‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 5

குந்தியும் தருமனும் இறைபீடம் அருகே வந்தபோது நகுலனும் சகதேவனும் மூதாதைக் கற்களுக்கு மலர்மாலை சூட்டியிருந்தனர். குந்தி தூக்கி வீசிய திருதராஷ்டிரருக்குரிய கல்லை எடுத்து சற்று அப்பால் தனியாக நிற்கச்செய்திருந்தான் சகதேவன். கைதவறி விழுந்தது போல அதன் அருகே ஒரு மலர் போடப்பட்டிருந்தது. குந்தி அதை நோக்கியதும் அவன் பார்வையை திருப்பிக்கொண்டான். குந்தி “சகதேவா, அதையும் எடுத்து பீடத்தின் அடியில் மண்ணில் வை” என்றாள். கூர்ந்த விழிகளுடன் திரும்பிய அர்ஜுனன் “அது யார்?” என்றான். “உன் பெரியதந்தை திருதராஷ்டிரர்” என்றாள் குந்தி. “உன் தந்தையால் வணங்கப்பட்டவர், ஆகவே உங்களாலும் வணங்கப்படவேண்டியவர்.”

அர்ஜுனன் இயல்பாக தருமனை நோக்கியபின் பார்வையை திருப்பிக்கொண்டு “படையலுணவை கொண்டுவரலாமா?” என்றான். “உணவுகளை தனித்தனியாக இலைகளில் கொண்டு வா” என்றாள் குந்தி. “மூத்தவனே, மணமக்களை அழைத்துவா!”. தருமன் புன்னகையுடன் சற்று அப்பால் இளவெயிலில் பாறைமேல் அமர்ந்திருந்த இடும்பியையும் பீமனையும் பார்த்தான்.

அவர்களை ஆவலுடன் வாய் திறந்து நோக்கியபடி குரங்குகள் அமர்ந்திருந்தன. பீமன் இடும்பியிடம் சிரித்தபடி ஏதோ பேசிக்கொண்டிருக்க சில பெண்குரங்குகள் அவன் காலைப்பிடித்து அசைத்து அவனிடம் தாங்களும் பேசின. அவன் அவர்களை பார்வையால் விலக்கி பேசிக்கொண்டிருந்தான்.தருமன் “என்ன பேசுவார்கள் அப்படி?” என்றான் நகுலன் “மூத்தவரே காதல்கொண்டவர்கள் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார்கள். நான் கண்டிருக்கிறேன்” என்றான். குந்தி சிரித்து “போய் அழைத்துவா” என்றாள்”

தருமன் பீமனை அணுகி பீமனிடம் “இளையோனே, தந்தையரின் வாழ்த்துக்களைப் பெற வா” என்றான்.தருமனை நோக்கி ஓடிவந்த சூர்ணன் எழுந்து நின்று வாயில் கைவைத்து நோக்கியபின் பீமனிடம் “விசித்திரமான மனிதன்…” என்று சொன்னான்.பீமன் பொய்ச்சினத்துடன் “விலகிப்போ” என்றான். தருமன் “சூர்ணனுக்கு என் மேல் ஓர் இளக்காரம் இருந்துகொண்டே இருக்கிறது இளையவனே” என்றான். சூர்ணன் மேலும் ஏதோ சொல்ல இடும்பி உரக்கச் சிரித்தாள். பீமன் அவள் சிரிப்பைப் பார்த்தபின் சற்று தாழ்ந்த தொனியில் “இவர்கள் வெளிப்படையாகச் சிரிப்பவர்கள் மூத்தவரே” என்றான். “சிரிக்கையில் மிக அழகாக இருக்கிறாள். இளையோனே, நம் குலத்தில் முதல் மகவு இவளைப்போன்ற பெண்ணாக இருந்தால் நல்லது” என்றான். “பெண்பிறந்த குலம் அரசு முளைக்கும் ஈரநிலம் என்பார்கள்”

பீமன் திரும்பி இடும்பியிடம் அதைச் சொல்ல அவள் மீண்டும் உரக்கச்சிரித்தாள். அவன் அவள் கையைப்பற்றி “வா” என்றான். அவர்களை சூழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் எங்கே போகிறீர்கள் என்ன என்பது போல பார்த்தனர். தன் வாலைப்பிடித்து இழுத்த இன்னொரு சிறுவனை துரத்திக்கொண்டிருந்த சூர்ணன் அரைவட்டமடித்து ஓடிவந்து பீமனை நோக்கியபின் வாருங்கள் நானே அழைத்துச்செல்கிறேன் என்ற பாவனையில் வாலைத்தூக்கியபடி கைகளை ஊன்றி முன்னால் சென்றான். அவன் அனைத்து தோரணைகளிலும் அவனுடைய குலத்தின் மூத்த குரங்கை போலி செய்வது தெரிந்தது. இடக்காது சற்று கிழிந்திருந்த அந்த முதுகுரங்கு அடிக்கடி கையால் காதை தொட்டுக்கொள்வதுபோலவே சூர்ணனும் செய்தான்.

பீமனும் இடும்பியும் குரங்குகள் சூழ மரத்தடியை நோக்கி வந்தனர். சூர்ணனை சிறுமி ஒருத்தி வாலைப்பிடித்து இழுக்க அவன் சீறி பற்களைக் காட்டி கடிப்பதற்காக தாவிச்சென்றான். இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் சீறிக்கொண்டு முன்னும் பின்னும் சென்றபின்னர் ஒன்றுமே நிகழாதவர்கள் போல ஓடி முன்னால் வந்தனர். “அவள் மண் நிறமானவள். ஆகவே அவள் பெயர் தூளிகை” என்றான் தருமன். “அவனுக்கு நிகரானவள். சிறந்த மைந்தர்களை அவர்கள் பெறக்கூடும்.”

