செப்டெம்பர் 17 ஆம் தேதி காலையில் போத் கயாவில் தூங்கி எழுந்தோம். அதிகாலை நான்குமணி. நல்லவேளையாக மழை இல்லை. குளித்துவிட்டு கீழே இறங்கி ஒரு டீ மட்டும் குடித்துவிட்டு நடந்தே மகாபோதி ஆலயத்துக்குச் சென்றோம். குளிர் இல்லை. இதமான இளம் காற்று தெருவில் பலவகையான பிட்சுக்கள் சென்று கொண்டிருந்தார்கள். கடும்நிறமான துவராடை அணிந்தவர்கள் காவியாடை அணிந்தவர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவர்கள் . மரபுப்படி காவியாடை அணிந்தவர்கள் மகாயானத்தின் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். மஞ்சளாடை அணிந்தவர்கள் தேரவாதிகள். கடும்நிறமுள்ள உடை வஜ்ராயனத்தைச் சார்ந்தது. ஆனால் இப்போது மேலும் மேலும் உட்பிரிவுகளால் ஆனதாக உள்ளது பௌத்தம். தவிட்டு நிற உடை அணிந்த பிட்சுக்களைக் கூட கண்டோம். மஞ்சள் நிறத்தவரே அதிகமும் கண்ணில்பட்டார்கள்
கயாவுக்கு இன்று இரண்டு முகம். கயா என்றழைக்கப்படும் ஊர் கங்கைகரையில் உள்ளது. வைதிக முக்கியத்துவம் உள்ளது. போத்கயா சிலரால் புத்த கயா என்றும் அழைக்கப்படுகிறது. போதியைச் சூழ்ந்துள்ள கயா என்ற பொருளில் போத் கயா என்று சொல்லப்படுகிறது. உருவேலா, சம்போதி, வஜ்ராசனநகர், மகாபோதி நகர் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. இங்குள்ள மையக்கோயில் போதிமந்த விஹாரம் என்று பாலி மொழியில் சொல்லப்பட்டது. பௌத்தர்களுக்கு உலகிலேயே மூன்று ஊர்கள்தான் முக்கியமானவை. ஒன்று கயா, இன்னொன்று நேப்பாள் எல்லையில் உள்ள குஷி நகர், இங்குதான் புத்தர் மகாசமாதி அடைந்தார். மூன்றாவது புத்தர் தர்மசக்கர இயக்கத்தை தொடங்கி வைத்த சாரநாத்.
கதைகளின்படி சாரநாத்தின் சமணர்களிடமிருந்து பிரிந்து கிளம்பிய கௌதம சித்தார்த்தர் பால்குன நதியின் கரையில் அமைந்த இந்த இடத்துக்கு வந்தார். இது வைதிகர்களின் புகழ்பெற்ற நகரமாக விளங்கிய கயையின் வெளிப்பக்கத்தில் இருந்தது.. இங்கே உள்ள போதிமரத்தின் அடியில் அமர்ந்து ஏழுவாரங்கள் தியானம்செய்து மெய்ஞானம் அடைந்தார். இங்கிருந்து சாரநாத்துக்கு பயணம் செய்து அங்கிருந்த சமணர்களிடம் உரையாற்றி தன் தர்மத்தை தொடங்கினார்.
சித்திரை மாதம் [ சைத்ர] முழுநிலவு நாளில் உலகமெங்கும் இருந்து பௌத்தர்கள் இங்கே வந்து கூடி புத்தரை வணங்கும் வழக்கம் நீண்ட நாட்களாக உள்ளது. புத்தர் ஞானம் பெற்ற நாள் அது என்று மரபு. இந்நள் புத்த பூர்ணிமா என்று சொல்லப்படுகிறது. இந்த விழாவைப்பற்றியும் புத்த கயையின் சிறப்பைப்பற்றியும் ஐந்தாம் நூற்றாண்டில் பாகியானும் ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். 13 ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் கயையை கைப்பற்றினார்.
போத் கயாவில் மகாபோதி மரத்தின் வழித்தோன்றல் என்று சொல்லப்படும் அரசமரம் உள்ளது. உண்மையில் அது புராதனமான மகாபோதி மரத்தில் இருந்து கிளை எடுத்து கொண்டுசென்று இலங்கையில் அனுராதபுரத்தில் நடப்ப்பட்டு அங்கே கோயில்கொண்டிருந்த மகாபோதி மரத்தில் இருந்து கிளை எடுத்துக் கொண்டு வந்து நடப்பட்டதாகும். புத்தருக்கு 200 வருடம் முன்பு அசோக சக்ரவர்த்தி கயாவுக்கு வந்தார் என்று வரலாறு. அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை அவர் அமைத்தார். குஷானர் காலாத்திலும் குப்தர் காலத்திலும் அது மீண்டும் விரிவுபடுத்திக் கட்டப்பட்டது. பின்னர் அது 1203ல் பிகார் மற்றும் வங்கம் மீது படைகொண்டுவந்த சுல்தான் பக்தியார் கில்ஜியின் படைகளால் அழிக்கப்பட்டு முழுமையாகவே மறக்கப்பட்டது.
