பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 2
காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை மாற்றிக்கொண்டான். கூகையின் குரலில் காடு மெல்ல விம்மியது. ஈரக்காற்று ஒன்று கடந்து செல்ல, நீள்மூச்செறிந்தது. இருளுக்குள் நீர்த்துளிகள் சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பின்பு இலைகள் மேல் மீண்டும் மழை சொரியத்தொடங்கியது.
“அந்த இரண்டாவது முட்டை?” என்று சகதேவன் துயில் கனத்த குரலில் கேட்டான். “வினதை அதை மேலும் ஐநூறு வருடம் அடைகாத்தாள். அந்த ஐநூறு வருடமும் அவள் அகம் கொதித்துக்கொண்டே இருந்தமையால் முட்டை மிகச்சிறந்த வெம்மையுடன் இருந்தது. அதனுள் இருந்து தழல்போல ஒளிவிடும் சிறகுகளும் பொன்னிறமான கூரிய அலகும் நீலநிறவைரம் போல மின்னும் கண்களும் வெள்ளிபோல் மின்னும் கூர் உகிர்களும் கொண்ட பறவைக்குஞ்சு ஒன்று வெளியே வந்தது. அதை அவள் எடுத்து தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டாள்” என்றாள் குந்தி.
“அது கருடன்… நானறிவேன்” என்றான் சகதேவன் எழுந்து அமர்ந்து. “ஆம், அது கருடனேதான்” என்றாள் குந்தி. “அந்த மைந்தன் அன்னையே நீ அழுவதென்ன என்றான். நான் சிறைப்பட்டவள் மைந்தா என்றாள் வினதை. அன்னையே உரியகாலம் வரும்போது நான் உன்னை மீட்கும்பொருட்டு வருவேன் என்று சொல்லி வானிலெழுந்து மறைந்தான் அம்மைந்தன். முதல் மைந்தனின் தீச்சொல்லின் விளைவாக வினதை கத்ருவுக்கு அடிமையானாள்” என்றாள் குந்தி. “எவ்வாறு?” என்றான் நகுலன். சகதேவனும் எழுந்து குந்தியின் தோளை ஒட்டி அமர்ந்துகொண்டான். “கத்ருவும் அவளது ஆயிரம் மைந்தர்களும் சேர்ந்து செய்த சதியால் அவள் ஏமாற்றப்பட்டாள்” என்றாள் குந்தி.
குந்தி சொன்னாள். ஒருநாள் விண்ணில் இந்திரனின் குதிரையான உச்சைசிரவஸ் சென்றுகொண்டிருந்தது. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது பிறந்த தெய்வக்குதிரை அது. ஆயிரத்தெட்டு மங்கலங்களும் அமைந்தது. இளஞ்செந்நிறப் பிடரி மயிர் பறக்கும் ஏழு அழகிய தலைகளும் பால்வெண்ணிறமான உடலும் நுரைப்பெருக்கு போன்ற நீண்ட வாலும் பொன்னிறமான குளம்புகளும் கொண்டது. அதற்கு இந்திரன் விண்ணுலகின் ஒளிமிக்க வைரங்களால் கழுத்தணி அணிவித்திருந்தான். துருவனைப்போல் ஒளிவிடும் செவ்வைரத்தை நெற்றிச்சுட்டியாக பொருத்தியிருந்தான். அவ்வொளிகளை வெல்லும்படி அதன் விழிகள் நீல விண்மீன்கள் போல மின்னிக்கொண்டிருந்தன.
விண்ணில் சென்றுகொண்டிருந்த உச்சைசிரவஸைப்பார்க்க வினதையும் கத்ருவும் ஓடி வந்தனர். வினதையைப் பிடித்து நிறுத்திய கத்ரு “இளையவளே, அக்குதிரையின் வாலின் நிறமென்ன சொல்” என்றாள். “இதை அறியாதவர் எவர்? அதன் நிறம் வெண்மை” என்றாள் வினதை. “இல்லை. கருமை நிறம்” என்றாள் கத்ரு. வினதை அதை மறுத்தாள். “நீ சொல்வது உண்மை என்றால் நான் ஆயிரம் வருடம் உனக்கு அடிமையாகிறேன். இல்லையேல் நீ எனக்கு ஆயிரம் வருடம் அடிமையாகவேண்டும்” என்றாள் கத்ரு. வினதை அதை ஏற்றுக்கொண்டாள். நாளை வரும் உச்சைசிரவஸை பார்ப்போம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
கத்ரு தன் மைந்தர்களாகிய கருநாகங்களை அழைத்து “என் பந்தயத்தை நிறைவேற்றுவது உங்கள் கடமை” என்றாள். அவள் உள்ளத்தை அறிந்த ஆயிரம் கருநாகங்களும் பூமியின் எல்லையாகிய பூர்வசிருங்கம் என்னும் மலைமேல் ஏறிச்சென்று காத்திருந்தன. மறுநாள் கிழக்கே தோன்றிய உச்சைசிரவஸின் வால் அம்மலை மேல் உரசிச்சென்ற கணத்தில் அவை பாய்ந்து அதைக் கவ்விக்கொண்டு பறந்தன. அந்த வெண்ணிறக்குதிரையின் வால் கருமை நிறமாகத் தெரிந்தது.
