«

»


Print this Post

மலையாளியும் தமிழ்நாடும் :கடிதம்


   அன்புள்ள ஜெ,

இந்தக் கடிதத்தை தனிப்பட்டமுறையில் எழுதுகிறேன். இங்கே நான் பணியாற்றும் இடத்தில் உள்ள நண்பர்களை புண்படுத்த விரும்பவில்லை என்பதனால் என் பெயரை பிரசுரிக்கவேண்டியதில்லை. நான் நன்றாகவே தமிழில் எழுதுவேன். ஆனால் அலுவலகத்தில் தமிழில் எழுத முடியாது. தமிழ் மென்பொருட்களில் எனக்குப் பழக்கமும் இல்லை. ஆகவே ஆங்கிலத்திலே எழுதுகிறேன்.

உங்கள் இணையதளத்தில் மலையாளிகளை நாய்கள் [பட்டிகள்] என்று சொல்லி ஒரு கடிதம் வந்திருந்தது. நீங்களும் அதை பிரசுரித்திருந்தீர்கள். ஒருநாள் தாண்டியும் அது எடிட் செய்யப்படவில்லை. அதனால் நான் புண்படுகிறேன் என்றும் உடனே எடிட் செய்யுங்கள் என்றும் நான் சொல்ல வரவில்லை. அந்த நண்பரின் மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன். அந்தமனநிலை உள்ளவர்கள் எங்கேயும் இருப்பார்கள் என்று சொல்லவே அதை சுட்டிக்காட்டினேன்.

நான் ஈழவ சமூகத்தைச் சேர்ந்தவன். என் தாத்தா  பாலக்காட்டில் இருந்து சிறுவயதில் சென்னைக்கு ஓடிப்போய் அங்கே ஒரு பேக்கரியில் வேலைபார்த்தார்.அப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சென்னைதான் மலபார் பகுதி கேரளத்துக்கும் தலைநகரம். ஆகவே ஏராளமான மலையாளிகள் சென்னையிலே தொழில்களும் வேலையும் பார்த்தார்கள். மொழிவழியாக பார்க்க ஆரம்பிக்கவில்லை.

என் தாத்தா 1952 முதல் ஒரு பேக்கரியைச் சொந்தமாக நடத்தினார். பேக்கரி மிக நன்றாக நடந்துகொண்டிருந்தது. என் அப்பாவின் சகோதரிகள் கல்லூரிக்கு காரிலே போய்ப் படித்தார்கள். அப்போது 1971  என்று நினைக்கிறேன், முதல்முறையாக கலைஞர் ஆட்சிக்கு வந்தார். அவர் மலையாளிகளுக்கு எதிராக கடுமையாக வெளிப்படையாக பேசினார். அந்தப்பேச்சை தினமணி போன்ற பத்திரிகைகளும் காமராஜரும் கடுமையாகவே கண்டித்தார்கள். ஆனால் திமுகவினரால் சென்னையில் உள்ள மலையாளிக் கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டன.

சென்னையில் அப்போது மலையாளிகள் நடத்திவந்த இரண்டாயிரத்துக்குமேல் டீக்கடைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான கடைகள் அப்போது மூடப்பட்டன. சொந்தமாக இடம் வைத்திருந்த சிலர் மட்டும்தான் தப்பித்தார்கள். மற்றவர்கள் கிடைத்த விலைக்கு கடைகளை விற்றுக்கொண்டு ஓடினார்கள். சென்னையில் மலையாளி டீக்கடைகளின் ஆதிக்கம் அங்கே முடிவடைந்தது. என் தாத்தா கடையை மூடிவிட்டு பாலக்காட்டுக்குச் சென்றார்.

பாலக்காட்டில் தாத்தா ஒருபேக்கரி வைத்தார். அது சரியாக போகவில்லை. அப்போது பாலக்காடு சின்ன ஊர். விவசாயமும் நன்றாக நடக்கவில்லை. ஆகவே கொஞ்சம் கொஞ்சமாக வறுமை வந்து நோய் வந்து இறந்தார். என் அப்பா பிடெக் படித்துவிட்டு 1975ல் கோயம்புத்தூரில் ஒரு மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். தீவிரமான தொழிற்சங்கவாதியாக இருந்தார். ஆகவே வேலையை இழந்து ஒரு சிறிய துணிக்கடை நடத்திவந்தார். கடைசிவரை தீவிரமான கம்யூனிஸ்டாகவே இருந்தார். சென்றவருடம் இறந்து போனார்.