நகுலன் “இவர்களில் ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள்” என்றான். “அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் மாதம் இது என நினைக்கிறேன். மணமங்கலத்துக்கு உகந்தது” என்றாள் குந்தி. தூளிகை ஓடிச்சென்று மூதாதையர் பீடத்தில் ஏற முயல பீமன் அவளை ஒலியெழுப்பி கண்டித்தான். அவள் திரும்பி அத்தி மரத்தில் ஏறி அடிமரத்தின் பட்டைப்பொருக்கிலேயே தொற்றி தலைகீழாக அமர்ந்து கீழே நோக்கி கண்களைச் சிமிட்டினாள். சூர்ணன் ஓடிச்சென்று முன்னால் அமர்ந்துகொண்டு பின்னங்காலால் கழுத்தைச் சொறிந்துகொண்டு நோக்கியபின் அண்ணாந்து பீமனிடம் “இதெல்லாம் என்ன?” என்றான்.

பீமன் “உணவை உண்ணப்போகிறோம்” என்றான். “உண்ணாமல் ஏன் நின்றிருக்கிறீர்கள்?” என்றான் சூர்ணன். பீமன் “பேசாமல் இரு” என்றான். “அப்படியே பாய்ந்து உண்ணவேண்டியதுதானே?” என்றான் சூர்ணன் மீண்டும் “இந்தக் கற்களுக்கு ஊட்டியபின்னரே உண்போம்” என்றான் பீமன். “கற்களுக்கா? ஏன்?” என்றான் சூர்ணன். “இவை எங்கள் முன்னோர்கள்”. சூர்ணன் நம்பாமல் தன் அன்னையை நோக்கினான். அன்னை ‘எனக்கென்ன தெரியும்?’ எனஉதடுகளை நீட்டிக்காட்ட அவன் சலிப்புடன் தலையில் கையால் தட்டியபடி பின்னால் திரும்பி வந்து தன் தாயின் வயிற்றுக்கு அடியில் அமர்ந்துகொண்டான். பீமன் நகைக்க “என்ன?” என்றான் தருமன். பீமன் அந்த உரையாடலைச் சொன்னான். தருமன் “அவர்களுக்கு மூதாதையர் இல்லையா என்ன?” என்றான். “இருக்கிறார்கள். ஆனால் இறப்புக்குப்பின் அவர்கள் எவ்வகையிலும் வாழ்வதில்லை” என்றான் பீமன். “மனிதர்கள் இறப்புக்குப்பின்னர்தான் வாழத்தொடங்குகிறார்கள்” என்றான் தருமன்.பின்னர் சிரித்தபடி “அதன்பிறகுதான் மனிதவாழ்க்கையில் கூடுதலாக ஈடுபடவும் செய்கிறார்கள்”

குரங்குகள் கால்மடக்கி அமர்ந்துகொண்டு சலிப்புடனும் சற்று ஐயத்துடனும் நிகழ்வதை நோக்கின.பொறுமையிழந்தபோது உடலைச் சொறிந்துகொண்டோ இன்னொரு குரங்கை நோக்கி சீறியோ கலைந்தன. அப்போது மூத்தகுரங்கு திரும்பி சினம் கொண்ட விழிகளால் நோக்கி கண்டித்தது. அர்ஜுனன் உணவை இலைகளில் பரப்பி வைத்து மலரிட்டு வணங்கினான். அதன்பின் பீமனும் இடும்பியும் சென்று மலரிட்டு மூதாதையரை வணங்கினர். படைக்கப்பட்டிருந்த உணவையும் அவர்களின் மலரிடும் கைகளின் அசைவுகளையும் மாறிமாறி நோக்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய குரங்கு அவர்களின் உடல் பார்வையை மறைக்கவே பக்கவாட்டில் தாவிச் சென்று அத்திமரத்தில் ஏறிக்கொண்டது. உடனே ஏழெட்டு பெரிய குரங்குகள் பாய்ந்து மரத்தில் ஏறி கிளைகளில் அமர்ந்து குனிந்து நோக்கின. மரம் அதிர்ந்து அதிலிருந்து கனிகளும் மலர்களும் உதிர்ந்தன. குந்தி முகம் மலர்ந்து “அது மூதாதையரின் வாழ்த்து! பெருந்திறல் கொண்ட மைந்தன் பிறப்பான் என்பதற்கான சான்று” என்றாள்.

மணமக்கள் மூதாதையரை வணங்கியபின் குந்தியையும் தருமனையும் வணங்கினர். குந்தி “நன்மகன் பிறந்து வரட்டும்” என்றாள். தருமன் “இளையோனே, இக்காட்டின் அத்தனை தெய்வங்களின் அருளும் நம் மூதாதையர் வாழ்த்தும் உன்னுடன் இருக்கட்டும்” என்றான். நகுலன் “மங்கலஇசை மட்டும்தான் குறைகிறது” என்றான். சகதேவன் “காட்டின் ஒலி கேட்கிறதே… அது இசைதானே?” என்றான். “உண்ணும் நிலையில் உணவு உள்ளதா இளையவனே, இல்லையேல் மூதாதையருக்குப் படைப்பதுபோல எனக்கும் படைத்து மலரிட்டு வணங்கிவிடு…” என்றான் பீமன். அர்ஜுனன் “நான் பாரதவர்ஷத்தின் மாபெரும் சமையற்காரரின் இளையவன்.என் கையில் அவரது கையின் வெம்மை உள்ளது ” என்றான். பீமன் நகைத்தான்.

