«

»


Print this Post

ஏன் எல்லாவற்றையும் பேசுகிறீர்கள்?


நீங்கள் ஒரு மாபெரும் படைப்பாளிதான் , புனைவுலகில் அசைக்க முடியாத இடத்தை அடைந்துவிட்டீர்கள் ,

ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்?

பீடத்தை நிறுவிக்கொள்ள முயல்கிறீர்களா ? உங்கள் படைப்பால் இழுக்க படுபவர்களை மற்ற அபுனைவுகள் மூலம் தொடர்ந்த தக்க வைத்துக் கொள்ள செயல்படுகிறிர்கள் ,

(என்னுடைய கேள்வியல்ல , சில நண்பர்களுடையது , பதில் அளிக்க வேண்டுமெனில் மட்டுமே அளிக்கலாம் , எனக்கு பதில் உண்டு ,மனதுக்குள் , அவர்களுக்கு தெளிவாக சொல்ல இயலவில்லை )

அன்புடன்

Arangasamy.K.V

அன்புள்ள அரங்கசாமி

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விதான். ஆனால் அடிக்கடி நான் பதில் சொல்லிவிட்ட கேள்வியும்கூட.

இம்மாதிரி கேள்விகளை முன்வைப்பதற்கு முன்னதாக கேட்பவர்கள் இக்கேள்வியை பொதுமைப்படுத்த முயலவேண்டும். ஜெயமோகன் இதையெல்லாம் எழுதலாமா என்ற கேள்வியை எழுத்தாளர்கள் இதையெல்லாம் எழுதலாமா என்று கேட்டுக்கொண்டு, தானறிந்த எழுத்தாளர்களை எல்லாம் அதைச்சார்ந்து பரிசீலித்துவிட்டு, அதன்பின்னரும் அதே கேள்வி எஞ்சுமென்றால் மட்டுமே என்னிடம் கேட்க வேண்டும்.

தமிழையே எடுத்துக்கொள்வோம். இலக்கியதளத்திற்கு வெளியே விரிவாக கருத்துக்களை முன்வைத்த எழுத்தாளர்களை நிராகரிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? நாஞ்சில்நாடன் அரசியல், ஆன்மீகம், இசை, சமூகம் என எல்லா தளங்களிலும் ஆணித்தரமான கருத்துக்களை எழுதிவருகிறார். அதற்கு முந்தைய தலைமுறையில் சுந்தர ராமசாமி விரிவாக பிற விஷயங்களை எழுதினார். ஜெயகாந்தன் முப்பது வருடம் அரசியல் சமூகத் தளங்களில் கருத்து உருவாக்குநராகச் செயல்பட்டார். அதற்கு முன் பாரதி… அவன் தொடாத துறைகளே இல்லை. இவர்கள் அனைவரையும் நிராகரித்துவிட்டு எஞ்சியவர்களை வைத்து தமிழிலக்கிய உலகைப்பற்றிப் பேசப்போகிறோமா என்ன?

மலையாளத்தில் சி.வி.ராமன்பிள்ளை, குமாரன் ஆசான் முதல் சக்கரியா வரை அத்தனை முக்கியமான எழுத்தாளர்களும் அரசியல் சமூகத்தளங்களில் கருத்துச் சொல்லிவந்தவர்கள். குவெம்பு , சிவராம காரந்த் முதல் யூ.ஆர்.அனந்தமூர்த்தி வரை அப்படித்தான். அவர்கள் தேவையில்லை என்றால் எழுத்தாளர்களில் எஞ்சுவது எவராக இருக்கும்?

எழுத்தாளனின் சமூக இடம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆழமான அவநம்பிக்கையில் இருந்தே இந்த கேள்வி எழுகிறது. அவனை ஒருவகை கேளிக்கையாளன் என்றே நம் சமூக ஆழ்மனம் இன்றும் நினைக்கிறது. இது நம் நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தில் இருந்து வந்த நம்பிக்கை. அவனை சிந்தனையாளனாக, ஏதேனும் முறையில் சமூகத்திற்கு வழிகாட்டுபவனாக, சமூகத்தின் முதன்மைப் பிரஜையாக நம் சமூக ஆழ்மனம் நினைப்பதில்லை.

ஆகவேதான் கவிஞன் ஓர் ஆட்சியாளன் முன் குனிந்து நின்று பரிசுபெற்று முகத்துதி செய்வதைக் கண்டால் நம் சமூகமனதுக்கு அது கேவலமாக படவில்லை. அவன் அதைச் செய்யலாம், இலக்கியவாதிதானே என்றே நாம் எண்ணுகிறோம். நம் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேருக்கு  இலக்கியவாதிகள் என்பவர்கள் சமூகத்தின் ‘பரிசிலை’ வாங்கிக்கொண்டு தொழுது நிற்க வேண்டியவர்கள் மட்டுமே. நாதஸ்வரக் கலைஞர்கள் ஊர்ப்பெரியமனிதர்களுக்கு சந்தனம்பூசிவிடவேண்டும் என்று எண்ணிய சமூகமனதின் பிம்பம் இன்றும் தொடர்கிறது.

