‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 44

பகுதி பத்து : மீள்பிறப்பு – 1

அஸ்தினபுரியில் இருந்து கிளம்பும்போது தருமன் சிடுசிடுத்த முகத்துடன் ரதத்தில் ஏறிக்கொள்வதை அர்ஜுனன் பார்த்தான். குந்தியை அவன் பார்க்கவில்லை. அவள் மிகுந்த சினம் கொண்டிருப்பதாக மாலினி சொன்னாள். நகுலனும் சகதேவனும் குந்தியை சந்திக்கச்சென்றபோது சந்திப்பு அளிக்கப்படவில்லை. அரசி சிறிய உடல்நலக்குறைவு கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. அவர்கள் இருவரையும் அது சோர்வுறச்செய்தது.

பயணம்பற்றிய உவகை பீமனிடம் மட்டுமே இருந்தது. “இங்கிருந்து எங்கு சென்றாலும் அது எனக்கு விடுதலையே” என்றான். “இளையவனே, அஸ்தினபுரியில் காற்று அசைவதே இல்லை. அது காற்றே அல்ல. பிறரது மூச்சு. இறந்தவர்களின் மூச்சுகளும்தான்.” அர்ஜுனன் “நாம் செல்லுமிடம் காடு அல்ல” என்றான். “அறிவேன். அந்த இடத்தில் நம் மூச்சுக்காற்று தேங்க சிலமாதங்களாகும். அதற்குள் திரும்பிவிடலாம்.” அர்ஜுனன் புன்னகைத்து “எனக்கும் இப்பயணம் பெரும் விடுதலையையே அளிக்கிறது மூத்தவரே” என்றான்.

“ஏன்?” என்றான் பீமன். அர்ஜுனன் அவன் பார்வையைத் தவிர்த்து “நான் செய்தவை வீரர்களுக்குரிய செயல்கள் அல்ல. அங்கே முக்கண்ணன் ஆலயத்தின் முன் ஒரு மண்டலகாலம் நோன்பிருந்தால் என் பிழைகள் சீர்பெறுமென்றால் நன்றல்லவா?” என்றான். பீமன் புன்னகையுடன் “நீ ஒருபோதும் மீளப்போவதில்லை பாத்தா. நீ வாழ்நாளெல்லாம் பிறரது வஞ்சினங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்” என்றான். அர்ஜுனன் நகைத்து “பெரும் தீச்சொல் போலிருக்கிறது மூத்தவரே” என்றான். சற்று சிந்தித்து “ஆம். எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது” என்றபின் “எனக்கான ஒரு போரை நான் கண்டடையவே போவதில்லை. அதுவும் நன்றே” என்றான்.

அஸ்தினபுரியில் இருந்து அதிகாலையில் கிளம்பினார்கள். பீமன் “இளையவனே, நீ என்னுடன் வா” என்றான். “பயண ரதத்தில் பகலெல்லாம் அமர்ந்திருப்பது சலிப்பூட்டுகிறது. சலிப்படைந்த இன்னொருவன் அருகிருப்பது சலிப்பை சற்று குறைக்கலாம்” என்றான். அர்ஜுனன் சிரித்து “நஞ்சு ஊடுருவாத ஒரு சொல்லாட்சியை நீங்கள் சொல்லவே முடியாதா மூத்தவரே?” என்றான். பீமன் “நான் பெருநாகங்கள் உலவும் பாதாள உலகுக்குச் சென்று அங்கே வாசுகி அளித்த நஞ்சை அருந்தி வந்தவன் என்கிறார்கள் சூதர்கள்… கதைகளை கேட்டுக்கேட்டு காலையில் அருந்துவதற்கு ஒரு கோப்பை நஞ்சு கொண்டுவரும்படி சேவகனிடம் சொல்லுமளவுக்கு என் நா பழகிவிட்டது” என்றான்.

தேர்முற்றத்தில் விதுரரும் சௌனகரும் சகுனியும் துரியோதனனும் கௌரவர்களும் வந்திருந்தனர். சகுனி “எளிய சடங்குதான் இளவரசே… ஆனால் இங்குள்ள குலமூத்தாரையும் அரசரையும் அது நிறைவடையச் செய்யுமென்றால் நன்றல்லவா?” என்றார். தருமன் “ஆம்…” என்றான் அவன் முகம் கனத்து சோர்ந்திருந்தது. துரியோதனனிடம் சென்று தருமன் விடைபெற்றுக்கொண்டான். துரியோதனனின் முகம் கல்லால் ஆனதுபோலத் தோன்றியது. அவன் அடைந்த ஆடிப்பாவைப் பெருக்கம் போலிருந்தனர் கௌரவர். சௌனகர் “நல்லநேரம் நிறைவடையப்போகிறது” என்றார்.

