பிறழ்வுகள்

René Magritte. The Double Secret, 1927. 

அன்பின் ஜெ அவர்களுக்கு,

சமீபகாலமாக அதிகம் வாசிக்கிறேன். அதிகம் என்றால் அதிக நேரம். இப்போதைக்கு ஒரே ஒரு சந்தேகம். தங்களின் ஏழாம் உலகம் வாசித்து ஒரு ஆண்டுகளாகிறது. இன்னமும் அந்தபெயரைக் கேட்டாலோ எங்காவது அந்த புத்தகத்தைப் பார்த்தாலோ அந்நாவலின் தாக்கம் மனதிற்குள் வந்துவிடுகிறது. சமீபத்தில் வாசித்த காடு என்னுள் உண்டாக்கிய பாதிப்பு அளப்பரியது. தற்போது சாடத் ஹசன் மண்ட்டோ படைப்புகள் வாசிக்கிறேன். அவரது ‘திற’ சிறுகதையை இன்று படித்து எனக்குள் மிகப்பெரும் தாக்கத்தை/சோகத்தை/அந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது.

இந்தமாதிரியான இலக்கியங்கள் சொல்ல வருபவை என்ன? இதுமாதிரியான இலக்கியங்களால் என்னுள் நிகழும் இந்தப் பிறழ்வு ஆரோக்கியமானதா? தயைகூர்ந்து தெளிவாக்கவும்.

பின்குறிப்பு: வெண்முரசு எனது எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற நினைப்பை அடுத்தடுத்த விளக்கங்களால் உடைத்தெறிந்த உங்களுக்கு நன்றிகள். புத்தகம் ஆர்டர் செய்திருக்கிறேன்.

அன்புடன்

நஸ்ருதீன் ஷா
www.minnalgal.in

அன்புள்ள நஸ்ருதீன்,

நம்முடன் சாதாரணமாகப் பேசுபவர்களைக் கவனியுங்கள். தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத, படிப்பினை அளித்த நிகழ்வுகளாக எதைச் சொல்கிறார்கள்? பெரும்பாலும் ஆழ்ந்த இக்கட்டுகளை, அதிதீவிரமான நிகழ்வுகளைத்தான் இல்லையா? மயிரிழையில் தப்பிய விபத்துக்களை, கடுமையான மனத்துயர்களைத் தாண்டியதை, மீளவேமுடியாத சிக்கல்களைக் கடந்துவந்ததைத்தான் சொல்வார்கள். பலருக்கு அப்படிச் சொல்ல ஓரிரு நிகழ்வுகளே இருக்கும். வாழ்நாள் முழுக்கச் சொல்வார்கள்.

ஏன்?ஏனென்றால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வாழ்க்கையில் மிகக்குறைவாகவே நம்முடைய முழு அகத்திறனும் வெளிப்படும் தருணங்கள் வாய்க்கின்றன. பெரும்பாலும் நம் மனதின் நுனியாலேயே அன்றாடவாழ்க்கையை கடத்திவிடுகிறோம்.ஆகவே எப்போதுமே நம் அகம் பலவாறாகப் பிரிந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. நாம் சாதாரணமாக எதையும் கவனிப்பதே இல்லை.

ஆனால் மேலே சொல்லப்பட்ட உச்சகணங்களில், தீவிரத்தருணங்களில், நம் இயல்புமனம் நிலைகுலைகிறது. நாம் முழுமையாக ஒருங்கு குவிகிறோம். நம் முழுஆற்றலும் வெளிப்படுகிறது. நாம் முழுமையாக வாழ்கிறோம். அப்போது நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். அந்தக் கண்டடைதலே நாமறியும் உண்மையான ஞானம் என உணர்கிறோம்

இதன்பொருட்டே சாகசங்கள் செய்யப்படுகின்றன. பயணங்கள்ச் செய்யப்படுகின்றன. மனிதன் அனைத்துவகையான ‘ரிஸ்க்’ களையும் இதற்காகவே எடுக்கிறான்.

இவை நேர்வாழ்க்கையில். கற்பனையில் இந்த உச்சங்களை அடைவதற்கான ஒரு வழி என இலக்கியத்தைச் சொல்லலாம். இலக்கியம் புறவாழ்க்கைக்கு நிகரான ஓர் அகவாழ்க்கையை வாழச்செய்கிறது. அதை நிகர்வாழ்வு எனலாம். அந்த வாழ்க்கை புறவாழ்க்கை போல இருக்க முடியாது. புறவாழ்க்கையின் நிதானமான, இயல்பான, சலிப்பூட்டும் வாழ்க்கையை மனிதன் அங்கே வாழமுடியாது. சொல்லப்போனால் அதிலிருந்து தப்பவே அவன் இலக்கியத்தை வாசிக்கவருகிறான்

