‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 1

குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக் கடந்து மறுபக்கம் விரிந்திருக்கும் காட்டுக்குள் சென்றுவிடவேண்டும். காலையொளியில் மலையுச்சிகளில் இருந்து நம்மை எவரும் பார்க்கமுடியும்” என்றான். “என் உடல் நீண்ட பயணத்தை தாங்குமெனத் தோன்றவில்லை தருமா” என்றாள் குந்தி.

பீமன் முன்னால் வந்து “நான் உங்களை தூக்கிக் கொள்கிறேன்” என்றான். குந்தி மெல்லிய குரலில் “வேண்டாம்” என்பதற்குள் அவன் அவளை இடைபற்றி தூக்கி தன் வலத்தோளில் அமரச்செய்து திடமாகக் காலெடுத்துவைத்து நடக்கத் தொடங்கினான். “இளையவர்களே, உங்களால் நடக்கமுடியாதபோது சொல்லுங்கள்… என்னால் உங்களையும் சுமக்க முடியும்” என்றான். அர்ஜுனன் “காட்டுக்குள் செல்லச்செல்ல மூத்தவரின் ஆற்றல் பெருகிப்பெருகி வரும்” என்றான். நகுலன் “அவருக்கு வால் முளைக்கும் என்று இவன் சொல்கிறான்” என்றான். சகதேவன் “நான் எங்கே சொன்னேன்? நீயே சொல்லிவிட்டு என் பெயரை சொல்கிறாயா?” என்றான்.

சரிந்துசென்ற நிலத்தில் அவர்களால் சற்று விரைவாகவே நடக்கமுடிந்தது. தருமன் “விடிவெள்ளி தெரிகிறது” என்றான். “முதல் கதிருக்கு முன் நாம் கங்கையை கடக்கமுடியும்” என்றான் பீமன். அர்ஜுனன் தன் சிறிய கத்தியால் நாணல்களை வெட்டி கூர்ப்படுத்தி அம்புகளாக்கி தோளில் போட்டுக்கொண்டான். விண்மீன்கள் மெல்ல இடம் மாறிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று கங்கையில் இருந்து எழுந்து வந்தது.

மூச்சிரைக்க இடையில் கையூன்றி தலையை அண்ணாந்து மேலே ஒளிவிட்ட துருவனை நோக்கி தருமன் சொன்னான் “அங்கே அனைத்தையும் பார்த்துக்கொண்டு சஞ்சலமே இல்லாமலிருக்கிறது. அதுதான் யோகம்.” அர்ஜுனன் “கங்கைக்குள் துருவன் வாழ்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு” என்றான். “அது ஆகாயகங்கை… விஷ்ணுபதி என்று அவளுக்குப் பெயர். விஷ்ணுவின் பாதங்களில் துளித்து வானை நிறைத்திருக்கும் பெரும்பெருக்கு” என்றான் தருமன்” “மண்ணிலுள்ள அனைத்தும் விண்ணின் பிரதிகளே. இந்த கங்கை வான்கங்கையின் நுண்வடிவம்”.

கங்கையை அடைந்தபோது பீமன் “நாம் ஒரு படகை செய்துகொள்ளவேண்டும்…” என்றான். “உலர்ந்த மரத்தடிகளை கொண்டுவருகிறேன். சேர்த்துக் கட்டி தெப்பமாக்குவோம். ஐவர் செல்ல அதுபோதும்.” தருமன் “ஆனால் அதற்குள் விடிந்துவிடும்” என்றான். அர்ஜுனன் தொலைவில் தெரிந்த சுடரை நோக்கி “எவரோ வருகிறார்கள்” என்றான். “செம்படவர்களாக இருக்கும்…” என்றான் பீமன். “இல்லை, அவன் தேடுகிறான்” என்றான் அர்ஜுனன்.

அவன் வில்லைக் குலைத்து நின்றிருக்க சுடர் அருகே வந்தது. குரல்கேட்கும் தொலைவில் நின்றபடி அந்தச் சுடருக்குரியவன் “குருதியை அறியாத மிருகமே மிகப்பெரிய ஊனுண்ணி” என்றான். தருமன் மெல்ல முன்னகர்ந்து “ யானைகள் அஞ்சுவதை வளையில் வாழும் எலிகள் அஞ்சுவதில்லை” என்றான். விளக்கை ஏந்தியிருந்தவன் “முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை” என்றான். பீமன் “வருக… நாங்கள் பாண்டவர்கள்” என்றான். அவன் நெருங்கி வந்து “கனகரால் அமர்த்தப்பட்டவன் நான். என்பெயர் பிடாரகன். மச்சர்குலத்தை சேர்ந்தவன். அரக்குமாளிகை எரியும் நாளில் நான் இங்கிருக்கவேண்டுமென கனகர் சொல்லிச்சென்றார். உங்களுக்கான படகு காத்திருக்கிறது” என்றான்.

