பிரயாகை- ஒருமை

ஆசிரியருக்கு ,

ஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே சமயம் நடக்க சாத்தியமான நம்பிக்கையையும் நமக்கு அளிக்க வேண்டும்.

சம்பவ வலுவுக்குப் பின் பாத்திரங்கள் தமக்குள்ளே வேறுபட்டு இருக்கவேண்டும், அது இயல்பாகவும் இருக்க வேண்டும் (Characteral distinction) அதே சமயம் அது எதிர்வரும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதிலும் தனது போக்கிலும் ஒரு ஒருமை இருக்க வேண்டும் (Characteral Unity). மேலும் சம்பவங்களுக்கு பின் அந்த பாத்திரம் தனது கட்டுக் குலையாமல் மாறியும்/வளர்ந்தும் (characteral enhancement) இருக்க வேண்டும்.

இதுவே எனது நாவல் மதிப்பு கோட்பாடு.

பிரயாகை இதை அனைத்தையும் சாதித்திருக்கிறது. நான்கு நாட்களுக்குள்ளேயே வலுவான இரண்டு சம்பவங்கள் , பாண்டவர்கள் மணிமுடியை குந்தியின் காலடியில் வைப்பது மற்றும் துரியோதனன் பலராமனுக்காக தூது வருவது. சௌவீரர்களை வென்று நகர் நுழையும் சம்பவம் இதை குந்தி ஈர்கிறாளோ என ஐயம் கொள்ளச் செய்தது. அவள் பாகையை அணிவது , ஒரு சக்கரவர்த்தினி நிலை அடைந்ததாக நம்பிக்கை கொள்வது , அதை பட்டவர்தனமாக்குவது ஆகியவை அவளுக்கும் திருதிராஷ்ட்டிரனுக்கும் இடையே விழும் முதல் விரிசல் இது வன்மமாக காத்திருக்கிறது. தனது குலத்தை தலைமையில் வைக்கும் குந்தியின் வேட்கையுடன் அவளின் அதிகார வேட்கையும் சேர்க்கிறது

இங்கு அவளது பாத்திரம் ஏற்கனவே வடிக்கப் பட்ட போக்கில் தான் செல்கிறது. பெருந்தன்மை மிக்க திருதிராஷ்ட்டிரன் தனது இயல்பில் இருந்து வழுவ இது காரணமாகுமா என்றால் இக்கனலை விசிறி விட்டால் அது ஆகும். இச்சம்பவம் குந்தியை மேலும் அதிகார சுவை நோக்கி வளர்கிறது திருதிராஷ்ட்ரனை பெருந்தன்மை நிலையில் இருந்து சற்று கீழ் இறக்கிறது அவர்களின் ஒருமை குலையாமல்.

துரியோதனன் தனது குருவுக்கு ஒரு வாக்கு அளித்திருக்கிறான் , ஆகவே தர்மனிடம் தாழ்ந்து யாசிக்கிறான் . அது அரசியல் காரணிகளால் மறுக்கப் படுவதிலும் நியாயம் இருக்கிறது, துரியோதனனிடமும் நியாயம் இருக்கிறது. இந்த தர்மசங்கடம் வஞ்சத்தை பகையாக்குமா என்றால் துரியனின் அதிகாரம் வரையறுக்கப் பட்டு வாக்குறுதி அளிக்க உரிமையில்லை என்பதும் சேர்வதால் இதைவிட வலுவான சம்பவம் ஒன்று நிகழ முடியாது. பீமனிடம் மட்டுமே இருந்த வஞ்சம் இனி ஒட்டுமொத்த பாண்டவர்களிடமும் நீடிக்கலாம். இக்கனலை விசிற விசிறி தேவையில்லை , காலம் போதும். இங்கு துரியனின் பாத்திரம் பகையால் வளர்கிறது.

விஷத்தை அருந்தியதால் ஒரு pessimist ஆன அதே சமயம் ஒரு nihilist ஆகும் விளிம்பில் நிற்கும் பீமன் தனது முன் நாவில் படும் உலகில் தனது இருப்பை காண்கிறான் , அவனை எந்தக் கீழ்மையும் அதிர்ச்சியளிக்க முடியாது, மனிதர்கள் அப்படித்தான் என்பது அவன் பார்வை. நாகம் தீண்டியபின் ஒவ்வொரு நாளும் இவ்வாறே அவன் வளர்ந்து வருகிறான்.

நிலைகொள்ளாத அர்ஜுனன் வில்லாளிக்கே இருக்கும் கூரறிவு உடையவன் ஆனால் பீமனைப்போல கண்ட ஞானத்தில் அவனுக்கு நிறைவில்லை , விரையும் நதியில் நிலைகொள்ளாத படகில் நின்று வேறொரு படகில் உள்ள இலைக்கை எப்பொழுதும் குறி வைக்கிறான். அவனை ராஜ யோகம் முதல் விபூதி யோகம் வரை பல அடுக்குகளால் ஆன ஞானமே திருப்திப் படுத்தும். அங்கிருந்து தான் அவன் வளர்வான். இது அவனது பாத்திர இயல்பு.

குருவியை படிப்படியாக வெளியேற்றும் கிருஷ்ணனே அர்ஜுனனுக்கு அதே முறையில் யோகத்தை போதிக்க முடியும். கிருஷ்ணனின் இயல்பு இச்சம்பவத்தில் இருக்கிறது , முழுமையானது இனி வளராது.

சகுனி ஓநாய் கடிக்கப் பட்டு , பீமன் நாகம் தீண்டப் பட்டு , அர்ஜுனன் துருபதனை வென்று துரோணரின் காலடியில் கிடத்தி என பல்வேறு சம்பவங்கள் வெவ்வேறு பாத்திரங்களை தனது ஒருமை குலையாமல் தனது இயல்பை மாற்றியும் உயர்த்தியும் தாழ்த்தியும் உள்ளது அனைத்தும் கச்சிதமாக இணைகின்றன.

பிரயாகை ஒட்டுமொத்த வெண் முரசின் தர ஒருமையை நிலை நிலை நிறுத்தி இருக்கிறது.

கிருஷ்ணன்.

வெண்முரசு விவாதங்கள்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42