‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 1

துரியோதனன் திருதராஷ்டிரரின் அறைவாயிலில் வந்து நின்று விப்ரரிடம் “தந்தையாரை பார்க்கவிழைகிறேன்” என்றான். விப்ரர் “இளவரசே, அவர் சற்றுமுன்னர்தான் உணவருந்தினார். ஓய்வெடுக்கும் நேரம்” என்றார். “ஆம், அறிவேன். ஆகவேதான் வந்தேன்…” என்றான் துரியோதனன். “நான் விதுரர் அருகில் இல்லாமல் அவரைப் பார்க்கவிழைகிறேன்.” விப்ரர் அவனுக்குப்பின்னால் நின்றிருந்த துச்சாதனனை நோக்கிவிட்டு “நான் அவரிடம் சொல்கிறேன்” என்று எழுந்து உள்ளே சென்றார்.

விப்ரர் வந்து உள்ளே செல்லும்படி கைகாட்டினார். துரியோதனன் உள்ளே சென்று மெல்லிய இரும்புத்தூண்களால் தாங்கப்பட்ட மரக்கூரை கொண்ட கூடத்தில் நின்றான். இளம் சேவகன் ஒருவனால் வழிநடத்தப்பட்டு திருதரஷ்டிரர் நீரில் நடக்கும் யானை போல கனத்த கால்களை சீராக இழுத்து வைத்து நடந்து வந்தார். விழியுருளைகள் அசைய தலைதூக்கி அவர்களின் வாசனையை அறிந்தபின்னர் மெல்ல கனைத்தபடி பீடத்தில் அமர்ந்தார். “விதுரனின் இளையமைந்தன் உடல்நிலை சீரடைந்துவிட்டதா?” என்றார். துரியோதனன் “ஆம் தந்தையே” என்றான்.

“அவனை என்னிடம் கூட்டிவரச்சொல்” என்றபடி அசைந்து அமர்ந்துகொண்டு “குண்டாசி படைக்களத்தில் காயம்பட்டுவிட்டான் என்றார்களே” என்றார். “பெரிய காயம் அல்ல… மருத்துவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் துச்சாதனன். “அவனையும் நான் பார்க்கவேண்டும்” என்றபின் கைகளை நீட்டினார். அதன் பொருள் அறிந்த துரியோதனன் அருகே சென்று அவர் அருகே மண்டியிட்டு அமர்ந்தான். அவர் இன்னொரு கையை நீட்ட துச்சாதனன் அங்கே சென்று அமர்ந்தான். இருவரின் பெரிய தோள்களில் அவரது மிகப்பெரிய கைகள் அமைந்தபோது அவை சிறுவர்தோள்கள் போல மாறின. அவர் தோள்களை வருடியபடி மலர்ந்த முகத்துடன் தாடையை மென்றார்.

“நீ பயிற்சி எடுத்துக்கொண்டு சிலநாட்கள் ஆகின்றன துரியா”என்றார் திருதராஷ்டிரர். “தசைகள் சற்று இளகியிருக்கின்றன. கதாயுதம் பயில்பவனின் தோள்கள் இரும்பாலானவையாக இருக்கவேண்டும்” என்றார். துரியோதனன் “ஆம் தந்தையே, கூர்ஜரத்தில் இருந்து வந்தபின்னர் நான் பயிற்சிக்கே செல்லவில்லை” என்றான். “கதாயுதம் என்பது வலிமை. அதைப்பெருக்குவதை விட என்ன பயிற்சி இருக்கமுடியும்? யாதவ பலராமன் உனக்கு என்னதான் கற்றுத்தருகிறார்?” என்றார் திருதராஷ்டிரர் ஏளனமாக தலையை ஆட்டி. “மெலிந்த தோள்கொண்டவன் கையில் கதையை அளித்து உன் பலராமரிடம் அனுப்பினால் பயிற்றுவிப்பாரா என்ன?”என்றார்.

“தந்தையே, எத்தனை ஆற்றலிருந்தாலும் அதை குவித்துச் செலுத்தாவிட்டால் பயனில்லை. கதாயுதத்தை சுழற்றுகையில் அடிக்குப்பின் கதையை திரும்பவும் தூக்குவதற்கே கூடுதல் தோள்விசை செலவாகிறது. மிகக்குறைந்த விசையுடன் அதைத் தூக்கமுடிந்தால் மும்மடங்கு நேரம் அதை வீசமுடியும். மும்மடங்கு விசையுடன் அடிக்கவும் முடியும்” என்றான் துரியோதனன். “வீசும் விசையாலேயே திரும்பவும் கதையைத் தூக்கும் கலையையே கதாயுதப்போரின் நுட்பம் என்கிறார் ஆசிரியர். அதையே கற்றுக்கொண்டிருக்கிறேன்.” திருதராஷ்டிரர் நிறைவின்மையுடன் கையை அசைத்து “அந்த வித்தையை ஒரு எருமையோ யானையோ புரிந்துகொள்ளுமா? புரிந்துகொள்ளாதென்றால் அது சூது. அதை வீரன் ஆடலாகாது” என்றார்.

