வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் நாளை வெளியாகவிருக்கிறது. நான் வசனம் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசை. சித்தார்த் , பிருத்விராஜ், வேதிகா ,நாசர் நடித்திருக்கிறார்கள்.
1940- களில் நிகழும் கதை. தமிழகத்தில் கிட்டத்தட்ட மறையும் நிலையில் இருந்த நாடக சபாக்களின் பின்னணியில் இருநடிகர்களின் நட்பின் சித்திரம். நாடகங்கள் உச்சகட்ட உணர்ச்சிகளால் ஆனவை. அவற்றையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அவர்களும் இயல்பிலேயே உச்சகட்ட உணர்ச்சிகளையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அதை அக்கால நாடகக்கலைஞர்களின் சுயசரிதை வழியாகக் காணமுடிகிறது. காவியத்தலைவனின் கதைப்புலம் அதுவே.
அக்கால நாடகவாழ்க்கையும் அதைத் தொடர்ந்து வந்த சினிமாவின் ஆரம்பகாலத்தையும் அறிந்ததவர்கள் ஒருவேளை அவர்கள் யார் யார் என்று ஊகித்துவிடமுடியும் — ஊகிக்கமுடியாதபடி பல வகையிலும் மாற்றப்பட்டிருந்தாலும். இது நிஜம் நிழலாக ஆன கதை. உச்சகட்டம் மட்டும் உணர்ச்சிகரமான கற்பனை- வேறு வழியில்லை என்பதனால்.
இருவகை நடிப்புகளின் கதை என்று சொல்லலாம். தமிழ் சினிமா பற்றி பேசும் பலருக்கும் ஸ்டனிஸ்லாவ்ஸ்கி பாணியிலான யதார்த்த நடிப்புக்கு நாடகங்களிலும் அக்கால சினிமாவிலும் இடமிருக்கவில்லை, அவை பின்னர் உருவாகி வந்தவை என்ற எண்ணம் இருக்கிறது. எழுபதுகளின் இறுதியில் உருவான புதிய அலையின் ஆக்கமே யதார்த்த நடிப்பு என்று பலராலும் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் அது உண்மை அல்ல. மிகமிக யதார்த்தமாக நடித்த நடிகர்கள் அக்காலகட்டத்தில் இருந்தனர். பழைய படங்களில் பார்த்தால் பி.யூ.சின்னப்பா மிக யதார்த்தமாக, சற்றும் மிகையின்றி நடித்திருப்பதைக் காணலாம். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.கே. ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்களும் யதார்த்தமான நடிப்பையே அளித்திருக்கிறார்கள்.
முரசு டிவியில் வரும் 1950 களுக்கு முந்தைய படங்களில் யாரென்றே தெரியாத நாடகநடிகர்கள் மிக சகஜமாக நடித்திருப்பதைக் கவனிக்கலாம். அக்கால சபா நாடகங்களில் இருந்த மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு நடிப்புமுறை அது. அது பழைய பார்சி நாடகங்களில் இருந்து நம் மேடைக்கு வந்த முறை.
அதேசமயம் மிகை நடிப்பு அல்லது ஒயிலாக்க நடிப்பு அக்கால நாடக மேடையில் வலுவாகவே இருந்தது. அது தெருக்கூத்தில் இருந்து நாடக மேடைக்கு வந்தது. இவ்விருமுறைகளும் இணையாக, ஒன்றுடன் ஒன்று போட்டியிடுபவையாக இருந்தன.
இந்திய சுதந்திரப்போராட்டம், அதைத்தொடர்ந்த தமிழ் மறுமலர்ச்சி அலை போன்றவை உணர்ச்சிக்குவியலான மிகை நடிப்புக்குக் பொருத்தமான களம் அமைத்து மேலே கொண்டு சென்றன. மெல்லமெல்ல யதார்த்த நடிப்பு ரசிக்கப்படாமலாகியது.அதை ஒரு விரிவான பண்பாட்டுப் பின்னணியிலேயே ஆராயவேண்டும்.
இந்தப்பரிணாமத்தின் ஒரு சித்திரம் இந்தப்படத்தில் உள்ளது. உண்மை வரலாற்றின் மெல்லிய இழை. பலவாறாக உருமாற்றப்பட்டது. கூடவே உணர்வுபூர்வமான ஒரு கதை. நட்பின், காதலின் தருணங்கள்.