«

»


Print this Post

கடற்கேரளம் – 3


சாலக்குடிக்கு மாலை வந்துசேர்ந்தோம். ஓர் ஓட்டலில் அறை போட்டோம். கேரளத்துவிடுதிகளைப்பற்றி எழுதப்போனால் அது இன்னொரு கொடுமை. பொதுவாகவே அங்கே விடுதிவாடகை அதிகம். சாலக்குடியிலேயே வாடகை சென்னையைவிட  அதிகம். ஆனால் சேவை என்பதற்கும் கேரள விடுதிகளுக்கும் சம்பந்தமில்லை. காலை ஏழுமணிக்குத்தான் ஊழியர்கள் வருவார்கள். அதற்குப்பிறகே டீ கூட கிடைக்கும். மாலை எட்டுமணிக்கு ஒரு மேனேஜரைத்தவிர எல்லா ஊழியர்களும் போய்விடுவார்கள். விடுதி முழுக்க முழுக்க அதில் குடியிருப்போரின் பொறுப்பிலேயே விடப்படும்.

கேரளத்தில் ஓட்டல்வேலை போன்றவற்றுக்கு ஆள் அதிகம் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் வேலைபார்ப்பதில்லை. ஆகவே எத்தனைபெரிய ஓட்டல் என்றாலும் அழுக்கும் நாற்றமும்தான். சென்னையைப்போல மணிப்பூரில் இருந்தும் மேற்குவங்கத்தில் இருந்தும் ஆள் கொண்டுவந்து வேலைசெய்யவைக்க முயன்றார்கள். தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதுவும் நடைபெறவில்லை.

கேரளத்தில் ஓட்டல் பணியாளர் போன்றவர்களின் நடத்தையில் உள்ள ஒரு பாவனை கவனிக்கத்தக்கது. பல தமிழர்கள் இது தமிழர்களிடம் மட்டும் அவர்கள் காட்டுவது என எண்ணுவார்கள். உண்மையில் ‘மேலே’ உள்ள எல்லாரிடமும் கேரள வேலையாள் காட்டும் முகம்தான் இது. கேரளத்தின் இடதுசாரி இயக்கம் அடித்தள உழைப்பாளிகளுக்கு தன்முனைபையும் எதிர்காலக் கனவுகளையும் அளித்தது. அவனை கர்வம் கொண்டவனாக ஆக்கியது. ஆனால் எல்லா உழைப்பும் உழைப்பே என்று சொல்லிக்கொடுக்கவில்லை. அதில் நிலப்பிரபுத்துவ கால மனநிலையே நீடிக்கிறது. சாதாரண வேலைசெய்பவர்களுக்கு கூச்சம் அதிகம். அதிலும் படித்தவர்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

மலம்புழா

நவமுதலாளித்துவம் எந்த வேலையும் அந்த எல்லைக்குள் மட்டுமே முடிந்துவிடும் ஒன்று என்று வகுத்துள்ளது. வேலைநேரத்தில் முதலாளி முதலாளிதான் தொழிலாளி தொழிலாளிதான். அதற்கான விதிகளை கடைப்பிடித்தாகவேண்டும். வேலைநேரம் முடிந்தபின் முதலாலியை தொழிலாளி பெயர் சொல்லி அழைக்கலாம். வேலை ஒருவனின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை. அதுவும் கேரள மனநிலையை வந்தடையவில்லை

விளைவாக கேரள அடித்தள உழைப்பாளி தாழ்வுணர்ச்சி கொண்டவனாக இருக்கிறான். தனக்கு மேலே உள்ளவர்களை வெறுக்கிறான். அவனுடைய தன்னகங்காரம் எப்போதுமே புண்படச்சித்தமாக இருக்கிறது. முன்கூட்டியே தன் அகங்காரத்தை விரித்து ஓர் அரண் ஆக்கிக்கொண்டிருக்கிறான். ‘எந்தா வேண்டே?’ என்று வந்து நிற்கும் சர்வரின் முகபாவனை உடல்மொழி அனைத்திலும் ஓர் அறைகூவல், அலட்சியம் தெரிவது இதனாலேயே. சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே சொல்வதில்லை, தோளைக் குலுக்குவதுடன் சரி

மாடாயி

நண்பர் ஷாஜி ஒருமுறை எரணாகுளம் ஓட்டலில் ஒரு சர்வரால் அலட்சியமாகநடத்தப்பட்டார். மாட்டிறைச்சிக் கறியையும் பரோட்டாவையும்  அவர் முன் சறுக்கி வந்து நிற்க விட்டார் சர்வர். கோபம் கொண்ட ஷாஜி மொத்த மேஜையையே தூக்கி கவிழ்த்துவிட்டு காட்டுக்கத்தலாக கத்த ஆரம்பிக்க உரிமையாளர் வந்து ஷாஜியிடம் கெஞ்ச ஆரம்பித்தார். தொழிற்சங்கப்பிரச்சினை கிளம்பிவிடுமே என்று அவர் பதற சர்வர்களின் படை ஷாஜியை தாக்க கிளம்பி வர இரு சாரார் காலிலும் விழுந்து சமாதானம்செய்தார் உரிமையாளர்.

