«

»


Print this Post

உ.ரா.வரதராஜன்


அன்புள்ள ஜெயமோகன்,

உ.ரா.வரதராஜனின் மரணத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது பிரகாஷ் காராத் நடத்திய கொலை என்றே சொல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். உங்கள் கருத்தை மழுப்பாமல் சொல்வீர்கள் என நினைக்கிறேன். மலையாள பாசம் தடுக்காது என்று நம்புகிறேன்.

செல்வ அமுதன்

 Comrade. W. R. Varadarajan by പ്രതീഷ് പ്രകാശ്.

அன்புள்ள செல்வ அமுதன்,

நம்பிக்கைக்கு நன்றி.

நான் இம்மாதிரி விஷயங்களில் எப்போதுமே உடனடியாக கருத்துச் சொல்ல விரும்புவதில்லை. அதற்கான காரணங்களில் முக்கியமானது உடனடியாகக் கருத்துச் சொல்ல பெரும்பாலும் என்னிடம் ஏதும் இருப்பதில்லை என்பதே. நான் அரசியல் சிந்தனையாளனோ இதழாளனோ அல்ல. உடனடியாகக் கருத்துச் சொல்லவேண்டும் என்ற கட்டாயத்தை வைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளன் பாறாங்கல்லைச் சுமக்க ஆரம்பிக்கிறான். மேலும் பலவிஷயங்களில் என்னிடம் சற்று நிதானமாக யோசிக்கும்போது மட்டுமே விவாதிக்கவேண்டிய கருத்துக்கள் மட்டுமே உள்ளன.

இந்த விஷயத்தில் என் கருத்தைச் சொல்லவேண்டியிருக்கிறதா என்றால் இல்லை என்றே நினைக்கிறேன். இதில் உள்ள ஒரு மிரட்டலைச் சுட்டிக்காட்டவே இதை எழுதுகிறேன் என்று சொல்லவேண்டும். நான் தமிழில் எழுதுபவன், தாய்மொழியாக மலையாளத்தைக் கொண்டவன். என் பூர்வீகநிலம் அன்று கேரளத்துடனும் இன்று தமிழ்நாட்டுடனும் இருப்பதன் விளைவு இது. மேலும் நான் மலையாளத்தை தமிழ்ச்செவ்வியல் மரபின் ஒரு நீட்சி என்றும் ஆகவே கேரளமும் பண்பாட்டுத்தளத்தில் தமிழகமே என்றும் நம்புகிறவன்.

இந்நிலையில் எந்த ஒரு கேரள,தமிழ்நாட்டுப் பிரச்சினை வந்தாலும் உடனே சிலர் கிளம்பி வந்து என் ‘விசுவாசத்தை’ சோதனை செய்து பார்ப்பதைக் காண்கிறேன். நான் உடனடியாக தமிழ் ஆதரவு நிலைப்பாடு எடுக்கவேண்டுமென்று கோருகிறார்கள். இல்லையேல் தமிழ்த்துரோகி பட்டம் அளிக்கப்படும் என்ற மிரட்டல்தான் அது.

அதேபோல தமிழ்ப்பண்பாட்டின், அரசியலின் எல்லா அம்சங்களையும் நான் புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் இங்கே ‘விருந்தாளி’ அல்லவா? ஓர் எழுத்தாளனாக நான் வைக்கும் எந்தவிமரிசனத்தையும் உடனடியாக தமிழ்விரோதம் என்று முத்திரை குத்துகிறார்கள்.

திட்டவட்டமாகவே இதற்கு மீண்டும் பதிலளிக்கிறேன், முத்திரை குத்துங்கள், பிரச்சினையே இல்லை. உங்கள் முத்திரைகளுக்குப் பயந்து நான் சம்பிரதாய வாய் உபச்சாரங்களைப் பேச ஆரம்பித்தால் பின்னர் நான் எழுத்தாளனே அல்ல. எனக்கு ஒரு வாசகர்கூட இல்லாமல் போனால்கூட எந்தப்பிரச்சினையும் இல்லை.

இனி பிரகாஷ் காராத் விஷயம். பிரகாஷ் காராத் இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாபெரும் சுமை என்பதில் ஐயமில்லை. சென்ற இருபதாண்டுகளில் அக்கட்சியை ஜனநாயகவிரோதமான சமையலறை அரசியலுக்குள் கொண்டுசென்றவர் அவர். நீங்கள் ஒரு உ.ரா.வரதராஜனைத்தான் அறிவீர்கள். கேரளத்தில் கே.ஆர்.கௌரி முதல் பி.கோவிந்தப்பிள்ளை வரை கட்சிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்த மாமனிதர்கள் பலரை குப்பையைக் கூட்டுவது போல அவமானப்படுத்தி கட்சியை விட்டு தூக்கி எறிந்தவர் காராத். இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை அவர் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்.

ஒரு மாபெரும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எப்படி அங்கே வருவார்? திமுகவை அல்லது அதிமுகவை எடுத்துக்கொள்வோம். அதன் தலைவர்கள் அங்கே எப்படி வந்தார்கள், எப்படி அங்கே நீடிக்கிறார்கள்? மக்கள் ஆதரவினால் மட்டும்தான். ஆனால் பிரகாஷ் காராத்தை மக்களில் எத்தனைபேருக்கு தெரியும்? எப்படி அவர் அங்கே சென்று அமர்ந்தார்?

அங்கே இருக்கிறது கம்யூனிஸ்டுக் கட்சியின் ரகசியம். அதன் தலைமை இந்தியாவில் தீர்மானிக்கப்படுவதில்லை, சீனாவில் இருக்கிறது உண்மையான அதிகார மையம். கேரளத்தின் சாதாரணக்குடும்பத்தில் பிறந்த பிரகாஷ் காராத் லண்டனில் படிக்கசென்று மீண்டதுமே சரசரவென கட்சித்தலைமை நோக்கி கொண்டுசெல்லப்பட்டார்.  மக்களாஇச் சந்திக்கவில்லை, களப்பணி ஆற்றவில்லை. அவர் அறிந்ததெல்லாமே அலுலவக நிவாகம். ‘லேப்டாப் கம்யூனிசம்’. அரைநூற்றாண்டுக்காலம் தொழிற்சங்கத்திலும் மக்கள்பணியிலும் வாழ்க்கையைச் செலவிட்ட தலைவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நேர்ந்தது.

உ.ரா.வரதராஜனின் மரணம் குறித்த செய்திகள் சோர்வுறச் செய்கின்றன. உடல்நலக்குறைவுகாரணமாக தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து என்.வரதராஜன் விலகியபோது அடுத்ததாக உ.ரா.வரதராஜன் அந்த இடத்துக்கு வரக்கூடிய நிலை இருந்தது. தொழிற்சங்க ஆதரவு கொண்டவராதலால் அவரை தவிர்ப்பதும் முடியாதென்ற நிலை. அவர் வருவதை தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சர்வ வல்லமை படைத்த ஒரே சக்திமையமான என்.ராம் [தி ஹிண்டு] விரும்பவில்லை என்கிறார்கள்.