நாங்கள் நான்குபேர். நான்குபேருமே நன்றாகப் படித்து வேலையில் இருக்கிறோம். நான் இப்போது சிங்கப்பூரில் ஒரு கெமிக்கல் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இது என் குடும்பத்தின் கதை. நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே தமிழ்நாட்டிலேதான்.

என் சிறுவயது முதல் நான் எப்போதுமே மலையாளி என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டே வந்திருக்கிறேன். என்னை எல்லாருமே மலையாளத்தான் என்றுதான் அழைப்பார்கள். தமிழ் சினிமாவில் மலையாளப்பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றுதான் காட்டுவார்கள். என்னுடைய சகோதரிகளைப் பற்றி என்னிடமே கேவலமாக பேசுவார்கள். பல நண்பர்களே கூட பேசியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மலையாளி என்றாலே டீக்கடை நாயர்தான். நான் நாயர் இல்லை. என் அப்பா டீக்கடையும் வைக்கவில்லை. ஆனால் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கூட ‘நாயர் சூடா ஒரு சாயா எடு’ என்று என்னைச் சொல்லி கிண்டல் செய்வார்கள். நான் வகுப்பில் முதலிடம் பெறும் மாணவன். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஆசிரியர் கூட என்னை மதிப்பாக நடத்தியதில்லை. ஏதாவது சின்ன தப்பு நடந்தால்கூட ‘பேசாமல் கேரளத்துக்கு போடா’ என்றுதான் சொல்வார்கள்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து சின்ன தப்புசெய்தேன். ஆசிரியர் ஒருவர் வகுப்பில் ஓரமாக நின்று நான் அரைமணிநேரம் டீ ஆற்ற வேண்டும் என்று சொன்னார். நான் கண்ணீர் விட்டுக்கொண்டு அரைமணிநேரம் வெறும்கையால் டீ ஆற்றினேன். சுருக்கமாகச் சொல்கிறேனே, என்னை பிராமணர் அல்லாத ஒரு தமிழ்நாட்டுக்காரர்கூட மதிப்பாக நடத்தியதில்லை. கஞ்சி என்றுதான் கூப்பிடுவார்கள். என்ன சோகம் என்றால் எனக்கு மலையாளம் பேசவோ எழுதவோ தெரியாது.

ஒரு நண்பர் கேரளத்திலே அவருக்கு வந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். எனக்கு அதைவிட பெரிய பிரச்சினை வந்தது. எனக்கு நெட்டிவிட்டி சர்டிபிகெட்டை தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே பாஸ்போர்ட் கிடைக்கவில்லை.  துபாய்க்கு போவதற்கான ஒருவேலையும் இந்தோனேஷியா போவதற்கான வேலையும் இதனால் தவறிப்போயிற்று. நான் எல்லா சர்ட்டிபிகெட்டுகளையும் கொடுத்தாலும் தூக்கி கீழே போட்டுவிட்டு ‘மலையாளத்தானுங்க வந்திருவானுக போங்கடா’ என்று சொல்வார்கள். எத்தனை நிகழ்ச்சிகள். நான் பல இரவுகளில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்.

கேரளத்துக்குப் போய் நேட்டிவிட்டி சர்டிபிகெட்டுக்கு முயற்சி செய்தேன். அங்கே நிலம் வீடு எதுவுமே இல்லை. ஆகவே தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு வருடம் முயற்சி செய்தபிறகு புதிதாக வந்த ஒரு பிராமண அதிகாரி எனக்கு நேட்டிவிட்டி சர்ட்டிபிகெட் தந்தார். சிங்கப்பூர் வந்துவிட்டேன். சிங்கப்பூர் வருவதற்காக விமானநிலையத்தில் நின்றபோதும்கூட என்னை இரண்டு தமிழ் ஆபீசர்கள் கூட்டிக்கொண்டு போய் கடுமையாக அவமானம் செய்து விசாரித்தார்கள். ‘மலையாளத்தானுங்க கோயம்புத்தூர் அட்ரஸ்ல போலி பாஸ்போர்ட் எடுக்கிறானுங்க’ என்று சொன்னார்கள். ‘அங்கே என்ன சாயா போட போகிறாயா?” என்று ஒரு அதிகாரி கேட்டார்.