“தந்தையே, எருமையின் படைக்கலம் அதன் கொம்பு. ஒவ்வொரு மிருகத்திற்கும் அதன் படைக்கலம் கூடவே பிறக்கிறது. தெய்வங்கள் அதை அவற்றுக்கு கருவறையிலேயே பயிற்றுவித்து அனுப்புகின்றன. அதை அவை யுகயுகங்களாக கையாள்கின்றன. கதையை நாம் இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறோம். நாம் கற்பதெல்லாம் எருமை கொம்பைக் கையாள்வது போல நம் படைக்கலத்தை மிகச்சரியாக கையாள்வது எப்படி என்றுமட்டுமே” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரர் “கதாயுதம் மனிதனின் இரும்பாலான கை மட்டுமே. அதற்குமேல் ஒன்றுமில்லை” என்றார். “படைக்கலங்களை நான் வெறுக்கிறேன்… அவை மனிதனை பிரிக்கின்றன. தோள்கவ்விச் செய்யும் மற்போர்தான் மானுடனுக்கு இறைவல்லமைகளால் அளிக்கப்பட்டது” என்றார்.

துரியோதனன் திரும்பி துச்சாதனனை ஒருகணம் நோக்கிவிட்டு “தந்தையே, மதுராவில் இருந்து செய்திகள் வந்துவிட்டன” என்றான். அவர் “ஆம், சொன்னார்கள். யாதவன் வெற்றியடைந்துவிட்டான் என்றார்கள்” என்றார். “இங்கிருந்து வெறும் இரண்டாயிரம் புரவிவீரர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்கள். இரண்டாம் இரவிலேயே மதுராவைப்பிடித்து யாதவர்களின் கொடியை ஏற்றிவிட்டனர். கூடவே அஸ்தினபுரியின் கொடியும் ஏற்றப்பட்டது. மகதத்தின் கலங்கள் கங்கையிலிருந்து யமுனைக்குள் நுழைந்தபோது நமது கொடிகளை ஏந்திய காவல்படகுகளைக் கண்டு பின்வாங்கிவிட்டன” துரியோதனன் சொன்னான். “ஆனால் மகதம் எச்சரிக்கை கொண்டுவிட்டது இன்று காலைமுதல் மகதத்தின் ஐம்பது பெருங்கலங்கள் திரிவேணிமுகப்பை நோக்கிச் செல்கின்றன என்று செய்திவந்துள்ளது.”

திருதராஷ்டிரர் தலையசைத்தார். துச்சாதனன் “யாதவன் முன்னரே அனைத்தையும் முடிவுசெய்துவிட்டு வந்திருக்கிறான். இங்கே அவன் சொல் மறுக்கப்படாது என்ற உறுதி அவனுக்கு இருந்திருக்கிறது. நம் நாட்டின் எல்லையில் உள்ள ருசிபதம் என்னும் காட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்கள். அச்செய்தி அரசரான உங்களுக்குக்கூட அவர்கள் கிளம்பியபின்னரே தெரிவிக்கப்பட்டது” என்றான். திருதராஷ்டிரர் “ஆம்” என்றார். “நள்ளிரவில் நான் துயிலறையில் இருக்கையில் விதுரன் வந்து அதைச் சொன்னான்.”

துச்சாதனன் பற்களைக் கடித்துக்கொண்டு “பொறுக்க முடியாத கீழ்மை ஒன்று நிகழ்ந்தது தந்தையே. அதை தாங்கள் அறிந்திருப்பீர்களா என்று அறியேன். அர்ஜுனனின் சிறுபடை கிளம்பியதை மகத ஒற்றர்களிடமிருந்து மறைப்பதற்காக ஒரு போலிப் படைப்புறப்பாடு இங்கே ஒருங்கு செய்யப்பட்டது. அதை நம் மூத்தவரைக்கொண்டே நிகழ்த்தினர். மூத்தவரிடம் வந்து படைப்புறப்பாட்டுக்கு ஆணையிடப்பட்டிருப்பதாகச் சொன்னவர்கள் தளகர்த்தர்களான ஹிரண்யபாகுவும் வீரணகரும். அது அரசியின் ஆணை என்றாலும் தங்கள் ஒப்புதல் அதற்கிருக்கிறது என மூத்தவர் எண்ணினார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப மதுராவுக்கு படைபுறப்படுகிறது என்று நம்பினார்.”

துரியோதனன் உரத்தகுரலில் பேசியபடி எழுந்தான். “இரவெல்லாம் களத்தில் முன்னின்று முழுமையான படைப்புறப்பாட்டுக்கு அனைத்து ஆணைகளையும் பிறப்பித்தேன் தந்தையே. அதிகாலையில் எழுந்து நீராடி கவசங்கள் அணிந்து படையெழுவதற்காக தம்பியர் சூழ அரண்மனை முற்றத்திற்கு வந்தேன். அப்போது அது போலிப் படைப்புறப்பாடு என்றும், மதுராவை அர்ஜுனன் வென்றுவிட்டான் என்று பருந்துச்செய்தி வந்தது என்றும் என் சேவகன் சொன்னான். எந்தையே, அப்போது அவ்விடத்திலேயே எரிந்து அழியமாட்டேனா என்று ஏங்கினேன்…” நெஞ்சு விம்ம அவன் பேச்சை நிறுத்தினான்.