ஆகவே அவரது டைப்பிஸ்டுடன் அவருக்கு கள்ள உறவு இருக்கிறது என்ற புகார் உருவாக்கப்பட்டது. அவரது மனைவியே அவர் மீது புகார் சொல்லும்படிச் செய்யப்பட்டார். சில மனவேறுபாடுகள் காரணமாக ஏற்கனவே அவரது மனைவிக்கு ஆவ்ருடன் நல்லுறவில்லை என்கிறார்கள். தமிழ் அய்யரான வரதராஜன் தலித் சமூகத்தைச் சேர்ந்த விதவையான சரஸ்வதியை காதலித்து மணந்தவர். ஏற்கனவே சரஸ்வதிக்கு ஒரு மகன் உண்டு. முதல் மகனின் நடத்தை காரணமாக உருவான மனக்கசப்பு என்றார்கள்.

வரதராஜனின் மனைவியின் புகாரை ஒட்டி வரதராஜனை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கும்படி கட்சியின் மாநிலத்தலைமை மத்தியத்தலைமையைக் கோரியது. அதன்பின் வழக்கமான நாடகம். கல்கத்தாவுக்கு அழைக்கப்பட்ட உ.ரா.வரதராஜன் விசாரிக்கப்பட்டார். அவருக்கு என்ன நடக்குமென தெரியுமென்பதால் பெரும்பாலும் பேசாமலேயே இருந்திருக்கிறார். ஆனால் பெண்விஷயமாக நடவடிக்கை எடுத்து தன்னை சிறுமைப்படுத்தக்கூடாது என்று மீண்டும் மீண்டும் தனிப்பட்டமுறையில் கோரியிருக்கிறார். அவரை அது ஆழமாக புண்படுத்தியிருக்கிறது. ஆகவே தான் அந்த முடிவு.

‘மயிர் நீப்பின் வாழா கவரிமான்’ போல இருக்க விரும்புவதாக, மானமே பெரிதென நினைப்பதாக, வரதராஜன் எழுதியிருக்கும் கடிதம் அவரது மனநிலையைக் காட்டுகிறது. நான் விசாரித்தவரை 65 வயதான வரதராஜனின் நடத்தைமேல் எந்தப்பழுதும் இல்லை. ஒழுக்கம்,நேர்மை இரண்டிலும் முன்னுதாரணமான கட்சி ஊழியராகவே இருந்திருக்கிறார். அதிகார ஆட்டத்தில் நழுவி விழநேரிட்டது, அவ்வளவுதான்.

ஐம்பதுவருடம் கட்சிக்காக வாழ்ந்த கே.ஆர்.கௌரியம்மா நிதிமோசடிக்குற்றச்சுமையுடன் வெளியேறினார். பி.கோவிந்தப்பிள்ளை எதிர்கட்சியுடன் ரகசிய உறவு வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். தள்ளாத வயதில் பொறுப்பில்லாது செயல்பட்டமைக்காக நிருபன் சக்ரவர்த்தி அவமானபப்டுத்தப்பட்டு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டு பின்பு மன்னிப்புகேட்டு சிறுமை அடைந்து கட்சி உறுப்பினராகி இறந்தார்.  இவையனைத்துமே பிரகாஷ் காராத்தின் வழியாக நடந்தேறியவை. அதுவே வரதராஜனுக்கும் நிகழ்ந்திருக்கிறது.

வரதராஜன் தற்கொலை செய்துகொண்டது தலைமையால் எதிர்பார்க்கப்படாத ஒன்று. ஆனால் தற்கொலைசெய்துகொண்டமையால்தான் அவர் அவதூறுகளில் இருந்து தப்பினார். கட்சி அலுவலகத்தில் ஒரு செங்கொடி போர்த்தப்படும் கௌரவத்தையாவது அடைந்தார்.

இந்தியாவின் இடதுசாரி அரசியல் தரப்பு என்பது இன்று மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியே. இடதுசாரித்தரப்பு வலுவாக இல்லாத ஒரு தேசம் அதன் மக்கள்நல நோக்கை இழக்கும் என்பதே வரலாறு. ஆகவே இடதுசாரிக்கட்சிகளை இந்திய ஜனநாயகத்தின் இதயம் என்று சொல்வேன்.

இன்று ‘லேப்டாப்’ தலைவர்களால் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும் அதன் தலைமை மீட்டெடுக்கப்படவேண்டும் என்பதையே உ.ரா.வரதராஜன் போன்ற ஒரு களப்பணியாளர் தலைவர் கேவலமான மரணத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது காட்டுகிறது. இன்று வேறெந்தக் கட்சியிலும் அவரைப்போன்ற மாணிக்கங்கள் இல்லை.  அவர்கள் இந்த தேசத்தின் மாபெரும் சொத்துக்கள். அவர்களின் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் முழுக்க நிராகரிக்கையிலும்கூட அதைச் சொல்லவேண்டியிருக்கிறது. அவர்களைஎ ண்ணி தலைவணங்கவும் பெருமிதம்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

மாணிக்கங்களை கட்டிட ஜல்லிகளாகப் பயன்படுத்தும் சர்வாதிகார மனநிலையில் இருந்து கட்சி இனிமேலாவது வெளிவரவேண்டும். தலைமை என்பது பூடகமான சதிவேலைகளால் ஆன அதிகார மையமாக இருக்கும் காலகட்டம் ஒழிந்துவிட்டது என்பதை அதன் தொண்டர்கள் உணரவேண்டும்.

கே.கே.எம் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் காட்சியை ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் எழுதியபோது நான் கண்ணீர் சிந்தினேன். இன்றும்கூட அவரது அந்தக்கடைசிக் கடிதத்தை மனம் நெகிழாமல் நான் வாசிக்கக்கூடுவதில்லை. தோழரின் மரணச்செய்திவாசிக்கநேர்ந்தபோது நெஞ்சு இறுக்கம் தாளாமல் வலித்தது.

மன்னித்துவிடுங்கள் தோழர். வரலாறு என்றுமே நன்றிகெட்டது, மறதி மிக்கது. அதை எங்கோ ஆழத்தில் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

http://truetamilans.blogspot.com/2010/02/blog-post_24.html

தொடர்புடைய பதிவுகள்

 • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/6611

23 comments

Skip to comment form

 1. ஜெயமோகன்

  வரதராஜன் பற்றி கருத்தை சொல்லுங்கள் என்று “மிரட்டியவரின்” எண்ண ஓட்டம்
  எனக்கு புரிகிறது என்று நினைக்கிறேன். இது எல்லாவற்றுக்கும் காரணம்
  நீங்கள்தான். :-) அவரவர் லெவலில் பேசுவது என்ற கலையை நீங்கள் master
  செய்திருக்கிறீர்கள். ஒரு முறை உங்களிடம் பேசினாலே என்னமோ சொந்த அண்ணன்
  தம்பியிடம் பேசுவது போல ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது. சரி குறைந்த
  பட்சம் நான் உணர்ந்தேன். அப்படி உணரும் உரிமைதான் இது என்று தோன்றுகிறது!