உடனே அவன் விளக்கை அணைத்துவிட்டான். நிழலாக அருகே வந்தவனை நெருங்கிய பீமன் “படகு எங்குள்ளது?” என்றான். “படகுத்துறையில் ஒற்றர்கள் இருப்பார்கள். ஆகவே இங்கே புதர்களுக்குள் ஒரு படகை நிறுத்தியிருந்தேன்” என்றான் பிடாரகன். “இங்கே நாகங்கள் உண்டு. ஆற்றங்கரை நாணலில் வாழும் தவளைகளைப் பிடிக்க அவை வந்திருக்கும். கால்களால் தரையை ஓங்கி அறைந்தபடி வாருங்கள்” என்று சொல்லி முன்னால் சென்றான்.

கங்கை நீரின் கரிய ஒளி தெரியத்தொடங்கியது. அன்று மூன்றாம் பிறை. மேகங்கள் நிலவை முழுமையாகவே மூடியிருந்தன. பிடாரகன் புதருக்குள் இருந்து ஒரு கயிற்றை எடுத்து இழுக்க பெரிய மீன் போல படகு அருகே வந்தது. “ஏறிக்கொள்ளுங்கள்” என்றான். அவர்கள் ஏறிக்கொண்டதும் கழியால் படகை உந்தி பெருக்கில் ஏற்றி துடுப்பிடத் தொடங்கினான். நீரில் அதன் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

பீமன் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டு கைநீட்டி கையின் நீரை அள்ளி குந்தியின் கால்களை கழுவிவிடத் தொடங்கினான். நெடுந்தூரம் முழந்தாளிட்டதனால் மூட்டுகள் உராய்ந்து தோலுரிந்து போயிருந்தன. நீர் பட்டதும் குந்தி “ஸ்ஸ்” என்று சீறினாள். “கங்கை நீர் புண்களை ஆறச்செய்யும்” என்றான் பிடாரகன். “மறுபுறம் சென்றதும் அங்கே காட்டில் கூரிய முள் கொண்ட கனத்த இலைகளுடன் பொன்னிறக்குவளை போன்ற மலர்கள் விரிந்த செடி ஒன்று நிற்கும். மலர்க்குவைக்குள் செந்தூரப்பொட்டு போட்டதுபோல் புல்லிகொண்டது. பிரமம் என்று அதற்குப்பெயர். அதன் தண்டைக் கசக்கி சாற்றை காயங்கள் மேல் பிழியுங்கள். அனைத்து காயங்களுக்கும் நச்சுப்பூச்சிகளின் கடிக்கும் அது சிறந்த மருந்து.”

பீமன் “ஒவ்வொன்றையும் அடைந்து அறியவேண்டிய நிலையில் இருக்கிறோம் பிடாரகரே” என்றான். படகுக்குள் இருந்தபடி அவர்கள் தங்கள் உடல்களைக் கழுவி மண்படிந்த மேலாடைகளையும் துவைத்துக்கொண்டனர். மேலாடையை காற்றில் பறக்கவிட்டபோது நீர்த்துளிகள் தெறித்தன. காற்றில் விரைவிலேயே அவை காய்ந்துவிட்டன. “இளநீல மலரும் வெற்றிலை போன்ற இலையும் சிறிய காய்களும் கொண்ட சமுத்திரப்பச்சை என்ற கொடி உள்ளது. அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். முள்பட்டு உருவாகும் புண்களுக்கு அது சிறந்த மருந்து” என்றான் பிடாரகன். “மறுபக்கம் உள்ள காடு முட்களால் ஆனது. ஆகவே அங்கே எவருமே சென்று இறங்குவதில்லை.”

“அங்கே மானுடர் இல்லையா?” என்றாள் குந்தி. “உண்டு… அவர்கள் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். முட்களும் பாம்புகளும் நச்சுச்செடிகளும் அவர்களுக்கு நன்கு பழகியவை. பறக்கவும் காற்றில் மறையவும் அவர்கள் அறிவார்கள். அவர்களின் எல்லைக்குள் செல்லும் மனிதர்களை அவர்கள் கொன்று உண்கிறார்கள்” என்றான் பிடாரகன் “கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் கொண்டுவந்து கங்கை ஓரமாகவே வீசிவிட்டுச் செல்வார்கள். கரை முழுக்க எலும்புகள் சிதறிக்கிடப்பதை நீங்கள் காணலாம்.” குந்தி பீமனைப் பார்த்தாள். “உங்களை ஏன் மறுகரைக்குக் கொண்டுவிடும்படி எனக்கு ஆணை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பார்த்ததும் புரிந்தது” என்றான் பிடாரகன். “இவரே ஓர் அரக்கர் போலிருக்கிறார்.”

“அங்கே எவரும் எங்களை தேடமாட்டார்கள்” என்றான் தருமன். “ஆம்… ஒருவர் கங்கையைக் கடந்தார் என்றாலே நாங்கள் தேடுவதை விட்டுவிடுவோம்” என்றான் பிடாரகன். பீமன் சிரித்துக்கொண்டு “எவராலும் தேடப்படாது வாழ்வது ஒரு பெரிய வாய்ப்பு பிடாரகரே” என்றான். பிடாரகன் அச்சொற்களைப் புரிந்துகொள்ளாமல் சிரித்தான். மறுகரையின் இருண்ட காடு வானத்தின் மெல்லிருளின் பின்னணியில் தெரியத் தொடங்கியது. கண் தெளியத்தெளிய அது மரக்குவைகளாக இலைகளாக கரைமணலாக துல்லியம் கொண்டு வந்தது.

