படைப்புகள்,கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,
                                                                              நலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக  யாராக இருந்தாலும் அப்படிதான்  வாசிக்க முடியும் போல  அவ்வளவு ஒரு  சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம். கதையின் கரு இதுதான்  ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன  அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் தேடி போகிறார்கள் ஆனால் உங்கள் அந்த   அசத்தலான எளிமையான  நடை  நான்காவதாக என்னையும் கூட்டி கொண்டு போய் விடுகிறது. ஓவொரு அத்தியாயத்திலும் ஏதாவது ஒரு வேகத்தை அதிகபடுதுவது மாதிரி ஒரு அசாதாரண திருப்பம் மேலும் ஒவ்வொரு பக்கத்திலும்  ஒரு முக்கியமான தகவலாவது வந்து கொண்டே இருக்கிறது அதையும் டாக்டர் திவாகர் சொல்றவிதம் , ஒவ்வொன்றுக்கும் கேள்விகளை பாண்டியன் மூலமாக  அதை அவரிடம் தெளிவாக கேட்டு விடுவது.அதிகம் எதுவுமே பேசாமல் வருகின்ற கிம் sungh சில இடங்களும்   வெள்ளந்தியாக அனைத்து நிகழ்வுகளின் மேலும் அவன் கொள்ளும் நம்பிக்கை , அவன் மூலியமாக மட்டுமே பனிமனிதன் அவர்களை பார்க்க அவர்கள் இடத்திற்கு அனுமதிப்பது பின்னால் அனுபவங்களின் மூலம் அவன் மகா லாமாவாக நிலையை அடைவது ஒரு அர்த்தமான பயணம் போல கொண்டு சென்றிருப்பது,பனி சூழ்ந்த இடத்தின் காட்டை காண்பித்திருப்பது அதற்கு சூழியல் ரீதியான விளக்கம், பனிமனிதன் வாழும் இடத்தின் விந்தையான பிராணிகள் , அதை விவரிக்கும் விதம் ,அவர்களின் தியான முறை ,  ஆழ்மன ரீதியாக செயல்படும் அவர்களின் மனம் ,பாண்டியனின்   வவ்வால் பயணத்தை தற்போது வந்த அவதார் படத்துடன்  கற்பனையாக இணைக்க   அந்த உலகத்தில் அவர்களோடு என்னாலும் ஓரளவு உணர   முடிந்தது.எவ்வளவோ வரிகள் படிக்கும் போது ரீபிட் ஆகி விடுகிறது.பனி மனிதன் மற்றும் அவர்கள் சார்ந்த உலகத்தை பார்த்து விட்டு வந்தவுடன் திரும்பி செல்லும் போது லாமாவுடன் வரும் இடங்கள் பாண்டியனும் திவாகரும் இறுதி அத்தியாங்கள் “மனிதன் கருணையானவன் அனால் மனித இனத்திற்கு கருணை கிடையாது “,”இந்த பூமியின் எதிர்காலத்தை விட கடமை பெரிதா ” என திவாகர் பாண்டியனிடம் கோபப்படும் இடங்கள் , நாவலினின் இறுதியில்  திரும்பி செல்ல அவர்களுக்கு  வழிகாட்டியாக பனிமனிதன் விட்டு செல்லும் காலடி தடம் ஆஹாஅந்த கணத்தில் நான் ரொம்ப நெகிழ்ந்து விட்டேன்  இதுதான்யா நம்ம ஜெயமோகன் என்று சொல்லி கொண்ட ஈரமாக முடித்தேன்.எத்தனை தடவை மறு வாசிப்பு செய்வேன் என்று தெரியவில்லை .   ரொம்ப உள்ள இறங்கி வாசிக்க வைத்து விட்டீர்கள் ரொம்ப  நன்றி சார் .  படிக்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுக்கும் கூட   ப்ரெசென்ட் செய்ய ஒரு அருமையான கிப்ட் இந்த புத்தகம்.
திரு ஜெயமோகன் அவர்களுக்கு என்னுடைய எதிர்வினையாக நீங்கள் recommand செய்த தேவதேவன் இன்  மார்கழி தொகுப்பில்  எழுதிய ஒரு கவிதை யை சொல்ல தோன்றுகிறது

எந்த வைரத்திற்கு
குறைந்தது, என் அன்பே
இதோ
நம் இல்லத்தின்
இந்த ஜன்னல் கண்ணாடியில்
ஒளிரும் சூர்ய ஒளி

அது போல  எளிமையான நெகிழ்வான இந்த படைப்பு உங்களின் எந்த படைப்பு குறைந்து சார் ..?.சிறுவர்கள்  மட்டும்  படிக்கும் நாவல் என்று ஒதுக்கி வைத்தால் இழப்பு எனக்கு தான் .