சாலக்குடி என்றாலே கலாபவன் மணி நினைவுக்கு வரும். அந்தக்காலத்தில் என்றால் சாலக்குடி நாராயணசாமி. கலாபவன் மணி அசல் மண்ணின் மைந்தர். சாலக்குடியில்தான் ஓய்வுநேரத்தில் முழுக்க இருப்பார். பெரியதோர் நண்பர் படை உண்டு. எங்கும் எதிலும் தென்படுவார். கோயில் திருவிழாக்களை நடத்துவார். சமூக நூலகத்தில் நாடகம் போடுவார். சமீபத்தில் சாலக்குடியில் குப்பைகள் குவிந்தபோது மணியும் நண்பர்களும் சேர்ந்து அவற்றை அள்ளி சுத்தம் செய்தார்கள்! மணி அந்த மக்களுக்கு நடிகர் அல்ல, நண்பர்.

மணி அவரது வீட்டில் ஏதோ குலதெய்வ பூஜைசெய்வதாக என்னுடன் வந்த நண்பர்கள் சொன்னார்கள். மணியின் தம்பி வந்து எங்களுக்கு தேவையானவற்றைச் செய்து மறுநாள் மணியின் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மறுநாள் மணியைப்பார்க்க மற்றவர்கள் சென்றார்கள். நான் என் தனிப்பட்ட நண்பர் ஒருவரை சாலக்குடியில் பார்க்க வேண்டியிருந்தமையால் செல்லவில்லை.

காலை பத்துமணிக்குக் கிளம்பி திரிச்சூர் வழியாக பாலக்காடு சென்றோம். அங்கிருந்து மலம்புழா அணைக்கட்டு. மலம்புழாவில் நீர் இருந்தது. ஆனால் சுற்றியிருந்த காடு வரண்டு சருகுக் குவியலாக இருந்தது. அந்தக் காட்டை நவோதயா ஸ்டுடியோ ஐம்பது வருடத்து குத்தகைக்கு எடுத்து அதில்தான் பல படங்களை எடுத்திருந்தது. அங்கே பழைய சினிமா கட்டிடங்கள் இடிபாடுகளாக கிடந்தன. வெயிலில் காடு வெண்தீயில் எரிவது போலிருந்தது. வியர்வை வழிய அணைக்கட்டுவரைச் சென்று பார்த்தோம். ஆழமான நீருக்கே உரிய அபாரமான நீல நிறம்.

பாலக்காட்டில் ஓர் ஓட்டலில் கற்பனையே செய்யமுடியாத அளவுக்கு கேவலமான மதிய உணவைச் சாப்பிட்டோம். அனேகமாக தமிழ்நாட்டில் எங்குமே அப்படி ஒரு உணவைச் சாப்பிட்டுவிட முடியாது. சாப்பிடவருபவர்கள் மீது கடுமையான அலட்சியமிருந்தாலொழிய அதை சமைக்க முடியாது.

வாடானப்பிள்ளி

நேராக கோழிக்கோடு சென்று தங்கிவிடுவதென்று திட்டமிட்டிருந்தோம். நடுவே உள்ள சிறிய கடற்கரைகள் வழியாகச் சென்றோம். வாடானப்பிள்ளி கடற்கரை வெண்மணல் விரிந்த அழகிய வளைவு. சுத்தமாக இருந்தது. ஆயுர்வேத சிகிழ்ச்சைக்காக கேரளம் வரும் பெரும்பாலான பயணிகள் இங்கே வருகிறார்கள். கேரளத்தில் கடற்கரையில் கவனத்தில்படுவதென்னவென்றால் முன்பு கடற்கரைகளில் இருந்த உக்கிரமான வறுமை இப்போது இல்லை என்பதே. அனேகமாக வீடுகள் எல்லாமே புதிதாக கட்டப்பட்டிருந்தன

வடக்காஞ்சேரி கடற்கரை வழியாக மாலை கோழிக்கோடு வந்தோம். ராஜகுமாரி ஓட்டலில் அறைபோட்டுக்கொண்டிருந்தபோது தெரிந்தமுகம். நடிகர் ஜெயராம் படப்பிடிப்பு முடிந்து உள்ளே வந்தார். சிரித்துக்கொண்டே நண்பர்களிடம் வந்து சில சொற்கள் பேசினார். உடம்பெல்லாம் மண்ணாக இருந்தது. சத்யன் அந்திக்காடின் புதிய படத்தின் படப்பிடிப்பு நடப்பதாகச் சொன்னார்.