உணவுண்பதற்காக அவர்கள் வட்டமாக அமர்ந்துகொள்ள பின்பக்கம் வழியாக பீமனின் மடிமேல் ஏறி மறுபுறம் குதித்து வந்த சூர்ணன் நடுவே நின்று சுற்றி இருப்பவர்களை நோக்கி திகைத்தபின் “என்ன செய்கிறீர்கள்” என்றான். “உண்ணப்போகிறோம்” என்றான் பீமன் “அதற்கு ஏன் இப்படி அமர்கிறீர்கள்? வானைநோக்கி ஊளையிடப்போகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்”. பீமன் “நாங்கள் இப்படித்தான் உண்போம்”என்றான் பீமன். சலிப்புடன் தலையைத் தட்டியபடி திரும்பிய சூர்ணன் தருமனை தலைசரித்து நோக்கி கையை சுட்டி ஏதோ சொல்லப் போன போது தூளிகை பீமனின் மடியில் ஏறுவதைக் கண்டு பாய்ந்து ஓடிவந்து அவளை சீறி விலக்கி மீண்டும் பீமன் மடிமேல் ஏறி அமர்ந்துகொண்டான். தருமன் “அவர்களும் நம்முடன் உணவுண்ணட்டும்… நம் குலத்தின் முதல் மணநிகழ்வு பொதுவிருந்து இன்றி நிகழவேண்டியதில்லை” என்றான். பீமன் புன்னகைத்து “ஆம்” என்றபின் குரங்குகளிடம் தங்கள் வட்டத்துடன் வந்து அமர்ந்து தங்களுடன் உணவுண்ணும்படி சொன்னான். பெரிய குரங்கு தலையை வேண்டாமென்பது போல மேலும் கீழும் அசைத்து “அதனாலென்ன, நாங்கள் இங்கிருக்கிறோம்” என்றது.

பீமன் “எங்கள் மகிழ்ச்சிக்காக” என்றான். பெரியகுரங்கு “அது முறையல்ல…” என்றது. ஆனால் முதிய பெண்குரங்கு ஒன்று “நாங்கள் வருகிறோம்” என்றது. அதை நோக்கி பெரியகுரங்கு சீறியதென்றாலும் பெண்கள் கைகளை ஊன்றி நிரையாக நடந்து வந்து குந்தி அமர்ந்துகொண்டனர். அவர்களை நோக்கியபின் மூத்தகுரங்கையும் நோக்கி சற்று சிந்தித்த பின்னர் ஆண்குரங்குகளும் வந்து அமர்ந்தன. பெரிய குரங்கை ஒரு பெண்குரங்கு அழைக்க அது சீறியது. பீமன் அதை நோக்கி “என்னை வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். அது அவனை சில கணங்கள் இமைக்காது நோக்கிவிட்டு உடலை சொறிந்தது. பார்வையை விலக்கி அத்தி மரத்தை நோக்கிவிட்டு ஒரு ஈயை துரத்தியது. பின்பு மெல்ல கைகளை ஊன்றி நடந்துவந்து பீமனின் அருகே இருந்த ஒரு குரங்கை மெல்லிய உறுமலில் எழுந்து விலகச் செய்துவிட்டு அமர்ந்துகொண்டது. உறுமுவதுபோல “உனக்காக. நீ முதலையை அஞ்சாத வீரன்” என்றது.

பீமன் சூர்ணனிடம் “இங்கே எங்களுடன் அமர்ந்து பழங்களை உண்” என்றான். “அந்தப் பெரிய பழத்தை எனக்குக் கொடுத்தால் நான் மரங்களில் அமர்ந்து உண்பேன்” என்றான் சூர்ணன். பீமனின் கைகளின் நடுவே புகுந்து அவன் முன்னால் அமர்ந்து ஏறிட்டு நோக்கி “நான் பழங்களை எடுத்துக்கொள்ளலாமா?” என்றாள் தூளிகை. பீமன் “வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான். சூர்ணன் பாய்ந்து சென்று மிகப்பெரிய அத்திப் பழத்தை எடுத்துக்கொண்டு தூக்கமுடியாமல் கீழே போட்டு மீண்டும் எடுத்துக்கொண்டு தருமனை நோக்கியபின் பீமனிடம் “அவன் என் பழத்தை பறித்துக்கொள்ள நினைக்கிறான்” என்றான். தூளிகை தருமனை நோக்கியபின் “அவரா?” என்றாள். “ஆம், விசித்திரமான மனிதன்” என்றான் சூர்ணன்.

குந்தி அனலில் சுட்டு தேன் ஊற்றப்பட்ட கிழங்குகளையும் சுட்ட பழங்களையும் இலைகளில் பரிமாறினாள். சிரித்தபடி “குரங்குகளுடன் உணவுண்பதை அன்னை எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்” என்றான் பீமன். “ஆம்… ஆனால் அவர்களிடம் மதிப்புமிக்க ஏதோ ஒன்று உள்ளது. பண்பட்ட பழங்குடியினர் போலிருக்கிறார்கள்” என்றாள் குந்தி. “இதற்குமுன்னரும் நெடுநாள் காட்டில் வாழ்ந்திருக்கிறேன். காட்டையும் கண்டதில்லை, குரங்குகளையும் அறிந்ததும் இல்லை.” அர்ஜுனன் “நீங்கள் எங்களையும் அறிந்ததில்லை அன்னையே” என்று அவளை நோக்காமல் சொன்னான். குந்தி முகம் சிவந்து ஒருகணம் திகைத்தபின் “ஆம், உண்மைதான்” என்றாள்.