நம் பெரியமனிதர்கள் இலக்கியவாதிகளை நடத்தும் பாவனையில் அதைக் கண்டிருக்கிறேன். ஒருவகை ‘புரவலர்’ பாசத்துடன், ‘கருணை’யுடன் நடந்துகொள்வார்கள். உபதேசங்கள் அளிப்பார்கள். தங்கள் வீட்டில் எப்படி எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் சோறு போடுவதுண்டு என்பார்கள். நம் கல்வித்தந்தைகள், துணைவேந்தர்கள் நடந்துகொள்ளும் முறையும் இதுவே. தமிழ்நாட்டில் இந்த நுண் அவமானத்தைச் சந்திக்காத எழுத்தாளனே இருக்கமாட்டான் — அவன் அதை அவமானமாகக் கொண்டானென்றால்.

ஆனால் நவீன இலக்கியவாதி என்பவன் நிலப்பிரபுத்துவகாலக் கலைஞன் அல்ல. அவன் தன்னை கேளிக்கையாளனாக நினைத்துக்கொண்டவன் அல்ல. அவன் தன்னை சமூகத்தின் அதிகபட்ச நுண்ணுணர்வுகொண்ட உறுப்பினனாக ,அதனால் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்புள்ளவனாக, சமூகத்தின் குரலாக ஒலிப்பவனாக உருவகம் செய்துகொண்டவன். பாரதி அப்படித்தான் தன்னை  உருவகம் செய்துகொண்டான். ஆகவேதான் அரசியல், கல்வி ,சுகாதாரம் ,தொழில் ,வர்த்தகம் என எல்லாவற்றைப்பற்றியும் அவன் எழுதினான். ஆனால் அவனை அவன் வாழ்ந்த சமூகம் நிலப்பிரபுத்துவ நோக்குடன் பார்த்தது. இதுவே அவனது அவலம். நக்கலாகவும் கிண்டலாகவும் புதுமைப்பித்தனும் இந்தச் சமூக அணுகுமுறையைக் குறித்து கடும் விமரிசனம் எழுதியிருப்பதைக் காணலாம்.

ஏன் எழுத்தாளன் இவற்றை எழுத வேண்டும்? மூன்று காரணங்கள். சமூகத்தின் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன. ஆகவே அவன் இயல்பாகவே எதிர்வினையாற்றுவதில் முதலாவதாக முன்வருகிறான். இரண்டாவதாக, பிற குடிமகன்களிடம் இல்லாத ஒன்று, மொழித்திறன், அவனிடம் உள்ளது. ஒரு எளிய குடிமகனின் குரலை எழுத்தாளன் மேலும் தீவிரமாக, உக்கிரமாக, முன்வைத்துவிட முடியும். அந்தப்பங்களிப்பை அவன் செய்வது என்றும் சமூகத்திற்கு உதவியானதே

மூன்றாவதாக, எந்தத் துறையிலும் நிபுணர்கள் சொல்வதற்கு வெளியே உள்ள சிலவற்றை எழுத்தாளன் அவனது நுண்ணுணர்வு மற்றும் அவன் கருவியாகக் கொள்ளும் கற்பனை மூலம் கண்டு சொல்ல முடியும். ஆய்வுமுறைபப்டி சொல்லபப்டும் கருத்துக்களுக்கு வெளியே நின்று உள்ளுணர்வு சார்ந்து அவன் பேச முடியும். ஆரோக்கியமான சமூகங்களில் அந்தக் கோணம் எப்போதுமே பொருட்படுத்தவும் படுகிறது.சிலசமயம் அவனது தரப்பு தர்க்கபூர்வமானதாக இல்லாமலிருக்கலாம். சிலசமயம் குழப்பமானதாக இருக்கலாம். சிலசமயம் போதிய தகவல்சார்பு இல்லாததாக இருக்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானது, காரணம் அவன் வேறு நுண்கருவி ஒன்றை கையில் வைத்திருக்கிறான்.

ஆனால் இந்தப் பேச்சுக்கு ஓர் எல்லை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஓர் எழுத்தாளன், ஒரு சமூகக்குடிமகனாக, குடிமக்களில் ஒருவனாக நின்று தன் கருத்துக்களை பதிவுசெய்யலாம். அதற்கு மேல் அவனுக்கு ஓரளவேனும் ஆர்வமும் பயிற்சியும் உள்ள துறைகள் சார்ந்து கருத்துக்கள் சொல்லலாம். முற்றிலும் தெரியாத துறைகள் சார்ந்து கருத்துச் சொல்வது பெரும்பாலும் சரியானதல்ல. நான் எப்போதுமே இந்த எல்லைக்குள் நின்றுகொண்டே என் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.