இங்கே நான் ஒரு தமிழ்ப்பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர். என் அலுவலகத்தில் உள்ள நண்பர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இங்கே அந்த பிரச்சினை இல்லை. ஏனென்றால் எல்லாருமே ‘வந்தேறிகள்’ தான். இங்கே சிங்கப்பூரிலே பிறந்து வளர்ந்த தமிழர்கள் வேலைக்கு வந்த தமிழர்களை கேவலமாக பார்ப்பார்கள். அதைப்பற்றிச் சொல்லி எல்லாரும் ரத்தக் கொதிப்புடன் பேசிக்கொள்வார்கள்.

இதுதான் மனிதர்களின் மனநிலை. எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. இன்று பத்துலட்சம் தமிழர்கள் கேரளத்தில் நிரந்தரமாகக் குடியேறியிருக்கிறார்கள். 1990 களில்  தமிழ்நாட்டில் வரட்சி வந்தபோது இருந்து பிழைப்பு இல்லாமல் கூலிவேலைக்கும் வீட்டுவேலைக்கும் போய் குடியேறியவர்கள். எர்ணாகுளம் போன்ற இடங்களில் இந்த தமிழர்கள் பல பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ரேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அரைலட்சம்பேருக்கு அரசாங்க வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல மலைப்பகுதிகளில் பத்துலட்சம் தோட்டத்தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

அங்கே இன்றுவரை எந்த  பொறுப்பான அரசியல்வாதியும் அவர்களை இழிவாகவோ ஊரைவிட்டு துரத்த வேண்டும் என்றோ பேசியதில்லை. ஒரு கம்யூனிஸ்டுத் தலைவர் அப்படி பேசுவார் என்று நினைக்கிறீர்களா? முல்லைப்பெரியார் போன்ற பிரச்சினைகள் வந்து தமிழ்நாட்டிலே கேரள வண்டிகள் தடுக்கப்பட்டபோதுகூட அப்படி ஒரு உணர்ச்சி அங்கே வந்ததில்லை. அங்கே சென்று குடியேறிய தமிழர்கள் அடித்தள மக்கள். அவர்களில் பலருக்கு படிப்பறிவு இல்லை.  ஆகவே அவர்களை கிண்டல்செய்யக்கூடிய ஒரு மனநிலை அங்கே உண்டு. அது தவறுதான். ஜெயராம் போன்ற முட்டாள்கள் அத்துமீறி பேசுவது அராஜகம்தான். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் சேட்டுகளை எப்படியெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மக்கள் டிவியிலே சேட்டுகளை கிண்டல்செய்து ஒரு நிகழ்ச்சியே வருகிறதே. யாராவது கண்டிருத்திருக்கிறார்களா?

மலையாளப்படங்களில் அவ்வப்போது தமிழ்நாட்டை கிண்டல்செய்து காட்சிகள் வரும். அதேபோல தமிழ்சினிமாவிலும் மலையாளிகளை கிண்டல் செய்கிறார்கள். ஆனால் ‘கறுத்தபட்சிகள்’ என்று ஒரு படம் வந்தது. கமல் இயக்கியது. அதில் மம்மூட்டி தெருவில் அயர்ன் செய்யும் தமிழ்நாட்டுத் தொழிலாளராக வந்தார். தமிழ் மக்களைப் பாராட்டி சகோதர உணர்ச்சியுடன் நெகிழ்ச்சியாக எடுக்கப்பட்ட படம் அது. அவர்களை அன்னியர்களாக நினைக்கும் சிலருக்கு எதிரான படம் . அது மட்டும் ஏன் நம் கண்ணுக்கு படுவதில்லை?

எங்கும் சாமானிய மனிதர்களுக்கு பிற மனிதர்களை வெறுக்கும் மனநிலை இருக்கும். இங்கே நான் வேலைபார்க்கும் இடத்தில் ஒரே ஒருவர்தான் தாழ்த்தப்பட்ட தமிழர். அவரைப்பற்றி மற்றவர்கள் இழிவாகவே பேசுவார்கள். தங்களுக்குள்ளேயே மற்றவர்களை இப்படி நடத்துபவர்கள் வெளியே இருந்து வந்த ஒருவரை தாழ்வாக நடத்துவது மிகவும் சாதாரணமான செயல்தான். அதைவைத்து நாம் ஒரு மொழியையோ இனத்தையோ வெறுத்தால் அதுதான் தப்பானது

