«

»


Print this Post

'ஜாக்ரதை!'


அன்பு ஜெ,

நித்யானந்தர் போல இந்து மதத்தின் நவீன முகங்கள் அடிபடும்போது கோபமும் வருத்தமாக உள்ளது ,

ஜக்கி போன்ற நவீன குருக்களால் சமுதாய பணிகளுக்கு திருப்பிவிடப்பட்ட நிறைய பேரை பார்த்துள்ளேன் , நம்பிக்கை இழப்பு மொத்தமாகதானே பாதிப்புகளை ஏற்படுத்தும் ?

இல்லை இதுவும் கடந்து போகும் என எடுத்துக் கொள்வதா ?
அன்புடன்

அரங்கசாமி

அன்புள்ள ஜெ,

சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில் நித்யானந்தர் என்ற புகழ்பெற்ற சாமியார் ஒரு நடிகையுடன் இருக்கும் அந்தரங்கமான காட்சியை  வெளியிட்டார்கள். எனக்கு அந்த சாமியார் மீது எந்தவகையான ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்காட்சி அதிர்ச்சியளித்தது. இந்து ஞான மார்க்கம் என்றுமில்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த ஊடகத் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் காலம் இது. அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன். இந்தநிலையில் இந்தமாதிரியான ஆபாச நிகழ்ச்சிகள் அந்தப்போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன. இந்த ஒரு நிகழ்ச்சியைவைத்தே இந்துமதத்தில் உள்ள துறவு என்ற விஷயமே கேவலப்படுத்தப்படும் என்பதை உடனே பல இடங்களில் இருந்து வந்த ‘கமெண்டுகளை’ வைத்தே அறிந்துகொண்டேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்

சிவராமன்,சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு,

தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பல கடிதங்கள். நான் தொலைக்காட்சி பார்க்கவில்லை, என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. ஆனாலும் இதில் கருத்துச்சொல்லும்படி கேட்டார்கள் நண்பர்கள். நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.

ஆனால் முதலில் அந்தச் செய்தி சிவராமன் குறிப்பிட்டது போன்று ஓர் எண்ணத்தை என்னிடமும் உருவாக்கியது. ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக  அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.

இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று,  பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம்.  முதல்தளம் தியானம் போன்றவற்றையும், இரண்டாம் தளம்  அந்தரங்கமான பக்தியையும் வழிபாடுகளையும், மூன்றாம்தளம் கூட்டுக்கொண்டாட்டமான வழிபாடுகளையும் முன்வைக்கிறது.

நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை. அவருக்கு ஞானமார்க்கம் தேவையாகிறது. ஆனால் இந்து தத்துவ ஞானம் அதை தேடிச்செல்லும் மிகச்சிறுபான்மையினர் குருமுகத்தில் இருந்து கற்றுக்கொள்வதாகவே இருந்தது.

இருபதாம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டு என்று கண்ட முன்னோடி ஞானிகள் இந்து தத்துவ தளத்தை பரவலாக மக்களுக்குக் கொண்டு செல்ல அமைப்புகளை உருவாக்கினர். ராமகிருஷ்ண மடம் அவற்றில் முக்கியமானது. காலம் மாற மாற இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்.

சமீபகாலமாக, இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலுக்கேற்ப  இந்து தத்துவங்களையும் தியானமுறையையும் எளிமைப்படுத்தி சுருக்கி பெருவாரியான கல்விகற்ற மேல்மட்டத்தினருக்கு அளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இங்குதான் நவீனச் சாமியார்களும் அவர்களின் மாபெரும் அமைப்புகளும் உள்ளே வந்தன.

அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில் அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களை நாம் அணுகவே முடிவதில்லை. இவர்களைப்பற்றி ஊடகங்கள் அளிக்கும் பிம்பங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை நாம் பரிசீலனைசெய்யவே முடியாது. போலிகள் யார் உண்மையானவர் யார் என்று அறியவே இயலாது. இதுதான் சிக்கலே.

பல வருடங்களுக்கு முன்னர் இத்தகைய சாமியார் ஒருவரைப்பற்றி இதழாளராக இருந்த தமிழினி வசந்தகுமார் சொன்னார்,  அவர் தனக்குக் கிடைக்கும் அத்தனை பணத்தையும் பலவருடங்கள் திரும்பத்திரும்ப விளம்பரத்திலேயே செலவிட்டார். ஒருகட்டத்தில் அந்தப்பணம் பலகோடி ரூபாயாக மாறியது. அந்த நிறுவனம் அசைக்கமுடியாத வலிமை கொண்டதாகவும் ஆகியது

அந்த சாமியாரின் உத்தியையே பெரும்பாலும் இன்றைய நவீனச் சாமியார்கள் பலர் கைக்கொள்கிறார்கள். இந்த நித்யானந்தரைப்பற்றி நிறையவே சொன்னார்கள். எழுத்தாளர்கள், இதழாளர்கள் போன்றவர்களைக் கவர்ந்து தன் பிரச்சாரகர்கள் ஆக்க இவர் மிகப்பெரிய தொகையைச் செலவிடுவதாகவும்; அந்த ஈர்ப்பு பலரை அவரிடம் கொண்டு சென்று சேர்த்ததாகவும் அறிந்தேன். நண்பர் ஷாஜி கூட அவருக்கு விரிக்கப்பட்ட வலையையும் அளிக்கப்பட்ட பொருளாதார வாக்குறுதிகளையும் பற்றிச் சொன்னார்.

இவ்வாறு இதழியல், எழுத்தாளர் தரப்புக்குச் செலவிடும் பணம் இவர்களுக்கு பெரும் முதலீடே. பலகோடி ரூபாய் செலவுசெய்து விளம்பரம்செய்வதை விட அதிக பலனை  ஊடகங்களில் இவர்கள் ஆற்றும் பணி அளிக்கிறது. இவர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் மர்மமான பின்னணியுடன் உள்ளன. இவற்றின் பெரும் செல்வம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை நாம் அறியமுடியாது.

நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப் படையெடுப்பின் ஒரு விளைவு. ஆனால் இதன்மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். ஏற்கனவே சாய்பாபாவைப்பற்றி இதேபோல எத்தனையோ படங்கள் வெளிவந்தன. அவரது ஆசிரமத்திலேயே பாலியல்கொலைகள் நடந்தன. அவரது பக்தர்கள் அதை பகவானின் லீலை என்றே எடுத்துக்கொண்டார்கள். அவரை பயன்படுத்திய எத்தர்கள் அவர் லாபகரமாக இருக்கும்வரை அவரை விடமாட்டார்கள். ஆக அவருக்கு எந்தப்பாதிப்பும் நிகழவில்லை.

நித்யானந்தருக்கும் இதுவே நிகழும். அதிகம்போனால் ஒருமாதம் இந்தப்பரபரப்பு நீடிக்கும். ‘கடவுளுக்கும் சோதனைகள் வரும் என்று பக்தர்களுக்குக் காட்ட அவரே ஆடிய லீலைதான் இது’ என்று சொன்னால் பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியினால் அவரது புகழ்கூடினால்கூட ஆச்சரியமில்லை. நம்பிக்கை என்பது அபாரமான வல்லமை வாய்ந்தது. அதுவே மாயை என்று சொல்லலாம்.

இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல. அந்த வேறுபாட்டை இல்லாமலாக்கி நித்யானந்தரை முன்வைத்து இந்து மரபை எள்ளிநகையாட, சிறுமைசெய்ய முயல்வார்கள் என்பது உண்மையே. ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்றைய சூழலில் இத்தகைய ஊடக மோசடிகளைத் தாண்டி இந்துமதத்தின் தத்துவார்த்தமான ஆழத்தை ஒருவர் எப்படி அடைய முடியும்? எப்படி அவன் முன் திறக்கும் நூற்றுக்கணக்கான வாசல்களில் உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய முடியும்? 

ஊடகங்கள் உருவாக்கும் இத்தகைய பிம்பங்களையும் இவர்களின் அமைப்புகளையும் சாராமல் சிந்திப்பதற்கான அகச்சுதந்திரத்தை, கவனத்தை  ஒவ்வொரு இந்துவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான பதிலாக இருக்க முடியும். ஒரு தனிமனிதன் தன் ஆன்மீகமான பயணத்தை தன்னுடைய சொந்த உள்மனதின் துணைகொண்டு தன் பக்தியாலும் தியானத்தாலும்  தானே நிகழ்த்திக்கொள்ளவேண்டும் என்றுதான் இந்து ஞானமரபு அறைகூவுகிறது.

நித்யானந்தரோ அல்லது வேறு எந்த தனிமனிதரோ இந்து மதத்தின் நவீன முகமாக இருக்க முடியாது. இந்து மதத்தின் அடிப்படையான தரிசனங்கள் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப பரிணாமம் கொள்வதே அந்த முகத்தை உருவாக்கும். அதற்கு அமைப்புகளோ அமைப்பு மனிதர்களோ தேவையில்லை.

‘உத்திஷ்டதா!ஜாக்ரதா! பிராப்யவரான் நிபோதிதா!’  [எழுமின் விழிமின் குறிக்கோளடையும் வரை செல்மின்] என்ற உபநிடத வரியில் உள்ள ஜாக்ரதை என்பது சலியாத கவனத்துடன் செல்லும்பாதையை  தேர்ந்தெடுப்பதையே சுட்டுகிறது. ஒவ்வொரு ஆன்மீகப்பயணமும் காலடிபடாத மானுடக் காட்டுக்குள் தனித்துச் செல்லும் முதல்பயணம் போன்றதே.  ஏற்கனவே வெட்டப்பட்ட வழிகளோ விளக்குகள் வழிகாட்டும் ராஜபாதைகளோ அதில் இல்லை. வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே.  ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம் அதற்கு தேவையாகிறது.  அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ‘ஜாக்ரதை!’