சத்யன் லோகியின் நண்பர், எனக்கும் தெரிந்தவர். அவரது அறைக்குள் சென்று அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். மலையாள சினிமாவைப்பற்றி இலக்கியம் பற்றி. சத்யன் நிறைய வாசிக்கும் வழக்கம் கொண்டவர். அவரது முதல்படம் களியில் அல்பம் காரியம் 1978ல் வந்தது. கடந்த 32 வருடங்களாக சத்யன் மலையாளத்தின் ஹிட்மேக்கர் ஆக இருக்கிறார். மென்மையான நகைச்சுவை கொண்ட படங்களை எடுப்பவர். லோகி அவருக்காக பல படங்களை எழுதியிருக்கிறார்.

சத்யனின் கடைசிப்படமும் வெற்றிதான், பாக்யதேவதை சென்றவருடம் வந்தது. சத்யன் சில வருடங்களில் 4 படங்களைக்கூட இயக்கியிருக்கிறார். இப்போது வருடத்திற்கு ஒருபடம் என்று குறைத்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார். லோகி இறந்தபின் சீனிவாசனுக்கும் நல்ல உடல்நிலை இல்லையென்றான பின் திரைக்கதைகளை தானே எழுதுவதாகச் சொன்னார் சத்யன்.

மறுநாள் காலை கிளம்பி வடகரை கடற்கரை வழியாக தலைச்சேரிக்குச் சென்றோம். இந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒன்று அது. கடல் இங்கே ஆழமில்லாமல் இருக்கிறது. தலைச்சேரி வழியாக மேலும் வடக்கே சென்று கண்ணனூர் அடைந்தோம். அங்கே மதிய உணவு. முதல்முறையாக சற்றே சுவையான உணவு.

எரிவெயிலில் கண்ணனூர்கோட்டையைப் பார்க்கச்சென்றோம். கண்ணனூர் கோட்டையை பழசிராஜாவில் ஆரம்பக்காட்சிகளில் வாசகர்கள் கண்டிருக்கலாம். போர்ச்சுகீசியர்கள் கட்டிய கடற்கோட்டை இது. பீரங்கிகளால் கடலைநோக்கிச் சுடும் வசதிக்காக கரையோர பாறைமேல் கட்டப்பட்ட கோட்டை . வெட்டுகல் என்று சொல்லப்படும் செம்மண்பாறையால் ஆனது. அதன் மேலிருந்து கடலைப்பார்ப்பது கிளர்ச்சியூட்டும் அனுபவம்

கண்ணனூர்கோட்டை

கண்ணனூரில் இருந்து மாடாயி கடற்கரைக்குச் சென்றோம். தாகா மாடாயி என்று ஓர் எழுத்தாளர் இருக்கிறார். தாகா ஏன் மாடானார் என்று கல்பற்றா நாராயணனிடம் கேட்டேன். அர்ஜுனன் கல்லாயி என்று ஓர் எழுத்தாளர் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மாடாயி கடற்கரை மீன் மணம் கமழ விரிந்திருந்தது

அன்று மாலை பய்யன்னூர் என்ற ஊரில் தங்கினோம். பெரிய விடுதி அங்கே இருந்தது. கேரளத்தில் ஒரு காலத்தில் சுற்றுலாத்தொழில் விஸ்வரூபம் கொள்ளப்போவதாக ஒரு நம்பிக்கை இருந்தபோது பணம் வைத்திருந்தவர்கள் விடுதிகளைக் கட்டித்தள்ளினார்கள். ஆனால் கேரளத்தின் சூழல் சுற்றுலாவுக்கு உகந்ததல்ல. குறிப்பாக வருடத்தில் இருநூறு முழு அடைப்பு — மிகையல்ல, 1995ல் 200 முழு அடைப்புகளுக்கு அறைகூவப்பட்டுள்ளது , வட்டார, கிராமிய, மாவட்ட, மாநில அடைப்புகள் — நடக்கும் சூழலில் அங்கே சென்றால் விடுமுறையில் பாதியை தெருவில்தான் கழிக்கவேண்டியிருக்கும்