அங்கே அவன் தன்னைக் கண்டடையவேண்டும். கற்பனையில் உச்சகணங்களை அடைந்து அங்கே தான் எப்படி வெளிப்பாடுகொள்கிறோம் என அவன் அறியவேண்டும். அதுவே இலக்கியம் அளிக்கும் மெய்மையனுபவம். இலக்கியம் எதையும் ‘சொல்வதில்லை’ அது அனுபவிக்கச் செய்கிறது. அதில் வாசகன் அடைவதெல்லாம் அவனே அதற்குள் அனுபவித்து அறிவதுதான். விதவிதமான அனுபவங்கள், உண்மைவாழ்க்கையில் கிடைக்கவேகிடைக்காதவை, அங்கே அவனுக்குக் கிடைத்தாகவேண்டும்

இலக்கியம் ஒரு வாசகன் செய்தித்தாளில், அன்றாட அலுவல்களில், பேச்சில் கிடைக்கும் அதே விஷயங்களைச் சொல்வதாக இருக்கமுடியாது. அங்கெல்லாம் எது விடுபடுகிறதோ அதைச்சொல்வதாகவே அது இருக்கமுடியும்.

ஆகவேதான் இலக்கியம் உச்சங்களை, நெருக்கடிகளை, இக்கட்டுகளை நோக்கி குவிகிறது. நாம் பெரும்பாலும் அத்தகைய நெருக்கடிகளை உண்மையான வாழ்க்கையில் தவிர்க்கவே முயல்வோம். நம்முடைய அகம் நிலைகுலையாமல் ஒழுகிக்கொண்டிருப்பதற்கே நாம் முயல்வோம். இலக்கியம் அந்த சகஜநிலையைக் குலைப்பதனால் அந்த அனுபவத்தை ‘நிலைபிறழ்வு’ என்கிறோம்

நம் நீதியுணர்ச்சி தூண்டப்படுவதும் நிலைபிறழ்வாகவே நமக்குத் தெரியும். நம் நம்பிக்கைகள் சீண்டப்படுவது, நம் கொள்கைகள் உடைக்கப்படுவது, நம் வாழ்க்கைநோக்கு மாற்றப்படுவது நமக்கு நிலைபிறழ்வே. ஆனால் இலக்கியம் அதைச் செய்தாகவேண்டும். இல்லையேல் அது ஒன்றையும் அளிப்பதில்லை

பலசமயம் வாழ்க்கையின் பிறழ்வுகள், சரிவுகள், செரித்துக்கொள்ளமுடியாத உண்மைகள் வழியாக இலக்கியம் அந்த உச்சங்களையும் நெருக்கடிகளையும் காட்டுகிறது. ஏனென்றால் அவை வாழ்க்கை. நாம் காணாத வாழ்க்கை. நீ நம்பும் உண்மைகள் இந்த இடத்தில் செல்லுபடியாகுமா பார் என்கிறது இலக்கியம்

விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் இதை திரும்பத் திரும்ப பலர் எழுதியிருக்கிறார்கள். அந்நாவலை வாசித்து முடிக்கையில் ஒரு பெரும் வெறுமை சூழ்ந்துகொள்ளும். எல்லா அடிப்படைகளும் நொறுங்கிவிட்டிருக்கும். அது தேவைதானா என்று பலர் கேட்டனர்.

நான் அதற்கு ஓர் உவமையை பதிலாகச் சொன்னேன். ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது

பெரிய நாவல்கள் எவையுமே நிறைவை மகிழ்வை அளிப்பதில்லை. நிலைகுலைவை, அதன் விளைவான ஆழ்ந்த மனச்சோர்வையே அளிக்கின்றன. அந்த மனச்சோர்வு ஒரு பெரிய படைப்பூக்க விசையாக வாசகனிடம் நீடிக்கிறது. அவன் அதை யோசித்து யோசித்து மெல்லமெல்ல தன் சிந்தனைகளை ஒருங்கமைக்கிறான். தன்னை புதியவகையில் தொகுத்துக்கொள்கிறான்

ஆகவேதான் பெரியநாவல்களுக்குப்பின் நாம் புதியதாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறோம். புதியதாகப் பிறக்கிறோம் என்றுகூடச் சொல்லலாம். அந்த சிந்தனையை எத்தனைநாள் நம்மில் நீடிக்கவைக்கிறது என்பதே ஒரு படைப்பை மதிப்பிடும் அளவுகோலாகும்

நாம் உவகையுடன் படித்து முடித்த படைப்புகளை எளிதில் கடந்து வந்திருப்போம். நிலைகுலைய வைத்தவை பிறழவைத்தவை நம்முடன் இருக்கின்றன, நம்முடன் வளர்கின்றன இல்லையா? அதுதானே இலக்கியத்தின் இலக்கு?

ஜெ

மறுபிரசுரம்.முதற்பிரசுரம் 2014

முந்தைய கட்டுரைகவிமணி
அடுத்த கட்டுரைகோணங்கிக்கு வாழ்த்து