இரவு 3

திகைத்து நின்றது இரவு

தன்னைத் தானே அறிந்து.

ஒருதுளிகூட மிச்சமில்லாமல்…

இருட்டு தோட்டம் மீது சீக்கிரமே கவிந்துவிட்டது. சூரியன் மறைந்தபின்னர் காயலின் நீர்விளிம்பில் தங்கக்கத்தியின் கூர் போல ஓர் ஒளி மட்டும் மின்னிக்கொண்டிருக்க காயல்பரப்பின் கலங்கல் நீர் மஞ்சள் ஒளிபரவி நெளிநெளிவாக உருக்கி வார்க்கப்பட்ட வெண்கலத் தகடாலானதுபோல் இருந்தது. தென்னந்தோப்புக்குள் இருட்டுக்குள் சில சிற்றுயிர்கள் ஓடும் சரசரப்பு கேட்டது.  உள்ளே தீபத்தை வைத்து மூடப்பட்ட கருவறைக் கதவின் இடுக்கு போல ஆகியது வான்கோடு. பின்னர் அதுவும் அணைய காயலின் நீர்வெளி எவர்சில்வர் தகடாகியது.

பின்பு கண் பார்த்திருக்கவே கருமை படர்ந்து ஈரமான சிலேட் பரப்பாக ஆகியது காயல். பின்னர் கிராபைட் கருமையின் பளபளப்பு. இருளுக்குள் நீரலைகள் தளக் தளக் என மதிலை நக்கின. ஒரே ஒரு அரிக்கேன் சுடராக ஒரு படகு நீர்மேல் நகர்ந்து சென்றது. மீண்டுமொரு படகு. இரு சிவந்த புள்ளிகள். சட்டென்று காயல் கண் பெற்று என்னை நோக்குவதாக உணர்ந்தேன்

என் பிரக்ஞை பக்கத்து வீட்டிலேயே இருந்தது என்பதை அங்கே ஒரு தீப ஒளி தெரிந்ததைப் பார்த்ததும் உணர்ந்தேன். அந்த வீட்டின் கதவுகள் திறந்திருந்தன. ஜன்னல்கள், வாசல்கள் எல்லாம். உள்ளே நிறைய சிறு தீபங்கள் சுடராட மெல்லிய சிவந்த ஒளி அலையடித்தது. நான் என் பால்கனியில் நின்று அந்த வீட்டின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதிக ஆட்கள் இருப்பதாக தெரியவில்லை. அதிகம்போனால் இருவர்

வீட்டுக்குள் இருந்து ஒரு உயரமான கிழவர் நன்றாக உடையணிந்து கையில் நடைக்குச்சியுடன் வெளியே சென்றார். கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி நீலநிறமான சால்வை ஒன்றை அணிந்துகொண்டு வெளியே வந்து கதவை பூட்டி விட்டு படிகளில் நின்றாள். கிழவர் காரைக் கொண்டுவந்து முற்றத்தில் நிறுத்தியதும் அவள் ஏறிக்கொண்டாள். கதவு மூடும் ஒலி துல்லியமாகக் கேட்டது. கார் பின்பக்க விளக்கு சிவப்பாக சீறி விழித்து அணைய மெல்ல உறுமி சென்று மறைந்தது.

இரவுணவை வெப்பப்பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு பங்கஜம் சென்றிருந்தாள். சப்பாத்தியும் தேங்காய்ப்பால்விட்ட கறுப்பான உருளைக்கிழங்கு கறியும். சாப்பிட்டு விட்டு நான் கொஞ்ச நேரம் மின்னஞ்சல்களைப் பார்த்தேன். கணக்குகளின் மீதான என் முதலறிக்கையை அலுவலகத்துக்கு அனுப்பினேன். சோம்பல் முறித்து காலைத்தூக்கி கட்டில் மீது வைத்துக்கொண்டு சாய்ந்தபோது கார் உறுமும் ஒலி கேட்டது. எழுந்து பால்கனிக்கு வந்து நின்றேன். காரின் முகவெளிச்சம் தென்னைமரங்களின் ஊடாக சிதறி ஒளிச்சட்டங்களாக என் வீட்டு சுவரில் பரவிச் சுழன்று சென்றது. மரநிழல்கள் வரிசையாக ஒன்றை ஒன்று துரத்தி ஓடின.