பய்யன்னூர் விடுதி காலியாகவே இருந்தது. ஆகவே கொஞ்சம் பயமாகவும் இருந்தது. தூசடைந்த பெரிய அறையில் குளிக்கச் சென்றபோதுதான் உடலில் எத்தனை வெயில் பட்டிருக்கிறதென்ற எண்ணம் ஏற்பட்டது

[மேலும்]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6618

21 comments

Skip to comment form

 1. Arangasamy.K.V

  //கேரளத்தின் இடதுசாரி இயக்கம் அடித்தள உழைப்பாளிகளுக்கு தன்முனைபையும் எதிர்காலக் கனவுகளையும் அளித்தது. அவனை கர்வம் கொண்டவனாக ஆக்கியது. ஆனால் எல்லா உழைப்பும் உழைப்பே என்று சொல்லிக்கொடுக்கவில்லை. //

  சரியான சித்திரம் , உள்ளூரில் இருக்கும் போது இந்த மனநிலை வெகுவாக இருக்கும் போல .

 2. Dondu1946

  கேரளாவில் உள்ள பஸ் டெர்மினஸ்களில் வந்து இறங்கும் பயணிகள் கையில் சிறு பெட்டி இருந்தாலும் அதை சுமக்க ஆள் வைத்தே ஆக வேண்டும் என்றும், அப்படியே பெட்டியின் சொந்தக்காரர் தானே எடுத்து செல்லப்போவதாக சொன்னாலும் கூலியை மட்டும் தந்து விட வேண்டும் என்றும், இதற்கு தலைக்கூலி என்று பெயர் என்றும் படித்த நினைவு இருக்கிறது. இது உண்மையா?

  அதே மலையாளத்தார் ஊருக்கு வெளியே வந்த பிறகு இத்தனை உழைப்பாளிகளாக போவது எப்படி? அதுவும் வளைகுடா நாடுகளில் அவர்களை வேலை நிறுத்தங்களை உடைப்பதற்காக அங்குள்ள முதலாளிகள் பயன்படுத்துவதாகவும் கேள்விப்பட்டேன்.

  இப்போது வேறு தளத்திற்கு வருகிறேன். எப்போதுமே எல்லோரிடமும் சமமாக நடக்க இயலாது. முரண்டு செய்தால் வேலை போய்விடும், குப்பை போட்டால் ஸ்பாட் அபராதம் வசூலிக்கப்படும் என்றெல்லாம் வைக்கும் இடங்களில்தான் கட்டுப்பாட்டுடன் விஷயங்கள் நகருகின்றன என நினைக்கிறேன்.

  இங்கும் சிறிய அளவில் நான் பார்த்த ஒருவிஷயம் என்னவென்றால் வேலைக்காரர்களை மிகவும் கருணையுடன் நடத்துபவர்களைத்தான் அவர்கள் ஏய்க்கிறார்கள். கடுமையாக நடந்து கொள்ளும் முதலாளிகளிடம் ஒழுங்காக வேலை செய்கிறார்கள்.

  உங்கள் கருத்து என்ன?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. ஜெயமோகன்

  கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி

  அட்டிமறி என்பதுதான் நீங்கள் சொல்வது. ஒரு சுமைதூக்கும் தொழிலாளார் சங்கம் அவர்கள் உரிமைகொண்டாடும் இடத்தில் பிறர் எச்சுமையையும் தூக்க அனுமதிக்காது. நாமே தூக்கினால்கூட அதற்கான கூலியை சங்கத்துக்கு கொடுத்துவிடவேண்டும். தலைகூலி என்றும் சொல்லப்படுவதுண்டு. நாலைந்துவருடம் முன்பு திருவனந்தபுரத்தில் ஒரு செங்கல்லுக்கு ஒன்றரை ரூபாய் வீதம் அட்டிமறிக்கூலி போடப்பட்டு ரசீதும் வழங்கப்பட்டது. செங்கல்லின் விலை ஒன்றேகால் ரூபாய்.

  நோக்கு கூலி என்பது ஒரு துறையில் அத்துறை சார்ந்த சங்கத்தினரை பணிக்கமர்த்தாமல் வேறுவகையில் வேலைசெய்ய வேண்டுமென்றால் அந்தக்கூலியை தொழிலாளர்களுக்கு கொடுத்துவிடுவது. பி எஸ் என் எல் நிறுவனம் எல் என் ட் நிறுவனம் போன்றவை பொக்லைன் வைத்து பணிகளைச் செய்தபோது [நெடுஞ்சாலைகளில் மனிதர்களைக்கொண்டு மெல்லமெல்ல வேலைசெய்ய முடியாது] அந்த வேலைக்கு எவ்வளவு மனித உழைப்பு தேவையென கணக்கிட்டு அந்த பணம் கூலியாக சங்கத்துக்கு அளிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வந்து அமர்ந்து ஏழுமணி நேரம் வேடிக்கை பார்ப்பார்கள். உணவு இடைவேளையும் எடுத்துக்கொள்வார்கள். இப்படி நோக்குவதற்கான கூலிதான் நோக்கு கூலி. இப்போதும் உள்ளது