என் மன உறுத்தல் ஒன்றை சொல்கிறேன். சின்ன வயதிலேயே எனக்கு கம்யூனிஸ்டு தலைவர்களான கெ.டி.கெ. தங்கமணி, கிருஷ்ணன், வி.பி.சிந்தன் முதலியவர்களை தெரியும். தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள ஏழை தொழிலாள மக்களுக்காக வாழ்க்கையே அர்ப்பணம் செய்த கேரள கம்யூனிஸ்டுகள் பலர் உண்டு. சொந்தமாக எதையுமே அடையாத தியாகிகள் அவர்கள். அவர்கள் ஒருவரைப்பற்றிக்கூட ஒரு வாழ்க்கைக் குறிப்பு தமிழ்நாட்டிலே எழுதப்பட்டதில்லை. காரணம் அவர்கள் மலையாளிகள் என்ற வெறுப்பு. அவர்களின் சேவையால் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட தொழிலாளர்கள்கூட அவர்களை வெறுக்கிறார்கள். இதுதான் நடைமுறை.

யாரோ எதையோ சொன்னார்கள் என்பதற்காக வெறுப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதற்காகவே இந்த நீண்ட கடிதத்தை எழுதுகிறேன். வெறுப்பதற்காக எதையாவது காரணமும் கண்டுகொள்ளவேண்டாம். படித்தவர்கள் வெறுப்புக்கு எதிராகத்தான் போராட வேண்டும்.

அன்புடன்

பி

[சுருக்கம்/மொழியாக்கம்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6629

15 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  அற்புதம். பிரிவினைக்காகவும், வெறுப்பிற்காகவும் நாம் பல்லாயிரம் காரணங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஒன்றுபட ஒரே ஒரு காரணம் போதும். மானுடம்.

 2. uthamanarayanan

  In the name of comedy , both sides of Malayalam and Tamil movies , make fun of Tamils and Malayalees respectively , which is one way of business although claimed to be as if something ‘art’ etc., likewise in all the fields you can find people . Some suffer from complex of inferiority and some superiority which ultimately divide the man from man.Here even those so called educated also behave the most wrong way possible .Real education is realizing ‘ that thing’ which resides in all humans.But the problem in human society is such kind of people are a lowest percentage who although meet defeat often , should always try for a better society with regard to caste,creed, language, colour,region etc.The greatest liberation is , those who suffered in the hands of fanatics should not carry that in their minds, which may cripple the path of looking at society with equanimity.

 3. kargil_jay

  secularists may well find that my complaints are baseless misunderstandings. But my heart knows the truth.
  Also, it is very common for keralites to refer tamils as ‘paandi’ which is meant to be degrading term.
  claiming ‘Tamilnadu becoming Germany’ is stupidity. Then what to call when karnataka erupts?
  I have no regrets in telling plain truth, that was solely caused by arrogance or due negligence caused by racist behaviour of not all but few malayalies. I have evidences for truthful incidents and have a heart felt moment and wrote it here. [ If you have doubt, please check in Appllo hospitals, Greams Road, chennai ] :
  http://vaikkal.blogspot.com/2010/03/blog-post.html

 4. Ramachandra Sarma

  //Claiming ‘Tamilnadu becoming Germany’ is stupidity. // I am just talking about TN. How good are we to pass irresponsible comments like these on Malayalam Speaking community? KA has taken the TN example, that’s it. Have you ever heard, anyone talking about “hindi blood” “Hindi Valour” and all? Lets accept gracefully that we have a majority of Language Fanatics here in TN. Whom are we jockeying?

 5. Sanjeevi

  The simple logic is “Thadi eduthavan Thandalkaran”. no matter tamilan, malayalee, maratian, american, necro, dalits, devars, etc.

 6. Ramachandra Sarma

  I agree with Sanjeevi. For a change ;) (jus kidding dude)

 7. L Muthuramalingam

  Dear Sri P, I am really very sorry for the experience you had with Tamil Nadu. But there was nobody to console me while i was in New Delhi (1983-86). Even in Dec.,09, I faced the same experience in Mysore Bus stand. But there were all in the game, Sri P. You should not blame Tamil Nadu alone for this matter. You might not have heard about hindi serials showing the dhotiwalas speaking Hindi in a Tamil accent. There is every where majority will make fun of minority.