நம்முடைய தாழ்வுணர்ச்சியால், மூளைச்சோம்பேறித்தனத்தால், அச்சங்களால், சபலங்களால் நாம் தவறான நம்பிக்கைகளை நோக்கிச் செல்கிறோம். தவறான நம்பிக்கையில் முதல்காலடி எடுத்து வைக்கும்பொதே ஒவ்வொருவருக்கும் அந்தரங்கத்தின் ஆழத்தில்  அந்த விஷயம் தெரிந்திருக்கும்  என்றே நம்புகிறேன். நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அது முன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6653/

66 comments

Skip to comment form

 1. senthilkumar

  //அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும்.//

  ஜெ,

  ஞான மரபிற்கும் இந்த கல்ட் குரூப்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

  நான் யூடுபில் பார்த்தேன் .இத்தகைய காட்சிகள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் டிவி யில் காட்டியது ஊடகத்தின் பொறுப்பற்ற தன்மைக்கு மேலும் ஒரு எடுத்துகாட்டு.போலி சாமியாரை வெளி கொண்டுவரும் போது எந்த தணிக்கையும் தேவை இல்லை என நினைத்தார்கள் போலும்.

 2. baski

  “அதிகம்போனால் ஒருமாதம் இந்தப்பரபரப்பு நீடிக்கும். ‘கடவுளுக்கும் சோதனைகள் வரும் என்று பக்தர்களுக்குக் காட்ட அவரே ஆடிய லீலைதான் இது’ என்று சொன்னால் பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியினால் அவரது புகழ்கூடினால்கூட ஆச்சரியமில்லை” — இதுதான் நடக்கப் போகிறது. எத்தனை பைனான்ஸ் கம்பெனிகளைப் பார்த்திருப்போம். மக்கள் முதலீடு செய்யாமலா விட்டார்கள்?
  http://baski-reviews.blogspot.com

 3. Ramachandra Sarma

  ஷாஜி அவர்களுடன் பேசும்போது அவர் அவருக்கு வந்த ஆஃபர் குறித்து சொன்னார். பல எழுத்தாளர்களுக்கு விரிக்கப்பட்ட விலை குறித்தும் கூறினார். நீங்கள் அந்த லிஸ்டில் இல்லை என்றே நம்புகிறேன். கடைசியில் விலைபோன ஒரு எழுத்தாளர் அவரைப்பற்றி நாளொன்று தவறாது எழுதிக்கொண்டிருக்கிறார். வாங்கின காசுக்கு எழுதித்தானே ஆகவேண்டும். ஏன் இப்படி நடக்கிறது என்றே புரியவில்லை.

 4. Suresh

  மிக மிக சரியான பதில். இது ஊடகங்களின் வியாபாரம். ஆனால் இவரை பிரபல படுத்திய எந்த ஊடகமும் இப்போது பொறுப்பு எடுத்து கொள்ள போவது இல்லை. இந்த செய்தியும் மற்றொரு வியாபாரம் தான்.

 5. Ramachandra Sarma

  வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே – எத்தனை உண்மையான வர்த்தைகள். உங்கள் சமநிலை வியக்கவைக்கிறது. நான் அன்றாடம் வழிபடும் ஸ்ரீ த்யாகராஜர் சொல்வது மனதில் மோதுகிறது. எந்தவாரலைநகாநி காம சிந்தாக்ராந்துலைநாரு. (எவ்வளவு பெரியவராயினும் இந்த காமச்சிந்தையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்). நாம் குறுக்குவழிகளை தேடுவதே இதற்கெல்லாம் காரணம்.

 6. kargil_jay

  ஸ்ரீ. ஜெயமோகன்
  என் நீங்கள் முன்பே இவரைப் பற்றிய உங்கள் கருத்தையோ அல்லது உங்கள் நண்பர் ஷாஜியின் அனுபவத்தையோ வெளியிடவில்லை?

 7. muthu prakash

  அன்பிற்குரிய ஜெ,
  காலை வணக்கங்கள்…முதற் பத்தியோடு தாங்கள் பதிவை முடித்திருந்தால் நான் மேலும் மகிழ்ந்திருப்பேன்…உங்களின் ஜாக்கிரதை எனும் எச்சரிக்கையை இந்திய ஞான மரபை சாராத பிற
  பயணிகளுக்கும் விரித்து என் புரிதலை மேம்படுத்திக் கொண்டேன் … நன்றி ஜெ.

 8. pgomat

  முதலில் எனக்கு பட்டதை சொல்கிறேன். இந்த கட்டுரையின் நோக்கமே உங்கள் உள்நோக்கம் என்று எனக்கு தோன்றுகிறது. பச்சையா சொன்னா சாருவை பழி வாங்குவதாகவே தோன்றியது. தவறாக இருப்பின் என்னை மன்னித்து கொள்ளவும் – தயவு செய்து.

  நான் நித்யாவை பார்த்தது இல்லை. அவர் மட்டும் அல்ல எவர் செய்தாலும், அது தவறு என்று சொல்ல முடியாது. லௌதீக நாட்டம் கொண்டவர் இவர் மீது பிம்பம் கொன்டிருந்தால் அது அவர்கள் தவறு. நீங்கள் சொல்வது போல யார் போலி யார் நிஜம் என்று கூறமுடியாது – நீங்கள் உட்பட. ஏன் என்றால் இது உடல், மனதை தாண்டிய சக்தி நிலையில் விளையாடும் விளையாட்டு. எப்படி சண்டியருக்கு ஆதி சங்கரர் புரியாதோ அதே மாதிரி மனதின் ஆளுமையால் வாழும் பெரும்பாலான நமக்கு இந்த நிலையில் உள்ளவரை பற்றி அறிய முடியாது. அறிவிலிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மேலோட்டமாக பெரிய வித்யாசம் தெரியாது. இது ஒரு வட்டம் போன்றது. ஒரு விதர்கத்துக்கு சொல்கிறேன்
  *) கிருஷ்ணர் என்ன செஞ்சார்னு, எப்படி பட்டவர்னு நம்ம சொல்றோம் ? நம்ம வீட்டு பெண்ணும் இதே கண்ணன் இப்பொழுது இருந்து, அவன் பின்னால் சென்றால் என்ன எண்ணுவோம் ?
  *) ஓஷோ கதையில் இருந்து : ஆதிசங்கரர் ஒரு முறை போகிற வழியில் சாராயம் ஒரு மடக்கு குடித்து விட்டு அவர் பாட்டுக்கு நடந்து சென்றார். அதை பார்த்த அவர் சிஷ்யர்கள் குரு செஞ்சார்னு அவங்களும் ஆளுக்கு ஒரு ரவுண்டு சாராயம் குடித்து விட்டு பின் தொடர்ந்தனர். கொஞ்சம் தூரம் சென்ற விட்டு, ஆதி சங்கரர் நெருப்பு குழம்பாக இருந்த இரும்பை ஒரு மடக்கு குடித்து விட்டு நகர்ந்தார், அவர் சிஷ்யர்கள் முழித்தனர்.
  *) கல்பதரு – கேட்டதெல்லாம் கிடைக்கும்னா, ஒரு பெண் உங்களோடு கூட வேண்டும் என்று கேட்டால் கிடைக்காதா ?
  *) இது நம்ம ஏரியா இல்லை. நம்ம சிரிச்சுகிட்டே மனசுல வஞ்சிக்ரத கண்டுபிடிக்க முடியாத போது இது மனதயும் தாண்டியது – இதை குருடர்கள் எப்படி கண்டுபிடிப்பார்கள்.
  *) இதுக்கு வழியும் எங்க தலைவர் ஓஷோ சொல்லிருகாறு. குரு எப்படி பட்டவர்’நு முக்கியம் இல்லை, உன் நம்பிக்கை தான் முக்கியம். கல்லை கூட குரு’வா நெனச்சு நீ எதையும் அடைய முடியும். அது வெளியே இல்லை உனக்கு உள்ளே உள்ளது.
  *) நதி மூலம் ரிஷி மூலம் பார்க்க கூடாது

 9. Marabin Maindan

  திருமணம் செய்யாமல் துறவியாயிருத்தல் என்பது இந்து சமயத்தில் இல்லாதிருந்து சமண சமயத் தாக்கத்தால் ஏற்பட்டது என்பதை இங்கே கருத்தில் கொள்ளலாம்.
  சமகால நவீன குருமார்கள் கிரஹஸ்தர்களாக இருக்கிறார்கள்.
  “பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என்று கடவுளைக் காணும் மரபில்,வலியத் திணிக்கப்படும் சந்நியாசங்களால் விளையும் சங்கடங்கள் இவை.