  ஜெ

 4. தங்கவேல் மாணிக்கம்

  இல்லஸ்ட்ரேட்டட் கதை போல படிக்க சுவாரசியமாய் இருக்கிறது. திருச்சூரிலிருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது சர்வர்கள் மிக மரியாதையாகத்தான் நடந்து கொண்டார்கள். இச்செய்தி புதுமையானதாக இருக்கிறது.

  நீங்கள் எழுதியிருக்கும் விஷயம் பற்றி எனக்குள் எண்ணெற்ற கேள்விகள் உண்டு. ஒரு தொழிலாளி என்பவன் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை அடி மட்ட வேலையிலிருப்பவலிருந்து மேல்மட்ட வேலையிலிருப்பவர் வரை கடைபிடிப்பதே இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்தானே.

 5. kuppan_yahoo

  பகிர்ந்தமைக்கு நன்றிகள். டோண்டு வின் கேள்வியும் அருமை.
  டோண்டு சார் மலையாளிகள் மட்டும் அல்ல, இந்தியர்கள் நாம் அனைவரும் செய்வது அது. அப்துல் கலாம் சொன்னது போல, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் சென்றால் நாம் விதிகளை மதிக்கிறோம்,

  ஹீத்ரூ விமான நிலையத்தில் மூன்று மணி நேரம் வரிசையில் கூட நாம் நிற்கிறோம், ஆனால் மீனம்பாக்கம் வந்து இறங்கியதும் நாமும் ஒழுக்கம், வரிசை, விதி எல்லாம் மீறுகிறோம். இது ஏன், நம் நாடுதானே யார் நம்மை என்ன செய்ய முடியும், என்ற பயமின்மை தான் என நினைக்கிறேன்.

  வேறு நாட்டிற்கு சென்றால் ஒரு பய உணர்ச்சி மனதிற்குள் வந்து விடுகிறது. சொந்த மண்ணில் அந்த பய உணர்ச்சி இல்லை.

  ஜெமோ- சாலக்குடி பக்கம் உள்ள காலடி பற்றியும் எழுதுங்கள் முடிந்தால்.

 6. Dondu1946

  //கேரள தொழிற்சங்கம் உருவாக்கிய இரு விஷயங்கள் 1. அட்டிமறி 2 நோக்குகூலி//
  ஒரேயடியாக இது ஒரு எல்லை தாண்டிய நிலைகடந்து விட்டது என எண்ணுகிறேன். செய்யாத வேலைக்கு கூலியை அடாவடியாகக் கேட்டு பெறுவது பிச்சையெடுப்பதை விடவும் திருடுவதையும் விட கேவலமல்லவா?

  இது குறித்து ஏதேனும் விவாதம் கேரள அறிவுஜீவிகளிடையே நடக்கிறதா?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 7. samraj

  வணக்கம்
  நான் என் நன்பர்களுடன் வாதிடுவதுண்டு.உனவகங்களீல் தமிழர்களூக்கு மட்டுமல்ல மலையாளீகளூக்கும் இதே மரியாதை தான் என.அவர்களூகக்கு பழகி விட்டது நமக்கு வெறுப்பாய் இருக்கிறது. நாம் ஒரு உனவு வகை மட்டும் தான் சாப்பிட வேண்டுமென பனியாளார்கள் விரும்புகிறார்கள்.கூடுதலாக கேட்டால் எரிச்சல் அடைவார்கள் . முதல் வாய் சாப்பிடுவதற்குள் சாயா எடுக்கட்டெ என்பார்கள். நாம்சொல்கிறோம் என்று சொன்னால் பிறகு நம் பக்கம் வரவே மாட்டார்கள்.பிறகு கறீக்கும் சம்மந்திக்கும் அல்லாட வேண்டும். மிக மோசம் இண்டியா காபி கவுஸ் தான். நாம் உள்ளே போனவுடன் கொண்டு வந்து வைக்கும் தண்ணீர் நம் மேல் தெறீக்கவில்லை எனில் அது நமது யோகம் . விரோதிக்கும் தமிழ் நாட்டில் அப்படி பறீமாற முடியாது.மொத்த கேரளமும் இப்படித்தான் இருக்கிறது.சுவையெல்லாம் இரண்டாம் பட்சம் தான்
  சாம்ராஜ்