உச்சைசிரவஸ் வானில் எழுந்து வருவதைப் பார்ப்பதற்காக தமக்கையும் தங்கையும் சூரியனின் முதற்கதிர் எழும் கிழக்குக் கடல் முனையில் சென்று நின்றனர். பூர்வசாகரம் என்னும் அந்தக்கடல் ஒவ்வொரு நாளும் காலையில் பொற்கடலாக ஆகும். அதன் அத்தனை மீன்களும் பொற்சிறகுகள் சூடி சூரியனைக் கண்டு எழுந்து பறந்து நீரில் மூழ்கி திளைக்கும். அதன் ஆழத்தில் வாழும் சிப்பிகள் மற்றும் சங்குகளின் ஓடுகள் பொன்னாக ஆகும். பொற்காலையில் உச்சைசிரவஸ் இடியோசையுடன் வானில் எழுந்தது. அதை ஏறிட்டு நோக்கிய வினதை திகைத்து கண்ணீர் விட்டாள். தன் மைந்தனின் தீச்சொல் வந்து சேர்ந்ததை உணர்ந்துகொண்டாள். கத்ரு நகைத்தபடி ஓடிவந்து தன் தங்கையின் கூந்தலைப்பிடித்துச் சுழற்றி இழுத்துச்சென்றாள். தன் அரண்மனைக்குக் கொண்டு சென்று “இனி ஆயிரம் வருடங்கள் நீ எனக்கு அடிமையாக இரு” என்றாள்.
ஆயிரம் மைந்தர்களைப்பெற்ற ஆணவத்தில் இருந்த கத்ரு வினதையை பலவாறாக அவமதித்தாள். அவள் மணிமுடியையும் சிம்மாசனத்தையும் வெண்குடையையும் பறித்து மரவுரி ஆடைகளை அணியக்கொடுத்தாள். அவள் பகல் முழுக்க தனக்குப் பணிவிடைசெய்யவேண்டும் என்றும் இரவு துயிலாமல் விழித்திருந்து மறுநாளைக்கான உணவைத் தேடிக்கொண்டுவரவேண்டும் என்றும் ஆணையிட்டாள். ஒவ்வொரு கணமும் கண்ணீர் வடித்தபடி கத்ருவின் அடிமையாக வினதை ஆயிரம் வருடம் வாழ்ந்தாள்.
விண்ணளக்கும் பறவைவடிவம் கொண்டிருந்த கருடன் ஐந்து திறன்கள் கொண்டவராக இருந்தார். அவரது சித்தம் மிகக்கூரியது. விண்ணிலும் மண்ணிலுமுள்ள ஞானங்கள் அனைத்தையும் அவர் பிறப்பிலேயே அறிந்திருந்தார். அவரது கூர் உகிர்கள் நிகரற்ற வல்லமை கொண்டிருந்தன. அவரால் மலைகளை கூழாங்கற்களெனத் தூக்கி விளையாட முடிந்தது. அவரது கண்கள் துருவ விண்மீனைப்போல நிலையான ஒளிகொண்டவை. வானில் பறந்தபடி மண்ணில் ஊரும் ஓர் எறும்பின் கண்களை அவரால் பார்க்க முடியும் அவரது சிறகுகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் நிகரானவை. பேரழகு கொண்டவை.
அவரது நிறம் அந்திவானின் செம்மஞ்சள் முடிவிலி வரை எழுந்ததுபோலிருந்தது. அவர் விண்ணில் சிறகடித்துச் சுழன்றபோது இன்னொரு ஆதித்யன் எழுந்தது போலிருந்தார். தேவர்களும் அசுரர்களும் வணங்கும் பேரெழில் கொண்டிருந்தார். அவரை கசியப பிரஜாபதியின் மிக உயர்ந்த ஓர் எண்ணமே தோற்றம் கொண்டு வந்தது என்றனர் முனிவர். அவர் சிறகுகள் காற்றையும் ஒளியையும் வானையும் துழாவி விளையாடின. அவரது சித்தம் விண்ணளந்தோன் பாதங்களில் எப்போதும் நிலைகொண்டிருந்தது.
