வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி


உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண்முரசை. மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. இலக்கியம் என்பது அந்தரத்தில் இருந்து உருவாகாது. அதுல ஒரு தொடர்ச்சி இருக்கு. அந்த தொடர்ச்சி என்பது ,தொடர்ந்து நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வர கூடிய படிமங்களையும் ஆழ் படிமங்களையும் சார்ந்தது. அந்த படிமங்களிலும் , ஆழ் படிமங்களிலும் நமக்கு ஒரு பெரிய தூரம் உருவாகிருக்கு. அதுனாலதான் நாம , தனிப்பட்ட அந்தரங்க உடனடி அனுபவங்களை மட்டுமே இலக்கியம் அப்படின்னு நினச்சு எழுதிட்டு இருந்தோம். அந்த படைப்புகள் எதுவும ஆழத்துக்கு போக முடியாத நிலை இங்க இருக்கு. அதுதான் இந்த நாவலை உருவாக்க காரணம்னு சொல்லலாம்..

இப்ப நானே வந்து , உடனடியான விஷயங்களை பற்றி, பின்தொடரும் நிழலின் குரல், காடு மாதிரியான நாவல்களில் சமகாலத் தன்மையோட எழுதிருக்கேன். அந்த நாவலுக்கும், வெண்முரசுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா இது புனைவு படைப்பு மட்டுமில்ல. மரபில் உள்ள படிமங்களை, ஆழ்படிமங்களை இந்த கால இலக்கியத்தோட அடித்தளமாக ஆக்குவதற்கான முயற்சி . சமகாலத்திலே இருந்து மரபுக்கு போகிறதுக்குப் பதிலா மரபிலே இருந்து சமகாலத்துக்கு வர்ரது அப்படின்னு கூட சொல்லலாம். இது ,இலக்கியத்தை பின்னோக்கி எடுத்து செல்லுது அப்படின்னு சொல்லப்படுறது இலக்கியம் பத்தின பாமரத்தனமான புரிதல்ல இருந்து வர கூடிய ஒரு வரி.

ஏன்னா, உலக இலக்கியத்துல இருக்க கூடிய,கடந்த பதினஞ்சு வருஷத்துல வந்த மாஸ்டர் பீஸ் அப்படின்னு சொல்ல கூடிய படைப்புகள் எதை படிச்சாலும்,அந்த எல்லா படைப்புமே மரபை புரிந்து கொள்ளவும்,மரபை விளக்கி கொள்ளவும் ,மரபை புதிய வகையில் சொல்லவும், முயற்சி பண்ண கூடியவைங்கிறதை காணலாம். அந்த நோக்கத்தோட மரபில் உள்ள படிமங்களை எடுத்து மறு ஆக்கம் செய்ய கூடிய தன்மையில் தான் அந்த படைப்புகள் இருக்கு. அதை செய்வதற்கு மரபோட நம்முடைய உறவு வலுவாகவும் ,நுட்பமாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும் இருக்கணும்.

மரபு என்பது அறிவுபூர்வமா தெரிஞ்சுட்டிருக்கிறது இல்ல… ஆழ்மனசு வழியில் போகணும். நம் ஆழ்மனசிலே மரபு படிமங்களா இருக்கு. அதை அறிஞ்சு வச்சிருந்தா போதாது. அதைவச்சு கனவு காணணும். அப்டி கனவு மூலமா ஆழ்மனசுக்குப் போறது அப்படிங்கிறது,பெரிய இலக்கிய படைப்புகளை எழுதுறது மூலமாதான் முடியும்.

ஐரோப்பிய மொழியில் ஏன் பேரிலக்கியம் உருவாகுச்சுனா ,ஐரோப்பிய மொழிகளில் பதினாறாம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து மரபு இலக்கியங்களை மறு ஆக்கம் பண்ணினாங்க. டாக்டர் பாஸ்ட் (dr.faust) ங்கிற காவியம் பழைய கதையை மகாகவி கதே மறு ஆக்கம் பண்ணினதுதான். அதுதான் ஐரோப்பிய நவீன இலக்கியத்தோட தொடக்கம் அப்படின்னு சொல்லுவாங்க. அதுல ஆரம்பிச்சு தொடர்ந்து பல படைப்புகள் மறு ஆக்கம் பண்ணப்பட்டு கொண்டே இருக்கிறது. டாக்டர் பாஸ்ட் டுக்கும் தாந்தேவின் டிவைன் காமடிக்குமான உறவு விரிவாக ஆராய்ச்சி பண்ண பட்டுருக்கு.