 8. karthik

  உங்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருந்தாலும் உங்கள் தளத்திற்கு வருவது இதுவே முதல் முறை. உங்கள் எழுத்துகளை வேறு தளங்களில் வாசித்த அனுவபம் உண்டு. நோக்கு கூலி என்னை மிகவும் வியப்படையவைத்தது

 9. Dondu1946

  உங்களது இந்த இடுகையின் பேரில் நான் இட்ட பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2010/02/blog-post_27.ஹ்த்ம்ல்

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 10. Dondu1946

  சுட்டி http://dondu.blogspot.com/2010/02/blog-post_27.html

  ஹ்த்ம்ல் என்பது ஹ்த்ம்ல் என மாறுவது சகிக்கவில்லை. ஏதாவது செய்யுங்கள் சார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 11. kuppan_yahoo

  ஜெமோ மற்றும் டோண்டு

  அட்டிமரி கூலி கேரளாவில் மட்டும் அல்ல, தமிழகத்திலும் உண்டு. சென்னையில் தெரிய வில்லை எனக்கு, தமிழகத்தின் பிற நகரங்களில் நான் இதை கண்டு இருக்கிறேன்.

  லாரியில் சரக்கு வரும் பொழுது தெரு முனையில் சுமை தூக்குவோர் சங்க நபர்கள் இருப்பார், அவர்களை வைத்து மட்டும் தான் நாம் சரக்கை இறக்க வேண்டும், அவ்வாறு இல்லாவிடில் அவர்களுக்கு உரிய கூலி கொடுக்க வேண்டும்.

  இது சென்னை சென்ட்ரல், எக்மோர ரயில் நிலையங்களிலும் நடக்கிறது, போர்டர்கள் சங்கம் உள்ளது, எனவே ஜெமோ சொல்வது போல இதற்கு கம்முனிஸ்டு ஆட்சியை மட்டும் குறை சொல்ல முடியாது.

  கழக ஆட்சிகளிலும் காங்கிரஸ் ஆட்சிகளிலும் கூட இது தொடர்கிறது.

  விமான நிலையங்கள் போல சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களிலும் இலவச ட்ராலி களை அனுமதிக்க வேண்டும்,

 12. kargil_jay

  மலையாளிகள் தமிழர்களை மட்டுமல்ல, மலையாளிகளையும்கூட எடுத்தெரிந்துதான் நடப்பார்கள் என்பது பாதி உண்மை. பொதுவாக மலையாளிகளின் நேர்மை, கடின உழைப்பு என்பவை mere அல்டெர்-ego . அவர்களின் வேடம் அல்லது வெறியின் வெளிப்பாடே. ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பணக்காரர்கள் ஏதாவது துறவியைக்கண்டால் பணிவுடன் பம்முவது போல.

  மலையாளிகள் சந்தர்ப்பவாதிகள். தியாக உணர்வு மிக்கவர்களில் இருந்து வெட்கம், மானமில்லதோர் வரை பெரிய வகையாராவில் இருந்தாலும், சந்தர்ப்பவாதிகள்தான் மிக அதிகம்.

  ஒரு முறை என் நண்பர், சேலத்தைச் சேர்ந்தவர். கல்யாணமாகி கேரளாவிற்கு ஹனிமூன் சென்றார். வெஸ்ட் கோஸ்ட் இரயிலில் திரும்பி வரும்போது ஜன்னல் மட்டும் அடுத்த இருக்கை அவருக்கும், இளமனைவிக்கும் முன்பதிவாகி இருந்தது. ஆனால் எதிர் எதிர் ஜன்னலோர இருக்கைகளில் இரு மலையாளிகள் ஏற்கெனவே அமர்ந்து இருந்தனர். நண்பர் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை என பதிவுச்சீட்டை காண்பித்தும் அந்த மலையாளிகள் நகரவில்லை. இதனால் நண்பரின் பக்கத்த்தில் அமராமல் அவர் மனைவி அவரின் எதிர் சீட்டில் அந்த மலையாளியின் பக்கத்தில் உட்கார்ந்து வர நேரும் என்பதை, நண்பர் சொல்லியிருக்கிறார். அதற்கு ‘ஏய், என் உன் வைப் மேல் விசுவாசம் இல்லையோ?’ என்ற மலையாள குதர்க்கம் வேறு. லேட்டாக வந்த மலையாள டி.டி.ஆர் இதைக் கண்டுகொள்ளாமல் “இன்னும் இரண்டு மணி நேரத்தில் சேலமே வந்துடும்.. இதைப்போய் பெருசு பண்ணிட்டு.. படிச்ச மாதிரி நடந்துக்குங்க” என்று என் நண்பருக்கு அறிவுரை செய்தாராம். தமிழக எல்லையில் இரயில் நுழைந்தவுடன்தான் வாலைச் சுருட்டிக் கொண்டனவாம் அந்த பட்டிகள்.

