ஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1

அன்புள்ள ஜெ,

நான் ஒரு நவீன குருவின் ஆன்மீகப்பயிற்சி முறையில் சில பயிற்சிகளைச் செய்துவருகிறேன். கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக. அது எனக்கு மிகப்பெரிய  மன ஆற்றலை அளித்திருக்கிறது என்று உணர்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள பதற்றங்கள் குறைந்தன. நான் திட்டவட்டமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அது எனக்கு உதவியது.

இப்போது இன்னொரு சாமியார் பற்றிவந்த செய்தி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஏனென்றால் என்னை மாதிரியே இவரை நம்பி இவர் காட்டிய வழிகளில் சென்று பயனடைந்த பலரை நான் அறிவேன். அவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்துப்போய் இருக்கிறார்கள். சிலர் அவரை வசைபாடுகிறார்கள். சிலர் அவரை விடமுடியாமல் எல்லாமே மோசடி என்று சொல்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம் அவரது யோகமுறைகள் மூலம் நாம் அடைந்த நன்மைகளை எப்படி நாம் நிராகரிக்க முடியும் என்றுதான். அவை உண்மையானவை தானே. அவரை தூக்கி வீசுவதுபோல அவர் சொன்ன விஷயங்களை முழுக்க தூக்கி வீசி விடமுடியுமா என்ன?

நான் இன்று ஒரு அமைப்பை அல்லது குருவை நம்பிக்கொண்டிருக்கிறேன் ஜெ. நாளைக்கு அந்த நம்பிக்கை இல்லாமலானால் என் நிலைமை என்ன ஆவது? அதற்கு நான் எப்படி என்னை தயார்ப்படுத்திக்கொள்வது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்கள் வரிகள் என்னை தெளிவாக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

சிவ.சண்முகம் [மொழியாக்கம்]

*

அன்புள்ள ஜெக்கு,

 நலம் தானே.

ரொம்ப நாளைக்கு பிறகு வலைதளத்திற்கு வந்தேன். உங்களை மட்டும் நிறைய படிப்பதால், பாம்பு தீண்டி பாம்பாகவே மாறிவிடுவேன் என்ற பயம். தனித்த யோசனை தேவை என்பதால் கொஞ்சம் உங்கள் எழுத்தோடு ஊடல் (!)

நேற்று செய்திகள் பார்த்தவுடன் ஆத்மார்த்தமாய் யாருடனாவது எழுதி பேச ஆசைப்பட்டு முதலில் உங்களின் வலை தளத்தை தான்.

பேசிய/பேசப்பட போகின்ற விடயங்களை கீழ்வருமாறு தொகுத்து கொள்ளலாம்:

அ) தனிமனித நம்பிக்கை. அது பொய்த்துபோன பின் என்ன செய்வது, இது ஒரு விசயமெயல்ல என்று பின் தொடர்வதா..இது ஒரு சறுக்கல்.. இது தாண்டி மேலே செல்வதா. நம்பிக்கையை மாற்றிக்கொள்வது தேவையா.. இல்லை.. நான் இவரிடம் இவ்வளவு எதிர்பார்க்கிறேன். அந்த அளவு என் ஆன்மிக பயணத்திற்கு அவர் உதவுகிறார். ஆகவே அப்படியே ஆகட்டும் என்று மேலும் பயணிப்பதா.. இல்லை. துரோகமென நினைத்து வேறிடம் தேடுவதா..   குருவின் தேவை : உபநிசத் போல குருவிடம் இருக்கும்போது அறிவுப்பரிமாற்றம் தானகவே நிகழ்கிறதே அதற்காகவே ஒரு குரு தேவைதானே.. குருவை விட நம்பிக்கைதான் உயர்ந்த்தா. ஒரு வேளை நீங்கள் ஏற்றுக்கொண்டிருந்த குருவின் நம்பிக்கை பொய்த்திருந்தால் நீஙகள் என்ன செய்திருப்பீர்கள் ?

ஆ) இப்போது அமைப்பும், நிறுவனமுமின்றி எதுவும் நடக்காது. ஆகவே நிறுவன சிக்கல்களின் ஒரு பகுதியாக மட்டுமே இது கருதப்படவேண்டுமா.

இ) துறவறம், பிரம்மசரியம், நிறுவனம் – இவைகள் நவீன இந்து முகத்தில் எப்படி அமைய முடியும்.

ஈ) உண்மை கிழித்து வெளியே வரும் என்று பார்த்துக்கொண்டே நின்றுவிடுவதா..[நிறைய தடவை மத நிறுவன்ங்கள் தப்பு செய்யும்போது சறுக்கும்போதும் அதை நேரடியாகவோ அல்லது அது இயங்கும் தளத்தை ஆதரித்துகொண்டிருந்த நாம் அப்படியே ஒதுங்கிவிடுகிறோம். பின் அது சகஜ நிலமைக்கு வந்தபின் அதன் புகழ்பாட பின் செல்கிறோம்.]

மேற்கண்டவற்றை பற்றி உங்களது கருத்துக்கள் என்னை மேலும் கூர்படுத்தும்.

வேதாத்திரி மற்றும் நித்யாவின் யோகங்கள் தொடர்ந்து செய்பவன். எனது அநுபவத்தில் நித்யாவிடம் சிறந்த அதிர்வுகளையும், சிறந்த இந்திய முறை சார்ந்த அணுகுமுறையும் கண்டேன். நேரம் கிடைக்கும்போது அவரின் யூடியூப் பிரசங்களை கேட்டுப்பாருங்கள். அவரின் சிவ சூத்திரம் ஒரு புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருந்தது. அவரின் பதஞ்சலி யோக விசாரணைகள் மற்றும் மைஸ்டிக் பற்றிய கோணங்கள் மிகத்தெளிவானவை. தீர்க்கமானவை. வேதாத்திரி இரு தளங்களிலே நின்றுவிட்டதை சூட்சும சரீரம் வரை இவர் எடுத்து செல்ல முயல்கிறார். அதுபோக பெங்களூர் ஆசிரமத்தில் அவர்கள் முயற்சிக்கிற பணிகள் குறிப்பாய் குருகுலம் மிகச்சிறந்த தொடக்கமாய் அமைந்திருந்தது.

