம் என்பது அம்மாவின் எண்ணம். தனக்கு சில உடல் உபாதைகள் இருப்பதாகவும் பேரீச்சை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றும் ஆகஸ்ட் மாதம் முதல் சொல்ல ஆரம்பிப்பாள். டிசம்பரில் எவரிடம் காசுகொடுத்து அனுப்பவேண்டும் என்பதும் முன்னரே முடிவாகிவிடும்.

சவேரியார் திருவிழாவில்தான் அருப்புக்கோட்டை, கோயில்பட்டி மிட்டாய் வியாபாரிகள் வருவார்கள். ஜாங்கிரி மாதிரி ஒன்று. பைசாநகரத்துச் சாய்ந்த கோபுரம் மாதிரி அதைச் செய்து வைப்பார்கள். அதை சீனிச்சேவு என்போம். காராச்சேவை அஸ்காசர்க்கரையில் உருட்டி எடுத்த ஒன்று. அது இனிப்புச்சேவு. இரண்டும்தான் அங்கே சிறப்பானவை. சாலையோரக்கடையில் கண்ணெதிரே சுடசுடப் போட்டு தருவார்கள். சீனிசேவு போலவே இருக்கும் கருப்பட்டிச்சேவு ஒரு மாநிற அழகி.

நான் நாகர்கோயிலில் திருவிழாவுக்குச் சென்று அவற்றை வாங்கிக்கொண்டு வருவதை எண்ணி அம்மா தெருவைப்பார்த்து அமர்ந்திருப்பாள். ஐம்பது வயதுப்பெண்மணியை, உலக இலக்கியம் ஆழ்ந்து கற்றவரை, சித்தாடை கட்டி இரட்டைச்சடைபோட்ட சின்னப்பெண் போலப் பார்க்கும் அபூர்வ தருணங்கள். நான் வேண்டுமென்றே மெதுவாக பலபக்கங்களையும் பார்த்தபடி நடந்து வருவேன். பொறுமையிழந்து என்னை நோக்கி ஓடிவருவாள்.

அப்போதெல்லாம் மிட்டாய்களை பனையோலைப்பெட்டியில் வைத்துத் தருவார்கள். அந்தப்பெட்டியை அம்மா பிரிக்கும் பதற்றத்தை, கீழே விழுந்து விடக்கூடாது என அவள் முகம் கொள்ளும் கவனத்தை நினைக்கையில் இன்று பெரும் ஏக்கம் வந்து மனதில் நிறைகிறது. அம்மா சீக்கிரம் செத்துவிடுவாள் என்று தெரிந்திருந்தால் எங்காவது திருடியாவது இன்னும் அவள் விரும்பியதை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.

அம்மா சாயலில் எனக்கு மகள் இல்லை. அஜிதன் பெண்ணாக இருந்திருந்தால் அவள்போல இருந்திருப்பான். ஒருகாலத்தில் அம்மா அவளுடைய சொந்த ஊரான நட்டாலத்தின் பேரழகிகளில் ஒருத்தி. சென்ற வருடம்கூட ஓர் எண்பது வயது அம்மாவன் கண்ணில் மின்னலுடன் சொன்னார். ‘அவ யட்சி சுந்தரீல்லா?’

Church5

திருவிழாவுக்கு முந்தையநாள் செல்வதே என் வழக்கம். கூட்டம் குறைவாக இருக்கும் இம்முறையும் சென்றிருந்தேன். சாலையின் இருபக்கமும் அதே கரும்புக்குவியல்கள். கோயில்பட்டிக்காரர்களின் தற்காலிக இனிப்புக்கடைகளில் ஜீரா கொதித்துக்கொண்டிருந்தது. இனிப்புச்சேவும் சீனிச்சேவும் சல்லரிகளால் அள்ளி அள்ளி வைக்கப்பட்டன. பலவகையான வண்ணமிட்டாய்கள். பிளாஸ்டிக் பொம்மைகள். என்னென்னவோ விளையாட்டுப்பொருட்கள். வண்ண ஆடை அணிந்த பெண்களும் பரக்கப்பரக்க விழிக்கும் குழந்தைகளுமாக சிதறிப்பரவிய கூட்டம்.மரப்பொம்மைகளும் கருப்பட்டிசேவும் மட்டும்தான் மறைந்துவிட்டிருந்தன.மெழுகு மலைகள்போல பேரீச்சை.