படகு கரையை நெருங்கியதும் நீரில் குதித்து நெஞ்சளவு நீரில் நின்று தள்ளி கரைசேர்த்தபின் பிடாரகன் “இறங்கலாம்” என்றான். பீமன் குந்தியைத் தூக்கி இறக்கிவிட்டு “இந்தக் காட்டின் பெயரென்ன?” என்றான். “இதுவா? இதற்கு இடும்பவனம் என்று பெயர். இங்குள்ள அரக்கர்களனைவரும் முன்பு அகத்தியரால் உருவாக்கப்பட்ட இடும்பன் என்ற அரக்கனின் வழிவந்தவர்கள் என்று புராணம் ச்சொல்கிறது.அவர்கள் மரமாகவும் பாறைகளாகவும் மாறும் கலை அறிந்தவர்கள்” என்றான் பிடாரகன். ”நெருமரமோ கற்பாறையோ ஆகத்தெரியாத மானுடர் உண்டா?” என்றான் பீமன். பிடாரகன் “நான் இங்கே நிற்க விரும்பவில்லை. எனக்கு கனகர் இட்ட ஆணையை நிறைவேற்றிவிட்டேன்” என்றபின் படகில் ஏறிக்கொண்டான். “அரக்கர்களை எவர் பாத்திருக்கிறார்கள்?’ என்றான் தருமன். “அதோ மண்டை ஓடுகளாகக் கிடப்பவர்கள்” அரக்கர்கள் என்றபின் அவன் படகைத்தள்ளி நீரோட்டத்தில் எழுந்தான்.

பீமன் “அவன் அச்சம் உண்மையானது” என்றபின் “முதலில் அவன் சொன்ன மூலிகையைக் கண்டடைந்து புண்கள் மேல் பூசிக்கொள்வோம். புண்களின் மேல் மண்பட்டிருப்பதனால் சீழ்கட்டக்கூடும்” என்றான். மரக்கிளை ஒன்றை உடைத்து அதை இலை கழித்து கோலாக்கி கையிலெடுத்து குந்தியை மீண்டும் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தான். “பார்த்தா நீ பிறரை நடுவே விட்டு பின்னால் வா. உன் அம்புகள் சித்தமாகவே இருக்கட்டும்.” என்றான் பீமன்.நகுலன் அச்சத்துடன் “பாம்பு!” என்றான். பீமன் “ஆம், அது மலைப்பாம்பு. அதனால் கவ்வமுடியாத இரையை அதன் கண்கள் அறியாது” என்றான்.

முட்கள் செறிந்த காட்டுக்குள் பீமன் தன் கனத்த கால்களால் புதர்களின் அடியில் மிதித்து தழையச்செய்து வழியை உருவாக்கி நடந்தான். பாறைகளை உதைத்து உருட்டி விட்டான். அவன் சென்ற வழி யானைவழியென ஆயிற்று. அவ்வழியே காலெடுத்துவைத்து பிறர் நடந்தனர். சற்றுநேரத்தில் காட்டின் இலையடர்வு அவர்களை முழுமையாக மூடிக்கொண்டது. காலைப்பனி இலைகளில் இருந்து சொட்டி இலைகளில் விழும் ஒலி அவர்களைச் சூழ்ந்திருந்தது.

தலைக்குமேல் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்த கருங்குரங்கு ஒன்று முழவை மீட்டுவது போல ஒலியெழுப்பியது. பீமன் அதே ஒலியை திருப்பி எழுப்பியதும் அது திகைத்தபின் மரக்கிளைகள் வழியாகத் தொங்கி இறங்கி வந்து அவனருகே கிளையில் அமர்ந்து தொடையைச் சொறிந்தபடி உதடுகளைக் கூப்பி நீட்டி கீழ்வாய் பற்களைக் காட்டி குடத்தை கையால் பொத்தி அடிக்கும் ஒலியை எழுப்பியது. அதன் ஒலியிலேயே பீமன் அதனுடன் பேசினான். “என்ன சொல்கிறது?” என்றான் தருமன் “இங்கே இரு பெரிய புலிகள் இருக்கின்றன. பெண்புலி குட்டிபோட்டிருக்கிறது என்கிறது” என்றான் பீமன். மீண்டும் அதனிடம் பேசிவிட்டு “அருகே வாழைத்தோட்டம் ஒன்று உள்ளது என்றும் அவன் துணைவர்கள் அதை காவல் காப்பதகாவும் சொல்கிறான்” என்றான்.

அக்குரங்கு அவர்களை கிளைகள் வழியாகத் தாவி இட்டுச்சென்றது. பீமன் குந்தியை ஒரு மரத்தடியில் அமரச்செய்தான். “இளையவனே, நீ இங்கேயே நில்… நான் சென்று கனிகள் சேர்த்துவருகிறேன்” என்றான். “ஒரு பார்வையுணர்வை அறிகிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். ‘நாம் இறங்கிய கணம் முதல் அது நம்மை தொடர்கிறது” தருமன் “இந்த மரங்களே அரக்கர்களாக இருக்கலாம்” என்றபின் சுற்றிநோக்கி “ஆம், மரங்கள் நம்மைப் பார்க்கின்றன, நான் தெளிவாகவே உணர்கிறேன்” என்றான். பீமன் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு குரங்கை பின் தொடர்ந்துசென்று கொடிகளைக்கொண்டு கட்டிய கூடை ஒன்றில் வாழைக்காய்களும் பழங்களும் கிழங்குகளும் சுமந்து திரும்பிவந்தான். கற்களை உரசி தீயெழுப்பி சருகுகளைப் பற்றவைத்து கிழங்குகளையும் அதில் சுடத்தொடங்கினான்.