அவர் அன்னையான வினதை எந்நேரமும் தன் மைந்தனின் தோற்றத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தாள். ஆகவே அடிமைவாழ்க்கையிலும் அவள் சோர்வுறவில்லை. அவள் கண்களின் ஒளி குறையவில்லை. மைந்தனை எண்ணிய அகஎழுச்சி உடலில் வெளிப்பட்டதனால் அவள் கத்ருவை விட அழகும் நிமிர்வும் கொண்டு விண்ணையும் மண்ணையும் ஆளும் சக்ரவர்த்தினி போலிருந்தாள். அதைக்கண்டு கத்ரு பொறாமையால் வெம்பினாள். அவளை மேலும் மேலும் வதைத்து தன் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டாள்.
ஒருநாள் கத்ருவின் நாகமைந்தர்கள் தங்கள் அன்னையிடம் வந்து பணிந்து “நாங்கள் சூரியனை வெல்லவேண்டுமென விழைகிறோம் அன்னையே” என்றனர். “எங்கள் பாதாள உலகில் இருளே நிறைந்துள்ளது… சூரியனை கட்டி இழுத்துக்கொண்டுசென்று அங்கே சிறைவைக்க விரும்புகிறோம்.” கத்ரு “விண்ணளக்கும் சூரியனை நோக்கிச் செல்வது உங்களால் இயலாதே” என்றாள். “உன் இளையவள் மைந்தன் சிறகுடையவன். அவனிடம் எங்களை அங்கே கொண்டு செல்லச்சொல். நாங்கள் கதிரவனை சுற்றி இழுத்து பாதாளத்திற்கு கொண்டுசெல்வோம்” என்றனர்.
கத்ரு வினதையை அழைத்து “உன் மைந்தனை அழைத்து என் புதல்வர்களைச் சுமந்து சூரியனை நோக்கிச் செல்லும்படி ஆணையிடு. நீ என் அடிமையாதலால் உன் மைந்தர்களும் என் அடிமைகளே” என்றாள். வினதை கண்மூடி ஊழ்கத்திலாழ்ந்து தன் மைந்தனை அழைத்தாள். அந்தியே பறவை வடிவில் வந்திறங்கியதுபோல கருடன் அவளருகே வந்திறங்கினார். அவள் தன் தமக்கையின் ஆணையை அவளிடம் சொன்னாள். “அவ்வாறே செய்கிறேன்” என்றார் கருடன்.
கருடன் ஆயிரம் பெருநாகங்களை தன் உகிர்களால் கவ்விக்கொண்டு சூரியனை நோக்கி பறக்கத் தொடங்கினார். மேலே எழும்தோறும் அவர்கள் வெம்மை தாளாமல் குரலெடுத்து அழத்தொடங்கினர். கருடன் சூரியனின் ஒளியால் கவரப்பட்டு அக்குரல்களைக் கேட்காமல் மேலும் மேலும் சென்றுகொண்டே இருந்தார். அவரது சிறகுகள் பொன்னொளி கொண்டு மேலும் ஆற்றல் பெற்றன. கருநாகங்களின் தோல் வெந்து கொழுப்பு உருகி வழியத் தொடங்கியது. அவை நெளிந்து தவித்து அன்னையை அழைத்துக் கதறின.
தன் மைந்தரின் கதறலை கத்ரு அன்னையின் அகத்தால் அறிந்தாள். கண்களை மூடிக்கொண்டு இந்திரனை நோக்கி இறைஞ்சினாள். “இந்திரனே, இப்புவியின் அனைத்து மாதரின் ஆழங்களையும் அறிந்தவன் நீ ஒருவனே. நான் கற்பனையிலும் கற்பு பிழைக்காதவள் என்றால் என் மைந்தர்களை காத்தருள்க!” என்றாள். இந்திரன் அச்சொல்லுக்கு அடிபணிந்தான். வானை அவனுடைய கருமேகங்கள் மூடி நாகங்களுக்கு குடையாக மாறின. விண்மூடி விரிந்த பெருமழையில் நாகங்கள் நனைந்து வெம்மையழிந்தன.