—-
Regards
dineshnallasivam

 

அன்புள்ள தினேஷ்

 

பனிமனிதன் சிறுவர்களுக்கான மொழிநடையில் எழுதப்பட்டது. ஒருதளம் சிறுவர்களுக்கும் புரியக்கூடியது.  ஆனால் எந்த எழுத்தாளனும் கதையை முதலில் தனக்காகவே எழுதிக்கொள்கிறான். அவனுடைய மனம் அதில் ஈடுபடாவிட்டால் அவனால் எழுதமுடியாது. என்னுடைய அகம் எந்த சிக்கல்களில் புழங்குகிறதோ அதைத்தான் நான் எதிலும் எழுத முடியும். அதுவேதான் பனிமனிதனிலும் உள்ளது. பனிமனிதன் சிறுவர்களுக்கான ஓர்  சாகச-ஆன்மீக நாவல் என்று சொல்வேன்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு.,

கேரளா பயணம் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். நான் படித்த உங்களின் மூன்று சிறுகதை தொகுதிகளைப்பற்றி உங்களுக்கு எழுத ஆரம்பித்து இன்றுதான் முடித்தேன். ஊமை செந்நாய் தொகுப்பின்  முகவுரையில் நீங்கள் கூறியிருப்பது  போல வாழ்வுக்கு இணையான ஒரு மறுவாழ்வை, மறு உலகத்தை இக்கதைகள் புனைவில் உருவாக்குகின்றன என்பது நான் படித்து அறிந்த உண்மை.

கொத்தாய் பல கதைகளை ஒரே மூச்சில் படிக்கும் போது அவை  படைக்கும் உலகம் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கிறது. காடன் விளி ஆத்தோர வீடு, ஊமை செந்நாய் கோணா நம்மை கூட்டி செல்லும் காடு, கேசவன் குளிக்கும் நதிக்கரை. எல்லாம் துல்லியமாக கண்முன் விரிகின்றது. இந்த முறை திருவட்டாறு போகாமல் வந்ததுக்கு இப்போது மிகவும் வருந்துகிறேன். அற்புதமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். காடன் விளியின் முழு அர்த்தமும் புரியவில்லை என்றாலும் எனக்கு வேலையில் சிறு இடைவெளி வேண்டுமென்றால் நான் நினைத்துக்கொள்வது அந்த ஆத்தோர வீட்டையும் அதன் சூழலயும்தான்.ஜில்லென்று  இருக்கும்.

இவ்வளவு அருமையான அனுபவங்களை அநேகம் பேர் உணர்ந்தாலும், அவ்வளவையும் சுவை குறையாமல் இதுபோல் எழுதியவர்கள் மிகவும் குறைவு. அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

இதுவரை நான் படித்த பெரும்பாலான உங்கள் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் தன்னம்பிக்கையோடும், செய்யும் செயலின் மீது மிகுந்த பிடிப்பும் கொண்டவர்களாக உள்ளதை கண்டேன். ஊமை செந்நாய் கோணாவும், நம்பூதிரியும், அனந்தன் ஆசானும், கோலன் அப்புவும்  சில உதாரணங்கள். மேலும் சில பாத்திரங்கள் இக்கட்டான நேரங்களில் கூட மிக முதிர்ச்சியுடன் முடிவுகள் எடுப்பதையும் கண்டேன். இவர்கள் ஒரு Super Hero க்கள் போல இல்லாமல், நிஜ வாழ்கையில் வரும்  மனிதர்களாவே நம்பகத்தன்மையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் இதை கவனித்தேன்.எழுதும் போது மிகவும் பாசிடிவான நிலையில் இருப்பீர்களா அல்லது இதுபோன்ற மனிதர்களைத்தான் நீங்கள் அதிகம் பார்க்கிறீர்களா? எதுவானாலும் நல்லதுதான்.!  இது போலவே,  சவுக்கு ஒரு சாபம் என்றே தெரியாமல் எதையோ சாதித்ததாய் நினைத்து சவுக்குடன் நடந்து போகும் சோட்டேலால், தகுதியே இல்லாமல் கேசவனின் ஆசானாய் போகும் பரமன், ஏமாற்றுக்காரன் பாடசேரி அப்பி  என்று மோசமானாலும் எளிதில் மறக்க முடியாத பல பாத்திரங்கள்.