இப்படி ஒரு பெரிய கிரேக்க மரபு முழுமையாகவே மறு ஆக்கம் பண்ண பட்டு , கையாளப்படக்கூடிய படிமங்களாக,கைக்கு வந்து சேர்ந்த பின் தான்,நவீன இலக்கியம் அதற்கடுத்த கட்டம் நோக்கி நகருது. தினசரி பத்திரிகைகளில் கிடைக்கிற எளிமையான கருத்துக்களையும், அரசியல் கருத்துக்களையும் , அன்றாட யதார்த்தத்தையும் எழுதினா போதும், இலக்கியம் அதுதான் அப்படின்னு, நினைக்கிற ஒருவகையான அசட்டுத்தனத்தில் இருந்து வரக்கூடிய துதான் இந்த முயற்சி வழியா இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்துகிறேன் அப்டீன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம்.

ஆனா,இன்னும் ஒரு நீண்ட காலத்துக்கு,நீங்க வெண் முரசுவையே எழுதிட்டு இருக்கும்போது,சமகாலத்தை பிரதிபலிக்கக் கூடிய படைப்புகள் உங்ககிட்ட இருந்து வராமப் போகும் வாய்ப்பு இருக்கு இல்லியா?

அப்படி நான் படைக்க முடியாதுன்னு யாராலையும் சொல்ல முடியாது. ரெண்டாவது இவ்வளவு பெரிய படைப்பை எழுதும்போது அதுக்கான ஆத்மாவை தான் கொடுக்க முடியுமே தவிர , அதே சமயத்துல வேற என்ன எழுதிருக்க முடியும்னு யோசிக்க முடியாது.

ஒரு கேள்வி அடிக்கடி வருது. பலமுறை அதுக்குப் பதில் சொல்லியிருக்கேன். இவ்வளவு சிக்கலான மொழி நடையும் சிக்கலான அமைப்பும் உள்ள படைப்பை வந்து இளைய தலைமுறை படிக்காது,பழைய காலத்தவர்தான் படிப்பாங்க. இன்னைக்கு எளிமையான நேரடியான விஷயம்தான் அதிகம் பேர் படிப்பாங்க அப்டீன்னு. இதுவும் மேலோட்டமா யோசிக்கக் கூடியதுனால வரக் கூடிய எண்ணம். அவங்க சொல்றது என்னன்னா, இன்னைக்கு பேஸ்புக் யுகம் வந்துருச்சு. ரெண்டு ஸ்க்ரோல் க்கு மேல யாரும் படிக்க மாட்டாங்க. அதுனால அது மாதிரிதான் எழுதணும் அப்படிங்கிறாங்க.

ஆனா, நேர்மாறான நிலை இங்க இருக்கு. மொழி என்கிறது வேற எந்த காலகட்டத்தை விட அதிகமாக வாசிக்க கிடைக்கிற காலம் இது. எப்ப கம்ப்யூட்டர்ல வாசிக்க கத்துக்கிட்டோமோ அப்பவே நம்முடைய வாசிப்பு அறிந்தோ அறியாமலேயே நூறு மடங்கு பெருகிடுச்சு. வாரம் ஒரு வார இதழ் படிக்கிறதையே மொழியின் பிரவாகம், அப்படின்னு சொன்ன அந்தக் காலம் போய் இப்ப ஒரு நாளைக்கு நீங்க படிக்கிற பேஸ்புக் பதிவுகளே பத்து இதழ்களுக்கு சமம் .