வேதாத்திரியின் ஆசிரமம் வெறும் காயகல்ப பள்ளியாய் போய்விட்டது. ஒரு வாழும் குரு இல்லாதபோது அவரின் ஆற்றல் அலைகள் அநுபவிப்பது, புகைப்படத்திலிருந்து அநுபவிப்பதைவிட பெரிய அநுபவமல்லவா. அதனால்தான் ஒரு வாழும் குரு தேவைப்படுகிறார் போல.. ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கரும் சுவாசப்பயிற்சியோடு ஒரு நிறுவனமாகத்தான் விடுகிறார். அவர்கள் நிறுவனம் அகண்டு போகும்போது ஆழமாக போவதற்கான வாய்ப்புகள் குறைவுதானே. ஜக்கி ஒரு நவீனப்படுத்தப்பட்ட ஓசோவாக தெரிகிறார்.

மிகச்சிறந்த யோகி (வேதமனமும், யோக உடலும்) கொண்ட ஒரு நபர் ஏன் இதற்கு ஆளாயிருக்கவேண்டும். உடல் தாண்டுதல், காமம் தாண்டுதல் அவ்வளவு கடினமானதுபோல.  
நீங்கள் சொல்வது போல அவர் வெறும் ஊடக பிம்பம் மட்டும்தானா.. ஊடகத்தால் மட்டுமே ஒருவரை அப்படி உருவகம் செய்துவிடமுடியுமா..

”நித்யா அல்லது வேறு யாரும் இந்து மதத்தின் நவீன முகமாகயிருக்க முடியாது. இந்து மதத்தின் அடிப்படையான  தரிசனங்கள் நவீன கால கட்டத்திற்கேற்ப  பரிணாமம் கொள்வதே  அந்த முகத்தை உருவாக்கும். அதற்கு அமைப்போ, அமைப்பு மனிதர்களோ தேவையில்லை” நீங்கள்.

அப்படியிருக்க முடியுமா ஜெ..தரிசனங்கள் அதுவாக பரிணாமம் கொள்வதேயில்லை. அது பெரும்பாலும் இயங்கும் புறச்சூழல் மாறிக்கொண்டிருக்கும் வேளையில், அது முரண்பட்ட பல மாற்றங்களை சந்திக்கும்போது அமைப்போ, அதை முன்னெடுத்து செல்லும் மனிதர்களின்றி மாற்றம் அதுவாக மரத்தில் காய்ப்பதில்லை தானே. ஒருங்கிணைக்கவோ, உடைக்கவோ, மறு உருவாக்கத்திற்கோ ஏதாவது ரூபம் தேவைப்படத்தானே செய்கிறது.

நீங்கள் சொல்லும் மூன்று தளங்களும் தனித்தனியாக இப்போது இருப்பதில்லை. All are integrated..

ஜெ, உங்களுக்கு கடிதம் எழுதியதே கொஞ்சம் விடைகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது. உங்களின் விடைகள் நேரமிருந்தால் நீஙகள் அளித்தால் இன்னும் புதியதளம் நோக்கி நகர்த்தலாம். நவீன இந்து முகத்தின் சவால்களை அது தொட்டுப்போகும். நவீன இந்து மனத்தின் சவால்கள்தானே மத்த்தின் சவால்களும். ?   நவீன இந்து மதத்தின்/மனத்தின் சவால்களும், மாற்றங்களும்,  மத உலகமாயமாதலின் விளைவுகளும், நோக்குகளும் என்கிற பாதையில் எண்ண நீட்சி செய்ய முயற்சிக்கலாம்.

[ வலைதளத்திற்காக அல்ல.. சொந்த அறிதலுக்காக மட்டுமே]

நன்றி ஜெ..  

M
 

அன்புள்ள நண்பர்களுக்கு,

இந்த விஷயம் சார்ந்து எனக்கு வந்திருக்கும் எல்லா கடிதங்களுக்கும் சேர்த்து இந்தப் பதிலை எழுதுகிறேன். எவருக்கும் தனியாக அனுப்பவில்லை.

முதலில் இத்தனை கடிதங்கள் எனக்கு வந்திருப்பதே எனக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. ஒரு பிரம்மாண்டமான, தொன்மையான ஞான மரபு எந்த அளவுக்கு கைவிடப்பட்டு, எடுப்பவரெல்லாம் கையாளலாம் என்ற நிலையில் இன்று கிடக்கிறது என்பதற்கான சான்று இது. பசித்த குழந்தைகள் போல அந்த மரபின் முலைக்காம்புகளை நோக்கி எத்தனை உள்ளங்கள் எம்புகின்றன, அவை போலிகளால் எப்படி ஏமாற்றப்படுகின்றன என்பதற்கான சான்றும்கூட

உண்மையில் நான் எந்த வகையிலும் விவாதிக்க விரும்பாத, முற்றிலும் அமைதி காக்க விழைகிற, விஷயம் இது. ஆயினும் இதை எழுதுவதற்குக் காரணம் நேற்றுமுழுக்க என் மின்னஞ்சல்பெட்டியை நிறைத்துக்கொண்டே இருந்த கடிதங்கள்தான். அவற்றில் இருந்த ஏமாற்றம், சினம், தவிப்பு. அதை எண்ணும்போது எழும் ஆழமான துயரத்தால் மட்டுமே இதை எழுதுகிறேன்.