“செய்வதென்ன என்று அறியாமல் ஓடி விதுரர் அறையை அடைந்தேன். அச்செய்தி பொய் என அவர் சொல்லவேண்டுமென விழைந்தேன். என்னை அவர் பீடத்தில் அமரச்செய்தார். புன்னகையுடன் அது என் வெற்றி என்று சொல்லி நம்பவைக்க முயன்றார். பலராமரிடம் நானுரைத்த வஞ்சினத்தை என்பொருட்டு என் இளையோர் நிகழ்த்திவிட்டனர் என்றார். அதை நான் சென்று பலராமரிடம் சொல்லவேண்டும் என்று கோரினார்.” துரியோதனன் கால்தளர்ந்தவன் போல மீண்டும் அமர்ந்துகொண்டான். “தந்தையே, இத்தனை அவமதிப்புக்கு நான் என்ன பிழை செய்தேன்? எதற்காக நான் இப்படி சிறுமைகொண்டு அழியவேண்டும்?”

திருதராஷ்டிரர் தலையைச் சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தார். பின் “என்ன நிகழ்ந்தது என்று சொல்” என்று துச்சாதனனை நோக்கி முகவாயை நீட்டிச் சொன்னார். “அவர்கள் இரவே மதுராவை அடைந்து தூங்கிக்கொண்டிருந்த ஹிரண்யபதத்தின் வீரர்களை தாக்கியிருக்கிறார்கள். அங்கே ஐந்தாம்படையை உருவாக்கி முன்னரே கோட்டைவாயிலை திறந்து வைத்திருக்கிறார்கள். ஒற்றர்களைக்கொண்டு கிழக்குக்கோட்டை வாயிலில் நெருப்புவைத்து அவர்களின் பார்வையை திசை திருப்பியிருக்கிறார்கள். படகுகளில் வெறும் பந்தங்களைக் கட்டி கங்கையில் ஓடவைத்து அதை அணுகிவரும் ஒரு படையென காட்டியிருக்கிறார்கள். அனைத்துமே சூது… நடந்தது போரே அல்ல” என்றான் அவன்.

“உம்ம்” என்று திருதராஷ்டிரர் உறுமினார். “அங்கே அதன்பின் நிகழ்ந்தது ஒரு படுகொலை தந்தையே. மதுராவுக்குள் சென்றதுமே நம் வீரர்கள் ஹிரண்யபதத்தினரின் படைக்கலச்சாலைகளைத் தாக்கி எரியூட்டியிருக்கிறார்கள். உள்ளே தன்னை ஆதரிக்கும் யாதவப்பணியாளர்களை முன்னரே நிறைத்திருக்கிறான் இளைய யாதவன். அவர்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு இடத்திலும் முன்னரே நெய்பீப்பாய்களை வைத்திருக்கிறார்கள். ஆகவே அத்தனை படைக்கலச் சாலைகளும் நின்றெரிந்தன. ஹிரண்யபதத்தினர் தங்கள் விற்களை கையில் எடுக்கவேமுடியவில்லை” துச்சாதனன் சொன்னான். “அவர்கள் வெறும் கைகளுடன் நின்றனர். கொற்றவைக்கு பலிகொடுக்க மந்தைகளை வெட்டிக்குவிப்பதுபோல அவர்களை சீவி எறிந்திருக்கின்றனர் அர்ஜுனனின் வீரர்கள்.”

“மையச்சாலைகளின் ஒவ்வொரு சந்திப்பிலும் நெய்பீப்பாய்களை முன்னரே உருட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கின்றனர் யாதவச் சேவகர்கள். அவற்றை கொளுத்திவிட்டமையால் ஏகலைவனின் படைகள் ஒன்றாகத் திரளவே முடியவில்லை.பந்தமேந்தி கங்கையில் வந்த படகுகளைக் கண்டு படைகளின் பெரும்பகுதியினர் மேற்குத் துறைவாயிலை நோக்கி திரண்டு சென்றிருந்தனர். அவர்களுக்கும் எஞ்சிய நகருக்கும் நடுவே நெய்பீப்பாய்கள் எரியத் தொடங்கியதும் அவர்கள் துண்டிக்கப்பட்டனர். அவர்கள் கோட்டைவாயிலில் நின்று செயலிழந்து நோக்கிக்கொண்டிருக்க அவர்களின் தோழர்களை தெருக்களில் வெட்டித்தள்ளினர்.”