 8. முஉசி

  காலத்தையும் இடத்தையும் பொறுத்து மனித குழுமங்கள் முன்னிறுத்தபடுவதும் பின்தள்ளப்படுவதும் இயல்பாயிருக்கிறது. மனிதத்தை மதிக்கும் கருத்துப்பரிமாற்றங்கள் உன்னதமான புரிதலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.
  To understand every thing is to forgive every thing.

 9. perumal

  மிஸ்டர் பி! சார்,

  இங்கு கொங்கு பகுதியில் இருந்து நிறைய பேர் கேரளம் சென்று கந்து வட்டி தொழில்? செய்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார்கள்.

  என்னை பொறுத்தவரையில் கேரளாவில் எனக்கு நல்ல அனுபவங்களே ஏற்பட்டுள்ளது. இந்த மாதக் கடைசியில் கேரளா செல்கிறேன்.

  சர்மா சாரின் பின்னூட்டங்களை மீண்டும் காண்பது சந்தோசம் தருகிறது

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 10. kargil_jay

  எனக்கு ஏற்பட்ட எதிர்மறை அனுபவங்கள் பிறருக்கு ஏற்படவில்லை என்பது பெரும்பாலும் நல்லவர்களே என்பதை காண்பிப்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் குறைந்த பட்சம் ரயில் பயணங்களில் கூட எவருக்கும் பிரச்னைகள் ஏற்படவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யமே. ஒருவேளை நான்தான் எல்லா பிரச்னைக்கும் காரணமா என்று அலசினால் அப்படியும் தெரியவில்லை. என்னுடைய பல டஜன் பயண அனுபவங்களில் குடகு மலையில் ஒருமுறையும், கேரளாவில் இரு முறையும் பிரச்னைகள் நேர்ந்திருக்கின்றன. ரேஷியோ என்று பார்த்தால் கேரளாவில் நடந்தது மற்ற மாநிலங்களைவிட மிக அதிகம்.

  Sri. Ramachandra Sarma,
  Tamilians are not language fanatics, though it appears so. tamil blood etc are created by our own politicians. You must have watched what happened when Srilankan Tamils died in last year. Then Karunanidhi was the owner :-) of Tamilnadu shop, so he did not want to spoil daily business so he fiddled nicely and 99% tamils were calm.. What was the reaction of people? Please tell me what happened to their fanatic attitude then? Do you think Karunanidhi or Annathurai or MGR in first place are Tamilians? What incident caused by Tamilians made Kannadigas to rub Tamilians behaviour? If Tamil people are language fanatic, how do you call Telugu people who died to seperate Andra from tamilnadu?

 11. pgomat

  நீங்கள் சொல்வது உண்மையானால் வெட்கி தலை குனிய வேண்டியது அவசியம். நான் சென்னை’யில் படித்தவன், நெறைய மலையாள, தெலுங்கு நண்பர்கள். மலையாளத்தான், கொல்டி, முஸ்லிம் நண்பரை முக்கா என்று தான் எனது பல நண்பர்களும் கூப்பிடுவார்கள் அனால் வன்மத்தோடு அல்ல. ஒத்தா ஒம்மாள மாதிரி, நான் கொஞ்சம் கண்ணியம் பார்ப்பதால் அப்படி கூபிடுவதில்லை. நீங்கள் சொல்வதை கேட்டு என் மனம் பாரமடைந்து விட்டது.

 12. Pulikesi

  இது சம்பந்தமாக வந்த தமிழர் ஒருவரின் பதிவிலிருந்தும் மலையாளி ஒருவரின் பதிவிலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் சில மனிதர்கள் எங்கும் இப்படி கீழ்த்தரமாகத்தான் இருக்கிறார்கள். கூட்டமாக திரளும் பொழுது ஒரு வித அதிகார மமதை வந்து விடுகிறது மனிதர்களுக்கு. அதை கொண்டு மற்றவரை ஏளனபடுத்துவதும் மலினபடுத்தி சுகம் கான்பதும் என மனித மனம் சீரழிந்து போய் இருக்கிறது.