மகாபோதி நின்ற இடத்தையும் ஆலயத்தையும் 1881 ல்தான் கண்டடைந்திருக்கிறார்கள். 1883 முதல் நடந்த விரிவான அகழ்வாய்வுகளின் வழியாக அலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் கடும் முயற்சி செய்து கயாவின் ஸ்தூபிகளை மீட்டு எடுத்தார். ஜெ.டி.பெக்லர் மற்றும் ராஜேந்திரலால் மித்ரா ஆகியோர் ஆய்வில் இணைந்து பணியாற்றினார்கள். அதன்பின்னரே இலங்கையில் அனுராத புரத்தில் இருந்து போதியின் கிளை இங்கே கொண்டுவந்து நடப்பட்டு போத் கயா பழைய புகழை அடைந்தது. இப்போதுள்ள ஆலயம் பர்மியர்களால் எடுத்துக்கட்டப்பட்டது. இந்த வளாகத்திலேயே முந்தைய ஆலயத்தின் சிறிய மாதிரி ஒன்று இருந்திருக்கிறது. அதை முன்வடிவமாகக் கொண்டு இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. கஜுராகோ- பூரி கோயில்களின் சிற்ப அமைப்பை அடியொற்றியது இது.
காலைநேரம் மகாபோதியின் அடியில் தியானமுழுமையுடன் விடிந்தது. எங்கும் அமைதி, அந்த அமைதிக்கு அடிக்கோடுவதுபோல பாலிமொழியில் ஒலித்துக் கொண்டிருந்த கனத்த மங்கோலியக்குரல் புத்த மந்திரம். மகாபோதி கோயிலின் மையக்கோபுரம் செங்குத்தான கூம்பாக நூற்றைம்பதடி உயரத்துக்கு எழுந்து நின்றது. கோயிலைச்சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய ஸ்தூபிகள். புராதனமான கட்டிடங்களின் அடித்தளங்கள். கூப்பிய கரங்களுடன் பிட்சுக்கள் அதைச் சுற்றி வந்தார்கள். ஆலிலை போல துடிக்கும் உதடுகளினால் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.
பலவருடங்களுக்கு முன்னர் நான் இங்கே வந்திருக்கிறேன். அப்போது இங்கே பெரும் கூட்டம். கூட்டநெரிசலில் அலைந்த பின்னர் கோயிலைச் சுற்றிவிட்டு திரும்பிவிட்டேன். அன்று என் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தனால் நான் எதையுமே காணவில்லை, எங்கும் கவனம் குவியவில்லை. ஆனால் இப்போது முதலில் கைக்குள் புறா சிறகடிப்பது போல மனம் துடித்தது.பதற்றமான பரபரப்பான சில கணங்களுக்குப் பின் புறாவிழிகள் மேலேறி மூட அது கழுத்தை உள்ளிழுத்து அமைதியில் அடங்குவதுபோல முழுமையான தியானநிலையை அடைந்தேன். ஒரு இடத்தில் அத்தகைய பூரணநிலையை நான் உணர்ந்தது இதற்கு முன் இமயத்தின் மடியில் மட்டுமே.
கோயிலுக்குப் பின்பக்கம் புத்தர் போதிமரத்தின் அடியில் அமர்ந்திருந்த இடத்தில் வஜ்ராசனம் என்று சொல்லப்படும் சிறிய பீடம் போடப்பட்டிருந்தது. அதைச் சுற்றி கம்பிவேலி. உள்ளே புத்தரின் நினைவு அந்த பீடத்தில் கம்பீரமாக கண்மூடி அறிநகை சுடர அமர்ந்திருந்தது அதன் முன் ஒரு இளம் கொரிய பிக்குணி நூற்றியெட்டு நமஸ்காரங்கள் செய்துகொண்டிருந்தாள். நமஸ்காரம் செய்வதற்குரிய விரிப்புகள் கைகள் கல்லில் உரசாமலிருப்பதற்கான உறைகள் எல்லாம் அவளே கொண்டு வந்திருந்தாள். பல பிக்குகள் அப்பகுதியில் தியானம் செய்தார்கள். நான் கல்தூண் சாய்ந்து அமர்ந்து என்னுள் மூழ்கினேன்
சிங்கள பௌத்தர்கள் ஒரு குழுவாக வந்தார்கள். கீழே வேட்டி மேலே காலர் வைத்த சட்டை. எல்லா பெண்களுக்கும் சந்திரிகா குமாரதுங்க வின் சாயல். அவர்களின் நெடுநாள் பிரார்த்தனையும் கனவுமாக இருக்க வேண்டும் அந்தப் பயணம். ஆனாலும் அவர்களால் ஒருவரோடொருவர் சளசளவென பேசாமல் இருக்க முடியவில்லை. சாமான்களைப் பாதுகாக்கும் பரபரப்பு. புது இடத்தில் வரும் கிலர்ச்சி. அங்கே மௌனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். கையில் வெண்மலர்களுடன் வரிசையாக சுற்றி வந்தார்கள். முன்னால் வந்தவர் கையில் சரிகை அலங்காரம் செய்யப்பட்ட வெண்கொடி. அவர்கள் போதிமுன் வந்தபோது தங்களை மீறி அமைதியாகிவிட்டிருந்தார்கள்.