இந்திரனின் வஜ்ராயுதம் எழுப்பிய சுழல்காற்றால் கருடனின் உகிர்களில் இருந்து நாகங்கள் உதிர்ந்தன. விண்ணில் உருவான பெருவெள்ளப்பெருக்கு அவர்களை அள்ளி ரமணீயகம் என்னும் தீவுக்கு கொண்டுசென்றது. அங்கே நாகங்கள் வாழ்வதற்கான பல்லாயிரம் பெரும் புற்றுகளும் அவை உண்பதற்கான பறவைமுட்டைகளும் இருந்தன. பாதாளத்திற்கு இறங்கிச்செல்லும் படிக்கட்டுகள் கொண்ட பிலங்களும் இருந்தன. நாகங்கள் அங்கே சென்று மகிழ்ந்து அமைந்தன
கருடன் வினதையிடம் “அன்னையே, நான் விண்ணளக்கும் சிறகுடையோன். பறவைக்குலத்துக்கு அரசன். மண்ணிழையும் பாம்புகளுக்கு ஏன் நான் பணிவிடை செய்யவேண்டும்?” என்று கேட்டார். வினதை “அது உன் அன்னையின் மூடத்தனத்தால் விளைந்தது. ஆனால் அன்னையை அவளிருக்கும் சிறையில் இருந்து மீட்டு அரசபீடத்தில் அமரச்செய்யும் கடமை உனக்குண்டு” என்றாள். “நான் என்னசெய்யவேண்டும்?” என்று கருடன் கேட்டார். “அதை நாகங்களிடம் கேள். அவர்களும் அவர்களின் அன்னையும் நினைத்தால் மட்டுமே என்னை விடுவிக்க முடியும்” என்றாள் வினதை.
கருடன் நாகங்களிடம் சென்று பணிந்து “உடன்பிறந்தவர்களே, நான் என் அன்னையை உங்கள் ஏவல்பணியில் இருந்து மீட்க விழைகிறேன். அவளை மீண்டும் அரசியாக ஆக்க எண்ணுகிறேன், அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்” என்றார். “எங்கள் அன்னையிடம் அதைக்கேளுங்கள்” என்றன நாகங்கள். கருடன் கத்ருவிடம் சென்று பணிந்து “அன்னையே, என் அன்னையை நீங்கள் விடுவிக்க நான் என்ன செய்யவேண்டும்?” என்றார்.
கத்ரு கருடனின் ஆற்றலை அறிந்தவளாகையால் எப்போதுவேண்டுமானாலும் அவரால் தன் மைந்தர்களுக்கு இடர் நிகழும் என அஞ்சிக்கொண்டிருந்தாள். ஆகவே அவள் நெடுநேரம் சிந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்தாள் “விண்ணவரும் அசுரரும் இணைந்து பாற்கடலைக் கடைந்து அமுதை எடுத்தார்கள் என்றும் அது இந்திரனின் தோட்டமாகிய நந்தவனத்தில் உள்ளது என்றும் அறிந்தேன். அதை நீ கொண்டுவந்து என் மைந்தருக்கு அளிக்கவேண்டும். அதை உண்டு அவர்கள் இறவாவரம் பெற்றவர்களாக ஆகவேண்டும். அதன்பின் உன் அன்னையை விடுவிக்கிறேன்” என்றாள். “அதுவே செய்கிறேன்” என்றார் கருடன்.
கருடன் தனியாக விண்ணை வெல்லமுடியாதென்பதை அறிந்தார். அதற்கு நாகங்களின் படை ஒன்றை அமைத்தாகவேண்டும். நாகங்களிடம் சென்று “உடன்பிறந்தவர்களே, நாம் இணைந்து விண்ணை வெல்வோம். வெற்றியை பகிர்ந்துகொள்வோம். உங்களுக்கு அழிவின்மையின் அமுதும் எனக்கு என் அன்னையின் விடுதலையும் கிடைக்கும்” என்றார். கருடனின் ஆற்றலை நாகங்கள் அஞ்சிக்கொண்டிருந்தன. “நாம் அழிவின்மையை அடைந்தால் அதன்பின் இப்பறவையை அஞ்சவேண்டியதில்லை. இவனை நம் ஆற்றலால் வெல்லமுடியும். அழிவின்மையை அடைந்தபின் இவனுடன் போர் புரிந்து இவன் அன்னையுடன் இவனையும் அடிமைகொள்வோம்” என்றது மூத்த கருநாகம். ஆயிரம் தம்பியரும் அதை ஏற்று ஆரவாரம் செய்தனர்.
