«

»


Print this Post

கடற்கேரளம் – 4


காலையில் பய்யன்னூர் கடற்கரைக்குச் சென்றோம்.  வெயில் வந்திருந்தாலும் கடல்நீர் குளிராக இன்னும் காலையின் மனநிலையை உருவாக்கக்கூடியதாக இருந்தது. காலடிகள் படாத கடல். இந்தக்கேரள பயணத்தில் நான் கண்ட முக்கியமான விஷயமே பல இடங்களில் ஒரு காலடி கூட படாத கடலைப்பார்க்க முடிந்தது என்பதே. அது ஒரு அற்புதமான அனுபவம்தான். கடல் நமக்காகவே காத்திருப்பதுபோல ஒரு பிரமை எழுகிறது அப்போது!

முழுப்பிலங்காடு

பய்யன்னூர் அருகேதான் எழிமலை இருக்கிறது. கடற்படைத்தாவளம். அங்கே கடலு க்குள் கரை ஒரு பெரிய கல்மேடாக உள்ளே புகுந்திருக்கிறது. அதனருகே கடலுக்குள் புகுந்த இரு பாறைமேடுகள் மேலும் உள்ளன.  அவற்றில் சன்னலை அறையும் மாபெரும் திசைச்சீலை போல கடல் அலைத்துக்கொண்டே இருந்தது.

கண்ணனூர் அருகே டிரைவ் இன் கடற்கரை இருக்கிறது. இந்தக்கடற்கரைக்கு முழுப்பிலங்காடு கடற்கரை என்று பெயர். இங்கே கடலின் மணல் மிகச்சிறிய துகள்களால் ஆனதாக இருக்கிறது. ஆகவே மணல் தார்ச்சாலைபோல இறுகிவிட்டிருக்கிறது. இதன்மீது எந்தக்காரையும்சாதாரணமாக ஓட்ட முடியும். ஓட்டுவது பழக அருமையான இடம். நாங்கள் சென்றபோது ஒரே ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பலகிலோமீட்டர் தூரத்திற்கு ஒளிரும் கடலருகே கடற்கரை மைதானம்போல விரிந்து கிடந்தது.

பேக்கல்

பன்னிரண்டு மணிக்கு பேக்கல் கோட்டைக்கு சென்று சேர்ந்தோம். சொன்னதுமே ‘உயிரே உயிரே வந்துஎ ந்னோடு கலந்துவிடு’ என்ற பாட்டு காதில் ஒலிக்கலாம். வெட்டுகற்களால் ஆன  அந்தக்கோட்டையின் சுவர்கள் மீது மழைககலத்தில் பச்சைப்பாசி படர்ந்து வெல்வெட்டாலபதாக ஆகிவிடும். நாங்கள் சென்றது கோடைகாலம்

பேக்கல்

 

அருகேதான் காசர்கோடு. நான் காசர்கோட்டில் 1984 முதல் 1988 டிசம்பர் வரை இருந்த நாட்களில் அடிக்கடி அங்கே வருவேன். முழுமையாக கைவிடப்பட்டு கிடக்கும் அது. ஒரே ஒரு மனிதச்சலனம்கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்காது. பகலெல்லாம் அபாரமான அந்த தனிமையில் அமர்ந்திருப்பேன். தற்கொலைக்குச் சிறந்த இடம். தற்கொலை எண்ணத்துடன் இருந்தால் தனிமை கனமான ஒரு வேதனையாக, இன்பமான ஒரு அவஸ்தையாக ஆகிவிடும்.

1988ல் கோணங்கி என்னைப்பார்க்க வந்திருந்தபோது அங்கே அவருடன் வந்திருக்கிறேன். கடற்கரையில்  கோணங்கி என்று எழுதி அதை கடல் அழிப்பதைப் பார்த்தபின் அவர் ‘கடலோரம் சிறுநண்டு படமொன்று கீறும் சிலநேரம் அதைவந்து கடல்கொண்டு போகும்’ என மகாகவியின் பாடலைப் பாடினார். அன்று இளமழை கண்ணாடித்துருவலாக பெய்தபடியே இருந்தது.