  வரதராஜனைப் பற்றி படிக்கும்போது பின் தொடரும் நிழலின் குரலில் வரும்
  கட்சி தலைமையகத்திலிருந் வரும் ஒரு புது தலைமுறை கம்யூனிஸ்ட்- பெயர்
  மறந்துவிட்டது – அவர் ஞாபகம் வந்து கொண்டே இருந்தது. நிருபன்
  சக்ரவர்த்திக்கும், கே.ஆர். கௌரி அம்மாவுக்கும் ஆப்படித்துவிட்டார்கள்
  அதுவும் கே.ஆர். கௌரி அம்மாவுக்கு பண விஷயத்தில் தப்பான பேர்
  கட்டினார்கள் என்று படிக்க கஷ்டமாக இருந்தது. நல்ல வேளை ஈ.எம்.எஸ். போய்
  சேர்ந்துவிட்டார், அதனால் பிழைத்தார்!

  வரதராஜனும் கௌரி அம்மாவும் நிருபன் சக்ரவர்த்தியும் சீனா சொன்னது என்று
  பிரகாஷ் காரத்தை எப்படி தலைவராக ஏற்றுக் கொள்கிறார்கள்? இந்த ஆகிருதி
  மிகுந்த தலைவர்களுக்கு சொந்த சிந்தனை இல்லையா? சீனா சொல்வது எப்படி வேத
  வாக்காகிறது? நாளை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர் மூண்டால் இவர்கள்
  யாருக்கு விசுவாசமாக இருப்பார்கள்? அட ஒரு ஐம்பது வருஷத்துக்கு
  முன்னாலாவது ரஷியாவும் சீனாவும் காட்டும் வழியில்தான் மனித சமுதாயம் போக
  வேண்டும் என்று நினைத்திருக்கலாம். இன்றுமா? ஒரு அருணாச்சலமும்
  கே.கே.எம்மும் சரி பெரிய இடத்தில சொல்லிட்டாங்கப்பா என்று நினைக்கலாம்,
  ஆனால் கூர்ந்து சிந்திக்கக் கூடியவர்களுமா? இல்லை சிந்திக்கக்
  கூடியவர்கள் யாரும் கம்யூனிஸ்டாக இருப்பதில்லையா? :-)

  அன்புடன்
  ஆர்வி

 2. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ

  உ.ரா வரதராஜன் அவர்களின் மரணத்தைப்பற்றி தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் இதை ஒரு வம்பு ஆக ஆக்கிவிடக்கூடாது என்ற உங்கள் கவனம் தெரிகிறது. இதிலே எனக்கு என்ன தெரிகிறது என்றால் ஒரு இஸ்யூ என்று வரும்போது ஒருவருடைய சாதி அல்லது மொழி அல்லது மதத்தை வைத்தே பதில்சொல்வது என்பதுதான். இன்னொருவிஷயம் இந்த உ.ரா. வரதராஜன் என்பவரைப்பற்றி நான் கொஞ்சம்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.தினமணியிலே சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அவரைப்பற்றி அவர் ஒரு பார்ப்பனர் என்றமுறையில் திக ஆசாமிகள் சொல்லி கேட்டிருக்கிறேன்.அவர் ஒரு தலித் பெண்ணை மணம்செய்திருக்கிறார் என்பது இப்போது அவரது மரணம் வழியாகவேதெரிந்தது. இது ஒரு பெரியவிசயம் என்றல்ல நான் சொல்ல வருவது. ஆனால் இதுவும் ஒரு விசயம். ஒருவர் சாதிமனநிலைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை இது காட்டுகிறது. இதை அந்தக்கட்சி சொல்லவேண்டுமா இல்லையா? உ ரா வரதராசன் செய்த தியாகங்களையும் அவரது அர்ப்பணிப்பையும் சொல்லவேண்டுமா இல்லையா? இதுதான் கம்யூனிஸ்டுகளுக்கும் திராவிட இயக்கத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு. இவர்கள் சொல்லிச் சொல்லியே பேனையெல்லாம் பெருமாளாக காட்டிவிடுவார்கள். அது ஜனநாயக அரசியலிலே தேவையாக இருக்கிறது. பிரச்சாரம் செய்யவேண்டும். மக்களுக்கு தெரியவேண்டும். கொள்கைகளை மக்களுக்குச் சொல்லவேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அதேபோல மனிதர்களைப்பற்றியும் சொல்லியாகவேண்டும். மனிதர்களைத்தான் சாமானிய மக்கள் கவனிக்கிறார்கள். அவர்களுக்கு கொள்கைகளும் புள்ளீவிவரங்களும் போய்ச்சேர்வதில்லை. நேற்று தொடங்கிய விஜயகாந்த் கட்சி நூறாண்டு வரலாறுகொண்ட கம்யூனிஸ்டுக் கட்சியைவிட பெரிய கட்சி இங்கே. ஏன் என்றால் இவர்கள் விஜயகாந்த் என்ற மனிதரை காட்டுகிறார்கள். மக்களுக்கு அவர்மேல் ஒருநம்பிக்கை வரச்செய்கிறார்கள். கம்யூனிஸ்டுக்கட்சி நீங்கள் சொல்வதுபோல மாணிக்கங்களை கையிலே வைத்திருந்தும் அவற்களை கூழாங்கற்களாகவே பயன்படுத்துகிறது. பெரியபெரிய தலைவர்களை எல்லாம் சின்னச்சின்ன விசயங்களுக்காக ஒழுங்குநடவடிக்கை எடுத்து சிறுமைப்படுத்துகிறது. அதாவது பிரச்சார ஜனநாயகத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. ஆயுதப்போராட்டகாலத்திலே உருவாக்கிய கட்சிநடைமுறைகளை இப்போதும் வைத்திருக்கிறார்கள். இதுதான் பிரச்சினை

  ந.விவேகானந்தன்

 3. uthamanarayanan

  communists of the top hierarchy have started running the Party as Corporate Houses, and they know and we know what is the objective importance of running the Corporate Business,so they no longer need loyal and dedicated workers or leaders, what they want [ not need ] are people who could help those in the top to the process of compromise, lucre,political maneuverability on anything and everything.So you become in the hands of these top leaders as pawns who could stand in the front in the chessboard of struggles, agitations, slogan mongering and looking up with awe to the leaders.If people at the bottom are ignorant they can indoctrinate with their age-old proselytisation which is no longer relevant .The real communists who sacrificed must be rolling in their graves, feeling for the erosion of values they stood for.Many a communist leaders in those days gave whatever they had to the party to strengthen the party .See the picture now.
  May God forgive them……..Oh they dont believe in God. Sorry ladies and gentlemen

 4. kuppan_yahoo

  அன்புள்ள ஜெமோ

  மிக அற்புதமான கட்டுரை, பதிலுரை உங்களிடம் இருந்து.
  என் பார்வையில், இந்த கட்டுரை எனக்கு உங்கள் மீது கூடுதல் மதிப்பு மட்டும் மரியாதையை தான் வர வைக்கிறது.
  அதே போல பல வாசகர்களும் மிக தெளிவாக உங்களை (ஒரு எழுத்தாளரை) புரிந்து கொள்கின்றனர்- நன்றிகள் ஆர்வி, விவேகானந்தன். வாசிப்பின் முன்னேற்றத்தை இது காட்டுகிறது.