இனி நான் எழுதும் விஷயங்கள் எவையும் விவாதத்துக்குரியன அல்ல. காரணம் இவை பொதுத் தளத்தில் விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய விஷயங்கள் அல்ல. நான் மிக முக்கியமான அறிதல்களாக எண்ணும் இத்தகைய விஷயங்களைப்பற்றி பொதுவாக பேசியதே இல்லை என்பதை, மிகக்குறைவாகவே நித்ய சைதன்ய யதியைப்பற்றிக்கூட பேசியிருக்கிறேன் என்பதை, இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

இவற்றை இப்படி திடமாகச் சொல்ல முற்றிலும் தகுதிகொண்டவன் நான் என்பதை மட்டும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். தங்கள் ஆழ்மனத்தில் இச்சொற்களை உண்மை என உணர்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு யோசிக்கலாம். மறுப்பவர்கள், ஐயப்படுபவர்கள் முழுமையாகவே இதை நிராகரித்துவிடலாம். அவர்களிடம் வற்புறுத்த விரும்பவில்லை.

*

கீழ்நாட்டு மதங்களான இந்து, பௌத்த,சமண மதங்களில் ஆன்மீகவிடுதலை என்ற கருதுகோள் முக்கியமானது. ‘மோட்சம்’ என்றும் ‘முக்தி’ என்றும் ‘கைவல்யம்’ என்றும் ‘நிர்வாணம்’ பல்வேறு சொற்களால் இந்நிலை சுட்டப்படுகிறது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த மதங்களில் இல்லாத ஒரு மையக்கருதுகோள் இது. ஒரு தனிமனிதர் எட்டக்கூடிய உச்சகட்ட நிலை என இதைச் சொல்லலாம்.

இந்த நிலையை மிக எளிமையாக இப்படி விளக்கலாம். மண்ணில் நமக்கு நிகழும் வாழ்க்கையானது நம் அறிவை பேதலிக்கச் செய்யும் பிரம்மாண்டத்துடன் உள்ளது. சிந்திக்கும்தோறும் இந்த அதிபிரம்மாண்டமான பேரியக்கத்தில் அர்த்தமில்லாத ஒரு துளியாக நாம் நம்மை உணர்கிறோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் விளக்கத்தைக் கோரியபடியே உள்ளது. நாம் வாழ்க்கைசார்ந்து சாதாரணமாக உருவாக்கிக்கொள்ளும் எந்தக் காரண காரிய தர்க்கமும் அந்த விளக்கத்தை அளிப்பதில்லை.

ஓரு மரண வீட்டில் என்ன சொல்லி அழுகிறார்கள்? ‘நான் என்ன பாவம் செஞ்சேன், எனக்கு ஏன் இப்டி ஆச்சு? இனி என்ன செய்வேன்? இனி எப்ப பாப்பேன்?’ எளிமையான அடிப்படை கேள்விகள். எல்லா அனுபவங்களும் இத்தகைய திகைப்பை நமக்குள் உருவாக்குகின்றன. அதற்கு நம்மிடம் பதில் இருப்பதில்லை.

நாம் இருவகையில் அந்த பிரம்மாண்டத்தை எதிர்கொள்கிறோம். அந்தப் பிரம்மாண்டத்தை நம்மை படைத்துக் காக்கும் ஒரு வல்லமையாக உருவகித்து அதற்கு நம்மை கண்ணமூடிக்கொண்டு ஒப்புக்கொடுத்து அதை நம்பி வாழ்கிறோம். அதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது என்றும், நாம் அதன் கருவிகள் என்று எண்ணி நம்மைக் கொடுத்துவிடுவதே நம்மால் செய்யக்கூடுவது என்றும் நினைக்கிறோம். இதுவே பொதுவாக மையஆசிய மதங்கள் நமக்குக் காட்டும் வழிமுறை. இந்து மதத்தின் பொதுத்தளம் காட்டும் வழிமுறையும் இதுவேயாகும்.

இந்த தளத்தில் அந்த பெருவல்லமையை வழிபடுவதும், அதற்கு பக்திசெலுத்துவதும் தேவைப்படுகிறது. காரணம் நம்மால் இயல்பாக நம்மை அப்படி ஒப்புக்கொடுத்துவிட முடிவதில்லை. நம்முடைய தன்னகங்காரம் எப்போதுமே நம் அறிவையும் செயல்களையும் நம்பிச் செயல்படும்படிச் சொல்கிறது. சமர்ப்பணம், முழுமையான நம்பிக்கை ஆகியவை மிகமிகக் கடினமானவையாக உள்ளன. ஆகவேதான்  விக்ரகங்கள் அடையாளங்கள் போல நூற்றுக்கணக்கான குறியீடுகள் தேவையாகின்றன. ஏராளமான சடங்குகள் தேவையாகின்றன.  தோத்திரங்கள், கூட்டுவழிபாடுகள், தொழுகைகள் தேவையாகின்றன.

இந்த வழிமுறையில் மீண்டும் மீண்டும் ‘நான் நம்புகிறேன், நான் என்னை ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லிச் சொல்லி நம் அகத்தை அதற்கேற்ப உருவாக்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அந்தச் சமர்ப்பணம் நமக்கு ஒரு விடுதலையை அளிக்கிறது.பிரபஞ்ச இயக்கத்தின் பிரம்மாண்டத்தை நாம் அதன் மூலம் எதிர்கொள்ள முடிகிறது. இந்தவகையான நம்பிக்கை கொண்டவர்கள் சில  பொதுநெறிகள்,சில எளிய நம்பிக்கைகள் மூலம் வாழ்க்கையை கடந்துசென்றுவிடவும் முடிகிறது. கண்டிப்பாக இது ஒரு சிறந்த வழியே.

முதல் வழிமுறையில் எவருடைய மனம் ஈடுபடவில்லையோ அவர்களுக்குரியது இரண்டாவது வழிமுறை. நம் அறிதலின் எல்லைகளை விரித்து விரித்து ஓர் எல்லையில் அந்தப் பிரம்மாண்டத்தை உள்வாங்கிக்கொள்ள முயல்வது இது. இந்த வழிமுறையையே கீழைமதங்களான பௌத்தம், சமணம். இந்துமதம் ஆகியவை முன்வைக்கின்றன. இவ்வாறு நம்மை விரித்துக்கொள்ளும் செயலையே இந்த மதங்கள் சாதனா என்கின்றன. இதைச் செய்பவன் சாதகன். சாதனா என்பது பல்வேறு வழிகள் கொண்டது,பல்வேறு முறைகள் கொண்டது.