என் தெருவில் குப்பை அள்ளப்படாததைப் பற்றி, எனக்கு பேருந்துப்பயணத்தில் நிகழ்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேச நான் ஒரு சமூகக் குடிமகன் என்ற தகுதியே போதும். ஒழுங்காக வரிகளைக் கட்டியிருந்தாலே போதும். பொதுப்பிரச்சினைகளில் இந்த எல்லையை நான் தாண்டுவதில்லை. உதாரணமாக சமீபத்தில் ஒரு ஆவணப்படத்திற்காக மரபணுமாற்ற கத்தரிக்காய் குறித்து என் கருத்தைக் கேட்டார்கள். அதில்  ஒரு குடிமகனாக இத்தகைய அறிவியல் சோதனைகளுக்கு நம் நாடு களமாக ஆக்கப்படுவதைப்பற்றிய என் அச்சத்தையும் குழப்பத்தையும் மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

நான் ஆர்வமும் பயிற்சியும் கொண்டிருக்கும் தளங்கள் சில உண்டு. இலக்கியத்திற்கு அப்பால் இந்தியதத்துவம், தென்தமிழகம் மற்றும் கேரள வரலாறு, தென்தமிழக சமூகவியல், காந்திய சிந்தனைகள்  ஆகியவை அந்தத் தளங்கள். அவற்றில் கருத்துச்சொல்ல எனக்கு தகுதியில்லை என்று அந்தத் தளங்களைப் பற்றி ஓரளவேனும் அறிமுகம் உடைய  எவரும் சொல்ல மாட்டார்கள். அந்தத் தளங்களில் என்னுடன் விவாதிக்கத் தகுதியுடையவர்களாக நான் அவற்றின் நிபுணர்களையே தேர்வுசெய்வேன்.

இதைத்தவிர தொழிற்சங்க அரசியல், மற்றும் அதன் பொருளியல் தளங்கள் சார்ந்து எனக்கு இருபதாண்டுக்கால அனுபவம் உண்டு. மாற்றுமருத்துவம் என்னுடைய நெடுங்கால ஆர்வங்களில் ஒன்று. என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியிடம் இருந்து பெற்றுக் கொண்டது அது.

இந்த தளங்களுக்கு வெளியே எந்த அறிவுத்துறை குறித்தும் ஒரு எளிய பார்வையாளன், சமூகக் குடிமகன் என்ற அடையாளத்துக்கு அப்பால் சென்று நான் கருத்துக்கள் சொல்வதில்லை. சினிமா, இசை போன்ற தளங்களில்கூட நான் இந்த அடையாளத்தை எனக்கெனச் சொல்லிவிட்டே கருத்துச் சொல்கிறேன் என்பதைக் காணலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொருளியல் போன்ற பல தளங்களில் கருத்துச் சொல்ல முன்வருவதேயில்லை. என் எல்லைகளுக்குள் நான் கருத்துச் சொல்கிறேன் என்றே நினைக்கிறேன்.

இத்தனைக்கும் அப்பால், என் கருத்துக்கள் பொருட்படுத்தத் தக்கன அல்ல என்றால் அவற்றை எளிதில் எவரும் புறக்கணித்துவிடலாமே. பல தளங்களைச் சார்ந்த முக்கியமான நிபுணர்கள் என் கருத்துக்களை வாசித்து வருகிறார்கள். அவர்கள் கவனிக்கிறார்கள் என நானும் அறிவேன்.

*

இந்த விவாதத்தில் கடைசியாக நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் தனிப்பட்ட முறையில் எனக்கென ஓர் எல்லையை வகுத்துக்கொண்டே கருத்துச் சொல்கிறேன். காரணம் நான் என்னை ஏற்கனவே அடையாளம் உருவாகிவிட்ட  எழுத்தாளன் என நினைப்பதுதான். ஆனால் எளிய குடிமக்கள், செய்தித்தாள்கள் மூலம் கருத்துக்களை தெரிந்துகொள்பவர்கள் இத்தகைய எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

நிபுணர்கள் எனப்படுவோர்  இத்தகைய சாதாரண குடிமக்களின் அறிதலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டி அவர்களின் கருத்துச்சொல்லும் உரிமையை அல்லது தகுதியை நிராகரிப்பதென்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதே என் எண்ணம். ஏனென்றால் இந்த நிபுணர்கள் ஒரு தனி சமூக அமைப்பு போலச் செயல்படுகிறார்கள். அவர்களின் சொந்த அறிவுத்துறைகளின் ஒழுக்கக்கெடுபிடிகளுக்கும் அதிகாரத்துக்கும் கட்டுப்படுகிறார்கள். அத்துடன் பற்பல சுயநல நோக்குகளுடன் அனைத்து மானுட அறங்களையும் எளிதில் மீறுகிறார்கள். சாமானிய மக்களை தங்கள் சோதனை எலிகளாக நினைக்கிறார்கள்.

அந்த அறிவுத்திமிருக்கு எதிராக சமானிய மக்களின் அறவுணர்ச்சி அல்லது அச்சம் குரலெழுப்பும்போது அறிவின் அகங்காரத்துடன் ‘நீ ஏன் கருத்துச் சொல்ல வேண்டும்?’ என்று கேட்கும் நிபுணரின் குரல் ·பாசிசத்தின் எதிரொலியே. ஏனென்றால் இன்று சாமானியனுக்காக போராட சாமானியன்தான் இருக்கிறான். அவனை நவீனத்துவ தொழில்நுட்பமும் அறிவியலும் இரக்கமில்லாமல் கைவிட்டுவிட்டன. இன்றைய அறிவியலும் தொழில்நுட்பமும் அற அடிப்படை இல்லாதவையாக, தங்கள் சொந்த விதிகள் கொண்டவையாக ஆகிவிட்டன.

