«

»


Print this Post

கேரளத்தில் ஓர் அனுபவம்-கடிதம்


அன்புள்ள ஜெ,

நலம்தானா? என் பி எச் டி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இது சமீபத்தில் என் நண்பனுக்கு ஏற்பட்ட அனுபவம். இதன் மீது உங்கள் எதிர்வினையைக் கோருகிறேன்.

கிறிஸ்டோபர் ஆன்டனி

எனது நண்பன் ஒருவனுக்கு லண்டனில் ஒரு பல்கலையில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. சென்ற வாரம் யுகே விசா நேர்முகத்தேர்வு முடிந்து சென்ற திங்கட்கிழமை லண்டன் செல்ல முடிவானது. திருவந்தபுரம் ஏர்போர்ட் எங்களூருக்குப் பக்கமானதால் (சுமார் 40 கிலோமீட்டர்), நாங்கள் வெளிநாடு செல்லும்போது திருவனந்தபுரம் வழியாகச்செல்வது வழக்கம்.

என் நண்பனும் விதிவிலக்கல்ல. திருவனதபுரத்திலிருந்து லண்டன் செல்ல ஓமன் எயர்வேஸ்-ல் பயணச்சீட்டு  முன்பதிவு  செய்திருந்தான்.

திங்கள் காலை 7:20 -க்கு  பயண நேரம். அன்றிரவு முழுவதும் தூங்கவில்ல. முதல் விமான பயணம். ஏதோ ஒருவித பயம் அவனை ஆட்ட்கொண்டிருன்தது. அதிகாலை நான்குமணிக்கே திருவந்தபுரம் பன்னாட்டு முனையத்தை வந்தடைந்திருந்தான். மிக விரைவாக தன்னை வழியனுப்ப வந்தவர்களை இவன் வழியனுப்பிவிட்டு தனது பெட்டிகளுடன் விமானநிலையத்தினுள் நுழைந்தான். பத்து நிமிடங்களுக்குள் தனது லக்கேஜை கொடுத்துவிட்டு போடிங் பாசையும் வாங்கிவிட்டு எல்லாம்முடிந்ததென்று பெருமூச்சுவிட்டான் இன்னும் தனது தலைவிதி நிர்ணயிக்கப் படவில்லை என்பதறியாமல்.

இமிக்ரேசன் படிவத்தை பூர்த்திசெய்துவிட்டு சுவரில் எச்சில் துப்பிய காவலரின் பின்பகுதியத்தாண்டி வந்து  வரிசையில்  காத்திருந்தான்.  இவன்முறை வந்ததும் தனது கடவுச்சீட்டையும் பயண ஆவணங்களையும் இவனை பரிசோதிக்கும் அலுவலரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றான். 

“தமிழா?” அதற்க்கு இவன் “ஆமா தமிழ்”.

கொடுமை என்னவென்றால் நாங்கள் பேசுவதை தமிழர்கள் கேட்டால் மலையாளமென்றும், மலையாளிகள் தமிழென்றும் புரிந்துகொள்வார்கள். காரணம் எங்கள் உச்சரிப்பு முறை அப்படி. எங்கள் தமிழில் மலையாள நெடி அப்படியடிக்கும். தொன்றுதொட்டு திருவிதாங்கூரின்  குடிமக்கள்  நாங்கள். நேசமணி தலைமையில் ஒரு  கோஷ்டி  எங்களை  கேரளத்திலிருந்து  பெயர்த்தெடுத்து  தமிழகத்தில்  ஒட்டிவிட்டது. ஆனால் திருவனந்தபுரம் கத்தோலிக்க மறைமாவட்டம் தனது பிடியை இன்னும் விடவில்லை. எனவே நாங்கள் அரசியல் ரீதியாக தமிழ்நாடு. மத அடிப்படையில் கேரளா. இரண்டும் கெட்டான் நிலை.

“லண்டனில எதுக்கு போற?” – அவன்.

“எம். எஸ். படிக்க” – இவன்.

“என்னபடிச்சிருக்க?”

“எம் பி ஏ.”

“அப்புறம் எப்படி கம்ப்யூட்டர் கம்பனியில வேலை பார்த்த?