உள்ளே சென்று நீண்டுவிரிந்த தொன்மையான கூடத்தில் நான் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்துகொண்டேன். இந்த ஆலயத்திற்குத்தான் என் அம்மாவழியில் தூரத்துச் சொந்தமான வேதசாட்சி நட்டாலம் தேவசகாயம் பிள்ளையின் சடலம் பக்கத்தில் ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் அவர் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்கிறார்கள். அம்மா இங்கே மூன்றே மூன்றுமுறைதான் வந்திருக்கிறாள். அந்த மூதாதையை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

அம்மாவை நினைத்துக்கொண்டு ஜெபத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நினைவுகள் என்று சொல்லமுடியாது. தெளிவாக எந்த நிகழ்ச்சியும் எழுந்து வரவில்லை. ஆனால் அம்மா என்ற எண்ணம் மட்டுமே தொடர்ச்சியாக உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.கத்தோலிக்கர்களுக்கே உரிய உயர்தரத் தமிழில் வேண்டுதல். விண்ணரசி அன்னை என்ற சொல்லாட்சியே ஒரு தரிசனம்.

எழுந்து வந்தபோது நல்ல சிவந்த நிறமும் மெலிந்த உடலும் நீண்ட முகமும் கொண்ட ஒரு எழுபத்தைந்து வயது பெண்மணி கண்மூடி ஜெபம் செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். ஒரு கணம் மனம் பொங்கி கண்ணீர் துளிர்த்தேன். எங்கிருந்தாலும், எங்குமே இல்லை என்றாலும் அம்மா நிறைவடையட்டும். அவள் எனக்காக வாழ்நாள் முழுக்கச் செய்த வேண்டுதல்களை நான் இதுநாள்வரை செய்து அக்கடனை மீட்டியிருக்கிறேன். இன்னும் சற்றுக் காலம்தான்.

பின்னர் தர்க்கம் வந்து தொட , புன்னகைசெய்துகொண்டேன். ஒவ்வொரு முறையும் நிகழ்வதுதான் இது. இப்பகுதியின் மக்களில் சாதிமதத்துக்கு அப்பால் ஒரே முகம் கொண்டவர்கள் பலர் உண்டு. என் அம்மாவையும் அப்பாவையும் பல்வேறு சாயல்களில் இங்கே கண்டுகொண்டிருக்கிறேன். இந்நிலத்தை எனக்கு அண்மையானதாக ஆக்குவது முதன்மையாக இதுவே.

வெளியே வந்ததும் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆட்டோ பிடிக்க வந்து நின்ற இடத்தில் அருகே ஓலைக்கொட்டகைகளில் பொன்னிறத்தில் இனிப்புப்பண்டங்கள் பிறந்து வந்துகொண்டிருந்தன. இவை மிக மலிவானவை. கிலோ நூறு ரூபாய்தான். ஆனால் வெறும் சீனி. என் பிள்ளைகளோ அருண்மொழியோ வாயில் வைக்க மாட்டார்கள்.

கொஞ்சநேரம் சிந்தனை செய்தேன். சீனி நேரடியான கலோரி. இத்தனை தூரம் காய்கறியெல்லாம் சாப்பிட்டு உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பவன் இதைச் சாப்பிடுவது போல வீண்செயல் ஏதும் இல்லை. வேண்டவேவேண்டாம் என கடைசி முடிவுசெய்து ஆட்டோவில் ஏறி அமர்ந்து ‘பார்வதிபுரம் சாரதாநகர்…’ என்று சொல்லிவிட்டு சட்டென்று ‘ஒரு நிமிஷம்’ என இறங்கி ஓடிச்சென்று அரைக்கிலோ வீதம் இனிப்புச்சேவும் சீனிச்சேவும் வாங்கிக்கொண்டேன்

முந்தைய கட்டுரைஅதே மொழி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46