கருடன் தன் காலிலும் சிறகுகளிலும் நாகங்களை ஏற்றிக்கொண்டு பறந்து விண்ணுலகை அடைந்தார். அவர்களை எதிர்த்து பெருகிவந்த தேவர்களை நோக்கி நாகங்களையே அம்புகளாக எய்தார். அவை பறந்துசென்று தேவர்களைத் தீண்டி மயக்கமுறச் செய்தன. எப்போது முற்றிலும் எதிரிகளாக இருப்பவர்கள் அகமிணைந்து ஒன்றாகிறார்களோ அப்போது அவர்களின் ஆற்றல் இருமடங்காகிறது. ஏனென்றால் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி இணையான ஆற்றலை அடைந்தவர்களாக இருப்பார்கள். இருசாராரின் ஆற்றலும் இருதிசையில் விலகிச்சென்று வளர்ச்சிகொண்டதாகவும் ஒன்றை ஒன்று நிறைவடையச்செய்வதாகவும் இருக்கும். ஆகவே அது முழுமையான பேராற்றலாகி எதிரிகளை வெல்லும். கருடனும் நாகங்களும் இணைந்தபோது தேவர்களால் அந்த ஆற்றலை வெல்ல முடியவில்லை.
போர் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே கருடன் இந்திரனின் நந்தவனம் என்னும் குறுங்காட்டுக்குள் புகுந்து அங்கே அமுதகலசம் வைக்கப்பட்டிருந்த மண்டபத்தை அடைந்தார். அதன் வாயிலில் திவாகரம் என்னும் இயந்திரம் தேவர்களால் நிறுவப்பட்டிருந்தது. மிகக்கூரிய முந்நூற்று அறுபத்தாறு இரும்புக் கத்திகளால் ஆன அது இந்திரனால் அன்றி எவராலும் நிறுத்தப்பட முடியாதது. அமுதகலசத்தின் மேல் அதன் கத்திகளின் நிழல் ஒவ்வொரு கணமும் கடந்து சென்றபடியே இருக்கும். ஊடே செல்லும் எவரையும் துணிக்கக் கூடியது. அதற்கு அப்பால் இமையாத விழிகளும் மலைகளையும் எரியச்செய்யும் அனல் நஞ்சும் கொண்ட விஸ்மிருதி, மிருதி என்னும் இரு நாகங்கள் காவலிருந்தன.
கருடன் அந்த இரு நாகங்களையும் நோக்கி “தமக்கையும் தங்கையுமான உங்கள் இருவரையும் நான் அறிவேன். இளையோளாகிய விஸ்மிருதி மறதியை உருவாக்குபவள். மூத்தவள் மிருதி இறப்பை அளிப்பவள். உங்களில் எவள் ஆற்றல் மிக்கவளோ அவளிடம் முதலில் மோதலாமென நினைக்கிறேன். ஆனால் என்னால் முடிவெடுக்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள்” என்றார். மிருதி “இதிலென்ன ஐயம்? நானே வல்லமை வாய்ந்தவள். எதையும் எஞ்சவிடாமல் அழிப்பவள்” என்றாள். இளையோள் “இல்லை, நானே வல்லமை மிக்கவள். இறந்தவர்கள் தங்கள் வினைப்பயனை அடைந்து விண்ணுலகு செல்லமுடியும். நான் அவர்களை வாழும் சடலங்களாக ஆக்குகிறேன்” என்றாள். மூத்தவள் சீறி இளையோளைக் கொத்தினாள். இளையோளும் திரும்பி மூத்தவளை தீண்டினாள்.
இளையோள் அக்கணமே இறந்தாள். மூத்தவளோ தன் நினைவை இழந்து தீண்டுவதற்கும் ஆற்றலற்றவள் ஆனாள். கருடன் அந்த இயந்திரத்தை அணுகி கைதொழுது நின்று உலகளந்த விண்ணவனை எண்ணினார். அவரது ஆண்வம் கடுகளவாக சிறுத்தது. அவர் உடல் அதைவிடச் சிறியதாகியது. அந்த வாள்கள் தொடாமல் அவர் உள்ளே சென்று அமுதத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அதை தன் உகிர்களில் ஏந்தியபடி பறந்து ரமணீயகத் தீவை நோக்கி பறந்தார்.
அவர் அமுதுடன் செல்வதை வைகுண்டத்தில் பெருமாளின் அவையில் அமர்ந்திருந்த இந்திரன் அறிந்தான். அவன் தன் பொன்னிறமான வியோமயான விமானத்தில் ஏறி மின்னல்களை தெறிக்கச்செய்யும் வஜ்ராயுதத்துடன் வானில் எழுந்தான். “நில்…நில்” என்று கூவிக்கொண்டு கருடனை மறித்தான். கருடன் பெருமாளை எண்ணி கைகூப்பியபோது அவர் பக்தி பேருருவம் கொண்டது. பெருகிப்பெருகி விண்நிறைக்கும் மேகவிரிவாக ஆனார். இந்திரனின் வஜ்ராயுதத்தின் மின்னல்கள் அவரைச் சூழ்ந்தாலும் அவரை அவை தீண்டவில்லை.