அப்படிங்கிறப்ப . அப்படி என்ன ஆகும்னா மொழி மலியும். மொழியின் அழுத்தம் குறையும். ஸ்க்ரோல் பண்ணி படிக்க கூடிய மொழி தோன்றும். மேலோட்டமாக, பொறுப்பில்லாம, சரசரன்னு எழுதி விட கூடிய மொழி உருவாகும். மொழி அதிகமா ஆகிறப்ப அது அர்த்ததைக்குடுக்கிறதே குறைஞ்சிரும். இப்பவே அப்டித்தான். பாருங்க, அரசியல் சம்பந்தமான டிவி விவாதங்கள் நமக்கு எந்த அர்த்தத்தையும் அளிக்கிறதில்லை. நாம அதை நாலஞ்சுமணிநேரம் பாத்தாக்கூட ஒரு வரி ஞாபகத்தில் நிக்கிறதில்லை.

அந்த பொதுமொழிக்கு எதிரான ஒரு கலகமாத்தான் இலக்கியம் இன்னைக்கு இருக்க முடியும். அதுக்கு எதிரான போக்குதான் இலக்கியத்துல இருக்க முடியும்.

அந்த மேலோட்டமான மொழியில, சராசரி மொழியில, சலிப்புற்று அதுல எரிச்சலடைந்து அதுல இருந்து விலகி வர கூடியவர்களுக்குதான் இன்னைக்கு நவீன இலக்கியம் எழுத படுது. அதுலயே நீந்திட்டு இருக்கிறவங்களுக்குக்காக இல்ல. அந்த மொழியில புழங்கிட்டு இருக்கிறவங்களுக்கு இந்த நவீன இலக்கியத்துக்குள்ள வர முடியாது. இது என்னனே புரியாது. பிரமிப்பூட்டும் பயமுறுத்தும். விலகிப் போயிருவான். ஆனா அதுல வந்து பெரும் சலிப்படைந்து, வர க்கூடிய வாசகனுக்கு அவனுடைய மூளையையும் கற்பனையும் சொடுக்க கூடிய ஒரு விசயம் தேவையா இருக்கும். அதுதான் இந்த படைப்புல இருக்கு,

தமிழ்ல முன் வைக்கப்பட்டதுலயே மிக பெரிய அறிவார்ந்த, நுண்ணுணர்வு சார்ந்த சவால், அப்படிங்கிறது வெண்முரசுதான். அதை சரசரன்னு வாசிச்சுப்போகமுடியாது. ஒவ்வொரு வரியையும் வாசிக்கணும். ஒவ்வொரு தகவலையும் ஞாபகம் வச்சுக்கிடணும். ஒவ்வொரு படிமத்தையும் கற்பனையால வளத்து ஒண்ணுக்கொண்ணு பின்னி விரிவாக்கிக்கிடணும். வாசகனோட அறிவும் கற்பனையும் முழு விழிப்புணர்ச்சியோட இருக்கணும்.,

அந்தஅந்த சவாலை எதிர்கால தலைமுறை எடுத்துக் கொள்ளாதுன்னு சொல்றது அர்த்தமற்றது. ஏன்னா எதிர்கால தலைமுறை, நம்மைவிட எப்பவுமே அதிகமான நுண்ணுணர்வோட தான் இருப்பாங்க. இந்த வெண்முரசு விழாவில் நீங்க பாத்தீங்கன்னா மேடையில் இருந்த யாரோ கேட்டாங்க. என்ன இது ? கல்லூரி கூட்டம் மாதிரி அப்படின்னு … ஏன்னா அந்த அளவு இளைஞர்கள்தான் வந்திருந்தாங்க. இது அவங்களுக்கான படைப்பு. கொஞ்சம் வயசானவங்களால வாசிக்கமுடியலை. நினைவுல நிக்கலைன்னு சொல்றாங்க. மூளைக் களைப்படைஞ்சிடறாங்க. ஆனால் பதின்வயசுல இருக்கிறவங்க படிக்கிறாங்க. சரசரன்னு உள்ளே போய்டறாங்க. அவங்களுக்கு சவால்கொடுக்க கூடிய படைப்பு. இது கொஞ்சம் கஷ்டமான படைப்பு, கொஞ்சம் கவனமா படிக்கணும்னு சொல்றதே அவங்களை சீண்டக்கூடியதா இருக்கு.

அவங்களை மாதிரி வாசகர்கள்தான் நாளைக்கு வரப்போறாங்க. சமகால எழுத்தாளர்களும் சரி சில்லறை அரசியலை விமர்சனமா எழுதிட்டிருக்கிறவங்களும் சரி இதுக்குள்ளேயே போகமுடியாது. மேலோட்டமா புரட்டீட்டு ஏதாவது சொல்வாங்க. அவங்களோட முடியாமையைத்தான் விமர்சனமாச் சொல்வாங்க.