 10. Ramachandra Sarma

  இதில் கொடுமை என்னவென்றால் “ஸ்வாமி”யை குறித்து எழுதிய எழுத்தாளர் உடனடியாக தனது தளத்திலிருந்து அவர் குறித்த படங்களை நீக்கிவிட்டார். என்ன ஒரு பக்தி, எத்தனை வாசகர்கள் இவரை நம்பி ஏமாந்திருப்பார்கள். கேட்டால் நானே ஏமாந்துவிட்டேன் போங்கடே என்று சொல்லிவிடுவார். :)

 11. haranprasanna

  அன்புள்ள ஜெயமோகன்,

  இந்தக் கட்டுரையை வாசிக்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்த ஒரு சாமியாரின் மீதும் நான் பற்றுக் கொண்டவனில்லை. கடவுளைத் தவிர, உயிருடன் இருக்கும் எந்த சாமியார்களையும் வழிபடுபவனல்ல. எல்லாம் ஒரு பயமும் தற்காப்பும்தான்! ஆனாலும் நேற்று பார்த்த காட்சி ஏனோ மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது. உங்கள் கட்டுரை அந்த வருத்தத்தை மிகவும் குறைத்திருக்கிறது. நன்றி.

 12. லக்ஷ்மி பாலகிருஷ்ணன்

  திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
  //ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை// இந்து ஞான மரபில் எப்போதிலிருந்து துறவு ஒரு முக்கியமான நிறுவனமாக மாறியது? பௌத்தத்தைப் பார்த்து ஆதிசங்கரர் உள்ளே கொண்டு வந்த விஷயமில்லையா இந்த பூரணத் துறவு? வேத காலத்து ரிஷிகள் அனைவரும் தங்கள் மனைவிமார்களுடனேயே ஆசிரம வாழ்கையை மேற்கொண்டுள்ளனர் என்றே அறிகிறோம். எனில் இந்த தேவையற்ற வரட்டுத்துறவின் அவசியம் என்ன? அதே போல சன்னியாசிகளுக்கு இருக்கக் கூடிய கட்டாய நாடோடி வாழ்கையையும் விடுத்து மடம் கட்டி, சொத்துக்களை வைத்து அவர்களை நிர்வாகம் செய்யும் வழி முறைகளையும் உருவாக்கியது சங்கரரே. அதன் தொடர்ச்சியே இன்று சங்கரராமன் படுகொலை வரை வந்து நிற்கிறது. மனித இயற்கைக்கு எதிரான கட்டாய பிரம்மச்சரிய வாழ்வு, அப்படி வாழ்வோரின் கையில் ஏகப்பட்ட பணம் என்கிற அமைப்புகள் எப்படி தவறாகப் போகாமல் நிலைக்க முடியும்?

  எனவே என் குற்றச்சாட்டு இன்றைய இந்து மதத்தின் சீரழிவிற்கு முக்கிய காரணம் ஆதி சங்கரர் என்பதே. உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

 13. bala

  ஜெ..

  1930 களில் இந்தியவுக்கு ஒரு ஞான குருவைத் தேடி வந்து, இந்தியாவெங்கும் அலைந்து ஆயிரக் கணக்கான சாமியார்களைச் சந்தித்த் பால் ப்ரண்டன், ஒரு சிலரைத் தவிர எல்லோருமே போலிகள் என்றே சொல்லியிருக்கிறார். அவரது “search in secret India” புத்தகத்தில். நிலைமையில் அதிக மாற்றமில்லை இன்றும். உண்மை ஞானிகள் குடத்தினுள் விளக்காகவே இருப்பார்கள். உண்மைத் தேடலும் தாகமும் கொண்டவர்கள் அவர்களை அடைந்தே தீருவார்கள். இது இன்றோடு முடியப் போவதில்லை. இது இந்து மதத்தில் மட்டும் நடப்பதில்லை. இந்த மாதிரி deviants எல்லா நிறுவனங்களிலிலும் உண்டு. அது அரசியல், வணிகம், ஆன்மீகம் என்று எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.

  அடுத்து எந்த சாமியார் என்று பெட் வைத்து விளையாடலாம். இந்த வகை ஆன்மீகத்துக்கு இதற்கு மேல் மரியாதை தருதல் தவறு.

 14. jeevartist

  இதிலிருந்து நவீன கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் பாடம், இனிமேல் தவறாது Camera Jammers உபயோக்கிக்க வேண்டும்

 15. ஜெயமோகன்

  திரு ஜெயமோகன்,
  இத்தனை வருடம் நித்யா நித்யா என்று உருகி உருகி நீங்கள் எழுதி வந்தீர்கள். எல்லா கட்டுரையிலும் அவரை மேற்கோள்காட்டினீர்கள். இப்போது அவர் மாட்டிக்கொண்டதும் எனக்கு முன்பே தெரியும் என்று சொல்லி சாக்குபோக்குகளைச் சொல்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்

  சங்கர் செல்வா

  அன்புள்ள சங்கர்,

  நான் சொல்லிக்கொண்டிருப்பது காலஞ்சென்ற நித்ய சைதன்ய யதியை. நான் அவரை புனிதராக, கடவுளாக எண்ணவில்லை. எந்த மனிதரையும் எண்ணவில்லை. அவர் எனக்கு தன் நூல்கள் வழியாக, ஆளுமை வழியாக கற்பித்த ஆசிரியர். சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா, ஞானி போல இன்னொருதளத்தில். அவரிடம் நான் கற்ற விஷயங்கள் உண்டு. நிராகரித்த விஷயங்களும் உண்டு.

  சரி, எதுவாக இருந்தாலும் அனுதாபங்களை ஏற்றுக்கொள்கிறேன்.சும்மா கிடைப்பதை ஏன் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

  ஜெ

 16. ஜெயமோகன்

  அன்புள்ள பாலா,

  எழுபத்தி எட்டு முதல் தொண்ணூற்றி இரண்டு வரை நான் தேடி அலைந்து சந்தித்தவர்களில் அனேகமாக அனைவருமே போலிகள்தான். ஒரு மனிதர் தன் அமானுட சக்தியால் லௌகீகமான துக்கங்களுக்கு தீர்வளிக்கிறார் என்றால், அவர் எவராக இருந்தாலும், போலியே.

  ஞானியர் தீர்வளிப்பவர்கள் அல்ல. ஞானத்தை பகிர்ந்த்கொள்பவர்கள் மட்டுமே.

  ஜெ

 17. Ramachandra Sarma

  முதலில் பெரியார் இப்போது நித்யா வா? பெயர்க்குழப்பம் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஏதாவது செய்யுங்களேன் ஜெ. ;)

 18. ஜெயமோகன்

  அன்புள்ள லட்சுமி பாலகிருஷ்ணன், முத்தையா,

  1. வேதகாலத்திலேயே அபூர்வமாக பாலிய துறவும் இருந்திருக்கிறது. சிறந்த உதாரணம் சுகப்பிரம்ம ரிஷி.

  2. இந்து மதத்தில் துறவு ஒரு நிறுவனம் அல்ல. அது ஒரு தனிமனிதரின் தேர்வு மட்டுமே. ஞானத்தை அறிய லௌகீக வாழ்க்கையின் விருப்புவெறுப்புகள் தடையாகுமென்பதனால் அதைத் துறக்கிறார்கள். அது ஒரு வழி. எந்த நிறுவனமும் அதன் விதிகளை உருவாக்கவில்லை. அந்த துறவியே தனக்கான விதிகளை உருவாக்குகிறார், அவ்வளவுதான்

  3 சமணமே முதலில் துறவை நிறுவனமாக ஆக்கியது. அதன்பின் பௌத்தம் இன்னும் தெளிவாக வகுக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்கியது. துறவியர் சங்கம் என்ற அமைப்பே பௌத்தத்தின் அடித்தளம்

  4 பின்னாளில் இந்து மதத்தில் ஆலயநிர்வாகத்திற்காகவும் பிற மத அதிகார பேணலுக்காகவும் மடங்கள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டபோது துறவியர் அதன் பொறுப்பில் இருப்பது நல்லது என்ற எண்ணம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பௌத்த சங்கங்களின் அமைப்பில். இது சுயநலத்தை இல்லாமலாக்கி ஊழல் இல்லாமல் செய்யும் என்று நம்பப்பட்டது.

  5 ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் தான் இன்றுள்ள சங்கர மடங்களா என்பதே வரலார்று ஆய்வுக்குரியது. அவர் நிறுவியது குருகுல முறையாக இருக்கலாம்.

  6 தமிழக சைவ மடங்கள் ஆதிசங்கரர் காலத்தைவிட பழைமையாக இருக்க வாய்ப்புள்ளது.

  7 இந்த அமைப்புகளில் எப்போதுமே ஊழலும் சீரழிவும் இருந்துள்ளன. பல சைவ மடாதிபதிகள் மடத்திற்குள்ளேயே வைபபட்டிகளின் காலனிகளை வைத்திருந்தார்கள். காரணம் அதிகாரம் எப்போதுமே சுகபோகங்களுடனும் ஊழலுடனும் சம்பந்தப்பட்டது என்பதே. மானுட மனம் அதை நோக்கி ஈர்க்கப்படுவது இயல்பு

  8 ஆனாலும்கூட இந்த மடங்களின் ஒட்டுமொத்த பங்களிப்பு என்பது மிக சாதகமானது என்பதில் ஐயமில்லை. அவை துறவியரால் நடத்தப்பட்டவை என்பதனாலேயே மிக மிக எதிர்மறைச்சூழல்களிலும் பிடிவாதமாகச் செயல்பட்டன. அவை எதன்பொருட்டு நியமிக்கப்பட்டனவோ அந்த மரபுகளை கட்டிக்காத்து நவீன காலகட்டம் வரை கொண்டுவந்துசேர்த்தன. தமிழ் சைவ மடங்கள் இல்லையேல் தமிழக பேரிலக்கியங்களில் பாதி அழிந்திருக்கும்.