நான் அணுஉலைகளின் பாதுகாப்பைப் பற்றியோ, மரபணுமாற்ற கத்தரிக்காய் பற்றியோ, புவிவெப்பமாதல் பற்றியோ ஏதும் எழுதியதில்லை. எனக்குத்தெரியாத தளங்கள் அவை என்பதே காரணம். ஆனால் இந்தியமொழிகளில் என்னைப்போன்ற  எழுத்தாளர்கள் அவற்றைப்பற்றி தீவிரமாகப் பேசியிருக்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களிடம் ‘நீ ஏன் இதையெல்லாம் பேசவேண்டும், போய் கதை மட்டும் எழுது போ’ என்று சொல்லும் குரலின் ஆணவத்தை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். அங்கே எழுத்தாளன் மொழியில்லாத சாதாரண மனிதர்களின் மொழியாக நின்று பேசுகிறான் என்பதே அதற்குக் காரணம்.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6628

22 comments

Skip to comment form

 1. Ramachandra Sarma

  இந்த் விளக்கத்தில் எனக்கு முழு ஒப்புதல் இல்லை. தமிழ் சமூகம் ஒரு எழுத்தாளனை, சிந்தனையாளன் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை. எனவே நீங்கள் எழுதியதில் உள்ள எழுத்தாளப் பொதுமைப்படுத்துதல் மீது எனக்கு கடுமையான ஆட்சேபனைகள் உள்ளது. எழுத்தாளர்கள் அதிக நுண்ணுணர்வுள்ள குடிமகனாக பிறரை விட அதிகமாக அவனை சமூகப்பிரச்சினைகள் பாதிக்கின்றன என்று சொல்வது சரியல்ல. தமிழகத்தில் பெரும்பாலான எழுதுபவர்கள், இலக்கியவாதிகள் எனப்படுபவர்கள் அரசியல் ஒட்டுதலுடன், தன் வாழ்தலுக்காக சமரசப்படுத்திக்கொண்ட ஒரு சாதாரண மனிதன் தான். எழுத்து வலிமை வாய்க்கப்பட்டவன் என்பதுதான் உண்மை. அவர்களிட்ம் எழுத்து வன்மை இருப்பதுபோல கருத்து வன்மையோ, அறச்சீற்றமோ ஒரு பொட்டு கூட தென்படுவதுகூட இல்லை. பாரதியின் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட, தன் ஆளுமையை அடகுவைத்துவிட்டு சாமரம் வீசுவதிலும், கால்கள் தொழுவதிலும், அரசை புகழ்ந்து பாடி பரிசில் பெருவதிலுமே முன் நிற்கிறார்கள். மேலும் சிலர் சமூக வேலிகளுக்குள் அகப்பட்டு ஒரு மிகக்குறுகிய சமூகத்தைக் குறித்து எழுதி, காசும், அதிகாரமும் பார்ப்பவர்கள். எனவே, நீங்கள் பொதுமைப்படுத்திய விதம் என்னை மிகவும் வருத்தமுறச்செய்கிறது.

  சரி, அப்படியென்றால் யார் எழுத்தாளன் என்றால், உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், உண்மையை மட்டுமே, அறச்சீற்றத்துடன் எடுத்து வைப்பவன் தான். வாழ்க்கையின் அவலங்களையும், உச்சங்களையும் மிக மிக நேர்மையாக, உள்நோக்கமின்றி எடுத்துவைப்பவன் தான். மானுட குலமனைத்திற்குமான விதியை உரக்கப்பேசுபவந்தான். இந்த விதத்தில் பார்த்தால் தமிழகத்தின் பெரும்பாலான எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அடிபட்டுப்போகிறார்கள் என்பதுதானே உண்மை. இதில் இதழியலாளர்களும் தங்களை இலக்கிய எழுத்தாளர்கள் என்று எண்ணிக்கொள்வதுபோல, ப்ளாகர்களும் இப்போது கிளம்பிவிட்டார்கள். இந்த அரட்டைகளெல்லாம் ஒருநாளும் இலக்கியமாகாது. இவர்களெல்லாம் ஒருநாளும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுபவர்கள் அல்லர்.

  எனவே, நீங்கள் பொதுமைப்படுத்திச் சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது.

 2. bala.texas

  Raam Please read the entire site again, For long time now J has been telling about society and leaders and how conciseness of society evolve. There are no such people called “சமூக மாற்றத்தை ஏற்படுத்திக்காட்டுபவர்கள் ” more over நீங்கள் யார்? question is unnecessary, If you dont accept argue or get out of the way. who are you to “ask who are you?”

 3. Ramachandra Sarma

  //எழுத்தாளனின் சமூக இடம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஆழமான அவநம்பிக்கையில் இருந்தே இந்த கேள்வி எழுகிறது. அவனை ஒருவகை கேளிக்கையாளன் என்றே நம் சமூக ஆழ்மனம் இன்றும் நினைக்கிறது.
  //
  லலிதாராம், இதே போன்ற ஒரு கேள்வியை கேட்டார். எந்த ஒரு கலைஞனையும் அவனது கலையை மட்டும் கொண்டு அளவிட்டால் போதுமானதல்லவா? ஏன் அவனது சொந்த வாழ்க்கையில் நுழைந்து அவனது குணங்களை பார்க்கவேண்டும் என்றார். நான் சொல்வேன், அவனது கலை அவனது சொந்த வாழ்விலிருக்கும் அவனது அவலங்களையும் மீறி அவனை ரசிக்க வைக்குமானால் அவனது சொந்த வாழ்க்கை பற்றி எனக்குக் கவலை இல்லை என்று. அவனது கலை அத்தனை உயர்வாக, மற்றவை எதையும் பொருட்படுத்தத்தக்கதாக ஆக்காததாக இருக்கவேண்டும். அது போன்ற மிக மிகச் சிலரே இதுவரை எனக்குத் தென்படுகிறார்கள் என்பது எனது நிலை. உதாரணமாக, அருணகிரி, பாரதி, கண்ணதாசன் போன்றவர்கள்.