  எனக்கு நீங்கள் மலையாளி அல்லது தமிழாளி அல்லது ஜப்பானியர என்பது முக்கியம் இல்லை. நீங்கள் சொல்லும் கருத்து நல்லவையாக இருந்தால் நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் , என்ன சாதியினராக இருந்தாலும், எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும் , நான் உங்கள நல்ல கருத்துக்களை சிரம் தாழ்த்தி ஏற்று கொள்வேன்.

  செல்வ அமுதனையும் நான் குறை சொல்ல விரும்ப வில்லை, கண் எதிரே ஒரு நேர்மையற்ற செயல் எழும் பொது உணர்வுகள் பொங்குவது நம் இயல்பு. பிரகாஷ் கரத் மேல் உள்ள கோபத்தை உங்கள் மீது காட்டி உள்ளார் அவ்வளவே. அவர் பார்வையில் கரத்ஹும் நீங்களும் ஒரே மொழி பேசுபவர்கள் , பேசியவர்கள். பிரகாஷ் கரத் ஒரு பதுவராக இருந்து இருந்தால் செல்வ அமுதன் அந்தப் பதிவில் தான் இந்த கேள்வியை எழுப்பி இருப்பார்,

  சம காலத்தில் கம்முனிச கட்சிகள் நம் கண் முன்னே எவ்வாறு கரைகிறது, அதற்கான காரணங்கள் குறித்து தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.

  அரசியல் சிந்தனையாளன் மற்றும் இதழாளனாக இல்லாவிடிலும், மிக சிறப்பாகவே எழுதி உள்ளீர்கள். சுதாங்கன், ரவி பெர்னார்ட், ஞானி உ ரா வரதராஜன் இறப்பு குறித்து மிக தெளிவாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

  உ ரா வரதராஜன் போலவே பலர் உள்ளனர் பல கட்சியிலும், உதாரணம் அதிமுக் வில் காளிமுத்து, ஜி விஸ்வனதான் (இறக்க வில்லை, ) , அரங்கநாயகம், ஹண்டே, திருச்சி சிவா, குமரி அனந்தன், தமிழருவி மணியன், நடேசன் பால்ராஜ்…

  கத்தி எடுத்தவன் கத்தியலையே சாவன் என்பது போலவே , இங்கு அரசியலால் பயன் பெற்றவர் அரசியலாலேயே இறப்பார் என்பது நடை பெற்று கொண்டு இருக்கிறது.

  இவை போன்ற சம்பவங்களால் தான் இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் மீதோ, கம்ம்யுனிச கட்சிகள், கம்முனிச மாணவர் அமைப்புக்கள் மீதோ ஈடுபாடு வருவது இல்லை.

 5. Arangasamy.K.V

  கேகேஎம் நினைவிலிருந்து மறையமாட்டார் , நிருபணங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன .

 6. anbarasan

  அன்புள்ள ஜெ
  எனக்கு சில வருடக்களுக்கு முன் ஆனந்த விகடனில் ‘பிடித்த பெண்கள்’ பகுதி மூலம் நீங்கள் அறிமுகம். உங்கள் இணையம் நன்றாக வழி கட்டுகிறது. மரபு, அரசியல் இயற்க்கை, மெய்தேடல், போன்றவற்றில் அடிப்படை அறிவை வளர்த்க்கொள்ள தங்கள் அனுபவத்தில், பரிந்துரையில் புத்தககளின் வரிசையை கொடுத்தால் நன்றாக இருக்கும். முன்பு கேரளா சினிமா வரிசையை கொடுத்தது போல் . இணையம் அல்லது புத்தகம் தமிழில் இருந்தால் மிகவும் நல்லது. ‘பிடித்த பெண்கள்’ வெட்டி எடுத்து பத்திரமாக வைத்துள்ளேன் . பலமுறை வாசித்தது உண்டு. சமீப காலமாக தான் இணையத்தை தொடர்ந்து வாசிக்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது ஆவண செய்க.
  அன்பரசன்

 7. kannan

  அன்புள்ள ஜெயமோகன் ,
  இரண்டு நாட்களுக்கு முன் தான் “பின்தொடரும் நிழலின் குரல்” படித்து முடித்தேன் . வரதராஜன் எடுத்த முடிவு வேறு விதத்தில் சரியே. கம்யுனிஸ்ட் கட்சி தலைமை ஒரு உறுப்பினரை கட்டம் கட்ட தொடங்கிவிட்டால் அவருடைய கதி என்ன என்பது வரதராஜனுக்கு தெரிந்ததே . அப்படி ஒரு நிலைமை தனக்கு ஏற்பட்டுவிடுமோ என அஞ்சியே இந்த முடிவை எடுத்திருக்கலாம் . என்னளவில் அருணாச்சலம், வீரபத்திர பிள்ளை , புகாரின், டிராட்ஸ்கி இந்த வரிசையில் நம் சமகாலத்தில் ஒரு நிஜம் தான் வரதராஜன் …..