  9. அமைப்பின் பகுதியாக இருப்பவர் ஒருவர் துறவு சார்ந்த சில நெறிகளை மேற்கொள்வது துறவு அல்ல. அது ஒரு முறை மட்டுமே. துறவு என்பது பூரணமான விடுதலை.

  10. இத்தகைய துறவுக்கு நம் சமூகத்தில் உள்ள மதிப்பை ஒரு வணிக ஆயுதமாக பயன்படுத்த முடியும் என்ற சாத்தியத்தில் இருந்தே போலிச்சாமியார்கள் உருவாகிறார்கள். போலிச்சாமியார்களை வைத்து அந்த வழியை நிராகரிப்பது அபத்தமானது. இன்றைய ஊழல் அரசியல்வாதியை வைத்து காந்தியையும் நெல்சன் மன்டேலாவையும் நிராகரிப்பதற்குச் சமம் அது

  11. உண்மையான துறவு அதற்கேற்ப ஆழ்நிலைகளை, ஆழமான சவால்களை கொண்ட ஒன்று. அதைச் சந்திக்கும் மனிதர்களை நான் கண்டிருக்கிறேன். அது ஒரு மானுட சாத்தியம். அது ஒரு வழி. மனிதர்கள் தங்கள் ‘இயல்பான’ வழிகளில் இருந்து மீறிச்சென்று எத்தனையோ புதிய இடங்களை கண்டடைகிறார்கள். புதிய எல்லைகளை வகுக்கிறார்கள். அதைப்போன்றதே இதுவும். வெளியே நிற்பவர்களுக்கு அந்த சாத்தியங்கள் குறித்து எதுவும் தெரியாது. ஆகவே அது தவறா சரியா என்றெல்லாம் ஏதும் சொல்ல முடியாது.

  12 அப்படி ஒற்றைவரியில் நிராகரித்தால் நாம் ஏராளமான மாமனிதர்களை இழக்க வேண்டியிருக்கும். உலகமெங்கும் சேவையின் ஒளியுடன் சென்ற இளம் பௌத்த துறவிகள் இளம் கிறித்தவ போதகர்கள் ஏராளமானோர் உள்ளனர். மெய்ஞானியாக மலர்ந்த எத்தனையோபேர் உள்ளனர் -விவேகானந்தர் உட்பட.

  13. பிரச்சினை தன் துறவை ஓர் விற்பனையடையாளமாக முன் வைப்பது மட்டுமே. உண்மையான துறவி இந்த ஆட்டத்துக்கே வருவதில்லை
  ஜெ

 19. pgomat

  அன்புள்ள ஜெமோ,
  என் கருத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களா ? ‘எனக்கு தெரியாது’ என்பதில். இயேசு கூடத்தான் லௌகீகமான துக்கங்களுக்கு தீர்வளித்தார் ( பைபிள் மூலமாக சொல்றேன், நான் பார்கவில்லை ).

  நன்றி,

 20. ஜெயமோகன்

  அன்புள்ள pgomat

  இதேபோன்ற ஒரு தளத்தில் ஒரு பொறுப்பான விவாதம் நிகழ்த்தும் தகுதி உங்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்

 21. pgomat

  நன்றி. என்னை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என எண்ணுகிறேன். நான் குதர்கத்துகாக அப்படி கூற வில்லை. உங்களை போன்ற சொல் ஆளுமையும் எனக்கு கிடையாது. முதலில் நான் உங்களை எப்படி பார்கிறேன் என்று பாப்போம் – ஒரு ஞானி’ஆகா அல்ல, ஒரு சமய குருவாக அல்ல – என்னை விட கூடுதலாக பரந்த சிந்தனயும் அறிவுள்ள ஒரு நல்ல எழுத்தாளராக – மட்டுமே. எனக்கு
  இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி கருத்து சொல்றீங்கனு தெரியலை. நானும் சொல்ல முடியாது, ஏனா நான் அறிவு என்னும் வட்டத்தை தாண்டி போக வில்லை. அனால் தாண்ட முயற்சிப்பவன். சக்தி பட் என்பதை அனுபவத்தால் அறிந்தவன். ஏதோ ஒன்னு இருக்குனு தெரியும் ஆனா என்னனு தெரியாது. எனக்கு புரியவில்லை அதனால் புரிந்து கொல்வதாற்காக மட்டுமே கேட்டேன். உங்களை காய படுத்தி விட்டேன் என்று எண்ணுகிறேன். மன்னிக்கவும்.

 22. ஜெயமோகன்

  pgomat, வழக்கமாக வெட்டி அரட்டை தளங்களுக்குச் சென்று சீண்டும் தன்மையுடன் ஏதாவது எழுதும் மனநிலையிலேயே நீங்கள் [பலர்] எழுதி வருகிறீர்கள். ஒரு இணையதளமாவது வேறுமாதிரி இருக்கட்டுமே

 23. sitrodai

  அன்புள்ள ஜெமோ,

  இவரை போன்ற சாமியார்களால் மனம் சோர்வடைவது உண்மை.

  இப்போதெல்லாம் எதாவது ஒரு சாமியார் பிரபலமானால், இவரும் எதில்லாவது சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றே முதலில் நினைக்க தோன்றுகிறது…

  //ஆதிசங்கரர் நிறுவிய மடங்கள் தான் இன்றுள்ள சங்கர மடங்களா என்பதே வரலார்று ஆய்வுக்குரியது. அவர் நிறுவியது குருகுல முறையாக இருக்கலாம்//

  ஆனால், சங்கர விஜயம் போன்ற நூல்கள் இந்த மடங்களை பற்றி தெளிவாகவே விளக்குகின்றன என்று அறிகிறேன்.

  அன்புடன்,

  சிற்றோடை.

 24. pgomat

  நான் சத்தியமாக உங்களை சீண்டும் எண்ணத்துடன் எதையும் கூற வில்லை. எனக்கு என்னை பற்றியே அக்கறையே அதிகம், என்னால் என்ன பெற்று கொள்ள முடியும் என்பதே. நீங்கள் ஆறு மாதிரி நான் ஏன் அதை சீண்ட வேண்டும் ? என்னுடைய எந்த கருத்தும், எனக்கு சத்தியமாக பட்டால் ஒழிய எழுத மாட்டேன்.

  உங்கள் மீது நம்பிக்கை இருந்ததினால் (சலனமும் இருந்ததினால்) தான் நான் சாரு’வை பற்றி கூறியது – எனது கற்பனையாகவும் இருக்கலாம். நீங்க திருடனு நினைகிறேன், ஆனா சரியா தெரியலை – திருடனா இல்லாட்டி அது உங்கள காய படுத்தும் – ஒரு அப்பாவிய சொன்னது என்னை பெரிதும் காய படுத்தும். திரிசங்கு லோகம் மாதிரி. நீங்க நல்லவரா கெட்டவரா இத தான் சுத்தி வளச்சு முதலில் கேட்டது. நீங்கள் நிரூபிக்க வேண்டாம் , அனால் எனக்கு ஒரு நப்பாசை, எனக்கு தெளிவு கிடைக்கும் என்று – அதனால் கேட்டேன். உங்களை சீண்டும் நோக்கம் அல்ல. இவ்வளவு பெரிய எழுதாளர் எனக்கு பதில் சொல்வதே பெருமை என்று என்னும் நான், உங்களை சீண்டி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

  இப்பொழுது எனக்கு இரண்டு வழிகள் – என்னை புரிந்து கொள்ள கூட முடியாத இவர் என்ன பெரிய எழுத்தாளர் அப்படின்னு படிக்காம விட்டுட முடியும் – ஆனா யாருக்கு நஷ்டம் ? அப்படி என்னோட கட்டத்துக்குள்ள வச்சு ஞானி’கல எடை போட்டால் எமர போறது யாரு. இதை தான் நான் கேட்டேன். எனக்கு தெரியல நான் சரியாக சொல்றேனா’நு . எது எப்படி இருப்பினும், என்னை மன்னித்து கொள்ளுங்கள். தயவு செய்து.

 25. sitrodai

  துறவையும் பிரம்மச்சரியத்தையும் ஒன்றாக எண்ணி குழப்பி கொள்வதால் வரும் கேடு இது. தற்காலத்தில் ஒரு ஆன்மிக நபர் பிரம்மச்சாரியாக மட்டுமே இருப்பார் என்றே மக்கள் எண்ணுகின்றனர். (இதன் எண்ணத்தின் பின்னணியில் இன்றைய கல்வி முறையும், கிறிஸ்துவ மத தாக்கங்களை பற்றியும் தங்களின் கருத்துக்களை கூற வேண்டுகிறேன்.).

  சமிபகாலத்தில்கூட திருமுருக. கிருபானந்த வாரியார் போன்றவர்கள் மணமானவர்களே.

  அன்புடன்,

  சிற்றோடை

 26. kapilan

  குரு எப்படி பட்டவர்னு முக்கியம் இல்லை, உன் நம்பிக்கை தான் முக்கியம். கல்லை கூட குருவா நெனச்சு நீ எதையும் அடைய முடியும். அது வெளியே இல்லை உனக்கு உள்ளே உள்ளது.
  பொன்னான வாக்கியங்கள் Mr.pgomat .

  இந்த நேரத்தில் முக்கியமாகப் படுவது இந்து மதத்தின் சாராம்சம் அல்ல. அதைவிட முக்கியம் ஊடக ஆபாசத்தை கட்டவிழ்த்து விடும் சன் டீவி போன்ற ஸ்தாபனங்களின் அநியாயத்தை கண்டிக்க. அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ஒருவர்-ஒருத்தி நாலு சுவற்றுக்குள் நடத்தும் செயல்களை வெளிச்சம் போடும் நேர்மையற்ற செயலை கண்டிக்கனும். அதை நீங்களும் சரி, இங்கு பின்னூட்டம் இடுபவர்களும் சரி, வசதியாக மறந்துவிட்டீர்கள்.

