'ஜாக்ரதை!'

அன்பு ஜெ,

நித்யானந்தர் போல இந்து மதத்தின் நவீன முகங்கள் அடிபடும்போது கோபமும் வருத்தமாக உள்ளது ,

ஜக்கி போன்ற நவீன குருக்களால் சமுதாய பணிகளுக்கு திருப்பிவிடப்பட்ட நிறைய பேரை பார்த்துள்ளேன் , நம்பிக்கை இழப்பு மொத்தமாகதானே பாதிப்புகளை ஏற்படுத்தும் ?

இல்லை இதுவும் கடந்து போகும் என எடுத்துக் கொள்வதா ?
அன்புடன்

அரங்கசாமி

அன்புள்ள ஜெ,

சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில் நித்யானந்தர் என்ற புகழ்பெற்ற சாமியார் ஒரு நடிகையுடன் இருக்கும் அந்தரங்கமான காட்சியை  வெளியிட்டார்கள். எனக்கு அந்த சாமியார் மீது எந்தவகையான ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்காட்சி அதிர்ச்சியளித்தது. இந்து ஞான மார்க்கம் என்றுமில்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த ஊடகத் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் காலம் இது. அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன். இந்தநிலையில் இந்தமாதிரியான ஆபாச நிகழ்ச்சிகள் அந்தப்போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன. இந்த ஒரு நிகழ்ச்சியைவைத்தே இந்துமதத்தில் உள்ள துறவு என்ற விஷயமே கேவலப்படுத்தப்படும் என்பதை உடனே பல இடங்களில் இருந்து வந்த ‘கமெண்டுகளை’ வைத்தே அறிந்துகொண்டேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்

சிவராமன்,சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு,

தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் பல கடிதங்கள். நான் தொலைக்காட்சி பார்க்கவில்லை, என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. ஆனாலும் இதில் கருத்துச்சொல்லும்படி கேட்டார்கள் நண்பர்கள். நித்யானந்தர் ஊடகங்கள் முன் அம்பலப்பட்டிருப்பதில் அறச்சிக்கல்களோ அல்லது வேறு ஏதேனும் தத்துவப் பிரச்சினைகளோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஊடகத்தால் உருவாக்கப்பட்ட ஒருவர் ஊடகத்தால் அழிக்கப்படுகிறார், அவ்வளவுதான். அதற்கு மேல் ஏதுமில்லை.

ஆனால் முதலில் அந்தச் செய்தி சிவராமன் குறிப்பிட்டது போன்று ஓர் எண்ணத்தை என்னிடமும் உருவாக்கியது. ஒட்டுமொத்த இந்து ஞானமரபை, இந்து ஞானமரபின் முக்கியமான நிறுவனமாக உள்ள துறவு என்ற வழியை, சிறுமைப்படுத்துவதாக  அது அமையுமே என்றுதான் எனக்கும் தோன்றியது. திட்டமிட்ட சிறுமைப்படுத்தல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இச்சூழலில் கண்டிப்பாக இது ஓர் அடிதான் என்று.

ஆனால், ஓர் இந்துவாக உண்மையாக இருக்கும்பட்சத்தில் சத்தியம் தர்மம் என்ற இரு அம்சங்கள்மீது மட்டுமே ஒருவன் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். அமைப்புகள், தனிமனிதர்கள், கோட்பாடுகள் நம்பிக்கைகள் எதன்மீதும் அல்ல. அந்நிலையில் இந்த விஷயத்தில் எது உண்மையோ அது வெளிவரட்டும், எது தர்மமோ அது நிலைநாட்டப்படட்டும் என்று மட்டுமே அவன் எண்ண வேண்டும். அந்த நினைப்பு என் சஞ்சலத்தைப் போக்கியது.

இந்து மரபில் மூன்று கூறுகள் உள்ளன என்று சொல்லலாம். ஒன்று, தத்துவார்த்தமான தளம். இரண்டு , வழிபாடு,பக்தி சார்ந்த தளம். மூன்று,  பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்த தளம்.  முதல்தளம் தியானம் போன்றவற்றையும், இரண்டாம் தளம்  அந்தரங்கமான பக்தியையும் வழிபாடுகளையும், மூன்றாம்தளம் கூட்டுக்கொண்டாட்டமான வழிபாடுகளையும் முன்வைக்கிறது.

நம் சூழலில் பிந்தைய இரண்டும்தான் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்தன. அவை அறிவார்ந்த தேடல் கொண்ட ஒருவருக்கு முழுநிறைவை அளிப்பதில்லை. அவருக்கு ஞானமார்க்கம் தேவையாகிறது. ஆனால் இந்து தத்துவ ஞானம் அதை தேடிச்செல்லும் மிகச்சிறுபான்மையினர் குருமுகத்தில் இருந்து கற்றுக்கொள்வதாகவே இருந்தது.