 8. john

  அன்புள்ள ஜெ

  நான் அதிகம் விரும்பாத மார்க்சிய எதிர்ப்பு நாவல் பின் தொடரும் நிழலின் குரல். ஆனால் சில சந்தர்ப்பங்களிலே அந்த நாவலில் பல நடப்பு அரசியல் விஷயங்கள் மிகவும் கூர்மையுடன் பதிவுபெற்றிருப்பதை ஞாபகப்படுத்துகிறேன். இப்போது தோழர் உ ரா அவர்களின் மறைவை ஒட்டி ஒரு இடம் எனக்கு ஞாபகம் வந்து மனதை கஷ்டப்படுத்தியது. பின் தொடரும் நிழல் நாவலிலே ராமசுந்தரம் என்று ஒரு தலைவர். அறிவாளி. மனசாட்சிக்குப் பயப்படுபவர். அவரைப்பற்றி வீரபத்ர பிள்ளை எழுதுகிறார். கட்சிக்குள் நடக்கும் ஸ்ட்லானிசம் அடக்குமுறை போன்றவற்றைப்பற்றி மனக்குமுறல்களைக் கொட்டுகிறார் வீரபத்ரபிள்ளை. அவரை சமாதானப்படுத்துகிறார் ராமசுந்தரம். இதெல்லாம் உங்களுக்கும் தெரியும்தானே தோழர் ஏன் சும்மா இருக்கிறீர்கள் என்று வீரபத்ரபிள்ளை கேட்கிறார். ராமசுந்தரத்தால் பதிலே சொல்ல முடியவில்லை. அவர் பேசாமல் கிளம்பும்போது வீரபத்ர பிள்ளை ‘தோழர் நீங்கள் அவதூறுக்குத்தானே அஞ்சுகிறீர்கள்’ என்று கேட்டுவிடுகிறார். ராமசுந்தரம் கடுமையான மனவேதனையுடன் ஒரு நிமிசம் பார்த்துவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார்.

  கம்யூனிஸ்டுக் கட்சி பெரும்தலைவர்களையெல்லாம் அவதூறுசெய்தே ஓய்த்திருக்கிறது. இப்போது கட்சியிலே இருந்த எல்லா தியாகதீபங்களையும் அவர்களே சேறுபூசி அணைத்துக்கொண்டிருக்கிறார்கள். கசப்பாக இருக்கிறது.

  உங்களுடைய கட்டுரையிலே சொல்லப்பட்டதெல்லாம் சரி. ஒரு பெய்ரை விட்டுவிட்டீர்கள். உ.வாசுகி. அந்த அம்மையார்தான் உ.ரா. அவர்களின் மரணத்துக்கு நேரடியான காரணம். அவர் ராம் அவரகளின் கைத்தடி. இது இந்து ராம் செய்த படுகொலை…

  மனம் கசந்து போய் இதைஎழுதுகிறேன்

 9. john

  http://www.savukku.net/2010/02/wr.html
  இந்த இணைப்பைப் பார்க்கவும். முழுச்சித்திரம் கிடைக்கும்

 10. perumal

  (இலக்கிய) விருந்து படைக்கும் நீங்கள் எப்படி விருந்தாளி ஆக முடியும்?

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 11. samraj

  உங்கள் கட்டுரை மிக துல்லியம். சி பி எம் கருவிலேயே குற்றம் உடையது. முதலாளீகளை விடஇந்த லேப் டாப் கம்யுனிஸ்ட்கள் மிகஆபத்தானவார்கள்.செங்கொடியின் சிவப்பு இது போன்ற பலிகளீன் வழிதான்போலும்
  சாம்ராஜ்

 12. sarwothaman

  அவ்வவ்போது காரத் பற்றிய செய்திகளை படிக்கும் போது பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் வரும் கதிர் ஞாபகத்திற்கு வரும். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.காரத் கட்சிக்கு முடிவரையை எழுதக்கூடும் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.அப்படி நடக்க கூடாது.

  சர்வோத்தமன்.

 13. va.mu.murali

  அன்புள்ள ஜெ.மோ,
  வணக்கம்
  உ.ரா.வரதராசன் மரணம் குறித்த உங்கள் கட்டுரை கண்டேன். நெகிழ்ச்சியூட்டும் கட்டுரை. கொள்கைக்காக வாழ்வை அர்ப்பணித்த மனிதர், வாழ்வின் இறுதியிலும் கட்சிக்கே தனது உடமைகளை எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது கோபம் கட்சி மீதல்ல என்பது தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல, காரத், எச்சூரி போன்ற லேப்டாப் கம்யூனிச தலைவர்கள் மீதான கோபம் தான் காரணமாக இருக்க முடியும். ராம் போன்ற கம்யூனிச முதலாளிகள் இருக்கும் இடத்தில் கலப்பணியாளர்களுக்கு என்ன வேலை?
  கட்சி இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக முன்னாள் மாநிலச் செயலாளர் வரதராசன் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், உ.ரா.வரதராசன் மீது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன என்ற விளக்கத்தில், இறந்தவர் மீது மீண்டும் சகதி வீசி இருக்கிறார், காரத். நீங்கள் கூறுவது உண்மை தான்.
  கேரளத்தின் கௌரி அம்மாவும் கோவிந்தப் பிள்ளையும் திரிபுரா முன்னாள் முதல்வர் நிரூபன் சக்ரவர்த்தியும் செய்யாத ஒன்றை – தன்னை பலியிட்டு கட்சியின் கண்களை திறக்கச் செய்தது – உ.ரா.வரதராசன் செய்திருக்கிறார். எனினும் இந்த தற்கொலையை மனம் ஒப்பவில்லை. கடைசிக்காலத்தில் ஆன்மிக நாட்டத்துடன் ஆலயங்களுக்கு இவர் சென்றதாகவும் தகவல். அதே திசையில் அவர் பயணித்திருக்கலாம். தினமணியில் இவர் எழுதிய கட்டுரைகள் விழிப்புணர்வூட்டுபவை. அதை செய்வதற்காகவேனும், சுயபலியைத் தவிர்த்திருக்கலாம்.
  உங்கள் ‘பின் தொடரும் நிழலின் குரல்; நாவல் வெளியானபோது முற்போக்குவாதிகள் பலர் கச்சை கட்டிக்கொண்டு எதிர்த்தார்கள். இப்போது அவர்கள் தெளிவடைந்திருக்கக் கூடும். கொல்லம் மாநகராட்சி மேயர் பத்மலோச்சன், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக பதவி பறிக்கப்பட்ட செய்தி இன்றைய நாழிதழ்களில் வெளியாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சுயரூபம் இது தான்.
  -வ.மு.முரளி.