“தனித்தனி குழுக்களாக மாறி படைக்கலமோ தலைமையோ இல்லாமல் இடுங்கிய தெருக்களில் சிக்கிக்கொண்ட ஹிரண்யபதத்தினர் கைதூக்கி சரண் அடைந்தனர். அவர்களை கொல்லாமலிருக்கவேண்டுமென்றால் கோட்டையை காக்கும் படைகளில் உள்ள அத்தனை வீரர்களும் சரண் அடையவேண்டும் என்று அறிவித்திருக்கிறான் இளைய யாதவன். அவர்கள் ஒப்புக்கொண்டு படைக்கலம் தாழ்த்தியிருக்கின்றனர். அத்தனைபேரையும் சேர்த்து பெருமுற்றத்தில் நிற்கச்செய்தபின் அவர்களைச் சூழ்ந்துகொண்டு முழுமையாகவே கொன்று தள்ளிவிட்டனர். குவிந்த உடல்களை மாட்டு வண்டிகளில் அள்ளிக்கொண்டுசென்று யமுனைக்கரையின் அகழி ஒன்றுக்குள் குவிக்கிறார்கள். இப்போது அங்கே ஹிரண்யபதத்தின் ஒருவீரன் கூட உயிருடன் இல்லை” என்றான் துச்சாதனன். “தந்தையே, ஒருவர்கூட எஞ்சலாகாது என்பது குந்திதேவி இங்கே இருந்து பிறப்பித்த ஆணை.”

திருதராஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “ஏகலவ்யன் கொல்லப்பட்டானா?” என்றார். “இல்லை தந்தையே. அன்று அவன் மகதத்தின் படைகளுடன் திரிவேணிமுகத்தில் இருந்தார். மகதப் படைத்தலைவர் ரணசேனருடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. நாம் இங்கே அஸ்தினபுரியில் நிகழ்த்திய போலிப் படைநீக்கத்தை நம்பி அதைப்பற்றி விவாதிக்க ஏகலவ்யன் சென்றிருக்கிறான். ஆகவேதான் அவன் தப்பமுடிந்தது…” துச்சாதனன் சொன்னான். “அவனைக் கொல்வதாக கிருஷ்ணன் வஞ்சினம் உரைத்திருந்தான். ஆகவே அவனை மதுரா முழுக்க தேடியலைந்தனர். அவன் அங்கே இல்லை என்பதை விடிந்தபின்னர்தான் உறுதிசெய்துகொண்டனர். அவன் மதுராவில் இருந்திருந்தால் போர் இத்தனை எளிதாக முடிந்திருக்காது.”

தன் தலையை கைகளில் தாங்கி துரியோதனன் ஒடுங்கிய தோள்களுடன் அமர்ந்திருந்தான். திருதராஷ்டிரரின் தாடையை மெல்லும் ஒலி அறைக்குள் தெளிவாகக் கேட்டது. “அந்த யாதவனின் சக்ராயுதத்தில் குருதிவிடாய் கொண்ட பாதாளதெய்வம் ஒன்று வாழ்கிறது என்கிறார்கள்” என்று துச்சாதனன் தொடர்ந்தான். “ஏழு சக்கரங்களாக மாறி அது மின்னல்கள்போல சுழன்று பறந்து தலைகளை சீவிச்சீவித் தள்ளியதைக் கண்ட நம் வீரர்களே கைகூப்பி நின்றுவிட்டார்களாம். நூற்றுக்கணக்கான தலைகளை அது வெட்டித்தள்ளியது. ஆனால் அதன் மின்னும் உலோகப்பரப்பில் ஒரு துளிக்குருதிகூட படுவதில்லை என்று ஒற்றன் சொன்னான். அது யாதவன் கையில் திரும்பவரும்போது அப்போது உலைக்களத்தில் பிறந்து வருவதுபோல தூய்மையுடன் இருந்தது.”

துரியோதனன் பெருமூச்சுடன் “அவனை நாம் மிகவும் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். இனி இப்பாரதவர்ஷத்தின் அரசியலாடலில் ஒவ்வொருவரும் கருத்தில்கொண்டாகவேண்டிய முதல் மனிதன் அவனே” என்றான். “இங்கே ஒரு படைநகர்வுக்கான தூதுடன் வந்தவன் அரசராகிய உங்களை சந்திக்கவில்லை. அவன் தமையனின் முதல்மாணவனாகிய என்னை சந்திக்கவில்லை. அரசியின் அரண்மனையிலிருந்து நேராக ருசிபதம் சென்றுவிட்டான். அங்கே படகுகளையும் படைகளையும் ஒருக்கத் தொடங்கிவிட்டான். அவனுக்கு குந்திதேவியின் அதிகாரம் பற்றிய ஐயமே இருக்கவில்லை.”

திருதராஷ்டிரர் தன் தலையை கையால் பட் பட் என்று அடித்துக்கொள்ளத் தொடங்கினார். அது அவர் எரிச்சல்கொள்ளும் இயல்பென்று அறிந்த துரியோதனனும் துச்சாதனனும் எழுந்து நின்றனர். அவர் வழக்கமாக ஓரிரு அடிகளுக்குப்பின் கைகளை மேலே தூக்கி உறுமுவார். தன் தோள்களில் அறைந்துகொள்வார். ஆனால் இப்போது தலையில் அடித்துக்கொண்டே இருந்தார். மேலும் விரைவும் ஓசையும் கொண்டு சென்றது அந்த அடி. “தந்தையே” என்றான் துரியோதனன். மீண்டும் உரக்க “தந்தையே!” என்றான். அவர் நிறுத்திவிட்டு உரக்க உறுமினார். கையால் தன் பீடத்தின் கையிருக்கையை ஓங்கி அறைந்து அதை உடைத்து கையில் எடுத்து வீசினார். மீண்டும் உறுமினார்.

