கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம்தானா? என் பி எச் டி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இது சமீபத்தில் என் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் மீது உங்கள் எதிர்வினையைக் கோருகிறேன்.

கிறிஸ்டோபர் ஆன்டனி

எனது நண்பன் ஒருவனுக்கு லண்டனில் ஒரு பல்கலையில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. சென்ற வாரம் யுகே விசா நேர்முகத்தேர்வு முடிந்து சென்ற திங்கட்கிழமை லண்டன் செல்ல முடிவானது. திருவந்தபுரம் ஏர்போர்ட் எங்களூருக்குப் பக்கமானதால் (சுமார் 40 கிலோமீட்டர்), நாங்கள் வெளிநாடு செல்லும்போது திருவனந்தபுரம் வழியாகச்செல்வது வழக்கம்.

என் நண்பனும் விதிவிலக்கல்ல. திருவனதபுரத்திலிருந்து லண்டன் செல்ல ஓமன் எயர்வேஸ்-ல் பயணச்சீட்டு  முன்பதிவு  செய்திருந்தான்.

திங்கள் காலை 7:20 -க்கு  பயண நேரம். அன்றிரவு முழுவதும் தூங்கவில்ல. முதல் விமான பயணம். ஏதோ ஒருவித பயம் அவனை ஆட்ட்கொண்டிருன்தது. அதிகாலை நான்குமணிக்கே திருவந்தபுரம் பன்னாட்டு முனையத்தை வந்தடைந்திருந்தான். மிக விரைவாக தன்னை வழியனுப்ப வந்தவர்களை இவன் வழியனுப்பிவிட்டு தனது பெட்டிகளுடன் விமானநிலையத்தினுள் நுழைந்தான். பத்து நிமிடங்களுக்குள் தனது லக்கேஜை கொடுத்துவிட்டு போடிங் பாசையும் வாங்கிவிட்டு எல்லாம்முடிந்ததென்று பெருமூச்சுவிட்டான் இன்னும் தனது தலைவிதி நிர்ணயிக்கப் படவில்லை என்பதறியாமல்.

இமிக்ரேசன் படிவத்தை பூர்த்திசெய்துவிட்டு சுவரில் எச்சில் துப்பிய காவலரின் பின்பகுதியத்தாண்டி வந்து  வரிசையில்  காத்திருந்தான்.  இவன்முறை வந்ததும் தனது கடவுச்சீட்டையும் பயண ஆவணங்களையும் இவனை பரிசோதிக்கும் அலுவலரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றான். 

“தமிழா?” அதற்க்கு இவன் “ஆமா தமிழ்”.

கொடுமை என்னவென்றால் நாங்கள் பேசுவதை தமிழர்கள் கேட்டால் மலையாளமென்றும், மலையாளிகள் தமிழென்றும் புரிந்துகொள்வார்கள். காரணம் எங்கள் உச்சரிப்பு முறை அப்படி. எங்கள் தமிழில் மலையாள நெடி அப்படியடிக்கும். தொன்றுதொட்டு திருவிதாங்கூரின்  குடிமக்கள்  நாங்கள். நேசமணி தலைமையில் ஒரு  கோஷ்டி  எங்களை  கேரளத்திலிருந்து  பெயர்த்தெடுத்து  தமிழகத்தில்  ஒட்டிவிட்டது. ஆனால் திருவனந்தபுரம் கத்தோலிக்க மறைமாவட்டம் தனது பிடியை இன்னும் விடவில்லை. எனவே நாங்கள் அரசியல் ரீதியாக தமிழ்நாடு. மத அடிப்படையில் கேரளா. இரண்டும் கெட்டான் நிலை.

“லண்டனில எதுக்கு போற?” – அவன்.

“எம். எஸ். படிக்க” – இவன்.

“என்னபடிச்சிருக்க?”

“எம் பி ஏ.”

“அப்புறம் எப்படி கம்ப்யூட்டர் கம்பனியில வேலை பார்த்த?

“நான் படிச்சது எம் பி ஏ சிஸ்டம்ஸ். அப்புறம் 3 மாதம் கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணியிருக்கேன்”.

“என்ன கோர்ஸ்?”

“அட்வான்ஸ்ட் கோர்ஸ் இன் ஷேர்பாயின்ற்”

அந்த ஆளுக்கு என்ன புரிந்ததோ? 