அர்ஜுனன் “மூத்தவரே, தங்களுக்குரிய உணவை நான் தேடி வைத்திருக்கிறேன்” என்று புன்னகைத்துவிட்டு புதர்காட்டுக்குள் சென்று ஒரு கொழுத்த காட்டுப்பன்றி ஒன்றை இழுத்துவந்தான். அதன் கழுத்தின் இருநரம்புகளில் அவனுடைய அம்புகள் தைத்திருந்தன. “இதை எப்போது கொன்றாய்?” என்றான் தருமன். “சற்றுமுன்…” என்றான் அர்ஜுனன். “நீ வெறுமனே புதருக்குள் அம்புவிடுவதாக அல்லவா எண்ணினேன்!” என தருமன் வியந்தான். பீமன் அதைத் தூக்கி தோள்மேல் சரித்து “எடைமிக்கது… இன்று என் உணவு இதுமட்டுமே” என்றான்.

“அதை இங்கே சுடாதே… அப்பால் செல்” என்றான் தருமன். அர்ஜுனன் “எனக்கும் இளையோர் இருவருக்கும் முயல்களை கொன்றிருக்கிறேன் மூத்தவரே” என்றான். தருமன் “ஊன் உண்பவர்கள் இறைவனுக்கு எதிரான பிழை ஒன்றை செய்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் ஊனுண்ணாதவர்களுக்காக போர்க்களத்தில் குருதி சிந்தி அதை சமன்செய்கிறார்கள்” என்றான் பீமன் பன்றியை தோளில் தூக்கியபடி.

அவர்கள் உணவுண்டு முடித்ததும் குந்தி “சற்று உறங்க விழைகிறேன்… நான் விழி அயர்ந்து பலநாட்களாகின்றன” என்றாள். பீமன் அவளுக்கு இலைமெத்தை அமைத்தான். அவள் அதில் படுத்ததும் கைநீட்டி “இளையோரே, அருகே படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். நகுலன் ஐயத்துடன் பீமனை நோக்க பீமன் நகைத்து “தாழ்வில்லை… இங்கு காட்டில் உங்களை எவரும் எள்ளிச்சிரிக்கப்போவதில்லை” என்றான். சகதேவன் உடனே குந்தியின் அருகே படுத்துக்கொண்டான். நகுலன் மீண்டும் பீமனை நோக்கியபின் தலையைக் குனித்தவண்ணம் படுத்துக்கொண்டான்.

அருகே ஓடிய சிறிய ஓடையின் கரையில் பீமன் அமர்ந்தான். அர்ஜுனன் சற்று அப்பால் நின்று காட்டை நோக்கி “அடர்ந்த காடு… நாம் இங்கே வாழப்போகிறோமா?” என்றான். தருமன் “இளையோனே, நமக்கு பெரும்பணி ஒன்றுள்ளது. காட்டில் தவ வாழ்க்கை வாழ நாமிங்கு வரவில்லை. நாம் வந்திருப்பது நட்பரசர்களைக் கண்டு அவர்களிடம் குருதி உறவை உருவாக்க. இனிமேல்தான் நமக்கு பெரும்பணி எஞ்சியிருக்கிறது” என்றான். “மூத்தவர் களம் விட்டு விலகுவதேயில்லை” என்றபடி பீமன் காலை நீருக்குள் நீட்டினான்.

“நீ என்ன நினைத்தாய்? உன்னுடன் காட்டில் கிழங்குகளை உண்டு வாழ்வேன் என்றா?” என்றான் தருமன். “நான் கடன்பட்டிருக்கிறேன். அதை உணர்ந்துகொள். கிளம்பும்போது கண்ணீருடன் என்னை நோக்கி வந்து கைகூப்பி மன்றாடிய ஏழை யாதவர்களிடம் நான் என்ன சொன்னேன்? திரும்பி வருவேன், அவர்கள் விழையும் நல்லாட்சியை அளிப்பேன் என்றேன். என் நாவில் ஊழே வந்து அமர்ந்து அதைச் சொன்னது என்று இப்போது உணர்கிறேன்.” பீமன் “ஊழின் ஆணையை நிறைவேற்றிவிடுவோம்… திரும்புவோம்” என்றபின் “இளையவனே, இந்தச் சிற்றோடைகளில் பாம்புபோன்ற மீன் ஒன்று உள்ளது. பொந்துகளுக்குள் சேற்றில் மறைந்திருக்கும். சுவையானது. நாளை உனக்கு நான் அதை சில இலைகளுடன் சேர்த்து சுட்டுத்தருகிறேன்…” என்றான்.