சாதனா மூலம் ஒருவன் பிரபஞ்சப் பிரம்மாண்டத்தை முழுமையாக  உள்வாங்கிக் கொண்டான் என்றால் அவன் பிரபஞ்சத்தின் விதிகளினால் ஓயாது அலைக்கழிக்கப்படுதலில் இருந்து விடுதலை அடைந்து விடுகிறான். இதையே முக்தி என்றும் மோட்சம் என்றும் வீடுபேறு என்றும் சொல்கிறார்கள் [மூன்று சொல்லுக்கும் விடுதலை என்ற ஒரே பொருள்தான்] இவ்வாறு விடுதலை பெற்றவன் பின்னர் தன்னை தான் அறிந்த பிரபஞ்சப்பெருவெளியில் இருந்து பிரித்தறிவதில்லை. அறிபவன் இல்லாமலாகி அறிதல் மட்டுமே நிகழும் நிலை அது. அதை தூயநிலை அல்லது கைவல்யம் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையை அடைந்தவரை மானுட இருப்பின் பரிபூரணநிலையை அடைந்தவர் என்று கீழை மரபு சொல்கிறது. இந்து மரபில் பரமஹம்ஸர் என்றும் ஞானி என்றும் சித்தர் என்றும் சொல்கிறார்கள். பௌத்த மரபில் புத்தர், போதிசத்வர் என்கிறார்கள். சமணம் அவர்களை பரிநிர்வாணநிலையை அடைந்தவர் என்கிறது. இந்த உச்சநிலை அல்லது முழுமைநிலை என்பது ஓர் இலட்சியப்புள்ளி என்று கொள்ளலாம்.இந்நிலையை உருவகித்து  இதை அடைவதற்கான வழிமுறைகளை உருவாக்கியிருக்கின்றன என்பதுதான் கீழை மதங்களை மைய ஆசிய மதங்களில் இருந்து வேறுபடுத்துகிறது.

இந்த நிலையைப்பற்றிய சித்திரம் ரிக்வேதத்தின் இறுதிப்பகுதியிலேயே குறிக்கப்பட்டிருக்கிறது. தென்னகத்து மெய்ஞானமரபில் மிக ஆரம்பநிலையிலேயே சிற்பங்களில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு முக்தி நிலையை அடைவதற்கான வழியாகவே தியானம், யோகம் ஆகியவை நெடுங்காலமாக பலபடிகளாக வளர்த்து எடுக்கப்பட்டன. தமிழ் மரபில் இது ஊழ்கம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டது.

யோகம் என்றால் இணைதல், ஒன்றாதல் என்று பொருள். தியானம் என்றால் ஆழ்ந்துசெல்லுதல் என்று.  அதற்கான தமிழ்ச்சொல்லே ஊழ்கம். மூழ்குதல் என்று பொருள். இவற்றுக்கான வழிமுறைகள் சார்ந்து நீண்டகால விவாதங்கள், பயிற்சிகள் இங்கே நிகழ்ந்திருக்கலாம். அவற்றின் சாராம்சத்தை பின்னர் பதஞ்சலி முனிவர் தொகுத்து சுருக்கமான சூத்திரங்களாக ஆக்கினார்.

பதஞ்சலி சொல்லும் யோகம் என்பது மிக விரிவான ஒரு நடைமுறையும் பயிற்சியுமாகும். அதை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். ஒரு காரை ஓட்டிக்கொண்டே அதைப் பழுதுபார்ப்பது போன்றது மனதால் மனதை அறியவும் தாண்டவும் முயல்வது.  ஆகவே மனச்செயலை எவ்வாறு நிறுத்தி அதை அறிய,வெல்ல முடியும் என்று அது பேசுகிறது. ‘யோகம் என்பது மனச்செயல் நிறுத்தல்’ [யோக சித்தவிருத்தி நிரோத:] என்பது அதன் முதல் வரையறை.

மனம் புற உலகின் மீதான எதிர்வினையாக ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆகவே புற உலகத்தை சீராக வைத்திருப்பதைப் பற்றி யோகம் கவனம் கொள்கிறது. புற உலக வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளும் இயமம்- நியமம் ஆகிய நெறிகளைப்பற்றிச் சொல்கிறது. புற உலகம் சார்ந்த விருப்பு வெறுப்புகளில் இருந்து எந்த அளவுக்கு நாம் விலகிக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் மனம் சீராக இருக்கிறது. அந்த அளவுக்கு எளிதாக நாம்  அதை அறிய முடியும்.

இதற்காகவே துறவு என்ற நடைமுறை உருவாக்கப்பட்டது. துறவு என்பது நிபந்தனை இல்லாததாக வாழ்க்கையை வைத்துக்கொள்வதுதான். ஆற்றவேண்டிய கடமைகள் இல்லாமல், எதன் மீதும் விருப்போ வெறுப்போ இல்லாமல், இருப்பதே துறவு.  மிக தீவிரமான விருப்பாக இருப்பவை மண்,பெண்,பொன் என்று கருதப்பட்டன. [மிக விரிவான பொருளில் சுயஅடையாளம், போகம், அதிகாரம் ஆகியவற்றை இவை குறிக்கின்றன] அவற்றை துறந்தவனுக்கு அறிதல், அறிதல்மூலம் கடந்து செல்லுதல், இன்னமும் எளிதாகிறது. ஆகவே சமண பௌத்த மதங்கள் துறவை சாதகனுக்கான விதியாக ஆக்கின. அது பின்னர் இந்து மதத்துக்கும் வந்து சேர்ந்தது.