என்னைப்பொறுத்தவரை ஒரு படைப்பு அவ்ளவு எளிதாக கடந்துபோகக்கூடியதா இருக்கக்கூடாது. விஷ்ணுபுரம் கொற்றவை பின்தொடரும் நிழலின்குரல் எல்லாம் அப்டித்தான். அதெல்லாம் வந்து பத்துப்பதினஞ்சு வருஷமாச்சு. அதை இப்பவரை கடந்துபோய் யாரும் எழுதலை. அதெல்லம் இன்றைய தலைமுறைக்கே பெரிய சவாலாத்தான் இருக்கு. அதனாலத்தான் அதோட வந்த மத்த படைப்புகள்லாம் பழசாகி மறைஞ்ச பிறகும் இப்பவெளிவந்தது மாதிரி அதெல்லாம் நின்னிட்டிருக்கு. வெளிவந்த காலத்தைவிட பத்துமடங்குபேர் இப்ப அதையெல்லாம் வாசிக்கிறாங்க.

வெண்முரசு அம்பது விஷ்ணுபுரத்துக்குச் சமம்.

நரேந்திரகோலியின் இந்தி நவீன மகாபாரதம் மகாசமர்,வெண்முரசுவின் வெவ்வேறு நாவல் வடிவ முயற்சியை ஒத்திருக்கிறது.கிட்டத் தட்ட ஒன்பது பாகங்கள் மகாசமர் என்ற பேரில் ஏற்கனவே வெளிவந்து கவனம் பெற்று இருக்கின்றது. ஆகவே வெண்முரசு புதிய முயற்சி அல்ல என்று உங்கள் மேல் ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது…

முக்கியமா,இந்த மாதிரி பெரிய முயற்சிக்கு விமர்சனங்களை வைக்கும் போது முதல் தேவை ,எழுதப்பட்டதை படிக்கிறதுதான். அதைப் பண்ண மாட்டோம். அதுக்கான பொறுமை கிடையாது. ஆனா விமர்சனம் மட்டும் முன்வைப்போம் அப்படிங்கிறது அற்பத்தனம் . வாசிக்காம எதையாவது சொல்றவங்ககிட்ட பேசிப்பேசியே அது வெண்முரசைவிட பெரிசா போய்ட்டிருக்கு

மகாபாரதம்,எல்லா மொழிகளிலும் வெவ்வேறு விதங்களில் மொழி பெயர்க்க பட்டிருக்கிறது. எளிமையாக திருப்பி சொல்லப்பட்டுருக்கு. மலையாளத்துல கொடுங்கல்லூர் குஞ்சிகுட்டன் தம்புரான் எளிய செய்யுளா முழுசா மொழியாக்கம் செஞ்சிருக்கார்.வித்துவான் பிரகாசம், பனிரெண்டு வால்யூம்களாக மகாபாரதத்தை எளிமையான மலையாள உரைநடையில் எழுதிருக்கார் . தமிழ்லயே ராமானுஜாச்சாரியார் முழுசா உரைநடையிலே மொழியாக்கம் செய்திருக்கிறார் அ.லெ.நடராசன் நாலு பாகங்களாக எளிமையான உரைநடையில் மகாபாரதத்தை எழுதிருக்கார். கன்னடத்திலே குமாரவியாசர் ஏழாயிரம் பக்கங்களிலே வியாசமகாபாரதத்தை முழுசா செய்யுளிலே எழுதியிருக்கார்

இதே மாதிரி எல்லா மொழிகளிலும் எழுதிருக்காங்க. இதெல்லாம் மொழியாக்கங்கள். அதேமாதிரியே மகாபாரத மறுஆக்க நாவல்களும் ஏராளமா இருக்கு. சொல்லப்போனா பேராசிரியர் இந்திரநாத் சௌத்ரி இந்தியாவின் மகாபாரத நாவல்களைப்பற்றி ஒரு கட்டுரை வாசிச்சதைக் கேட்டுத்தான் வெண்முரசுக்கான எண்ணம் வலுவா உருவாச்சுன்னு பலமுறை சொல்லியிருக்கேன். இது எவரும் செய்யாத முயற்சி இல்லை. இந்தியாவிலே சுகமு புராணகாலம் முதல் இப்பவரை நடந்திட்டே இருக்கிற ஒரு பெரிய செயல்பாட்டோட அடுத்தபடின்னு மட்டும்தான் திரும்பத்திரும்பச் சொல்லிட்டிருக்கேன். இந்த நூல்களை எல்லாம் நானே திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டிட்டு இருக்கேன்