காரை அணைத்துவிட்டு கிழவர் இறங்க கைகளில் நிறைய பொட்டலங்களுடன் ஒருவர் இறங்கி நின்றார். பின்னர் கிழவியும் கைகளில் பொட்டலங்களுடன் இறங்கி கதவைத்திறந்தாள். கிழவர் கையில் பெரிய இரு பைகளுடன் அவர்களுக்குப் பின்னால்சென்று வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் பேச்சொலிகளும் சிரிப்புகளும் கேட்க ஆரம்பித்தன

நான் கொஞ்சநேரம் தயங்கி அமர்ந்திருந்தேன். என்ன செய்வதென்று யோசித்தேன், ஆனால் அந்த யோசனை பலவகையில் சிதறிச்சிதறித்தான் சென்றது. பின்பு எதையுமே முடிவுசெய்யாமல் சட்டென்று எழுந்து பாண்ட் சட்டை போட்டு கையில் செல்போனையும் எடுத்துக்கொண்டு தோட்டம் வழியாகச் சென்றேன். தோட்டத்திற்குள் சரசரவென ஏதேதோ ஓடியது.  தென்னைமட்டைகளில் முட்டிக்கொள்ளாமல் செல்ல செல்போன் வெளிச்சமே போதுமானதாக இருந்தது.

அந்த வீட்டு முற்றத்திற்குச் சென்று நின்றேன். திரும்பிவிடலாமா என்று உள்ளே ஓடிய எண்ணத்தை அழுத்தி மிதித்து மேலேறி வீட்டு வாசலில் படிகளில் ஏறினேன். வீட்டுச்சன்னல்களும் கதவுகளும் எல்லாமே திறந்து கிடந்தன. என்னுடைய நிழலசைவு என்னை ஒருகணம் திடுக்கிட வைத்தது. உள்ளே பல இடங்களில் தீபங்கள் எரித்தன. நெய்ப்பலகார வாசனை நிறைந்திருந்தது.

கூடத்தை எட்டிப்பார்த்தேன். பெரிய பழையபாணி கூடம். பழைய மரச்சாமான்கள். சுவரில் ஒரு பெரிய காளி மாதாவின் படம். கீழே ஒரு முக்கால் ஆள் உயரமான பித்தளைக்குத்துவிளக்கு ஏழுதிரிபோட்டு கொளுத்தப்பட்டிருந்தது. சுடர்கள் மலரிதழ்கள் போல அசையாமல் நின்றன. நான் தயங்கி எப்படிக் கூப்பிடுவதென தெரியாமல் திரும்புவது போல ஓர் அசைவை உடலில் அடைந்தபோது அந்தக் கிழவி  உள்ளிருந்து எட்டிப்பார்த்தாள்.

”வரூ” என்றாள். நான் ”இல்லை நான்…” என்றபோதுதான் நான் வேறு யாரோ என்று அவள் புரிந்துகொண்டாள் ”எந்தா வேண்டே?” ”நான்..வந்து…”  என்று தடுமாறி ”எனக்கு பக்கத்துவீடுதான்…சும்மா…” என்றேன். உடனே யோசித்து ”உங்க கிட்ட அனாசின் சாரிடான் ஏதாவது இருக்குமா? ஒரே தலைவலி” என்றேன்

உள்ளிருந்து கிழவர் வந்து ”ஆரா அது கமலம்?” என்றார். என்னைப்பார்த்து புருவத்தைச் சுருக்கினார். அந்த அம்மையார் ”.. அயலத்தே ஆளாணு…தலவேதனைக்கு குளிக வேணமத்ரே” என்றாள்

அவர் என்னை ஒருகணம் கூர்ந்து பார்த்தபின் சிரித்து ”கம் இன்…” என்றார். ”கன் யூ ஸ்பீக் மலையாளம்?” நான் ”நோ…ஐயம் நியூ ஹியர்…” என்றேன் ”சென்னை?” ”..யா…” ”தமிழிலே பேசுங்கோ…நான் நல்லாவே தமிழு பேசுவேன்” என்றார் ”இவளும் தமிழு பேசுவாள். நான் நாகப்பட்டிணத்திலே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கேன்..கம் இன்” நான் ”ஐயம் சரவணன்.. ஆடிட்டர்” என்றேன். ‘நைஸ்” என்றார் அவர்.

நான் உள்ளே போனபடி ”ஒரு மாதிரி தலைவலி…” என்றேன். அவர் சிரித்து, கையை ஒருமாதிரி வீசி ”ஓ கமான்…உனக்கு தலைவலியும் இல்லை ஒண்ணும் இல்லை. சும்மா இங்க வரணும்கிறதுக்காக சொல்றே” என்றார். ”நீ காலையிலே வந்து பாத்துட்டு போனதை நானும் கமலமும் உள்ளே இருந்து பாத்தோம்…” எனக்கு முதுகில் மெல்லிய சில்லிப்பு ஏற்பட்டது.