 4. gomathi sankar

  ஒரு எழுத்தாளனை இதை மட்டும் எழுது என்று சொல்வது பாசிசமே கம்யுனிசமும் இஸ்லாமும் இதை செய்ததால்தான் தேங்கி நிற்கின்றன.ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் ஒரு முதிரா எழுத்தாளன் இருக்கிறான் அவனுக்கான சரியான சிந்தனா முறையை எழுத்தாளர்கள் மூலமே பெற்றுக் கொள்கிறான்.சிலசமயம் எழுத்தாளன் அசட்டுத்தனமாக பேசினாலும் அவற்றிலிருந்தும் கற்றுக்கொள்ளமுடியும் புனைவுமட்டுமே எழுது என்று எப்படி சொல்லமுடியும் எல்லா புனைவுகளிலும் கூட நுண்செய்திகளும் இருக்கும் முழுப்புனைவு என்றோ அபுனைவு என்றோ எதுவும் இல்லை

 5. Arangasamy.K.V

  நன்றி ஜெ அண்ணா,

  http://www.jeyamohan.in/?p=6480 கலைஞர்களை வழிபடலாமா –

  இதற்க்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என நினைக்கிறேன்,

 6. Krishnan_D

  Mr. Sharma,
  You are mistaken. I don’t think you’ve understood J’s point clearly.

  When J says that a writer should be allowed to express his honest, unbiased opinions, he is talking about ‘real writers’ like him, not the idiotic, sycophantic low lives that you have mentioned in your comment. They are not writers. They are, at best, courtesans who earn a living by stroking the overinflated ego of the rich and the powerful. So, if you hate them and if you do not consider them writers, good for you. But please understand that J is talking about writers who are on a different level. People like him. People who say what they want to say without any fear of getting maligned by the ignoramuses in the society.

  I hope you understand my point.

 7. Ramachandra Sarma

  க்ருஷ்ணன், நீங்கள் சொல்லவருவது தெளிவாகவே புரிகிறது. ஆனால் எழுத்தாளர்கள் என்ற பொதுவான உருவகம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து. அல்லது குறைந்தது எழுத்தாளர் என்பதற்கு ஜெ ஒரு தரப்பை வைத்துவிட்டு சொல்லியிருக்கலாம். எப்போதும் அவர் ஒரு ப்ரமைஸ் சொல்லிவிட்டுத்தான் விளக்கத்திற்குள் நுழைவார். அதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். ஜெ சொல்லவருவது என்னவென்று தெளிவாகவே புரிந்திருக்கிறது.

 8. Sankar Venkat

  ஜெயமோகன்,

  “எனக்கு என்று ஒரு கருத்து உண்டு அதை என்றும் மாறாமல் காப்பேன்” என்ற எண்ணம் உள்ள மக்கள் பலர்.
  இவர்கள் மாற்று சிந்தனை இல்லா மந்தை மன நிலை உள்ளவர்கள்.
  உதாரணம்:
  இவர்கள் தன் வாழ்நாள் வரை ஒரே கட்சிக்கு மட்டும் வோட்டு போடுவது (அக்கட்சி என்ன செய்தாலும்).

  இவர்களுக்காக பல உடகங்கள் உள்ளன. இவர்கள் அங்கே செல்லட்டும்.
  தயவு செய்து இவர்களை புறக்கணியுங்கள்.

  – சங்கர் வெங்கட்

 9. Muthu

  அன்புள்ள திரு.ரா.சர்மா,

  ஜெ இட்ட எழுத்தாளர் பட்டியலிலேயே பதில் உள்ளது அவர் எப்படிப்பட்டவர்களை எழுத்தாளர்களாக கொள்கிறார் என்று. அரசியல் செய்பவர்களிலும், துதி பாடுபவர்களிலும், பாதபூஜை செய்பவர்களிலும், சாமரம் வீசுபவர்களிலும் எழுதுபவர்கள் இருப்பதால் எழுத்தாளர்கள் அனைவருமே அப்படியானவர்கள் என்று பொதுப்படையாக புரிந்துகொண்டவர் நீங்கள்தான் என்று படுகிறது.

  தமிழகம் எழுத்தாளனை சிந்தனையாளனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் எவரும் விதிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளாவிட்டால் நஷ்டம் எழுத்தாளனுக்கல்ல. பாரதியை பைத்தியக்காரன் என்றுதான் தமிழ்கூறும் நல்லுலகம் எள்ளி நகையாடியிருக்கும்.