  நித்தாயனந்தர் நடத்திய ஒரு கல்பத்ருவினில் கலந்து கொண்டேன். அவர் போத்தித்த தியான முறையை தினமும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் நான் கலந்து கொண்ட கல்பத்ருவிற்கு பிறகு நடந்தேறிவருவதை பார்க்கிறேன். நான் மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான மக்கள். நேர்மறையான எண்ணங்களை மனம் உள்வாங்கும் அளவிற்கு தயார் செய்கிறார் கல்பத்ருவில். மனிதராய் பிறந்தவர்கள் ஆசாபாசங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துதான் ஒருவர் மற்றொருவரை அணுகவேண்டும்.

  நித்யாதனந்தரின் சொற்பொழிவுகளை பாருங்கள். இந்து மதத்தின் செறிவு மிகுந்த பல கருத்துக்களை எளிமையான முறையில் விளக்கும் ஆற்றல் பொருந்தியவர். அவர் இந்தப் பிரச்சினையில் மாட்டிக்கொண்டதும், உடனே இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கிறேன் என ஒவ்வொருவரும் கருத்து சொல்வது வேடிக்கையானது. ஜாக்ரதை என்ற தலைப்பில் நீங்களும் வலியக்க ஒரு கட்டுரை பதித்தது உங்களது பக்குவமின்மையையே காட்டுகிறது. இதற்கெல்லாம் உடனே சுடச்சுட கட்டுரை வந்துவிடும் உங்களிடமிருந்து. ஆனால், பக்கத்து நாட்டில் நடந்த இனக்கலவரத்தால் தினமும் ஆயிரக்கணக்காணோர் மாண்டபோது கப்-சிப்.

 27. Krishnan_D

  Oh no; poor Charu. Now, what will he do without Nithyananda to guide him? I guess he’s gonna have to shift his loyalty to Jaggi Vasudev. Expect a post titled ‘A Day with Jaggi – A Once-in-a-lifetime Experience’ soon. :)

 28. vadakaraivelan

  அன்பின் ஜெயன்,

  பதிவுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களுக்குப் பதில் சொல்லாதீர்கள். கடந்து செல்லுங்கள். பதிவின் நோக்கம் திசை மாறும் அபாயமுள்ளது.

  /கடவுளுக்கும் சோதனைகள் வரும் என்று பக்தர்களுக்குக் காட்ட அவரே ஆடிய லீலைதான் இது’ என்று சொன்னால் பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியினால் அவரது புகழ்கூடினால்கூட ஆச்சரியமில்லை//

  இந்த வரிகள்தான் வலையில் குழுமங்களிலிலும், ட்வீட்டர்களிலும் மேலும் குறுஞ்செய்தியாகவும் உலவுகிறது.

  நன்றி

  வடகரை வேலன்

 29. kumarkr

  அன்புள்ள ஜெ, வணக்கம்.
  இன்றைய சூழ்நிலை எப்படியென்றால் தோள்வரை தவழும் முடி வளர்த்து காவி உடை அணிந்தால் சாமியார் ஆகி விடலாம்.சத்தியமாக நித்யானந்தர் மாட்டியது குறித்து அதிர்ச்சி ஒன்றும் இல்லை. எப்படியும் அந்த ஆள் ஒரு Fraud என்பது என்றாவது வெளியே வந்து விடும் என்று நினைத்தேன்.ஆனால் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது வேறு ஒரு விஷயம். சாரு இனி என்ன செய்வார்? எந்த மூஞ்சியை வைத்து தன் குருவின் லீலைகளைப் பற்றி எழுதுவார்? ஒருவேளை ராசலீலை மற்றொரு பாகம் எழுத ஒரு கரு கிடைத்திருக்கும் தன் குருவிடமிருந்து. ஒருவேளை இவருடைய புத்தகங்களை படித்ததினால் குரு சபலப்பட்டிருப்பாரோ ? இல்லை குருவின் லீலைகளை அறிந்துகொண்டே சாரு தன் கதைகளில் காம விளையாட்டுக்களைப் பற்றி எழுதுகிறாரோ? பச்சை பச்சையாக எழுதிவிட்டு உன்மத்த இலக்கியம் படைத்துவிட்டதாக எண்ணி பெருமிதப் படும் தன் சுயகௌரவம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி விட்டிருப்பது அவர் தனது வலைத்தளத்திலிருந்து தன் குருவின் படங்களை நீக்கியதன் மூலமாக அப்பட்டமாகி இருக்கிறது. இனியாவது மனிதர் கொஞ்சம் தெளிவு பெறுகிறாரா என்று பார்ப்போம்..?கண்மூடித்தனமான தனிமனித வழிபாடு தன் புகழுக்கும் சேர்த்து வேட்டு வைத்ததை சாரு மறக்காமலிருந்தால் சரி.

 30. petchinathan pillai

  Sir,

  please check this link.. http://nithyananda-cult.blogspot.com

 31. Krishnan_D

  I don’t understand something. Whenever a sex scandal shows up on the television medium, only the man who is involved in the scandal is getting punished. The women are usually being victimized, despite the fact that they willingly had sex with the man. Why do we have these double standards? Be it with Kanchipuram priest, Premanandha, or any other guy for that matter, the women involved not only go unpunished, but their names are usually covered up. Are women not punishable by law?

  And why the heck is Sun TV broadcasting this video round the clock as if it’s some sort of insightful documentary? Did these guys show the same enthusiasm in when the ‘money-for-votes’ scandal erupted in the parliament a few months back? It looks like third rated, sleazy, yellow journalism is what people want these days. Such sad state of affairs.

 32. Ramachandra Sarma

  Krishnan_D, இதில் ஒரு தர்க்கத்தரப்பு இருக்கிறதா என்று பாருங்கள். “அழகிகள் கைது” என்று தான் தலைப்பு வைக்கிறதே ஒழிய, புகைப்படங்கள் போடுகிறதே தவிர அவரின் வாடிக்கையாளர்கள் எப்போதும் கைதுசெய்யப்படுவதே இல்லையே ஏன்?

 33. Ramachandra Sarma

  இன்றும் நினைவிருக்கிறது சென்ற அக்டோபர் இரண்டாம் தேதி, ஷாஜி அவர்கள் பேசும்போது சொன்னார், இந்த ஆள் ஒரு ஃப்ராடு, இவரைக்குறித்து எழுத ஜெ, எஸ்ரா போன்றவர்களையும், என்னையும் தொடர்புகொண்டார்கள். அவரை சந்திக்க ஃப்ளைட் டிக்கெட் எல்லாம் எடுத்துத்தருகிறேன் என்று மிகவும் நச்சரித்தார்கள் ஆனால் இவர் ஒரு ஃப்ராடு என்பதால் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று. இன்னமும் பல விஷயங்கள் குறித்துச் சொன்னார். இவ்வளவு சீக்கரம் வெளிவந்திருக்கிறது பாருங்கள். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. இதன் காரணமாகவே முன்பு இளையராஜா குறித்த விவாதத்தில் சொன்னேன், ஷாஜியின் நேர்மை சந்தேகத்திற்குறியதல்ல என்று. கபிலன் ஜெ வை இந்த விஷயத்தில் குறை கூறுவது ஆட்சேபகரமானதாக இருக்கிறது. இலங்கைப் பிரச்சனை குறித்து ஜெ ஏன் சுடச்சுட கருத்து சொல்லவேண்டியதில்லை என்று பலமுறை தெளிவாகவே எடுத்துவைத்துள்ளார். இந்த விஷயத்தில் ஜெவின் நேர்மை சற்றும் கேள்விக்குறியதல்ல.

 34. Krishnan_D

  Mr. Sharma,
  The constitution does not recognize male prostitution. So, there is no question of punishing people who visit brothels, unless of course they have sex with a minor girl. So, in that case, we have to blame the law.

  Moreover, Indian policemen do not follow the law of the land when it comes to arresting prostitutes. The law clearly says that a girl can only be arrested if she seduces people or has sex in a public place. If she has sex with her clients in a private area, nobody, including the police, can do anything. But India being the country it is, the policemen hardly follow these rules. They arrest prostitutes willy nilly. So, in this case, we have to blame the people who implement the law.

  This incident is completely different. Two individuals had sex in the cool confines of their private residence. What happened there was none of our business. So, in a sense, Sun TV has no regard for the privacy of the people involved. If it has decided to barge in and bring these people into limelight, why not ridicule both the man and the woman equally? Why must Nithyanandha be castigated for having sex, while the actress can simply walk away from the scandal?