இப்போது நல்ல வெயில். இக்கேரி நாயக்கர்களால் கட்டப்பட்டு டச்சுக்காரர்களால் விரிவாக்கம்செய்யப்பட்டு திப்புசுல்தானால் கைப்பற்றப்பட்டு பிரிட்டிஷாரால் மீட்கப்பட்ட பேக்கல் தென்நாட்டின் ஆகப்பெரிய கடல்கோட்டை. அதன் பீரங்கி மேடை மேலே நின்று கீழே வெகுதூரம் விரிந்துகிடக்கும் வளைந்த கடற்கரையைப் பார்ப்பது ஒரு பெரிய அழகனுபவம்

 

மேலிருந்து பேக்கல் கடல்

பேக்கலிலேயே உணவுண்டுவிட்டு உதுமா நோக்கிச் சென்றோம். உதுமாவில் நிலம் கடலை விட மிக மேலே இருக்கிறது. தென்னைகள் அடர்ந்த கரை. கடல் கீழே ததும்பிக்கொண்டிருக்க கிட்டத்தட்ட மனித சஞ்சாரம் குறைவான கடற்பகுதி இது. மீன்பிடித்தல் காஸர்கோடு அருகேதான் கொஞ்சம் நடக்கிறது. பொதுவாகவே வடகேரளத்தில் பெரிய அளவில் மீன்பிடிக்கிராமங்களும் மக்கள் நெருக்கமும் இல்லை.

உதுமா அருகே ஒரு கடலோரத்தைப் பார்த்தபோது அதி உக்கிரமான மீன் வாசனை. துணைக்குவந்த சைவர் புழுவாய் துடிக்க அசைவர்கள் உளமகிழ்வு எய்தினோம். மத்திச்சாளையில் இருந்து எண்ணை எடுக்கும் இடம் அது.

உதுமா எங்கள் வட எல்லை. பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினோம். ஒரே வீச்சாக ஓட்டி இரவில் குருவாயூர் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் ஓர் இணைய மையத்தில் ரயில் டிக்கெட் அச்சு எடுக்க இறங்கிய நான் அங்கேயே செல்போனை மறந்து விட்டுவிட்டேன்.  ஒருமணிநேரம் தாண்டி வந்தும் விட்டேன்.  இணைய நிலைய ஆசாமி அருண்மொழிக்கு தொலைபேசி அவளிடம் தகவலைச் சொல்ல அவளுக்கு எங்கள் குழுவில் எவரது ·போனும் தெரியவில்லை. ஆகவே  அவள் இயக்குநர் சுகாவை கூப்பிட்டுச் சொல்ல அவர் புரடக்ஷன் மானேஜர்கள் மூலம் என்னுடன் அவ்ந்த சினிமா நண்பரின் எண்ணை அறிந்து அவருக்குப் பேசி செல்போன் மறந்ததைச் சொன்னார்.

திரும்பி ஒருமணிநேரம் போய் இணைய நிலையத்தை அடைந்தேன். அங்கே இரவு 12 மணிக்கு என் செல்போனுடன் இணையநிலைய க்காரர் காத்திருந்தார். செல்போனை வாங்கும்போது எப்படி அருண்மொழியை கூப்பிட்டார் அவர் என்று கேட்டேன். என் செல் ·போனில் இருந்த ஒரே பெண்பெயர் அதுதான் என்றார். ஷெர்லக் ஹோம்ஸ்கள் எங்கும் இருக்கிறார்கள். என்னை மாதிரி கற்புக்கரசர்களும்.

இரவு ஒருமணிக்கு குருவாயூரில் ஒரு பழையபாணி ஓட்டலில் அறை. வழக்கம்போல பாடாவதி கட்டில் மெத்தை வேண்டாத விருந்தாளி போன்ற உபசரிப்பு. நான் அப்படியே ஊர்திரும்ப திட்டமிட்டேன். மறுநாள் எட்டரை மணிக்கு திரிச்சூரில் இருந்து எனக்கு ரயில் .காலையில் பிறர் கோயில்தரிசனத்துக்குப் போக நான் காரில் கிளம்பி திரிச்சூர் வந்து ரயிலைப் பிடித்தேன்.

திரிச்சூர் முதல் எர்ணாகுளம் வரை காலையும் மாலையும் எந்த ரயிலிலும் எல்லா பெட்டியும் பொதுப்பெட்டிதான். மூவாயிரம் சீசன் டிக்கெட் ஆட்கள் இருக்கிறார்கள். ரயில்கள் குறைவு. ஆகவே எல்லா பெட்டிகளிலும் ஏறிக்கொள்வார்கள். ஆனால் முன்பதிவுசெய்த இருக்கைகளை முரட்டுத்தனமாக ஆக்ரமிப்பதெல்லாம் இல்லை.