“நாம் எவ்வழி செல்லப்போகிறோம்?” என்றான் தருமன். “அதை அன்னை சொல்லட்டும்…” என்றான் பீமன். “அருகே எந்த சிற்றூர் உள்ளதோ அங்கே செல்வோம். சிலகாலம் எவருமறியாமல் அங்கிருப்போம். அனைவரும் நம்மை மறந்ததாக அறிந்த பின்னர் அருகே உள்ள ஷத்ரிய நாடுகளுக்குள் செல்வோம்…” என்றான் தருமன். “நம் திட்டங்களை தெளிவாக வகுத்தாகவேண்டும். நாட்களை வீணடிக்கலாகாது…” பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்தான்.

குந்தி விழித்துக்கொண்டதும் அவர்கள் காட்டை ஊடுருவி நடந்து சென்றனர். பீமன் மர உச்சியில் ஏறி நோக்கியபின் “இக்காடு வழியாக எவரும் கங்கைக்கு வருவதேயில்லை இளையோனே. ஒற்றையடிப்பாதையை கூட காணமுடியவில்லை. பழகிய கன்றுகள் ஒன்றுகூடத் தெரியவில்லை” என்றான். “ஊரோ மானுடரோ தெரிகிறார்களா?” என்றான் தருமன். “ஏதுமில்லை… இங்கே மானுடக்காலடி பட்டமைக்கான தடயங்களே இல்லை” என்றான் பீமன். “ஆம், அரக்கர்கள் வாழ்கிறார்கள் என்றுதானே சொன்னார்கள்… அவர்கள் வான்வழி செல்பவர்கள்…” என்றான் நகுலன் “நான் கதைகளில் படித்திருக்கிறேன்.” சகதேவன் “அந்த கரும்பாறை ஓர் அரக்கன். அது சற்றுமுன் மூச்சு விடுவதை கண்டேன்” என்றான்

விரைவிலேயே காடு இருட்டியது. இலைகளுக்குமேல் வானம் ஒளியுடன் தெரிந்தாலும் இலைத்தழைப்புக்குள் இருள் மூடி அடிமரங்கள் தெரியவில்லை. அர்ஜுனன் “பின்மதியம்தான்… அதற்குள் இருட்டிவிட்டது” என்றான். பீமன் “இன்றிரவு தங்க குடில் அமைக்கவேண்டியதுதான் இளையவனே” என்றான். “மரங்கள்மேல் தங்கலாமே” என்றான் தருமன். “மூத்தவரே. மரங்கள் மேல் சீராக படுக்கமுடியாது. அத்துடன் காட்டுக்குள் பெரும்பாலும் இரவில் மழை இருக்கும்” என்றான் பீமன். தருமன் தலையசைத்து “எளிய செய்திகள். ஆனால் இவற்றை நம்பி இப்போது உயிர்வாழவேண்டியிருக்கிறது” என்றான்.

பீமன் ஈச்சமரத்தின் ஓலைகளை வெட்டிக்கொண்டுவந்து குவித்தான். அவர்கள் அவற்றை முடைந்து கீற்றுகளாக ஆக்கினார்கள். பீமன் மூங்கில் கழைகளை வெட்டிக்கொண்டுவந்தான். அருகருகே நின்ற மரங்களில் அவற்றை வைத்து சதுரமாகக் கட்டி மூலைகளில் மூங்கிலை நான்கு தூண்களாக்கி நட்டு மேலே இணைத்து, சரிவாகக் கூரையெழுப்பி ஈச்சமரத்தின் ஓலைகளை நெருக்கமாக வேய்ந்து ஐவர் படுக்கும் இடமுள்ள குடில் ஒன்றை அவன் உருவாக்கினான். குடிலின் அடித்தளமாக மூங்கிலை அடுக்கி அதன்மேல் உடைத்து கல்லால் அடித்து பரப்பப்பட்ட மூங்கில் பட்டையை விரித்து அதன்மேல் இலைகளை அடுக்கி மெத்தையாக்கினான். மூங்கிலை விரித்துச் செய்த பட்டையால் சுவர்களை அமைத்து மேலே ஏறிச்செல்ல காட்டுக்கொடிகளால் நூலேணியும் அமைத்தபோது குடில் ஒருங்கியது.

“அழகிய சிறிய வீடு” என்றாள் குந்தி முகம் மலர்ந்து. “சிறிய தாய்க்குருவி போல உணர்கிறேன். ஐந்து குஞ்சுகளுடன் அதனுள் அமர்ந்திருக்கும் இன்பத்தை நான் அடையவேண்டுமென ஊழ்நெறி இருந்திருக்கிறது…” என்றாள். அவளே மேலே ஏறி அமர்ந்துகொண்டு “இக்காட்டில் குளிர் இருக்கும் என நினைக்கிறேன் இளையோனே” என்றாள். பீமன் “ஆம், குளிர் இருக்கும். அதைவிட பூச்சிகளின் பெரும்படை இன்னும் சற்று நேரத்தில் நம்மை சூழ்ந்துகொள்ளும்… யானைகளும் வரக்கூடும். ஆகவே அடியில் நெருப்பிட்டு புல்லடுக்கி புகையிடப்போகிறேன்” என்றான். குந்தி “புகையில் உறங்குவதா?” என்றாள். “பூச்சிகளில் உறங்குவதைவிட நன்று அல்லவா?” என்றான் அர்ஜுனன்.