இவ்வாறு சாமானிய தளத்தில் இருந்து விலகி தன் ஞானத்தை சாதனா மூலம் விரிவாக்கிக்கொள்பவன் பிறரை விட ஆற்றல் கொண்டவனாக ஆகிறான். அவனைக் கூர்ந்து கவனிக்கும் சாமானிய மனம் அவனுடைய இயல்பையும் வழிமுறைகளையும் தனக்கே உரிய முறையில் புரிந்துகொள்கிறது. சாமானியமனம் எப்போதுமே லௌகீகதளம் சார்ந்தது என்பதனால் சாதகனையும் அது லௌகீகமாக அளவிடுகிறது

அதாவது, லௌகீகத்தை மீறிய ஒன்று லௌகீகத்தால் மதிப்பிடப்படுகிறது. நம் மதச் சூழலில் காணும் அத்தனை சிக்கல்களும் இந்த முரண்பாட்டில் இருந்து பிறப்பவையே.

ஏற்கனவே சொன்னதுபோல சாமானிய தளத்தில் மனிதர்கள் அதிமானுடர்களுக்கான ஏக்கத்துடன் இருக்கிறார்கள். அவர்களிடம் தங்களை ஒப்படைக்க விரும்புகிறார்கள். மரபில் இருந்து ஏராளமான தொன்மங்கள் உருவாகி அவர்களுக்குள் இளமையிலேயே குடியேறிவிட்டிருக்கின்றன. ஆகவே தன் அறிவின் எல்லையை மீறிய எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக அவர்கள் தங்களுக்குள் இருக்கும் தொன்மங்களுடன் இணைத்து அதிமானுடபிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

யோகியரையும் ஞானியரையும் மாயங்கள் கொண்ட அதிமானுடர்களாகவும் சாதனாவை அந்த மாயசக்திகளை அடையும் மர்மமான பயிற்சியாகவும் எண்ணிக்கொள்கிறார்கள். அந்த சக்திகள் கொண்ட யோகியரும் ஞானியரும் தங்கள் லௌகீக இன்னல்களை தீர்ப்பார்கள் என்று நம்புகிறார்கள். இங்கிருந்தே எல்லா ஏமாற்றங்களும் ஆரம்பமாகின்றன.

*

நம் மரபில் யோகம், தியானம், ஞானியர், சித்தர் போன்றவற்றைப்பற்றி இருக்கும் இத்தகைய பிழையான நம்பிக்கைகளை இங்கே ஒவ்வொன்றாக குறிப்பிடுகிறேன்.

முதன்மையான பிழை என்பது சாதனா மார்க்கத்தை விளக்குவதற்காகவும், தியானிக்கும் வசதிக்காகவும்  உருவாக்கப்பட்ட குறியீடுகளை எல்லாம் அப்படியே சொல்லர்த்தத்தில் எடுத்துக்கொள்வதாகும். இது ஒரு நுட்பமான ஞானத்தளம் என்பதனால் அரைகுறையாக இதற்குள் செல்பவர்கள்தான் இந்தப் பிழையை முதலில் செய்கிறார்கள். அவர்கள் அதை இந்த தளத்திற்கு வெளியெ உள்ள பாமரர்களுக்குப் பரப்புகிறார்கள்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். பதஞ்சலியின் யோகமுறையின் ஒரு வளர்ச்சிக்கட்டம் என தாந்த்ரீக முறைகளைச் சொல்லலாம். தாந்த்ரீக முறை என்பது சிலவகையான உடல்,மனபயிற்சிகள் மூலம் மானுட ஆற்றலை பெருக்கி உச்சத்துக்கு கொண்டு செல்வதாகும். அவ்வாறு ஆற்றலை பெருக்குவதன்மூலம் அவன் பிரபஞ்சபிரம்மாண்டத்தை அறியும் விரிவுகொள்கிறான். இதை தாந்த்ரீகசாதனா என்று சொல்லலாம்

தாந்த்ரீக முறையில் உயிராற்றல் ஒன்பது படிநிலைகளாக அல்லது ஒன்பது வெளிப்பாடுகளாக உருவகிக்கப்பட்டது. அந்த ஒன்பதும் ஒன்பது சக்கரங்களாக, ஒன்பது தாமரைகளாக, ஒன்பது சுழிகளாக உருவகிக்கப்பட்டன.   அதில் முதலாவதாக உள்ளது மூலாதாரம். அது காமம் என்ற ஆற்றல். அதுவே உயிர்களின் முதல் ஆற்றல் வெளிப்பாடு என்பதனால் அதற்கு அப்பெயர். அந்த உயிராற்றலை யாக குண்டத்தில் உறங்கும் நெருப்பு என்று உருவகித்தனர். அதனால் அதற்கு குண்டலினி என்று பெயர் வந்தது. அது சுருண்டு உறங்கும் பாம்பு போன்றது என்றார்கள்.

ஒன்பது ஆற்றலும் எல்லா உயிர்களுக்கும் உரியவையே. ஆனால் மனிதனுக்குள்தான் அகங்காரம் உள்ளது. அகங்காரம் என்றால் தன்னுணர்வு. [அகம் = சுயம்] அந்தத் தன்னுணர்வு சென்று தொடும்போதுதான் ஒன்பது ஆற்றல் மையங்களும்  விழிப்புகொண்டு முடிவில்லாத ஆற்றலைவெளிப்படுத்துகின்றன. அந்த அகங்காரம் முதலில் சென்று தொடும் ஆற்றல் காமமே. ஆகவே அது மூலாதாரம் எனப்பட்டது. அங்கிருந்த ஆற்றல் அதாவது குண்டலினி எழுந்து பிற ஆற்றல் மையங்களை தீண்டி எழுப்பும் என்று சொல்லப்பட்டது.

இரண்டாவது ஆற்றல் பசிதான். மூன்றாவது மூச்சு இவ்வாறு ஒன்பது  ஆற்றல் மையங்கள் நம்மில் உள்ளன. மூலாதாரத்தில் இருந்து எழும் முடிவிலாத ஆற்றலைக் கட்டுப்படுத்தி, நெருப்பைச் சமையலுக்குப் பயன்படுத்துவதுபோல பயன்படுத்தி, பிற ஆற்றல் மையங்களை விழிக்கச் செய்து  முமுமையான மானுட ஆற்றலை வெளிப்படுத்தலாம் என்று தாந்த்ரீகர் சொன்னார்கள். அதாவது காமத்தின் ஆற்றலை எழுப்பி அதை கட்டுப்படுத்தி படிப்படியாக பசி,பேச்சு,சிந்தனை என விரித்து உச்சகட்ட உள்ளுணர்வின் ஆற்றலை எழுப்பும் ஒரு பயிற்சி அது.