அர்ஜுனன் விடைபெற்றபோது துரியோதனன் அவன் தோள்களைத் தொட்டான். அர்ஜுனன் “வாழ்த்துங்கள் மூத்தவரே” என்றான். துரியோதனனின் இமையில் ஒரு மெல்லிய துடிப்பை கண்டான். அவன் “நலம் பெறுக” என்று அடைத்த குரலில் சொன்னான். சேவகன் வந்து “அரசியார் தேரிலேறிவிட்டார். பட்டத்து இளவரசரின் ரதமே முறைப்படி முதலில் செல்லவேண்டும் என்றார்” என்றான். தருமன் விதுரர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவர் அவன் தோள்களைப்பற்றிக்கொண்டு மெல்ல அணைத்து தாழ்ந்த குரலில் பேசியபடியே அவனுடன் வந்தார். அவன் நகுல சகதேவர்களுடன் தன் ரதத்தில் ஏறிக்கொண்டு மீண்டும் விடைபெற்றான்.

தருமனின் ரதம் முன்னால் சென்றபின் பீமனின் ரதத்தில் அர்ஜுனன் ஏறிக்கொண்டான். கட்டடங்களின் நடுவே, மரங்களுக்குக் கீழே இருள் எஞ்சியிருந்தது. முற்றங்களில் வெண்ணிறப்பொருட்கள் மட்டும் தெரியும் தரைவெளிச்சம் எழுந்திருந்தது. ரதங்களின் ஒலி விடியற்காலையின் அமைதியில் எழுந்து அரண்மனைச் சுவர்களில் பல இடங்களில் எதிரொலித்தது. ரதங்கள் உள்கோட்டை வாயிலைக் கடந்ததும் காஞ்சனம் மும்முறை முழங்கியது. கொம்பு ஒன்று யானைக்குட்டி போல பிளிறியது. அதைக்கேட்டு அப்பால் கிழக்குவாயிலில் ஒரு கொம்பு ஒலித்து தொடர்ந்து முரசொலி எழுந்தது. அவர்களுடன் குந்தியின் மூடுரதம் வந்து இணைந்துகொண்டது.

கிழக்கு வானத்தின் அடியில் மிகமெல்லியத் தீற்றலாக செம்மை தெரிந்தது. அங்கே ஏதோ தீப்பிடித்து எரியத் தொடங்குவதுபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். குளிர்காற்றில் பனித்துளிகளும் மகிழமலர்களின் மகரந்தமும் இருந்தன. குளித்த ஈரம் விலகாத கூந்தலை தோளில் பரப்பி விட்டுக்கொண்டான். ரதங்கள் முழுவிரைவில் ஓடத் தொடங்கும்போது குழல் உலர்ந்து பறக்கத் தொடங்கிவிடும். அவர்கள் கடந்துசென்ற காவல்மாடங்களில் இருந்த வீரர்கள் முன்னால் வந்து நின்று வாழ்த்தி ஒலி எழுப்பினர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“அஸ்தினபுரியின் பாவத்தை கரைக்கச் செல்கிறோம். இன்னும் நிறைய மக்கள் வந்து நின்று வாழ்த்தியிருக்கலாம்” என்றான் பீமன். “அவர்களிடம் ஏதேனும் பாவங்கள் இருந்தால்கூட வாங்கிக்கொள்லலாம். அத்தனை தொலைவு செல்கிறோம். மொத்தமாகக் கொண்டுசென்று கரைத்தால் நல்லதுதானே?” அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “மூத்த தந்தையின் பாவங்கள் முற்றத்தில் வந்து அணிவகுத்துநின்றன, பார்த்தீர்களல்லவா?” என்றான். “அவர்கள் என்ன செய்வார்கள் பார்த்தா? அவர்கள் வெறும் கருவிகள்” என்றான் பீமன். “ஏதோ ஒரு அற நம்பிக்கையின் பேரில் அந்தக் கணிகனின் மண்டையை கதாயுதத்தால் தட்டி உடைத்து வீசாமல் செல்கிறேன். அதை எண்ணித்தான் நான் வியந்துகொண்டிருக்கிறேன்” என்றான்.

அர்ஜுனன் கூர்ஜரத்தில் இருந்து திரும்பி வந்தபோதே அஸ்தினபுரியின் மனநிலையில் பெரும் மாற்றம் உருவாகியிருப்பதை கண்டுகொண்டான். அவனுடைய படைகள் நகர்நுழைந்தபோது இருபக்கமும் மக்கள் கூடிநின்று மலர்களை அள்ளி வீசி ஆர்ப்பரித்தனர். ஆரவாரமும் திரளும் மும்மடங்கு கூடியிருந்தது. ஆனால் சௌவீரத்தை வென்று வந்தபோது எழுந்த இயல்பான வெற்றிக்கூச்சல் அல்ல அது என்று உடனே தெரிந்தது. வாழ்த்தொலிகளில் அறைகூவல் தெரிந்தது. வெறிகொண்டு துள்ளிக்குதித்து தொண்டை புடைக்கக் கூவியவர்கள் அனைவருமே எளிய யாதவர்கள் என்பதை சற்றுக்கழித்து அவன் உணர்ந்தான். பின்னர் அந்தத் திரளில் வணிகர்களோ ஷத்ரியர்களோ பெரும்பாலும் எவருமில்லை என்பதை கண்டறிந்தான்.