“நான் படிச்சது எம் பி ஏ சிஸ்டம்ஸ். அப்புறம் 3 மாதம் கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணியிருக்கேன்”.

“என்ன கோர்ஸ்?”

“அட்வான்ஸ்ட் கோர்ஸ் இன் ஷேர்பாயின்ற்”

அந்த ஆளுக்கு என்ன புரிந்ததோ? 

“சரி…இப்போ எனக்கு டூட்டி முடிஞ்சது.”, இன்னொருவரைக்காட்டி  “இவரு உங்களுக்கு பாஸ்போட்டில சீலடிச்சுக் கொடுப்பாரு.” என்று சொல்லிவிட்டு இவனது கடவுச்சீட்டையும் ஆவணங்களையும் தூக்கி இவனது கையில் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார். அடுத்த அலுவலர் வருவதற்கும், இவன் கீழே விழுந்த ஆவணங்களை பொருக்கி எடுப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“தமிழனா?”

“ஆமா.”

“அப்போ இங்கிலீஷ் பேசத்தெரியாது.” – நக்கலான குரலில். “நீ போக முடியாது”

“ஏன்?”

“உன்கிட்ட சரியான டாக்குமென்ட் இல்ல”

“இல்ல, நான் எல்லா டாக்குமெண்டும் வச்சிருக்கேன்.”

“உன்ன விட முடியாது. அங்க ஓரமா போய் நில்லு. எங்க மேனேஜர் வந்து சொன்னா விடுவேன்”

வேறு சில் ஆட்ட்களைக் கூப்பிட்டு, “இயாளு  ஈ ப்ளைட்டில் போகுன்னில்லா. இயாளிடே லக்கேஜினே வெளியிலெடுக்கு.”

“ஷெரி.” சொல்லிவிட்டு அவர்கள் மறைந்தனர்.

ஓரமாக நின்று கைக்கடிகாரத்தில் நேரம்பார்த்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது. 6:30AM. அப்போது வாட்டச்சாட்டமான 7 பேர் இவனருகே வந்தார்கள்.

“எங்கப் போற?”

“லண்டனுக்கு”

“உனக்கு எந்த ஊரு?”

“தூத்தூர்”

“என்னது தூத்தூரா? அப்போ நீ தொறயக்காரனா?”. தொறயக்காரன் என்பது மீனவர்களைக் குறிப்பிடும் குறிசொல். “தொறயக்கார நாயின்றா மக்களும் லண்டனில் படிக்கான் போகான் தொடங்கியோ?.

“?!???”, நண்பனுக்குள்ளிருந்த 15 அடி நீளமும் 2 டன் எடையும்  கொண்ட  சுறாமீன்  தன்  வாயைப்  பிளந்து  கூரியப் பற்களைக்  காட்டி  தலையை அங்குமிங்கும் ஆட்டி அலறியது.  கட்டுப்படுத்திக் கொண்டான். நல்ல உயரமாக, மாநிறமாக,  கட்டுமஸ்தான உடல்வாகுவோடு இருந்தான் அவன். அநேகமாக நாயராக இருப்பான். ஆனால் என் நண்பனின் ஓரடி அவனுக்கு சரியாகப் பட்டால் மண்ணில் புதைந்து விடுவான். இவன் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட வீரன். மீனவனின் மகன். உணர்ச்சி வசப்படும் நேரம் இதுவல்ல. நிதானமாக இருக்கவேண்டுமென்று  மனதை கட்டுப் படுத்திக் கொண்டான்.

ஏன் மீனவர்கலேன்றால் அனைவருக்கும் ஒரு வெறுப்பு? சிங்களவன் ஒருபக்கம், இந்திய அரசு இன்னொருபக்கம், அதுபோக மலையாளத்தான் இப்போது வேறொருபக்கம்.

“வேறு என்தொக்கே டாக்குமென்ட்ஸ் கையிலுண்டு?”

அனைத்தையும் அவன் கையில் கொடுத்தான். அவன் ஒவ்வொன்றாக பார்க்கத்தொடன்கினான்.