  இவர்களின் இந்த ஈன நடத்தைதான், வாலைச் சுருட்டிக் கொள்ளும்போது நேர்மையானவர்களாகக் காண்பிக்கும் அல்டெர்-ஈகோ வாகச் செயல்பட வைக்கிறது.

 13. V.Ganesh

  எல்லோரும் ஒரே தாக்கு தாக்குகிறார்கள். பட்டிகள் என்று சொல்வது சரியல்ல. என்னை பொறுத்தவரையில் இதெல்லாம் மனித குணம். மலையாளி/ தமிழ் என்று கிடையாது. நான் தமிழ்நாட்டில் இது போன்ற வால் தூக்கும் நம் நண்பர்களை நிறைய பார்த்து இருக்கிறேன்.

  ஜெயமோகன் கூறியது போல் இடது சாரி இயக்கம் ஓரளவிற்கு தன பணியை மோசமாக செய்தது,
  மேலும் பொதுவாக மலையாளிகளை பொறுத்தவரை “இவர் ஜெயமோகன்” என்றால் “ஸோ வாட்” என்ற எண்ணம் உண்டு. இவர் அப்துல் கலாம் என்றால் “ஸோ வாட்” என்பார்கள். அது எந்த அளவிற்கு சரி/தவறு என்பது தெரியாது. மனிதர்களில் இத்தனை நிறங்களா என்று தான் தோன்றுகிறது…….

 14. Ramachandra Sarma

  இதென்ன ஜெ,
  கேரளத்தில் அனைத்துமே குப்பை என்பதுபோல தமிழ்நாட்டில் நீங்கள் சொன்னால் அதற்காக அதை தமிழ்நாட்டில் மட்டும் எல்லாமே சரியாக இருப்பது போல எடுத்துக்கொண்டு எத்தனை ஆதரவுக்குரல்கள்.

  திருவணந்தபுரத்தில் சிலகாலம் முன்பு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தேன். எப்போதுமே ஆட்டோ டிரைவருடன் பேசிக்கொண்டே போவது என் வழக்கம். அவர் சொன்ன ஒன்று இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் சொன்னது இதுதான் “கருணாகரன் அவரது மகனை அரசியலில் பெரியாள் ஆக முயற்சித்தார், நாங்கள் அவரையும் சேர்த்து வெளியே அனுப்பினோம். தமிழ்நாட்டில் நீங்கள் எப்படி ஒரு குடும்பமே கொள்ளையடித்து சாப்பிடுகிறது அதை அனுமதிக்கிறீர்கள் என்றே புரியவில்லை. நாங்கள் புத்திசாலிகள் நீங்களும் அப்படித்தான் என்று நினைக்க ஆசைதான் ஆனால் இப்படி செய்கிறீர்களே”.

  வீட்டுக்கு வீடு வாசல்படி.

 15. Arangasamy.K.V

  முழுக்க பொதுமைபடுத்தல் எதிர்வினைகள் , நம்மை குறித்து இது போன்ற பொதுமைகளை நாம் ஏற்றுக் கொள்வோமா என்ன ?

  அவர்களின் தொழில் மனநிலை அவ்வாறு இருக்கலாம் , 4 வது பகுதி இணைய நிலைய உரிமையாளரை வைத்து பொதுமைபடுத்தல் செய்தால் ?

 16. kargil_jay

  நான் பட்டி என்று சொன்னது மலையாளிகளை அல்ல. அந்த இரு பயணிகளையும் நேர்மை மிக்க டி.டி.ஆரையும் தான். மேலும் நான் சொன்ன உதாரண நிகழ்ச்சி சாதாரணமானது. அதைவிட பல மடங்கு மோசமானவர்களை சந்தித்துள்ளேன்.

  மலையாளிகள் மிகப்பெரிய அளவில் வேறுபட்டவர்கள். ஒரு தியாக உணர்வுடைய நர்ஸ், துறவி, டாக்டரில் இருந்து ஈன அல்லது மிருக குணமுடையவர்கள் வரையில். இதையும் நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன்.