நெரிசலில் நான் உட்கார்ந்தே தூங்கினேன். நடுநடுவே விழிப்பு. ஒன்று தெரிந்தது, கேரளத்தில் இப்போது முக்கால்வாசிப்பேர் பழசிராஜா படத்தில் உள்ள பாடல்களைத்தான் ரிங் டோனாக வைத்திருக்கிறார்கள்.  பத்து நிமிடத்துக்கு ஒருமுறை யாருக்காவது அழைப்பு வர ஊர்வரைக்கும் பழசிராஜாவின் பாடல்களின் தொடக்கங்களைக் கேட்டு கிட்டத்தட்ட கடுப்பாகிவிட்டேன்.

எர்ணாகுளத்தில் கூட்டம் இறங்க ரயில் காலியாகியது. கால்நீட்டி படுத்துக்கொண்டேன். கார்களை திருடி விற்று மாட்டிக்கொண்ட ஒரு தாமஸை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜராக்கிவிட்டு திருவனந்தபுரம் சிறைக்குக் கொண்டு சென்றார்கள் இரு காவலர். காவலரும் கள்வரும் ஓருடல் ஈருயிராக பேசிக்குலவினர். கண்மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். எப்படி திருடினார் என்பதை தாமஸ் சொன்னார். அவர் மலைப்பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். அவ்வப்போது சிலர் திருட்டு மலைப்பொருட்களை விற்க வருவதுண்டு. தொண்ணூறுகளில் ரப்பர் விலை வீழ்ச்சியடைந்து நெருக்கடி வந்தபோது கோடவுன் காலியாக இருந்தது.

அப்போது ஒருவன் ஒரு லாரி நிறைய ரப்பர் ஷீட்டுடன் அதை ஓட்டிக்கொண்டுவந்தான். கோடவுனுக்குள் லாரியை நிறுத்திவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக சரக்கை விற்பார்கள். சரக்கு தீர்ந்ததும் லாரியை எங்காவது ஓட்டிக்கொண்டு விட்டுவிடுவார்கள். ஒரு லாரி ரப்பர் 4 லட்சம். ஒரு லாரி கிராம்பு 12 லட்சம். நல்ல பணம். நல்ல களியாட்டம். கூட்டத்தில் ஒருவன் போலிசில் சிக்க அவன் அனைவரையும் போட்டுக்கொடுத்தான்.

ஊரில் பெரிய மனிதராக வாழ்ந்தவர். நான்கு மகள்கள். எல்லாம் போயிற்று. இனி என் மகள்களுக்கு வாழ்க்கை இல்லை. என் வீட்டிலே போலீஸ் காரர்கள் ‘ஏறி இறங்குகிறார்கள்’ என்று சொல்லி சட்டென்று அழ ஆரம்பித்தார். நான் புரண்டு படுத்து அவர் முகத்தையே பார்த்தேன். சர்வ சாதாரணமான முகம். ஆனால் அதில் இருந்த அந்த துயரத்தை எப்போதுமே மறக்கமுடியாது.

வற்கலாவில் டச்சுபயணியான மார்ட்டின் கெர்ஜோ·ப்  ஏறினார்.  அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். ஆறரையடி உயரம். கன்யாகுமரி செல்கிறார். மும்பை கோவா கோழிக்கோடு வற்கலா நாகர்கோயில் பாண்டிச்சேரி மாமல்லபுரம் சென்னை வழியாக செல்லும் இருபது நாள் பயணம். அவரது விடுமுறையே முப்பதுநாளுக்குத்தான். வெயிலில் வெந்து மாநிறமாக இருந்தார். 41 வயது. மணமாகவில்லை. இந்தியாமீது மோகம் கொண்டவர். அவர் பிறந்தது இந்தோனேஷியாவில் போர்னியோவில். அதுகூட அவருக்கு இந்த நிலக்காட்சி மீது மோகம் வர காரணமாக இருக்கலாம். 

நான் அவரிடம் மார்த்தாண்ட வர்மாவின் தளபதி பெனடிக்ட் டி லென்னாய் குறித்துச் சொன்னேன். பயங்கரமாக குஷியானார். லென்னாய் என்பது டச்சு பெயரல்ல, அவர் பிராஸில் லென்னாய் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்று பொருள் என்றார். இந்தியாவில் டச்சு ஆதிக்கம் குறித்து பேசினோம். நாட்டைவிட்டு கிளம்பி உலகை வென்ற சின்னஞ்சிறு நாடான   ஹாலந்தின் மக்களைப் பற்றி நான் வியப்பு தெரிவித்தேன். சாகச உணர்வல்ல, மிகமிகக் கடுமையான வறுமைதான் காரணம் என்றார் அவர்.