 14. savukku

  கவுரியம்மாளும், மற்றவர்களும், இந்த லேப்டாப் கம்யூனிசத் தலைவர்களை ஏற்றுக் கொள்வதற்கான முக்கிய காரணம், தோழர் வரதராஜன் போலவே, அவர்களும், இந்த லேப்டாப் கம்யூனிஸ்ட்டுகளை விட, கட்சியை நேசித்ததே. இந்த தலைமையை தூக்கி எறிய போதுமான செல்வாக்கு இல்லாத போது, தாங்கள் அதை விட்டு விலகி வந்து, கட்சியை பலவீனமாக்குவதில் பங்கு பெற வேண்டாம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  1991ன் தொடக்கத்தில், நரசிம்மராவ் தலைமையில் அரசு பதவியேற்ற போது புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக இந்தியாவில் செயல்படுத்தப் பட்டது. அன்று கம்யூனிஸ்ட்டுகள், மற்ற இடதுசாரி சக்திகளோடு இணைந்து, தங்கள் தொழிற்சங்கங்களையும், அரசு ஊழியர் சங்கங்களையும் இணைத்துக் கொண்டு, நடத்திய போராட்டங்களும், தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களும், கருத்தரங்கங்களும், பேரணிகளும், சாமான்ய மக்களையும், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை மிகவும் ஆபத்தானதோ என்ற அச்சத்தை பரவலாக ஏற்படுத்தியது உண்மை. இவர்களின் பிரச்சாரம், இருபது ஆண்டுகள் கழித்து இன்று உண்மையாகி இருக்கிறது. ஏழை மேலும் ஏழையாகி இருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியிருக்கிறான். ஆனால், சிபிஎம் இந்தப் புதியப் பொருளாதாரக் கொள்கையின் வீச்சத்துக்கு இரையாகி, தன் அடையாளத்தை இழந்து, ரத்தன் டாட்டாவுக்கு வக்காலத்து வாங்கி, ஏழை உழைப்பாளி மக்களை போலீசை விட்டு அடிக்கும் அளவுக்கு மாறிப் போய் இருக்கிறது. இந்த மாற்றத்தின் நீட்சியே தோழரின் மரணம்.

  மரபணு மாற்ற பயிர்களை, என்ஜிஓக்களை விடவும், மற்ற கட்சிகளை விடவும், கடுமையாக எதிர்த்து பல இயக்கங்களை கட்ட வேண்டியது சிபிஎம் அல்லவா ? ஆனால், சிபிஎம் தவிர்த்த மக்கள் இயக்கங்கள்தான் இன்று அரசுக்கு நெருக்கடி கொடுத்து, மரபணு கத்திரிக்காய் பற்றிய முடிவை தள்ளிப் போடச் செய்துள்ளன. சிபிஎம், மேற்கு வங்கத்தை தக்க வைப்பது பற்றிய சிந்தனையிலேயே முடங்கிப் போயுள்ளது.

  கட்சி இந்த மிகப் பெரிய தேக்கத்திலிருந்து வெளிவராவிட்டால், தோழர் ஜெயமோகன் சொல்வது போல, சிபிஎம் ன் இறுதி அத்தியாயத்தை எழுதுபவர்களாக “புரட்சித் தலைவர்” பிரகாஷ் காரத்தும், “புரட்சித் தலைவி” பிருந்தா காரத்தும் அமைவார்கள்.

 15. ஜெயமோகன்

  Dear J.
  Your response to a query on WRV is a splendid description of both the comrade as well as the state of affairs the party he belonged to.During late seventies and all through eighties i had seen him participate in all agitations launched by AUT,be it for an isolated issue in a college or a collective cause in CHENNAI.His spontaneous involvement in working class and downtrodden causes revealed a genuine and selfless leftist commitment on his part which is a rarity these days.Notwithstanding the intrigues and machinations surrounding his tragic end he rightly deserves the kind of tribute you have so movingly paid to him.That there are writers around who could sensitively react to contemporary events is the only positive feature as regards this murky affair.Appreciation to you J.and red salute to the felled comrade.

  Bernard Chandra

 16. kuppan_yahoo

  is this Bernard chandra profesor of st xavier’s college palaymakottai and a resident of Nagercoil.

 17. ஜெயமோகன்

  ya. Commerce dept

 18. Anandan Ganesan

  செயமோகன் போன்ற ******Edited******* கட்டுரை ஒரு பக்கம். மறு புறத்தில் ஞாநியின் நேர்மையான சிந்தனை. குமுதம் பத்திரிக்கையில் ஞாநி எழுதியது சரியென்று படுவதால் அதை இத்துடன் இணைத்துள்ளேன்.