 35. mageshkec

  அன்புள்ள ஜெ,
  நேற்று இரவு, தொலைக்காட்சி பெட்டி மூலம், நித்யானந்தர் சுவாமிகளின்( என்று காட்டப்படும்) களியாட்டங்களை காண்பித்தனர். ஏனோ ஒன்று என்னக்கு புரியவில்லை, தன்னிடம் பண பலம் ஆள் பலம், பதவி பலம் இருக்கும் ஒரு மனிதன், தன் சக்தி உட்பட்ட எதையும் வாங்கி அனுபவிக்க முடியும், அப்படி தான் நித்யானந்தரும். அப்படி இருக்கும் தருவாயில், நேற்று காண்பித்த பட தொகுப்புகள் அவருக்கு சர்வ சாதாரணமே. இந்த பட தொகுப்புகள் மக்களுக்கு காண்பித்தால் அவருக்கு என்ன இழப்பு நேரிட போகிறது, சொல்லுங்க பாப்போம். அவர் மீது என்ன வழக்கு போட முடியும் இந்த சமுதாயம், முடியுமானால் அவநம்பிக்கை வழக்கு தொடரலாம், ஆனால் அது எம்மாத்திரம். தன தனிபட்ட சுய விருப்பங்களையும் இட்சைகளையும் தீர்த்துக்கொள்ள நித்யானந்தர் முற்பட்டார், அதை ஏன் இந்த சமூகம் உற்று பார்க்கிறது.அரசாளும் மன்னன் செய்தால் தவறில்லை, அண்டி பிழைக்கும் ஆன்மீகவாதி செய்தால் தவறா. மக்கள் தாம் தான் நித்யானந்தரை கடவுளாக கண்டார்கள், அவர் சொல்லவில்லையே. அவர் வெறும் பஞ்ச பூதங்களை அன்றாடம் யாசிப்பிழைக்கும் ஒரு சதை பிண்டம் தானே, பின் ஏனிந்த நாடகம்,

 36. M.A.Susila

  அன்பு ஜெ.எம்,
  நாம் முன்னிறுத்த வேண்டியவை சத்தியமும்,தருமமும்தானே ஒழியத் தனிமனிதர்களை முன்னிலைப்படுத்துவது என்றுமே பயனற்றது என்ற தங்கள் கருத்தையும்…குருவாகவே ஏற்பவரிடமும் கூட முரண்பட முடியும் என்ற சிந்தனையையும் முழுக்க முழுக்க ஏற்கிறேன்.
  ஊடக்ம் உருவாகியது…ஊடகத்தாலேயே அழியும் அவலத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

 37. Yuva

  ஹலோ கபிலன்,

  தனிமனித தொடர்புகளுக்கிடைய்யேதான் ஆசாபாசங்களை புரிந்துக்கொள்ளலாம், கடக்கவும் மற்றும் தள்ளவும் செய்யலாம்… ஆனால் எவனொறுவன் தன்னை சமுதாயத்தில் நிறுவவிரும்பி அதற்குண்டான அடையாளங்களைத் தரிப்பதும், அறிவிப்பதும், மேலும் வாழ்க்கைப்படுத்தியும் இருப்பானானால் தன்னை வென்றபிறகே அதை செய்திருக்கவேண்டும். கல்பதருவிற்கும், இந்து விளக்கவுரைக்கும் இவையெல்லாம் தேவையேயில்லை.

 38. kuppan_yahoo

  நீங்கள் சொல்வது போல, நாங்கள் மறப்போம் மன்னிப்போம் கலாசார மக்கள்.

  சில மாதங்களுக்கு பின்பு கண்கள் பனிக்கும்.

 39. ramkathir

  //ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.//

  இந்த வரிகள் நேற்றைய அதிர்ச்சியை நீக்கியது.

  கதிரேசன், ஓமன்

 40. V.Ganesh

  இன்னாபா மக்களே இம்புட்டு அல்டீகரே ! டிவி காரன் காசு கேட்ருப்பான். குடூகிலியா இந்த மாறி ஒரு பிட். ஆட்டம் க்ளோஸ். ஜெயா டிவி காஞ்சி சாமியார போடலியா.
  ஹிந்து மதம் ஹிந்து மதம் அல்டீகரே… ஒரு பிஷப் தான் மாடிகினாறு. இங்க மதம் என்ன மதம் அவனுங்க மதம் பிட்சு அலயரனுகோ. ஜாக்ரதை. அவ்ளோதான்.

 41. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ.,
  வணக்கம்.
  உங்கள் ‘ஜாக்ரதை’ அருமை. குழம்பிய நிலையில் தவிக்கும் ஆன்மிக நாட்டம் கொண்ட இந்துக்களுக்கு அற்புதமான தெளிவுரை இது. குறுகிய காலத்தில் பிரபலமாகும்போதே நித்யானந்தர் பற்றி நாம் ஜாக்ரதையாக இருந்திருக்க வேண்டும்.
  மக்கள் இத்தகைய விளம்பர விரும்பிகளைத் தானே நாடி ஓடுகிறார்கள். ஊடகங்களும் பரபரப்பைத் தானே விற்கின்றன?

  94 வயதில் அண்மையில் காலமான நானாஜி தேஷ்முக் – ஒரு துறவி தான். (இவர் காவி ஆடை கட்டியவர் அல்ல; காவிக்கொடியை வணங்கிய வெள்ளையாடைத் துறவி) பதவிகளும் தலைமைப் பொறுப்பும் தேடி வந்தபோதும் அவற்றை நிராகரித்து, கிராமிய முன்னேற்றத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்த அந்த மகானை எத்தனை பேருக்குத் தெரியும்? இது நமது நாட்டின் சாபக்கேடு.
  -வ.மு.முரளி.

 42. gomathi sankar

  இன்னும் ஜக்கி ரவிசங்கர் பிரம்மகுமாரிகள் போன்றவர்கள்தான் பாக்கி இனி விவாதிக்கப் படவேண்டியது பாலியல் துறவு என்பது உண்மையில் தேவைதானா என்பதே இந்த மாதிரி விசயங்களில் இஸ்லாம் ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது போல் தோன்றுகிறது இஸ்லாமில் இந்த மாதிரி விசயங்களை நாம் கேள்விப்படுவதில்லை இந்த செய்தியை படித்ததும் முஸ்லிம் நண்பர் மெலிதாக சிரித்தது மனதை அறுத்துக் கொண்டே இருக்கிறது நம்முடைய அடிப்படைகள் மீதே அடிவிழுந்துவிட்டது என்றே நினைக்கிறேன்

 43. ஜெயமோகன்

  Jeyamohan

  When you get time, please read this Arunagiri’s article that appeared today in TamilHindu.com http://www.tamilhindu.com/2010/03/hindutva-three-types/

  Thanks
  Rajan

 44. osaravilai thangam

  ஆசானே!இதில எதோ ஒரு களி உண்டு கேட்டேரா..கொஞ்சம் பொறும்…

 45. cnu77

  //அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன்.//

  இது கண்டிப்பாக நிஜமாக தான் இருக்கவேண்டும். ஒரு மாதத்திற்கு முன் தென் தமிழ்நாட்டில் ஒரு என்.ஜி.ஓ 40+ குழந்தைகளை அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல், பாலியல் கொடுமையும் செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டனர். இன்னும் ஒரு வாரம் அதே நிலைமை நீடித்துருந்தால் அந்த குழந்தைகளில் பெரும்பாலானவை இறந்திருக்கும். ஆனால், அதை பற்றின செய்தி எங்கும் கானவில்லை. குறிப்பாக வட இந்திய சேனல்கள் அந்த என்.ஜி.ஓ.வின் ‘ஓனர்’ பெயர் கூட தெரியாமல் பார்த்துக் கொண்டது. நான் 2 நாட்கள் அந்த செய்திகளை பார்த்தேன். ஒரு இடத்தில் கூட அந்த ‘ஓனர்’ பெயர் இல்லை. தமிழ் ஊடகங்களிலோ அது ஒரு பெட்டி செய்தி ரேஞ்சுக்கு தான் வெளிப்படுத்தினார்கள்.

  பின், நான் இனையத்தில் தேடி பார்த்தால் தெரிந்த விஷயம், அந்த என்.ஜி.ஓ. ஒரு கிருத்துவ பாதிரியாருக்கு சொந்தமானது.

 46. jaiganesh

  துறவு பற்றியோ தனி நபர் நடத்தை பற்றியோ
  யாருக்குமே ஒரு கருத்து இருக்க முடியும் என்று
  நான் கருதவில்லை. பிம்பங்கள் உடைவதும் மீண்டும்
  வேறு பிம்பங்கள் உருவாவதும் பல காலங்களாக பல சமுதாயங்களில்
  நடை பெறும் சகஜமான ஒன்று.

  மிகவும் ஆச்சர்யமான ஒன்று அவதார புருஷர்களை பிறரிடம் தேடி
  அலையும் மனித மனத்தின் விசித்திரம் மட்டுமே.
  ‘நான் யார்?’ என்று உன்னை நீயே கேட்டுக்கொள் என்ற
  ஒற்றை வரி உபதேசம் வந்து பல காலம் ஆகியும் ஏன்
  மனித மனம் அந்தக்கேள்வியின் தேடலில் ஈடுபடுத்திக்கொள்ள
  மறுக்கிறது என்பது எனக்கு மிகவும் விசித்திரமாக உள்ளது.

  நிஜ வாழ்வில் கேள்வித்தாள் லீக் ஆகும் அதன் பிறகு படித்துக்கொள்ளலாம்
  என்று சொல்பவர்களை மோசடி செய்பவர்கள் என்று சொல்லும் சிறந்த மாணவர்கள்
  கூட ஆன்மீகத்தில் இது போன்ற ‘லீக்’ செய்யும் பேர்வழிகளுக்காக பை நிறைய
  பணத்துடன் காத்துக்கொண்டிருப்பது எனக்கு மிதமிஞ்சிய வியப்பைத்தருகிறது.
  இவர்கள் மன ஒழுக்கமின்மைக்கு முன் நித்யானந்தருடைய ஒழுக்கக்கேடு அதிக அதிர்ச்சி தரவில்லை.