நம் சூழலில் என்ன ஆயிற்று என்றால், இந்த உருவகங்களை அப்படியே பொருட்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். குண்டலினியை தொட்டு எழுப்பும் பயிற்சிகளை அளிக்கிறார்கள்! ஒன்பது தாமரைகளையும் கண்ணால் பார்க்க முடியும் என்கிறார்கள். ஆறுமாதம் எங்காவது பயிற்சிக்குச் சென்றுவிட்டு குண்டலினி அசைந்தது, பாம்பு போல பத்தி விரித்தது என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இரண்டாவதுபிழை என்பது, சாதகர்களையும் முக்தர்களையும் லௌகீகநோக்கில் ஒருவகை மாந்த்ரீகர்களாகப் புரிந்துகொள்வது. அவர்கள் சென்றிருக்கும் தூரமும் அடைந்திருக்கும் நிலையும் சாமானியர்களுக்கு தெரியாது. எளிதில் அவர்களால் புரிந்துகொள்ளவும் இயலாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அன்றாட லௌகீகச் சிக்கல்கள். லௌகீகத்தின் எல்லைகள். ஆகவே இந்த சிக்கல்களையும் எல்லைகளையும் தாண்டியவர்கள் அவர்கள் என்று கற்பனை செய்துகொள்கிறார்கள்.

ஒரே சமயம் பல இடங்களில் இருப்பது, நோய்களை குணப்படுத்துவது, நீரில் நடப்பது, நெருப்பை குடிப்பது, முக்காலத்தையும் சொல்லிவிடுவது,வேலை வாங்கிக் கொடுப்பது, பிள்ளைவரம் கொடுப்பது என்று பலவகையான மாயத்தன்மைகள் இவர்கள்மேல் ஏற்றப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் ஒரு பொதுத்தன்மை உண்டு, இவை எவையுமே இந்த சாமானியர்களால் செய்யக்கூடுவன அல்ல. அப்படியானால் இவற்றைச் செய்யக்கூடியவர்தானே பெரியவர்? இந்த எளிய தர்க்கமே இந்தவகையான உருவகங்களை உருவாக்குகிறது.  

உண்மையான ஞானசாதகர் இருவகையில் இந்த மூடத்தனத்துக்கு எதிர்வினையாற்றுவதைக் கண்டிருக்கிறேன். லௌகீகத்தின் அல்லல்களில் வாழும் மக்கள் அதைச்சார்ந்தே அனைத்தையும் புரிந்துகொள்வது இயல்பே என்று உணர்ந்த நிதானத்துடன் அவர்களிடம் கனிவுடன் அவர்கள் நாடும் ஆசியை அளித்து விலகிவிடுபவர்கள் ஒரு சாரார். எளிய லௌகீக விருப்புகளை தன் மேல் கொட்ட வருபவர்களை கடிந்து துரத்தியடிப்பவர்கள் இன்னொரு சாரார். ஒருபோதும் ஒருபோதும் ஓர் உண்மையான ஞானசாதகன் பாமரர் சுமத்தும் இத்தகைய லௌகீக அடையாளங்களைச் சுமப்பதில்லை.

ஆகவே இங்கே திட்டவட்டமாக சொல்லவேண்டியது இதுதான். சாதனா என்பது முழுக்க முழுக்க முழுக்க உள்ளம் சார்ந்த ஒன்றுதான். பதஞ்சலியின் யோக மார்க்கமும் சரி, தாந்த்ரீக யோக மார்க்கமும் சரி,  மானுட அகத்தை விரிவாக்கி அவன் அறிதலின் வீச்சை முழுமைப்படுத்தும் நோக்கம் மட்டுமே கொண்டவை. அவை எந்தவகையான உடல்சார்ந்த அதிவல்லமையையும் அளிப்பதில்லை. அவை எந்த வகையான மாய ஆற்றலையும்  உருவாக்குவதில்லை.

யோகப்பயிற்சிக்கு உதவுவதற்காக உடல்சார்ந்த வல்லமையை பெருக்கிக் கொள்ளும் யோகிகள் உண்டு. உதாரணமாக இமய மலையில் இரண்டு டிகிரி குளிரில் நிர்வாணமாக அலையும் யோகிகளைக் கண்டிருக்கிறேன். மனத்திண்மை மற்றும் பயிற்சி மூலம் அடையப்படும் ஓர் ஆற்றல் மட்டும்தான் அது. அவர்களின் யோகத்திற்கு அது தேவையாகிறது, யோகத்தினால் அது விளையவில்லை. அதை எந்த ஒரு திருடனும் போக்கிரியும் பயின்று அடைந்துவிடமுடியும்.

அதேபோல் பசி தூக்கம் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடு, நினைவின் மீதான கட்டுப்பாடு என யோகிகள் பயின்று அடையும் சில இயல்புகள் உண்டு.  அவை நமக்கு ஆச்சரியத்தை அளிக்கும். அத்தகைய திறன்கள் கொண்ட யோகிகள் உண்டு, அவை எதுவுமே இல்லாதவர்களும் உண்டு. யோகம் எந்தவகையான உடல் சார்ந்த அடையாளத்தையும்  தனிச்சிறப்பையும் உருவாக்குவதில்லை.