தன் அகம் நிறையழிந்து கலங்கியிருப்பதை அரண்மனையை அடைந்தபோது நன்றாகவே உணர்ந்தான். அவர்களை வரவேற்க சௌனகரும் விதுரரும் மட்டுமே அரண்மனை முகப்புக்கு வந்திருந்தனர். அர்ஜுனன் விதுரரிடம் “இம்முறை நேரடியாக அரசரைக் கண்டு அனைத்தையும் அவர் காலடிகளில் வைத்து பணியலாமென்று எண்ணுகிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் அருகே வந்து விழிதாழ்த்தி அவனுக்கு மட்டும் கேட்கும்படி “நீ வரும் செய்தியை நேற்றே அரசரிடம் சொல்லிவிட்டேன். உங்களை சந்திக்க அவர் மறுத்துவிட்டார். பலமுறை பல சொற்களில் அது முறையல்ல என்றேன். அவர் இறுகிவிட்டால் பின்னர் சொற்களால் பயனில்லை” என்றார்.

அர்ஜுனன் தன் அகத்தில் படபடப்பை உணர்ந்தான். “ஏன்?” என்றான். “உன்னிடம் மூக்குகளை வெட்டிக் கொண்டுவரச் சொன்னது பெரும் அறப்பிழை என்று எண்ணுகிறார்” என்றார் விதுரர். குந்தியின் உண்டாட்டுக்கு அவரும் கௌரவர்களும் வராமலிருந்ததை சொன்னார். “அவர்கள் வரவில்லை என்றதுமே குந்திதேவி நடுங்கிவிட்டார். அதன் பொருள் என்ன என்று அவருக்குத் தெரியும். தருமனை அனுப்பி அரசரிடம் அனைத்தையும் விளக்க முயன்றார். தருமனைச் சந்திக்க அரசர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அழைத்துக்கொண்டு படுக்கையறைக்கே செல்லலாம் என்று எண்ணினேன். விப்ரருக்கு தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் எந்நேரமும் அவருடன் சகுனியும் கணிகரும் இருந்துகொண்டிருக்கிறார்கள்.”

“நகரில் ஒரு பிளவைக் காண்கிறேன்” என்றான் அர்ஜுனன். “ஆம், உண்டாட்டு முடிவதற்குள்ளேயே அது நிகழ்ந்துவிட்டது. யாதவர்கள் மணிமுடியை அறப்பிறழ்வான வழிகளில் அடைந்துவிட்டனர் என்று ஷத்ரியர்கள் சொல்லத் தொடங்கினர். ஓரிருநாட்களுக்குள் நகரின் சூத்திரர்கள் அனைவரும் அதையே சொல்கின்றனர்…” விதுரர் சொன்னார். “அரசர் அறமீறலை ஒப்பவில்லை என்றும், அவர் சினம்கொண்டிருக்கிறார் என்றும் படைகள் பேசிக்கொள்கின்றன.” விதுரர் கசப்புடன் புன்னகை செய்து “நான் மட்டும் மகதத்தின் அமைச்சனாக இருந்தால் இந்நேரம் படைகொண்டு அஸ்தினபுரியை சூழ்ந்திருப்பேன். மலர்கொய்வது போல இந்நகரை இன்று பிடிக்க முடியும்” என்றார்.

“யாதவர்கள் செய்வது தற்கொலைக்கு நிகரானது. அவர்களின் கூச்சலைப்போல எதிர்ப்பையும் காழ்ப்பையும் உண்டுபண்ணுவது பிறிதொன்றில்லை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் அதை யார் சொல்வது? பார்த்தா, மானுடரின் அற்பத்தனங்கள் மட்டும் ஒன்று திரண்டு வெளிப்படுவதையே நாம் மக்கள் என்கிறோம். அவர்கள் தங்கள் சிறுமையை கொண்டாடுவார்கள். சிறுமையைக் கொடுத்து சிறுமையைப் பெறுவார்கள். சிறுமையை நட்டு வளர்ப்பார்கள். அந்த மூடத்தனத்துக்கு விலையாக குருதியும் கண்ணீரும் சிந்துவார்கள். வரலாறு என்பது வேறென்ன?”

அர்ஜுனன் “நான் என்ன செய்வது அமைச்சரே?” என்றான். “ஒன்றும் செய்வதற்கில்லை. இப்போது அரசியை காணவேண்டியதில்லை. அரண்மனையில் ஓய்வெடுங்கள். நாளை சென்று இயல்பான சந்திப்பாக அரசியைப் பாருங்கள்… கூர்ஜரனின் திருமுகம் கிடைத்ததா?” என்றார் விதுரர். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அதை அரசியிடம் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு “என் கணிப்புகள் பொய்யானதற்காக மகிழ்கிறேன். கூர்ஜரம் இத்தனை விரைவில் பணியுமென நான் எண்னவில்லை” என்றார் விதுரர்.