  நிற்க… இது குழு மனபான்மையின் குற்றம் மட்டுமே என முடிவுக்கு வரும் முன், குற்றம் சாட்டுபவர்களின் மன நிலையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி உள்ளது. தனக்கு மட்டுமே இது போல் எதிர்மறை நிகழ்ச்சிகள் நடக்கிறது என நினைக்கும் மனம் கூட இவ்வகை குற்றசாட்டுகளுக்கு தூண்டுகோலாய் அமைகிறது. தன்னிரக்க நிலையில் இருக்கும் மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்வில் நிகழும் ஒதுக்குதல்களை தங்களுக்கு மட்டுமே நிகழ்வதாகவும் அதற்கு தங்கள் அடையாளம் மட்டுமே காரணம் எனவும் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். அந்த அடையாளத்தை எதிரில் இருப்பவரை விட இவர்கள்தான் கெட்டியாக பிடித்து கொண்டிருக்கிறார்களோ என தோன்றுகிறது. வாழ்க்கை போக்கில் எப்பொழுதாவது நிகழும் இச்சிறு சம்பவங்களை ஊதி பெருக்கி அவல புலம்பல் புலம்புகிறார்களோ எனவும் தோன்றுகிறது. என்னுடைய தனிபட்ட வாழ்விலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கேரளாவில் வசித்த சுமார் ஒரு வருட காலத்திலும், கர்ணாடகாவில் வசித்த மூன்று வருட காலத்திலும், சில முறையேனும் நான் தமிழன் என்ற காரணத்தினால் அவமானபடுத்தபட்டதை உனர்ந்து இருக்கிறேன், ஆனால் அந்த சம்பவங்களை கழித்து விட்டு திரும்பி பார்த்தால், இனிமையான உனர்வுகளையே ஒரு சமுகமாய் மலையாளிகளும் கண்னடர்களும் எனக்கு கொடுத்து உள்ளார்கள் என நினைக்கிறேன். ஒரு ரகளையில் ‘எடொ தமிழா, பட்டியுன்ட மோனெ’ என குறிப்பிடபட்டு அடிவாங்கியதை பொருட்படுத்தாமல், நான்கே நாட்களில் பழகி வீட்டிற்க்கு அழைத்து விருந்திட்ட ஒரு மலையாள நன்பரை தான் நான் நினைவில் வைத்து கொள்வேன்.. கொள்ளவேண்டும்.

  மனசாட்சியை தொட்டு சொல்லட்டும், இங்கு கடிதம் எழுதிய தமிழ் நன்பரும், மலையாள நன்பரும், இவர்கள் சொல்லும் இந்த ஒரிரு சம்பவங்களை குப்பைக்கு தள்ளி விட்டு பார்த்தால், மிச்சமுள்ளதில் இனிய நினைவுகளே இல்லையா என்று?

  ஒரு சமூகமாய் நம்மை அடையாளபடுத்தி கொள்வதிலும், மற்றவரை அடையாளபடுத்துவதிலும் இருந்து விலகும் மனமே மனிதத்தை உனர முடியும்.

 13. V.Ganesh

  மறுபடியும் சொல்கிறேன். இது மனிதர்கள் சம்பந்தமான விஷயம். இதற்கு மதம், மொழி, நாடு என்று கிடையாது. தன் அதிகாரம்/ வாழ்வு அசைகக்கப்பட்டால் அனைவரும் இப்படி தான் இருப்பார்கள்.

  உதாரணம் காவேரி பிரச்னை. அவன் அனுபவித்தது போக நமக்கு தருவான். ஆனால் நாம் ஏற்கனவே அனுபவித்து கொண்டிருக்கிறோம். இது தான். எங்குமே இது தான். நண்பர் கூறியது போல் மனிதத்தை உணர வேண்டும்.

 14. stride

  நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற ஒரு வினோதமான நாடு உலகில் எங்குமே இல்லை. பார்த்தால் ரஷ்ய பகுதி நீக்கிய ஐரோப்பா அளவு பெரிது இந்தியா. ஐரோப்பாவில் இருப்பதை விட அதிகமான இனங்களும்,மொழிகளும், மதங்களும் இந்தியாவில் உண்டு. ஒவ்வொரு இந்திய மாநிலமும் ஐரோப்பிய நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்டவை. அளவில் ஆந்திரா இத்தலி அளவுக்கு பெரியது. இந்தியா போன்ற முன்னேறும் நாட்டில் இன மொழி வேறுபாடுகள் இருக்க தான் செய்யும். ஒவ்வோரு மாநிலத்தையும் ஒரு தனி நாடாகவே கருதிக்கொள்கிறேன். இங்கே வேறுபாடுகள், பூசல்கள் இல்லாதிருந்தால் தான் ஆச்சரியம். ஆனால் அமெரிக்காவில் இன்னமும் கறுப்பினத்தவர் எதிர்கொள்ளும் இனவெறி அளவுக்கு ஒரு மலையாளி தமிழ்நாட்டிலோ ஒரு தமிழன் கேரளத்திலோ எதிர் கொண்டிருக்க மாட்டர் என்பது நிச்சயம்.