கொதிக்கும் மிகப்பெரிய கொதிகலம் போல திருதராஷ்டிரர் மூச்சிரைக்க அமர்ந்திருந்தார். கரிய உடலின் திரண்ட தசைகள் அவர் பெரும் எடை ஒன்றை எடுப்பது போல இறுகி அசைந்தன. கழுத்தில் தடித்த நரம்பு ஒன்று முடிச்சுகளுடன் புடைத்து நெளிந்தது. துரியோதனன் மெல்லிய குரலில் “தந்தையே. இது யாருடைய போர்? யாருக்காக இது நிகழ்ந்தது? யாதவர் நலன்களுக்காக அஸ்தினபுரியின் அனைத்து நலன்களையும் புறக்கணிக்கும் முடிவை எடுத்தது யார்? நான் என் குருநாதரிடம் அளித்த வஞ்சினத்தைக்கூட விட்டுவிட்டேன். அது அளித்த இழிவை என் நெஞ்சில்பட்ட விழுப்புண்ணாக ஏற்றுக்கொண்டேன். ஏனென்றால் என் மதிப்புக்காக அஸ்தினபுரிக்கு தீங்கு விளையலாகாது என்று எண்ணினேன். அந்த எண்ணம் ஏன் அவர்களுக்கு எழவில்லை?”

“அதைப்பற்றி நீ பேசவேண்டியதில்லை” என்று உரக்க கைதூக்கி திருதராஷ்டிரர் சொன்னார். “இல்லத்தில் பெண்கள் அடங்கியிருக்கவேண்டும் என்று எண்ணுபவன் நான். அவர்கள் அரசியலின் இறுதிமுடிவுகளை எடுக்கக்கூடாது. ஏனென்றால் எளிய உணர்வுகளுக்கு ஆட்பட்டு அவர்கள் முதன்மை ஆணைகளை பிறப்பித்துவிடக்கூடும். ஆனால் அவர்களின் குரல் எப்போதும் கேட்கப்பட்டாகவேண்டும். அவர்கள் ஒருபோதும் அயலவர் முன்னால் அவமதிப்புக்கு ஆளாகக் கூடாது. குந்திதேவி ஆணை பிறப்பித்திருக்கக் கூடாது. ஆனால் அவள் ஆணையை பிறப்பித்துவிட்டால் அதற்காக அஸ்தினபுரியும் நீயும் நானும் உயிர்துறந்தாகவேண்டும். அதுவே நம் குலமுறையாகும். பெண்ணின் மதிப்புக்காக அழியத்துணியும் குலங்களே வாழ்கின்றன.”

“அவர்கள் யாதவ அரசி…” என்றான் துரியோதனன் எரிச்சலுடன். “ஆம், ஆனால் என் இளவலின் துணைவி” என்றார் திருதராஷ்டிரர். “தந்தையே, அதை அவர்கள் எண்ணவில்லை. தன் குலத்தான் ஒருவன் வந்து கோரியதும் அத்தனை பொறுப்புகளையும் உதறி வெறும் யாதவப்பெண்ணாக அவர்கள் அவனுடன் சென்றார்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், அது பெண்களின் குணம். ஆகவேதான் அவர்கள் முடிவுகளை எடுக்கக்கூடாதென்கிறேன். நாளை காந்தாரத்துக்கும் நமக்கும் போர் எழுந்தால் உன் அன்னை எந்தத் தரப்புக்கு துணை நிற்பாள் என்று எண்ணுகிறாய்?” என்றார் திருதராஷ்டிரர். துரியோதனன் சினத்துடன் பீடத்தை கையால் அடித்து “தந்தையே, நான் அதைப்பற்றி பேச இங்கு வரவில்லை” என்றான்.

அந்த ஒலி திருதராஷ்டிரரின் உடலில் அதிர்வாகத் தெரிந்தது. “பின் எதைப்பற்றிப் பேசவந்தாய்?” என்று இரு கைகளையும் தூக்கிக் கூவியபடி அவர் எழுந்தார். “சொல், எதைப்பற்றிப் பேசவந்தாய்?” தோள்களில் ஓங்கி அறைந்தபடி அறைக்குள் அவர் அலைமோதினார். இரும்புத்தூண்களில் முட்டிக்கொள்வார் என்று தோன்றியது. “இங்கே கண்ணிழந்து அமர்ந்திருக்கும் குருடனிடம் நீ என்ன அரசியல் பேசப்போகிறாய்?”

