சூஃபியிசம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு,

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மத அடிப்படைவாதிகளுக்கு மற்றைய மதங்களை,மரபுகளை ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கின்றது.ஒற்றைப்படையாக உலகத்தை மாற்றிவிடலாம் என்பது உலகின் இயல்புக்கு மாறானது.பன்மைத்துவம் என்பதை உலகில் இருந்து ஒழித்துவிடமுடியாது என்பதை மத அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒற்றைப்படையான மதங்களாக ஆரம்பித்துப் பரவியவைகூட காலமாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு கிளைகளாக மாறியது உலகின் அடிப்படை இயல்பான பன்மையை உருவாக்கும் தன்மைக்கு சான்றாகும்.இந்த நியதியை புரிந்துகொள்பவர்களுக்கு உலகம் எங்கும் ஒற்றைப்படையாக மாற்றிவிடலாம் என்ற எண்ணம் வருவதற்கு வாய்ப்பில்லை.மாற்றுமதங்களை இல்லாதொழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்கிவிடலாம் என்பதை அவர்கள் முட்டாள்களின் எண்ணமாகவே கருதுவர்.

சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சற்காரிய வாதம் ‘உளது இலதாகாது;இலது உளதாகாது’ என்று கூறுகின்றது.இதையே விஞ்ஞானமும் வேறு சொற்களில் கூறுகின்றது.
இதுவே மதங்களுக்கும் பொருந்தும்.மதங்களை மாற்றி அமைக்கலாமே தவிர ஒட்டுமொத்தமாக அழித்துவிடமுடியாதென்பதை ஒருவர் புரிந்துகொள்ளும் போது அவரின் மனம் அமைதியில் நிலைகொள்கின்றது.அவ்வாறு சிந்திக்காதவர்கள் மனக்கொதிப்பிலேயே வாழ்க்கையை வாழவேண்டிய துயரத்துக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை அவதானிப்பவர்கள் புரிந்துகொள்ளமுடியும்.
மற்றைய மதங்களின் முற்போக்கான,சிந்தனைக்கு ஏற்ற,மனிதகுலத்துக்கு நன்மை அளிக்கக்கூடிய மரபுகளை நாம் முன்னிறுத்தவேண்டும்.அவற்றைக் கொண்டாடவேண்டும்.இதன் மூலம் மதங்களின் அடிப்படைவாதிகளை ஓரங்கட்டமுடியும்.சூஃபியிசம் அருளாளர்களை வணங்கும் ஒரு வழிபாட்டுமுறையாகவே இன்று விமர்சிக்கப்பட்டு பொதுவெளியில் முன்வைக்கப்படுவதைக் காணலாம்.ஆனால் சூஃபியிசம் என்பது இஸ்லாமிய சிந்தனைமரபு.இஸ்லாத்தின் பழுத்தகனி.
அடிப்படைவாத இஸ்லாமே இஸ்லாத்தின் முகமாக இன்று ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு பொதுமனத்தில் இஸ்லாமிய வெறுப்பு பரவலாக விதைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் இனிய மரபுகளை பெரும்பாலான மக்கள் அறிந்துகொள்வதில்லை.இந்த ஒளிப்பேழை சூஃபி ஒருவர் எவ்வாறு வாழ்கையை அணுகுகிறார் என்று காட்டுகின்றது.

http://www.youtube.com/watch?v=x1HXXgeKhL8&feature=youtu.be

சிவேந்திரன்

முந்தைய கட்டுரைசுவை- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49