இருபதாம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டு என்று கண்ட முன்னோடி ஞானிகள் இந்து தத்துவ தளத்தை பரவலாக மக்களுக்குக் கொண்டு செல்ல அமைப்புகளை உருவாக்கினர். ராமகிருஷ்ண மடம் அவற்றில் முக்கியமானது. காலம் மாற மாற இந்து தத்துவ மரபை நவீன சிந்தனைகளுடன் உரையாடச்செய்து முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதைச் செய்தவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்.

சமீபகாலமாக, இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலுக்கேற்ப  இந்து தத்துவங்களையும் தியானமுறையையும் எளிமைப்படுத்தி சுருக்கி பெருவாரியான கல்விகற்ற மேல்மட்டத்தினருக்கு அளிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இங்குதான் நவீனச் சாமியார்களும் அவர்களின் மாபெரும் அமைப்புகளும் உள்ளே வந்தன.

அதாவது ஒரு தேவை சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றி தங்களை நிறுவிக்கொள்கிறார்கள் இவர்கள். பெரும் அமைப்புகளை உருவாக்குகையில் அமைப்புகளுக்குரிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்களை நாம் அணுகவே முடிவதில்லை. இவர்களைப்பற்றி ஊடகங்கள் அளிக்கும் பிம்பங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை நாம் பரிசீலனைசெய்யவே முடியாது. போலிகள் யார் உண்மையானவர் யார் என்று அறியவே இயலாது. இதுதான் சிக்கலே.

பல வருடங்களுக்கு முன்னர் இத்தகைய சாமியார் ஒருவரைப்பற்றி இதழாளராக இருந்த தமிழினி வசந்தகுமார் சொன்னார்,  அவர் தனக்குக் கிடைக்கும் அத்தனை பணத்தையும் பலவருடங்கள் திரும்பத்திரும்ப விளம்பரத்திலேயே செலவிட்டார். ஒருகட்டத்தில் அந்தப்பணம் பலகோடி ரூபாயாக மாறியது. அந்த நிறுவனம் அசைக்கமுடியாத வலிமை கொண்டதாகவும் ஆகியது

அந்த சாமியாரின் உத்தியையே பெரும்பாலும் இன்றைய நவீனச் சாமியார்கள் பலர் கைக்கொள்கிறார்கள். இந்த நித்யானந்தரைப்பற்றி நிறையவே சொன்னார்கள். எழுத்தாளர்கள், இதழாளர்கள் போன்றவர்களைக் கவர்ந்து தன் பிரச்சாரகர்கள் ஆக்க இவர் மிகப்பெரிய தொகையைச் செலவிடுவதாகவும்; அந்த ஈர்ப்பு பலரை அவரிடம் கொண்டு சென்று சேர்த்ததாகவும் அறிந்தேன். நண்பர் ஷாஜி கூட அவருக்கு விரிக்கப்பட்ட வலையையும் அளிக்கப்பட்ட பொருளாதார வாக்குறுதிகளையும் பற்றிச் சொன்னார்.

இவ்வாறு இதழியல், எழுத்தாளர் தரப்புக்குச் செலவிடும் பணம் இவர்களுக்கு பெரும் முதலீடே. பலகோடி ரூபாய் செலவுசெய்து விளம்பரம்செய்வதை விட அதிக பலனை  ஊடகங்களில் இவர்கள் ஆற்றும் பணி அளிக்கிறது. இவர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் மர்மமான பின்னணியுடன் உள்ளன. இவற்றின் பெரும் செல்வம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை நாம் அறியமுடியாது.

நித்யானந்தர் மாட்டிக்கொண்டது சமீப காலமாக நடந்துவரும் ஊடகப் படையெடுப்பின் ஒரு விளைவு. ஆனால் இதன்மூலம் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்நம்பிக்கையை இழக்க மாட்டார்கள். ஏற்கனவே சாய்பாபாவைப்பற்றி இதேபோல எத்தனையோ படங்கள் வெளிவந்தன. அவரது ஆசிரமத்திலேயே பாலியல்கொலைகள் நடந்தன. அவரது பக்தர்கள் அதை பகவானின் லீலை என்றே எடுத்துக்கொண்டார்கள். அவரை பயன்படுத்திய எத்தர்கள் அவர் லாபகரமாக இருக்கும்வரை அவரை விடமாட்டார்கள். ஆக அவருக்கு எந்தப்பாதிப்பும் நிகழவில்லை.