வெண்முரசு மகாபாரதத்தை திரும்பச் சொல்ற படைப்பு இல்லை. மொழி பெயர்ப்பு கிடையாது. அப்படியே மறு ஆக்கம் செய்யுற முயற்சி கிடையாது. இது ஒரு நவீன நாவல். ..மகாபாரதத்தை நவீன நாவல் வடிவில் எழுதும்போது எடுத்து கொள்ள கூடிய எல்லா சுதந்திரங்களும் இருக்கு. கதாபாத்திரங்கள் விரிவாக்கப்பட்டிருக்கு ,கதை சந்தர்ப்பங்கள் விரிவாக்கப்பட்டிருக்கு, கவித்துவங்கள் உருவாக்கப்பட்டுருக்கு. நவீன வாழ்க்கைல இருந்து மகாபாரதத்துக்கான பயணம் இது.

நரேந்திர கோலி எழுதின மகாபாரதம் மொழிபெயர்க்கப்படவில்லைன்னு நினைக்கிறேன். அது நவீன உரைநடையிலே மகாபாரதத்தை திருப்பி எழுதுற முயற்சின்னு சொல்றாங்க. வெண்முரசு அப்டி இல்லை. இது மகாபாரதம் உருவாக்கி அளிக்கக்கூடிய புராண அழகியலை பயன்படுத்தி புதிய புராணங்களைக்கூட உருவாக்கிட்டே போகுது. அந்தப் படிமங்களைப் பயன்படுத்தி மிகவிரிவான புதிய உலகத்தை உருவாக்கி தருது. குறைஞ்சபட்சம் “முதற் கனல்” மட்டும் படிச்சா கூட அது மகாபாரதம் கிடையாது .. அது மகாபாரதத்தை வச்சு எழுத பட்ட ஒரு நவீன நாவல் அப்படின்னு புரிஞ்சுருக்கும. கொற்றவைக்கும் – சிலப்பதிகாரத்துக்கும் என்ன உறவோ,அதுதான் மகாபாரதத்துக்கும் – வெண்முரசுக்கும் இடைல உள்ள உறவு

இவங்க மகாபாரதம் அப்படிங்கிற தலைப்பை மட்டும்தான் பாத்துருக்காங்க. இவங்க இங்க யாருக்குமே அம்பது நூறு பக்கம் கூட படிக்க கூடிய பொறுமை இல்லாதவங்க. . இன்னைக்கு வந்து ஆயிரம் பக்கம் மூவாயிரம் பக்கம் படிச்சு தள்ள கூடிய ஒரு தலைமுறை வந்துருக்கு. இது அவங்களுக்கான நாவல்.. ..

ஒரு வாசகனாக வெண் முரசின் மிகச் சிறப்பான வெளிப்பாடாக நான் உணர்வது,,ஒற்றை வரிக்கு மேல் நாம் அதிகம் அறிந்திராத மகாபாரத கதாபாத்திரங்கள் பிரமாண்டமாக உலவுவது…உதாரணம் சகுனி,துரோணர்,அம்பை,ராதை.. எப்படி அக் கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குகிறீர்கள்?

மகாபாரதம், மூவாயிரம் நாலாயிரம் வருஷம் பழமையானது. அன்னைக்கு உள்ள மதிப்பீடுகள்ல மாவீரர்களும், பேரறிஞர்களும் ,முனிவர்களும்தான் முக்கியமானவங்க. மத்தவங்க முக்கியமற்றவர்கள். ஒரு வரி, ரெண்டு வரிதான் அவங்களைப் பத்தி சொல்ல கொடுக்கப் படுது. அதுவும் அவங்க மன்னர்களா இருந்தா மட்டும்.மத்தவங்களுக்கு இடமே இல்ல.