சூர்ணன் அத்திப்பழத்தை காலால் உருட்டி விட்டுவிட்டு மீண்டும் பழங்களை நோக்கி சென்றான். “ஏன் அந்தப்பழத்தை உண்ணவில்லை?” என்றான் பீமன். “நான் அந்தச் சிறிய பழத்தை உண்பேன்” என்றான் சூர்ணன். “சரி, இந்தப்பழத்துக்கு என்ன?” என்று பீமன் கேட்டான். “இது கெட்ட பழம். மனிதர்கள்தான் உண்பார்கள். நாங்கள் சிறந்த பழங்களையே உண்போம்” என்றபின் பாய்ந்து சென்று ஒரு சிறிய அத்திப்பழத்தை எடுத்துக்கொண்டான். சூர்ணனின் அன்னை அந்தப் பெரிய பழத்தை எடுத்துக்கொண்டு “அவன் அப்படித்தான் நிறைய உணவை வீணடிப்பான்” என்றாள். “இந்தக்காட்டில் உணவு நிறைய உள்ளது…. நான் இளமையில் அப்பால் ஒரு வரண்ட காட்டில் இருந்தேன். அங்கே நாங்கள் பெரும்பாலும் தளிரிலைகளையே உண்போம்” என்றது முதிர்ந்த குரங்கு ஒன்று. “இந்த இளையவர்களுக்கு உணவின் அருமை தெரியவில்லை.”

குந்தி அர்ஜுனனை நோக்காமல் “நீ சொல்வது உண்மைதான் இளையோனே, நான் உங்களை அறிந்ததே இல்லை. என் உள்ளமெங்கும் நிறைந்திருந்தது அச்சமும் ஐயமும்தான். அவற்றைப்போல கண்களை மறைக்கும் திரை வேறில்லை” என்றாள். “இப்போது எண்ணும்போது வியப்பாகவே உள்ளது. இத்தனை ஆண்டுகாலம் நான் எண்ணியதை முழுக்க ஒற்றை வரியாக சுருக்கிவிடலாம். தருமன் முடிசூடி அஸ்தினபுரியை ஆளவேண்டும், அவ்வளவுதான்.” பீமன் புன்னகையுடன் “அந்த விழைவு இன்றில்லையா?” என்றான்.

குந்தி “ஆம், உள்ளது. ஆனால் அதுவல்ல இன்று எனக்கு முதன்மையானது. இந்தக்காட்டில் நுழைந்ததுமே என் அகம் திறந்தது. நேற்று இரவு மரத்தில் மைந்தருடன் அமர்ந்திருக்கும் அன்னைமந்தி போல் உணர்ந்தேன். அப்படி இருப்பது அளித்த நிறைவை அங்கே அஸ்தினபுரியில் அரியணையில் தேவயானியின் மணிமுடி சூடி அமர்ந்தால் அடைய முடியாது. இளையோனே, மனிதர்கள் சின்னஞ்சிறிய இடத்தில் உடலால் உடலை அறிந்துகொண்டு ஒட்டி கூடி வாழும்படி பிறந்தவர்கள். மலைமக்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். எளியவர்களின் இல்லங்களும் சிறிதே. மாளிகைகளின் விரிந்த அறைகள் மனிதர்களை ஒருவரை ஒருவர் விலக்குகின்றன. ஒவ்வொருவரையும் தனிமையாக்கி ஐயங்களால் அகத்தை நிறைக்கின்றன” என்றாள்

“நேற்றிரவு ஒரு கனவு கண்டேன்” என்றாள் குந்தி. “அதில் நான் ஒரு எளிய மலைமகளாக ஒரு சிறிய புற்குடிலில் உங்களுடன் வாழ்கிறேன். நீங்கள் மிகச்சிறியவர்கள். பீமன் மட்டும் என்னளவு இருக்கிறான். பிற நால்வரையும் நான் என் உடலிலேயே சுமந்துகொண்டு நடக்கிறேன். வேட்டையாடி உணவைப் பகிர்ந்து அளிக்கிறேன். ஒரு மலையருகே சென்று நின்றபோது குரங்குகளின் ஒலியை கேட்டேன். நிமிர்ந்து நோக்கினால் ஏராளமான குரங்குகள் மேலிருந்து கீழே நோக்கி ஒலியெழுப்பின. நடுவே உங்கள் தந்தை தெரிந்தார்…” பீமன் நகைத்து “இரவில் அனைவர் கனவிலும் குரங்குகள் வந்திருக்கும். ஒரு கணம் ஓயாமல் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்…” என்றான்.

“நான் உங்கள் தந்தையிடம் தேனை எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றேன். அவர் மலைத்தேன் தட்டுக்களை கயிற்றில் கட்டி தலையில் சூடியபடி பாறைகளில் குரங்கைப்போல தொற்றி இறங்கி வந்தார். அவரது உடலெங்கும் தேன் வழிந்தது. நீங்கள் ஐவரும் அவரை நெருங்கி அவர் உடலை நக்கி அந்தத் தேனை அருந்துவதைக் கண்டு நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். சிரிப்பில் என் உடல் அதிர்வதை நானே உணர்ந்து விழித்துக்கொண்டேன். பின்னர் இருளுக்குள் முகம் மறைத்து ஏங்கி கண்ணீர் விட்டேன்” என்றாள் குந்தி.

அவள் முகம் சிவந்திருந்த்து. கண்ணீரை மறைப்பது போல பார்வையை திருப்பியபின் பெருமூச்சுடன் ஆடைநுனியால் முகம் துடைத்து புன்னகையுடன் நோக்கி “இனி எனக்கு எது முதன்மையானது என்று அப்போது தெரிந்தது. நீங்கள் ஒருபோதும் பிரியாமலிருக்கவேண்டும். எப்போதும் உங்களுடன் நான் இருக்கவேண்டும். நான் முதியவளாகிவிட்டேன். இனி உங்களுடன் எனக்கு எந்தத் தடையும் இல்லை” என்றாள். தூளிகை தன் அன்னையை அணைத்துக்கொண்டு துயிலில் ஆழ்ந்து சரிந்து விழுந்து எழுந்து திகைத்து நோக்கினாள். சிரித்தபடி துள்ளிச்சென்ற சூர்ணன் அவள் வாலைப்பிடித்து இழுத்துவிட்டு ஓட இருவரும் ஒருவரையொருவர் துரத்தியபடி ஓடி மரத்தின் மேல் ஏறிக்கொண்டனர்.