கீழே தைலப்புல்லை அடுக்கி நெருப்பிட்டு புகையவைத்தபின் பீமன் மேலேறிவந்தான். புகை அவர்களைச்சூழ்ந்தது. ஆனால் புல்லின் நறுமணம் கொண்டபுகை சற்றுநேரத்திலேயே பழகிவிட்டது. காடு முழுமையாகவே இருட்டி நீர் சொட்டும் தாளம் கொண்ட ரீங்காரமாக மாறி அவர்களை சூழ்ந்தது. காடு ஒரு மாபெரும் இசைக்கருவியாக ஆகிவிட்டதைப்போல அர்ஜுனன் உணர்ந்தான். காட்டின் அத்தனை மரங்களும் செடிகளும் அந்த அறுபடா நீளொலியின் பட்டுநூலில் கோர்க்கப்பட்டு ஒன்றாயின. காலையில் பிரிந்து பலவாகி எழுந்து தன்னை நிகழ்த்தி மெல்ல ஒடுங்கி ஒன்றாகிறது காடு. அதன் முடிவடையாத லீலை.

“காட்டின் சித்தம் இவ்வொலி என்பார்கள்” என்று குந்தி சொன்னாள். “காட்டில் சீவிடுகள் பல்லாயிரம் கோடி உள்ளன. அவை ஒலியேதும் எழுப்புவதில்லை. எண்ணங்கள் அவற்றின் உடலை அதிரச்செய்கின்றன. அவ்வொலி இணைந்து இத்தனை பெரிய நாதமாக எழுகிறது. இளமையில் காட்டில் கன்றுமேய்க்கையில் இவ்வொலியைக் கேட்டுக்கொண்டு உறங்குவோம். இது துயிலின் இசை என்பார் என் தந்தை” கூரைமேல் இலைகளும் சிறியகாய்களும் விழும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கம்பளியாடைகளை நன்றாக போர்த்திக்கொண்டார்கள். “படுத்துக்கொள்ளுங்கள் அன்னையே” என்றான் பீமன். “பகலில் துயின்றமையால் இரவில் துயில் வரவில்லை” என்றாள் குந்தி. முதுகை சுவரில் இருந்த மூங்கிலில் சாய்த்து கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள். நகுலனும் சகதேவனும் அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டனர்.

பீமன் குடில் வாயிலில் கால்களை நீட்டி கைகளை தலைக்குமேல் வைத்து படுத்துக்கொண்டான். அவன் உடலின் வெம்மையை உணர்ந்தபடி அருகே அர்ஜுனன் படுத்துக்கொண்டான். குடில் மூலையில் தருமன் படுத்துக்கொண்டு “இளையவனே, சற்று விலகு… என் காலில் இடிக்கிறாய்” என்றான். அர்ஜுனன் தலையை விலக்கிக்கொண்டான். அஸ்தினபுரியில் அவன் படுக்கும் மஞ்சம் அளவுக்கே அந்தக் குடிலுக்குள் இடமிருந்தது. ஆனால் அறுவரும் படுக்க முடிந்தது. உடலுடன் உடல் இணைந்து ஒரே உடலாக ஆகிவிட்டிருந்தனர். “பன்னிரு கால்களும் பன்னிரு கைகளும் ஆறு தலையும் கொண்ட பெரிய பூச்சி நாம். இது நம் கூடு” என்று சகதேவன் சொன்னான்.

குந்தி பெருமூச்சு விட்டாள். அவள் ஏதோ சொல்லவருவது போலிருந்தது. மீண்டும் பெருமூச்சு விட்டபின் “இளையவனே, இந்தக் குளிரில் மைந்தர் உடலுடன் ஒன்றாகி அமர்ந்திருப்பதை என் வாழ்வின் பேறு என்றே எண்ணுகிறேன்…” என்றாள் குந்தி. “அதை உங்கள் தந்தை அந்நாளிலேயே அறிந்தார். நான் இப்போதுதான் அறிகிறேன்.” பின்பு பெருமூச்சுடன் “எங்கோ என்னை நோக்கி அவர் புன்னகைக்கக் கூடும்” என்றாள். தருமன் “எப்போதும் அவர் தங்களை நோக்கி புன்னகைத்தபடிதான் இருந்தார் அன்னையே” என்றான்.

நகுலன் “மூத்தவரே, தங்கள் கம்பளியாடையை கொடுங்கள்… எனக்கு இன்னொரு கம்பளியாடை தேவை… குளிர்கிறது” என்றான். பீமன் “எடுத்துக்கொள்” என்று தன் கம்பிளி மேலாடையை கழற்றி அவனுக்கு அளித்தான். “எனக்கு?” என்று சகதேவன் எழுந்து கை நீட்டினான். பீமன் தன் கீழாடையை எடுத்துக் கொடுத்து “போர்த்திக்கொள்” என்றான். “இளையவர்களே, இது காடு. இங்கே குளிர் இருக்கும்… அவனுக்கு ஆடைவேண்டுமல்லவா?” என்றாள் குந்தி. “அவருக்குக் குளிராது… காட்டில் வாழும் குரங்குகள் போர்த்திக்கொள்ளாமல்தானே இருக்கின்றன” என்றான் நகுலன். “திருப்பிக்கொடு” என்றாள் குந்தி. “அன்னையே, எனக்கு குளிர் பொருட்டல்ல” என்று இடையில் சிறிய தோலாடையுடன் பீமன் படுத்துக்கொண்டான்.

