ஏ.ஆர்.ரஹ்மானைப்பற்றி ஒரு நல்ல கட்டுரையை அகிலன் வல்லினம் இதழில் எழுதியிருக்கிறார். பொதுவாக ரஹ்மானைப்பற்றி எழுதுபவர்கள் அவருக்கு இருக்கும் ஒரு ‘காஸ்மாபாலிட்டன் இமேஜ்’ குறித்துதான் எழுதுவார்கள். அகிலன் நேரடியாக அவர் பழகிய ரஹ்மானைப்பற்றி எழுதியிருக்கிறார். இனிமையான நேரடியான மனிதர் என்று. பெரும்பாலும் உண்மையான கலைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் புகழைச் சுமந்துகொண்டிருப்பதில்லை.
நான் ரஹ்மானைச் சந்திக்க வாய்ப்பிருந்தது. ரஹ்மானின் நண்பர் பரத்பாலா [வந்தேமாதரம் எடுத்தவர்] 19 ஆவது படி என்று ஒரு படம் எடுப்பதாக இருந்தார். எம்டி வாசுதேவன்நாயர் எழுதிய மூலக்கதைக்கு நான் தமிழ் வடிவை எழுதினேன். வால்ட் டிஸ்னி தயாரிப்பு. ரஹ்மான் இசை. பணி முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. பொருளியல் ரீதியாக எனக்கு இழப்பேதும் இல்லை என்றாலும் ரஹ்மானைச் சந்திக்கமுடியாதது பெரிய இழப்பென்றே நினைக்கிறேன்
அந்தப்படத்தின் இசைக்காக பரத்பாலா ரஹ்மானுடன் ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது எடுத்த புகைப்படங்களை எனக்கு மின்னஞ்சல்செய்திருந்தார். பரத்பாலா எப்போதுமே ரஹ்மானைப்பற்றிபேசிக்கொண்டிருப்பவர். அவருக்கு ரஹ்மான் இசையமைப்பாளர் மட்டுமல்ல, தனிவாழ்விலும் ஆதர்ச புருஷன். நண்பர், வழிகாட்டி. அந்தப்புகைப்படங்களில் இயல்பாக உற்சாகமாக இருந்த ரஹ்மானின் தோற்றம் அகிலனின் இக்கட்டுரையிலும் தெரிகிறது