 

மாடன் மோட்சம், படுகை போன்றவை  சமூக மாற்றங்களை குறிக்கும் புனைவு கலந்த பதிவுகளாக புரிந்துகொண்டேன்.  வீடு போன்றவை உங்களின் ஆரம்பகால தேடல்களின் abstract ஆக இருக்கும் போல என தோன்றுகிறது.1984 – 1987 வருடங்களில் உங்களின் அனுபவங்களாக இருக்கும் என நினைக்கிறேன். அவற்றை இன்னும் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் படித்தால் முழுதாய் புரியும் என எண்ணுகிறேன்.

மத்தகத்தின் முடிவை என்னால் குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை, என்னை மிகவும் பாதித்த முடிவு அது. நான் உணர்ந்த பல முந்தய உச்சங்களில் ஒன்றான ஊமை செந்நாயை விட, லங்கா தகனம் விட என்னை உலுக்கிவிட்ட முடிவு. கடவுளை போன்ற புனிதமும், தம்புரானை போன்ற கம்பீரமும், குழந்தையை போன்ற மனமும் கொண்டு ராஜா போல் சந்தோஷமாய் இருந்தவன் கேசவன்.  கடைசியில் சீதரன் நாயர் போய், அருணாசலம் போய், தம்புரானும் போய் , “ப்ளடி டெவில்” என்று திட்டு வாங்கி, கொட்டிலில் கண்ணீருடன் பயந்து  ஒடுங்கி அனாதையாய் யாருமே இல்லாமல் வேறு வழிஇன்றி பாவி பரமனை ஆசானாய் ஏற்றிக்கொள்ளவேண்டிய நிலையை நினைத்து கண்களில் தண்ணீர் வந்து விட்டது. கடைசி இரண்டு  பத்திகளை  இதுவரை ஒரு பத்து தடவையாவது படித்திருப்பேன். மனதை தொட்ட மிக அற்புதமான படைப்பு. ( பரமனை தூக்கி போட்டு ஒரே மிதியாய் ஓங்கி மிதித்து விட்டு , சுப்புக்கண்ணை ஆசானாக ஆக்கிக்கொள் கேசவா என்று கூட பலமுறை  மனதுக்குள் சொல்லிஇருக்கிறேன்.! )

ஒட்டுமொத்தத்தில் இக்கதைகள் எனக்களித்த உலகத்தில் இன்னும் இருக்கிறேன். அவை விலகும்போது “காடு” கையில் எடுப்பேன்.  உங்களுக்கு காடும், யானையும், ஆறும் மிகவும் பிடிக்கும் போல இருக்கிறது. இவை மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கதையில் பிளந்து கட்டிவிடுகிறீர்கள். “காடு” படித்து விட்டு இந்த முடிவை உறுதி செய்கிறேன் :)

துல்லியமாய் விரியும் இடங்கள், முழுமையாக இருக்கும் கதாபாத்திரங்கள், சமூக சூழ்நிலைகள் கலந்து அமைக்க பட்ட சம்பவங்கள் இவை இடையில்  தத்துவார்தங்களையும் கொண்ட இந்த அற்புதமான புனைவுலகை  தொடர்ந்து படைப்பமைக்கு மிக்க நன்றி.
வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்

அன்புடன்.,

பாலாஜி ( ஆனந்த கோனார் )
Dallas, TX

அன்பூள்ள  ஆனந்தக்கோனார்

வீழ்ச்சி என்பது எப்போதுமே எழுத்தாளர்களை எழுதத்தூண்டுவதாக உள்ளது. வீழ்ச்சியில்தான்  வாழ்க்கையை ஆளும்  பிரபஞ்ச விதிகள் வெளித்தெரிகின்றன போலும். லங்காதகனத்தில் ஆசானின் வீழ்ச்சியும் மத்தகத்தில் கேசவனின் வீழ்ச்சியும் ஏதோ ஒருவகையில் ஒன்றே. ஆனால் ஆசான் கலைவழியாக அனைத்து பௌதிக விதிகளையும் மீறி எம்பிப் பறக்கிறார்

அதுவே என் எழுத்தும்

ஜெ

முந்தைய கட்டுரைஆயிரத்தில் ஒருவன், ராமச்சந்திரன்
அடுத்த கட்டுரைஉலோகம் – 13