“இது TOEFL ஸ்கோர். நீ இதினே எழுதி ஜெயிச்சோ? காணில்லா இன்டர்நெற்றில் டவுன்லோடு செய்து காணும்”

நண்பன் அமைதியாக இருந்தான்.

“எம் பி ஏ மார்க் சீட், எவிடே சத்திய பாமா காலேஜ்,  பைசா கொடுத்து வாங்கிச்சு காணும்” அவர்களின் சிரிப்பொலிகள் காதினுள் சென்று ரத்தத்தில் ஏதோ ரசாயன மாற்றத்தை ஏற்ப்படுத்தத்  துவங்கியது.

அதிலொருவன் சில ஆவணங்களைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே கீழேப்போட்டன்.  அந்த  பேங்க் ஸ்ட்டேமெண்டை குனிந்து எடுத்துவிட்டுத் திரும்பியபோது அவர்களின் மேலதிகாரி வந்துவிட்டார். அவர் அதை வாங்கிப் பார்த்துவிட்டு,

“10 லட்சம் அக்கவுண்டிலுண்டு. அப்போ பிரஷ்னம் இல்லா. பிளைட் ஸ்டார்ட் செய்து.  நீ போஹாம்.”

இவன் தன்னை திருப்பியனுப்பிய அதிகாரியிடம் மீண்டும் ஓடினான். மீண்டும் அவன் நண்பனை உள்ளே அனுப்ப மறுத்துவிட்டான். அவனது உயிரதிகாரி அவனிடம் வந்து சொன்னதும் வேண்டா வெறுப்பாக அனுமதியளித்தான். அப்போது நேரம் 7:15AM. வியர்க்க வியர்க்க வெளியில் ஓடினான்.

வெளியில் வந்துபார்த்தபோது மணப்பெண் போல்  ஒரு விமானப் பணிப்பெண்ணும், கையில் எதையோ வைத்துக்கொண்டு,  மணமகனை வரவேற்க பூமாலையோடு நிற்கும் மைத்துனன் கணக்காக இன்னொருவரும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண வாகனம்போல்  ஓமன் எயர்வேஸ் விமானமும் இவனுக்காக காத்திருந்தது.

நாயர்களும் மேனன்களும் வேற்றுக்கிரகங்களில், பெட்டிக்கடையும் சாயக்கடையும் நடத்த வசதியாக, அங்கே தண்ணீர் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சி நடத்துகின்றார்கள். கவனம், நீங்கள் அங்கே செல்வதற்கு முன் அந்தத் தண்ணீரிலும் மீன் அமைதியாக நீந்திக்கொண்டிருக்கும்.

கிறிஸ்டோபர் ஆன்டனி

அன்புள்ள கிறிஸ்,

திருவனந்தபுரத்தில் பல இடங்களில் இதற்கிணையான நிகழ்வுகளை நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பின்னாலிருப்பது கீழ்த்தரமான சாதிப்புத்தியும் பொறாமையும் மட்டுமே.  சென்றவருடம் ஒரு கேரளச்சுற்றுலாவுக்குச் சென்ற என் மனைவியும் குடும்பமும் சில இடங்களில் இதேபோல மரியாதையில்லாமல் நடத்தப்பட்டதைச் சொன்னார்கள்.

இது தமிழர்மேல், அல்லது மீனவர்கள் மேல் உள்ள காழ்ப்பல்ல. இதே காழ்ப்பு வடகேரளத்தில் கன்னடர்கள்மேல் உள்ளது. அன்னியர்மேல் உள்ள காழ்ப்பு. அதற்குக் காரணம் அடியில் ஓடும் தாழ்வுமனப்பான்மை- நீங்கள் நினைப்பதுபோல உயர்வு மனப்பான்மை அல்ல. இருபதாம் நூற்றாண்டில் ஒருவன் இயல்பாக சாதிசார்ந்து உயர்வுமனப்பான்மையை அடைய, தக்கவைக்க முடியாது. பிற அனைத்துத் தளங்களிலும் தன்னை தாழ்வாக உணரும் ஒருவன் மட்டுமே சாதியை ஆயுதமாகக் கொள்கிறான்.