ஆனா இருபதாம் நூற்றாண்டுல,ஜனநாயக யுகத்துல,இருந்து கொண்டு மகாபாரதத்தை அணுகும் போது நாம மேலும் எழுத வேண்டி இருக்கு. அந்த கதைகூறலிலே விடுபட்டு போன கதாபாத்திரங்களுக்கு மேலும் அதிக கவனம் கொடுக்கிறோம். உதாரணமா விதுரனோட அன்னை. அவங்க ஒரு பணிப்பெண்ணா இருந்தாங்க. வியாச பாரதத்துல அவங்கள பத்தி மொத்தமே ஆறு வரிதான் சொல்ல பட்டுருக்கு. வியாசர் கிட்ட போனாங்க. விதுரரை பெற்றேடுத்தாங்க. அவ்வளவுதான். ஆனா இந்த நாவல்லநாலஞ்சு அத்தியாயங்கள்ல அவங்களோட முழு கதை இருக்கு . அவங்களுக்கு ஒரு பெயர் இருக்கு. அவங்களுக்கு ஒரு முகம் இருக்கு.

இப்போ,இந்த கதாபாத்திரங்கள் எப்படி உருவாக்க படுதுன்னா……….அந்த,கதை சந்தர்ப்பம் இருக்கு இல்லையா, அது கற்பனையை தூண்டுது. பாருங்க, ஒரு சாதாரண பணிப்பெண், ஒரே இராத்திரில, வியாசரோட படுக்கையறைக்கு போறா .அது அவளுக்கு வாழ்க்கைல கிடைக்க கூடிய ஒரு எழுச்சி ,ஒரு பெரிய வரம். அந்த வரமே அவளுக்கு எப்படி சாபமா மாறும் அப்படின்னு பாக்கலாம்கு இல்லையா… ஒரு பிள்ளையை கொடுப்பதற்கான ஒரு பாத்திரமா மட்டும்தான் ஒரு பெண் பார்க்கப்பட்டாள் அப்படிங்கிறது அவளுடைய வாழ்க்கை எந்தளவு காலியா இருக்கிறது அப்படின்னு காட்டுது இல்லியா…இந்த கேள்விகளோட மகாபாரதத்தை அணுகவதற்காக மட்டுமே இந்தப் படைப்பு எழுதப்பட்டுருக்கு.

சகுனி எனக்கு மகாபாரதத்தில் கிடைத்த ஒரு படிமம் மட்டுமே. அந்த படிமத்தை நான் இருபதாம் நூற்றாண்டில் சூழலில் வைத்து பிரமாண்டமான கதாபாத்திரமாக மாத்தினேன். இந்த வெண்முரசுல பாத்தீங்கன்னா , விட்டுக்கொடுத்க்காத ஒரு பாலைவன ஓநாயாக சகுனி வளர்ந்து வர்றதை பாக்கலாம். இந்த பரிணாமத்தை இருபதாம் நூற்றாண்டில் இருந்து பார்க்கும்போதுதான் விரிவான அர்த்தத்தை அடையறோம். இப்டி மகாபாரதத்தை மறு ஆக்கம் பண்ணுறது இங்க எப்பவும் நடந்திட்டிருக்கு. இதுதான் காளிதாசன் பண்ணினது., அவருடைய சாகுந்தலம் அப்படிதான் வந்தது…. அது ஒரு புது படைப்பா மாறுச்சு. அதே மாதிரி தான் பாஞ்சாலி சபதம்…..

தமிழின் மற்ற எந்த எழுத்தாளரையும் விட உங்களோட ஒவ்வொரு முயற்சியும்,உதாரணமா ஒரு நூல் அறிமுக விழா கூட, சக எழுத்தாளர்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை ஏற்படுத்துறதுக்கு காரணம் என்ன?