“அது இளையயாதவனின் போர் சூழ்ச்சியின் வெற்றி” என்றான் அர்ஜுனன். “விரைவையே அவன் முதன்மை ஆற்றலாகக் கொண்டிருந்தான். என் படையையே மீன்கொத்தி என்றுதான் சொன்னான். விரைவாக நேராக இலக்கை நோக்கிப் பாய்வதும் தாக்கி இரையைக் கவ்வியதுமே தன் இடத்துக்கு மீள்வதும் அதன் வழி. மதுராவை அம்புபோல பாய்ந்துசென்று பிடித்தோம். மறுநாள் காலையில் கிளம்பி இரு பகலும் மூன்று இரவும் பயணம் செய்து கூர்ஜரத்தை அடைந்தோம். கூர்ஜரம் எங்கள் மதுரைவெற்றியின் செய்தியை அறிந்து பதறிக்கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அவர்களை தாக்கத் தொடங்கிவிட்டிருந்தோம்” என்றான் அர்ஜுனன்.

“கூர்ஜரத்தின் இளையமன்னன் கிருதவர்மன் காலையில் காவல்கோட்டத்தை நேரில் பார்க்கவருவான் என்றான் இளையயாதவன். நாங்கள் அச்சமயம் அதைத் தாக்கினோம். முதல் அம்பிலேயே அவனை கொல்லச் சொன்னான். இளவரசன் கொல்லப்பட்டதுமே அவர்கள் நிலைகுலைந்துவிட்டனர். தலைமையை உருவாக்கிக்கொண்டு தங்களைத் தொகுக்க அவர்களால் முடியவில்லை. அதற்குள் காவல்மையத்தைப் பிடித்தோம். அனைவரையும் சிறையிட்டோம்.”

“அந்தக் காவல்மையம் கூர்ஜரத்துக்கு முதன்மையானது. அது தென்கூர்ஜரத்தின் அரைப்பாலை நிலங்களின் விளிம்பில் உள்ளது. அங்கே அரசுகளோ மக்களோ இல்லை. எனவே நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே எந்தத் தாக்குதலும் நிகழ்ந்ததில்லை. அங்குள்ள கோட்டை அமைப்பும் காவல் அமைப்பும் எந்தவிதமான போருக்கும் சித்தமானவையாக இருக்கவில்லை. காவலர்கள் வணிகர்களின் மனநிலையுடன் இருந்தனர். அப்பகுதியின் வணிகர்களிடம் கையூட்டு பெறுவதற்கான இடமாகவே அது நெடுநாட்களாக இருந்துவந்திருக்கிறது. உண்டு கொழுத்து அசையமுடியாமல் கிடக்கும் கன்றுபோலிருந்தது அந்த மையம்.”

அர்ஜுனன் சொன்னான் “ஆனால் அது மிகமுதன்மையான இடம். அங்கிருந்து ஒரே நாளில் சிந்துவின் பெருக்கை அடையமுடியும். முறையான ஒப்புதல் திருமுகம் அளிக்கவில்லை என்றால் சிந்துவில் செல்லும் கலங்களின் பாய்களை எரியம்பால் எரிப்போம் என்று கூர்ஜரனுக்கு செய்தி அனுப்பினோம். அதை அவனால் தாளமுடியாது. அந்த காவல்மையத்தை கைப்பற்றாவிட்டால் சிந்துவின் வணிகம் நின்றுவிடும். கூர்ஜரமே அதை நம்பித்தான் உள்ளது. அஸ்தினபுரியின் படைநீக்கம் குறித்த செய்தியும் வந்ததும் கூர்ஜரன் பணிந்தான்.”

“போரில் தகவல்களே மிகப்பெரிய படைக்கலம்” என்றார் விதுரர். “இந்த இளைய யாதவன் அனைத்தையும் நுட்பமாக அறிந்திருக்கிறான். அவனுடைய ஒரு கணிப்புகூட பிழைக்கவில்லை என்பதை வியப்புடன் எண்ணிக்கொள்கிறேன்.” அர்ஜுனன் கண்களில் ஒளியுடன் “ஆம் அமைச்சரே. மண்ணில் அவனறியாத ஏதேனும் உள்ளனவா என்று தோன்றிவிடும். ஆனால் ஏதுமறியாத சிறுவனாகவே எப்போதும் இருப்பான். போர்கூட அவனுக்கு விளையாட்டே. களத்தில் குருதி சிதறப் போரிடுகையில் வாய்க்குள் பாடலை முணுமுணுக்கும் ஒருவன் இருக்கமுடியும் என்றே என்னால் நம்பமுடியவில்லை” என்றான்.