அவரது இலக்கற்ற சினம் துரியோதனனையும் சினம் கொள்ளச்செய்தது. “நான் என்னைப்பற்றிப் பேசவந்தேன்… நான் யார்? இந்த நாட்டில் எனக்கு என்ன உரிமை? உங்கள் குருதியில் பிறந்த எனக்கும் தாசிமைந்தர்களுக்கும் என்ன வேறுபாடு? தந்தையே, என் கோரிக்கையை அரசவையில் விதுரர் இடதுகைவீசி புறந்தள்ளினார். அதை அத்தனை அமைச்சர்களும் பார்த்திருக்கிறார்கள். அதே விதுரர் யாதவ அரசியின் ஆணையை தலைமேல் கொண்டு படைப்புறப்பாட்டுக்கு ஆவன செய்தார். இன்று அதோ அவையில் அமர்ந்து மகதத்துக்கு தூதோலை எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டில் என் சொல்லுக்கு இனி என்ன மதிப்பு? சொல்லுங்கள்!”

“நீ என் மைந்தன்… அந்த மதிப்பு மட்டும் உனக்கு எஞ்சும்… நான் நாடிழந்து காட்டில் வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? மலைச்சாரலில் ஒரு எளிய மரம்வெட்டியாக இருந்திருந்தால் ஒரு மழுவை மட்டுமல்லவா உனக்கு அளித்திருப்பேன்” என்று திருதராஷ்டிரர் கூவினார். “பிறப்பளித்த தந்தையிடம் நீ எனக்கு என்ன தந்தாய் என்று கேட்க எந்த மைந்தனுக்கும் உரிமை இல்லை. மைந்தனிடம் எள்ளும் நீருமன்றி எதைக்கோரவும் தந்தைக்கும் உரிமை இல்லை…”

திருதராஷ்டிரர் மூச்சிரைக்கக் கூவியபடி தூண்களீல் முட்டிமுட்டி விலகிச்சென்றார். “நான் சொல்கிறேன், உனக்கு நாடில்லை. எந்தப்பதவியும் இல்லை. எந்த அடையாளமும் இல்லை, திருதராஷ்டிரனின் மைந்தன் என்பதைத் தவிர. அதை மட்டும்தான் உனக்கு அளிப்பேன்… வேண்டுமென்றால் அதை நீ துறக்கலாம்…” அவரது அந்த உச்சகட்ட வெறியை அதுவரை கண்டிருக்காத துச்சாதனன் அஞ்சி பின்னகர்ந்தான். அவரது கரங்களுக்குள் சிக்கும் எதையும் உடைத்து நொறுக்கிவிடுவார் போலத் தெரிந்தது. அவ்வெண்ணம் எழுந்த அக்கணமே அவர் தன் கரத்தைச் சுருட்டி இரும்புத்தூணை ஓங்கி அறைந்தார். மரக்கட்டுமானம் அதிர அரண்மனையே திடுக்கிட்டது. மேலிருந்து குளவிக்கூடுகள் உடைந்து மண்ணாக உதிர்ந்தன.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அவரது அடியால் வளைந்த இரும்புத்தூணைப்பிடித்து உலுக்கியபடி திருதராஷ்டிரர் பெருங்குரலில் அறைகூவினார் “இப்போது சொல், நீ என்னைத் துறக்கிறாய் என்றால் அவ்வண்ணமே ஆகட்டும். உன் எள்ளும் நீரும் எனக்குத் தேவையில்லை. இந்த நாட்டில் என் மைந்தன் இவன் என்று தோள்கள் பூரிக்க நான் தூக்கி வைத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான மைந்தர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் ஒரு துளிக் கண்ணீருடன் என்னை எண்ணி கங்கையில் கைப்பிடி நீரை அள்ளிவிடுவார்கள். அந்த நீர் போதும் எனக்கு… நீ என் மைந்தனல்ல என்றால் செல்…”

துரியோதனன் யானையெனப் பிளிறியபடி தன் நெஞ்சில் ஓங்கியறைந்தான். தன் தோள்களிலும் தொடையிலும் கைகளால் ஓசையுடன் அடித்தபடி முன்னால் பாய்ந்தான். “என்ன சொன்னீர்கள்? நான் உங்கள் மகனல்லாமல் ஆவதா? என்னிடமா அதைச் சொன்னீர்கள்?” துரியோதனனில் வெளிப்பட்ட திருதராஷ்டிரரின் அதே உடல்மொழியையும் சினத்தையும் கண்டு துச்சாதனன் மேலும் பின்னகர்ந்து சுவருடன் சேர்ந்து நின்றுகொண்டு கைகளை நீட்டி “மூத்தவரே. மூத்தவரே” என்று கூவினான். அவன் குரல் அடைத்து எவருடையதோ போல ஒலித்தது. நீட்டிய பெருங்கரங்களுடன் எழுந்த திருதராஷ்டிரர் தன் ஆடிப்பாவையுடன் முட்டிக்கொண்டதுபோல அவனுக்குத் தோன்றியது.

“என்ன சொன்னீர்கள்? நான் உங்களைத் துறப்பேன் என்றா? இந்த நாட்டின் எளிய அரசபதவிக்காக நான் உங்களைத் துறப்பேன் என்றா சொன்னீர்கள்? என்னைப்பற்றிய உங்கள் கணிப்பு அதுவென்றால் இதோ வந்து நிற்கிறேன். இதோ… என்னை உங்கள் கைகளால் கொல்லுங்கள்… “ அவன் நெஞ்சை நிமிர்த்தி அவர் அருகே சென்று அவரது கைகள் நடுவே நின்றான். “இதோ நிற்கிறேன்… திருதராஷ்டிரரின் மைந்தனாகிய துரியோதனன். கொல்லுங்கள் என்னை!” அவன் மார்பும் திருதராஷ்டிரரின் மார்பும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டன.