முதிய குரங்கு “சிறந்த உணவு என்று சொல்லிவிடமுடியாது” என்றது. ஒரு பெண்குரங்கு “உங்களுக்கு இப்போது குடல் தளர்ந்துவிட்டது” என்றாள். முதியவர் அவளை நோக்கி பற்களைக் காட்டி சீறியபின் பீமனிடன் “இப்போதுள்ள பெண்களுக்கு முறைமைகளே தெரியவில்லை” என்றார்.பீமன் “ஆம், உலகம் சீரழிந்து வருகிறது” என்றான். முதியவர் துயரத்துடன் தலையை அசைத்து “உணவு பெருகிவிட்டது… ஒழுக்கம் அழியாமலிருந்தால்தான் வியப்பு” என்றார்”.

அவர்கள் உணவு உண்டு முடித்து எழுந்து கைகளை கழுவிக்கொண்டபோது குரங்குகளும் நீரோடை வரை வந்து அவர்களை தலை தூக்கி நோக்கின. குனிந்து நீர் அருந்தி தாடையில் துளி வழிய நோக்கிய பெரிய குரங்கு “இனிமேல் நீ என்ன செய்வாய்?” என்றது. “பேசிக்கொண்டிருப்பேன்” என்றான் பீமன். “பேசிக்கொண்டா?” என்றது குரங்கு வியப்புடன். “அது பெண்கள் செய்வது அல்லவா?” பீமன் “நாங்கள் வேறு வகையில் பேசிக்கொள்வோம்” என்றான். குரங்கு சிலகணங்கள் அவனை நோக்கி இமைகளை மூடித்திறந்தபின்னர் கையூன்றி நடந்து சென்று இளவெயிலில் அமர்ந்துகொண்டது. அது உறுமியதும் இரு பெண்கள் அதை நோக்கி வந்து உடலில் இருந்து உண்ணிகளை பொறுக்கத் தொடங்கினர். பீமனும் அதனருகே சென்று வெயிலில் புல்மேல் மல்லாந்து படுத்து தலைக்குமேல் கைகளை வைத்துக்கொண்டான்.

குந்தி இடும்பியை அழைத்துக்கொண்டு நூலேணியில் ஏறி மேலே சென்றாள். நகுலனும் சகதேவனும் ஒரு பெரிய மூங்கிலை வெட்டி வில் செய்யத் தொடங்கினர். தருமன் சென்று அமர்ந்த பாறையருகே அர்ஜுனன் சென்று அமர்ந்துகொண்டு “மூத்த தந்தையை நிறுவும்படி நீங்கள் சொன்னீர்களா மூத்தவரே?” என்றான். “ஆம்” என்றான் தருமன். “அவரே நமக்கு இன்றிருக்கும் தந்தை. இன்று இந்த பேருருவம்கொண்ட மலைமகளை நம் உடன்பிறந்தான் மணந்ததை அறிந்தால் பெரிதும் மகிழக்கூடி அவர் நெஞ்சில் அறைந்துகொண்டு நடனமிடுவார்.” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாமல் சற்றுநேரம் வெயிலில் கிடந்த பீமனை நோக்கிக் கொண்டிருந்தான். பின்பு “மூத்த தந்தை உங்களிடம் கோரியிருந்தால் நீங்கள் அரசை அளித்திருப்பீர்களா?” என்றான்.

“இளையவனே, அரசை அல்ல, உயிரையும் விண்ணுலகையும்கூட கோர தந்தைக்கு உரிமை உள்ளது என்கின்றன நூல்கள்” என்றான் தருமன். அர்ஜுனன் “நான் மூத்தவரிடம் பேசினேன். நம்மைக்கொல்ல மூத்த தந்தை ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார் என்று அவர் நினைக்கிறார். வஞ்சத்தால் எரித்தழிப்பது என்பது அகம் குறுகிய கீழ்மகனின் சிந்தையிலேயே எழமுடியும் என்றும் பெரியதந்தையார் ஒருபோதும் அதை செய்யமாட்டார் என்றும் சொல்கிறார்” என்றான். தருமன் “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான். “பெரியதந்தை அகம் விரிந்த மாமதவேழம். ஆனால் அவர் ஷத்ரியரும்கூட. ஷத்ரியர்கள் அரசு சூழ்தலில் அறத்தை கால்தளையாக உணரும் தருணங்கள் உண்டு…” என்றான் அர்ஜுனன். “எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். நான் இவ்வாறு செய்வேனா என்று. செய்யமாட்டேன் என்றே முதலில் தோன்றியது. ஆனால் பின்னர் நினைத்துக்கொண்டேன், உரியமுறையில் உந்தப்பட்டால் செய்வேன் என்று. மூத்தவரே போர்முனையில் அறம் என்பதற்கு இடமில்லை”

அர்ஜுனன் சொன்னான் “அவர் நம்மை சிறையிலடைக்க ஆணையிட்டிருக்கலாம். கொல்லவும் ஆணையிட்டிருக்கலாம். தன் மைந்தனுக்கு முடியை அளிக்க அவருக்கு எந்தத் தடையும் இல்லை என்பதே உண்மை. ஆனால் அதைச்செய்வதற்கு ஏராளமான அரசியல் தடைகள் உள்ளன. அஸ்தினபுரியில் யாதவர்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் நாட்டுமக்களில் அவர்களே பெரும்பாலானவர்கள். குலச்சபைகள் நம்மைத்தான் ஆதரிக்கின்றன. நட்புநாடுகளும் நம்மை ஏற்றுக்கொண்டுவிட்டன. நாம் தொடர்ந்து வெற்றிகள் பெற்று செல்வத்தை கொண்டுவந்திருக்கிறோம். ஆகவே அவரால் அதை செய்யமுடியாது. அவருக்கு இந்த மதிசூழ்கை சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கலாம். அனைத்துக் கோணங்களிலும் வாதிட்டு அவரை ஏற்கவைத்திருக்கலாம். அரையுள்ளத்துடன் அவர் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம்…” அர்ஜுனன் சொன்னான்.

