இண்டர்ஸ்டெல்லார் – கடிதம்

அன்பு ஜெயமோகன்,

இண்டர்ஸ்டெல்லார் தொடர்பான அலெக்ஸ் கடிதத்தையும், அதற்கான தங்களின் பகிர்வையும் படித்தேன். மானுடகுலம் நிலைத்து வாழத்துவங்கிய பிறகுதான் தத்துவ ஆராய்ச்சி துவங்கியதாக நான் கருதுகிறேன். அதனடிப்படையிலேயே நான் நகரவும் செய்கிறேன். மேலும், தன்னை மேம்பட்ட உயிரியாக மனிதன் கருதிக்கொண்ட இடத்திலிருந்தே அவன் தன் வாழ்வு குறித்த கருத்தியல்களைக் கட்டமைக்க முயன்றிருக்கிறான்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், ஆறாவது அறிவுடையவன் எனும் தனித்தகுதி கொண்டு தன்னால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும் எனும் எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான். முதலில் தான் யார், தனக்கும் வாழ்வுக்குமான தொடர்பு போன்றவற்றைப் பகுத்தறிகிறான்; பிறகு பகுத்தவற்றைத் தொகுத்துணர்கிறான். ஆனால், எங்கும் அவனுக்கு நிறைவில்லை. காரணம், இரண்டு தளங்களிலுமே அவன் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி இருக்கிறான். ஒரு நல்ல இலக்கியப்படைப்பு அவன் முன்னிறுத்தியிருக்கும் ‘தன்னை’ நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளால் அலைக்கழிக்கப்படும் ‘அவன்’ எல்லைக்குட்பட்ட அறிவைப் புரிந்து கொள்கிறான்; அதனாலேயே மாபெரும் அறியாமைக்குள் மாட்டிக் கொண்டதாகவும் உணர்கிறான்.

அங்குதான் இன்னொரு திறப்பு அவனுக்குள் நிகழ்கிறது. அதுகாறும் புறஉலகின் ஒரு பகுதியாகவே அவன் இருந்ததைப் புரிந்து கொள்கிறான். மெல்ல, அவனுக்குள்ளிருக்கும் அகவுலகின் முழுமை நோக்கி நகர்கிறான். /* இலக்கியம் செயல்படும் தளமே வேறு. அதன் ஆயுதம் தர்க்கம் அல்ல. அது கற்பனையில் நிகழ்கிறது . தர்க்கத்தின் திட்டவட்டத்தன்மையை அது எப்போதுமே மீறிச்செல்லும். ஆகவே அது எப்போதுமே மங்கலான பகுதிகளை, எல்லைக்கோடுகளின் மீறலை கூர்ந்து கவனிக்கும்.*/ புற உலகில் வேண்டுமானால் தர்க்கங்கள் எடுபடலாம்; அகவுலகிற்குக் கற்பனைகளே அடிப்படையாய் இருக்கின்றன. தர்க்கங்கள் ஒருவனைத் துண்டுகளாக்க, கற்பனைகளை அவனை ஒன்று சேர்க்கின்றன.

தர்க்கம், கற்பனை போன்ற சொற்களை மேலோட்டமானதாகப் புரிந்து கொள்வதாலேயே நாம் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம். அவற்றை நாம் வாழும் வாழ்க்கையோடு இணைத்தே புரிந்து கொள்ள வேண்டும். அப்படியான புரிதல் எல்லைக்குட்பட்டது என தத்துவங்கள் சொல்ல, எல்லைகளுக்கு அடங்காதது என இலக்கியம் சொல்லும். உடனே, இலக்கியத்தைத் தர்க்கங்களுக்கு எதிரானதாக நிறுத்திவிடுவதும் ஆபத்து. ஒரு தர்க்கத்தை மட்டும் கொண்டாடி பிற தர்க்கங்களைப் புறந்தள்ளும் போக்கையே இலக்கியப் படைப்புகள் மறுதலிக்கின்றன. சில நேரங்களில் அவை புதிய தர்க்கங்களுக்கு சாளரமாகவும் இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் தர்க்கங்களில் இலக்கியத்துக்கு இடமில்லை; இலக்கியங்களில் எப்போதும் பன்முகப்பட்ட தர்க்கங்களுக்கு இடம் உண்டு.

/*பொதுமைகள் கலைஞனின் இடமே அல்ல, அவை அறிவியலாளர்களுக்குரியவை என்பார்கள். பண்பாட்டிலும் மானுட அகத்திலும் நுண்மைகளை தேடிச்செல்வதே கலைஞனின் பணி என்பார்கள். நான் இருதரப்பும் கலையின் இரு வழிகள் என நினைப்பவன்.*/ மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜெயமோகன்.

முருகவேலன்,
கோபிசெட்டிபாளையம்

முந்தைய கட்டுரைஅறம் தீண்டும் கரங்கள்
அடுத்த கட்டுரைசுவையறிதல்