சென்ற இருபதாண்டுகளில் கேரளத்தில் இந்த உணர்ச்சிகள் இளைய தலைமுறை நடுவே ஓங்கிவருவதாக தகவல்கள் சொல்கின்றன. ஒரு நூறு வருடங்களில் கேரளம் அடைந்த எல்லா பண்பாட்டு வெற்றிகளும் இந்த இருபதாண்டுகளில் ஒவ்வொன்றாக கைவிடப்படுகின்றன. நல்ல இலக்கியத்திற்கு நல்ல சினிமாவுக்கு ஆளில்லை என்ற நிலை. எந்தவகையான ஆக்கபூர்வ அரசியலிலும் நம்பிக்கையில்லை என்ற நிலை. எல்லாவகையான பிற்போக்கு ,அடிப்படைவாதப் பண்புகளும் வளர்ந்துவருகின்றன. பொது இடங்களில் ஒரு சராசரி மலையாள இளைஞன் நடந்துகொள்ளும் முறை நம்பமுடியாத அளவுக்கு கேவலமாக இருக்கிறது. இவற்றைப்பற்றியெல்லாம் இந்த இணையதளத்தில் பலமுறை விரிவாகவே எழுதியிருக்கிறேன். என் எல்லா கேரளப்பயணக்குறிப்புகளும் சோர்வையே பதிவுசெய்கின்றன.

எனக்கு இதற்கான சமூக- உளவியல் காரணங்களை உறுதியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இப்படி ஊகிக்கிறேன். கேரளத்து மக்கள் ஒருவகையான மனச்சோர்வுக்கு, அவநம்பிக்கைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான சலிப்பு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.

அதற்குக் காரணம் கேரளம் வளர்ச்சி தேங்கி உறைந்து நின்றிருக்கிறது என்பதே. பொருளியல்ரீதியாக கேரளம் அதன் முட்டுச்சந்துக்கு வந்து திகைத்து நிற்கிறது. வளைகுடாவை நம்பி இருந்த பொருளியல் வீழ்ச்சி அடைகிறது. அதை ஆக்கபூர்வமாக திசைதிருப்ப ஆளில்லை. கட்டிடங்களையும் பொன்விளம்பரங்களையும் வைத்து எதையும் கணிக்காதீர்கள். கேரளத்தில் வேறு எந்த முதலீட்டு சாத்தியங்களும் இல்லை என்பதனால்தான் கட்டிடமும் தங்கமும் பெருகுகின்றன.

கேரளத்தில் உள்ள எல்லா தொழில்களையும் இடதுசாரி அரசியல் முற்றிலும் அழித்துவிட்டது. விவசாயம் அனேகமாக இல்லை. கயிறு, ஓடு, இறால் செப்பனிடுதல், ஆயத்த ஆடை எல்லமே முழுமையாக அழிந்துவிட்டன. நுகழ்பொருள்வணிகம் தவிர வேறு உள்ளூர் பிழைப்பே கிடையாது. கேரளத்தின் துறைமுகங்கள் அனைத்துமே தொழிற்சங்க பிரச்சினைகளால் கப்பல்கள் வருவது ஆபத்தானது என சர்வதேச ஒருங்கிணையத்தால் கருப்பு அடையாளம் போடப்பட்டுவிட்டன.

கேரளத்தின் கல்விமுறை இடதுசாரிகளால் அழிக்கப்பட்டுவிட்டது. ஒருவருடத்தில் சராசரிகாக 40 மாணவர்போராட்டங்களை நடத்துகிறார்கள்! தனியார் கல்வியை சமீபகாலம்வரை தடுத்து நிறுத்தியிருந்தார்கள். இந்தியாவின் 200 சிறந்த கல்விநிறுவனங்களைப் பட்டியலிடும் அமைப்புகள் எதுவும் கேரளத்தின் எந்த நிறுவனத்தையும் சுட்டிக்காட்டியதில்லை. ஆகவே கேரள இளைஞர்களின் கல்வித்தகுதி பரிதாபகரமானதாக உள்ளது. வளர்ந்துவரும் தகவல்தொடர்பு முதலிய துறைகளில் அவர்களின் பங்களிப்பு பூஜ்யம்.