திருதராஷ்டிரர் தன் கைகளைச் சேர்த்து அவன் தோள்களைப் பற்றினார். அவரது உதடுகள் இறுகி தாடை சற்று கோணலாக தூக்கிக்கொண்டது. கழுத்தின் நரம்பு இழுபட்டு அதிர்ந்தது. “ம்ம்.. ம்ம்ம்…“ என்று முனகியபின் அவர் அவனை அள்ளி அப்படியே தன் தோள்களுடன் இறுக்கி அணைத்துக்கொண்டார்.

“தந்தையே தந்தையே” என்று தழுதழுத்த குரலில் துரியோதனன் விம்மினான். “தாங்களும் என்னை அறிந்துகொள்ளாவிட்டால் நான் எங்கே செல்வேன்? இப்புவியில் தாங்களன்றி வேறெவர் முன் நான் பணிவேன்?” என்று உடைந்த குரலில் சொன்னபின் அவர் தோள்களில் முகம் புதைத்து மார்புக்குள் ஒடுங்கிக்கொண்டான். அவர் தன் பெரிய கைகளால் அவன் முதுகை மெல்ல அறைந்தார். அவரது கண்களாகிய தசைக்குழிகள் ததும்பித்ததும்பி அசைந்து நீர்வடித்தன. தாடையில் சொட்டிய நீர் அவன் தோள்களில் விழுந்து முதுகில் வழிந்தது.

“தந்தையே, என்னால் அவமதிப்புகளை தாளமுடியவில்லை… எதன்பொருட்டும் தாளமுடியவில்லை. அறத்தின் பொருட்டோ தங்கள் பொருட்டோகூட தாள முடியவில்லை. அதுமட்டுமே நான் தங்களிடம் சொல்லவிழைவது… தந்தையே” என்று அவர் தோள்களில் புதைந்த உதடுகளுடன் துரியோதனன் சொன்னான். திருதராஷ்டிரர் மூச்சை இழுத்து விட்டபின் மூக்கை உறிஞ்சினார். “ஆம், நான் அதை அறிகிறேன்” என்றார். “இளவயது முதலே உன்னை நான் அறிவேன்…”

துரியோதனனை விட்டுவிட்டு திரும்பி தன் கைகளால் முகத்தை ஓசையெழத் தேய்த்துக்கொண்டு திருதராஷ்டிரர் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டார். கைகளால் தலையைத் தாங்கியபடி குனிந்து அமர்ந்தார். பின் மீண்டும் தலையை பட் பட் என்று அடித்துக்கொண்டார். முனகியபடி தலையை அசைத்தார். துரியோதனன் நீர் வழிந்த கண்களுடன் அவரை நோக்கியபடி நின்றான். பின் கீழே விழுந்துகிடந்த சால்வையை எடுத்து தன் முகத்தை துடைத்துக்கொண்டு பெருமூச்சுடன் வந்து தன் பீடத்தில் அமர்ந்துகொண்டான்.

அவன் விழிகளை தன் விழிகளால் தொட்டுவிடக்கூடாது என்பதை துச்சாதனன் உணர்ந்து தலையைக்குனித்துக்கொண்டு நின்றான். பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டபோது அப்போது நடந்த உணர்ச்சிமோதலில் பேசப்பட்ட சொற்கள் எத்தனை பொருளற்றவை என்பதை உணர்ந்தான். தந்தை சொல்ல நினைத்ததும் மைந்தன் விடையிறுக்க நினைத்ததும் அச்சொற்களில் இல்லை. அச்சொற்களை அவர்கள் ஒருபோதும் சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னதுமே அவை பொருளிழந்து போய்விடும். துச்சாதனன் புன்னகையுடன் இருவரையும் பார்த்தான். அந்த உணர்ச்சிகளுக்காக நாணுபவர்கள் போல இருபக்கங்களிலாக உடல் திருப்பி தலைகுனிந்து அவர்கள் அமர்ந்திருந்தனர்.

திருதராஷ்டிரர் மெல்ல அசைந்து பெருமூச்சு விட்டார். அவர் என்ன சொல்லக்கூடும் என துச்சாதனன் எண்ணியகணமே அவர் “அர்ஜுனன் திரும்பி வருகிறானா?” என்றார். அதைக்கேட்டதுமே அதைத்தான் பேசமுடியும் என்று துச்சாதனன் உணர்ந்தான். பேசியவற்றுக்கு மிக அப்பால் சென்றாகவேண்டும். அந்தக்கணங்களை விட்டு விலகி ஓடியாகவேண்டும். அவற்றை நினைவுக்குள் புதைத்தபின் ஒருபோதும் திரும்பிப்பார்க்கலாகாது. அவன் மீண்டும் பெருமூச்சுவிட்டு மார்பில் கட்டிய கைகளை தொங்கப்போட்டான். துரியோதனன் விடைசொல்லட்டுமென காத்து நின்றான். துரியோதனன் தலைதூக்கியபின் சிவந்த விழிகளால் சிலகணங்கள் நோக்கிவிட்டு “கூர்ஜரத்துக்குச் செல்கிறான் என்று செய்திவந்தது” என்றான்.