 10. Ramachandra Sarma

  முத்து, இருக்கலாம். எனது புரிதல்கள் தவறாகவே இருக்கலாம். இருப்பினும். நாஞ்சில்நாடன் அவர்களை அந்த வரிசையில் நான் வைத்து புரிந்துகொள்ளவில்லை. எழுத்தாளர்கள் எல்லாம் சிந்தனையாளர் என்று சொல்கிறீர்களா என்ன?

 11. kuppan_yahoo

  சிந்தனைக்கு உரிய பதிவு இது, பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அரங்கசாமி, ஜெமோ, ராம, பால, முத்து, சங்கர், கோமதி சங்கர், கிருஷ்ணன்.

  ஜெமோ கூறியது போல எழுத்தாளர்களுக்கு அந்த மூன்று கூடுதல் நன்மைகள் உள்ளன. எனவே சமூகமாகிய நாம் தான் நம் சமூக மேம்பாட்டிற்கு எழுத்தாளர்களின் அந்த கூடுதல் தகுதிகளை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.

  சிறிய உதாரணம் தருகிறேன்:

  பாலகுமாரன் சென்னையில் மீன்பாடி வண்டிகளை அனுமதிக்க கூடாது என்று தனது மயக்கும் தமிழில் எழுதினார். ஒரு வாரத்தில் மீன் பாடி வண்டிகள் நிறுத்த பட்டது.

  ஞானி (ஒ பக்கங்கள்) வீடு வாங்கும் விற்கும் பொழுது அடையாள அட்டை பரிசோதிப்பதே இல்லை என்று நறுக்கு தெரித்தார் போல எழுதினார். விரைவிலே சட்டம் வந்தது, வாங்குபவர் விற்பவர் புகைப்படம் கூடிய அடையாள அட்டை samarppikka வேண்டும் என்று.

  ஞானி எழுதிய இன்னொரு நிகழ்வு, தேனீ அருகில் தமிழ் மீடியம் படித்த ஒரு பய்யன் பொறியியல் கல்லூரியில் இருந்த ஆங்கில மீடியம் புரியாமல் தற்கொலை செய்து கொண்டான். இதற்க்கு மறைமுக காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர். இதை நிவர்த்தி செய்ய பொறியியல் கல்லூரியில் தமிழ் மீடியம் வைக்க வேண்டும் என்று எழுதினார்.
  இதோ பொன்முடி தமிழ் மீடியத்தை கொண்டு வந்து விட்டார்.

  என் கருத்து என்ன வென்றால், ஜெமோ, ஞானி, சாரு, சல்மா, நாஞ்சில் நாடன், மனுஷ்யபுத்திரன் .. போன்ற எழுத்தாளர்கள் இன்னும் அதிகமாகவே சமூகம் குறித்து எழுத வேண்டும். சமூகம் குறித்த தீயவை மட்டும் அல்ல, நல்ல விசயங்களையும் எழுத வேண்டும்.(எஸ் ரா , சின்ன வெளிச்சம் கட்டுரையில் எழுதுவது போல)

  எல்லையற்ற சுதந்திரம் எழுத்தாளர்களுக்கு வேண்டும், உண்டு என்பதே என் கருத்து.

 12. sankar.manicka

  தாராளமாக எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள்.
  ஆனால், நான் சொல்வது மட்டும் தான் சரி. ஏனென்றால் நான் ஒரு அறிவுஜீவி என்ற ரேஞ்சுக்கு மட்டும் போய்விடாதீர்கள்.

 13. RV

  இதில என்னங்க பிரச்சினை? பேச இஷ்டம் இருக்கு, நாலு பேர் “மிரட்டி” கூட உங்க கருத்து என்னன்னு கேக்கறாங்க, சொல்றீங்க. அதுவும் உங்களை மாதிரி ஒருத்தருக்கு கருத்தை நல்ல படியா வெளிப்படுத்த முடியும் – நீங்களே சொன்ன மாதிரி எழுத்தாளனின் பலமே அதுதானே! இதை எல்லாம் கேள்வி கேக்கறதுக்கு யாருக்கும் உரிமை இல்ல. நீங்க என்ன பேசணும் என்ன பேசக்கூடாது அப்படிங்கறது அடுத்தவங்க கட்டுபடுத்துவாங்களா? சரி ஒரு வாதத்துக்கு நீங்க எல்லா விஷயத்தையும் பேசக்கூடாதுன்னு அடுத்தவங்க சொல்லலாம்னு வச்சுக்குவோம். இவங்களுக்கு ஜெயமோகனை பத்தி பேச உரிமை எங்கிருந்து வருது? இவங்க ஜெயமோகனைப் பத்தி பேசலாமா பேசக்கூடாதான்னு யார் தீர்மானிக்கறது?

  ஜெயமோகன் சொல்றதை படிக்கப் பிடிச்சா படியுங்க. இல்ல வேலையைப் பாருங்க. அவ்வளவுதான்.