ஆனால் பக்கத்து மாநிலங்கள் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காட்டுகின்றன. தொழில்கள் கல்வி அனைத்திலும்! விமானநிலையத்தில் நிற்கும் உங்கள் நண்பரைப் பார்க்கும் சராசரி மலையாளிக்குத் தெரிவது  அதுதான். அவனது தாழ்வுணர்ச்சி,பொறாமை, இயலாமை ஆகியவையே அப்படி வெளிப்படுகின்றன

இன்றைய கேரளம் இடதுசாரி அரசியலின் எல்லா சாதக அம்சங்களும் காலாவதியாகி எல்லா எதிர்மறை அம்சங்களும் நீடிக்கும் ஒரு பிராந்தியம் என்று சொல்லலாம். அவர்களின் நடத்தைகள் எரிச்சலூட்டலாம், அதைமீறி கேரளத்தை நோக்கி நீங்கள் பரிதாபப்படத்தான் வேண்டும். 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6610

9 comments

Skip to comment form

 1. ஜெயமோகன்

  எனக்கும் இதுபோல ஒர் சிறிய அனுபவம் பெங்களூரு விமானநிலையத்தில். “தமிழா.? படிக்கப் போறயா?” – எனக்கு ஒருமை உறுத்தவே- “No Im goin for work”..பிறகும் ஒருமையில் கேள்விகள். நான் பொறுமையாக ஆங்கிலத்தில் பதில் தந்துவிட்டு “போறியா” is singular, without respect in tamil. போறீங்களா..is with respect. it was lil uncomfortable for me…malayalam has same word for with/without respect” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

  //எனக்கு இதற்கான சமூக- உளவியல் காரணங்களை உறுதியாகச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் இப்படி ஊகிக்கிறேன். கேரளத்து மக்கள் ஒருவகையான மனச்சோர்வுக்கு, அவநம்பிக்கைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அடிப்படையான சலிப்பு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் உள்ளது//

  இத்தகைய மனநிலை சில கன்னடர்களிடமும் (தமிழர்களுக்கு எதிராக) உண்டு. ஆனால், கன்னடர்கள் மலையாளிகளை(தமிழர்களையும்) ஒப்பிடுகையில் அப்பாவிகள். தமிழர்கள் பெரும்பாலானவர்களுக்கு “உயர்வு மனப்பான்மை” உண்டு. (எனக்கும் இருந்ததுண்டு) “எல்லாம் தமில்லிருந்து வந்ததுதான்..மூடு”! என்று பாமரனும் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழர் பலருக்கு இருக்கும் ஒரே தாழ்வுமனப்பான்மை அவர்களின் நிறம் பற்றித்தான்.” நம்மாளுக கிரேக்க,ரோம அரசுகளோட ஏவாரம் பண்ணானுகளே..அந்தூரு வெள்ளக்காரிங்க சிலர அந்தப்புரத்துக்கு கூட்டியாந்து கூடீருந்தா…நாமளும் வெள்ளையாயிருப்பமே”

  என்னைப் பொருத்தவரை, எனக்கு தமிழ் தரும் அகவன்மை அசைக்க முடியாதது. நாம் எந்தக் குறையும் அற்றவர்கள் என்ற பீடு. என் நண்பர்களிடமும் இத்தகு மனநிலை உண்டு- முடியுடை மூவேந்தர் மனநிலை!

  ஒருவேளை அந்தந்த மொழிகளை ஆராய்ந்தால் அம்மக்களின் மனநிலைக்கான விளக்கம் கிடைக்கலாம்
  Venkat C

 2. jasdiaz

  எனக்கும் ஒரு அனுபவம்

  என் நண்பனின் மகனுக்கு மலையாள பெண்ணை திருமணம் செய்ய ஆசை. அவன் அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் வேலை பார்க்கிறான். வயது முப்பது ஆகியும் பெண் கிடைக்கவில்லை. நண்பன் சொல்லுகிறான் ” தமிழனுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. ” கடைசில் இரண்டு மாதம் முன்பு கல்யாணம் நடந்தது

