கிருஷ்ணன் வருகை

kk

அன்புள்ள ஜெ

நீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது

காவியக்கண்ணன் எப்படி எப்போது அறிமுகமாகப்போகிறான் என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்தக்கண்ணனை ராதையின் பார்வையில் காட்டிய நீங்கள் இங்கே அர்ஜுனனின் பார்வையில் காட்டிவிட்டிருக்கிறீர்கள்.

அதற்கு முன் துரியோதனனின் பார்வையில் குறிப்பு வந்துவிடுகிறது. உதடுகள் புன்னகைப்பதை பார்த்திருப்பீர்கள், உடலே புன்னகைப்பதை அவனில் பார்க்கலாம் என்ற துரியோதனனின் வரி முக்கியமான ஒன்று. ஆயிரம் நா கொண்ட பசு தன் கக்ன்றுகளை நக்குவதைப்போல அவன் தன் குலத்தை நக்கினான் என்பதும் ஒரு அழகிய கவிதை

இந்த கிருஷ்ணன் நாடிழந்து ஊர் ஊராக துரத்தப்பட்ட ஒரு குலத்தின் தலைவன். கைவிடப்பட்டு கையறு நிலையில் இருப்பவன், மதுராவை இழந்து கூர்ஜரத்துக்கு ஓடும் அகதிகளின் இளவரசன்

கூர்ஜரம் என்றால் இன்றைய குஜராத் என நினைக்கிறேன். அதன் தெற்கே என்றால் இன்றைய கட்ச் பகுதிக்கு. அங்கே துவாரரகையை உருவாக்கப் போகிறான். அதற்கு உதவி கேட்டு வந்திருக்கிறான்

சாதியால் சூத்திரன். படைபலமில்லாதவன். சபையில் எழுந்து பேசும் அதிகாரம் இல்லாதவன். பினாடி சிசுபாலன் சபையில் எழுந்து நிற்கக்கூட அவனுக்குத் தகுதி இல்லை என்று சொல்லும்போது சக்கரத்தை எடுத்து கழுத்தை அறுத்துவிடுகிறான். அப்படிப்பட்ட உறுதியுடன் இப்போது வந்திருக்கிறான்

அவன் அந்த சிறிய பறவைக்குக் காட்டும் கருணை அவன் மனம் நாடிழந்து கூடிழந்து பதைப்பவர்களை எப்படிப் புரிந்துகொள்கிறது என்பதை காட்டுகிறது. அதேபோல அவன் வைரம் போலவும் இருக்கிறான். அறுக்கமுடியாத, அனைத்தையும் அறுக்கிற கூர்மையுடன் இருக்கிறான்

கண்ணனை இந்தக்கோணத்தில் புரிந்துகொண்டால் அவன் செயல்கள் அனைத்தும் பிடிகிடைக்கும். அவனுடைய இரக்கமற்றதன்மையைக்கூட புரிந்துக்கொள்ளமுடியும்

அர்ஜுனனைப்போலவே நம் மனமும் எழுச்சி அடைகிறது

சண்முகம்

***
shankhnaad

இனிய ஜெயம்,

மற்றும் ஒரு இனிய அத்யாயம். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் குந்தியின் அண்மைக்கு ஏங்குகிறார்கள். அதில் தருமன் தனி வகை.

சற்றே பின்னோக்கிப் பார்த்தால், குந்தி கர்ணன் வசம் மட்டுமே அன்னையாக இருந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.

கர்ணனுக்கு கிடைக்காத தாய்ப்பாசம் எதையும் பிற ஐவருக்கும் அளிப்பதில்லை என முடிவு செய்து விட்டாளோ? அவ்வகையில் இந்த மறுப்பின் வழியே அவள் தன் மகன்கள் அறுவரையும் சமமாக பரிபாளிக்கிறாளோ?