“பாட்டா?” என்றார் விதுரர். “ஆம். போரில் அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அது ஏதோ போர் மந்திரம் என எண்ணினேன். என்ன என்று கேட்டேன். அது சூதர்களின் காதல்பாடல். உன் கூர்முலைகளின் வேல்களால் என்னைக் குத்து. உன் இதழ்களின் விஷத்தால் என்னைக் கொல் என்று பாடிக்கொண்டிருக்கிறான். போரின்போது பக்கவாட்டில் அவன் முகத்தை நோக்கினால் இனிய இசையொன்றைக் கேட்டபடி தென்றல் தவழும் புல்வெளியில் அமர்ந்திருப்பவன் போலிருக்கிறான். நூற்றுக்கணக்கில் தலைகளைக் கொய்து வீழ்த்தியபின் தன் இடையிலிருந்து இனிப்புப்பண்டம் ஒன்றை எடுத்து வாயிலிட்டு சுவைக்கிறான்.”

விதுரர் பெருமூச்சுடன் “விதி சிலரை விரும்பி உருவாக்கிக் கொள்கிறது” என்றபின் “அன்னையை சந்திக்கையில் எதைப்பற்றியும் பேசவேண்டியதில்லை” என்றார். “ஏன்?” என்றான் அர்ஜுனன் “அவர்கள் கொந்தளிப்பான நிலையில் இருக்கிறார்கள். இதெல்லாமே திருதராஷ்டிர மன்னரின் சதி என்று நம்புகிறார்கள். மக்களிடமும் படைகளிடமும் வேற்றுமையை உருவாக்கி நாட்டைப் பிரித்து பாதியை தன் மைந்தர்களுக்கு அளிக்க அவர் முயல்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். உங்களிடம் அவர்கள் பேசும் சொற்களெல்லாம் எப்படியோ சகுனியை அடைந்துவிடும் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவற்றை உங்களிடம் அவர் பேசினார் என்பதே நமக்கு எதிரானதாக ஆகிவிடும்.”

அர்ஜுனன் சிரித்து “மூத்ததந்தை சதிசெய்கிறாரா? இதென்ன கதை! முழு அரசும் அவருடையது அல்லவா? அவர் அளித்த கொடை அல்லவா தருமரின் இளவரசுப்பட்டம்?” என்றான். “அதை அரசி மறந்துவிட்டார். அஸ்தினபுரியின் அரசு அவருக்கும் அவர் மைந்தர்களுக்கும் இயல்பாகவே உரியது என்றும் திருதராஷ்டிரரும் கௌரவர்களும் அதை கவர்ந்துகொள்ள வந்த அயலவர் என்றும் எண்ணுகிறார். மானுட அகம் எந்த பாவனையையும் மேற்கொள்ளும். ஒருவாரம் ஒருபாவனையை மேற்கொண்டால் அது நம் அகத்தில் உண்மையென்றே நிலைகொண்டுவிடும்” என்றார் விதுரர்.

அர்ஜுனன் குந்தியை சந்தித்தபோது அவனுடைய எச்சரிக்கையை மீறி குந்தியின் கொந்தளிப்பை கேட்டு நிற்க நேர்ந்தது. “இளையவனே, இது நுண்ணிய சதி… நீயோ விதுரரோ இதை உணர முடியாது. நமக்கு எதிராக அஸ்தினபுரியின் ஷத்ரியர்கள் தூண்டப்பட்டுவிட்டார்கள். சூதர்களும் சூத்திரர்களும் நம்மை வெறுக்கிறார்கள். தருமன் முடிசூட முடியாத நிலை உருவாகிவிட்டது. இது சகுனியின் வஞ்சம் என்று எண்ணினேன். கணிகரின் தீமையோ என்று ஐயுற்றேன். இல்லை. இது முழுமையாகவே விழியிழந்த அரசரின் சூழ்ச்சி. கொடுப்பது போலக் கொடுத்து எடுத்துக்கொள்ளும் ஆடல்…” என்றாள். மூச்சிரைக்க “இச்சதுரங்கத்தில் அவர் வெல்லப்போவதில்லை… நானும் சூழ்ச்சி அறிந்தவள்தான்” என்றாள்.

“அதை ஏன் அவர் செய்யவேண்டும்? இவ்வரசை அவர் அளிக்காவிட்டால்…” என்று அர்ஜுனன் தொடங்க “அளித்தாகவேண்டிய நிலை அன்று அவையில் இருந்தது. அளிக்காவிட்டால் அன்று ஷத்ரியர்களும் யாதவர்களும் பிற சூத்திரர்களும் நம்மை ஆதரித்திருப்பார்கள். இவ்வரசை நாம் எளிதில் வென்றிருப்போம். அதை அவர் நமக்களித்து அறமூத்தார் என்று பெயர் பெற்றார். இப்போது வஞ்சத்தால் நமக்கு எதிர்ப்பை உருவாக்குகிறார். நாம் செய்யும் செயல்களை திரித்துக்காட்டி நாம் அறம்பிழைப்பதாகச் சொல்லி பரப்புகிறார். நம்மை ஆதரித்த மக்களே நம்மை எதிர்க்கும்படி செய்துவிட்டார். இனி நாட்டை கூறுபோடுவார். பாதி அரசை அவர் தன் மைந்தர்களுக்காகப் பெறுவார்…”