 14. சங்கரன்

  உண்மையையும் நியாயத்தையும் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்கின்ற பண்பாடு உடைய நாட்டில் இப்படிப் பட்ட கேள்விக்கே இடமில்லை. அதிலும் ஜெயமோகன் போன்ற மாபெரும் ஆளுமையை பார்த்து இப்படிப்பட்ட கேள்வி எழுப்புவதன் காரணம் முழுக்க முழுக்க பொறாமையும் தனிநபர் காழ்ப்புமே…

 15. tshankar

  தமிழக நண்பர்களே,

  ஜெயமோகன் எழுதிய “மருத்துவம்,குப்பை” பற்றிய குறிப்புகள் நமது சமுகத்திற்கு அவசியமானது. அதிலும் “குப்பை” பற்றியது மிக மிக அவசியமானது. நான் ரயில் பயணம் போகும்போது என் கண்ணில் படுவது குப்பைகள் மட்டுமே. அதுவும் ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பித்து இரு பக்கங்களும் குப்பைகளின் அளவு கணக்கில் அடங்காது. நான் கேட்கும் கேள்வி, ஏன் இப்படி சொரணை கேட்டு போய்விட்டோம்? குப்பைகளின் நடுவே வாழ்வது தான் நம் லட்சியமா? எத்தனை சமுக ஆர்வலர்கள் நம் மாநிலத்தில்? ஏன் யாருக்கும் இது கண்ணில் படுவதே இல்லை? என் கைகள் பரபரக்கும் இத்தகைய குப்பைகளை பார்க்கும் போது.

  இதை பற்றி எழுதினாலாவது, ஏதாவது மாற்றம் வராதா என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன்.

  சங்கர நா. தியாகராஜன், Amsterdam

 16. அதுசரி

  //
  ஆனால் அந்த இடத்தில் இருந்து கொண்டு சமகால எல்லா விஷயங்களையும் பேச வேண்டுமா ? மருத்துவம்,குப்பை குறித்து எல்லாம் பேச நீங்கள் யார்?
  //

  அன்புள்ள ஜெயன்,

  இது முட்டாள் தனமான கேள்வி என்று உங்களுக்கும் தெரியும்…ஆனாலும் பொறுமையாய் பதில் சொல்லும் உங்களைப் பார்த்து எனக்கு கொஞ்சம் வியப்பாக இருக்கிறது…

  மருத்துவம், குப்பை எல்லாம் குறித்து நீங்கள் பேசக்கூடாது என்றால் யார் பேசலாம்?? அதற்கு ஏதேனும் லிஸ்ட் இருக்கிறதா? ஜெயமோகன் இதைத் தான் எழுதலாம் என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது??

  குப்பையினாலும், மருத்துவத்தினாலும் பாதிக்கப்படும் ஒருவர் என்ற முறையில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை உண்டு…அதுக் கூட தெரியாத, ஏற்றுக் கொள்ள முடியாதவர்களிடம் என்ன விதமான விவாதம் நடத்த முடியும்??

  இதே ரீதியிலானவையே ரஜினிகாந்த் கன்னடர், விஜயகாந்த் தெலுங்கர், ஜெயமோகன் மலையாளி என்று வரும் ஊளையிடல்களும்…… வெறுமனே குப்பை என்று ஒதுக்கித் தள்ள வேண்டியவை!

 17. Ramachandra Sarma

  இங்கே பலர் பலவிதமாக தாங்கள் நியாயவான்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். இதே நியாயத்தை மேடைகளில் தமிழிசையில் பாடவேண்டும் என்று சொல்பவர்களிடமும் சொல்வார்களா என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர்களின் சுதந்திரம் என்பது அனைத்து கலைஞர்களுக்கும் சேர்த்துத்தானே?

 18. karthik

  @ஷர்ம
  தமிழ்நாட்டில் கலைஞர்களின் சுதந்திரம் எதிர் பர்ர்க்க வேண்டாம் .கிடைக்காது

 19. kothand33

  ஜெயமோஹன் அவர்களுக்கு வணக்கம்.

  கடந்த சிலமாதஙளாக உஙகள் எழுத்துக்களில் கவன்ம் செலுத்துகிறேன். பரவலாகச் செய்தி சேகரிக்கின்றிர்கள். ஆனால் உங்கள் உறைகளில் ஒரு ’அவசரம் ‘ தெரிகிறது. குறிப்பாக த்த்துவர்த்தமான. கொள்கைரீதியான சில புதியக் கலைச்ச் சொற்களின் உருவாக்கம் முயர்ச்சி, மற்றும், பல பொதுமையான பெயர்ச்சொற்களுக்கு மரபிலிலாத பலவின்பால் கையாளுவது படிப்பவர்களுக்கு குழப்பமும், நெருடலும் ஏற்படும் வகைய்ல் உள்ளன. ( எடுத்துக்காட்டுகள் பின்னர் தருகின்றேன்.)

  மேலும் உங்களுக்குத் தோன்றியதை ’இருதியன முடிவாகச் சொல்லுகின்றிர்கள், ஒரு ‘சாம்பிள் சர்வே ‘ கூட இல்லாமல்.’ . ’ ( A sort of finality )
  சில எடுத்துக்காட்டுகள்.;
  1. பண்பாடுகள்.
  2. காந்தியும் தலித்துகளும்
  3. காந்தியும் ப்ரம்மச்சரியமும்..