அர்ஜுனனுக்கு பறவைக் கூட்டத்தின் குரல் அளிக்கும் தியான அமைதியும், தருமனுக்கு ஒரே ஒரு பறவையின் குரல் தூண்டி விடும் மனசாட்சியின் ஓலமும் கிருஷ்ணன் அறியும் அப் பறவை என்ற ‘தாயின்’ தவிப்பும் கச்சிதமாக அந்த மாந்தன சபையில் முயங்கி, யார் யார் அகத்தே எத்தகு தன்மையுடன் அங்கு உள்ளனர் என தெளிவாகவே முன் வைத்து விடுகிறது.

பாண்டவர் ஐவரும் வெவ்வேறு தருமன் அன்றி வேறல்ல என அர்ஜுனன் நினைக்கிறான். அது கௌரவர்களை ‘பிறனாக’ வகுக்கும் எல்லையில் துவங்குகிறது எனத் தோன்றுகிறது.
அன்றேல் துரியனை தனது சகோதரனாக தருமன் அகத்தில் உணர்ந்திருந்தானாகில் குந்தியின் அகத்தை கணக்கில் கொண்டு அவளுக்கு மணி மூடி சூடி அழகு பார்த்தது போல, துரியனையும் கணக்கில் கொண்டு அவன் அகம் புண்படா வண்ணம் அரசு சூழ் நிலை உரைத்திருப்பான்.

அந்த ‘சிறுமைதானே’ இன்று அக் குருவியின் குரலாக தருமனை அமைதி குலைய வைக்கிறது?

கிருஷ்ணனும் அர்ஜுனனும் சந்திக்கவேண்டி பீமன் கொள்ளும் விழைவு அழகோ அழகு. பீமனின் குருநாதர் முன்னுரைத்தது அல்லவா அது?

கிருஷ்ணனுக்கு பெண்களைத் தெரியும், யோகியர் உள்ளத்தைத் தெரியும், தத்துவத்தின் போதாமை தெரியும், மனிதர்கள் துவங்கி, ஆநிரை புள்ளினம் என உயிர்க்குலம் மொத்தத்தின் அக மொழியும் புரியும்.

அனைத்துக்கும் மேல் வாதத்தின் கதவடைபிற்கு முன் புன்னகையுடன் தோற்கத் தெரியும்.

புன்னகையுடன் தோல்வியை ஏற்பவனைக் காட்டிலும் ‘அகம் ஒழிந்தவன்’ வேறு யாரும் உண்டா?

துரியன் கிருஷ்ணன் வசம் குமுறும்போதும், தருமன் குந்தி எத்தகு பதிலுரைப்பாள் என முன் மொழியும்போதும் கிருஷ்ணன் சொல்கிறான் ”ஆனதைச் செய்வோம்”

உணர்சிகள் ஏதும் கலவாத லௌகீக விவேகம். ஆகையால்தான் அவனுக்கு குருவி எனும் தாயின் தவிப்பும் புரிகிறது. வாதத்தின் முன் புன்னகையுடன் தோற்கவும் தெரிகிறது.

இத்தகு ஒருவனை குருசேத்திரதில் ஆயுதம் எந்தா வண்ணம் நிறுத்திய ‘விதி’ எது?

உணர்சிகள் ஆயுதங்கள் கொண்டு தங்களை நிறுவிக்கொள்ள

விவேகம் சாட்சியாக அமர்ந்திருக்கிறது.

நீலம் நாவலில் ஒரு வரி வருகிறது குரு சேத்திரத்தைப் பார்த்த விழிகள்.

இனிய ஜெயம், பிறரது பார்வையில் வித விதமான ஆளுமையாக உருவெடுத்து வந்த கிருஷ்ணன், நேர்க்காட்சியில் நாடிழந்தவனாக தோல்வியின் பாரத்தை சுமந்தவனாக அறிமுகமாவது இனிய முரண் நகை.

ஆக கிருஷ்ணன் வந்தே விட்டான்.

கடலூர் சீனு

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைமருந்தென வேண்டாவாம்!
அடுத்த கட்டுரைஅஞ்சலி : செல்வ கனகநாயகம்