அங்கே அப்பா காத்திருக்கிறார்!

snapshot

வாழ்க்கையைப்பற்றி சுருக்கமான தத்துவங்களுக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அந்தக்காலத்தில் குமுத விகடங்களில் ‘யாரோ’ என்ற ஞானி அரிய பல கருத்துக்களைச் சொல்லி வாசித்திருக்கிறேன். சாணக்கியன் சொல் தந்தியில் இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. ‘என்பான் புத்திசாலி’ என்ற வார்த்தைகளுக்கு முன்னால் எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்பது அதன் வடிவ ஒருமை.

இன்றைக்கு காலை நான் ஒரு வரியைக் கண்டடைந்தேன். ‘வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது’ ரத்தினச்சுருக்கம். ஆனால் என்ன ஒரு ஆழம்! நானே அரைமணிநேரம் மகிழ்ந்துகொண்டேன் என்றால் நம்பமாட்டீர்கள். சத்தியமாக என்றால் நம்புவீர்கள்.

என் அப்பாவுக்கு அக்காலத்தில் நான் வியந்து சிரித்த பல பழக்கங்கள் உண்டு. அவருக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும். பழங்களும். சீனிபோட்ட வாழைப்பழத்தைச் சோற்றில் பிசைந்து சாப்பிடுவார். ஆனால் எவர் எப்போது இனிப்பை கொண்டுவந்து நீட்டினாலும் கறாராக ‘வேண்டாம் வேண்டாம்!’ என்று சொல்வார். அவர்கள் உரியமுறையில் வற்புறுத்தாவிட்டால் கொந்தளித்துவிடுவார்.

அப்பா எப்போதுமே குளிரை விரும்புவார். அவரது அறை வழக்கமாகவே எல்லா சன்னல்களிலும் குளிராக காற்று பீரிடுவதாகவே இருக்கும். எங்களூரில் பெரும்பாலான நாட்களில் மழை உண்டு. இருந்தாலும் சன்னலோரம் சாக்குப்பையை கட்டி அதில் அடிக்கடி தண்ணீர் நனைத்து குளிர்காற்று உள்ளே வரும்படிச் செய்திருப்பார். கொஞ்சம் காற்று குறைந்தாலும் விசிறத் தொடங்கிவிடுவார்.

ஆனால் மே மாத வெயிலில் கூட வெந்நீரில்தான் குளியல். காசநோயாளிகளன்றி எவருமே வெந்நீரில் குளிக்காத ஊரில், தெளிந்த நீர் ஓடும் ஆற்றின் அருகில் ! அந்தப்பழக்கத்தை நம்பாமல் நேரில் பார்த்து உறுதி செய்ய ஆட்கள் வந்தபடியே இருப்பார்கள். வெந்நீர் கொஞ்சம் கொதிக்கவும் வேண்டும்

அப்பாவால் ஒருநாள் கூட தலைக்குக் குளிக்காமல் இருக்கமுடியாது. எந்தக்காய்ச்சலிலும் அதை தவிர்க்க மாட்டார். தினம் இரண்டுவேளை குளிப்பார். குளிக்கும்போது வழுக்கைத்தலையை கையால் உரசி உரசி தேய்த்துக்கொள்வார். ‘கறிக்கரைத்த அம்மியைக்கூட இப்படி கழுவ மாட்டார்கள்’ என்று அம்மா சொல்வதுண்டு.

அப்பா நாவின் சுவையை கொஞ்சம் அதிகப்படியாகவே மதிப்பிடுகிறாரோ என்ற ஐயம் எனக்கு இருந்தது -கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராக. ‘வறுத்தரைத்த தீயலி’ல் சின்னவெங்காயத்தை எண்ணையில் புரட்டிப்போடவேண்டும். பச்சையாகப் போட்டதனால் சுட்டுவிரலால் அவர் தட்டை நீக்கி வைத்துவிட்டார் என்பது ஊரிலேயே அனைவருக்கும் தெரியும்

அப்பா எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு எகிறிவந்தவர். அடிதடி ஆசாமி. வயதானபின்னர் கோபப்படுவதற்குரிய இடத்திலும் ‘போடே’ என்ற முகபாவனையுடன் அவர் பாட்டுக்கு அமர்ந்திருக்கத் தொடங்கினார். ஒழுக்கமீறல்கள், எதிர்த்துப்பேசுதல்கள் என எதுவும் அவரைச் சீண்டமுடியவில்லை. எவரேனும் மிருகங்களை வதைத்தால் மட்டும் கொந்தளித்து எழுவார்

காலையில் குளித்துக்கொண்டிருந்தேன். நான் சிலநாட்களாகத் தங்கியிருக்கும் கேரளத்தில் வயநாட்டில் உள்ள இந்த காட்டுவிடுதியில் காலையில் வெந்நீர் வரவில்லை. இங்கே வியர்வையே இல்லை . ஆனாலும் குளிக்காமலிருக்க என்னால் முடியவில்லை.வெந்நீர் இல்லாமல் குளிக்கவும் தோன்றவில்லை.