அக்காலத்தில் கப்பல் நிறுவனங்கள் சிறுவர்களை பெற்றோருக்கு பணம் கொடுத்து வாங்கித்தான் மாலுமியாக்கினார்கள். அந்த இளைஞர்கள் திரும்பி வரவே மாட்டார்கள் என்று பெற்றோருக்கு தெரிந்திருக்கும் . அதிகமும் உழவர் மக்கள். ‘உங்கள் ஊரில் உள்ள தாழ்ந்த சாதிகளைப்போன்றவர்கள். எந்த மதிப்பும் இல்லாத மக்கள். பெரும்பாலும் வேறுநாடுகளில் இருந்து  ஹாலந்தில் குடியேறியவர்கள் அவர்கள்’ என்றார் மார்ட்டின்.

மறுமுறை இந்தியா வந்தால் கண்டிபபக சந்திக்கிறேன் என்று சொல்லி என் முகவரி வாங்கிக்கொண்டார் மார்ட்டின். எனக்களித்த தன் முகவரியில் மார்ட்டின் கெர்ஜோ·ப் மே பி எ ரைட்டர் என்று எழுதியிருந்தார். அவர் இரு வருடங்களுக்கு ஒருமுறை இந்தியா வரக்கூடியவர். ஹாலந்தில் வந்தால் நான் அவருடன் தங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாகர்கோயிலில் பிரியாவிடை பெற்று கட்டித்தழுவி பிரிந்தோம். வந்ததுமே அவருக்கு மின்னஞ்சல் செய்தேன். அவர் என்னை இணையம் வழியாக விரிவாகவே அறிமுகம் செய்துகொண்டிருந்தார். ஒரு நட்பு ஆரம்பித்தது.

 [முடிவு]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6623

5 comments

Skip to comment form

 1. RMK

  Hi J,

  For your info:
  A person from Netherlands – Dutch
  A person from Denmark – Danish
  Whom did you meet?!

 2. Madhan

  ஷெர்லக் ஹோம்ஸ்கள் எங்கும் இருக்கிறார்கள். என்னை மாதிரி கற்புக்கரசர்களும்// – “நிஜமாவே நீ ஒரு Unique writer தான் ஜெயன்” அப்படின்னு இன்னொரு கமன்ட் கிடைக்கும்னு நினைக்கிறன். ;)

 3. ஜெயமோகன்

  மன்னிக்கவும் அது ஒரு கவனப்பிழை. நான் காலந்து என அடித்ததாக்வே எண்ணிக்கொண்டிருந்தேன். பையனிடம் டென்மார்க் பற்றி ஏதோ பேசிக்கோன்டிருந்தேன். குழப்பம்.
  ஜெ

 4. kuppan_yahoo

  திருச்சூரில் இருந்து குருவாயூர் சென்னை எழும்பூர் ரயிலா.
  நாகர்கோயில் முதல் சென்னை வரை நடந்த சுவாரஸ்யங்கள் எழுதுங்களேன்.

 5. V.Ganesh

  நல்ல கட்டுரைகள். மிக அருமையாக எழதுகிறீர். நான் 25 தேதி வர்க்கலை சென்றிருந்தேன். அருமையாக இருந்தது. உங்கள் புதிய நண்பரை போலவே நிறைய பேர்கள் அங்கு இருக்கிறார்கள். பார்க்க நன்ன்றாக இருந்தது. அந்த வெயில்லும் கண்ணுக்கு குளிர்ச்சி. ( என் கை பேசியிலும் ஒரே ஒரு பெண் நம்பர் தான் உள்ளது). எனக்கு பெனடிக்ட் டி லென்னாய் என்று நினைவு இருக்காது. டி லென்னாய் சமாதி என்று தான் தெரியும். நாங்கள் நிதமும் விளையாட செல்லும் உதயகிரி கோட்டை அது. பெனடிக்ட் டி லென்னாய் அவர்களின் மகன், மனைவி, குதிரை, யானை எல்லாவற்றையும் அங்குதான் அடக்கம் செய்துள்ளார்கள். உங்கள் நண்பரை அடுத்த முறை அவசியம் காண வேண்டும் என்று சொல்லுங்கள்.

Comments have been disabled.