“சரி…இப்போ எனக்கு டூட்டி முடிஞ்சது.”, இன்னொருவரைக்காட்டி  “இவரு உங்களுக்கு பாஸ்போட்டில சீலடிச்சுக் கொடுப்பாரு.” என்று சொல்லிவிட்டு இவனது கடவுச்சீட்டையும் ஆவணங்களையும் தூக்கி இவனது கையில் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். அடுத்த அலுவலர் வருவதற்கும், இவன் கீழே விழுந்த ஆவணங்களை பொருக்கி எடுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“தமிழனா?”

“ஆமா.”

“அப்போ இங்கிலீஷ் பேசத்தெரியாது.” – நக்கலான குரலில். “நீ போக முடியாது”

“ஏன்?”

“உன்கிட்ட சரியான டாக்குமென்ட் இல்ல”

“இல்ல, நான் எல்லா டாக்குமெண்டும் வச்சிருக்கேன்.”

“உன்ன விட முடியாது. அங்க ஓரமா போய் நில்லு. எங்க மேனேஜர் வந்து சொன்னா விடுவேன்”

வேறு சில் ஆட்ட்களைக் கூப்பிட்டு, “இயாளு  ஈ ப்ளைட்டில் போகுன்னில்லா. இயாளிடே லக்கேஜினே வெளியிலெடுக்கு.”

“ஷெரி.” சொல்லிவிட்டு அவர்கள் மறைந்தனர்.

ஓரமாக நின்று கைக்கடிகாரத்தில் நேரம்பார்த்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது. 6:30AM. அப்போது வாட்டச்சாட்டமான 7 பேர் இவனருகே வந்தார்கள்.

“எங்கப் போற?”

“லண்டனுக்கு”

“உனக்கு எந்த ஊரு?”

“தூத்தூர்”

“என்னது தூத்தூரா? அப்போ நீ தொறயக்காரனா?”. தொறயக்காரன் என்பது மீனவர்களைக் குறிப்பிடும் குறிசொல். “தொறயக்கார நாயின்றா மக்களும் லண்டனில் படிக்கான் போகான் தொடங்கியோ?.

“?!???”, நண்பனுக்குள்ளிருந்த 15 அடி நீளமும் 2 டன் எடையும்  கொண்ட  சுறாமீன்  தன்  வாயைப்  பிளந்து  கூரியப் பற்களைக்  காட்டி  தலையை அங்குமிங்கும் ஆட்டி அலறியது.  கட்டுப்படுத்திக் கொண்டான். நல்ல உயரமாக, மாநிறமாக,  கட்டுமஸ்தான உடல்வாகுவோடு இருந்தான் அவன். அநேகமாக நாயராக இருப்பான். ஆனால் என் நண்பனின் ஓரடி அவனுக்கு சரியாகப் பட்டால் மண்ணில் புதைந்து விடுவான். இவன் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீரன். மீனவனின் மகன். உணர்ச்சி வசப்படும் நேரம் இதுவல்ல. நிதானமாக இருக்கவேண்டுமென்று  மனதை கட்டுப் படுத்திக் கொண்டான்.

ஏன் மீனவர்கலேன்றால் அனைவருக்கும் ஒரு வெறுப்பு? சிங்களவன் ஒருபக்கம், இந்திய அரசு இன்னொருபக்கம், அதுபோக மலையாளத்தான் இப்போது வேறொருபக்கம்.

“வேறு என்தொக்கே டாக்குமென்ட்ஸ் கையிலுண்டு?”

அனைத்தையும் அவன் கையில் கொடுத்தான். அவன் ஒவ்வொன்றாக பார்க்கத்தொடன்கினான்.

“இது TOEFL ஸ்கோர். நீ இதினே எழுதி ஜெயிச்சோ? காணில்லா இன்டர்நெற்றில் டவுன்லோடு செய்து காணும்”

நண்பன் அமைதியாக இருந்தான்.

“எம் பி ஏ மார்க் சீட், எவிடே சத்திய பாமா காலேஜ்,  பைசா கொடுத்து வாங்கிச்சு காணும்” அவர்களின் சிரிப்பொலிகள் காதினுள் சென்று ரத்தத்தில் ஏதோ ரசாயன மாற்றத்தை ஏற்ப்படுத்தத்  துவங்கியது.