கூரைமேல் காய்கள் விழும் ஒலி பெருகியது. சிலகணங்களுக்குப்பின்னரே அது மழை என்று தெரிந்தது. “காற்று இல்லாமல் நேரடியாகவே மழை பெய்கிறது” என்றான் நகுலன். “அடர்காட்டில் மழை அப்படித்தான் பெய்யும்” என்று பீமன் சொன்னான். இளஞ்சாரல் உள்ளே அடித்தது. குளிருக்கு உடலை இறுக்கிக்கொண்டு குந்தியுடன் ஒட்டிக்கொண்ட நகுலன் “அன்னையே ஒரு கதை சொல்லுங்கள்” என்றான். அர்ஜுனன் வியப்புடன் நகுலனைப்பார்த்தான். குந்தி அவர்களுக்கு கதை சொல்வாள் என்பதே விசித்திரமான செய்தியாக இருந்தது. குந்தி “என்ன கதை?” என்றாள். “அச்சுறுத்தும் கதை… போரின் கதைகள் வேண்டாம்… மாயக்கதைகள்” என்றான் சகதேவன். “ஆம்” என்றான் நகுலன். “ம்ம்” என குந்தி சிந்தித்தாள்.

“யுகயுகங்களுக்கு முன் நடந்த கதை இது” என்றாள் குந்தி. “அன்று ஒருவரோடொருவர் பொறாமைகொண்ட தமக்கையும் தங்கையும் இருந்தனர்.” நகுலன் எழுந்து “உங்களையும் காந்தார அரசியையும் போலவா அன்னையே?” என்றான். “சீ, மூடா” என்று சிரித்தபடி அவன் தலையில் அடித்தாள் குந்தி. இருளுக்குள் அவள் பல்வரிசை மின்னி மறைவதை அர்ஜுனன் கண்டான். அந்தக்குந்தியை அவன் அறிந்ததே இல்லை. அவளால் விளையாட முடியும் சிரிக்க முடியுமென எண்ணிக்கூட பார்த்ததில்லை. அவர்கள் இருவருக்காக மட்டும் அந்த முகத்தை அவள் வைத்திருந்திருக்கிறாள். அவன் இருளுக்குள் புன்னகைசெய்துகொண்டான். “சொல்லுங்கள் அன்னையே…அடேய், நீ இனிமேல் பேசினால் உதைப்பேன்” என்றான் சகதேவன்.

“அவர்களில் மூத்தவள் பெயர் கத்ரு. இளையோள் வினதை. இருவரும் தட்ச பிரஜாபதியின் புதல்விகள். இருவருமே நாக உடல் கொண்டவர்கள். இருவரையுமே கசியப பிரஜாபதிக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். இருவரில் இளையோள் வெண்ணிறமான நாகம். மூத்தவள் கருநிறம் கொண்ட நாகம். இளையோள் நீலவைரம் போன்ற கண்களும் மூத்தோள் செவ்வைரம் போன்ற கண்களும் கொண்டிருந்தனர். இருவரையும் மணந்த கசியபர் மகிழ்ந்து இருவரிடமும் அவர்கள் விரும்பிய மைந்தர்களை அளிப்பதாகச் சொன்னார்” என்றாள் குந்தி. தெரிந்த கதை என்றாலும் மிகச்சில சொற்களிலேயே அது உள்ளே இழுத்துக்கொள்ளும் விந்தையை எண்ணிக்கொண்டான் அர்ஜுனன்.

இரு உடன்பிறந்தவர்களும் ஒருவரை ஒருவர் எண்ணி பொறாமையும் அச்சமும் கொண்டிருந்தனர். மைந்தரைப்பெறும் பெருநிலையைக்கூட அவர்கள் அந்தப் பொறாமையாலும் அச்சத்தாலும்தான் அறிந்துகொண்டனர். வினதையை எண்ணியபடி “இறப்போ மூப்போ இல்லாத ஆயிரம் நாகங்களை நான் பிள்ளைகளாகப் பெறவேண்டும்” என்றாள் கத்ரு. “அவ்வாறே ஆகுக” என்றார் கசியபர். கத்ரு கோரியதை அறிந்த வினதை “எனக்கு இரு மைந்தர்கள் வேண்டும். அவர்களுக்கு எதிரிகளாக எவர் அமைகிறார்களோ அவர்களை விட வல்லமை கொண்டவர்களாக அமையவேண்டும்” என்றாள். “அவ்வாறே ஆகுக” என்றார் கசியபர். இருவரும் மகிழ்ந்தனர். அதன்பின் தங்கள் மைந்தர்கள் வழியாக உடன் பிறந்தவளை வெல்வதைப்பற்றி இருவரும் கனவுகாணத் தொடங்கினர்.

கத்ரு ஆயிரம் மடங்காகப் பெருத்து வானை நிறைத்தாள். ஆயிரம் கரிய முட்டைகளை இட்டாள். அவை ஆயிரம் வருடம் அவளால் அடைகாக்கப்பட்டன. அவை வெடித்து ஆயிரம் கன்னங்கரிய நாகங்கள் வெளிவந்தன. எரித்துளி போல ஒளிவிடும் விழிகள் கொண்டவை. அவை மேற்கே தலை வைத்து கிழக்கே வால் வைத்து வானத்தை நிறைக்குமளவுக்கு பெரியவையாக இருந்தன. அவற்றின் இருளால் வானம் நிறைந்தது. ஆகவே பிரம்மதேவர் அவற்றை பாதாள உலகுக்குச் சென்று வாழும்படி ஆணையிட்டார். அவை நெளிந்தோடி பாதாளத்தின் இருளை நிறைத்தன.