குந்தி ஈரமான விழிகளுடன் மூச்சிரைக்க அவனை நோக்கினாள். முகம் வியர்வையில் நனைந்திருந்தது. “அவர்களுக்கு காந்தாரத்தின் பெரும் செல்வம் இருக்கிறது. ஷத்ரியர்களின் படைபலம் இருக்கிறது. மேலும் துணையரசுகளை திரட்டிக்கொள்ள முடியும். நமக்கு மதுராவும் மார்த்திகாவதியும் அன்றி பிற துணைநாடுகளே இல்லை. இளையவனே, ஒரே வருடத்தில் தருமனை வென்று எஞ்சிய அஸ்தினபுரியை அவர்கள் வெல்வார்கள்… இதுதான் அவர்களின் திட்டம். ஒருபோதும் நான் அவர்கள் வெல்லவிடப் போவதில்லை. நானும் அரசியலின் வழிகளை அறிந்தவளே.”

ஒருவாரம் திருதராஷ்டிரரை சந்திக்க முயன்றும் முடியவில்லை. அதன்பின் விதுரர் வந்து அரசர் சந்திக்க அழைத்திருப்பதாகச் சொன்னார். செல்லும் வழியிலேயே திருதராஷ்டிரர் சொல்லப்போவதை சொல்லிவிட்டார். “அவருக்கு அந்த முக்கண் ஆலயம் பற்றி எவர் சொன்னது என்று தெரியவில்லை. அவரே ஏதேனும் நிமித்திகரிடம் கேட்டிருக்கலாம். அவர் அதை நம்புகிறார். அவரது அகம் விழைவதென்ன என்று எனக்குத் தெரிகிறது. இத்தனை சினத்தை நெஞ்சில் சுமந்து அவரால் வாழமுடியாது. அகம் குவிந்து இசைகேட்கமுடியவில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார். அவர் இதை மீளும் வழியாகவே எண்ணுகிறார். ஒரு கழுவாய்ச்சடங்கு மூலம் தன் இளையோரின் மைந்தர்கள் தன்னிடம் மீண்டு வரட்டுமே என எண்ணுகிறார்.”

தருமன் “ஆனால் நாங்கள் இந்நகரைவிட்டு விலகிச்செல்லவேண்டுமென எண்ணுகிறார் அல்லவா?” என்றான். “நாற்பத்தொருநாட்கள்தான் நோன்பு. சென்றுவர இரண்டுவாரம்… அவ்வளவுதானே?” என்றார் விதுரர். “அவரது எண்ணம் என்ன என்று எனக்குப்புரியவில்லை” என்று தருமன் சொன்னான். விதுரர் “அவரைச் சூழ்ந்திருக்கும் குரல்களையே நான் அவர் வழியாகக் கேட்கிறேன். அவர்கள் நம்மை என்னசெய்ய எண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்று இந்நகரில் உள்ள அமைதியின்மை முழுமையாகவே அவராலும் அவரை இயக்குபவர்களாலும் உருவாக்கப்பட்டது…” என்றபின் பெருமூச்சுடன் “ஆனால் நாம் அவரது ஆணைகளை ஏற்றாகவேண்டும். இன்னும் இந்நகரின் அரசர் அவரே” என்றார்.

அவையில் திருதரஷ்டிரர் அருகே சகுனியும் பின்பக்கம் கணிகரும் இருந்தனர். சௌனகர் வந்து அவர்களை வரவேற்று அழைத்துச்சென்று அரசர் முன் நிறுத்தினார். அவையில் நின்றிருந்த கௌரவர்கள் விழிகள் சந்திக்காமல் விலகிக்கொள்வதை அர்ஜுனன் கண்டான். சௌனகர் அரசரின் ஆணையை சுருக்கமாகச் சொன்னார். “நாம் இந்த அஸ்தினபுரியில் ஒரு அநாசனைக்கூட வைத்திருக்கவில்லை. ஆகவேதான் பாரதவர்ஷத்தின் பதாகை என்று இந்நகரை கிருஷ்ணதுவைபாயன வியாசர் வாழ்த்தினார். உங்கள் செயலால் அச்சொல் கறை கொண்டது. கழுவாய் தேடி வாருங்கள் என்று அரசர் ஆணையிடுகிறார்” என்றார் சௌனகர். “ஆணை” என்று தருமன் தலைவணங்கினான்.