  ஜாஸ்

 3. hemikrish

  இந்த கட்டுரை படிக்கும்பொழுது எனக்கு ஆற்றாமைதான் வருகிறது…..நான் இருக்கும் பெங்களூரிலும் அப்படிதான்…நான் இங்கு புதிதாக வந்த பொழுது ஒரு பக்கத்து வீடு பெண்மணியிடம் நான் தமிழ்நாடு என்றவுடன்
  “உன்னை பாத்தால் தமிழ் பொண்ணு மாதிரி தெரியலயே என்றார்..எனக்கு புரியவ வில்லை..’ஏன் ?’ என்று கேட்டேன்..”இல்ல தமிழ்நாட்டுக்காரங்க எல்லாம் கருப்பா எல்லாம் கட்டிட வெலைக்குதான போறாங்க..உங்களை மாதிரி ஆளுங்க கூட இருகாங்களா அப்படின்னு சொன்னார்..அப்புற்ம் அவங்ககிட்ட அப்துல் கலாம் ல இருந்து நிறைய பேரை உதாரணம் சொல்லிட்டு வந்தேன்…ஆனால் அவர்கள் சொல்வது போல இங்கே கட்டிட வேலை செய்பவர்கள் முழுவதும் நம் தமிழர்கள்தான்(கொஞ்சம் தெலுங்கர்கள்)…அவர்கள் பிள்ளைகள் கல்வி அறிவு எப்பொழுதான் கிடைக்கப் பெறுவார்கள் என்பது வேதனை…..ஆனால் ஒரு மலையாளிகூட இந்த மாதிரி வெயிலில் வறுத்திக்கொண்டு கூலி வேலை இங்கே செய்வதில்லை.

 4. gomathiraju

  Dear Mr Jeyamohan,
  1)More than inferiority\superiority complex of outsiders i feel majority of TN population is suffering from some kind of persecution complex ,We think the whole world is out to get us because we are tamils.this is a remark from a friend from north who has lived in chennai.With longer interaction with outside folks this will gradually go away .
  Do you think there is some truth in the statement.
  2)I have been living in karnataka for past few years ,except in the political sphere, in day to day interactions people are very friendly and mild natured.Bus conductors, auto drivers ,vegetablevendor,sevantmaids,neighbours,shopkeepers ,office collegues everyone is so mild and friendly .( especially chennai autdrivers and conductors need to be given some softskills training ).i have seen thousands of tamils living so amicably in all states of India and abroad .many of them will not return to TN even if given a choice .If they were unhappy why would they stay where ever they are ,
  Every state\language\culture is beautiful and great and it is a common legacy to all citizens of the world.why dont we acknowldge this .What gives us the right to say our language \culture is superior to others .
  corruption in bureaucracy and politics in office happens everywhere .Tamils who comeout of Tamilnadu for the first time if they miss a promotion will start lamenting immediately because i am so and so i am discrimnated( i too had the same feeling initially when i came out from TN).Do you think some of these bad experiences are exaggerated?
  3)40% of Bangalore population i believe are Telugus (may be same propotion in chennai),they control the entire construction industry and most of other industries here ,they never get in to any problem with any local anywhere ,They are industrious , hardworking maintain their religion and culture and language .they mind theit businessand are very sucessfull financially\politically.do you think there is something we have to learn from them?
  I would like to know your views on the subject,

  Regards
  gomathi

 5. uthamanarayanan

  My Grand father migrated from Andhra when he was in Royal Railways run by Britishers and had been working everywhere and my father finished his education in Victoria College Palghat and was working in Railways although started his career in early 1940s and I am born and brought up in Tamil Nadu , so I apply my mind with equanimity towards any language ; i understand Malayalam,[not able to speak or write] speak English, telugu, tamil [Only English and Tamil I am able to read and write] but understand the three cultures of Kerala,Andhra and Kerala since my relatives live in Kerala, andhra , Karnataka, and to extent through out India and abroad.So I know the malayalee mindset very well , many of my friends are Malayalees also.Kerala became so owing to the fact that they became a backward state industrially , main reason being political ideology.My father despite being educated and born in Kerala sold all his properties in kerala and advised us not to settle in Kerala which proved correct now.Comparing our relatives in Kerala, those settled in Tamil Nadu are now more educated and well positioned ,whereas those who remained there did not get the opportunity in education or jobs, so in one generation their position is weak.both educationally and financially..They now regret having been there .
  http://uthamanarayananperspectives.blogspot.com/2010/01/jyothi-basu-gentleman.html