  முன்பு திரு புலிகேசி அடிகோடிட்டதை போல நானும் உங்கள் கடிதம் முழுதும் சுய இரக்கம் ததும்புவதை காண்கிறேன். எங்குமே போராடாமல் எதுவும் கிட்டாது என்று கருதுகிறேன். அதற்காக பட்டி என்றவுடன் எகிறி கொட்டையில் மிதிக்க சொல்லவில்லை. சாதாரணமாக எதிர் கொண்டு கிண்டல் செய்யும் நபரை அவர் செய்வது பிடிக்கவில்லை என்று சொன்னாலே போதும். தொண்ணூறு சதவிகிதம் உடன் மாற்றம் தெரியும். இது வயதானவர், சிறுவர், படித்தவர், படிக்காதவர், மேலாளார், ஆசிரியர் அனைவரிடமும் வேலை செய்யும். கொலை வெறி பிடித்த மந்தையே எதிர்ப்பை கண்டால் சிறிது தாமதிக்கும். நான் என் அனுபவத்தில் கண்டது – தென் தமிழகத்தில் கல்லூரியில் படிக்கும்போது என் நண்பர் குழுக்கு நெருக்கமாக இருந்த ஒரு இஸ்லாமிய ஜூனியர் பையனை செல்லமாக முக்கா என்று கிண்டலடிப்பர். விடுதியில் அவன் ஒருத்தன் தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன். சிறிது நாள் பொறுத்து அவன் சீனியர்களை எதிர்கொண்டு அப்படி கூப்பிடாதீர்கள் என்று மென்மையாக கேட்டான். உடனடியாக அனைவரும் அப்படி கூப்பிடுவதை நிறுத்தி விட்டோம். அவன் மெளனமாக இருந்திருந்தால் அவனே கிண்டலாக எடுத்துக்கொள்கிறான் என்று அது தொடர்ந்திருக்கும். அதன் பிறகு அதை பற்றி எப்போது நினைவு கூர்ந்தாலும் எனக்கு வியப்பாக இருக்கும். ஒரு சின்ன எதிர்ப்பு எப்படி எங்களை மாற்றியது என்று.

  இழிவு செய்யும் எவரும் தாங்கள் செய்வதை நிறுத்த எதிர்ப்புகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அது இல்லாவிடில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  சிவா

 15. Prakash

  இன்று எனக்கு ஒரு விதயாசமான அனுபவம். நான் நியூ யோர்க்கில் வேலை செய்கிறேன். ஒரு அலுவலக நண்பர் மலையாளி. இன்று அவர் என்னிடம் வந்து என்ன நித்யா சாமி, திருட்டு சாமி எப்படி இருக்க அப்படின்னு கேட்டார். இத்தனைக்கும் நான் நித்யானந்தா விசிறி கிடையாது, அவரை பற்றி பேசியதும் கிடையாது.

  நான் ஏன் என்னை மணிரத்தினம், a.r.rahman அப்படின்னு சொல்ல கூடாதா ? நித்யா தான் கிடைத்தார என்று கேட்டேன். இவரை போய் எப்படி நீங்கலாம் ( தமிழர்கள்) வழிபடுறீங்க’நு கேட்டார் அதயேன் என்கிட்டே கேட்கிரீங்க’நு கேட்டேன். நீங்களும் சென்னை தானே என்று சொன்னார். நான் சென்னை தான் அனால் சென்னையில் உள்ள எல்லோருக்கும் தகப்பன் அல்ல என்று சொன்னேன்.

  இன த்வேஷம் நிறைய அடி மனதில் பலருக்கும் உள்ளது. தமிழர்களும் ஒன்னும் சலச்சவங்க இல்லை இன த்வேஷத்தில். இன்ஷா அல்லா, எங்களை திருத்து.

Comments have been disabled.