  ஒரு தற்கொலை. மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர்.வரதராஜனின் தற்கொலை பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
  தோழர்.டபிள்யூ.ஆரை நான் 35 வருடங்களாக கவனித்து வந்திருக்கிறேன். ஓரிரு முறை நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். ஓரிரு கூடடங்களில் இருவரும் அடுத்தடுத்து பேச்சாளர்களாக இருந்திருக்கிறோம். பேச்சுத் திறமையும் சிந்தனைத் தெளிவும் கட்சிக்கான, தொழிற்சங்கத்திற்கான அர்ப்பணிப்பும் உடையவராக இருந்தவர் அவர்.
  எழுபதுகளில் வங்கி ஊழியர்கள் பலர் தொழிற்சங்கத்திற்கு வருவதற்கு உந்துதலாக இருந்தவர் டபிள்யூ.ஆர். நெருக்கடி நிலையின் போது அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறியது. ரிசர்வ் வங்கியல் மதிய அடைவேளையில் ஊழியர் கூட்டத்தில் பே சவந்த போது அவரைக் கைது செய்ய போலீஸ் காத்திருந்தது. அவர் பேசி முடித்து விட்டுப் புறப்படும் போது போலீஸ் அவரை நெருங்கவிடாமல் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் அத்தனை பேரும் அரணாக நின்று தடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள்.
  மார்க்சிஸ்ட் ம்யூனிஸ்ட் கட்சியில் கடந்த 30 வருடங்களில் பல இளைஞர்களுக்கு தொழிற்சங்கத்திலும் கட்சியிலும் ஆதர்சமாக விளங்கி வந்த ஒரு சில தலைவர்களில் டபிள்யுஆரும் ஒருவர்.
  அவருடைய அரசியல் வாழ்க்கை பொது வாழ்க்கை எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடனும் கடும் உழைப்புடனும் நேர்மையாகவுமட இருந்ததோ, அதற்கு நேர் மாறாக அவரது தனி வாழ்க்கை பலவீனங்களும் கோளாறுகளும் நிரம்பியதாக இருந்ததுதான் அவருடைய சோகமான முடிவுக்கு காரணமாகிவிட்டது. உட்கட்சிக்க போராட்டங்களில் எல்லாம் வென்ற தன்னை உள்வாழ்க்கைப் போராட்டங்கள் சீர்குலைய வைத்துவிட்டன என்று கடைசி நாட்களில் எழுதி வைத்திருக்கிற குறிப்பு ஓர் ஒப்புதல் வாக்குமூலம்.
  மது, மாது முதலிய பலவீனங்கள் நம் அரசியலில் இருக்கும ;பலருக்கு சாதாரண விஷயங்கள். மா.பொ.சியின் தமிழரசுக் கட்சியில் தன் அரசியல் ஈடுபாட்டைத் தொடங்கிய டபிள்யூ.ஆர் அங்கிருந்து திரவிடக் கட்சிகளுக்கோ கங்கிரசுக்கோ சென்றிருந்தால் அவருக்கு இப்போது ஏற்பட்ட பிரச்னையே வந்திருக்காது. அவர் கம்யூனிஸ்ட்டாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டதுதான் அவரது உளைச்சல்களுக்கு காரணம்.
  ஏனென்றால் தி.மு.க., அ.தி.மு.க போன்ற கட்சிகளில் எந்தப் பதவியில் இருப்பவருக்கு மது, மாது பலவீனங்கள் இருந்தாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. கட்சியும் கேள்வி கேட்பதில்லை. பொது மக்களும் அதிர்ச்சியடைவதில்லை. ஆனால், ஒரே மேடையில் பல மனைவிகளுடன் ஒரு போதும் ஒரு மார்க்சிஸ்ட்டோ, கம்யூஸ்ட்டோ தோன்றவோ வலம் வரவோ முடியவே முடியாது. கட்சியும் சரி, சமூகமும் சரி கம்யூனிஸ்ட்களிடம் கடுமையான நெறிமுறைகளை எதிர்பார்க்கின்றன.
  அதில் சறுக்கும் போது மன உறுத்தல், குற்ற மனப்பான்மை, நெஞ்சுக்கு நீதி பிரச்னை எதுவும் தி.மு.க. அதிமுக போன்ற கட்சிகளில் இருப்பவருக்கு வருவதில்லை. ஆனால் அதிலிருந்து ஒரு கம்யூனிஸ்ட் தப்பிக்கவே முடியாது என்பதன் அடையாளம்தான் டபிள்யு.ஆருக்கு நேர்ந்த சோக முடிவு.
  டபிள.யூ ஆருக்கு ஏற்பட்ட மான அவமானப் பிரச்னை என்பது என்ன? கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டது உண்மையான அவமானம் இல்லை. என்ன காரணத்திற்காக நீக்கப்படுகிறோம் என்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட்டின் அசல் பிரச்னை. அரசியல் கரு;து வேறுபாடு, சித்தாந்தக் கருத்து வேறுபாடு போன்றவற்றினால் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதை எந்த கம்யூனிஸ்டும் மானப்பிரச்னையாகக் கருதப் போவதில்லை.
  தான் கடும் அரசியல் உழைப்பால் வந்து சேர்ந்த சிகரத்திலிருந்து இப்போது விழுவது தனி வாழ்க்கை நடத்தைக் கோளாறுகளினால்தான் என்பதை உணர்ந்ததே டபிள்யு.ஆருக்கு அவமானகரமானதாக இருந்திருக்க முடியும். நிச்சயம் அதற்கு தீர்வு தற்கொலையல்ல. சுயவிமர்சனம் ஒருவரைத் தற்கொலைக்கு இட்டுச் செல்லாது. சுயபரிதாபமே அதைச் செய்யும். செய்துவிட்டது.
  இப்படிப்பட்ட நிகழ்வைப் பற்றி விமர்சிக்கும் தகுதி நம் ஊடகங்களுக்கோ இதர அரசியல் கட்சிகளுக்கோ நிச்சயம் இல்லை. அவர்களின் கோளாறுகள் இன்னும் பெரியவை. இன்னும் ஆழமானவை.
  அதே சமயம் இடதுசாரிக் கட்சிகள் இப்படிக்பட்ட தருணங்களில் தம்மை மேலும் கறாராக சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆண்-பெண் உறவுகள், திருமணம் மணமுறிவு குடும்பம், போதை போன்றவற்றைப் பற்றியெல்லாம் கட்சி கீழிலிருந்து மேல் வரை என்ன நினைக்கிறது என்பதைப்பற்றி பகிரங்கமாக விவாதிக்க வேண்டும்.
  ஒரு கம்யூனிஸ்ட்டாக தன்னை ஆக்கிக் கொள்ள விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் இதைப் பற்றியெல்லாம் நிறைய கேள்விகள் இருக்கின்றன. குழப்பங்கள் இருக்கின்றன. அவற்றுக்கான விடைகள், தெளிவுகள், கட்சியிடமிருந்து கிடைக்கும் சூழ்நிலை இன்று இல்லை. அந்த சூழலை உருவாக்கினர்லதான் எதிர்காலத்தில் டபிள்யூ.ஆர் போன்றவர்கள் கட்சிக்கு வரமா சாபமா? என்ற குழப்பத்தைச் சந்திக்க வேண்டிய சிக்கல் வராது. டபிள்யூ.ஆர்களுக்கும் அரசியல் மனிதன், குடும்ப மனிதன் என்ற இரு பாத்திரங்களுக்கும் இடையில் முரண்கள் வராத வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

 19. L Muthuramalingam

  Dear Jeyamohan, This is my first visit to your blog. I wish all d bests to myself. OK.

  Regarding, the article on Com. WR. I wish you to read a statement by Com Prakash Karat on almost all leading dailies including Dinamani. Suppose, party has not taken any action on the complaint by the lady and it is published in the newspapers that the party has not taken any action on a “womaniser”- donot worry the newspapers will not hesitate to call WR like this- what would be your stand. Sitting comfortably in a writing table if possible in a A/c room and making comments on a political party is very very easy Jeyamohan.
  Secondly, you have made a comment on TN CPI(M) that Sri N Ram is the only power centre of it. Can you explain/quote incidents.
  I am a sympathiser of CPI(M) and I feel very much for the sudden death of Com WR.
  Still I make these observations. Can I have your comments, Jeyamohan.

  ப்ளீஸ் make available the article you wrote on the acting talents of MGR and Sivaji Ganesan for my information, ப்ளீஸ்.
  T

 20. ஜெயமோகன்

  Dear Jeyamohan, I have posted a comment on your article reg.WRV. Kindly respond to it since you have made a very serious allegation on the only available party for the working class of India. I as a sympathiser of CPI(M) expect your response at the earliest.

  L Muthuramalingam
  9443571470
  04522380048
  உங்கள் எதிர்வினை வாசித்தேன். அதில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரபூர்வ விளக்கத்தை நீங்கள் அதன் ஆதரவாளர் என்ற முறையில் ஏற்றுக்கொண்டிருப்பதை எழுதியிருக்கிறீர்கள். இதில் விவாதிக்க என்ன இருக்கிறது?

  என்னுடையது சந்தர்ப்பங்கள், முன்வரலாறு மற்றும் இதழியல் நண்பர்களுடனான உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் நான் செய்திருக்கும் அனுமானம். அதற்கான சான்றுகள் மேலும் வந்துகொண்டே இருக்கின்றன. உ.ரா வரதராஜன் அவர்களின் விளக்கக் கடிதத்தை இதழ்களில் இப்போது நீங்கள் வாசிக்கலாம். திட்டவட்டமாகவே அதில் பல வினாக்களை கேட்கிறார்.