 6. samraj

  அன்புமிக்க ஜெயமோகன் சாருக்கு
  கேரளத்தில் தமிழர் காழ்புணர்வு அன்றாடம் நடக்க கூடிய ஒன்றுதான்.சினிமாவில் கால் நூற்றாண்டாய் நடக்கிறது.சமுக தளத்தில் எவ்வளவு காலம் நடக்கிறதோ.? இந்த காழ்புணர்வுக்கு அறீவாளீகளூம், நல்ல கலைஞ்ர்களூம் சமயங்களீல் விதிவிலக்கில்லை..ஒரு கோட்டயம் வாசியான நான் இதை அன்றாடம் வெளீப்படையாகவும் நுட்பமாகவும் உனருகிறேன். நானாவது போய்வருபவன்.இங்கையே தொழில் செய்யும் நன்பர்கள் கதை துயரமானது.எப்பொழுதும் ஒரு இரண்டாம்தர குடிமகனாக. அச்சத்தோடு வாழ்கிறார்கள். சென்னையில் வாழும் மலையாளீகள் தான் அப்பொழுது என் நினைவுக்கு வருகீறார்கள்
  சாம்ராஜ்

 7. john

  http://www.savukku.net/2010/02/wr.html
  இந்த இணைப்பைப் பார்க்கவும். முழுச்சித்திரம் கிடைக்கும்

 8. kavirajan

  “இருபதாம் நூற்றாண்டில் ஒருவன் இயல்பாக சாதிசார்ந்து உயர்வுமனப்பான்மையை அடைய, தக்கவைக்க முடியாது. பிற அனைத்துத் தளங்களிலும் தன்னை தாழ்வாக உணரும் ஒருவன் மட்டுமே சாதியை ஆயுதமாகக் கொள்கிறான்.”

  மிக கூர்மையான ஒரு அவதானிப்பு. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் முன்னேறி வரும் சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஒரு அவநம்பிக்கையை தோற்றுவிக்கின்றன. இங்கு தமிழகத்திலேயே தாழ்த்தபட்டவர்களின் முன்னேறத்தை சகிக்க முடியாத பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து அவர்களை இழிவுபடுத்துவதை நம்மால் மறுக்க முடியாது. ஆனால் அவர்களே எல்லா ஜாதிய பிரச்சனைகளுக்கும் சுலபமாக பிராமணர்களை அடையாளம் காண்பிக்கும் முரண்பாடு ஒரு விசித்திரம்…

  இது உளவியல் ரீதியான வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் இது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது….இந்த சம்பவங்களை வைத்து ஒரு ஒட்டு மொத்தமான தீர்ப்பை எழுதி விட முடியாது… ஒரு தலை முறையாக கிருஸ்துவர்களாக வாழ்ந்து வரும் ஒரு நண்பனை அவனது முன்னோர்கள் தாழ்ந்த சாதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் செய்த விசாரணைதான் ஞாபகத்திற்கு வருகிறது… அருகில் இருந்து அதை பார்த்த எனக்கு நண்பனின் பரிதாபமான தோற்றம் இன்னும் மறக்கவில்லை….

 9. kthillairaj

  தமிழர்களின் தோல் நிறங்களை தான் முதலில் பார்பார்கள், கருப்பாக இருபதினால் குளிக்காமல் இருப்பது போல இருக்கிறார்கள் என்று சொல்ல கேட்டுயிருக்கிறேன், மற்றபடி ஜாதி என்பது முதலில் வந்து விடும், முதல் தகுதியே ஜாதியில் இருந்து தான் தொடுங்குகிறது, படிப்பெல்லாம் அப்புறம் தான்

Comments have been disabled.