அவர்கள் செல்லலாம் என்று விதுரர் கைகாட்டினார். அவர்கள் திரும்பும்போது திருதராஷ்டிரர் “மைந்தர்களே” என்று மெல்லியகுரலில் அழைத்தார். அவர்கள் நோக்கியபோது முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டு “இதை ஒரு எளிய பயிற்சியாக எண்ணுங்கள். அங்கே உங்களுக்கு மிகச்சிறந்த மாளிகை அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சொன்னார். அம்மாளிகையில் உங்களை மீண்டும் இளமையின் ஒளி சூழ்ந்துகொள்ளட்டும். களிறுகொண்டானின் பாதங்களில் உங்களுக்கு நிறைவும் கிடைக்கும்” என்றார். பின்னர் மேலும் தணிந்த குரலில் “தருமா, அரசன் நீதியை நிகழ்த்தினால் மட்டும் போதாது. அது நீதி என நம்பவைக்கவும் வேண்டும். அதற்கு எளிய வழி நீதிக்கு அவனும் கீழ்ப்பட்டவனாக இருப்பதே. இந்தப்பயணம் உங்கள் மீதான ஐயங்களை அகற்றும்” என்றார்.

தருமன் கைகூப்பி “தாங்கள் சொல்வன அனைத்தும் இறை ஆணையே” என்றான். திருதராஷ்டிரர் “பீமா, சென்று வருக. நாம் ஒரு நல்ல தோள்போர் செய்து நீணாள் ஆகிறது” என்றார். அச்சொற்கள் அவையை புன்னகைக்கச் செய்தன. பீமன் “வருகிறேன் தந்தையே” என்று வணங்கினான். வெளியே செல்லும்போது விதுரர் பின்னால் வந்தார். “அங்கே நீங்கள் தங்கும் மாளிகை சௌனகரின் உதவியாளனாகிய புரோசனனால் அமைக்கப்பட்டது… அனைத்து தேவைகளும் அங்கு நிறைவேற்றப்படும்” என்றார். குரல் தாழ்த்தி “அன்னை இவ்வாணையை ஏற்க மறுக்கலாம். அதைச் சொல்லிப் புரியவைத்து அழைத்துச்செல்வது உங்கள் பொறுப்பு. நம்முன் வேறு வழியே இல்லை” என்றார்.

கோட்டை வெளிவாயிலில் நின்றிருந்த கூட்டத்தைக் கண்டு முன்னால் சென்ற ரதங்கள் நின்றன. பீமன் “என்ன கூட்டம்?” என்றான். முன்னால் சென்ற ரதத்தில் இருந்து கனகனும் பிறரும் இறங்கி கூட்டத்தை நோக்கி செல்வது தெரிந்தது. பீமன் ரதத்தை விட்டு இறங்கி அருகே சென்றான். அங்கிருந்தவர்கள் அனைவருமே நகரிலுள்ள யாதவர்கள் என்று தெரிந்தது. குடித்தலைவர்கள் போல சிலர் முன்னால் நின்றிருந்தனர். குழந்தைகளை இடுப்பில் ஏந்திய பெண்களும் மூட்டைகளை ஏந்திய ஆண்களுமாக ஏராளமானவர்கள் அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்தனர்.

தருமன் “என்ன?” என்று கேட்டபடி அருகே வந்தான். கனகன் திரும்பிவந்து “அரசே, அவர்கள் யாதவர்கள். இந்த நகரில் அவர்கள் வாழ விரும்பவில்லை என்றும் தங்களுடன் வாரணவதத்துக்கே வந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்” என்றான். அதற்குள் பெரிய தலைப்பாகை அணிந்த முதியவர் முன்னால் வந்து உரத்தகுரலில் “அறப்பிழை நேர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அறத்தைப்பற்றி யார் பேசுவது? இது ஒரு பெரும் சதி. தங்களை அறச்செல்வர் என்று பாரதவர்ஷமே கொண்டாடுகிறது. அதைப் பொறுக்க முடியாமல் இந்த அவப்பெயரை உருவாக்குகிறார்கள். இது கழுவாய்ப்பயணம் அல்ல, நாடுகடத்தல்” என்றார். ‘ஆம்! ஆம்! அநீதி ! சதி!’ என்றெல்லாம் கூட்டம் கூச்சலிட்டது.

தருமனின் முகம் மலர்ந்தது. கைகளைக் கூப்பியபடி “என் தந்தையின் ஆணையை ஏற்று செல்லவேண்டியது என் கடமை. அதைத் தடுக்காதீர்கள்” என்றான். “இக்கழுவாய் எனக்குத் தேவைதான். நான் செய்த பிழைகள் எனக்குத்தான் தெரியும். தெரியாத பிழைகள் பலநூறு இருக்கலாம். அவற்றில் இருந்தும் விடுபட்டு நான் மீள்வேன்” என்றான். “இல்லை அரசே. அங்கே வாரணவதத்தில் உங்களைக் கொல்ல சதி செய்யப்பட்டிருப்பதை சூதர்கள் சொல்கிறார்கள். நாங்களும் உடன் வருகிறோம். அயோத்திராமன் காடேகியபோது மக்களும் உடன் சென்றனர். அதைப்போல நாங்களும் வருகிறோம். நீங்கள் இருக்குமிடமே எங்களுக்கு அஸ்தினபுரி” என்று ஒரு பெண்மணி கண்ணீருடன் சொன்னாள்.