புருவமத்தியில் ஒளி தெரிவது, நெற்றிக்கண்திறப்பது, கைவிரல் நுனிகளில் ஆற்றல் வெளிவருவது, மூச்சுக்காற்று ஏறுக்கு மாறாக வீசுவது இவ்வாறெல்லாம் சாதனா மூலம் ‘கிடைக்கும்’ பயன்கள் என்று பலரும் பலவற்றைச் சொல்கிறார்கள். பல யோகமுறைகள் நெடுங்காலம் குருமுகத்தில் இருந்து கற்கக்கூடியனவாக, ரகசியமானவையாக, குழூஉக்குறியிலும் குறியீடுகளிலும் எழுதப்பட்டவையாக இருந்தன என்பதை நாம் அறிவோம். அக்காலங்களில் உருவாக்கப்பட்டு எழுதப்பட்ட பல குறியீடுகளை அப்படியே எடுத்துக்கொள்வதன் மூலம் உருவாகும் பிழைப்புரிதல்கள் இவை. அவற்றை பலர் மோசடியாக, பிறர் அறியாமையினால் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சாதனா என்பது இது எதுவுமே அல்ல. அறிதலின் மூன்று பரிமாணங்கள் தர்க்கம், கற்பனை , உள்ளுணர்வு. மூன்றையும் சாத்தியமான உச்சம் நோக்கிக் கொண்டு செல்லுதல் மட்டும்தான் அது. நம்முடைய குறுகலான சொந்த அனுபவங்கள், நம்முடைய விருப்புவெறுப்புகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தொடர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சியின்மூலம் அவற்றை விரிவுபடுத்திக்கொண்டே செல்ல முடியும்.

நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு மிகமிகக் குறைவான அளவுக்கு தர்க்கமும் கற்பனையும் உள்ளுணர்வும் போதும். ஆகவே நமக்குள் இருக்கும் சாத்தியங்களில் மிகச்சிறிய பகுதியை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதற்குமேல் உள்ள சாத்தியங்களை நாம் அறிவதில்லை. அச்சாத்தியங்களை பயின்று அடையும் ஒருவர் நாம் நம்பமுடியாத அளவுக்கு அக ஆற்றலை அடைய முடியும். உண்மையில் இதுதான் சாதனாவில் உள்ள அற்புதம் என்பது.

இதை ஓர் அளவுக்குமேல் விளக்க முடியாது. இதைப்பற்றி ஒருபோதும் பொதுவிவாதம் செய்யலாகாது என்பது சாதனாவின் விதிகளில் ஒன்று. சுருக்கமாகச் சொல்கிறேன். நமது இளமைபப்ருவத்தில் நாம் இந்த உலகை ஒருவகையாக அறிந்துகொண்டிருந்தோம். வாழ்க்கையைச் சந்தித்து அனுபவங்கள் வழியாக முதிரும்போது நம் அகம் மாறிவிடுகிறது. அதற்கேற்ப நாம் அறியும் புற உலகமும் மாறி விடுகிறதல்லவா? இதே போன்று பல நூறுமடங்கு பெரிய ஒரு மாற்றத்தைக் கற்பனை செய்யுங்கள்.

ஓர் அவமானம், ஓரு தோல்வி, ஒரு மரணம் நம் அகத்தை மாற்றி நாமறியும் உலகையே மாற்றிவிடுகிறதல்லவா அதேபோலத்தான் சாதனா உருவாக்கும் அனுபவங்கள் அகத்தை மாற்றுகின்றன. அதன் வழியாக அறியப்படும் பிரபஞ்சமும் மாறுகிறது. காரணம் அப்போது நாம் திடீரென்று நம் மனத்துடன் தனித்திருக்க நேர்கிறது. நாம் நம் மனத்தை கூர்ந்து பார்க்க ஆரம்பிக்கிறோம். அதனூடாக நாம் நம்மைப்பற்றி அறிகிறோம். அது நம்மை வெகுதூரம் இட்டுச் செல்கிறது. அதன்பின் நாம் பழைய ஆட்கள் அல்ல.

சாதனா என்பது அதைவிட உக்கிரமான, தீவிரமான ஒரு சுயக் கவனிப்புப் பயிற்சி என்று சொல்லலாம். அதன் சாத்தியங்களும் விளைவுகளும் சாமானியர் நம்பக்கூடிய நெற்றியில் கண்முளைப்பது முக்காலமும் தெரிவது போன்றவற்றைவிடவும் பலமடங்கு பிரம்மாண்டமானவை. பலமடங்கு அற்புதமானவை. 

அந்த அற்புதத்தைப் புரிந்துகொள்ளாமல்  அதை உலகியல்செயல்பாடுகளின் மீது ஏற்றிப்பார்ப்பதனாலேயே சாதனாவை  உலகியல் விதிகளை மீறிச்செல்வதற்கான ஒருவகை மாந்திரீகப் பயிற்சி என்று எடுத்துக்கொள்ள நேர்கிறது. சாதகன் அவன் எந்த உச்சத்தை அடைந்தவனானாலும் பௌதிக விதிகள் மீது எந்த கட்டுப்பாடும் உடையவனல்ல என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன்.

ஆம்,  அவனுக்கும் உணவு தேவைப்படும். அவனுக்கும் நோயும் சாக்காடும் உண்டு. அவனுக்கும் நீர் குளிர்ச்சிதான், நெருப்பு சுடுவதுதான். அவனால் ஒரேசமயம் ஒரே இடத்தில்தான் இருக்கமுடியும். அவனால் எதையும் உருவாக்கவோ மறைய வைக்கவோ முடியாது. அவனால் காற்றில் பறக்க முடியாது. உடலுக்கும் உயிருக்குமான தொடர்பில் தலையிட முடியாது. அவனாலும்  எதிர்காலத்தின் கோடானுகோடி சாத்தியங்களை ஊகித்துவிடமுடியாது. ஞானமென்பது அது அல்ல.

சாதகனோ அல்லது அதன் உச்சத்தை அடைந்தவனோ ஒரு நிலையிலும் இந்த பொருண்மை உலகின் இயக்கத்தில் தலையிட முடியாது. அவன் எவருக்கும் நோய்களை குணமாக்க முடியாது, வேலை வாங்கித்தரமுடியாது, குழந்தைவரம் தரமுடியாது. எப்படி நாம் அனைவரும்  இந்த பிரபஞ்சத்தின் பௌதிக விதிகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதுபோன்றே சாதகனும் ஞானியும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் மனிதர்களே.