“கூர்ஜரத்துக்கா?” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், இன்னும் ஒருவாரத்தில் அவன் கூர்ஜரத்தின் ஏதேனும் காவல் அரண்களைத் தாக்குவான். கூர்ஜரத்தின் தென்கிழக்குக் காவலரண் கூர்ஜர இளவரசன் கிருதவர்மனின் ஆட்சியில் உள்ளது. அவன் கிருதவர்மனைக் கொல்வான்” என்றான் துரியோதனன். திருதராஷ்டிரன் “ம்ம்” என்றான். “அது குந்திதேவியின் ஆணை. கூர்ஜரன் சரணடையவேண்டும். குந்திதேவிக்கு ஓர் அடைக்கல ஓலையை அனுப்பவேண்டும். அதை பெற்றுக்கொண்டே அர்ஜுனன் திரும்பி வருவான்.”

திருதராஷ்டிரர் “ஆனால் அவனிடம் படைகள் இல்லை… ஆயிரம்பேரை மதுராவில் விட்டுவைத்தபின்னரே அவன் செல்லமுடியும்” என்றார். “ஆம் தந்தையே. ஆனால் தங்கள் அறைக்குள் நுழைவது பாம்பு அல்ல மதவேழத்தின் துதிக்கை என்று மகதமும் கூர்ஜரமும் அறியும். நேற்று மதுராவை அவர்கள் கைப்பற்றியதுமே எல்லைப்படைகள் நான்கை மகதத்திற்குள் சென்று நிலைகொள்ள விதுரர் ஆணையிட்டார். கூர்ஜரன் தாக்கப்படும்போது அவனை அச்சுறுத்துவதற்காக சப்தசிந்துவில் நின்றிருக்கும் நம் படைகள் இணைந்து கூர்ஜரத்தின் வடகிழக்கு எல்லையை நோக்கிச் செல்ல விதுரர் ஆணையிட்டிருக்கிறார். சென்றிருப்பது அர்ஜுனனின் சிறிய குதிரைப்படை அல்ல, அஸ்தினபுரியின் முன்னோடிப்படை என்ற எண்னத்தை உருவாக்குகிறார்” என்றான் துரியோதனன்.

“ஆம். விதுரன் அவர்கள் தோற்றுமீள விடமாட்டான். ஏனென்றால் அவர்கள் எங்கள் உடன்பிறந்தோனின் மைந்தர்கள்” என்றார் திருதராஷ்டிரர். “இவ்வெற்றி குந்திதேவியின் குலத்தின் வெற்றி. மதுரா மட்டுமல்ல அஸ்தினபுரியே இன்று யாதவர்களுக்குரியதுதான் என்கிறார்கள் சூதர்கள்.” திருதராஷ்டிரர் “அவர்கள் யாதவர்கள் அல்ல, பாண்டவர்கள்” என்றார். துரியோதனன் தலையை அசைத்தபடி ஓசையின்றி ஏதோ சொன்னான். “எதுவாக இருப்பினும் இது பாண்டுவின் நாடு. அவன் மைந்தர்களின் வெற்றியை நாம் கொண்டாடியாகவேண்டும். இன்றுமாலை வெற்றிக்காக உண்டாட்டு ஒருங்கமைக்கப்பட்டிருப்பதாக விதுரன் சொல்லியனுப்பியிருந்தான்….” என்றார் திருதராஷ்டிரர். “நீங்கள் நூற்றுவரும் அதில் கலந்துகொண்டாகவேண்டும்… இது என் ஆணை!”

“ஆம் தந்தையே” என்று சொன்னபின் துரியோதனன் எழுந்தான். துச்சாதனனை நோக்கி கண்களைக் காட்டிவிட்டு திருதராஷ்டிரரை அணுகி அவர் காலைத் தொட்டான். அவர் அவன் தலையில் கைவைத்து “பொறுத்திரு மைந்தா… காலம் அனைத்தையும் சரிசெய்யும். உன் உணர்ச்சிகளை எல்லாம் நான் அறிகிறேன். ஆயினும் நான் முதியவன், பொறுமைகொள்ளவே நான் சொல்வேன். மானுட உள்ளம் பலவகை பொய்த்தோற்றங்களை உருவாக்க வல்லது. ஏனென்றால் உள்ளம் என்பது தன்முனைப்பின் ரதம் மீது நின்று ஆணவத்தை படைக்கலமாக ஏந்தியிருக்கிறது. பொறுத்திரு…” என்றார்.

“ஆம் தந்தையே” என்றபின் துரியோதனன் வெளியே சென்றான். துச்சாதனனும் வணங்கிவிட்டு அவனைத் தொடர்ந்தான்.

வெண்முரசு விவாதங்கள்

மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக

வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம்

முந்தைய கட்டுரைஅழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்
அடுத்த கட்டுரைபிரயாகை- ஒருமை