நித்யானந்தருக்கும் இதுவே நிகழும். அதிகம்போனால் ஒருமாதம் இந்தப்பரபரப்பு நீடிக்கும். ‘கடவுளுக்கும் சோதனைகள் வரும் என்று பக்தர்களுக்குக் காட்ட அவரே ஆடிய லீலைதான் இது’ என்று சொன்னால் பக்தர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியினால் அவரது புகழ்கூடினால்கூட ஆச்சரியமில்லை. நம்பிக்கை என்பது அபாரமான வல்லமை வாய்ந்தது. அதுவே மாயை என்று சொல்லலாம்.

இன்று இழிவுபட்டு நிற்பது நித்யானந்தர் என்ற மனிதரே ஒழிய எந்த மரபின் தோற்றத்தை அவர் தன் வேஷமாகக் கொண்டாரோ அந்த தோற்றம் அல்ல. அந்த வேறுபாட்டை இல்லாமலாக்கி நித்யானந்தரை முன்வைத்து இந்து மரபை எள்ளிநகையாட, சிறுமைசெய்ய முயல்வார்கள் என்பது உண்மையே. ஆனால் காலம்தோறும் எந்த மோசடியாளனும் எளிதில் அணியக்கூடியதாகவே காவி இருந்துள்ளது. ஆனாலும் காவியுடை அதன் தனித்துவத்துடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்றைய சூழலில் இத்தகைய ஊடக மோசடிகளைத் தாண்டி இந்துமதத்தின் தத்துவார்த்தமான ஆழத்தை ஒருவர் எப்படி அடைய முடியும்? எப்படி அவன் முன் திறக்கும் நூற்றுக்கணக்கான வாசல்களில் உண்மையையும் பொய்யையும் பிரித்தறிய முடியும்? 

ஊடகங்கள் உருவாக்கும் இத்தகைய பிம்பங்களையும் இவர்களின் அமைப்புகளையும் சாராமல் சிந்திப்பதற்கான அகச்சுதந்திரத்தை, கவனத்தை  ஒவ்வொரு இந்துவும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான பதிலாக இருக்க முடியும். ஒரு தனிமனிதன் தன் ஆன்மீகமான பயணத்தை தன்னுடைய சொந்த உள்மனதின் துணைகொண்டு தன் பக்தியாலும் தியானத்தாலும்  தானே நிகழ்த்திக்கொள்ளவேண்டும் என்றுதான் இந்து ஞானமரபு அறைகூவுகிறது.

நித்யானந்தரோ அல்லது வேறு எந்த தனிமனிதரோ இந்து மதத்தின் நவீன முகமாக இருக்க முடியாது. இந்து மதத்தின் அடிப்படையான தரிசனங்கள் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப பரிணாமம் கொள்வதே அந்த முகத்தை உருவாக்கும். அதற்கு அமைப்புகளோ அமைப்பு மனிதர்களோ தேவையில்லை.

‘உத்திஷ்டதா!ஜாக்ரதா! பிராப்யவரான் நிபோதிதா!’  [எழுமின் விழிமின் குறிக்கோளடையும் வரை செல்மின்] என்ற உபநிடத வரியில் உள்ள ஜாக்ரதை என்பது சலியாத கவனத்துடன் செல்லும்பாதையை  தேர்ந்தெடுப்பதையே சுட்டுகிறது. ஒவ்வொரு ஆன்மீகப்பயணமும் காலடிபடாத மானுடக் காட்டுக்குள் தனித்துச் செல்லும் முதல்பயணம் போன்றதே.  ஏற்கனவே வெட்டப்பட்ட வழிகளோ விளக்குகள் வழிகாட்டும் ராஜபாதைகளோ அதில் இல்லை. வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே.  ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம் அதற்கு தேவையாகிறது.  அதைத்தான் உபநிடதம் சொல்கிறது ‘ஜாக்ரதை!’

நம்முடைய தாழ்வுணர்ச்சியால், மூளைச்சோம்பேறித்தனத்தால், அச்சங்களால், சபலங்களால் நாம் தவறான நம்பிக்கைகளை நோக்கிச் செல்கிறோம். தவறான நம்பிக்கையில் முதல்காலடி எடுத்து வைக்கும்பொதே ஒவ்வொருவருக்கும் அந்தரங்கத்தின் ஆழத்தில்  அந்த விஷயம் தெரிந்திருக்கும்  என்றே நம்புகிறேன். நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அது முன்வைக்கப்படவேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஏ.ஆர்.ரஹ்மான்
அடுத்த கட்டுரைஆன்மீகம்,போலி ஆன்மீகம் – 1