“இந்திரனே, நீ தேவர்களுக்கு அரசன். உன்னை நான் அவமதிக்க விழையவில்லை. நீ தாக்கியதனால் என் ஒரு இறகு உதிர நான் ஒப்புகிறேன்” என்றார் கருடன். அந்த இறகு மண்ணில் விழுந்து செந்நிறமான கருடபக்ஷம் என்னும் மலைத்தொடராக அமைந்தது. இந்திரன் “அது தேவர் ஈட்டிய அமுது. அதை பிறர் உண்ணலாகாது. தீய எண்ணமுடையோர் அதை உண்டால் அவர்களை அழிக்கமுடியாது. அதை திருப்பிக்கொடு” என்றான். “இந்திரனே, இது தேவர்களுக்குரியது என்பதனால் இதை நானும் உண்ணவில்லை. ஆனால் என் அன்னையை விடுவிக்க இதை நான் கொண்டுசென்றேயாகவேண்டும். என் பிழையை பொறுத்தருள்க” என்றார்.
“அவ்வண்ணமென்றால் இந்த அமுதை நாகங்களுக்குக் கொடுத்து உன் அன்னையை மீட்டுக்கொள். அதை அவர்கள் உண்பதற்குள் நான் அதை மீட்டுக்கொள்ள வழிசெய்” என்றான் இந்திரன்.. “இதை நான் ரமணீயகத்தில் தர்ப்பையால் மூடி வைப்பேன். அவர்கள் இதைத் தேடும்போது நீ எடுத்துக்கொண்டு செல்” என்றார் கருடன். இந்திரன் அதற்கு ஒப்பினான். கருடன் கத்ருவிடம் வந்து விண்ணுலகை வென்று அமுதை கொண்டு வந்திருப்பதாகவும் தன் அன்னையை விடுவிக்கும்படியும் சொன்னார். கத்ரு அகம் மகிழ்ந்து வினதையை விடுவித்தாள்.
அமுதத்தை தர்ப்பையில் மூடிவைத்தபின் நாகங்களிடம் அதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார் கருடன். நாகங்கள் முண்டியடித்து அதைத் தேடின. அதைக் கண்டுகொண்டதும் அவை ஒரேசமயம் அதை கவ்வமுயன்றன. கலசம் கவிழ்ந்து அமுதம் தர்ப்பையில் சிந்தியது. அக்கணம் விண்ணிலிருந்து ஒரு வெண்பருந்தாகப் பறந்திறங்கிய இந்திரன் அமுதகலசத்தை கவ்விக்கொண்டு பறந்து விண்ணிலேறி மறைந்தான். நாகங்கள் சிந்திய அமுதத்தை நாவால் நக்கின. தர்ப்பையின் கூர்மையால் அவற்றின் நாக்குகள் இரண்டாகக் கிழிந்தன.
அமுதை உண்ணமுடியாத நாகங்கள் அழுது புலம்பின. தங்களை ஏமாற்றிய இந்திரனிடமே முறையிட்டன. இந்திரன் தோன்றி “நாகங்களே, அமுதத்தின் முதல்துளிகளை உண்ட உங்களில் சிலர் அழிவின்மையை அடைவீர்கள். அமுதம் பட்ட தர்ப்பையை நக்கிய எஞ்சியவர்கள் இறப்பை அடைந்தாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் மூலம் அழிவின்மை கொள்வார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு பல்லாயிரமாகப் பெரும் வரத்தை பெற்றிருக்கிறார்கள்” என்றான். நாகங்கள் அதில் மகிழ்ந்து நிறைவுற்றன.
“அவ்வாறாக கருடன் தன் அன்னையை மீண்டும் விண்ணுலகின் அரியணையில் அமர்த்தினார். அதன்பின் அவர் வைகுண்டம் சென்று உலகளந்தோனின் ஊர்தியாக ஆனார். அவரது சிறகுகளால் உலகம் புரக்கப்படுகிறது” என்றாள் குந்தி. கதைமுடியும்போது எழும் நீண்ட பெருமூச்சுடன் சகதேவன் திரும்பிப்படுத்தான். நகுலன் “அன்னையே, அதன்பின்னர் கத்ருவுக்கும் வினதைக்கும் பூசலே நிகழவில்லையா?” என்றான். “நிகழ்ந்திருக்கும். அது வேறு கதை… இந்தக் கதையில் இல்லை” என்றாள் குந்தி.