  சென்னை சென்றல், எக்மோர் இங்கெல்லாம் ரவுடிஇசம் அடாவடி உள்ளது என்றால் உண்மை. ஆட்டோக்காரன் பையைப் பிடுங்குவதும் நடக்காதது இல்லை. ஆனால் அட்டிமரி, நோக்கு கூலி எல்லாம் உண்டு என்று சொல்வது அபாண்டமான பழி. கம்ப்யூட்டர் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் எழுதக்கூடாது.

  கலைஞரின் குடும்ப ஆட்சிபற்றி :
  தமிழர்கள் மலையாள நடிகர், நடிகைகளுக்கு விசிலடித்து வரவேற்பளிப்பர். மலையாளிகள் செய்வார்களா? தமிழர்கள் கலைஞரின் குடும்ப ஆட்சியை, ஒருவர் குடும்பமே ஆள வேண்டும் என்ற புதிய சனாதன தர்மத்தை, ஷத்ரிய தர்மத்தை ரசிக்கின்றனர் தமிழர்கள். வலியாரை ரசிப்பது, எளியாரை இகழ்வது பாமரத் தமிழனின் தாழ்வு மனப்பான்மை. “சோ வாட்?” மனப்பான்மை உள்ள மலையாளிகள் இதை செய்யமாட்டார்கள். அதனால் கருணாகரன் நிலைக்கவில்லை.

 17. Ramachandra Sarma

  உலகத்துக்கு ஜெர்மனி அப்போது எப்படியோ தமிழ்நாடு இந்தியாவிற்கு அப்படி என்று ஆகிவருவதற்கு இந்த பின்னுட்டங்களே சாட்சி.

 18. baski

  நோக்குக் கூலி எனக்கொன்றும் எரிச்சலாக இல்லை. இங்கு அமெரிக்காவில் மென்பொருள் கம்பெனியின் எக்சக்யூட்டிவ்கள் வேலை செய்யும் வயனத்தைப் பாருங்கள். ஒருவர், பாஸ்கெட் பால் பந்தயம் பார்த்துக் கொண்டே, ஐபோன் மூலம் ப்ராஜெக்ட் ஸ்டேட்டஸ் கேட்பார். இன்னொருவர் பேஸ்பால் அரங்கினுள் ஆட்டம் மெதுவாகப் போகும்போது ப்ளாக்பெர்ரி மூலம் கேட்பார். இன்னொருவர் ஒருமுறை ஏதோ போரடிக்கும் சினிமாவைக் குடும்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது கேட்டிருக்கிறார். எல்லாம் பகல் பொழுதில் அலுவலக நேரத்தில்தான். இவர்களுடைய வருடாந்திர போனஸ் என்னவோ இருபது மென்பொருள் எஞ்சினியர்களின் வருடாந்திர சம்பளத்தை விட அதிகம் இருக்கும்.
  http://bask-reviews.blogspot.com

 19. Ramachandra Sarma

  அதென்ன சிறப்பாக அமெரிக்கவில் மட்டும். இந்தியாவில் இருக்கும் சர்வீசஸ் கம்பெனிகள் பலவற்றில் வேலை பார்ப்பவர்களைவிட மேனேஜர்களே அதிகம். அதுவும் அதிக சம்பளத்தில். இந்தியாவில் இயல்பாகவே இது மிகவும் அதிகம். அதுவும் இவர்களுக்கு மேனேஜர் ஆனதுமே ஒரு ஜமீந்தார் மனப்பான்மை இயல்பாகவே வந்துவிடுகிறது.

 20. sivasakthi

  பொதுவுடைமை தத்துவம் மக்களையோ அல்லது ஒரு நாட்டையோ முன்னேற்றியதாக சரித்திரம் இன்னும் கூறவில்லை.

 21. MS

  Jeyamohan

  One of my Malayalee friends used to say this in a lighter vein,

  “ரெண்டு மலையாளி ஒரு union. சாப்பிடவே பணம் இல்லாமல் இருந்தாலும், ஒரு வேலை செய்ய சொன்னால் அதை செய்து வருமானத்தை பார்க்காமல், உடனே மார்க்ஸ், லெனின் எல்லாரையும் quote செய்வார்கள் என்று.”

  I haven’t had any such personal experience. இந்த மனோபாவம் கீழ் தஞ்சை கிராமங்களில் உண்டு என நினைக்கிறேன். இது ஒரு விதமான transition/metamorphosis போலும்.
  உங்களின் கீழ் கண்ட வரிகள் sums it up all.

  “வேலை ஒருவனின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை…உடல்மொழி அனைத்திலும் ஓர் அறைகூவல், அலட்சியம் தெரிவது இதனாலேயே. சில கேள்விகளுக்கு அவர்கள் பதிலே சொல்வதில்லை, தோளைக் குலுக்குவதுடன் சரி”

Comments have been disabled.