போதியின் முன்னாலிருந்து எழவே மனம் வரவில்லை. இனிய தூக்கம் நம்மை பிடித்து மீண்டும் மீண்டும் உள்ளே அமிழ்த்துவதுபோல ஒரு அழுத்தம். பலமுறை கிளம்ப தீர்மானித்து மீண்டும் அமர்ந்துகொண்டேன். கிருஷ்ணன் வந்து கிளம்புவோம் என்றார். சுற்றுவந்து கோயிலுக்குள் சென்றோம். சிறிய கருவறை மட்டுமே. அதனுள் பதினைந்தடி உயரமுள்ள பர்மிய பாணி புத்தர் சிலை பொன்னிறமாகச் சுடர் விரித்து அமர்ந்திருந்தது. புத்தரின் முத்திரைகளில் அவர் ஞானம் பெற்றதற்கு பூமியை சாட்சி நிறுத்தும் பூமி ஸ்பர்ஸ முத்திரை முக்கியமானது. கயாவின் பெரும்பாலான புத்தர் சிலைகள் வலக்கையால் பூமியை தொட்ட நிலையில்தான் வீற்றிருக்கின்றன. பாதங்களை தொட்டு பணிந்து எளியேறினோம்
கயாவின் ஆலயத்துக்குள் பிகாரி கிராமத்துப் பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். கூச்சமும் உற்சாகமும் நிறைந்த எளிய சிரிப்புகள். சளசளவென்று பேச்சு. ஒரு பெண்ணிடம் நான் வாயில் கைவைத்து பேசாதே என்றேன். அவள் வாய் பொத்தி சிரித்துக் கொண்டு ஓடினாள். வட இந்தியாவில் நுழைந்தபின்னர் நாங்கள் கருப்பு நிறமுள்ள மக்களை அதிகமாகக் கண்டதில்லை. சிவப்பு, செம்பழுப்பு நிறமுள்ள மக்கள். அதாவது ஆரியன்,சித்தியன் இன மக்கள். பிகாரில் இந்த பகுதியில் கிராமங்களில் கரிய நிறமுள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்கு புத்தரைப்பற்றி ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்பகுதியில் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக நெடுநாட்களாகக் கருதப்பட்டுவருகிறார்.
கயாவில் பால் காரஸ் எழுதிய ‘The Gospel Of Budha’ என்ற பிரபலமான நூலை வாங்கும்படி நண்பர்களிடம் சொன்னேன். பௌத்த நூல்களிலேயே அதிக புகழ்பெற்றது இதுதான். பைபிள் புதிய ஏற்பாட்டின் அமைப்பில் புத்தரின் வாழ்க்கையையும் செய்தியையும் சொல்லும் எளிமையான நூல் இது. இதை என் நண்பர் மு.கி.சந்தானம் தமிழாக்கம் செய்திருக்கிறார். மைய அரசின் தேசிய பிரசுர நிறுவனம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. நண்பர் சந்தானத்தை ·போனில் அழைத்து பேசினேன்.
கயாவை உண்மையில் நாலைந்து நாட்கள் தங்கி விரிவாகச் சுற்றிப் பார்க்கவேண்டும். இங்கே நேபாளம், திபேத், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, கொரியா,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அவர்களுக்குரிய விஹாரங்களும் அவர்களுக்குரிய புத்தர் கோயில்களும் உள்ளன. ஒவ்வொன்றும் அந்தந்த நாடுகளுக்குரிய கட்டிடக் கலையைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. எங்கள் பயணம் என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒரு டீஸ்பூன் அள்ளி கலக்கி ஒரு இந்திய ருசியை உருவாக்கிக் கொள்ள முடியுமா என்ற சோதனைதான். கயாவுக்கு முடிந்தால் அடுத்த வருடம் புத்த பூர்ணிமையன்று வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.