இளையவர் இருவரும் விரைவிலேயே துயின்றுவிட்டனர். பின்னர் தருமனின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. அர்ஜுனன் மழையை கேட்டுக்கொண்டே கிடந்தான். பீமன் ஒருமுறை புரண்டு மூச்செறிந்த பின் “அன்னையே, நான் ஒன்று கேட்கலாமா?” என்றான். குந்தி “ம்” என்றாள். “உங்களை நாங்கள் அரியணை ஏற்றுவோம் என்று உறுதிகொள்ளுங்கள். ஆனால் அதனால் நீங்கள் நிறைவடைவீர்கள் என்பது உறுதியா? ஏனென்றால் நாங்கள் ஐவருமே அதன் பொருட்டு எஞ்சிய வாழ்நாளை செலவிட வேண்டும்” என்றான்.
“எவரும் தன் அகம் தேடும் நிறைவைத்தான் தேடிச்சென்றாகவேண்டும். அங்கே சென்றபின் அந்நிறைவு நீடிக்குமா என செல்வதற்கு முன் அறியமுடியாது” என்றாள் குந்தி. “வாழ்க்கையின் இன்பம் என்பதே அப்படி சென்றுகொண்டிருப்பதே. அதன்பொருட்டு கணமும் சலிக்காமல் செயலாற்றுவதே, அச்செயலுக்காக அனைத்து ஆற்றல்களையும் குவித்து ஏவப்பட்ட அம்பாக ஆவதே கர்மயோகம் எனப்படுகிறது. அது நம்முள் உள்ள ரஜோ குணத்தை மேலெழுப்புகிறது. மாங்கனியின் புளிப்பு கனிந்து இனிப்பாக ஆவது போல ரஜோகுணம் கர்மயோகத்தால் கனிந்து சத்வகுணமாகும். அதுவே ஷத்ரியனுக்குரிய முழுமை என்பது. தன் கடமையை கர்மயோகமாக செய்யும் ஷத்ரியன் ராஜரிஷியாகிறான். மிதிலையின் ஜனகரைப்போல.”
“ஷத்ரியன் கர்மயோகத்தை துறக்கலாம். அப்படி துறப்பவர்கள் மேலும் முன்னகர்ந்து ஞானயோகம் நோக்கியே செல்லமுடியும். ஞானத்தை கருவியாகக் கொண்டு அங்கிருந்து விபூதியோகம் நோக்கி செல்லவேண்டும். அங்கே ஜீவன்முக்தராகி நிறைவடையவேண்டும். அதுவே தொல்நூல்கள் வகுத்துள்ள பாதை. கர்மத்தை யோகமாக ஆக்காமல் இயற்கை அளிக்கும் எளீய வாழ்க்கைச்சுழலில் சிக்கிக்கொள்பவன் பாமரன். அவன் தனக்களிக்கப்பட்ட அக ஆற்றலை வீணடிக்கிறான். ஒரு ஷத்ரியன் அதை தேர்வுசெய்வான் என்றால் அவன் தெய்வங்களுக்கு உகக்காதவன் என்றே பொருள்” என்றாள் குந்தி.
“அன்னையே, இந்தக்காட்டில் நாம் இனிய வாழ்க்கை ஒன்றை அமைக்க முடியும். நமக்குத் தேவையான அனைத்தும் இங்குள்ளன. இனியவானம், இனிய நீர், இனிய காற்று, இனிய தீ, இனிய மண். அவை அளிக்கும் தூய எண்ணங்கள்… இங்கே ஓர் நிறைவான வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள முடியும்” என்றான் பீமன். “வேறு எந்த இடத்தைவிடவும் நான் இங்கே நிறைவுடன் இருப்பேன் என நினைக்கிறேன். அஸ்தினபுரியில் நான் அடையும் நிறைவின்மை இக்காட்டில் நுழைந்ததுமே அழிந்தது.”
“இருக்கலாம். ஆனால் அதில் கர்மயோகம் இல்லை. ஆகவே அது தமோகுணம் நிறைந்த வீண் வாழ்க்கையே” என்றாள் குந்தி. “நீ காட்டை விரும்புகிறாய் என்றால் காமகுரோதமோகம் என விரிந்துள்ள ஆணவத்தை முழுமையாக அழித்து இங்கே ஒரு ஞானயோகியாக அமரமுடியுமா என்று பார்!” பீமன் ஒன்றும் சொல்லவில்லை. குந்தி “உன்னால் முடியாது. உனக்குள் உள்ள நஞ்சு அப்படி வாழ உன்னை விடாது.” என்றாள். பீமன் சினத்துடன் சரிந்து “ஆம், என்னுள் நஞ்சு உள்ளது. ஆனால் அதுவல்ல நான்” என்றான்.