அதிலொருவன் சில ஆவணங்களைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே கீழேப்போட்டன்.  அந்த  பேங்க் ஸ்ட்டேமெண்டை குனிந்து எடுத்துவிட்டுத் திரும்பியபோது அவர்களின் மேலதிகாரி வந்துவிட்டார். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு,

“10 லட்சம் அக்கவுண்டிலுண்டு. அப்போ பிரஷ்னம் இல்லா. பிளைட் ஸ்டார்ட் செய்து.  நீ போஹாம்.”

இவன் தன்னை திருப்பியனுப்பிய அதிகாரியிடம் மீண்டும் ஓடினான். மீண்டும் அவன் நண்பனை உள்ளே அனுப்ப மறுத்துவிட்டான். அவனது உயிரதிகாரி அவனிடம் வந்து சொன்னதும் வேண்டா வெறுப்பாக அனுமதியளித்தான். அப்போது நேரம் 7:15AM. வியர்க்க வியர்க்க வெளியில் ஓடினான்.

வெளியில் வந்துபார்த்தபோது மணப்பெண் போல்  ஒரு விமானப் பணிப்பெண்ணும், கையில் எதையோ வைத்துக்கொண்டு,  மணமகனை வரவேற்க பூமாலையோடு நிற்கும் மைத்துனன் கணக்காக இன்னொருவரும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண வாகனம்போல்  ஓமன் எயர்வேஸ் விமானமும் இவனுக்காக காத்திருந்தது.

நாயர்களும் மேனன்களும் வேற்றுக்கிரகங்களில், பெட்டிக்கடையும் சாயக்கடையும் நடத்த வசதியாக, அங்கே தண்ணீர் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சி நடத்துகின்றார்கள். கவனம், நீங்கள் அங்கே செல்வதற்கு முன் அந்தத் தண்ணீரிலும் மீன் அமைதியாக நீந்திக்கொண்டிருக்கும்.

கிறிஸ்டோபர் ஆன்டனி

அன்புள்ள கிறிஸ்,

திருவனந்தபுரத்தில் பல இடங்களில் இதற்கிணையான நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னாலிருப்பது கீழ்த்தரமான சாதிப்புத்தியும் பொறாமையும் மட்டுமே.  சென்றவருடம் ஒரு கேரளச்சுற்றுலாவுக்குச் சென்ற என் மனைவியும் குடும்பமும் சில இடங்களில் இதேபோல மரியாதையில்லாமல் நடத்தப்பட்டதைச் சொன்னார்கள்.

இது தமிழர்மேல், அல்லது மீனவர்கள் மேல் உள்ள காழ்ப்பல்ல. இதே காழ்ப்பு வடகேரளத்தில் கன்னடர்கள்மேல் உள்ளது. அன்னியர்மேல் உள்ள காழ்ப்பு. அதற்குக் காரணம் அடியில் ஓடும் தாழ்வுமனப்பான்மை- நீங்கள் நினைப்பதுபோல உயர்வு மனப்பான்மை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் ஒருவன் இயல்பாக சாதிசார்ந்து உயர்வுமனப்பான்மையை அடைய, தக்கவைக்க முடியாது. பிற அனைத்துத் தளங்களிலும் தன்னை தாழ்வாக உணரும் ஒருவன் மட்டுமே சாதியை ஆயுதமாகக் கொள்கிறான்.

சென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் இந்த உணர்ச்சிகள் இளைய தலைமுறை நடுவே ஓங்கிவருவதாக தகவல்கள் சொல்கின்றன. ஒரு நூறு வருடங்களில் கேரளம் அடைந்த எல்லா பண்பாட்டு வெற்றிகளும் இந்த இருபதாண்டுகளில் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. நல்ல இலக்கியத்திற்கு நல்ல சினிமாவுக்கு ஆளில்லை என்ற நிலை. எந்தவகையான ஆக்கபூர்வ அரசியலிலும் நம்பிக்கையில்லை என்ற நிலை. எல்லாவகையான பிற்போக்கு ,அடிப்படைவாதப் பண்புகளும் வளர்ந்துவருகின்றன. பொது இடங்களில் ஒரு சராசரி மலையாள இளைஞன் நடந்துகொள்ளும் முறை நம்பமுடியாத அளவுக்கு கேவலமாக இருக்கிறது. இவற்றைப்பற்றியெல்லாம் இந்த இணையதளத்தில் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். என் எல்லா கேரளப்பயணக்குறிப்புகளும் சோர்வையே பதிவுசெய்கின்றன.