“அனைவரும் இங்கே இருக்கவேண்டும். அரசரின் ஆணைக்குப் பணிந்து சிறந்த குடிகளாக இருக்கவேண்டும். இது என் ஆணை” என்றான் தருமன். “அவர் எங்கள் அரசர் அல்ல. விழியிழந்தவனை அரசனாக ஏற்க மாட்டோம்” என்று ஒருவன் கூவினான். “அவரது அவநோக்கினால்தான் அஸ்தினபுரி இழிவடைந்தது. இன்று பாண்டவர்களால் வெற்றியும் புகழும் வரும்போது அவருக்குப் பொறுக்கவில்லை” என்று ஒரு பெண் முன்னால் நெருக்கியடித்து வந்து கைநீட்டி கூச்சலிட்டாள். “ஆம்… அவர் எங்கள் அரசர் இல்லை… நீங்கள்தான் அரசர்” என்று கூவியது கூட்டம். “நாங்களும் வருகிறோம்… ரதத்தை தொடர்ந்து வருகிறோம்… இங்கே வாழமாட்டோம்” என்றனர்.

தருமன் “என்னை தீராப்பழிக்குத் தள்ளாதீர்… தந்தைசொல் பிழைத்தவன் என்று அவப்பெயர் என்னைச் சூழுமென்றால் அதன் பின் உயிர் தரிக்கமாட்டேன்” என்று தழுதழுத்தான். கூட்டத்தினர் அழத் தொடங்கினர். விம்மல் ஓசைகள் சேர்ந்து எழுந்தன, சில பெண்கள் தரையில் அமர்ந்து தருமனின் கால்களைத் தொட்டு தலையில் வைத்து அழுதனர். முதியவர்கள் கண்ணீர் வழிய கைவிரித்து அவனை வணங்கினர். “நான் மீண்டு வருவேன். எனக்கு அறம் துணையிருக்கும். தீமை எண்ணிய உள்ளங்களை அறமே தண்டிக்கும். உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களும் எனக்குத் துணை வரட்டும்… நீங்கள் என்னை அரசனாக ஏற்றுக்கொண்டீர்கள். ஆகவே, இனி நாடோ மண்ணோ இல்லையென்றாலும் நான் அரசனே” என்றான் தருமன்.

கூட்டம் வெறிகொண்டது போல கைதூக்கி கூச்சலிட்டது. வாழ்த்தொலிகளுடன் அலையடித்தது. கூப்பிய கைகளுடன் தருமன் தேரில் ஏறிக்கொண்டான். அர்ஜுனன் புன்னகையுடன் “மூத்தவர் நிறைவடைந்துவிட்டார்” என்றான். “ஆம், அவர் வரலாற்றில் வாழ்கிறார். எங்கே ராகவ ராமனைத் தொடர்ந்து குடிகள் வந்ததுபோல தன்னைத் தொடர்ந்து வராமலிருந்துவிடுவார்களோ என்று கலங்கிக்கொண்டே வந்திருப்பார்” என்றான் பீமன். அவர்கள் தேர்களில் ஏறிக்கொண்டனர். யாதவர்கள் வாழ்த்தொலி எழுப்பி தேர்களுக்குப்பின்னால் கைவீசியபடி ஓடினர்.

“அவர்களுக்கும் தெரியும், அவர்கள் ஒரு நாடகத்தில் நடிப்பது” என்றான் பீமன். “இவர்களை அழைத்துக்கொண்டு வாரணவதம் வரை சென்று அங்கே இவர்கள் வாழ்க்கை நலமாக அமையவில்லை என்றால் இதே நாவால் வசையும் உதிர்ப்பார்கள். கூடச் செல்லப்போவதில்லை என்று தெரிந்தே கைக்குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்” என்றான். “இல்லை, அந்த உணர்ச்சிகள் உண்மையானவை” என்றான் அர்ஜுனன். “எந்த உணர்ச்சியும் வெளிப்படும்போது உண்மையானதே” என்று பீமன் நகைத்தான்.

“அப்படியென்றால் இதை ஏன் செய்கிறார்கள்?” என்றான் அர்ஜுனன். “இதைச்செய்யாவிட்டால் அவர்கள் வரலாற்றில் இல்லை என்றல்லவா பொருள்? இருப்பதற்கு ஒரே வழி இதுதான்… வாய்ப்பு கிடைக்கையில் அந்த வேடத்தை நடிப்பது” என்ற பீமன் மேலும் நகைத்து “சற்று மிகையாகவே” என்றான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

முந்தைய கட்டுரைஇண்டர்ஸ்டெல்லாரும் இன்றைய தத்துவமும்
அடுத்த கட்டுரைஅறம் தீண்டும் கரங்கள்