“அதுதான் உன் சாரம். நாகம் நஞ்சாலேயே நாகமாகிறது. இல்லையேல் அது புழுதான்” என்றாள் குந்தி “நீ இங்கே அமைதியை உணர்வது அஸ்தினபுரி மீது கொண்ட வெறுப்பாலும் விலகலாலும்தான். இங்கிருந்தால் மெல்லமெல்ல நீ அஸ்தினபுரியை மறப்பாய். மறந்ததுமே இங்கும் அமைதியிழந்தவனாக ஆவாய். நிறைவுள்ள வாழ்க்கை என்பது எதற்கு எதிராகவும் அடையப்படுவது அல்ல. இங்கே இந்தச் செடிகள் முளைப்பதுபோல நீ எழுந்தால் அது உனக்கு நிறைவளிக்கும். ஆனால் நீ அங்கே என் வயிற்றில் அரசமைந்தனாக பிறந்துவிட்டாய்.”
“இனியும்கூட நான் இங்கே ஒரு வாழ்க்கையை அமைக்க என் அனைத்து அகஆற்றலையும் செலவிட முடியும். இக்காட்டினூடாக நான் இயற்கையையும் பிரம்மத்தையும் அறியமுடியும். இன்று காலை இக்காட்டுக்குள் நுழைந்தபோது அதை நான் அறிந்தேன். இங்கு நான் வேரோட முடியும்” என்றான் பீமன். “நகரில் பிறந்து வளர்ந்தாலும் யானை காட்டில் விடப்பட்டால் சின்னாட்களிலேயே காட்டுவிலங்காக ஆகிவிடுவதை கண்டிருக்கிறேன்.”
“ஆகக்கூடும்… ஏனென்றால் நீ மாருதன். உன்னை இக்குரங்குகள் ஏற்றுக்கொள்ளலாம். அவர்களுடன் நீ வாழவும்கூடும். ஆனால் அது ஒருபோதும் மானுடனுக்குரிய நிறைவாழ்க்கை அல்ல. விலங்குகள் தமோகுணம் நிறைந்தவை. அவற்றுடன் வாழ்பவன் தமோகுணம் மட்டும் கொண்டவனாவான். விளக்குகள் ஒவ்வொன்றாக அணையும் மாளிகை போல அவனுக்குள் ஞானமும் ஞானத்தைக் கையாளும் புலன்களும் அணையும்… அது ஆன்மாவை இருளறைக்குள் சிறையிடுவதே. சிறையுண்ட ஆன்மா உண்மையான உவகையை அடைவதில்லை. ஏனென்றால் விடுதலையையும் மகிழ்ச்சியையும் ஆன்மா ஒன்றெனவே கருதுகிறது.”
பீமன் சிலகணங்கள் சொல்லற்று படுத்திருந்தான். அர்ஜுனன் இருளுக்குள் புன்னகைத்தான். குந்தியிடம் பீமன் அச்சொற்களால் உரையாடியிருக்கலாகாது என்று நினைத்துக்கொண்டான். “நீங்கள் தேடும் நிறைவு மட்டும் இன்னொன்றுக்கான எதிர்வினை அல்லவா?” என்று பீமன் கேட்கவேண்டும் என அர்ஜுனன் நினைத்தான். ஆனால் பீமன் “அன்னையே, இக்குரங்குகளின் வாழ்க்கை வீணா?” என்றான். “ஆம், அவை எந்த அறத்தையும் மண்ணில் நிலைநாட்டவில்லை. வெறுமனே காலத்தில் மிதக்கின்றன” என்றாள் குந்தி. “அறத்தின் பொருட்டு நிகழாத வாழ்க்கை வீணே.”
பீமன் ஒன்றும் சொல்லவில்லை. நெடுநேரம் மழையின் ஒலியே கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் குந்தியின் குறட்டை ஒலி கேட்கத்தொடங்கியது. பீமன் அசைவற்றுக்கிடந்தாலும் அவன் துயிலவில்லை என்பது அர்ஜுனனுக்குத் தெரிந்தது. பெருமூச்சுடன் பீமன் “எந்த அறம் அன்னையே?” என முனகினான். குந்தி அதைக் கேட்கவில்லை. அவள் மூச்சொலியை செவிகூர்ந்த பீமன் நீள்மூச்சுடன் “அறம் என்றால் என்ன?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். அர்ஜுனன் பீமனின் உடலில் தசைகள் தளரும் ஒலியை இருளுக்குள் கேட்டுக்கொண்டு கண்மூடி படுத்திருந்தான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக
வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்