  5 பண்படுதல்
  பண்பாட்டு விவாதங்கள்
  நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?
  . . . . . . . . . . . . . . .
  ஊபசார வார்த்தைகள் பற்றிய மேற்கூறப்பட்ட உங்கள் கருத்து பலரும் ஏரற்பது கடினமே.
  நாம் ஒருவரைப் பார்த்தால், கீழ்கண்டுள்ளபடியாக முகமன் கூறுகிறோம்; காலம் எவல் பொருத்தவை, அவை,
  “ அய்யா ந்லமா ? “
  “. …………நல்லா இர்க்கீங்களா ? “
  ” ……………சொகமா இருக்கீங்களா ? “
  “ …………..வணக்கம். எங்கயோ அவசரம போராபடி இருக்கு ! “
  “ ………….வணக்கம். நா(ன்) உள்ளே வரலாமா ? “
  நேற்று ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒரு காட்சி. கதாநாயகி ஒரு சிற்றூரில் உள்ள குடும்பதினரைக் காண வருகிறாள். அந்த வீட்டிலிருந்து ஒரு நபர் வெள்யே செல்ல்க் கண்டு “ அய்யா நல்லா இருக்கீங்களா ? “ என்று நலம் விசாரிக்க்ரார்.
  அடுத்து வீட்டினுள் சென்று, சய்வு நாற்காலியில் அமர்ந்துள்ள, ஒரு மூதாட்டிஐப் பார்த்து “ அம்மா சாபிட்டாச்சா ? “ என்று விசாரிக்கிறாள். இது ஜெயமோஹனின் ’ ஃபேவரட் ஃப்ரேஸ் ’

  “ சாப்பிட்டாச்சா ? “என்ற் ஒற்றை முகமன் சொற்றொடர் தமிழ் நாட்டுப் பண்பாட்டின் மையக் கூறாக, அல்லது கருப்பொருளாக எப்படி ஏற்க டியும். இந்தத் தப்புக்கணக்குப்போட்டு பஞ்சகாலம், பட்டினி என்றெல்லாம் பெருக்கி எழுதிவிட்டீர்கள் என்ப்தே என் வழக்கு.
  இதுபோல் விமரிசப்பதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா என்ற ஐயத்தொடு இம்மடல் எழுதுகிறேன்.. மெலும் தொடர வாய்ப்பு கிடைக்குமா ?
  வி.கோதண்ட ராமன்

 20. lokeswara

  ஜெயமோகன் அவர்களின் கருத்துக்கு உடன்படாவிட்டால் , எந்த கருத்தில் உடன்படவில்லையோ அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் ( நடுநிலையான ஆராய்ச்சி கட்டுரையோ / புத்தகங்களோ ) எதிர் வாதம் புரியவேண்டும்,
  அதற்க்கு நிறைய உழைப்பு தேவைபடுகிறது , அந்த அளவுக்கு உழைக்க தயாரில்லை ..
  இவருக்கு எப்படி இவ்வளவு படித்திருக்கிறார் என்ற வயித்தெரிச்சலில் நீ அதை பேசாதே , பொதுவாக கருத்து சொல்லாதே என்று கருத்து கூற வந்துவிடுகிறார்கள்.

  வி.கோதண்ட ராமன்,

  “ அய்யா ந்லமா ? “
  “. …………நல்லா இர்க்கீங்களா ? “
  ” ……………சொகமா இருக்கீங்களா ? “
  மேல உள்ள மூன்றும் ஒரே அர்த்தமே
  “ …………..வணக்கம். எங்கயோ அவசரம போராபடி இருக்கு ! “ /* இது அவசரமாக செல்பவரை குறிப்பது, உபசரிப்பு அல்ல */
  “ ………….வணக்கம். நா(ன்) உள்ளே வரலாமா ? “ /* இது விருந்தாளி சொல்வது */
  மொத்தம் உலகில் எத்தனை மனித இனங்கள் உள்ளன அதில் எத்தனை விதமான உபசரிப்பு முறைகள் உள்ளன ,
  சாபிட்டச்சா என்று கூறுபவர்கள் எத்தனை ? அதற்கான காரணம் என்ன என்று சொல்ல முடியுமா?
  ஒரு ஆதார சுட்டியும் இல்லாமல் , ஜெயமோகன் பதில் சொல்லுவார் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

 21. kothand33

  திரு லோகேஷ்வர் எழுதிய மடலில், ஜெயமோஹன் அவர்களிடம், தம்முடைய் அளவுகடந்த பக்தியை வெளிப்படு.த்துகிறார்.
  ஆனால் அவர் அடிப்படையில் ஆய்வு தேவை என்பத்தனை ஏற்றுகொள்ளுகிறார். நன்றி லோகேஷ். பிறகு ஜெய் அவர்கள் ஆய்வு செய்வ்யாமலா எழுதியிருப்பார், எனத் தன்னையே சமாதானப்படுத்திக்கொள்கிறார். இதனை ஜெய் அவர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். என் மடலுக்கும் ஜெய் மறுமடல் எழுதவில்லையே !

  ஜெய் அவர்களையோ, அல்லது மற்ற எவரையுமோ, “ பேசாதே, இப்படி எழுதாதே! “ என்று சொல்வது பண்பாடல்ல. நான் என் மடலில் எஙுகும் அப்ப்டி சொல்லவில்லை.

  .

 22. Ramachandra Sarma

  தமிழ்நாட்டில் கலைஞருக்கே இல்லாத சுதந்திரம் இருந்தால் என்ன போனால் என்ன? நமக்கு கிடைக்கவா போகிறது?

Comments have been disabled.