“ஆம், நெறிகளை அறிந்து ஏற்றவரே அறத்தை கடைப்பிடிக்க முடியும். நூலறியாதவர் விலங்குள்ளம் கொண்டவர்தான். பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவராக இருப்பினும் கூட அவர் அகம் காமகுரோதமோகங்களால் கொண்டுசெல்லப்படலாம்” என்றான் தருமன் .”ஆனாலும் அவர் இதைச் செய்வாரா என்றே என் அகம் ஏங்கித்தவிக்கிறது”.அர்ஜுனன் “மூத்தவரே, அவர் ஏற்றுக்கொள்ளாமல் இப்படி ஒன்றைச்செய்ய கௌரவர் துணிவார்கள் என நான் நம்பவில்லை. கௌரவர் நூற்றுவரையும் கட்டுப்படுத்தும் ஆணையை அவர்களின் தந்தையே விடுத்திருக்க முடியும்.ஒருவேளை அவர் நேரடியாக ஆணையிட்டிருக்காமல் இருக்கலாம். தன் அமைதி மூலமே ஒப்புக்கொண்டிருக்கலாம்” என்றான் அர்ஜுனன். தருமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அர்ஜுனன் “வென்று செல்பவர்கள் அறத்தை கருத்தில் கொள்வதில்லை. எப்போதும் அறம் பற்றிய குரல் எழுவது பாதிக்கபட்டவர்களிடமிருந்து மட்டுமே” என்றான்.

தருமன் வலிகொண்டவன் போன்ற முகத்துடன் “இளையோனே, அறம் நின்று கொல்லும் என்கின்றன நூல்கள். அவை பொய்சொல்வதில்லை” என்றான். அர்ஜுனன் சலிப்புடன் எழுந்து “மூத்தவரே, நீங்கள் எப்போது இந்தப் பழஞ்சொற்களை விட்டு வெளியே வரப்போகிறீர்கள்?” என்றான். “இந்த நூல்களும் அவற்றிலிருந்து நீங்கள் அள்ளி எடுக்கும் வீண்சிந்தனைகளும் உங்களை பயனற்றவராக ஆக்குகின்றன என்று நீங்கள் அறியவில்லையா? உங்களைச் சூழ்ந்திருக்கும் விழிகளிலும் சொற்களிலும் உள்ள ஏளனத்தை உறுதியாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்…” என்றான். கசப்புடன் முகம் சுளித்து “எங்கும் தோற்காத வில்லும் கதையும் கொண்டிருந்தும் நாம் தோல்வியும் சிறுமையும் அடைகிறோம் என்றால் அது உங்களது இந்த இயல்பினாலேயே” என்று சொல்லி எழுந்துகொண்டான்.

தருமன் தளர்ந்த குரலில் “ஆம் இளையோனே, நான் நீங்கள் நால்வரும் சுமந்தாகவேண்டிய எடையாகவே இருக்கிறேன். என்னைச்சூழ்ந்து ஏளனம் நிறைந்திருப்பதை ஒவ்வொரு முறையும் காண்கிறேன். முழுமையான தனிமையிலேயே என் காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை நான் என் இறப்பிலும் விண்பயணத்திலும்கூட முற்றிலும் தனியனாகவே இருப்பேன்” என்றான். “ஆனால் என் இயல்பு இது. இதை மீறி என்னால் எதையும் செய்ய இயலாது. இந்த உடலை இந்தக் குரலை நான் அடைந்த்துபோலவே இந்த எண்ணங்களையும் அடைந்திருக்கிறேன்.”

உரத்தகுரலில் “ஆனால் அவை நாடாளும் ஷத்ரியர்களுக்குரியவை அல்ல. நீங்கள் அரசாளப்போகிறவர். அமைச்சுப்பணி செய்யும் பிராமணனோ காவியம் கற்கும் சூதனோ அல்ல” என்றான் அர்ஜுனன். சினத்துடன் “நீங்கள் கொண்டிருப்பது ஒரு பாவனை. அறம் என நீங்கள் அந்த உதவாத பழைய நூல்களில் இருந்து எடுத்துக்கொள்பவை உங்களை செயல்களின் பொறுப்பிலிருந்து விடுவித்துக்கொள்ளும் உத்திகள் மட்டுமே” என்றான். “அந்நூல்களை இனியேனும் சிந்தையில் இருந்து உதறுங்கள். இதோ நாம் அரசும் குடியும் குலமும் செல்வமும் ஏதுமில்லாமல் வெறும்காட்டில் வந்து நின்றிருக்கிறோம். நம் முன் நமது கைகளும் எண்ணங்களும் மட்டுமே உள்ளன. ஷத்ரியர்களாக எழுந்து நமது மண்ணை வென்றெடுப்போம். நம் மூதாதையருக்கு நாம் செய்யவேண்டிய கடன் அதுவே.”