”உள்ளே இருந்தீங்களா?” என்றேன். ”கமான் டேக் யுவர் சீட்…” என்றார். உள்ளே ஆர்மோனியத்தில் யாரோ ரீங்காரமிட்டார்கள். தெரிந்தபாட்டுதான். ”பாம்புகளுக்கு மாளமுண்டு பறவகளுக்காகாசமுண்டு…” அவர் தலையை அசைத்து ”அது மஜீத். ஹி இஸ் எ குட் சிங்கர் ஆண்ட் மியுஸிஷ்யன்….நான் விஜயன் மேனோன். நேவியிலே அட்மிரலா இருந்தேன். ரிட்டயர் ஆகி பதினெட்டு வருஷம் ஆகுது…இது கமலம்…”

”ஹாய்” என்றேன். ”சாப்பிட்டாச்சா?” என்று கமலம் கேட்டாள். ”ஆமா…சப்பாத்தி, கறி இருந்திச்சு” ”அடாடா இங்கியே சாப்பிட்டிருக்கலாமே… கமலம் இஸ் எ வண்டர்புல் குக்” என்றார் விஜயன் மேனோன். ”பரவாவில்லை”என்றேன் ”சரி, நாளைக்குச் சாப்பிட்டா போச்சு… ஸ்மோக்?” ”இல்லை” ”ஸாரி” என்றபடி அவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். சிகரெட்டை தந்தத்தாலான ஒரு பைப்பில் பொருத்தி நாசூக்காக இழுத்தார்.

அசப்பில் பழைய மனேக்ஷாவை நினைவுறுத்தும்படி இருந்தார். அழகான ஸ்டைலான மனிதர். சீரான மூக்குக்குக் கீழெ கச்சிதமான வெண்மீசை கூர்மையாக முறுக்கப்பட்டிருந்தது. குட்டையான ராணுவ கிராப். உறுதியான உடல். கன்னச்சதைகளில் அசைவில்லாமல் நாசுக்காக புகையை இழுத்து சாம்பல்கிண்ணத்தில் தட்டியபடி என்னை கூர்ந்து பார்த்தார். கண்களில் எப்போதுமே மென்மையான ஒரு சிரிப்பு இருந்தது.

”ஸோ யு ஆர் வண்டரிங்…” என்றார். நான் திடுக்கிட்டேன். ”நீ என்ன நெனைக்கிறாய்னு சொல்றேன்…பகலிலே வீட்டை பூட்டிப்போட்டிருக்கு. ராத்திரி தெறந்து வெளக்கு வச்சு பேசிட்டிருக்காங்க…இல்லியா? யூ ஆர் ரைட். ஸ்டிரேஞ்ச், பட் நாங்க இப்டித்தான். பன்னிரண்டு வருஷமா நாங்க பகலையே பாத்ததில்லை…”

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை ”அப்டியா?” என்றேன். அவர் கண்களைப் பார்த்ததும்தான் சட்டென்று உறைத்தது. வாயைப்பிளந்தேன். ”எஸ்”என்று அவர் சிரித்தார். ”நாங்க வெயில் வர்ரதுக்குள்ளே தூங்கிடுவோம். பகல் முழுக்க தூங்குவோம். சாயங்காலம் வெயில் போனபிறகு எந்திரிச்சு கடைக்கோ கோயிலுக்கோ போயிட்டு வருவோம். அப்றம் விடியறது வரைக்கும் முழிச்சிட்டு இருப்போம். எங்க வாழ்க்கை முழுக்க முழுக்க ராத்திரியிலேதான்…  வி ஆர் அதர் பீப்பிள்…”

நான் என்ணுவதைப் புரிந்துகொண்டவராக ”நோ..எங்களுக்கு எந்த நோயும் கிடையாது. நாங்க இப்டி இருக்கணும்னு நெனைச்சு இப்டி இருந்திட்டிருக்கோம். வி லைக் டு பி….என்ன சொல்றது? நாக்டிரனல்னா தமிழிலே என்ன?” ”இரவுலாவி” என்றேன். ”குட்..தமிழிலே எல்லாத்துக்கும் வார்த்தை இருக்கு கமலம்…ஸீ..மலையாளத்திலே நமக்கு எதுக்கும் நல்ல வார்த்தை கிடையாது. ஒண்ணு அப்டியே இங்கிலிஷ். இல்லாட்டி அசிங்கமா சம்ஸ்கிருதம். என்ன அது,  நிஸாசஞ்சாரி. மை ·பூட்”

”பகலிலே வெளியே வரவே மாட்டீங்களா?” என்றேன். அவர் சிரித்துக்கொண்டு ”சொன்னேனே? சூரியவெளிச்சத்தைப் பாத்து பன்னிரண்டுவருஷமும் ஏழுமாசமும் ஆகுது…” நான் நம்பமுடியாமல் மனதை பல தருணங்களை நோக்கி கொண்டுசென்றேன். ”இல்ல, பகலிலே எங்கியாம் போகணும்னா?” ”போறதில்லை…வி ஹெவ் ·ப்ரண்ட்ஸ்..” நான் அவரையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்

கமலா நல்ல ·பில்டர் காபி கொண்டுவந்தார். ”·பில்டர் கா·பி” என்றார் சிரித்தபடி ”பிகாஸ் யு ஆர் எ டமிலியன்” ”தாங்க்ஸ்” என்றேன். காபி மிகக்கச்சிதமாக இருந்தது. ”பர்·பக்ட்” என்றேன். ”தேங்க்யூ” என்றார். சிறுவயதில் கமலா பார்ப்பவர் மூச்சை நிறுத்தும் பேரழகியாக இருந்திருக்க வேண்டும்.

”யூ ஆர் ரைட்” என்றார் மேனன் ”சின்ன வயசிலே இவ ரோட்டிலே இறங்கினா டிரா·பிக் ஜாம் ஆயிடும்..ஷி வாஸ் சச் எ கிரேட் பியூட்டி” நான் அவர் என் மனதை வாசித்த விதத்தை எண்ணி வியக்க, கமலம் ”ஓ…டோண்ட்” என்று அவரை மெல்ல அடித்தார்

”ஏன் பகலிலே போறதில்லை?” என்றேன். ”ஏன்னா ராத்திரியிலேதான் மனுஷன் வாழணும்…” என்றார் மேனோன் ”மனுஷன் அதுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கான்…நீ காட்டிலே பாத்திருக்கியா? எல்லா மிருகங்களும் ராத்திரியிலேதான் வெளியே வரும். ஆனை சிம்ஹம் மான்  பன்னி எலி எல்லாமே… பகலிலே வரக்கூடிய பெரிய பிராணின்னு எதுவுமே கிடையாது… காட்டுக்குள்ளே போயிருக்கியா?”

”இல்லை” என்றேன். வசீகரமான பேச்சு. பேசுபவர் பேச்சில் ஆழ்ந்த உறுதியுடன் அதை முழுக்க முழுக்க நம்பி பேசினால் நம்மால் அச்சொற்களில் இருந்து கவனத்தை விலக்க முடிவதில்லை. ”காடு முழுக்க பகலிலே தூங்கிட்டிருக்கும் தெரியுமா, சூரியன் அணைஞ்சதும்தான் காடு கண்முழிக்கும். நூத்துக்கணக்கான மிருகங்கள், ஆயிரக்கணக்கான சின்ன ஜீவராசிகள் கிளம்பிரும். இரைதேடுறது, வேட்டையாடுறது, இணைசேருறது என்னாலே ராத்திரியிலேதான்… .ஆதிமனுஷன் காட்டிலே இயல்பா இருந்தப்ப கண்டிப்பா ராத்திரியிலே வேட்டைக்குப் போகிற ஜீவராசியாத்தான் இருந்திருப்பான். பகலிலே அவன் வாழ ஆரம்பிச்சது நாகரீகத்தை உண்டுபண்ணிக்கிட்டபிறகுதான்”

எனக்கு அந்தப்பேச்சு வினோதமாக இருந்தது. அவர் என் கண்கள் வழியாக நான் எண்ணுவதை துல்லியமாக பின் தொடர்ந்தார் ”நம்ப முடியாதபடி இருக்கு இல்லையா? அப்டிதான் இருக்கும். ஏன்னா நாம இந்த நாகரீகத்தை உண்டுபண்ணி எப்டியும் முப்பதாயிரம் வருஷம் ஆகியிருக்கும். எத்தனை ஜெனரேஷன். நம்ம உடம்பு மனசு சிந்தனை எல்லாமே அதுக்கேத்தமாதிரி அடாப்ட் ஆகியிருக்கு. இன்னொரு மாதிரி சிந்திக்கவே நம்மாலே முடியறதில்லை… ஆனால் சிந்திச்சுப்பார்த்தா இது உண்மைன்னு தெரியும்”

நான் தலையசைத்தேன். ”இப்டி யோசிச்சுப்பார், இந்த நாகரீகம் பண்பாடு இன்றைக்குள்ள வாழ்க்கை எல்லாத்தையும் ஒரு நகரம்னு வைச்சுக்கோ. நகரத்தை சுத்தி இருக்கிற காடு அதோட மறுபக்கம். நகரத்துக்கு பகலிலே வாழ்க்கை, காட்டுக்கு ராத்திரியிலே வாழ்க்கை. இது வெளுப்புன்னா அது கறுப்பு. இதோட மறுபக்கம் அது…” அவர் இன்னொரு சிகரெட் பற்றவைத்தார். ”உனக்கு இங்க உள்ள இயந்திரங்கள், கார்கள், அழுக்கு ,புகை, சத்தம், தூசு, நெரிசல் ,குப்பைக்கூளம் ,நாத்தம் எல்லாம் வேணும்னா நீ பகலை தேர்ந்தெடுக்கணும். அதுக்கெல்லாம் மறுபக்கம் வேணும்னா ராத்திரியத்தான் தேர்ந்தெடுக்கணும். நானும் இவளும் ராத்திரியே போதும்னு முடிவுகட்டினோம்…”

”ஆண்ட் தாட் இஸ் வை வி ஆர் எக்ஸ்டிரீம்லி ஹாப்பி” என்று அவர் சொன்னார். புகையை ஆழ இழுத்து மெல்ல விட்டபடி ”மத்த எல்லாத்தையும் விடு. ராத்திரி எவ்ளவு அழகா இருக்கு பார். இந்த தீபங்களோட தங்க நிறமான வெளிச்சம். கறுப்புப்பட்டிலே தங்க சரிகையாலே ஓவியங்களா செஞ்சு வச்சதுமாதிரி இருக்கு எல்லாமே… என்ன ஒரு அழகு.. ராத்திரிக்குக் கண் பழகிட்டா நீ புத்தம் புதிசான ஒரு உலகத்தைப் பாக்க ஆரம்பிச்சிருவே. அற்புதமான உலகம், மகத்தான உலகம்…”

நிறங்களற்றது என நான் நினைத்ததுமே அவர் சொன்னார் ”நிறங்கள் உண்டு…ஆனா அதெல்லாம் நீ பகல்வெளிச்சத்திலே பார்க்கிற ஆபாசமான நெறங்கள் இல்லை. மென்மையான அடக்கமான அழகுள்ள நிறங்கள். இந்த விளக்கைப்பார்…”என்று குத்துவிளக்கைக் காட்டினார். ”என்ன ஒரு நிறம் இல்லியா? வெண்கலம் அற்புதமான உலோகம். ஒரு பதினெட்டுவயசு அழகியோட தொடை மாதிரி பளபளப்பா…மெருகோட”

”விஜய்!” என்றார் கமலம், முகம் சிவக்க. அவர் சிரித்தபடி ”ஓகே ஓகே…ஸீ இதை காலைவெளிச்சத்திலே பார்த்தால் எப்டி இருக்கும் தெரியுமா? வெளிறி கோடும் கறையுமா….அருவருப்பால இன்னொரு தடவை இதை நீ பாக்கமாட்டே…என் வாழ்க்கையிலே எப்பவுமே நான் நினைச்சுக்கிடறது இதுதான், ஐம்பத்தாறு வருஷம் நான் வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டேன். அசிங்கமான ஆபாசமான ஒரு உலகத்திலே வாழ்ந்திட்டேன்…”அவர் உடலை உலுக்கி தலையை அசைத்தார்.

”எப்டி ஆரம்பிச்சீங்க?”என்றேன். ” அது ஒரு கதை…ஒரு தடவை பரம்பிக்குளம் காட்டுக்குள்ளே மரத்துமேலே கட்டின ஒரு பரணிலே ராத்திரி தங்கியிருந்தோம் நானும் இவளும். யானைக்கூட்டம் பக்கத்து குட்டையிலே தண்ணிகுடிக்க வரும்னு சொன்னாங்க. அதுக்காக ராத்திரி முழுக்க கண்விழிச்சு பாத்திட்டிருந்தோம். அது சித்திரைமாசம். வானத்திலே  அருமையான நிலா. அதைச்சுத்தி கண்ணாடிமேகங்கள். நிலாவெளிச்சத்திலே காடே தகதகன்னு இருந்தது. எப்டிச் சொல்றது…ஸீ, ஒரு பெரிய வெள்ளை மஸ்லீன் திரையிலே நிழல்களை ஆடவிட்டமாதிரி… இல்லை  இருட்டுலே ஒரு ப்ளூஜாகர் வைரக்கல்லிலே கண்ணை வைச்சு உள்ளே பார்த்தது மாதிரி…பார்த்திருக்கியா?”

”இல்லை” என்றேன். ”அமேஸிங்…அப்டி ஒரு மிதமான ஜொலிப்பு… வைரம் ஒரு கல் மட்டுமில்லை. ஒரு வைரக்கல் ஆயிரம் அறை உள்ள ஒரு அடுக்குமாடி பங்களா மாதிரி. கண்ணாடிப்பங்களா. அதுக்குள்ளே அறைகள் தோறும் மென்மையா விளக்கு போட்டா எப்டி இருக்கும்…ஆனா காட்டுக்குள்ளே நிலா நுழையறது இன்னும் அற்புதம்… அப்ப நான் முதல்முறையா ஒரு மரநாயை பார்த்தேன். எங்க பங்களா முன்னாடி நின்ன மரத்திலே இருந்து இறங்கி வந்து என்னைப்பார்த்தது.. கண்ணு ரெண்டும் ரெண்டு சின்ன மரகதக்கல் மாதிரி பச்சையா ஜொலிச்சுது… நான் அப்டியே பேச்சிழந்து போயிட்டேன். என்ன ஒரு உயிர்… அது மேலேறிப்போச்சு. மரக்கிளை நுனியிலே போய் உட்கார்ந்தப்ப அதோட உடலிலே ஒவ்வொரு முடியும் வெள்ளிசரிகை மாதிரி ஜொலிக்க ஆரம்பிச்சுது….மைகாட்! மைகாட்! பெட்டென்னு அது தாவி நிலாவெளிச்சத்திலே ஒரு க்ஷணம் அப்டியே நீந்தி பக்கத்து மரத்துக் கிளையிலே போய் உக்காந்தது. எனக்கு உடம்பு தூக்கித்தூக்கி போட்டுது. அது விட்டுட்டு போன கிளையாகவும் அது போய் உக்காந்த கிளையாகவும் என் மனசு ஆடிட்டிருந்தது…நான் அப்டியே மயக்கம்போட்டுட்டேன்…”

அவர் முகம் முழுக்க அந்தக் கனவைக் கண்டேன். கமலம் அந்தக் கனவை பகிர்ந்துகொள்பவள்போல அவர் தோளை மெல்லத் தொண்டிருதாள். ” அஞ்சு நிமிஷம் கழிச்சு முழிச்சுகிட்டு அழுதிட்டே இருந்தேன். இவளும் அழுறாள்… கண்விழிக்க முடியாத ஒரு கனவு மாதிரி அந்த ராத்திரி போய்ட்டே இருந்தது. எவ்ளவு ஜீவராசிகள். ஆந்தைகள் பெருச்சாளிகள் காட்டுபன்னிகள் ஒரு காட்டுபூனை…அப்றம் யானை… யானையோட இருட்டு… இருட்டு யானையாகி வந்து நம்ம முன்னாடி நின்னு காதும்தலையும் ஆட்டிட்டு  திருப்பி இருட்டா ஆகிற பயங்கரமான அழகு..  கடைசியா அதிகாலையிலே ஒரு சிறுத்தை… கொன்னைப் பூக்குவியலிலே செஞ்ச உடம்பு. அது அப்டி, மென்மையா, கைக்குழந்தை மாதிரி, காலெடுத்து வைச்சு வந்தது. கடவுள் பக்தன் மனசுக்குள்ளே அப்டித்தான் வருவார்னு நினைக்கிறேன்… அது குட்டையிலே தண்ணீர் குடிச்சு எழுந்து திரும்பிப்பார்க்கிறப்ப அதன் மீசைமுடிகளிலே தண்ணித்துளி நின்று ஜொலிச்சு நடுங்கிச்சு….தட் வாஸ் எ பிளஸ்ட் நைட்… எ ஹெவென்லி நைட்…”

பெருமூச்சுடன் மெல்ல உடலை இலகுவாக்கி பின்னால் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டார். ”திரும்புறப்ப நான்  எங்க கூட இருந்த கரும்பன்ங்கிற ஆதிவாசிகிட்டே கேட்டேன், பின்னிரவிலே வெளிச்சம் ஜாஸ்தியா ஆகுதான்னு…’இல்லை சாமி, காட்டுக்குள்ள பாக்கப்பாக்க நம்ம கண்ணோட வெளிச்சம் ஜாஸ்தியா ஆகும்’னு சொன்னான். என் இதயத்திலே ஒரு வாளை பாய்ச்சினது மாதிரி இருந்தது அது. அப்டீன்னா என் கண்ணுக்குள்ள இருட்டா இருந்தது? பகலிலே நம்ம கண்கள் முழுக்குருடாகவா இருக்கு? திரும்பி வர்ர வழி முழுக்க அதைப்பத்தியே நெனைச்சிட்டிருந்தேன். கண்ணுக்குள்ளே இருக்கு வெளிச்சம். வெளியே வெளிச்சமிருக்குன்னு நினைக்கிறது மாதிரி முட்டாள்தனம் ஒண்ணுமே இல்லை. டூ யூ நோ, இந்த அத்தனை விளக்கையும் அணைச்சாலும் எங்களுக்கு துல்லியமா கண் தெரியும்….ஒரு அழகுக்காகத்தான் இதை வச்சிருக்கோம். சாதாரணமா நாங்க ரெண்டுபேரும் மட்டும் இருந்தா விளக்கே இல்லாமல் இருப்போம்… இவ சமையல் செய்வா. நான் பியானோ வாசிப்பேன்..”

”அப்றம்?” என்றேன். ”அந்த ராத்திரிக்குப்பின்னாடி எங்களுக்கு ராத்திரி மேலே பெரிய மோகம் வந்திட்டுது. தினமும் ராத்திரி எந்திர்ச்சு மொட்டை மாடியிலே போய் உக்காந்திருப்போம். அப்றம் ராத்திரிகளிலே வெளியே வாக்கிங் போக ஆரம்பிச்சோம். கொஞ்சம் கொஞ்சமா ராத்திரிக்கு கண்பழகிப்போய் பகலிலே எதையுமே பாக்க முடியல்லை. ஒருநாள் அதிகாலையிலே நான் இவளை எழுப்பி சொன்னேன். எதுக்காக இந்த அசிங்கமான பகலிலே நாம் வாழணும், நமக்கு அழகான ராத்திரிகள் இருக்கேன்னு சொன்னேன். நல்லா ஞாபகமிருக்கு அது ஒரு மே மாசம் –”

”மே எட்டு, திங்ககிழமை..”என்றார் கமலா. ”…எஸ்…அன்னைக்கு முடிவெடுத்தோம்….அதுக்குப்பிறகு இதோ இப்பவரை இப்டியேதான் இருக்கோம்”

நான் மெல்ல ”அதனாலே உடம்புக்கு…” என்றேன் ”ஒண்ணுமே ஆகலை. சொல்லப்போனா எங்களுக்கு பலவிதமான பிரச்சினைகள் இருந்திச்சு. எனக்கு பிரஷர் இருந்தது. இவளுக்கு ஹைப்பர் டிப்ரஷன். ஒருநாளைக்கு நான் எட்டு மாத்திரை சாப்பிடணு. இவ ஆறு… இப்ப எதுவுமே இல்லை.வீ ஆர் பர்·பக்ட்லி ஹேப்பி…இப்ப எங்க வாழ்க்கையிலே அழகுக்கும் சந்தோஷத்துக்கும் மட்டும்தான் இடம்..”

நான் ”வைட்டமின் டி..” என்றேன். ”ஓ கமான்…புல்ஷிட். மனுஷனுக்கு ரொம்பக் கொஞ்சம் வைட்டமின் டி போரும்… அதிகாலையிலே உள்ள வெளிச்சமே அதைக் குடுத்திடும். வெயிலிலே சுத்தணும்ணு இல்லை… ” என்றார் மேனோன்.

உள்ளிருந்து குள்ளமான ஒருவர் வந்தார், ”சேச்சி சாய உண்டோ?” என்றார். ”இரிக்கெடா” என்றபடி கமலா உள்ளே போனார். அவர் விளக்கருகே வந்தபோது பார்த்தேன். ஒருகண் சிவந்து ஒரு வடு போல இருந்தது. ”இது மஜீத்.” என்றார் மேனோன். ”டெய்லர். ஒரு ஆக்ஸிடெண்டிலே கண்ணிலே அடிபட்டிட்டுது.. வெளிச்சத்தை பாக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே நாலுவருஷம் இருந்தான். நான் கொடுத்த விளம்பரத்தைப்பார்த்துட்டு லெட்டர் போட்டான்.” ”விளம்பரமா?” என்றேன். ”ஆமா, நாங்க இப்ப ஒரு கம்யூனிட்டி.. எண்பத்திமூணுபேர் இருக்கோம்…” ஆச்சரியமாக மஜீதை பார்த்தேன். அவர் மெல்ல புன்னகை செய்தார்.

”இவரும் பகலிலே போகமாட்டாரா?” மஜீத் சிரித்தபடி ”பகலு கண்டு பத்து வர்ஷம் கழிஞ்ஞு” என்றார். நான் ஆச்சரியமாக பார்த்தேன். ”என்னுடெ ஜீவிதத்தில் ஞான் சந்தோஷமாய் இரிக்குந்நது ஈ பத்து வர்ஷமாயிட்டாணு” என்றார் மஜீத்.

மேனோன் ”மஜீத் நல்லா தைப்பான். அவுல் டெய்லர்ஸ்னு ஒரு கடை நடத்துறான். வசதியா இருக்கான்” நான் அவரைப்பார்க்க மேனோன் ”இவனை ஊரிலே ஆந்தைன்னு சொல்ல ஆரம்பிச்சங்க. நான் சொன்னேன், டேய் மக்கு மாப்புளே ஆந்தைன்னா அதிலே என்ன கேவலம்? அது எவ்ளவு வீரமான பறவை. என்ன ஒரு கம்பீரமான பறவை…நீ ஆந்தைதான்..அந்தப்பேரிலேயே கடையை வைன்னேன்..வீட்டிலேயே போர்டை மாட்டி உக்காந்தான். ஒருநாளுக்கு நாலு பாண்ட் தைப்பான்…மத்தகடையிலே இருநூறு ருபா கூலின்னா இவன் கடையிலே முந்நூறு…”

நான் மஜீதிடம் ”ஏன்” என்றேன். ”நம்முடே கைக்கணக்கு மற்றவன்மாருக்கு வருகில்ல சாரே”என்றார் மஜீத். ”தினமும் கூடுவீங்களா?” என்றேன். ”அப்டி ஒரு கணக்கு இல்லை. மாறி மாறி சந்திச்சுக்குவோம்….எங்களுக்கும் ஒரு சமூகம் வேணுமே…பேசிக்கிடறதுக்கு சிரிக்கிறதுக்கு விஷயங்கள் இருக்கே…”

நான் மஜீதிடம் ”பாட்டு படிச்சீங்களா?” என்றேன். மஜீத் வெட்கத்தில் முகம் சிவக்க ”படிச்சிட்டில்ல…”என்றார். ”மஜீத் கோழிக்கோடு அப்துல்காதருடைய சிஷ்யன்..கேட்டு படிச்ச சிஷ்யன்…நல்லா பாடுவான்..பாடு மஜீதே”

கமலம் டீ கொண்டுவந்து கொடுத்தார். மஜீத் அதை குடித்துவிட்டு போய் ஆர்மோனியத்தை எடுத்துவந்தார். அதை முன்னால் வைத்து குனிந்து கட்டைகளைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் பேசாமலிருந்தார். கைகள் கட்டைகளில் ஓட ஆர்மோனியம் இனிமையாக முனகிக்கொண்டது. பின்னர் அது ரீங்கரித்தது. மெல்ல கனத்த குரலில் ”ஆஆஆ” என்று ஓர் ஆலாபனையை ஆரம்பித்தார். கஜல் பாடல் போலிருந்தது. கூடவே ஆர்மோனியம் சென்றது. இரு பட்டாம்பூச்சிகள் பறப்பதுபோல ஆர்மோனியமும் குரலும் முத்தமிட்டு முத்தமிட்டு படபடத்தன. ”ரசூலே நீ என்னை அறியும்….என் ஹ்ருதயத்தின் நோவறியும்…”

இரவு சங்கீதத்துக்கு இத்தனை அழுத்தத்தைக்கூட்டும் என நான் அறிந்திருக்கவேயில்லை. இந்த அமைதியில், இந்த இளங்குளிரில், இந்த கண் குளிரும் செவ்வொளியில், கேட்கும்  எந்த ஒலியும் சங்கீதமாகும்போலும். மனம் இரவில் நெகிழ்ந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் சதிகளையும் துரோகங்களையும்  உதறிவிட்டு வேறெங்கோ வந்து அமர்ந்திருக்கிறது. உடல் இனிய களைப்பால் இறுக்கத்தை இழக்க பிரக்ஞை மெல்லிய வீணைநரம்பாக ஆகிவிட்டிருக்கிறது. காற்று தொட்டாலே அதிர ஆரம்பிக்கிறது அது. என் உடல் மெலிதாக நடுங்கிக்கொண்டே இருந்தது. மனம் உருகி உருகி துயரமே இல்லாத தூய சோகம் என்னை ஆட்கொண்டு அழக்கூடாது அழக்கூடாது என என் போதம் தடுக்கத்தடுக்க நான் கண்ணீர் விட ஆரம்பித்தேன்.

அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. மஜீத் பாடி நிறுத்திய இடைவெளியை ஆர்மோனியம் நிரப்பி ஊர்ந்து வேறு மெட்டுக்குச் செல்ல மீண்டும் பாடல் ‘மறந்து போயோ மைமுனே, ஞான் தந்நொரா செம்பனிநீர் மொட்டினே?” . நான் தந்த ரோஜாவை மறாந்துவிட்டாயா மைமுனா? அந்த சிவந்த ரோஜாமொட்டு என்னுடைய இதயம். அதில் காதலின் தேனையல்லவா நிரப்பி உனக்கு தந்தேன். உன்னுடைய கைகளை முகர்ந்துபார், அந்த ரோஜாவின் நறுமணம் வீசும். மைமுனா அது என் குருதியின் வாசனை அல்லவா?.

அணைக்கட்டுகளின் சுவர்களில் கையை வைத்தால் அப்பால் தேங்கியிருக்கும் பிரம்மாண்டமான நீர்வெளியின் எடையை கைகளில் உணர முடியும் என்று தோன்றும். இரவின் இருள் ஒரு பெரும் சுவராக அதற்கப்பால் உள்ள பிரம்மாண்டம் ஒன்றின் அதிர்வு ததும்பியதாக தோன்றியது.

[மேலும்]