அது இயல்பானதுதான்..ஒரு தன்னகங்காரத்தோட தான் அத நான் சொல்லணும்.என்னோட படைப்புகள்ல நான் உருவாக்கக் கூடிய அளவிகள் சாதாரணமா மத்தவங்களால எட்டக் கூடியதாக இல்லை.அந்த அளவுகள் அவங்களை ரொம்ப சின்னதா மாத்திடுது. அதை எட்டுறதுக்கான அறிவார்ந்த உழைப்பு, அதை இலக்கியமா ஆக்குறதுக்கான தவம், இயல்பிலேயே இருக்கிற கற்பனை அவங்க கிட்ட இல்லை. எழுத்துங்கிறது ஒரு அப்ஸெஷன். இல்லேன்னா பேஷன்,.அது இல்லை. அப்ப ஏதோ கொஞ்சம் எழுதத்தான் முடியும். அது பெரிய படைப்பு இல்லேன்னு உள்ளுர அவங்களுக்குத் தெரியும். அதான் பிரச்சினையே

அதுல ரெண்டு வகையான அணுகுமுறை இருக்கு.ஒரு மூத்த எழுத்தாளருக்கு,தன்னுடைய சாதனையைத் தானே உணர்ந்த எழுத்தாளருக்கு,என் படைப்புகள் வியப்பையும்,நிறைவையும் கொடுக்கக் கூடியதா இருக்கு.அவங்க எனக்கு எப்பவும் ஆசீர்வாதங்களைத் தான் தந்திருக்காங்க.மற்ற சக எழுத்தாளர்கள் பலபேர் முக்கி முனகி ஒரு நூத்தம்பது பக்கம் எழுதி,அதுல அஞ்சு பக்கம் கூட சொல்ற மாதிரி இல்லாம ,எந்த வாசகருக்கு போய் சேந்துருக்குன்னு தெரியாம இருக்காங்க.. அவங்கதான் நீங்க சொல்ற மனநிலையோட பேசிட்டிருக்காங்க.

விஷ்ணுபுரம் வந்தபோதே இது ஆரம்பிச்சது. விஷ்ணுபுரம் தமிழ் எழுத்துக்களோட ‘ஸ்கேலை’ மாற்றியமைச்சதுங்கிறத யார் வேணுமானாலும் பாக்கலாம். அப்ப குமுறினவங்க பலபேர் அப்டியே நின்னுட்டாங்க. அடுத்த தலைமுறை வந்து விஷ்ணுபுரம் முன்வச்ச சவாலை ஏத்துக்கிட்டங்க. இப்ப உள்ள பெரியநாவல்கள் எல்லாமே அப்டி வந்ததுதான். இப்ப வெண்முரசு வர்ரப்ப கொஞ்சபேர் புழுங்குறாங்க.

அவங்களுக்கு பிரச்னை என் படைப்பு கள் இல்ல.எனக்கு இருக்கக் கூடிய வாசகர்கள்.ஒரு விஷ்ணுபுர வாசகனோ,வெண் முரசு வாசகனோ,மற்ற எந்த படைப்பையும் தன் காலடில தான் வைக்கிறான். அதோட, வாசகன் எப்பவுமே இரக்கமில்லாதவன். ஆசை உள்ளவன்., இங்கிதமில்லாம மற்ற எழுத்தாளர்களப் பாத்து நீ என் இப்டி எழுத மாட்டேன்ற,ன்னு நேரடியா கேட்டிருறான். இதுதான் பிரச்சினையே

ஆனா,இந்த என்னோட அறைகூவல்,வரும் தலைமுறை எழுத்தாளர்களுக்கு தாண்டிப் போகத் தூண்டுற ஒரு விசயமா இருக்கும். இதிலே இருந்து அவங்க முளைச்சு எழுந்து மேலே போவாங்க.உலகின் எந்த ஒரு பெரிய படைப்பும் அதைத் தான் நிகழ்த்திருக்கு அதனோட காலத்துல.இப்டித் தான் என்மேல் வரக் கூடிய விமர்சனங்களைப் புரிஞ்சுக்குறேன்.

வெண்முரசு எதிர்கால தலைமுறைக்குரியதுன்னு சொல்றீங்களா?

கண்டிப்பா. அது இங்கதான் இருக்கும். அது சாதாரணமா எழுதாதீங்கன்னு அறைகூவல் விடுக்குது. பிரம்மாண்டமான ஒரு படிமக் களஞ்சியத்தையும் நுட்பமான ஒரு மொழிநடையையும் அளிக்குது. அது ஒரு பெரிய நாற்றங்கால்

பேட்டி குமரகுருபரன்

வெண்முரசு விவாதங்கள்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைசுருதை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43