தருமன் கசப்பு படிந்த மென்சிரிப்புடன் “இவ்வினாக்களை நீ இன்னமும் கூட கூர்மையுடன் கேட்கலாம் பார்த்தா. நான் இவற்றை பலநூறுமுறை எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நான் அறம் என்ற சொல்லை ஒரு திரையாகத்தான் கொண்டிருக்கிறேனா? வெறும் கேடயமாக வைத்திருக்கிறேனா? என் இயலாமைகள்தான் அதை நோக்கி என்னை கொண்டு செல்கின்றனவா? எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும், எவ்வளவு ஆழத்திற்குச் சென்று உசாவினாலும், இல்லை என்றே என் அகம் சொல்கிறது இளையோனே. நீ சற்று முன் சொன்னாயே, ஆற்றலற்றவர்களும் பாதிக்கப்பட்டவர்களுமே அறம் எனக்கூவுகிறார்கள் என்று. அது உண்மையாக இருக்கலாம். என் உடலோ அகமோ எதுவோ ஒன்று என்னை எப்போதும் ஆற்றலற்றவர்களுடன் சேர்ந்துகொள்ளச் செய்கிறது. அவர்களில் ஒருவனாக உணரச் செய்கிறது.”

அந்த அக எழுச்சியில் தருமன் தனக்குரிய சொற்களை கண்டுகொண்டான்.“வெற்றுச் சொற்கள் என நீங்கள் சொல்லும் இந்நூல்கள் என்றோ வாழ்ந்த நம் முன்னோடிகளின் எண்ணங்கள். அவற்றை நாம் அறியவேண்டும், கடைப்பிடிக்கவேண்டும் என்ற பெருவிழைவால் அவர்கள் அதை ஏட்டில் எழுதினார்கள். ஒவ்வொரு முறை ஏடு ஒன்றைத் தொடும்போதும் நான் எண்ணுவதுண்டு. இச்சொற்களை எழுதுகையில் அந்த மூதாதை அகம் எப்படி கனிந்திருக்கும் என்று. என்றோ காலத்தின் மறு எல்லையில் பிறக்கவிருக்கும் மைந்தர்கள் நல்வாழ்வு வாழவேண்டும் என்றும் உவகையும் நிறைவும் அடையவேண்டும் என்றும் அவர் எண்ணியிருக்கிறார். தாங்கள் அடைந்த இடர்களை அவர்கள் அடையக்கூடாது என்று உறுதிகொண்டிருக்கிறார்…”

“நூல்கள் வெறும் சொற்களல்ல பார்த்தா! சென்று மறைந்த நம் மூதாதையரின் வாழ்த்துக்கள் அவை. அவர்களின் கண்ணீர் ,புன்னகை, கனிவு அனைத்தும் அடங்கியவை. நூல்களைத் தொடும்போது நான் அவர்களை மிக அண்மையில் அறிகிறேன். நீங்கள் ஷத்ரியர்கள். வாளேந்தியவர்கள். அதனாலேயே வாளையும் தோளையும் நம்புபவர்கள். உங்களுக்கு உதவாத தடைகளையும் ஐயங்களையும் மட்டும் அளிக்கும் சொற்குவியல்களாக இவை இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். நீ என்றல்ல, அத்தனை ஷத்ரியர்களுக்கும் நூல்களும் அறமும் உள்ளூர இளக்காரத்தையே அளிக்கின்றன” என்றான் தருமன். அகவிரைவால் அவன் சொற்கள் திக்கின. “ஆனால் நான் தோள்வல்லமை இல்லாத ஒரு தந்தையின் மைந்தன். அவரது உடலாக இப்புவியில் வாழும் பொருட்டு வந்தவன். என் கையில் படைக்கலம் நிலைக்கவில்லை. என் தோள்களில் வலிமையும் திரளவில்லை. அது இந்நூல்களின் சொற்களை நான் கற்று உள்வாங்கவேண்டுமென்பதற்காக என் தந்தை இட்ட ஆணை என்றே கொள்கிறேன்.”

அர்ஜுனன் பொறுமையின்றி தலையை அசைத்தான். தலைநிமிர்ந்து திசைமுடிவை நோக்கியவனாக தருமன் சொன்னான் “ஆம், நான் உறுதியுடன் இருக்கிறேன். நான் அறநூல்களின்படியே வாழப்போகிறேன். என்னால் மூத்தவர்களை மீற முடியவில்லை. என் இளையோர் மீதான அன்பிலிருந்து விடுபடவும் முடியவில்லை. அனைத்தையும்விட என் தன்முனைப்பும் ஆசைகளும் என்னை அலைக்கழிக்கின்றன. அறத்தில் நான்கொண்டிருக்கும் பற்றே அறம் நிலைக்கும் அரசொன்றை என் மக்களுக்கு அளிக்கவேண்டுமென்ற கனவையும் என்னுள் நிறைக்கிறது. அவ்வரசை அடையும் பாதையில் நான் அறத்தை சிறிது சிறிதாக இழப்பதையும் உணர்கிறேன். பார்த்தா, ஒவ்வொருநாளும் என் அறநம்பிக்கையில் செய்துகொள்ளும் சமரசங்களால் ஆனது என்றே உணர்கிறேன். ஒவ்வொரு சமரசத்துக்குப்பின்னரும் தனிமையில் நான் உருகி அழிகிறேன். ஆகவே என் வாழ்க்கை என்பது பெரிய வதையாகவே இக்கணம் வரை இருந்துள்ளது.”