  எந்தவகையான் எழுத்துபூர்வமான புகாரும் இல்லாமல் அவர்மேல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. புகாரில் சம்பந்தமே இல்லாத உ வாசுகி மற்றும் சுதா ராமலிங்கம் இருவரின் வாய்வழிப்புகாரின் அடிபப்டையில். பாதிக்கப்பட்டவர் எங்குமே ஆஜராகவில்லை. மாவட்டக் கமிட்டி ஒருதலைப்பட்சமாக அளித்த சிபாரின் அடிபப்டையில் மத்தியக்கமிட்டி அவரது முழு அரசியல் வாழ்க்கையையுமே அழிக்கிறது . இத்தனைக்கும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டே அவர் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினார் என்பதே. அந்த எஸ் எம் எஸ்ஸும் அவரது செல்போனில் இருந்து அனுப்பப்படவில்லை. அந்த செல்போன் செய்தியோ அந்த செல்போனோ எங்கும் முன்வைக்கப்படவில்லை. அந்த செல்போன் உ ராவுக்கு சொந்தமானது என்று நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அவர் செத்தபின்னரும் அவதூறு தொடர்கிறது. — உ ரா தற்கொலை செய்துகொண்டமைக்குக் காரணம் இந்த அநீதிதான் என திட்டவட்டமாகவே செய்திகள் சொல்கின்றன. இது ஒரு தனி நிகழ்வல்ல. இருபது வருடங்களாக அக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் இப்படி அவமானப்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டார்கள். கேரளத்தில் கடைசி உதாரணம் எம் என் விஜயன்.

  நீங்கள் நம்பலாம்.நம்பிக்கை மோட்சம் அளிக்கும். ஆனால் நம்பிக்கையாளாருடன் விவாதிக்க முடியாது

 21. L Muthuramalingam

  Dear brother, Please read my mail once more in which I have never mentioned I believe the statement of Com Karat. I just want you to read the statement. If not done, please, I request you to read at once. As the people raise doubts/questions/allegations on the party, Karat has also raised only one question against the people. Please try to answer that question.
  My mail contain another matter and also a request.
  I want you to establish your allegation that Shri N Ram is the only power centre of TN CPI(M) which is a very serious one. You cannot make such allegation without establishing.
  Another one is my REQUEST: Please make your article on MGR and Shivaji Ganesan available to me. I need to read oncemore for a discussion
  L Muthuramalingam

 22. ஜெயமோகன்

  அன்புள்ள முத்துராமலிங்கம்

  இந்து என்.ராமுக்கு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியில் உள்ள பிடி என்பது இதழாளர் ,அரசியலாளர் உட்பட அனைவருக்குமே தெரிந்த விஷயம். அதை ‘ஐயம் திரிபற’ பொதுமேடையில் நிரூபிப்பது என்பது அனேகமாக எவராலுமே சாத்தியமான விஷயம் அல்ல. ஏன், மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகார மையங்களைப்பற்றி அதன் தொண்டர்களுக்கே எதுவும் தெரிந்திருக்காது. உங்களுக்கு உண்மையில் ஆர்வமிருந்தால் எந்த மார்க்ஸிய முதல்நிலை தோழரிடமும் அந்தரங்கமாக கேட்டு தெரிந்துகொள்ளலாம். நம்ப விரும்பவில்லை என்றால் அவதூறாகவே கொள்ளலாம். காலம் காட்டும். அவ்வளவுதான்

  ஜெ

 23. ஜெயமோகன்

  அன்புள்ள திரு ஜெயமோகன் சார்,
  நேற்று ஒரு வழியாக W.R. வரதராஜன் அவர்கள் இறந்து இருபது தினங்கள் கழித்து அவர் மரணம் குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் சிபிஎம்மின் மாநிலத் தலைவர்கள் ரிப்போர்ட் செய்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிகழ்ந்த அந்த ரிப்போர்ட்டின் சாராம்சம் கீழ்கண்டவாறு இருந்தது.
  1.W.R. வரதராஜன் எப்பொழுதுமே பெண் தொடர்புள்ளவராக இருந்து வந்திருக்கிறார். டெல்லியில் அவர் பணியாற்றும் போதே அங்கும் இது போல தொடர்பு ஏற்பட்டு அவரை இரு முறை கட்சி எச்சரித்திருக்கிறது.
  2.இந்த முறையும் கட்சி அவர் மேல் வந்த புகாரை ஆறு மாதங்கள் தீர விசாரித்திருக்கிறது. அவர் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்களை கட்சி பரிசீலித்திருக்கிறது. அவைகள் மிகவும் காதல் வாக்கியங்கள் கொண்ட எஸ்.எம்.எஸ். இன்னும் மீடியாக்கள் கட்சியை குறை சொல்லிக் கொண்டிருக்குமென்றால் அவர்கள் அந்த எஸ்.எம்.எஸ்களை வெளியிடவும் தயாராக இருக்கிறார்கள்
  3.அது மட்டுமல்லாமல் அவர் முதலில் எழுதிய இரண்டு கடிதங்கள் அதன் பின் பிராகஷ்காரட்டிற்கு அவர் எழுதிய கடித்தங்கள் எதையும் அவர் கட்சி அலுவலகத்திற்கு எழுதவில்லை. யாரோ அவருடைய நண்பர் ஒருவரிடம் எழுதி கொடுத்து அவருடைய மரணத்திற்கு பின்பு பத்திரிக்கைகளுக்கு கொடுக்கச் சொல்லி கொடுத்திருக்கிறார். அந்த நபரும் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு அவர் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.
  4.இன்னொன்று கட்சியின் பொறுப்புகளில் இருந்து மட்டுமே அவரை விடுவித்திருந்தோம். அவர் பணியாற்றுவதற்கான நல்ல சூழலையே நாம் உருவாக்கி வைத்திருந்தோம். ஆனால் அவரோ கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக திடீரென்று போய் தற்கொலை செய்து கொண்டார்.
  இவ்வாறாக வாழும் போது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு உடன்படாமலும் இறந்த பின் கட்சிக்கு இழுக்கு ஏற்படும்படியும் காரியங்கள் செய்த W.R.V கட்சி வெளியேற்றியதில் என்ன தவறு?

  யோகராஜ்

  அன்புள்ள யோகராஜ்,

  கேரளத்தில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்கிய கே ஆர் கௌரியம்மா அப்படி உருவாக்கிய காலம்முதலே கட்சிக்கு துரோகம்தான் செய்துவந்திருந்தார், பலமுறை எச்சரித்தும் கேட்காத காரணத்தால் 40 வருடம் கழித்து நடவடிக்கை எடுத்தோம் என்று அறிவித்தார்கள். எல்லாருக்கும் இதே தான் சொல்லப்படுகிறது. இதுவே சோவியத் ஆட்சி என்றால் வரதராஜனே நீதிமன்றத்தில் நான் ஒரு அயோக்கியன் என்னை சைபீரியாவுக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பார்.

  சரி, எப்போதும் அப்படித்தான். நான் நம்பவில்லை. நீங்கள் நம்பினால் நல்லது

  ஜெ

Comments have been disabled.