நம்ப மறுத்த கரீம் பலமுறை வற்புறுத்தியபின்னர் நடுமதியத்தில் அவனே காய்ச்சிய வெந்நீரை பக்கெட்டில் கொண்டுவந்து வைத்தான். வெளியே வெயில். எதிரே தூய நீர் மின்னும் பெரிய ஆறு. ‘சார் , எப்பவும் வெந்நீரிலேதான் குளிப்பதா?’ என்றான். ‘ஆம், என் அப்பாவும் அப்படித்தான்’ என்றேன்

அதன்பின் பகீருடலுடன் எண்ணிக்கொண்டேன். அப்பாவைப்போல! எல்லாமே அப்பாவைப்போலத்தான். என்னால் வெயிலையும் வெப்பத்தையும் சகித்துக்கொள்ளமுடியவில்லை. எப்போதும் குளிரில் இருக்கவிரும்புகிறேன். பெரும்பாலும் குளிர்பதன அறைகளில்.அல்லது மலைகளில்.

ஆனால் கோடைவெயிலில் மதியக்குளியல்கூட வெந்நீரில்தான். குளிர்நீர் உடலில் படுவதை நினைத்தாலே உடம்பு உலுக்கிக் கொள்ளும். ஆனால் குளிக்காமலிருக்க முடியாது. குளிக்கவில்லை என்ற உணர்வு உடம்பை ஒரு அரிப்பு போல நமைச்சல் போல மூடியிருக்கும்.

அது பெரும்பாலும் உளவியல் சார்ந்தது என்றார் டாக்டர். தோலில் உருவாகும் ஈஸ்ட் உருவாக்கும் பிரச்சினையாகவும் இருக்கலாம். தோலுக்கு வயதாகிறது. குளிக்காவிட்டால் தலை அரிக்கிறது என்றேன். வழுக்கை விழுவதன் விளைவு என்றார்

அப்பாவைப்போல நானும் இனிப்பில் பற்று கொண்டிருக்கிறேன்.லட்டு ஜிலேபி முதலியவற்றை கடும் தயக்கத்துக்குப்பின் அள்ளி எடுத்துக் கொள்கிறேன். முன்பெல்லாம் தினம் மும்முறை கடும் கோபம் கொள்வதுண்டு. இப்போது வாரம் ஒருமுறைதான். ஆனால் மிருகங்களைக் கண்டால்….விரிவாக ஏன், அப்பாவேதான்

நினைத்துக்கொண்டேன். சிறுவயதில் நான் அப்பாவாக அல்லாமலிருக்க என்னால் ஆன அளவுக்கு முயன்றேன். இனிப்பை கையாலும் தொடுவதில்லை. வெயிலில் நாள்கணக்கில் சுற்றுவேன். சாத்தியமான கடைசி எல்லைவரை குளிப்பதில்லை. குளித்தால் ஆற்றில்தான், மணிக்கணக்காக.

அப்பாவுக்கு பிடிக்காது என்பதனால்தான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். அப்பா என்னை ஆடிட்டர் ஆக்கவேண்டும் என்று கனவுகண்டதனால்தான் எழுத்தாளன் ஆனேன். அப்பாவிலிருந்து குதிகால் தெறிக்க விலகி ஓடி ஐம்பதாண்டுக்காலப் பயணத்தில் இதோ வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை மகன் பாகுலேயன் பிள்ளையைச் சென்றடைந்துகொண்டிருக்கிறென்

அவரும் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளையை விட்டு ஓடியவர்தான். மதுரையில் ரேஷன்கடையில் வேலை பார்த்தார். அடிமுறையும் ஆயுர்வேதமும் கற்பதை வெறுத்தார். ஆங்கிலம் கற்றார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டதனால்தான் உண்மைகள் வாழ்கின்றன என நம்பினார். பாவம் திரும்பி அங்கேதான் வந்து சேர்ந்தார்

பயமாக இருந்தது, வயதான காலத்தில் எனக்குய்ம் அதே சாய்வுநாற்காலிதானோ என்று.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 26, 2014

https://www.youtube.com/watch?v=l_TLOCliA00

முந்தைய கட்டுரைகந்து -கடிதம்
அடுத்த கட்டுரைபுரட்சி, மக்களின் திருவிழா!