  இது எல்லாவற்றிற்கும் இடையே பணம் வாங்கி ஓட்டுப்போட ஒரு திருவிழாவும் தயாராகிக்கொண்டிருக்கின்றது.
  அதை நாம் சகஜம் தானே என்று சொல்வது போல் இதையும் சொல்வோம். அரசியல் தலைவர்களிடம் ஏமந்தது
  போதும் நமக்கு நாமே என்று வழிக்கு வந்தது போல் சுயநலத்தைவிடச்சிறந்த பொது நலமில்லை என்ற உண்மையான
  விழிப்பும் விரைவில் நம்மை வந்தடையும் என்றும் நான் நம்பிக்கையோடிருக்கின்றேன்.

 47. veeraa1729

  அன்புள்ள ஜெமோ,
  சரியான தருணமா என தெரியவில்லை. எனக்கு ஏற்பட்டிருக்கும் சில ஐயங்களை விளக்குவீர்களா?
  ௧) வியாசரின் பாரதம் படித்தபோது, ரிஷி, முனிவர், துறவி, சித்தர், பிரம்மச்சரியம் பூண்டவர் என பல பெயர்களினால் ஏற்பட்ட குழப்பம் இது. இவர்கள் அனைவரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? தமிழ் ஹிந்து குறிப்பிட்ட மூவகை பாகுபாடு புரிதலுக்காக வகுக்கப்பட்டதேயன்றி நான் குறிப்பிட்டவர்களை விளக்குவதாய் இல்லை.
  ௨) மேல் குறிப்பிட்டவர்களில் சித்தர்களுக்கு அணிமா முதல் அட்ட சித்தியையும் பயின்றவர்கள். இவர்கள் ஏன் மற்றவர்களுக்கு இந்தப் பயிற்சியை முறையாக கற்பிக்கவில்லை? ஏன் மறை பொருளாகவே உணர்த்தி சென்றார்கள்?
  ௩) உணர்ச்சிகளை அடக்குவது ஒரு முறை எனில், உணர்ச்சிகளை அதன் வழி விட்டு, கருத்தை திருப்புவது ஒரு முறை அல்லவா?
  இந்த இரு முறைகளை விட ‘சும்மா இருத்தலும்’ சுகமல்லவா?
  ௪) அதாவது மாணிக்கவாசகரின் கல்லாய் இருக்கும் தன்மை.
  இதனை அடைவது எங்ஙனம்?

 48. chandanaar

  நம்ம அண்ணாச்சி சாரு அடிக்கும் அந்தர்பல்டி தான் இதில் சூப்பர் காமெடி..என்ன என்ன வார்த்தைகளை போட்டு எழுதுகிறார் பாருங்கள்..
  முன்பே சாமி செய்வது சரியில்லை என்று மனம் நொந்து தன ‘ஆங்கில ‘ சிறுகதையில் எழுதியிருக்கிறாராம். முந்தாநாள் வரை ‘சுவாமிகள்’ அய்யாவின் வலைதளத்தில் சிரித்துக்கொண்டே இருந்தார். இப்போ ‘காயப்’!! இதுவும் ஒரு லீலை தானோ?

 49. Arangasamy.K.V

  //திரு ஜெயமோகன்,
  இத்தனை வருடம் நித்யா நித்யா என்று உருகி உருகி நீங்கள் எழுதி வந்தீர்கள். எல்லா கட்டுரையிலும் அவரை மேற்கோள்காட்டினீர்கள். இப்போது அவர் மாட்டிக்கொண்டதும் எனக்கு முன்பே தெரியும் என்று சொல்லி சாக்குபோக்குகளைச் சொல்கிறீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்

  சங்கர் செல்வா//

  அருமை அருமை ,

  ஜெயமோகனின் நித்யா – நித்ய சைதன்ய யதி

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF

  http://www.jeyamohan.in/?p=724

  http://www.jeyamohan.in/?p=204

 50. sankar.manicka

  //
  இந்த மாதிரி விசயங்களை நாம் கேள்விப்படுவதில்லை இந்த செய்தியை படித்ததும் முஸ்லிம் நண்பர் மெலிதாக சிரித்தது மனதை அறுத்துக் கொண்டே இருக்கிறது நம்முடைய அடிப்படைகள் மீதே அடிவிழுந்துவிட்டது என்றே நினைக்கிறேன்
  //

  ஒலகமே அவர்களைப்பார்த்து கைகொட்டி சிரிச்சிகிட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு காமிகல் ரிலீஃப்.

  உலகத்திலேயே பழைய மதத்தின் அடிப்படைகளையெல்லாம் இப்படி செக்ஸ் வைத்துக்கொண்ட ஒரு சந்தேகத்திற்குறிய சாமியாரின் செயல் கேள்விக்குள்ளாக்குகிறது என்று நம்பும் அளவுக்கு உங்கள் நம்பிக்கை பலவீனமாக இருக்கிறதா ? அது தான் பிரச்சனை.

 51. bala

  சன் டீ.வி செய்தது ஆபாசம். தினமலர் செய்திருப்பது அநாகரீகம். தமிழ் ஊடகத் தளங்களின் தரம் நினைக்கும் தோறும் இன்பமளிக்கிறது. வாழ்க

 52. kargil_jay

  கோமதி சங்கர்,
  // இஸ்லாம் ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது போல் தோன்றுகிறது இஸ்லாமில் இந்த மாதிரி விசயங்களை நாம் கேள்விப்படுவதில்லை// — ஏழு வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர், விவேகனந்தர் இவர்களைப் பற்றி இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்களிலேயே வருகிறதே, அப்படியும் என் துறவில் யதார்த்தம் இல்லை என்று நினைக்கிறீர்கள்?

  ஸ்ரீ. ஜெயமோகன்,
  யோசித்துப் பார்த்தால், நீங்கள் வேண்டுமென்றே சிஷ்யரான எழுத்தாளரை சீண்டுவதாக தோன்றக்கூடாது என்பதனால், குருவான பரமஹம்ச நித்யனண்டரைப் பற்றி எழுதாமல் இருந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  உண்மையில் பரமஹம்ச நித்யானந்தரின் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் லயித்துப் படித்து இருக்கிறேன். தற்போதைய நிலையில் உங்களின் கட்டுரை சற்று நிம்மதி அளித்தது.

 53. Ramachandra Sarma

  // உலகத்திலேயே பழைய மதத்தின் – அட இதென்ன வைனா, எவ்வளவு பழசோ அவ்வளவு வேல்யூன்னு சொல்ல?

 54. gomathi sankar

  இல்லை நான் சொல்ல விரும்பியது காமம் என்பதைக் கொண்டாடும் தாந்த்ரீக வழிபாடுகளைக் கொண்ட ஒரே பெரிய மதமான ஹிந்து மதத்தில் பாலியல் துறவு என்ற பௌத்த சமண பிறகு கிருத்துவ கருதுகோள்கள் என்ன செய்கின்றன என்பதே சங்கரர் மறைமுக பௌத்தர் என்றே அழைக்கப் பட்டார் என்பது அறிந்திருக்கலாம் நீங்கள் கொஞ்சம் ஆராய்ச்சி செய்தாலே நிறைய வியப்புக்குரிய விஷயங்கள் கிடைக்கும் பெரும்பாலான ரிஷிகள் இவர்களின் ஆதர்ஷ பரம ஹம்சர்கள் முக்கியமாக சித்தர்கள் அனைவருமே ஒற்றை மனிதர்கள் கிடையாது அகத்தியருக்கு ஒவ்வொரு யுகத்திலும் எவ்வளவு மனைவியர் உண்டு என்று பட்டியலே தரப்படுகிறது காமம் பிரச்சினை அல்ல அதை பாவம் அல்லது கீழ்நிலை மனிதர்கானது பிரம்மாச்சார்யம் என்றெல்லாம் பேசிவிட்டு ரகசிய அறைக்குள் பண்ணுவதே ஒழுக்ககேடு என்று நினைக்கிறேன் இஸ்லாமில் இந்த இரட்டை நிலை இல்லை என்பதையே சுட்ட விரும்பினேன்

 55. K.R அதியமான்

  அன்புள்ள ஜெ,

  நல்ல கட்டுரை. ‘ஆன்மீகவாதிகள்’ எனப்படுவோர்களும் (இன்றைய அர்த்தத்தில்) சாதாரண மனிதர்கள் தாம். ஆனால் சிலருக்கு சில அசாதாரணமான சக்திகள் உள்ளன என்றே தெரிகிறது. நித்யானதந்தர் பல terminally ill நோயாளிகளை குணப்படுத்தியிருக்கிறார் என்று பல sourcesகளில் இருந்து கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் காமத்தை வெல்ல முடியாத சாதாரண மனிதர் தான் அவர். இரண்டும் உண்மைதான். முரண்பாடு..

  மனிதர்களில் சிலருக்கு அசாதாரணமான ‘திறமைகள்’ அல்லது சக்திகள் உள்ளன. இசை, ஓவியம், சிற்பம், மலையேற்றம், நியாபகத்திறன், படைப்பாக்கம், ஜோதிட ஆருடம் போல. ஆனால் அவர்கள் அனைவரும் சாதாரண மனிதர்கள் தாம். பலகீனங்களை உடையவர்கள் தாம். ஆன்மீகத்திலும் அப்படி தான் போல. மிக அசாதாரணமான ஆருடம் சொல்லும் விற்பனர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்களும் மனிதர்கள் தாம். ஆனால் சிறிது தெய்வாம்சம் உடையவர்கள் என்று சொல்லாம் ?