எனக்கு இதற்கான சமூக- உளவியல் காரணங்களை உறுதியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இப்படி ஊகிக்கிறேன். கேரளத்து மக்கள் ஒருவகையான மனச்சோர்வுக்கு, அவநம்பிக்கைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான சலிப்பு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.

அதற்குக் காரணம் கேரளம் வளர்ச்சி தேங்கி உறைந்து நின்றிருக்கிறது என்பதே. பொருளியல்ரீதியாக கேரளம் அதன் முட்டுச்சந்துக்கு வந்து திகைத்து நிற்கிறது. வளைகுடாவை நம்பி இருந்த பொருளியல் வீழ்ச்சி அடைகிறது. அதை ஆக்கபூர்வமாக திசைதிருப்ப ஆளில்லை. கட்டிடங்களையும் பொன்விளம்பரங்களையும் வைத்து எதையும் கணிக்காதீர்கள். கேரளத்தில் வேறு எந்த முதலீட்டு சாத்தியங்களும் இல்லை என்பதனால்தான் கட்டிடமும் தங்கமும் பெருகுகின்றன.

கேரளத்தில் உள்ள எல்லா தொழில்களையும் இடதுசாரி அரசியல் முற்றிலும் அழித்துவிட்டது. விவசாயம் அனேகமாக இல்லை. கயிறு, ஓடு, இறால் செப்பனிடுதல், ஆயத்த ஆடை எல்லமே முழுமையாக அழிந்துவிட்டன. நுகழ்பொருள்வணிகம் தவிர வேறு உள்ளூர் பிழைப்பே கிடையாது. கேரளத்தின் துறைமுகங்கள் அனைத்துமே தொழிற்சங்க பிரச்சினைகளால் கப்பல்கள் வருவது ஆபத்தானது என சர்வதேச ஒருங்கிணையத்தால் கருப்பு அடையாளம் போடப்பட்டுவிட்டன.

கேரளத்தின் கல்விமுறை இடதுசாரிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. ஒருவருடத்தில் சராசரிகாக 40 மாணவர்போராட்டங்களை நடத்துகிறார்கள்! தனியார் கல்வியை சமீபகாலம்வரை தடுத்து நிறுத்தியிருந்தார்கள். இந்தியாவின் 200 சிறந்த கல்விநிறுவனங்களைப் பட்டியலிடும் அமைப்புகள் எதுவும் கேரளத்தின் எந்த நிறுவனத்தையும் சுட்டிக்காட்டியதில்லை. ஆகவே கேரள இளைஞர்களின் கல்வித்தகுதி பரிதாபகரமானதாக உள்ளது. வளர்ந்துவரும் தகவல்தொடர்பு முதலிய துறைகளில் அவர்களின் பங்களிப்பு பூஜ்யம்.

ஆனால் பக்கத்து மாநிலங்கள் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டுகின்றன. தொழில்கள் கல்வி அனைத்திலும்! விமானநிலையத்தில் நிற்கும் உங்கள் நண்பரைப் பார்க்கும் சராசரி மலையாளிக்குத் தெரிவது  அதுதான். அவனது தாழ்வுணர்ச்சி,பொறாமை, இயலாமை ஆகியவையே அப்படி வெளிப்படுகின்றன

இன்றைய கேரளம் இடதுசாரி அரசியலின் எல்லா சாதக அம்சங்களும் காலாவதியாகி எல்லா எதிர்மறை அம்சங்களும் நீடிக்கும் ஒரு பிராந்தியம் என்று சொல்லலாம். அவர்களின் நடத்தைகள் எரிச்சலூட்டலாம், அதைமீறி கேரளத்தை நோக்கி நீங்கள் பரிதாபப்படத்தான் வேண்டும். 

ஜெ

முந்தைய கட்டுரைஉலோகம் – 11
அடுத்த கட்டுரைஉலோகம் – 12