வினதை இரண்டு முட்டைகளை இட்டாள். அவை பொன்னிறத்தில் இருந்தன. ஆயிரம் நாகங்களும் பிறந்து அவை பாதாளத்தை ஆட்சி செய்யத் தொடங்கியபின்னரும் கூட அவை வெடிக்கவில்லை. ஆகவே அவள் ஆற்றாமையும் பொறுமையின்மையும் கொண்டு முதல் முட்டையை முதிர்வதற்குள்ளேயே கொத்தி உடைத்தாள். அதனுள் இருந்து முழுமையாக உருவாகாத ஒரு குழந்தை வெளியே வந்து விழுந்தது. அது காலைச்சூரியனின் பொன்னொளி கொண்டிருந்தது. அதன் ஒளியை அவளால் பார்க்கவே முடியவில்லை. கண்களை கையால் மூடிக்கொண்டு விரலிடுக்குகள் வழியாகப் பார்த்தாள். அங்கே இடுப்புக்கு மேல் மானுட உருக்கொண்டவனும் கீழே மெல்லிய சிறகுகளும் கால்களும் முழுமையாக முளைக்காதவனுமாகிய ஒரு புதல்வனைக் கண்டாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அவள் அவனை என்னசெய்வதென்று அறியாமல் திகைத்தாள். அவன் அவ்வாறு பிறந்ததை அறிந்தால் கசியபர் சினம் கொள்வார் என அஞ்சினாள். அவனை கையால் எடுத்தபோது அவள் கைகள் பொன்னாயின. அவனை வைத்த தொட்டில் பொன்னாயிற்று. அவன் தொடுவதேதும் பொன்னாகும் என்று அவள் அறிந்தாள். அவனை தொட்டிலுடன் கொண்டுசென்று ஆகாயகங்கையின் வெண்பெருக்கில் விட்டாள். ஆகாய கங்கை அவன் ஒளியால் பொன்னுருகிச் செல்வது போலாகியது. அவள் அதை பெருக்கில் விடும்போது கைகளின் நடுக்கத்தில் தொட்டில் அசைந்தது.

தொட்டிலில் கிடந்த குழந்தை சினம் கொண்டு கண்களை விழித்தது. அப்போதுதான் அதன் விழிகள் ஒளிவிடும் செவ்வைரங்கள் போலிருப்பதை அவள் கண்டாள். அஞ்சி கைகூப்பி நின்றாள். சினத்தால் தீபோல சிவந்த அக்குழந்தை “அன்னையே, நான் சூரியனுக்கு நிகரானவனாகிய அருணன். உன் நிலையழிவால் நான் முழுமைபெறாதவனாக பிறந்தேன். இனி எந்நாளும் என் உடல் இப்படியே இருக்கும்… இப்பிழைக்கு ஈடாக நீ ஆயிரம் வருடம் உன் முதல் எதிரியின் அடிமையாக வாழ்வாய்” என்றான். அவள் கண்ணீர் விட்டு கைகூப்பி நின்றாள். கண்ணீர்த்துளிகள் அவன் உடல் மேல் உதிர்ந்தன. அவை தொட்டதும் அருணன் கனிந்து “தாயே, உன் முலைப்பாலை நான் அறியவில்லை. நிகராக நீ அளித்த இக்கண்ணீரை அருந்துகிறேன். இவற்றை நீ எனக்கு அளித்தமையால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். என் இளையோன் பெருவல்லமையுடன் பிறப்பான். அவன் உன்னை விடுவிப்பான்” என்றது அச்சிறு மகவு.

“அதன்பின் வான்கங்கையில் அது மிதந்து சென்று மறைந்தது. அவள் நோக்கி நிற்கையில் கிழக்கில் பேருருவம் கொண்டு கிழக்கே எழுந்த சூரியன் தன்னருகே தனக்கு நிகராக ஒளிவிடும் அருணனைக் கண்டு ஒளிக்கரங்கள் நீட்டி அள்ளி எடுப்பதைக் கண்டாள். கால்களில்லாத அருணன் அக்கைகளில் ஏறிச்சென்று சூரியனின் ரதத்தின் தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டான். அவனே சூரியனின் சாரதியாக இன்றும் அமைந்திருக்கிறான்” என்றாள் குந்தி. “காலையில் சூரியனின் வெம்மை எழுவதற்கு முன் அருணனின் பொன்னொளி வானில் நிறைந்திருக்கும். ஒவ்வொருநாளும் வினதை காலையில் எழுந்து சாளரத்தைத் திறந்து அப்பொன்னொளியை நோக்கி நின்று கண்ணீர் விடுவாள். ஆயிரம் யுகங்களாகியும் அந்தக்கண்ணீர் வற்றவேயில்லை”.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைமுன்விலையின் மெய்விலை
அடுத்த கட்டுரைசுவை- கடிதம்