 56. gomathi sankar

  இதில் பாவம் அந்த நடிகைதான் என்று தோன்றுகிறது அவர் பிரம்மச்சார்யம் பற்றி உபதேசம் செய்தது இல்லை சட்டப்படி கூட அவர் செய்தது தவறு இல்லை விவாகரத்து செய்தவர் சுவாமியும் பாச்சலர்தான் சன்டிவி நேற்று முழுவதும் அவரைத்தான் போகஸ் செய்தது இந்தியாவில் பெண்ணாய் பிறந்ததும் அதுவும் நடிகையாய் ஆனதுமே அவர் செய்த தவறுகள் கடைசி இரண்டு நாட்களும் அந்த பெண்ணிற்கு மிக கொடூரமாக கழிந்திருக்கும்

 57. Ramachandra Sarma

  //காமம் என்பதைக் கொண்டாடும் தாந்த்ரீக வழிபாடுகளை – தாந்த்ரீகம் அதை மட்டும் கொண்டாடவில்லை. அது எதையும் கொண்டாடுவது இல்லை. இது தவறான புரிதலினால் வந்த விணை என்று நினைக்கிறேன். (ஓஷோ ரொம்ப படிக்கிறீங்களோ?) ஒருவேளை வாமாசாரம்ன்னு சொல்வாங்களே அதுவா இது? எனக்குத்தெரியவில்லை.

 58. gomathi sankar

  தந்த்ரா காமத்தையே மேல் நிலைக்கான வழியாக கொள்கிறது ஓஷோ எளிய புரிதல் மட்டுமே அவரை விட ஆழமாக தந்திராவை பட்டாச்சார்யா போன்றவர்கள் அணுகி உள்ளனர் தட்சினாச்சாரம் என்பதிலும் காமமே மென்மையாக மோட்ச சாதனமாக வைக்கப் படுகிறது பிரச்சினை காமத்தை கொண்டாடுவது பற்றி அல்ல துறவு கொண்டாடப் பட வேண்டுமா என்பதே

 59. K.R அதியமான்

  gomathi sankar,

  /////இதில் பாவம் அந்த நடிகைதான் என்று தோன்றுகிறது அவர் பிரம்மச்சார்யம் பற்றி உபதேசம் செய்தது இல்லை சட்டப்படி கூட அவர் செய்தது தவறு இல்லை விவாகரத்து செய்தவர் சுவாமியும் பாச்சலர்தான் சன்டிவி நேற்று முழுவதும் அவரைத்தான் போகஸ் செய்தது இந்தியாவில் பெண்ணாய் பிறந்ததும் அதுவும் நடிகையாய் ஆனதுமே அவர் செய்த தவறுகள் கடைசி இரண்டு நாட்களும் அந்த பெண்ணிற்கு மிக கொடூரமாக கழிந்திருக்கும்////

  ஆம். சரியாக சொனீர்கள். இதே தான் நானும் நினைத்தேன்.
  அப்பெண், வாழ்க்கையில் கொடிய துன்பம் அனுபவத்து, சீரழிக்கப்பட்டவர்.
  உண்மையான அன்பை தேடி அலைந்து, எங்கும் கிடைக்காமல், தொடர்ந்து
  ஏமாற்றப்பட்டு, சூறையாடப்பட்டு, கடைசியில் அந்த ஆசிரமத்தில் தஞ்சம்.
  பரிதாபத்திற்க்கு உரிய ஆத்மா. (அவர்களை போன்றவர்கள் அனைவரும் அப்படிதான்).
  Extremely lonely and in search of peace and love.

  அந்த ஒளிகாட்சிகள் ஒரு அன்யோன்யமான தம்பதிகளின் அந்தரங்கம் போல் உள்ளது.
  அப்பெண்னை அவர் ஒரு sex slave ஆக உபயோகப் படுத்தவில்லை. அன்பு மிக அதிகம்
  தெரிகிறது. குருபக்தி, மிதமிஞ்சி அன்பாக, காதலாக, காமாக மாறிவிட்டது. காவியுடை அனிந்ததுதான் தவறு. அதை துறந்துவிட்டு வெளிப்படையாக லொவ்கீக வாழ்விற்க்கு திறும்பியிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும்.

  ஒரு கணவன் மனைவியின் அந்தரங்கதிற்க்குள் நுழைந்து, கிழ்தரமாக அவர்களின் privacy அய் violate செய்வதற்க்கு இணையான செயல் இது. நினைத்தால் கொடுமையாக உள்ளது. அப்பெண்னை பற்றி யாரும் கவலைபடுவதாக தெரியவில்லை.

 60. seetha

  ரு கணவன் மனைவியின் அந்தரங்கதிற்க்குள் நுழைந்து, கிழ்தரமாக அவர்களின் privacy அய் violate செய்வதற்க்கு இணையான செயல் இது. நினைத்தால் கொடுமையாக உள்ளது. அப்பெண்னை பற்றி யாரும் கவலைபடுவதாக தெரியவில்லை.

  அதியமான் எனக்குமிந்த எண்ணங்கள் தான்.அந்த பெண்ணை நினைத்து பாவமாக இருக்கிறது.
  நிதாநாதன் மேல் எனக்கு பலவேறு காரணத்திற்க்காக கோபம் வந்தாலும் இத்தகை காச்சிகளைப்பார்க்கும் பநம் மனிதர்களின் வக்கரம் ,மற்றும், voyerism அதிக அருவெறுப்பை தருகிறது.

 61. gomathi sankar

  ஒரு பத்திரிகை தனது வெப்சைட்டில் முழுபடத்தையும் உயர்தரத்தில் காண சந்தாதாரர் ஆகச்சொல்கிறது!ஒரே ஆறுதல் இன்று கலைஞரின் பத்திரிகைகளின் பொறுப்புணர்வு பற்றிய அறிக்கைதான்

 62. malar

  இது என்ன அநியாயம், பாதிரியார் பல (இந்து ஆண் மற்றும் பெண் – எட்டு முதல் பதினாலு வயது) குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தது பெட்டி செய்தியா வந்தது (இந்துக்கள் அடிபட்டால் உடனே மனித உரிமை அமைப்புக்களும் ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சிகளும் மறைந்துவிடும் இந்திய அரசியலின் தொன்று தொட்டு விளங்கி வரும் மரபு கடைபிடிக்கப் பட்டு வருகிறது.), ஆனால் ஒரு இந்து தவறு செய்தால் தமிழ் நாட்டின் தலைப்பு செய்தி. இந்த மனிதன் (இந்து) பலாத்காரம் செய்யவில்லை, மாற்றான் மனைவியை கவரவில்லை, சிறு குழந்தைகளை சிதைகவில்லை(தற்போதைய நிலவரப்படி), அதே சமயம் இந்த மனிதர் செய்தது எந்த விதத்திலும் “ஆன்மிகம் போதிப்பவர்” செய்யும் செயல் இல்லை. இந்துவாய் பாரதத்தில் இருப்பது ஒரு வகையில் சென்ற பிறவியில் செய்த பவம் தான் போலும்.
  – நா.க.மலர்ச்செல்வன்

 63. Prakash

  >>இந்த நித்யானந்தரைப்பற்றி நிறையவே சொன்னார்கள். எழுத்தாளர்கள், இதழாளர்கள் போன்றவர்களைக் கவர்ந்து தன் பிரச்சாரகர்கள் ஆக்க இவர் மிகப்பெரிய தொகையைச் செலவிடுவதாகவும்; அந்த ஈர்ப்பு பலரை அவரிடம் கொண்டு சென்று சேர்த்ததாகவும் அறிந்தேன். நண்பர் ஷாஜி கூட அவருக்கு விரிக்கப்பட்ட வலையையும் அளிக்கப்பட்ட பொருளாதார வாக்குறுதிகளையும் பற்றிச் சொன்னார்.

  இதை நீங்கள் முன்னரே உங்கள் வாசகர்களுக்கு தெரிவித்து இருந்தால், உபயோகமாக இருந்திருக்கும். அட் லீஸ்ட் ஒரு ஹின்ட்ஆவது குடுத்திருக்கலாம். முடிந்த விட்டு எனக்கு அப்பவே தெரியும்’நு சொல்றதுல என்ன இருக்கு.

 64. Ramachandra Sarma

  ப்ரகாஷ், இங்கே பாருங்களேன் http://www.jeyamohan.in/?p=4832

  அன்புள்ள ஜே,

  ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரை குறித்து நீங்கள் ஏன் எதுவும் எழுதுவதில்லை? உங்களிடம் இருக்கும் மொபைல் போன் வகை என்ன? எனக்கு ஐஃபோன் வேண்டுமென்று ஆசை.கிடைக்குமா?

  ராம்.

  அன்புள்ள ராம்

  அவரைப்பார்த்தால் நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர் போல தோன்றுகிறது…வேறன்ன சொல்ல? [ஏதோ ஒன்றுகிடக்க ஒன்று ஆகிவிடப்போகிறது, பார்த்து]

  ஜெ

 65. kthillairaj

  உலக நாட்டங்களில் துறவு என்று சொல்கின்றவர்கள் ஈடுபடும் போது இயற்கை அவர்களை முழுவதுமாக தள்ளிவிடுகின்றது என்று நினைக்கிறேன். உதரணமாக பிரேமனந்த, சங்கராச்சாரியார்,நித்தியானந்த, தற்பொழுது மாட்டிகொண்டிருகும் பங்காரு அடிகளார்.

Comments have been disabled.