ஒரு சாதகன் அல்லது ஞானி தேடுவதும் அடைவதும் முற்றிலும் வேறானவை என்று மட்டும் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். கொஞ்சம் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்து அவனைப் புரிந்துகொள்ள முயலுங்கள். எல்லாவற்றையும் உங்கள் இடத்துக்குக் கொண்டுவந்து புரிந்துகொள்ளும் மூடத்தனத்தை விட்டு சற்றேனும் கவனியுங்கள்.  ரேஷன்கடைக்குப் போகாமலேயே அரிசி வீட்டுக்கு வந்துவிடும் மாயத்தை நிகழ்த்துவதற்காக சாதகன் தன் வாழ்நாளைப் பணயம் வைத்து தவமியற்றவில்லை.

மெய்ஞானம் கனிந்த யோகியர் சிலருடைய அருகிலேயே சிலநாட்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்தவன் நான். அவர்களிடம் வரும் ஒவ்வொருவரும்  அவர்கள் தங்களிடம் வைத்திருக்கும் அற்புதமான ஒளியை மூர்க்கமாக நிராகரித்துவிட்டு லௌகீகமான கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து மன்றாடுவதைக் கண்டு கொதித்து எரிந்திருக்கிறேன். ஓர் அமைச்சரிடம் அல்லது உள்ளூர் எம்.எல்.ஏயிடம் கேட்கவேண்டிய விஷயங்களை வந்து ஞானத்தின்பீடத்திலிருக்கும் மனிதனிடம் கேட்கிறார்கள். அவர்கள் சென்றபின் அந்த யோகியர் என்னைப்பார்த்துச் சிரிப்பார்கள். நித்யா ஒருமுறை சொன்னார் ‘It is human’ . அது ஒரு ஆப்தவாக்கியம் அவருக்கு.

தயவுசெய்து எந்த சாதகனையும் ஞானியையும் லௌகீகமாக விளக்க முயலாதீர்கள்.  ஞானி லௌகிக அற்புதங்களை நிகழ்த்தினார் என்று நம்பவோ, அப்படி எதிர்பார்க்கவோ செய்யாதீர்கள். அதன் வழியாக அவரை நீங்கள் முழுமையாக அவமானப்படுத்துகிறீர்கள். தயவுசெய்து எந்த ஞானியிடமும் சென்று லௌகீகமான எதையும் கோராதீர்கள், அதன்வழியாக நீங்கள் அவர் அடைந்த அனைத்தையும் துச்சமாக எண்ணி அவரைச் சிறுமைசெய்கிறீர்கள். புல்லாங்குழல் மேதையிடம் அந்தப்புல்லாங்குழலை அடுப்பூத தரும்படிக் கோருவது போன்றது அது.

நம் அறியாமையை அவர் தன் ஞானத்தின் சமநிலையால் ஒரு இனிய புன்னகை வழியாக எதிர்கொள்ளலாம். அங்கே நீங்கள் உங்களைத்தான் சிறுமைப்படுத்திக்கொள்கிறீர்கள். ஒரு ஞானியிடம் ஞானமன்றி எதையுமே கோராதீர்கள். கொஞ்சம் முயற்சியும் கவனமும் இருந்தால் நாமே செய்துகொள்ளக் கூடிய எளிய வேலைகளைச் செய்வதற்காக ஒரு ஞானி வந்து உதவவேண்டும் என எதிர்பார்க்கும்  அகவறுமையில் இருந்து தயவுசெய்து வெளியே வாருங்கள். அதன் பின்னரே இவற்றை சற்றேனும் புரிந்துகொள்ள இயலும்.

இவ்வாறு சாதனாவையும் ஞானியையும் நம்முடைய அறியாமையால் அடையாளப்படுத்திக் கொண்டபின்னர் நாம் தேட ஆரம்பிக்கிறோம். தவறான தேடல் தவறானவர்களிடம் கொண்டுசென்று சேர்ப்பதில் என்ன ஆச்சரியம்? தங்களை அதிவல்லமை கொண்டவர்களாக அறிவித்துக்கொள்பவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்கிறோம். அவர்கள் நம் லௌகீக கஷ்டங்களை துரத்திவிடுவார்கள் என்று நம்புகிறோம். அவர்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாந்துகொண்டிருக்கிறோம்.

இந்த அறியாமையைக் கொள்முதல்செய்ய போலிகள் கிளம்பிவருகிறார்கள். நவீன ஊடகங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டு உச்சகட்ட பிரச்சாரம் செய்து நம்மை அடித்துச் சுருட்டிக்கொண்டு செல்கிறார்கள். நமக்குத்தேவை அதிமானுட பிம்பங்கள். அந்தபிம்பங்களை அவர்கள்   நாம் விரும்பியபடியே பிரம்மாண்டமாக உருவாக்கி  அதி தீவிரமாக பரப்பும்போது நாம் அவர்களிடம் சென்று விழுவதில் எந்த வியப்பும் இல்லை. இந்த மோசடி எல்லா மதங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

மகத்தான ஒரு விஷயத்தை அபத்தமாக சிறுமைப்படுத்திப் புரிந்து கொள்வது, அந்த அறியாமையை பயன்படுத்திக்கொள்பவர்களை நம்புவது, அவர்களிடம் ஏமாந்ததும் அந்த மகத்தான விஷயத்தையே ஐயப்படுவது என்றுதான் நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஞானி ஒருபோதும் தன்னை பௌதிக விதிகளை மீறக்கூடிய அதிமானுடனாக முன்வைப்பதில்லை.லௌகீக கஷ்டங்களை தீர்ப்பதற்காக உட்கார்ந்திருப்பதுமில்லை. இந்த உண்மையை மட்டும் எப்போதும் முதல் அளவுகோலாகக் கொண்டால் போதுமானது.

[மேலும்]

 

தியானம்

குருகுலமும் கல்வியும்

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 7
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 3    
முந்தைய கட்டுரை'ஜாக்ரதை!'
அடுத்த கட்டுரைஆன்மீகம், போலி ஆன்மீகம் – 2