தருமன் அர்ஜுனனை நோக்கி “ஆயினும் நான் அதைத்தான் செய்யப்போகிறேன். அறநூல்கள் சொல்லும் வாழ்க்கையை அன்றி பிறிதை ஏற்கமாட்டேன். இறுதிக்கணம் வரை. இத்தனை சொற்களை எழுதிவைத்த முன்னோர் அவற்றை ஒருவன் வாழ்க்கையில் நிறைவேற்ற முயன்றான் என்பதை அறியட்டும். அவர்கள் மகிழட்டும். நான் தோற்றேன் என்றாலும் அவர்கள் மகிழவே செய்வார்கள்” என்றான். அர்ஜுனன் “மூத்தவரே, நான் இதற்கு அப்பால் ஒன்றும் சொல்ல விழையவில்லை. உங்கள் எண்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.நான் ஷத்ரியன், வெற்றிக்கு நிகராக எதையுமே என்னால் ஏற்றுக்கொள்ளவும் இயலாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன், என் வெற்றி என்பது தங்கள் வெற்றியே” என்றான். தருமன் புன்னகையுடன் “ஆம், நான் அதை அறிவேன்” என்றான்.

குந்தியும் இடும்பியும் இறங்கி வருவதை அர்ஜுனன் நோக்கி புன்னகைத்தான். இடும்பி புலித்தோலால் ஆன ஆடையை இடையில் சுற்றி வளைத்து மேலாடையாகவும் அணிந்திருந்தாள். அது அவளுக்கு பழக்கமில்லாததனால் இடக்கையால் அதை தோளுடன் அழுத்திப்பிடித்து வலக்கையால் அதன் இடைப்பகுதியை இழுத்துவிட்டுக்கொண்டிருந்தாள். குரங்குகள் அதைக் கண்டு திகைத்து எழுந்து ஒன்றுசேர்ந்து ஓசையிட்டன. பீமன் எழுந்து அமர்ந்து சிரித்துக்கொண்டே “யார் இவள்? அஸ்தினபுரியின் இளவரசியா?” என்று சொல்ல இடும்பி தலைகுனிந்து முகம்பொத்தினாள். குந்தி முகம் சிவக்கச் சிரித்து “அவளுக்கு நாணவும் தெரிந்திருக்கிறது” என்றாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அன்னை மலர்ந்துவிட்டாள்” என்றான் தருமன். “இந்தக்காட்டில் மைந்தருடன் அண்மையாக இருப்பது அவள் அகத்தின் முடிச்சுகளை எல்லாம் அவிழ்த்துவிட்டது.” அர்ஜுனன் “ஆம் மூத்தவரே. ஆனால் அது தொடங்கியது இக்காட்டில் அல்ல. முன்தினம் சுரங்கப்பாதையில் தமையன் அவர்களைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டபோது” என்றான். தருமன் புருவங்கள் சுருங்க திரும்பி நோக்கினான். “அதன்பின்னர்தான் அவர்களுக்கு நம்மைத் தொடுவதற்கான தயக்கம் இல்லாமலாகியது. நம்மைத் தொட்டபின்னரே அவர்களால் நெருங்க முடிந்தது. அவர்கள் இத்தனை நாள் தேடியது இதைத்தான்” என்றான் அர்ஜுனன்.

குந்தி இடும்பியை அணைத்தபடி வந்து பீமனை நெருங்கியதும் மறுகையால் இயல்பாக அவன் இடையையும் வளைத்து அணைத்துக்கொள்வதை தருமன் நோக்கினான். “இளையோனே, நீங்கள் இருவருமே இருவகையில் கூரியவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே மனிதர்களை கிழித்துச்சென்று அறிந்து மதிப்பிட்டபடியே இருக்கிறீர்கள்” என்றான் தருமன். “ஆனால் உங்களைவிட பலமடங்கு கூரியவன் இளைய யாதவன். அவன் எவரையும் ஆராய்வதில்லை. எவரையும் விளக்கிக்கொள்வதுமில்லை. இந்தக் குட்டிக்குரங்கு போல அவன் மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு விளையாடுகிறான்.”

அர்ஜுனன் முகம் மலர்ந்து “இங்கே இப்போது நான் விழையும் அனைத்தும் இருக்கிறது மூத்தவரே, அவனைத் தவிர” என்றான். “அவன் இங்கிருந்தால் இந்தக்காடே இன்னொன்றாக இருக்கும். இங்கிருக்கும் ஒவ்வொரு விலங்கும் அவனை அறியும். இந்தக்குரங்கள் அவனையன்றி எவரையுமே பொருட்டாக எண்ணாது.” தருமன் “வழிபடு தெய்வம் கிடைத்தவனைப்போல் இருக்கிறாய்” என்றான். “இல்லை, அவன் என் நண்பன்” என்றான் அர்ஜுனன்.

குந்தியும் பீமனும் சிரித்தபடி அருகே வந்தனர். குந்தி “மூத்தவனே, இவளிடம் கேட்டேன். இவள்குலத்து மணமுறை என்ன என்று. அதை அவர்களின் குலமூத்தார்தான் முடிவெடுக்கவேண்டும் என்கிறாள். நாம் கிளம்பி இவள் குடிக்குச் செல்வோம்” என்றாள். தருமன் “ஆம், கடமைகள் பல உள்ளன” என்றான். சூர்ணன் அருகே வந்து ஏறிட்டு தருமனை நோக்கி கைசுட்டி “வேடிக்கையான மனிதன்!” என்றான். பீமன் “போ” என்று அதை துரத்தினான். “அது என்ன சொல்கிறது என்று கேட்கப்போவதில்லை” என்று சொல்லி தருமன் நகைக்க அனைவரும் சேர்ந்துகொண்டனர்.

ஒரே நாளில் காடு அனைவருடைய கட்டுக்களையும் அவிழ்த்து இணைத்து நிறுத்திவிட்டது என்று அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். வாழ்க்கையின் அந்தத் தருணத்தை எந்நாளும் மறக்கப்போவதில்லை என்று தோன்றியது.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைபகவத் கீதை தேசியப்புனித நூலா?
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை