இரவு 2

எல்லையற்ற தூரிகையொன்றின் நுனியில்

சொட்டி நிற்கும் கரும்சாயம்

இந்த இரவு.

எழுதப்படாதது…

 

காலையில் நான் கண் விழித்தபோது அறை முழுக்க வெளிச்சமாக இருந்தது. சாய்வாக ஒளி வந்து எதிர்ச்சுவரில் விழுந்திருந்தது. அறையின் கூரையில் நீர்ப்பரப்பு போல ஒளி தளதளத்தது. பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு கீழே வந்தேன். கீழே முகப்புக்கதவு திறந்து கிடந்தது. சமையலறையில் பாத்திரங்களின் ஒலிகள் கேட்டன.

அரையிருட்டு பரவிய இரு அறைகள் வழியாக பின்கட்டுக்குச் சென்றேன். சமையலறையில் புதிதாக டைல்ஸ் ஒட்டி  அடுப்புமேடை செய்யப்பட்டிருந்தது. ஸ்டீல்பளபளக்கும் கேஸ் அடுப்பு மீது இரு பாத்திரங்கள் இருந்தன. கொல்லைப்பக்கத்தில் இருந்து ஒரு உற்சாகமான மலையாளப்பெண்மணி வந்தாள். ஐம்பது வயதிருக்கும். வேட்டிகட்டி மேலே புள்ளிகள் கொண்ட சிவப்புநிற ஜாக்கெட் போட்டு ஒரு துண்டை முந்தானையாகப் போட்டிருந்தாள். ”நமஸ்காரம் சார். ஞான் பங்கஜமாக்கும்” என்று அழகான பல்வரிசையைக் காட்டி சிரித்துக்கொண்டு சொன்னாள். ”சாயா எடுக்கட்டுமா”

”தமிழு பேசுமா?” என்றேன். ”நான் மத்ராஸிலே ஆறு வருஷம் நிந்நேன் சார்” என்றாள். சரிதான், ஆறுவருடம் இங்கே இருந்தால் நான் மலையாளத்தில் மரபுக்கவிதை எழுதுவேன். ”பால் இருக்கா?” என்றேன். ”நான் கொண்டு வந்தேன் சார்…” ”நாயர் எங்கே?” ”உண்ணிசார் போயி…இனிமேல் சாயங்காலம் வரும்” ”டீயை நல்லா நிறைய பால் சேத்து கடுப்பமா போடணும்” என்றேன். ”தெரியும் சார் . நான் தமிழ் டீயும் போடும்”

கூடத்துக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தேன். ஹிண்டு வந்திருந்தது. பங்கஜமே கொண்டு வந்திருப்பாள் போல. அதை எடுத்து மேலோட்டமாக புரட்டினேன். அதற்குள் அவள் பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய டீ கொண்டுவந்தாள். பரவாயில்லை. ”இவ்ளவு வேண்டாம். இதிலே பாதிபோரும்” என்றேன்.

டீயுடன் முற்றத்துக்கு சென்றேன். செம்மண் முற்றம் மழை பெய்து மண் கரைந்து சரல்கற்களால் ஆனதாக இருந்தது. சமீபத்தில் புல்செதுக்கப்பட்டிருந்தது. முற்றத்தின் சதுர விளிம்புக்கு அப்பால் பசும்புல் செழிப்பாக , மழைக்காலப் பளபளப்புடன் அடர்ந்திருந்தது. தென்னை ஓலைகள் வெயிலில் பளபளத்து ஆடின. தோப்புக்குள் நிறைய மட்டைகளும் ஓலைகளும் விழுந்து அப்படியே காய்ந்து கிடந்தன. தேங்காய்கள் கூட கிடந்தன. அங்கே யாரும் இவற்றை பொறுக்குவதில்லை போலும்

தோட்டத்துக்கு அப்பால் அந்த வீடு தெரிந்தது. என் வீட்டைப்போலவே உயரமான ஓட்டு வீடு. நடுவே சரிந்த கூரை கொண்ட கூடம். இருபக்கமும் இரு மாடியறைகள். பெரிய முற்றம். தொழுவம் போல ஒரு சார்ப்பு. வீட்டுக்கதவு மூடியிருந்தது. யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.

நான் வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றபோது சட்டென்று கண்ணுக்குள் ஒளி வந்து கொட்டியது போல காயலைப் பார்த்தேன். அத்தனை அருகே காயலிருக்கக்கூடும் என நான் எண்ணவே இல்லை. என் வீடிருந்த தோப்பு அப்படியே சென்று காயலை அடைந்தது. காயல் விளிம்பில் கல்லால் ஆன மதில் கட்டி படி இறக்கியிருந்தார்கள்.

காயலை நோக்கிச் சென்றேன். என் படுக்கையறையில் இருந்தால் காயலை நன்றாகவே பார்க்க முடியும்போலும். காலையில் கூரையில் பளபளத்த ஒளி காயலின் நீரலை வெளிச்சம்தான். ஒற்றையடிப்பாதை காயலை நோக்கிச் சென்றது. மதில் அருகே சென்றபோது காயலின் நீர்வெளி பிரமிப்பூட்டும்படியாக பரந்து கிடப்பதைக் கண்டேன். மழைக்காலமாகையால் நீர் நீலமாக இல்லாமல் கொஞ்சம் மஞ்சள் கலந்து இருந்தது. அலைகள் தளக் தளக் என்று மதிலின் கீழ்விளிம்பில் மோதின.

மழையரித்த சிமிட்டிப்பரப்பு சொரசொரவென்றிருந்தது. மெத்தென்று வெல்வெட் பாசி படிந்த கல்படிகள் காயலை நோக்கி இறங்கிச்சென்று நீரில் மூழ்கி இளம்பச்சை நிறமாக நீருக்குள் தெரிந்து மறைந்தன. நீர்வெளி முழுக்க கனத்த நீர்ப்பாசிகளின் குமிழ்கள் மிதந்து காற்றில் அலைபாய்ந்தன. ஒருபக்கமாக  அவற்றை காற்று அள்ளிச்சென்றபோது ஒரு கணம் அது ஒரு மாபெரும் நதி என்று பிரமை எழுந்தது. ஆனால் உடனேயே அவை சுழன்று திரும்பி வந்தன.

மதில் மேல் அமர்ந்துகொண்டேன். நல்ல குளிரான காற்று நீர்மீதிருந்து வந்தது. அதில் பச்சைப்பாசியின் வாசனை. நீர்பரப்பில் ஒரு பெரிய கூண்டுப்படகு மாபெரும் திமிங்கலம் போல நிதானமாகச் சென்றது. படகோட்டி பெரிய மூங்கிலால் படகை உந்தி நகர்த்திக்கொண்டிருந்தான். அந்தக் கூண்டுக்குள் கயிறுக்கான தேங்காய்நார்பொதிகள் நிறைந்திருந்தன. படகு கொஞ்ச தூரம் போனபின் நகர்வதாக தோன்றவில்லை, சிறிதாகியபடியே இருந்தது. பின்பு இந்தப்பக்கம் இன்னொரு படகு வந்தது.

காயலின் மறுபக்கம் தெரியவில்லை. என் அறையில் நின்றால் ஒருவேளை தெரியக்கூடும். ஒருபெரிய மோட்டார் படகு எதிர் திசையில் அலைகளை எழுப்பியபடிச் சென்றது. அது முழுக்க ஆட்கள். நீரில்செல்லும் டவுன்பஸ். அலைகள் வந்து என் மதில்சுவர் மேல் அறைந்தன. நீர்பாசிகள் எழுந்து எழுந்து வளைந்து  வளைந்து அமைந்தன. படகுக்கு மேலே ஒரு காகம் தாழ்வாகப் பறந்து என் மேல் தென்னைஓலையில் வந்தமர்ந்தது

”சாரே” என்றாள் பங்கஜம். வேட்டி நுனியை தூக்கி ஜாக்கெட்டில் செருகியபடி நின்று ”படியிலே எறங்க வேண்டாம். சறுக்கல் உண்டு” என்றாள். ”சரி”என்றேன். ”புட்டும் கடலைக்கறியும் வைக்கட்டா?” ”சரி” அவள் திரும்பிச்சென்றாள். என்ன அழகான சிரிப்பு என எண்ணிக்கொண்டேன்.

காயலில் குளிக்க முடியாது என்று தோன்றியது. குளிப்பதற்கு ஏதாவது இடமிருக்கிறதா என்று மாலை உண்ணிக்கிஷ்ணனிடம் கேட்டுப்பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். சோம்பலாக நாள் முழுக்க அமர்ந்திருப்பதற்கு ஏற்ற இடம். அங்கே ஒரு மேஜைநாற்காலியை கொண்டு வந்து போடச்சொல்லவேண்டும். தென்னைமர நிழலில் வெயிலே வரப்போவதில்லை. வேலைசெய்வதையும் அங்கேயே செய்துகொள்ளலாம்.

மீண்டும் பங்கஜம் வந்து ”சாரே புட்டு ரெடியாக்கும்” என்று சொல்லும் வரை நீரையே பார்த்துக்கொண்டு ஏதேதோ எண்ணங்களில் ஆழ்ந்திருந்தேன்.  உலகின் பலநாடுகளில் நான் கண்ட நீர்வெளிகள் என் நினைவு வழியாக கடந்து சென்றுகொண்டிருந்தன.  எழுந்து சோம்பல் முறித்தபடி திரும்பி வரும்போது மீண்டும் அந்த வீட்டைப்பார்த்தேன். வீடு மூடி ஆளரவமில்லாமல் கிடந்தது.

சம்பா அரிசிப் புட்டு தேங்காய் மணத்துடன் மென்மையாக இருந்தது. கடலைக்கறியும் உளுந்துப் பப்படமும்  வேக வைத்த நேந்திரம் பழங்களுமாக சுவையான காலையுணவு. அதைச் சாப்பிட்டபின் மதியம் எப்படிச் சாப்பிடுகிறார்கள் என எண்ணிக்கொண்டேன். ”பக்கத்துவீட்டிலே யாரு இருக்கா?” என்று பங்கஜத்திடம் கேட்டேன்.

”அங்கேயா?” என்று இழுத்தாள். ”அங்கே ஒரு டாக்டரும் பெஞ்சாதியுமாக்கும். நான் அவரை கண்டிட்டில்லை. சொல்லிக்கேட்டதுதான்….” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தமாதிரி ஒரு சூழல் இந்தியாவில் கேரளத்தில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு வீடும் தனித்தனியாக தோட்டங்களுக்குள் தென்னை மரக்கூட்டங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்தது. ஒரு வீட்டில் என்ன நடக்கிறதென்று பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியாது. அக்கறையும் இல்லை. தனித்தனியாக வாழும் ஒரு மக்கள்கூட்டம்தான் மலையாளிகள்.

சாப்பிட்டபின்னர் மூச்சு திணறுவது போலிருந்தது. மீண்டும் காயல்கரைக்கு வந்தேன். காயலின் விளிம்பாக இருந்த சிமிண்ட் மதிலை ஒட்டி காயலைப்பார்த்தபடியே நடந்தேன். காயலில் மேலும் அதிகமான படகுகள் சென்றன. ஒரு படகிலிருந்து ஏதோ மலையாளப்பாட்டு கரைந்து கரைந்து காற்றில் வந்தது.

அந்த வீட்டுக்கு அருகே வந்து விட்டேன். அருகே சென்று பார்த்தாலென்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. தயக்கம் இருந்தாலும் ஒரு அன்னியனுக்கே உரிய ஆர்வம் உந்தியது. அந்த வீட்டு முற்றத்துக்குச் சென்று நின்று பார்த்தேன். வீட்டின் எல்லா ஜன்னல்களும் எல்லா கதவுகளும் இறுக்கமாக பூட்டப்பட்டிருந்தன. முற்றம் செம்மண்ணில் சில டயர்த்தட வளைவுகளுடன் சுத்தமாக இருந்தது. வீட்டில் யாரும் அப்போது யாரும் இருப்பது போல தெரியவில்லை. ஆனால் மனிதர்கள் குடியிருக்கும் வீடுதான். காலி வீட்டை பார்த்தாலே தெரிந்துவிடும், அதில் ஒரு பாழ்தன்மை இருக்கும். மனிதர்குடியிருக்கும் வீட்டுக்கே உரிய சின்னச்சின்ன தடயங்கள் எங்குமிருந்தன. அவற்றை நம் ஆழ்மனம் பொறுக்கிக்கொள்கிறது.

வீட்டை மெதுவாகச் சுற்றி வந்தேன். பலவகையான உபயோகப்பொருட்கள் போடப்பட்ட சார்பு. ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. முழுக்க முழுக்க கறுப்புக்கண்ணாடி போடப்பட்ட சிறிய மாருதி ஆல்டோ. பின்பக்கம் சில கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு பெட்டைக்கோழி என்னை நிமிர்ந்து பார்த்து அலகு பிளந்து கவனித்தது. வீட்டின் எல்லா பக்கமும் எல்லா வாசல்களும் மூடப்பட்டிருந்தன. இரவில் வந்து தங்கிவிட்டு செல்கிறார்கள் போல

ஆனால் அங்கே என்னால் நிற்க முடியவில்லை. என்னுடைய அகம் ஏனோ பதைத்துக்கொண்டே இருந்தது. ஒருவகையான நிம்மதியின்மை. விரும்பத்தகாத ஏதோ நினைவுக்கு வந்தது போல. பிடிக்காத ஒன்றை எதிர்பார்ப்பது போல. மீண்டும் வீட்டு முகப்பை ஏறிட்டு பார்த்துவிட்டு திரும்பிவிட்டேன்.

எடுத்துவந்திருந்த ஜான் கிருஷாமின் நாவலை நூறு பக்கம் வாசித்தேன். பின்பு என் அறையின் பால்கனியில் அமர்ந்து காயலையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாளைமுதல் வேலையை ஆரம்பிக்க வேண்டும். வரும்போது வேறு செல்பேசி எடுத்து வந்தேன். மிக முக்கியமான எதையாவது சொல்ல வேண்டுமென்றால் மட்டும் கூப்பிடும்படி சரவணனிடம் சொல்லியிருந்தேன். நான் ஏழு வருடத்து கணக்குகளை பார்க்க வேண்டியிருந்தது. அவற்றில் இருந்து என்னுடைய அறிக்கையை நான் அளிக்க வேண்டும். சென்னையில் என் மூளையில் எண்களே பதியவில்லை.

சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் தூங்கினேன். கண்விழித்தபோது தென்னை ஓலைகளின் சிறகடிப்பொலி கேட்டது. மனம் நிம்மதியையும் தனிமையையும் மெல்லிய தன்னிரக்கம் கலந்த நிறைவையும் உணரும் தருணம். சோம்பலாக கட்டிலில் நெளிந்துகொண்டே இருந்தேன். பின்பு எழுந்து முகம் கழுவினேன். ஒரு பெரிய பிளாஸ்கில் டீ போட்டு வைத்துவிட்டு பங்கஜம் சென்றுவிட்டிருந்தாள். டீயை விட்டு குடித்தேன். வேலைசெய்ய மனநிலை வாய்த்தது போலிருந்தது

மடிக்கணினியை விரித்து வைத்துக்கொண்டு இணையத்தொடர்பு கொடுத்தேன். கடவு எண்ணை அளித்து உள்ளே நுழைந்து கணக்கு அறிக்கைகளை விரித்து பார்க்க ஆரம்பித்தேன். அறைக்குள் ஒளி மாறுபாடு அடைந்ததை யதேச்சையாக கவனித்தபோதுதான் அந்தியாகி விட்டிருந்ததை உணர்ந்தேன். என் வேலைக்கான ஒரு தொடக்கம் அமைந்துவிட்ட நிறைவு ஏற்பட்டது. கணினியை மூடிவிட்டு எழுந்து இன்னொரு டீ விட்டு கையில் எடுத்துக்கொண்டு காயல்கரை நோக்கிச் சென்றேன்.

தீப்பிழம்பு போல கிடந்தது காயல்வெளி. அப்பால் தூரத்தில் அந்திச்சூரியன்  விளிம்புகள் பற்றி எரிந்த மேகங்கள் நடுவே மெல்லப் புதைந்து கொண்டிருந்தது. காயல்மேல் காற்றே சிவப்புகலந்தது போல தெரிந்தது. பெரிய கூண்டுப்படகுகள் மூன்று வரிசையாக மெல்லச்சென்றன. அவற்றை உந்துபவர்களின் அசைவுக்கும் அவற்றுக்கும் தொடர்பில்லாதது போல. வெண்கொக்குகள் எதிர்திசையில் இருந்து சுழற்றி எறியப்பட்ட முல்லைமலர் சரம் போல நெளியும் அரைவட்டமாக பறந்து வந்து கடந்துசென்றன. மீண்டும் மீண்டும் அவை வந்துகொண்டே இருந்தன. ஒரு கொக்குராணுவத்தின் சிறிய படைப்பிரிவுகள் போல.

ஒரு கொக்கு கீழாகப் பறந்தபோது அது க்ரா என்றது. அண்ணாந்து பார்த்தேன். அது கொக்கு இல்லை, ஏதோ வாத்து. கழுத்தை நன்றாக நீட்டி கால்களை வயிற்றுடன் ஒட்டி வைத்து காற்றில் சறுக்கிச்சென்றது. தலைக்குமேல் தென்னையுச்சிகளில் காகங்கள்  அமர்ந்து பூசலிட்டு எழுந்து பறந்து மீண்டும் அமர்ந்துகொண்டிருந்தன.

எத்தனை ஆயிரம் பறவைகள் என்று நினைக்க ஆரம்பித்தேன். வானத்தை நிறைத்தபடி அவை சென்றுகொண்டே இருந்தன. எங்கே செல்கின்றன, எதை உண்கின்றன? வானத்தில் மேகங்கள் ஒவ்வொன்றாக ஒளியை இழந்து சாம்பல்குவியல்களாக மாறின. சிவப்புக் கண்ணாடித்துருவல்கள் போல கொஞ்சம் மேகப்பிசிறுகள் மட்டும் மேற்கே தெரிந்தன.

சட்டென்று என் மனதில் ஒரு அதிர்ச்சி. அந்த வீட்டுக்கதவுகள் உள்ளே இருந்துதான் தாழிடப்பட்டிருந்தன. ஆம் ,சந்தேகமே இல்லை. அந்த வீட்டுக்குள் யாரோ இருக்கிறார்கள். அந்த உணர்வுதான் என்னை பதற்றம் கொள்ளச்செய்தது!

[மேலும்]

முந்தைய கட்டுரைஏ.ஆர்.ரஹ்மான்
அடுத்த கட்டுரை'ஜாக்ரதை!'