வெண்முரசு வாசகர் விவாத தளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழா நடந்து முடிந்த பின்பு நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதியிருந்தேன். விழா வீடியோ இருக்கிறதா என்று கேட்டு. அது இல்லை, தேவையில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆனால் இப்போது வெண்முரசு விழாவை வீடியோ பதிவுடன் மட்டுமில்லாமல் நேரடி ஒளிபரப்பு முயற்சி, தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு என்று பல படிகள் மேலே சென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஃபேஸ்புக் பக்கம், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் வாழ்த்து வீடியோக்கள் என்று தொழில் நுட்பத்தின் மூலம் மக்களை அணுகும் அத்தனை முயற்சிகளும் செய்தது மகிழ்ச்சி அளித்தது. அப்படி மக்களிடம் சென்றடைய வேண்டிய ஒரு மகத்தான படைப்பு வெண்முரசு.

இந்த முயற்சிகளில் மேலும் ஒன்று சேர்க்கலாம் என்று தோன்றியது. வெண்முரசு வாசக விவாத தளம் ஒன்று உருவாக்கலாமே என்று. நீங்கள் அதற்கென ஒரு விவாத தளம் ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்று தெரியும். ஆனால் அது எழுத்தாளருடன் நடக்கும் விவாதம். இன்னும் சொல்ல போனால் அது கேள்வி பதில் மற்றும் வாசகர் கடிதங்கள். நீங்கள் ஒரு முறை பதில் எழுதியவுடன் அங்கு விவாதம் தொடர்வதில்லை. கமென்ட்களின் மூலமே விவாதம் நடக்க முடியாது என்பது என் எண்ணம்.

மேலும் சிறு சிறு சந்தேகங்களை வாசகர்கள் உங்களுக்கு எழுதுவதற்கு தயக்கம் இருக்கும். சில சொற்களின் அர்த்தங்கள், புரியாத வரிகள், சில நுணுக்கங்கள் ஆகியவற்றை விவாதிப்பதற்கு ஒவ்வொரு முறையும் உங்களுக்கு மின்னஞ்சல் செய்வது சாத்தியமல்ல. அப்படி செய்தால் உங்களுக்கு அதை படிக்கவே நேரம் சரியாயிருக்கும். நீங்களே சில விஷயங்களை வாசகர்களாலேயே தீர்த்து கொள்ள வேண்டியவை என்று சொல்லியிருக்கிறீர்கள்.

அப்படி ஒரு விவாத தளம் ஆரம்பித்தால் அது வாசகர்களாலேயே நிர்வகிக்கப்படும். திரும்ப திரும்ப கேட்கபடும் கேள்விகளுக்கு வாசகர்களே பதில் கூறிவிடுவார்கள். நேர்மையற்ற வசைகளை மட்டுமே வைப்பவர்களை எளிதில் ஓரங்கட்டி விடலாம். நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் வந்து உங்கள் விளக்கங்களையும் பதிவிடலாம்.

வெண்முரசை பலர் வசிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் வாசகர்கள் சிதறி கிடக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் வெண்முரசு படிக்கும் இருவர் இருப்பதே அரிது என்று தோன்றுகிறது. அதை விவாதிக்கும் நன்பர்கள் அமைவதும் அரிது. இவர்கள் அனைவரும் ஒன்று கூடும் ஒரு இடமாக இந்த விவாத தளம் அமைய கூடும் என்று நிணைக்கிறேன். புது வாசகர்களுக்கு தேர்ந்த வாசகர்களின் வழிக்காட்டல் கிடைக்கும்.

உங்கள் கருத்து என்ன? நீங்கள் சம்மதித்தால் நான் கூகுல் குழுமம் ஒன்று தொடங்கி நிர்வகிக்க தயார். இல்லை, வேறு யார் செய்தாலும் மகிழ்ச்சி தான்.

நன்றி
ஹரீஷ்

அன்புள்ள ஹரீஷ்

ஆரம்பிக்கலாம்

ஆனால் அதை ஒருவர் ஒவ்வொரு நாளும் மாடரேட் செய்யவேண்டும். அது சில்லறை பூசல்கள், பரஸ்பர மட்டம்தட்டல்கள், போலிப்பெயரில் வந்து நக்கல்செய்துவிட்டு போவது , அரசியல் விவாதங்கள் என்று போகக்கூடாது

பொதுவாக நம்மவர்களுக்கு பொதுவெளியில் பேசத்தெரியாது. அவர்கள் பேசுவது பெரும்பாலும் சினிமா கொஞ்சம் பரஸ்பர நையாண்டி, மிகக்கொஞ்சம் அன்றாட அரசியல். எந்தப்பேச்சையும் இந்த எல்லைக்குள் இழுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அதைக் கட்டுப்படுத்தி சீரான விவாதம் நிகழச்செய்வது மிகக்கடினம்

ஜெ

ஜெ,

நான் ஒரு கூகுல் குழுமம் தொடங்கி இருக்கிறேன்.

https://groups.google.com/forum/#!forum/venmurasu-readers-discussions

வாசகர்கள் வந்து சேரட்டும். இல்லை என்றாலும் என்னளவில் இதை பயன்படுத்தி கொள்கிறேன்.

முயற்சி செய்கிறேன். கையாள முடியாமல் போனால் கை விட்டு விடுகிறேன்.

ஹரீஷ்

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைபத்தாம் வகுப்பு தமிழாசிரியைக்கு…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 37