டொரொண்டோ பல்கலை கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியரான செல்வ கனநாயகம் 23- 11-2014 அன்று மாண்ட்ரியலில் காலமானார். டொரொண்டோவில் இருந்து உஷா மதிவாணன் கூப்பிட்டு செய்தியைச் சொன்னபோது எப்போதும் மரணச்செய்திகள் உருவாக்கும் மரத்த தன்மையையே அடைந்தது மனம். அப்படியா அப்படியா என்று மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்
2000த்தில் நான் முதல்முறையாக கனடா சென்றபோது செல்வ கனநாயகத்தைச் சந்தித்தேன். அ.முத்துலிங்கத்தின் நண்பராக. டிம் ஹார்ட்டன் காபி நிலையத்தில் நிகழ்ந்த நீண்ட இலக்கியச் சந்திப்புகளில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நடந்த பொதுச்சந்திப்புகளில் பல கேள்விகள் மூலம் நெருக்கமாக உரையாடினார்
கனடாவின் இலக்கிய நடவடிக்கைகளின் மையமாக விளங்கியவர் செல்வ கனகநாயகம். அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டியவர். மிகமென்மையகாவும் நட்புணர்வுடனும் பேசக்கூடியவர். ஆழ்ந்த இலக்கிய வாசிப்புடையவர் என்றாலும் எப்போதும் எளிமையான பாவனைகள் கொண்டவராக இருந்தார்
கனடாவின் தமிழ் இலக்கியச்செயல்பாடுகளில் தலையாயது என்று சொல்லத்தக்கது இயல்விருது மற்றும் கனடா இலக்கியத்தோட்ட விருதுகள். அவ்வமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருந்ததுடன் அதற்கும் யார்க் பல்கலைக்குமான இணைபபகவும் செல்வ கனகநாயகம் இருந்தார். அது தொடர்பான பல கடிதங்களும் உரையாடல்களும் எங்களுக்குள் நிகழ்ந்ததுண்டு. இணையத்தில் நான் எழுதுவதை வாசித்துவிட்டு அவர் எப்போதாவது கடிதம் எழுதுவதுண்டு.
நவீனத் தமிழ்க்கவிதைகளின் ஆங்கிலத்தில் மொழியாக்கத் தொகுப்பு ஒன்று அவரது முயற்சியால் வெளிவந்தது. [Contemporary Global Tamil Poetry] அது எனக்கு கிடைத்ததா என்று கூப்பிட்டிருந்தார். அதைப்பற்றி பேசிக்கொண்டதுதான் அவரது குரலை கடைசியாகக் கேட்டது.
அவருக்கு கனடாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான Fellow of the Royal Society of Canada பட்டம் அளிக்கப்பட்டபோது வாழ்த்து தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதிலே கடைசியாக நாங்கள் தொடர்புகொண்டது.
அவ்விருதைப் பெறுவதற்காக மாண்ட்ரியல் சென்றவர் விழாமுடிந்து அங்கே ஒர் உணவு விடுதிக்குச் சென்றபோது மாரடைப்பால் விழுந்தார் என்றும் மருத்துவ சிகிழ்ச்சைக்குச் செல்லும் வழியில் உயிர்துறந்தார் என்றும் உஷா சொன்னார்கள். அவருக்கு 62 வயதுதான். சர்க்கரை நோய் இருந்தது. மருத்துவ வசதிகள் நிறைந்த கனடாவில் அது பிரச்சினையே அல்ல. ஆனால் செல்வ கனகநாயகம் உடல்நிலையை சரிவரப் பேணிக்கொள்ளவில்லை.
புகழ்பெற்ற தமிழறிஞரும் கொழும்பு பேராதனைப் பல்கலைகழகத்தில் பணியாற்றியவருமான பேராசிரியர் செல்வநாயகத்தின் மைந்தர் கனகநாயகம். பேராதனை பல்கலையில் பட்டப்படிப்பை முடித்தபின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலையில் முனைவர் படிப்பை முடித்தவர் . டொரொண்டோ பல்கலையின் The Centre for South Asian Studies ன் தலைவராக இருந்தார்.
செல்வ கனகநாயகம் அவர்களுக்கு அஞ்சலி
நூல்கள்
Counterrealism and Indo-Anglian Fiction (2002)
Ed. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka (2001)
Dark Antonyms and Paradise: The Poetry of Rienzi Crusz (1997)
Configurations of Exile: South Asian Writers and Their World (1995)
Structures of Negation: The Writings of Zulfikar Ghose (1993)